ஓகே, இந்த வார ஷாப்பிங் ப்ளேஸ் பிக் பஸார். கிட்டத்தட்ட எல்லா பெரு நகரங்களிலும் பிக் பஸார் வந்துடுச்சு. அண்ணாச்சி கடைல மளிகை லிஸ்ட் குடுத்து தினசரிக் காகிதத்துல பொட்டலம் போட்டு வாங்கிட்டிருந்த கலாச்சாரத்தை இந்த மாதிரி கன்ஸ்யூமர் ஸ்டோர்ஸ் மாத்திருக்கு. எல்லாப் பொருட்களுக்கும் தனித்தனி செக்ஷனும், தகுந்த அலமாரிகளும் குடுத்து, கூடவே எல்லாத்தையும் நம்ம தலைல கட்டுற மாதிரி ஆஃபரும் குடுத்து அடுக்கி வெச்சிருக்காங்க. தேவையோ இல்லையோ பாக்குறதையெல்லாம் வாடிக்கையாளர்களைப் பிக் பண்ண வைக்குற இந்த ஸ்டோர் மேனேஜ்மெண்ட் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. குறைஞ்சது 2-3 மணி நேரமாவது ஆகுற பிக் பஸார் ஷாப்பிங்கை டக்குன்னு 10 நிமிஷத்துல பட்டியலிடலாமா...
* உள்ளே போனதும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காஸ்மெடிக்ஸ், ஆஃபர் இல்லாமல் பெண்களைக் கவர்வதில்லை. VLCC யின் எடைக் குறைப்பு மற்றும் அழகுப் பொருட்கள் ஸ்டோரின் முதல் பிரிவின் முதல் ஷெல்ஃபில் இடம் பிடித்தாலும் வாடிக்கையாளர்களின் கூடைகளில் வந்து சேர்வதில்லை.
* மொபைல் ஃபோன்களுக்கென ஆஃபர்களை அள்ளி வழங்கும் மொபைல் ஷாப்புகளுக்கு நடுவே பிக் பஸார் போட்டியிட முடியவில்லை என்பது உண்மை. பலரும் மாடல்கள் அறியவே மொபைல் பகுதியில் கூடி விசாரித்து செல்கின்றனர்.
* எப்போதும் ஆஃபர் இருக்கும் ஆடைகள் பகுதியும் அதிகம் கவரவில்லை. அதற்குக் காரணம் அவர்களின் ஆடைகளின் தரமெனலாம். டெல்லியின் லோக்கல் மார்கெட்டில் கிடைக்கும் 100 ரூபாய் குர்தாக்களை, பிக்பஸாரின் ஆஃபருடன் கூடிய 800 ரூபாய் குர்தாக்கள் ஜெயிக்க முடிவதில்லைஎன்பது மறுக்க முடியா உண்மை.
* ஆண்கள் பகுதியிலும், குழந்தைகள் பகுதியிலிருக்கும் உடைகள் தினசரி அல்லது வீட்டில் உபயோகிப்பதற்கு ஏற்ற விலையிலும், தரத்திலும் கிடைக்கின்றன.
* இவர்களின் தங்க ஆபரணப் பகுதியில் இதுவரை நான் நுழைந்ததில்லை. அதனால் அது பற்றிய விவரங்கள் ஏதுமில்லையெனினும் அப்பகுதி பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இல்லாமலே ஈயாடிக் கொண்டுள்ளது.
* சமையல் பாத்திரங்கள் மற்றும் டப்பாக்களுக்கு என் சாய்ஸ் பிக் பஸார் தான். பல கம்பெனிகளின் தரமான கட்லெரீஸ் அதற்கேற்ற விலையில் சமயங்களில் ஆஃபர்களுடன் கிடைப்பது சிறப்பு.
* எலெக்ட்ரானிக்ஸ் பிரிவும் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே அறியலாம். ஆனால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அந்தப் பொருட்களைப் பற்றின போதிய அறிவு இருக்குமாறு பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
* குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் இருக்குமிடத்தில் ஆஃபர்கள் இருக்குமளவு வெரைட்டி இல்லை. டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் வந்துவிட்ட நிலையில் இவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தாவிடில் இங்கு வியாபாரம் பெரிதாய் ஒன்றும் நிகழப் போவதில்லை.
* காலணிகள் பிரிவு ஓகே ரகம்.
