Wednesday, July 14, 2010

தவளைக்கல்

“எலே ராசு, இந்தாலே இந்த ஒரு ரூவாவ வெச்சுக்க. பெறகாட்டி வாடக சைக்கிளு எடுத்து சுத்திட்டுத் திரியலாம்.”
“வேந்தாண்ணே” ஒரு விதமாய் சிரித்துக் கொண்டே மறுத்தான் இருபது வயதான ராஜு.
“அட, அண்ணே சொல்லுறேன்ல. வேணாங்குவியா... அப்படியே இந்த கடுதாசிய அந்த எதிர்த்தால வீட்டுத் திண்ணையில தாளு உருட்டிட்டிருக்குற கண்ணம்மாட்ட குடுத்துட்டு வாடா தம்பி”
“என்னாது இது” ஒரு ஆர்வமாய்க் கேட்டான் ராஜு.
“அந்தப் புள்ள தீப்பெட்டியாவிசுக்குப் போகணும்னு கேட்டுச்சு. அதுக்கு கடுதாசி வாங்கியாந்தேன் கம்பெனில இருந்து. போடான்னா வெவரம் கேட்டுட்டுத் திரியுது பாரேன் கிறுக்குப் பயபுள்ள” எடுப்பாய்ப் பொய் சொல்லி அவனை அனுப்பி வைத்தான் வெட்டியாய் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாலு.
கையில் சைக்கிள் டயரை வைத்து சுற்றிக் கொண்டே அவளை நோக்கிப் போன ராஜு கடிதத்தை அவளிடம் சேர்த்து விட்டு பாலு கொடுத்த காசுக்கு வாடகை சைக்கிளெடுக்க மணியண்ணன் சைக்கிள் கடைக்கு ஓடினான்.

“அய்யருக்குக் கஷ்ட காலம்டா. தலப் புள்ள ஆம்பளப் பய. அதுவும் புத்தி கழண்டு போய். இன்னும் இருக்குற ரெண்டு பொட்டப் புள்ளைகளக் கரை சேக்கப் பாடுபடுவாரா.. இந்த ஒண்ணைக் கட்டி மேய்ப்பாரா.. போன வாரம் கூட கெழக்கால இருந்த ஊரணிப்பக்கம் வரைக்கும் டயர ஓட்டிக்கிட்டே போன பயபுள்ள அங்கனவே என்னத்தையோ தனியா பேசிட்டு உக்காந்திட்டு இருந்துருக்கு. ரொம்ப நேரமா தேடிப்புட்டு அப்பறம் வெளக்கு வெக்க நேரம் கண்டுபிடுச்சுக் கூட்டியாந்தாய்ங்க.” வாயின் வெற்றிலை எச்சில் தெறிக்கக் கூட இருந்த வெட்டி எடுபிடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பஞ்சாயத்துத் தலைவர்.

முக்கு வீட்டுப் பெரிய தோட்ட வீடு பஞ்சாயத்துத் தலைவர் சின்னப்ப முதலியுடையது. அங்கிருக்கும் பெரிய திண்ணை தான் ஊர்ப் பெரியவர்களின் வெட்டிப் பேச்சுக்கான இடம். க்ரில் கம்பி போடப்பட்டிருந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டே வெளியே நடக்கும் கூத்துகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரக்கமின்றி ராஜுவைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். பள்ளி முடித்து அந்தப் பக்கமாக வந்த ஜெயா டீச்சர் அவர்களைத் திட்டி விட்டு, அங்கே நின்று கொண்டிருந்த அவளது முன்னாள் மாணவன் பாலுவையும் “இனிமே அவளுக்குக் கடுதாசி குடுக்கணும்னா நீ போய்க் குடு. எங்க வீட்டுப் புள்ளையக் கூப்பிட்டே தோல உரிச்சுருவேன் படவா” என சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

ராஜுவை நினைத்து அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. ராஜுவின் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளியிருக்கும் ஜெயா டீச்சருக்கு ராஜுவின் மீது இரக்கம் கலந்த அன்பு உண்டு. வீட்டு விசேஷங்களுக்கும், தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களுக்கும் ராஜுவின் அப்பா தான் சமையல், பலகாரமெல்லாம். அப்படித் தான் ரெண்டு வீட்டுக்கும் பழக்கம். ராஜுவின் அப்பா அந்த ஏரியாவுக்கே பிரபலமான சமையல்காரர்.

