Friday, April 9, 2010

பதின்ம வயது டைரிக் குறிப்பு

கேலியான, மாறுதலான, வாழ்வின் அசடுகள் நிறைந்த, தைரியமான, தயக்கமான, கேனைத்தனமான இந்த பதின்ம வயது அனைவர் வாழ்விலும் அழியாக் கோலமிட்டிருக்கிறது. என் பதின்ம வயது டைரிக் குறிப்புகளில் நிரம்பி வழிந்தவை நட்புகளும், நட்புகளின் காதல்களுமே. தவிர சில தேவதாஸ்களை உருவாக்கிய சாகசமும் உண்டு. ;)

பதின்ம வயதில் எனக்கு வந்த முதல் காதல் கடிதம் நான் ஏழாம் வகுப்பில் இருந்த போது. ஆனால் அது தவறுதலாக அம்மா கையில் போய்விட அம்மாவும், அப்பாவும் நன்றாகவே கவ்னித்தார்கள் அவனை. இது எனக்குத் தெரிந்தது பதின்ம வயதின் இறுதியில். அறிந்தபோது ரொம்பவே காமெடியாக இருந்தது. அதற்குப் பின் கொடுத்தவனைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றி கேட்காமலேயே விட்டு விட்டேன் “எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”

என் குழந்தைப் பிராயத்திலிருந்தே என் நல்ல நண்பன் என் மாமன் மகன். என்னை விட மூன்று வயது பெரியவன். அவனுக்கும் எனக்கும் இருந்த சினேகம் அழகானது. பதின்ம வயதில் என் எல்லா சேட்டைகளிலும், தவறுகளிலுமிருந்து என்னை அவன் தான் காத்தான். சேட்டைன்னா உங்கூட்டு சேட்டை இல்ல, என்கூட்டு சேட்டை இல்ல. உலக சேட்டை. அப்படித் தான் எங்கூட்ல சொல்லுவாங்க. எங்கம்மா, அப்பா ரெண்டு பேருமே எப்போவுமே தங்களுக்கு ஆண்மகனில்லை என வருந்தியதில்லை. நான் வருத்தப்பட விட்டதில்லை. :)

ஒரு முறை பள்ளி வந்து கொண்டிருந்த தோழியை மறித்து என் மீதான காதலை ஒருவன் சொல்லி அவளைத் தூது போக சொல்ல அவள் பயந்து போய் அழுது விட்டாள். மாலை வீட்டிற்குப் போய் அம்மாவை உடனழைத்துக் கொண்டு அந்தப் பையன்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவன் என்னிடம் அதிகம் பேசவும் அறைந்து விட்டேன். அம்மா ரொம்பவே பயந்து விட்டாள். அவன் கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய், என் அம்மா அவனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ செலவுக்குப் பணம் கொடுத்து வந்தார். இதனால் மற்ற பசங்களுக்குப் பயமிருந்து அந்த நேரத்தில் ஒதுங்கி விட்டாலும், அதற்குப் பின் எங்கள் தெருவில் இரவு நேரங்களில் வந்து கத்துவது, மொட்டை மாடியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது கேலி செய்வது எனத் தொடர்ந்தனர். அப்போவும் அவர்களுடன் நான் வம்பிழுக்கப் போக, பயந்த அம்மா என் கஸினை அழைத்து விபரம் சொல்ல அவன் தான் தன் நண்பர்களுடன் சென்று பிரச்சனையைத் தீர்த்து வந்தான். இப்போது என் கஸின் எங்கு, எப்படி இருக்கிறான் எனத் தெரியாது. ஒரு குடும்ப மனஸ்தாபத்தில் இரு வீட்டுக்கும் பேச்சு நின்று போனது. என் பதின்ம வயதின் மிகப் பெரிய இழப்பு அவன் நட்பு.

அடுத்ததாய் காதல் ரோமியோக்கள். காலை 6 மணிக்கு ஃபிஸிக்ஸ் டியூசன் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு மேத்ஸ் டியூசன் முடித்து வரும் வரை ஒவ்வொரு முறை நான் கடக்கும் போதும் காத்திருந்து எழுந்து தன் இருப்பைக், காத்திருப்பைக் காட்டிக் காதலித்த ஒருவன், மேத்ஸ் டியூசனில் நேரே சொல்லத் துணிவில்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லிக் காதலித்தவன், ஒரு முறை வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமே சொல்லி அனுமதி கேட்டவன், பஸ்ஸில் பாட்டுப் பாடி காதல் சொன்னவன், சைக்கிளில் உடன் வந்து விருப்பம் சொன்னவன், தெருவில் கடக்கும் போது பாட்டுப் போட்டுக் காதல் தெரிவித்தவன், ஒரு பெரிய அசைன்மெண்ட் அளவிற்குக் காதல் கடிதம் தீட்டிக் கையில் தந்தவன், ஃபோனில் அழைத்துக் காதல் சொன்னவன், கல்லூரியில் சிட்டை எழுதித் தூக்கியெறிந்தவன், கண்ணைப் பார்த்து காதல் சொன்னவன், மழையில் நனைந்து கொண்டே சொன்னவன் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. ஆனால் இவர்களிடம் என்னால் காதலையன்றி காமெடியையே பார்க்க முடிந்தது. ஒருவழியாக எல்லாரும் தப்பித்து விட்டார்கள். யோகி மாட்டிக் கொண்டார். சரி, அந்த சோகக் கதை இப்போதெதற்கு...

