Tuesday, November 23, 2010

மிஸ்டர் ஆஃப் த மிஸஸ்


நம்ம மிஸ்டர்ஸோட குணங்களைப் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா.. அதுனாலதான் அடுத்த பகுதி. உங்ககிட்ட/உங்க மிஸ்டர் கிட்ட எல்லாத் தகுதிகளும் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க.

=> காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து போய் எட்டரைக்கு டைனிங் டேபிள்ல உக்காந்திருக்கும் போது “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழுப்ப சொல்லி. எழுப்பிருக்கலாம்ல”ன்னு எங்களைக் கடிக்கறீங்களே மிஸ்டர். இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், கருப்புன்னு சொன்னா சரியாத் தெரியறதில்லைன்னு தான் கிளிப்பச்சை, துவரம்பருப்பு மஞ்சள், யானைக்கருப்புன்னு சொல்லி சொல்றோம். ஆனாலும் கரெக்ட்டா சொன்னதுக்கு எதிரா வித்தியாசக் கலர்களோட வந்து நிக்கறீங்களே, உங்க கண்ணுக்கு என்ன லென்ஸ் போட்டாத் தேவலை...

=> தட்டுல இருக்கற சாப்பாடை வழிச்சு நக்கி பாதித் தட்டையே முழுங்கற நீங்க, காலைல இருந்து கட்டிக்கிட்டு வந்தவ அடுப்படில காயறாளேங்கற எண்ணமே இல்லாம, சாப்பிடும் போது “இன்னிக்கு சமையல் நல்லாருக்கு”ன்னோ, “ப்ரமாதம்”ன்னோ சொல்லாம “எந்த ரெஸ்டாரண்ட்ல இருந்து ஆர்டர் பண்ண”ன்னு கேக்கும் போது அடுப்புல அந்த பாத்திரத்துக்குப் பதிலா உங்களை உக்கார வெக்கலாம் போல இருக்கு.

=> காலைல குளிக்க டவல் எடுத்து வைக்கறதுல இருந்து ஆஃபிஸ் போக ஃபைல், லேப்டாப், இதர எல்லாத்தையும் எடுத்துக் கைல குடுத்தனுப்பி, அரை மணி நேரம் கழிச்சு ஆஃபிஸ் பத்திரமாப் போய்ட்டீங்களான்னு கேட்க ஃபோன் பண்ணா, அது வீட்டுக்குள்ளேயே அடிக்கும் போது உங்க ஞாபக மறதியை நினைச்சுப் புல்லரிக்குது எங்களுக்கு.

=> அதெப்படி உங்க செல்ஃபோன்ல மட்டும் ஒரு பொண்ணு பேர் கூட இருக்கறதில்ல. நிஜமாவே அம்மா, அக்கா, மனைவிங்கற இந்த 3 பொண்ணுங்களை சுத்தியே தான் உங்க வாழ்க்கை இருக்கா.. எனக்கு ஒரு பொண்ணையும் தெரியாதுன்னு சீன் போட்டுட்டு சீனுன்ற பேர்ல இருந்து கால் வரும் போது சீறிப் பாஞ்சு எடுக்கறீங்களே, நடப்பது என்ன...

=> அதெப்படி நாங்க கால் பண்ணும் போது மட்டும் கரெக்ட்டா மீட்டிங்லேயோ, ட்ரைவிங்லேயோ அல்லது இம்பார்டண்ட் டிஸ்கஷன்லேயோ இருக்கீங்க. ஒரு நாள் உங்க ஆஃபிஸ்ல வந்து செக் பண்ணாத் தெரியுமோ...

=> நோ ஆய்லி ஃபுட்ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் வெளில போகும் போது லேஸ் பாக்கெட்டுக்கு நேரா கை போகுதே உங்களுக்குக் காதும் ஔட்டா... கடவுளே!

=> வெளில எல்லார்கிட்டேயும் நான் என் பொண்டாட்டிக்கு வீட்ல எல்லா வேலைலயும் சரிசமமா உதவுவேன்னு பெருமை பீத்திக்கிட்டு வீட்ல வந்து என்ன சொன்னீங்கன்னு கேட்டா “நீ சமைக்கற, நான் சாப்பிடறேன்; நீ வீடை சுத்தமாக்குற, நான் அழுக்காக்கறேன்; நீ துணி துவைக்கற, நான் போட்டுக்கறேன். இதுக்கு மேல என்ன பெரிய உதவி செய்ய முடியும்”ங்கறீங்களே... இப்போ நான் கட்டையை எடுக்கறேன், நீங்க அடி வாங்கிக்கறீங்களா...