ஒரு மணி நேரம் சைக்கிளை உருட்டிவிட்டு ருக்குவைத் தேடி வந்த ராஜூவை முறைத்தாள் ஜெயா டீச்சர். “டீச்சதத்தா, தித்தாத. நான் ஒண்ணும் போகல. அந்த பாது பயதான் கூப்புத்தான்” அழும் தோரணையில் சொல்லும் ராஜுவை திட்ட முடியாது கலங்கிப் போனாள். டீச்சரத்தையின் ஒரே மகள் ஆறு வயது ருக்மணி, ராஜுவின் செல்லம். இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள். கடைக்கு ஒன்றாகப் போவார்கள். வீட்டில் அவள் பாட்டி முறுக்கு செய்ய செய்ய எடுத்துக் காலி செய்து கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசமின்றி நல்லதொரு சினேகம் இருவருக்குள்ளும் இருந்தது.

“துக்கு, அத்த தீத்தூள் வாங்கித்து வர தொன்னா. கடத் தெதுவுக்குப் போலாம். வா” என அவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு போவான் ராஜு. அவள் வயது பிள்ளைகளெல்லாம் ராஜுவை கேலியாகவும், மிரட்சியாகவும் பார்ப்பார்கள். ஆனால் அவளுக்கு மட்டும் அவனை மிகப் பிடித்திருந்தது. “ராஜுண்ணா, என்னை இறக்கி விடு. நானே நடந்து வரேன்” மழலை மொழியைத் திட்டுவான். “ஏய், அதெல்லாம் வேந்தாம். அப்புதம் நீ சைக்கிள்ல விலுந்துருவ. அத்த என்னய வையும்” “அய்யோ ராஜுண்ணா, நான் உன் கையைப் பிடிச்சுக்கிட்டே வரேன். விழ மாட்டேன்” கொஞ்சினாள். “சதி துக்கு” இறக்கி விட்டான். எதிரில் பனங்காய்களை சக்கரங்களாய்க் கொண்டு கை வண்டி ஓட்டி வந்த பத்து வயது சிறுவனைத் திட்டினான். “தேய், பாப்பா மேல வந்தி ஏத்துத. திமிதா...” மறுபடியும் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான்.

அவனின் ரகரத்தைக் கேலி செய்து விளையாடும் முக்குத் தெரு பிள்ளைகள் மேல் கோபம் கொண்டாள். “ராசு, நீ உன் பேர சரியா சொல்லு பார்ப்போம்”
“தாசு” - கைகொட்டி சிரித்தார்கள் பிள்ளைகள்.
“ஏய், அவனை ஏண்டா பார்த்து சிரிக்குறீங்க. அவன் என் அண்ணன். யாராச்சும் அவனை கேலி பண்ணா அப்பாகிட்ட சொல்லிக் குடுத்துடுவேன். போங்கடா, உங்க வேலையைப் பார்த்துகிட்டு. ஆளப் பாரு, வந்துட்டாய்ங்க” குழந்தைக் காளியாய்த் தெரிந்தாள்.

ஒருமுறை அவளுக்குக் காய்ச்சல் வந்து டாக்டரிடம் அழைத்துப் போயிருந்தார்கள். “நம்ம ருக்குக்குக் காச்சலாம். டீச்சர் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காக” அவன் அம்மாவிடம் கீரைக்காரி சொன்னது கேட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். ஊசி போட்டு விட்டு அழுதுகொண்டிருந்தவளின் தலையைத் தடவி விட்டு அவனும் அழுதான். அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊரணிப் பக்கம் போகாமல், டயரைத் தொடாமல், அவள் கூடவே இருந்தான். தூங்குகையில் இருமும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். உடல் சரியாகி “ராஜுண்ணா இன்னிக்கு எதிர்த்தால வேப்ப மரத்துல ஊஞ்சல் கட்டுவோமா” அவள் சொன்ன போது தான் அவன் மூச்சுவிட்டான்.