என் பதின்மத்தில் கிடைத்த நட்புகளே என் நெஞ்சம் நிறைந்து, இப்போதும் தொடர்பவை. ஏப்ரல் மாதத்தில் படம் பார்த்து விட்டுத் தோழியைத் தேடி சென்று அழுத அனுபவமெல்லாம் உண்டு. :)

கேனைத் தனமாய் கவிதை முயற்சித்த பள்ளிக் கடைசி நாள் பிரிவு டைரிகள், கவிதைகளாய் நிரப்பித் தந்த தோழிகளின் காதல் கடிதங்கள், அழகாய்க் கடக்கும் பசங்களுக்கெல்லாம் கூட்டாய்ப் போட்ட மதிப்பெண்கள், க்ரூப் ஸ்டடியில் அடித்த லூட்டிகள், ஒன்றிரெண்டாய் அமைந்து விட்ட பள்ளி நாள் திரைப்படங்கள், பால்கோவா வாசமும், தீப்பெட்டி வாசமும், புழுதி வாசமும், நூலுக்கேற்றப்படும் சாய வாசனையும், மஞ்சள், குங்கும வாசனையும் கலந்து சுவாசிக்கக் கொடுத்தத் தெருக்கள், தோழிகளின் காதலுக்கு ஒப்புவித்த அறிவுரைகள், பதுங்கும் நேரங்களில் அமைந்து விட்ட ஆசிரியரின் கேள்விகள், அதற்காய்த் தலை குனிந்து நிற்கும் நேரத்திலும் விலகாத புன்னகைகள், நேராய் இருந்தும் சரி செய்யப்பட்ட தாவணித் தலைப்புகள், முழுதாய்த் தெரியாமல் முயற்சித்து பால் குக்கர் போல் முடிந்து விட்ட விசிலுடனான படங்கள், நட்பின் காதலுக்காய் கட்டிய கைகளுடன் உதடுகளும் ஒட்டிப் போன என்கொயரிகள், சைக்கிள் சக்கரம் தேய அளக்கப்பட்ட ஊரின் புழுதிச் சாலைகள், ஆசிரியரின் மீதான பயத்துடனே வரிசையில் போய் வந்த சுற்றுலாத் தளங்கள், வாய்க்குள் செல்லும் சாப்பாடு எதுவென்றே தெரியாமல் முடிந்த தோழமைக் கைகள், கிறிஸுதுமஸுக்கும் பொங்கலுக்கும் காத்திருந்து அனுபவித்த விடுமுறை தினங்கள், கணினியை முதன் முதலாய்த் தொட்டுப் பார்த்து சிலிர்த்த விரல்கள், இம்போசிஷன் நாட்களில் வரும் பொய்க் காய்ச்சல்கள், ஒரு ஊசிக்காக டாக்டரை சுற்றிலும் ஓட விட்ட மருத்துவமனை வராண்டாக்கள், ஒரு பக்க ஜடையை இருபக்க ஜடையாய் மாற்றி இருபக்கப் பூவை ஒரு பக்கப் பூவாய் மாற்றிய அலங்காரங்கள் என கலவையானது பதின்ம நினைவுகள்.

இதை நினைக்கையில் மீண்டும் அந்நாட்களுக்குத் திரும்ப மனது கெஞ்சுகிறது. ஆனால் அவ்வயதில் வாசித்த கதையில் வரும் டைம் மெஷின் என்னிடம் இல்லையே :(

நினைவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு கொடுத்த பா.ராஜாராம் மாம்ஸுக்கு நன்றிகள்.

இதைத் தொடர அதே ஊரின் தெருக்களில் வலம் வந்த ஸ்ரீவி சிவாவையும், குறும்பு நண்பர் ரகுவையும் அழைக்கிறேன்.

Thursday, April 8, 2010

எங்கு இருக்கிறோம் நாம்?