=> எங்களுக்கு ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கற அன்னிக்கு மட்டும் எப்படி தவறுதலா உங்க க்ரெடிட் கார்டுக்குப் பதிலா எங்க க்ரெடிட் கார்டை எடுத்திட்டு வந்திடறீங்க...

=> வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு பெர்மிஷன் கேக்கற உங்களுக்கு ஒரு மாசத்துல எத்தனை வாரங்கள் இருக்கு..

=> எங்க வீட்டு விசேஷங்களுக்கு போகணும்ங்கும் போது மட்டும் உங்க ஆஃபிஸ்ல லீவு கிடைக்க மாட்டேங்குதே எப்படி...

=> வீட்ல இருக்கற எல்லா வேலையும் செஞ்சிட்டு வெளில கிளம்பற அவசரத்துல “ஏங்க அந்த கேஸ் சிலிண்டரை மட்டும் ஆஃப் பண்ணிடுங்களேன்”ன்னு வெட்டியா வரிவரியா பேப்பர் வாசிக்கற உங்ககிட்ட சொன்னா ஆடுக்குப் போட்டியா தலையைத் தலையை ஆட்டிட்டு வீட்டை விட்டு 10 கி.மீ. போகும் போது “ஏங்க, கேஸ் ஆஃப் பண்ண சொன்னேனே, பண்ணீங்களா”ங்கும் போது ஆமா, இல்லைன்னு ஒண்ணு சொல்லாம, மையமா நீங்க தலையாட்டற லட்சணத்துலேயே புரிஞ்சிடும் வேலை நடக்கலைன்னு.

=> கிரிக்கெட் மேட்ச்ல கடைசி பால்ல 2 ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்ங்கற நிலைமைல அந்த ரன் எடுத்திட்டா “யெஸ், யெஸ்”ன்னு நீங்க குதிக்கறதுல தரைல இருக்கற பொருளெல்லாம் உடையும், தோத்துட்டா ரிமோட் உடையும்ன்னு எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது ட்ரால முடிஞ்சதுக்காக டேபிளை உடைக்கறீங்களே, உங்களை எந்தக் காட்டுல கொண்டு போய் விடலாம்...

=> ரெஸ்டாரண்ட் போகும் போது ஏதோ எனக்குப் பிடிச்சதை மட்டுமே நீங்க சாப்பிடப் போற மாதிரி மெனு கார்டை என் கைல குடுக்கறீங்களே, நான் ஆர்டர் பண்றதை சாப்பிடவா போறீங்க... ஏன் இந்த நல்ல புள்ள கெட்டப்பு..

(மிஸ்டரின் அட்டூழியங்கள் தொடரும்)

Monday, November 15, 2010

ஒரு மாலை இளங்குளிர் நேரம்


ஒரு மாதம் முடியும் முன்னரே பதிவுலகிற்கு மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. எழுதுவது ஆனந்தக் கலை. (வாசிக்கறவங்களைப் பத்தி எப்போவாச்சும் யோசிச்சியா...)

தீபாவளி இனிதாய்க் கழிந்தது. வெடிச்சத்தங்களும் பட்டாசு வாசமும் ஊரையடைக்க ஒரு மத்தாப்பு கூட இல்லாமல் நான் கொண்டாடிய முதல் தீபாவளி. சிறு வயதில் கையில் வைத்துத் தூக்கியெறிந்த லட்சுமி வெடிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. இதுவரை இரு தீபாவளி விபத்துகளைக் கடந்து வந்துமே வெடியில்லாத தீபாவளி என் கனவிலும் வந்ததில்லை. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரென அவரவர் பங்கிற்கு வெடிகளைக் கொண்டு வந்து தருவார்கள் எங்கள் வீட்டில். சிவகாசி அருகிலிருந்தது மேலும் சிறப்பு. தீபாவளி வெடிகளில் கொஞ்சத்தை எடுத்து இதைக் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என அப்பா சொல்லி எடுத்து வைத்ததும், இருக்கும் வெடிகளை விட உள்ளே வைக்கப்பட்ட வெடிகள் மீதே அதிகக்கவனமிருக்கும். எல்லாம் சாம்பலாய்ப் போன பின்னே நிம்மதிப் பெருமூச்சு வரும்.