பஞ்சாயத்துத் தண்ணீர் குழாயில் கொட்டிக் கொண்டிருந்தது. தண்ணீர் பிடித்து, தொட்டி, குடம், பாத்திரமெல்லாம் நிரப்பிவிட்டு அத்தையிடம் கேட்டான் “அத்தா இன்னும் தண்ணி வதுது. எங்கே ஊத்த?”
“என் தலையில கொட்டு” அடுத்த நிமிஷம் ஒரு குடம் தண்ணீரை அவள் தலையில் கொட்டி விட்டான். ருக்கு வாய் விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பதற்காய் தொடர்ந்து தன் தலையில் தண்ணீர் கொட்டிக் கொண்டு நின்றான்.

அவளின் ஒற்றைக் குடுமிக்காய் தினமும் தன் வீட்டுக் கனகாம்பரம் பறித்து வருவான். அவளின் “ஹையா”விற்காக அவன் அப்பா செய்யும் ஜாங்கிரியைத் திருட்டுத் தனமாய்க் கொண்டு வந்து தருவான். “இவ இந்தக் கிறுக்குப் பயலோட எங்கே போய் விளையாடிட்டுக் கெடக்காளோ” எனும் பாட்டியை வஞ்சிக்க அவளின் மூக்குக் கண்ணாடியை ஒளித்து வைத்து விடுவான். இப்படியாக நாட்கள் கடந்தன. ருக்குவின் அன்றாட பள்ளிக் கதைகள் சொல்ல அவன் தேவைப்பட்டான். குடும்ப உறுப்பினர்கள் என அவள் எழுதுகையில் அண்ணன் இடத்தில் ‘ராஜு’ என எழுதினாள். இரண்டு வட்டங்கள் போட்டு நெட்டை நெட்டையாய்த் தலைமுடி வரைந்து, கூட கை கோர்த்து இருக்கும் உருவத்தில் ‘ராஜுண்ணா’ என் எழுதினாள். அவன் தங்கையின் ஊருக்கு நான்கு நாட்கள் போயிருக்கையில் அவனில்லாமல் சாப்பிட மறுத்தாள். திரும்பி வந்து அவன் பாக்கு மிட்டாய் வங்கிக் கொடுத்த போது தான் சிரித்தாள்.

குடும்பக் க்டன்கள் காரணமாய் ராஜுவின் அப்பா அவர் அண்ணனுடன் சேர்ந்து தொழில் செய்ய வேறு ஊருக்குப் போகையில் குடும்பத்தை அழைத்து செல்ல வேண்டி வந்தது. நான்கு நாட்களில் திரும்பி வருவதாய் சொல்லி ஏமாற்றி ராஜுவை அழைத்துச் சென்றார்கள். சிவந்த கண்களுடன் ருக்குவைப் பிரிந்து போனான். அவன் இல்லாமல் ருக்குவுக்கு எதுவுமே ஓடவில்லை. ஒரு முறை அம்மாவுடன் அவன் ஊருக்குப் போய் பார்த்து வந்தாள். கொஞ்சம் வளரவும், பள்ளி நண்பர்கள் மற்றும் புதிய அண்டைவீட்டு ஸ்நேகங்களால் ராஜுவின் பிரிவுத் துயர் குறைந்திருந்தது.

ருக்கு வளர்ந்து, கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தாள். ஆன்சைட்டிற்காக கலிஃபோர்னியாவும், சிட்னியும் தனியாகப் பறந்து கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் ராஜு அண்ணாவைப் பார்க்கும் ஆவல் வந்தது. அடுத்த முறை ஊர் சென்ற போது அம்மாவிடம் சொல்லி அவன் இருக்கும் ஊருக்கு சென்று ஒரு நாளைக் கழித்து விட்டு வர எண்ணிக் கிளம்பினாள்.

“ஏடி.... துக்கு” என அவளைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். தாடையைச் சுற்றி கொஞ்சம் முடியும், சற்றே தளர்ந்த உடலும் தவிர வேறேதும் மாற்றமில்லை அவனிடம். கண்களில் நீர் திரள “ராஜுண்ணா” என்றாள். முப்பத்தேழு வருடமாய் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து மேலாடை இல்லாமல் சுற்றி வந்தவன், அவள் சட்டை வாங்கிக் கொடுத்ததும் வாழ்க்கையில் முதல் முறையாக அணிந்து பரவசமானான். அவளுக்கு சூஸ்பரி வாங்கித் தந்தான். “ராஜுண்ணா, சீக்கிரமே எனக்குக் கல்யாணம் இருக்கும். வருவ தானே” என்றாள். “கந்திப்பா. அப்பா, அப்பா வேந்தாம். நா மத்தும் வதேன்” என்றான். மாலையில் கிளம்பும் போது கலங்கிய கண்களுடன் வழியனுப்பினான். நூறு முறை டிரைவரிடம் சொன்னான், “தைவர், என் தங்கத்தி, பாத்துக் கூத்தித்துப் போ, ஆமா.. சதியா..”