நேற்று காலை டீ, நிதானமாக தொண்டையில் இறங்கவில்லை. காரணம் செய்தித் தாளில் வாசித்த 2 செய்திகள். அதைப் பற்றி என்னவரிடமும், தொடர்ந்து அலுவலகத்திலும் பேசிக் கொண்டிருந்தோம். டெல்லியில் நேற்று முன் தினம் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை, மனிதர்களின் மீதான நம்பிக்கையை உடைக்கச் செய்கின்றன. நீங்களும் வாசித்திருக்கலாம். இல்லையெனில் இங்கே.

செய்தி 1 : டெல்லி யூனிவர்சிட்டி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து பேருந்திற்காகக் காத்திருந்த வேளையில் அவர் வீட்டருகே வசிக்கும் கொஞ்சம் பழகியவர் லிஃப்ட் கொடுத்திருக்கிறார். முதலில் தயங்கினாலும், தெரிந்தவர் என்பதால் அப்பெண்ணும் அந்நபருடன் காரில் சென்றுள்ளார். வழியில் இரண்டு நிமிட வேலை இருப்பதாகச் சொல்லி அப்பெண்ணை அழைத்துக் கொண்டு போனவர் அங்கிருக்கும் தன் நண்பர்களுடன் சேர்ந்து இப்பெண்ணை ஒரு கும்பலே தொடர்ந்து 6 மணி நேரம் பலாத்காரம் செய்திருக்கின்ற்னர். :(

செய்தி 2: டெல்லி கீதா காலனியில் உள்ள தாபா ஒன்றில் 10 ரூபாய்க்கு தால் வாங்கி வரச் சொல்லி மகனை அனுப்பியுள்ளார் ஓருவர். வாங்கி வந்த தாலில் தண்ணீர் அதிகமாக இருக்கவே கணவன், மனைவி இருவரும் சிறுவன் வாங்கி வாங்கி வந்த தாலை எடுத்துக் கொண்டு தாபாவில் சென்று சண்டையிட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற தாபாவாலா அருகிலிருந்த கல்லை எடுத்து அவர் மண்டையில் எறிந்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார். :(

அக்கம் பக்கமிருப்பவர், வீட்டிற்குத் தெரிந்தவர் என ஒரு மனிதனை நம்பி லிஃப்ட் பெற்றது மாணவியின் குற்றமா அல்லது ஒரு பொருளின் தரம் சரியில்லையென வாதாடி 10 ரூபாய்க்காக உயிரை விட்டது கொடுமையா...

எங்கிருக்கிறோம் நாம்... எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை.... ஒவ்வொரு மனிதனையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கி, ஒரு உள்ளூரப் பயத்துடனே தான் நகர்த்த வேண்டியிருக்கிறது நாட்களை.

மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் எனும் டார்வின் தியரியை மனிதன் மிக அழகாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு நாளும். சோம்பல் முறித்து உதிரும் பறவையின் மெல்லிய சிறகு மேலே விழும் போது கூட கண்களில் ஒரு பயத்துடனே கடந்து செல்கிறோம். வாழ்வை எப்படி ரசித்து வாழ?

Wednesday, April 7, 2010

எனக்குப் பிடித்த 10 பெண்கள்

தொடர் பதிவுகள்னாலே அதிகம் எழுதாமல் அப்படியே இருந்து விடுகிறது. எல்லாரும் எழுதி வாசித்து விட்ட அயற்சியா அல்லது ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொன்னால் அதைப் பற்றி எழுதத் தெரியவில்லையா எனப் புரியவில்லை. எப்படியோ இந்தத் தொடரை ஆரம்பித்த சர்ஃபுதீனும், தொடர்ந்து நண்பர் ரகுவும் அழைத்ததால் இதோ நானும் எழுதிட்டேன்.

எனக்குப் பிடித்த 10 பெண்கள். இன்னும் அதிகமானவர்களைப் பிடிக்குமென்றாலும் இப்போதைக்கு அதுல இருந்து 10 பேர் மட்டுமே. அடுத்த வருஷம் மீதி பேரை சேர்த்துக்கலாம்.

சரி, மக்களை எழுதுறதுக்கு முன்னாடி விதிகளைப் போட்டுடலாம். இல்லைன்னா சாமி கண்ணைக் குத்தும்.

1. உங்களுக்குப் பிடித்தவர்கள் உங்கள் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது.
2. வரிசை முக்கியமில்லை.
3. வெவ்வேறு துறையிலிருந்து 10 பெண்களை எழுதுங்கள்.

ஓகே, ஸ்டார்ட் ம்யூஸிக்.