* டூரிஸ்ட் பேக்குகள் மற்றும் ட்ராலிகளுக்கு ஆல்டைம் ஆஃபர் அளிக்குமிடம் பிக் பஸார். தவிர குறைந்தது 4-5 ப்ராண்டுகளின் ஒப்பீடு கிடைக்கும். நல்ல, தரமான பொருள் தேர்ந்தெடுக்க இது உதவும்.
* பலசரக்குப் பிரிவு தான் பிக் பஸாரின் ப்ளஸ். கடையின் மொத்தக் கூட்டத்தில் பாதிக்கு மேல் நிரம்பி வழிவது இங்கு தான். எல்லாப் பொருட்களும் கிடைப்பதும், ஒவ்வொன்றிலும் இருக்கும் ப்ராண்டுகளை ஒப்பிட்டு வாங்குவதும், அதிலும் தொடர்ந்த ஆஃபர்களும் இங்கிருக்கும் அதிக வியாபாரத்திற்குக் காரணம். டெல்லி பிக் பஸார்களில் கடந்த ஒரு வருடமாக இட்லி, தோசை மாவுகள் உள்ளேயே அரைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்கும் நல்ல வரவேற்பு.
* எல்லா வகைக் காய் கறிகளும் மலிவான விலையிலும் ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கின்றன. சீசனில்லாத பழங்கள் கூட சரியான விலையில் கிடைக்கின்றன.
* நீண்டு வழியும் கவுண்ட்டர்களும், சில பொருட்களில் பார்கோட் ஸ்கேனர்கள் வேலை செய்யாமல் ஏற்படும் தாமதமும் 2-3 மணி நேர ஷாப்பிங்கிற்குப் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அயற்சியைத் தருவதாய் உள்ளது.
* பிக் பஸாரை விட்டு வெளியேறும் வழியில் மருந்துகளும், சாப்பிடக் கடைகளும் இருப்பது நல்ல விஷயம். மருந்துக் கடையில் யாரும் நுழைகிறார்களோ இல்லையோ, சாப்பாட்டுக் கடைகளில் நல்ல கூட்டம்.
* நொய்டாவின் பிக்பஸார் அடித்தளத்தில் அமைந்திருப்பதால் வெளியே இருக்கும் மார்பிள் பெஞ்சஸ் காதலர்களுக்கு வசதியான இடம். 20 ரூபாய்க்கு பார்கார்னும், 20 ரூபாய்க்குக் குல்ஃபியும் வாங்கிக் கொண்டு அது உருக உருக இவர்களும் காதல் செய்ய வேண்டியது தான்.
* சில பல குறைகள் இருந்தாலும் எல்லாப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பதாலும், அவற்றில் ஒரு வெரைட்டி கொடுப்பதாலும், வருடம் முழுக்க இருக்கும் தொடர் ஆஃபர்களினாலும் பிக் பஸார் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சிக்குறியது. கூடவே எல்லா பலசரக்குப் பொருட்களின் மேனுஃபேக்சரிங் தேதிகளும் ஒரு மாதத்திற்குள்ளாகவே இருப்பது சிறப்பு.
யோகி பார்ப்பதையெல்லாம் வாங்க நினைப்பார். நான் அவர் கையிலெடுக்கும் ஒவ்வொன்றிற்கும் “வேண்டாம்” சொல்லிக் கொண்டே வந்தேன். சில்லி சாஸ் எடுக்கப் போன இடத்தில் ஐரோப்பியர் ஒருவர் வினிகரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி வந்து “பேபி, இனஃப். இட்ஸ் டூ மச் யூ ஹேவ் டேக்கன்” என்ற போது “ஓகே, ஓகே, ஐ ஆம் நாட் டேக்கிங் ஸ்வீட்டி” என அவர் ஓடும் போது புரிந்தது. “இந்தியாவிலிருந்து யூரோப் வரை கணவன் கணவன் தான். மனைவி மனைவி தான்”.
சந்தைக்குப் புதுசு - சச்சின் டெண்டுல்கரும் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸில் இறங்கிவிட்டார். அவரின் தயாரிப்பான Sach எனும் புது டூத் பேஸ்ட் வந்துள்ளது. 3 ஃப்ளேவர்களில் அறிமுகமாகியிருக்கும் சச் டூத் பேஸ்ட் 150 கிராம் ட்யூப், 1 டூத் ப்ரஷ், 1 சிறிய டவலுடன் சேர்த்து 55 ரூபாய்க்குக் கிடைக்கிறது.