சொன்ன மாதிரியே அவள் திருமணத்திலும் வாசலில் நின்று “வாங்க, வாங்க, என் தங்கத்தி கல்யாணம். உள்ள இதுக்கா. போங்க” என மகிழ்ச்சியாய் வரவேற்றான். இரண்டாண்டுகள் கழித்து அவள் மெக்ஸிகோவில் கணவனின் வேலை விஷயமாக உடனிருந்த போது அம்மாவின் ஃபோன் வந்தது “ருக்கும்மா, ராஜு நேத்து காலைல டவுன்ல தனியா நடந்து போயிட்டிருக்கும் போது ஒரு சரக்கு லாரில மோதி இறந்துட்டானாம்டா” துக்கம் அவள் தொண்டையைக் கவ்வியது. கை பிடித்தும், தோளில் சுமந்தும், பார்த்துப் பார்த்துக் கூட இருந்த அண்ணன் தவறிவிட்டான். பனங்காய் கைவண்டி அவள் மேலின் மோதிய போது மோதியவனைத் திட்டியவனின் உடல் லாரிக்கு அடியிலா... நினைக்கவே முடியவில்லை அவளுக்கு. ஏதோ ஆணிவேரைப் பிடுங்கியெறிந்த செடி போலானாள். அழப் பிடிக்கவைல்லை. தூரத்துக் கண்ணீரில் என்ன சாதித்து விடப் போகிறாள். “இல்லை, அவன் சாகலை. அவன் எப்போவும் என்கூடவே தான் இருக்கான்” திடமாய் நம்பினாள். வயிற்றிலிருக்கும் குழந்தையைத் தடவினாள் “ராஜுண்ணா”

54 comments:

மணிஜி said...

நல்லாயிருக்கு மேடம்..நிறைய வாசிங்க.கை வந்துடும் எழுத்து

க ரா said...

நல்லாருக்குங்க.

Anonymous said...

எழுத்தாளர் விக்கி, புத்தகம் போடும் போது சொல்லுங்க

Anonymous said...

உண்மையான விமர்சனம் சொல்லவா?

ராம்ஜி_யாஹூ said...

நல்லா இருக்கு கதை பாராட்டுகள்.

ஒரு விஷயம்- கதை எந்த வட்டாரத்தில் நடை பெறுகிறது, ஆரம்பத்தில் நெல்லை வட்டார தமிழில் ஆரம்பித்து இருக்கிறீர்கள், மூன்றாவது வரியில் சாத்தூர், விருதுநகர் தமிழ் வருகிறது, பல இடங்களில் கோவை, ஈரோடு தமிழ் வருகிறது.

அதே போல பல சாதியினர் பேசும் தமிழும் இணைந்து இருக்கிறது.
பல இடங்களில் சுஹாசினியின் கிராமிய தமிழ் (ராவணன்) போல இருக்கிறது

ராம்ஜி_யாஹூ said...

நல்லா இருக்கு கதை பாராட்டுகள்.

ஒரு விஷயம்- கதை எந்த வட்டாரத்தில் நடை பெறுகிறது, ஆரம்பத்தில் நெல்லை வட்டார தமிழில் ஆரம்பித்து இருக்கிறீர்கள், மூன்றாவது வரியில் சாத்தூர், விருதுநகர் தமிழ் வருகிறது, பல இடங்களில் கோவை, ஈரோடு தமிழ் வருகிறது.

அதே போல பல சாதியினர் பேசும் தமிழும் இணைந்து இருக்கிறது.
பல இடங்களில் சுஹாசினியின் கிராமிய தமிழ் (ராவணன்) போல இருக்கிறது

Menaga Sathia said...

நல்லாயிருக்குங்க..படித்ததும் என்னையும் மீறி கண்களில் கண்ணீர்...