ஆனால் யோகிக்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி அதிகம். (!!!) பாலிதீன் பைகளைத் தவிப்பது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது, வாகனங்களை மாசின்றிப் பராமரிப்பது என வழக்கமான ஒன்றுடன் வெடியில்லாத் தீபாவளியும் அடக்கம். முதல் வருடம் தலை தீபாவளி என்பதால் என் தொல்லை தாங்காமல் கொஞ்சமாய் வாங்கித் தந்தார். இந்த முறை அதுவும் கட். பேருக்கு ஒரு பாம்பு மாத்திரை கூட கொளுத்தல. :( (உக்காந்து உக்காந்து லக்ஷ்மி பூஜை பண்ணியே தீபாவளி கழிஞ்சது)*************************************************************************************************************

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நொய்டாவின் அவ்வைத் தமிழ்ச்சங்கம் நடத்திய யுவகலாபாரதி “ஸ்வர்ணமால்யா”வின் பரத நிகழ்ச்சி மிகச் சிறப்பு.

மிக எளிமையாக, அதீத அழகாக மேடையில் தோன்றிய ஸ்வர்ணமால்யா, மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார். நடனத்தில் ஆர்வமிருக்கும் குழந்தைகளுக்கு பரதம் பற்றிய அறிமுக உரையுடன் கூடிய நடன நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது. அவரிடமிருந்த உற்சாகம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. அவரின் மிகத் தெளிவான ஆங்கிலமும் தமிழும் கூடுதல் பலம். பக்கவாத்தியங்களும் மிகச் சிறப்பு. ஆடி அவர் களைப்படையவில்லை. முழு உற்சாகத்துடனிருந்தார். சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி. அவர் உடலசைவுகளைக் காண்பதா, விரல்களின் அபிநயங்களை ரசிப்பதா அல்லது முகபாவங்களில் மூழ்குவதா எனும் சந்தேகம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு வந்தது மிகையில்லை.

இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் ஒரு குழந்தை “எங்கம்மா என்னை ஹோம் வொர்க் செய்யலைன்னா திட்டறாங்க. என்னால படிப்புக்கும் நடனத்துக்கும் ஒண்ணா நேரம் குடுக்க முடியல. நீங்க எப்படி சமாளிச்சீங்க” எனக் கேட்கையில் அவர் முகத்தில் நாணமும் பார்வையாளர்களிடமிருந்து கரகோஷமும். “ஹோம்வொர்க்ஸை மிஸ் பண்ணித் தான் பரதம் கத்துக்கிட்டேன். ஆனாலும் எக்ஸாம்ஸ்ல மார்க் ஸ்கோர் பண்ணிட்டேன்” என குழந்தையின் கன்னம் வருடி அழகாய்ச் சொன்னார். பரதம் அவர் மூச்சில் கலந்திருந்ததை உணர முடிந்தது. (ஒரு அழகான இளங்குளிர் மாலை நேரம்)


*************************************************************************************************************

ஒரு இணையதளத்தைத் தற்செயலாய்ப் பார்த்தேன். www.snapdeal.com. இந்தியாவின் பெரு நகரங்களில் தினமொரு ஆஃபரென அள்ளி வழங்குகிறார்கள். இது எப்படி சாத்தியமென ஃபோன் செய்து விசாரித்ததில் பிஸினஸ் ப்ரோமஷனுக்காக செய்வதாகவும் அவர்களிடம் 85000 கஸ்டமர்களின் டேடாபேஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் இதில் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்கிறார் என்னவர். அப்படியா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். (இதுக்காக மாச பட்ஜெட்ல ஒரு பங்கு போய்டக் கூடாதுன்னு அவர் பயப்படறாரோ என்னவோ!)

*************************************************************************************************************

இன்று பதிவுலகில் தனது ஐந்தாவது வருடத்தில் காலடி (கையடி!?) எடுத்து வைக்கும் பதிவர் முத்துலெட்சுமிக அவர்ளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள். சிறு முயற்சி பெரும் சாதனையாய் வளர நாம் அவரை ஊக்குவிப்போம். (ஊக்கு விப்போம் இல்ல)

*************************************************************************************************************

எழுத்தார்வமும் வாசிப்பார்வமும் உள்ள எங்க ஊர்ப் பொண்ணு ஒருத்தங்களை அடிச்சுப் பிடிச்சு எழுதச் சொல்லி இழுத்திட்டு வந்தேன். அம்மணி இப்போ தான் ப்ளாக் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு. அதுக்குள்ள நாற்பதாவது பதிவை நெருங்கப் போறாங்க. அவங்களுக்கு கொஞ்சம் லேட்டான வரவேற்பையும், நம்மளோட வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம். வாங்க ஜிஜி வாழ்த்துகள். (எங்க ஊர்ப் பொண்ணு - ஸ்ரீவி டு டெல்லி)

*************************************************************************************************************

பதிவர்கள் ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் எண்ணங்களைப் பகிர்வதோடில்லாமல் பஸ்ஸிலும் ஆக்டிவாக இருப்பது அவர்களுக்குள் நல்ல நட்பை வளர்க்கிறது. நேரம் கொல்லியான பஸ்ஸில் பொழுது போகாத அசமந்த மதிய வேளையில் நான் பஸ்ஸியவை.