Raghu said...

ந‌ல்லாயிருக்கு விக்கி...குறிப்பா அந்த‌ க‌டைசி வ‌ரி ந‌ச்!

Anonymous said...

கதை கொஞ்சம் குழப்பமாத் தான் இருக்கு. உண்மையும், கற்பனையும் கலந்த விதத்தில் கொஞ்சம் தடுமாறியிருக்கீங்க.

வட்டார வழக்குச் சொற்கள் பற்றி நான் சொல்ல வந்ததை ராம்ஜி சொல்லிட்டார்.

முதல் கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!

ILA (a) இளா said...

நல்ல கதைங்க. முதல் கதைன்னு நம்பவே முடியலை

ரிஷபன் said...

உங்களிடம் கதைக்கான மேட்டர்.. சரளமாய் சொல்லிப் போகிற எழுத்து.. உணர்வுகளைச் சரிவிகித நடையில் தரும் யுத்தி.. எல்லாம் இருக்கு. தொடருங்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

முடிவுதான் கதை

நல்லா இருந்தது விக்கி இன்னும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல முயற்சி விக்கி ..

*இயற்கை ராஜி* said...

very nice

ஈரோடு கதிர் said...

ரொம்ப நல்லா வந்திருக்குங்க...

முடித்து நீண்ட நேரம் ஆன பின்பும் மனதில் கனம் குறையவில்லை...

'பரிவை' சே.குமார் said...

//“இல்லை, அவன் சாகலை. அவன் எப்போவும் என்கூடவே தான் இருக்கான்” திடமாய் நம்பினாள். வயிற்றிலிருக்கும் குழந்தையைத் தடவினாள் “ராஜுண்ணா”//
கதை மனசை கனக்க வைத்தது. அருமையான முடிவு... வாழ்த்துக்கள் தோழி..!

ஜோசப் பால்ராஜ் said...

மனசு பாரமாயிருச்சு.
நல்லா இருக்கு. தொடர்ந்து கதையும் எழுதுங்க.

ஜோசப் பால்ராஜ் said...

மனசு பாரமாயிருச்சு.
நல்லா இருக்கு. தொடர்ந்து கதையும் எழுதுங்க.

விக்னேஷ்வரி said...

நன்றி மணிஜீ முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும்.

நன்றி இராமசாமி கண்ணன்.

விஜி, ஏன் இப்படி வாருறீங்க. சொல்லுங்க விஜி. அதான் வேணும் எனக்கு.

நன்றி ராம்ஜி. நெல்லைக்கும் மதுரைக்கும் நடுவுல இருக்குற ஊர்ல இப்படித் தான் பேசுவாங்க ராம்ஜி. ஆனா, கோவை, ஈரோடு தமிழ் எங்கே வருது? சுட்டிக் காட்டினீங்கன்னா, திருத்திக்க வசதியா இருக்கும்.

நன்றி வேலு.

நன்றி மேனகா.

நன்றி ரகு.

நன்றி வெயிலான். உங்கள் கருத்துகளை கவனம் கொள்கிறேன்.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நன்றி இளா.

நன்றி ரிஷபன்.

நன்றி வசந்த்.

நன்றி முத்தக்கா.

நன்றி ராஜி.

நன்றி கதிர்.

நன்றி குமார்.

நன்றி ஜோசப்.

நேசமித்ரன் said...

முதல் கதையா ? அப்படித் தோன்றவில்லை.. வாழ்த்துகள் !

1.உரையாடல்கள் இடையே கதை சொல்லும் தேர்ந்த கதை சொல்லிகளின் உத்தியை கையாண்டிருக்கிறீர்கள்- பெரும் பகுதி வெற்றி

2.நேட்டிவிட்டி, நரேஷன் இரண்டும் தெளிவாக இருக்கிறது

3.இரண்டு பிரதான பாத்திரங்கள் சார்ந்த கதை என்பதால் அவர்களுக்கான அணுக்கம் குறித்த நிகழ்வுகள் நேர்முறை அல்லது அடிகோடிட்ட வரிகளாய் இன்னும் கொஞ்சம் நுட்பமாக சொல்லியிருக்கலாம்

4.கதையின் கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் இனி வரும் கதைகளில்.அதி அவசியம் இன்றி பாத்திரங்கள் நுழைவதும் உரையாடுவதும் கச்சித்தத்தன்மையை குறைக்கும்தானே

5.கதையின் முடிவுகள் இப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை open ended climax ஆகவும் இருக்கலாம் பின் நிகழ்வை சொல்லி முடிக்கலாம் உதா: ராஜு என்றழைத்தபடி காதலனல்லாத மற்றொருவன் கணவன் உள் நுழைவதாக

முதல் முயற்சி தொடரட்டும் .வாசிப்பு படைப்பின் கதவுகளை திறந்து கொண்டே இருக்கும்

வாழ்த்துகள் விக்னேஷ்வரி

Vidhya Chandrasekaran said...

நல்ல முயற்சி

Unknown said...

நல்லாயிருக்குங்க..........

அன்பேசிவம் said...

ரொம்ப நல்லா இருக்கு விக்கி . விமர்சனங்கள் எதுவும் என்னிடம் இல்லை. ரொம்ப நெருங்கிய விஷயங்களில் குறை கண்டுபிடிப்பதென்பது சிரமம். தண்டபாணி அண்ணன் நியாபகம் வருது, திருவாரூர் கோவில் தெப்பகுளம் நியாபகம் வருது கடைசியா கண்ணுல தண்ணி வருது...... கதை என்பதையும் தாண்டி எனக்கு சில விடயங்கள் புலப்படுகிறது. என் சொந்த அனுபவங்களில். வாழ்த்துக்கள். :-)

அப்புறம் ஒரு கேள்வி:
அப்படியா விக்கி?
ஆமான்னா மிக்க மகிழ்ச்சி..

Ganesan said...

இந்த மதுரகார சகோதரிக்கு, ஆயிரம் வாழ்த்துக்கள்..

இறுதியில் கண்ணீர் கசிந்தது.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மருமகள்ஸ். முதல் சிறுகதையா? அருமை!

செல்லாக்கா வீட்டு முரளியை பார்த்தது போல் இருந்தது. தொடர்ந்து சிறுகதைகளும் எழுதுங்கள் ம.மகள்ஸ். (நன்றி நேசா. நேசன்தான் இன்று இந்த லிங்க் அனுப்பி தந்தார்)

சிநேகிதன் அக்பர் said...

அருமைங்க.

thamizhparavai said...

முதல் கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பரவாயில்லை. நன்றாக இருந்தது...

thamizhparavai said...

தலைப்புதான் புரியலை...

a said...

நல்லா இருக்குங்க.. படிக்கும்போது முதல் தடவையாக எழுதியது என்று தோன்றவில்லை.

mightymaverick said...

சொல்லுவதற்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்க வில்லை... ஒரே வார்த்தையில் சொல்லுவதானால் - "அருமை"

மணிநரேன் said...

எழுதியவிதம் நல்லா இருக்குங்க.

Karthick Chidambaram said...

Nice Post! Kathai nallaa irukku.

தராசு said...

கலக்கறீங்க, அப்ப ஜீப்புல ஏற வேண்டியதுதான்.

CS. Mohan Kumar said...

முதல் கதையா? நம்ப முடிய வில்லை...Story is nice.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துகள்

Anonymous said...

நல்ல முயற்சி...

Mohan said...

அருமையாக இருக்கிறது!

Anonymous said...

நல்லா இருக்கு கதை விக்கி

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு முயற்சி விக்னேஷ்வரி! வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

கதை நல்லாருக்கு,ஆனா எழுத்து நடை தான் சரியா வர்லை,வட்டார வழக்கு மொழியை வலிய புகுத்தியது போல் இருக்கு,முதல் கதை என்பதால் போகபோக சரி ஆகிவிடும்,வாழ்த்துக்கள்

Geetha6 said...

nice.
congratulations!

ஸ்ரீவி சிவா said...

ரொம்ப நல்லாயிருக்கு... முதல் பாய்ச்சலிலேயே நல்ல தூரம் தாண்டிருக்கீங்க விக்கி.
இதுதான் செல்ல வேண்டிய பாதை/திசை... நிறைய தூரம் போக வாழ்த்துகள்.