# ரோட்ல நின்னு ஒரு பொண்ணைப் பார்த்தா ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க. அதே, வீட்ல போய் பொண்ணைப் பார்த்தா ‘மாப்ள’ன்னு சொல்றாங்க. வாட் அ க்ரேஸி சொஸைட்டி!

# ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ ஆம் ஸாரி”ன்னு சொல்றதில்ல.
“ங்கொய்யால உன் தப்புதான்டா”
அப்படிங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“ஐ மிஸ் யூ”ன்னு சொல்றதில்ல
“டேய் உயிரோட இருக்கியா செத்துட்டியாடா”ங்கறது.

ஃப்ரெண்ட்ஷிப்ன்னா
“அவளை லவ் பண்றியாடா”ங்கறதில்ல.
“நாளைக்கு அவ வீட்டுக்குப் போறோம்;
தூக்கறோம் மச்சி”ங்கறது.

நண்பேன்டா!

# சாஃப்ட்வேர் டெவலப்பர் மற்றொரு சாஃப்ட்வேர் டெவலப்பரை சந்திக்கிறார்.
ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். இரு ஜோடியும் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்கள். ????


எந்த ப்ளாட்ஃபார்ம்ல இப்போ வொர்க் பண்ணிட்டிருக்க?

# பசங்க காதலிச்சா சேரலாம்என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்... :)

# எனக்கு சகோதரர்கள் குறைவு. குறைவே நிறைவாயுள்ளது.

# சனிக்கிழமை அலுவலகத்துக்கு வர சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிறார் மேனேஜர். அவரைப் பார்க்கிறேன் நான். ஆஃபிஸில் சைட்டடிக்கலாம் தானே...

# காதலிக்கு பைக் ஓட்டக் கற்றுத் தரும் காதலனைப் பார்க்கையில் பொறாமையாய்த் தான் இருக்கிறது. நானும் பைக் ஓட்டத் தெரியாமலேயே இருந்திருக்கலாமோ...

(ஏற்கனவே பஸ்ஸில் கும்மியவர்கள் இங்கும் கும்ம வேண்டாமென [கெஞ்சிக் கதறி] எச்சரிக்கப்படுகிறார்கள்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

தமிழ்நாட்டிலிருந்து அழைக்கும் உறவினர்களுடனான உரையாடலைத் தமிழிலேயே ஆரம்பிக்க விரும்புகிறார் யோகி. “ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன். பொண்டாட்டி நல்லா இருக்கா. அப்பறம்” இதுக்கு மேல் எதிர்முனையில் தமிழ்த் தாக்குதல் தொடர்ந்தால் “அய்யோ, போதும் போதும். எனக்குத் தெரியாது.”
“ஏன் உங்க வொய்ஃப் இன்னும் தமிழ் முழுசா கத்துத் தரலையா” எதிர்முனையில் நம்மை அசிங்கப்படுத்த நிச்சயம் யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
“அய்யோ பாவம் பையன் நான். என்ன பண்ண.. என் வடியார் சரி இல்ல”
முதல் முறை இதை நான் கேட்ட போது “வடியார்?” என்றேன் அவரிடம்.
பின்னரே தெரிந்தது ஏதோ புத்தகம் வாங்கித் தமிழ் பழக ஆரம்பிக்க அதிலிருந்த வாத்தியார் (vadiyar) வடியாராகிப் போனது. அவ்வார்த்தையைத் திருத்திய பின் இப்போதெல்லாம்
“நான் நல்ல மாணவன். என் வாத்தியார் சரி இல்ல” அவரின் ஸ்டேண்டர்ட் டயலாக்.
எல்லாரும் என்னைத் திட்றாங்க. தமிழ் நல்லா சொல்லிக் குடுத்தா என்னன்னு. :(
(கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் பேசி குடும்பத்தோட செல்ல மாப்பிள்ளை ஆகிட்டார். நானும் ஆரம்பிக்கிறேன் பஞ்சாபி அட்டாக்கை.)