மத்தவங்க சொல்ற மாதிரி எனக்கு வட்டார மொழி வழக்குல பெரிதாய் குறை ஒன்றும் தெரியவில்லை. ஏன்னா நம்ம ஊர்பக்கம் மதுரை + நெல்லை சாயல் ரெண்டுமே பாத்திருக்கேன்.

அப்புறம் நேசனின் சில கருத்துகளை வழிமொழிகிறேன்.

Thamira said...

நல்ல உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள். ஓரளவு வெற்றிதான். ஆங்காங்கே இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். வாக்கியங்களை இன்னும் மெருகேற்றுங்கள். இவையெல்லாமும் கதையை எழுதி ஒரு வாரத்துக்குப் போஸ்ட் செய்யாமல் ஒரு 10 தடவை மீள்வாசிப்பு செய்தீர்கள் என்றால் சரி செய்துவிடலாம். (ஹிஹி.. நீங்கள் அப்படித்தான் செய்கிறீர்களா என கேட்டுவிடாதீர்கள்) வாழ்த்துகள்.

Anbarasu S said...

மிக அருமை. வாழ்த்துகள் . தொடருங்கள்..
அன்பரசு செல்வராசு

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.

பரிசல்காரன் said...

எல்லாரும் எல்லாம் சொல்லிவிட்டார்கள். எனக்கு கதை பிடித்திருக்கிறது. உங்களிடமிருந்து இந்த வட்டார வழக்கை எதிர்பார்க்கவில்லை என்றபடிக்கு இமேஜை உடைத்தமைக்கு பாராட்டுகள்.

சிவகுமார் said...

Super & Well.

Unknown said...

மிக அருமை.. நேசமித்திரன் சொல்லியிருக்கும் திருத்தங்கள் கதையை விட மிக நன்று.
பெரும்பாலானவர்கள் சொல்லியிருப்பது போல வட்டார வழக்கில் நேர்த்தி இல்லைதான்.. ஆனால், ராஜூ போன்ற கேரக்டருக்கான மொழிநடை கச்சிதம். ’திமிரா?’ என்று கேட்பது அப்படியே யதார்த்தம்.
வளர்க!

Unknown said...

மிக அருமை.
நேசமித்திரன் சொல்லியிருக்கும் திருத்தங்கள் மிக மிக நன்று!
பெரும்பாலானவர்கள் கருதுவது போல் வட்டார வழக்கில் நேர்த்தி இல்லைதான். ஆனால், ராஜூ போன்ற கேரக்டரின் பேச்சு நடை கச்சிதமாக வந்திருக்கிறது.
குறிப்பாக திமிரா? என்று கேட்பது அப்படியே இருந்தது!
வாழ்த்துக்கள்!

விக்னேஷ்வரி said...

நன்றி நேசமித்ரன். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

நன்றி வித்யா.

நன்றி கலாநேசன்.

நன்றி முரளி. இது கதை. கதை மட்டுமே. :)

நன்றி மதுரைக்கார காவேரி கணேஷ் அண்ணா.

நன்றி பா.ரா.மாம்ஸ். நேசனுக்கும் நன்றி.

நன்றி அக்பர்.

நன்றி தமிழ்ப்பறவை. குளத்தில் அல்லது கிணற்றில் எறியப்படும் கல் தவளை மாதிரி தத்தித் தத்திப் போய் ஆழமா உள்ளே விழும். அதான் தவளைக் கல்.

விக்னேஷ்வரி said...

நன்றி வழிப்போக்கன்.

நன்றி வித்தியாசமான கடவுள்.

நன்றி மணிநரேன்.

நன்றி கார்த்திக் சிதம்பரம்.

வாங்க தராசு.

நன்றி மோகன் குமார்.

நன்றி நண்டு.

நன்றி புனிதா.

விக்னேஷ்வரி said...

நன்றி மோகன்.

நன்றி அம்மிணி.

நன்றி வெங்கட்.

நன்றி செந்தில் குமார். அடுத்த முறை சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி கீதா.

நன்றி சிவா.

நன்றி ஆதி. கருத்தில் கொள்கிறேன்.

விக்னேஷ்வரி said...

நன்றி அன்பரசு செல்வராசு.

மிக்க நன்றி இளா.

நன்றி கிருஷ்ணா.

நன்றி சிவகுமார்.

நன்றி இளங்கிழவன். திருத்திக் கொள்கிறேன்.