“சே என்ன வாழ்க்கை இது” என சலித்துக் கொள்ளும் சராசரி மனுஷியான என்னை வாழ்வின் மீதான சலிப்பைப் போக்கித் தன்னம்பிக்கை தர வைத்தது இப்பெண்ணின் வைராக்கியமான வாழ்வு தான். நகைச்சுவை எழுத்துகளால் மட்டுமே கவர்ந்து கொண்டிருந்தவர் ஒரு தன்னம்பிக்கை மனுஷியாகவும் தன்னை நிரூபித்து எல்லாருக்கும் முன்மாதிரியாய் வாழ்பவர். ஐ லவ் யூ ரம்ஸ்.


உண்மையிலேயே நான் வியந்த துணிச்சல் இவரது. வீட்டை, நிர்வாகத்தை, அலுவலை, குழந்தைகளை, குடும்பத்தை என எல்லாத்தையும் ஒரு பெண் அணைத்துப் போகையில் அவளையும் அதே அரவணைப்பில் கொண்டு போக ஆட்கள் இருப்பர். ஆனால் யாரின் அணைப்பும், அரவணைப்பும் தேவையில்லையென தைரியத்தின் முழு வடிவாய் இருக்கும் விஜியை இன்னும் பிரம்மிப்புடனே தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


எல்லாரும் மொக்கை போடுவதுண்டு. அந்த மொக்கையையே சீரியஸாகப் போட்டு நம்மை விழுந்து விழுந்து சிரிக்க 100% கியாரண்டி, வாரண்டி, கொட்டிக்க ஒரு கப் டீ எல்லாம் தருபவர் இவர். தவிர, ட்ரையான விஷயத்தையும் லேசாக சொல்லக் காரணம் இவரையும் அறியாமல் இவரின் மொக்கை கலந்திருப்பதே. நல்ல ரசனையான எழுத்து இவரது. இவர் எழுத்து மட்டும் தான் இப்படி என்றால் பேச்சும் மொக்கைகலந்தது தான். மனம் சோர்ந்த நேரங்களில் இப்பெண்ணுடன் கொஞ்சம் கதைத்தால் போதும்.


ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் உணர்வுதான். ஆனால் இவரைப் போல் ஒரு தாயாக இருக்க வேண்டும் என நினைக்க வைக்கும் தாய்மை இவரது. ஒரு குழந்தையை இவ்வளவு ரசித்து அதையும் ஒன்று விடாமல் பதிந்து வரும் இவரின் எழுத்துகளுக்கு ரசிகை நான். குழந்தைக்குத் தேவையான பாசம், கண்டிப்பு, தைரியம், ஊக்கம் கூடவே அப்பப்போ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என எல்லாம் உண்டு இவரிடம். குழந்தை வளர்வது தாயின் கையில் என்பார்கள். நிச்சயம் பப்பு பெரிய ஆளாக வருவாள் என்ற எண்ணம் இத்தாயைப் பார்க்கையில் தோன்றுகிறது. Happy Birthday Mullai.


ஜாலி பார்ட்டியான இவருக்குள் இருக்கும் ஆன்மீகத் தேடல் வியக்க வைக்கிறது. ஃபேஷன் டிசைனிங், மார்டன் லைஃபிற்கு நடுவே அவசியமான ஆன்மீக விஷயங்களை அலசுகிறார் இவர். பல சமஸ்கிருதக் கதைகளையும், நிகழ்வுகளையும் தமிழில் மொழிபெயர்த்து நம் அறிவில் ஏறுமாறு தரும் இவரைப் பார்த்தால் பெருமையாய் உள்ளது.


நெகிழ்த்தும் சிறுகதைகளுக்கு சொந்தக்காரர் இவர். இவரின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து, மிகவும் கவனிக்கப்பட்டுத் தீட்டப்பட்டிருக்கும். பல நேரங்களில் நம் மனம் கனத்துப் போகும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். மாஸ்டர் பீஸ் என்று இவருக்கு மட்டும் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் எழுதும் ஒவ்வொன்றையும் மாஸ்டர் பீஸாக செதுக்குபவர். அகலாக் கண்களுடன் நான் வியக்கும் பெண் இவர்.


எதாவது மனசு சரியில்லையா “திறந்திடு சீசே”ன்னு இவங்க வலைப்பக்கத்தைத் திறந்தால் போதும். அப்படியே அழுதிட்டிருந்த கண்ணு, சிரிச்சு நிறையும். நகைச்சுவை, மொக்கையோ மொக்கை இல்லாமல் இதுவரை இவர் எழுதியதில்லை என நினைக்கிறேன். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் எழுத்திற்கு உரிமையாளர். தொடரட்டும் உங்கள் மொக்கைப் பணி.


இவங்களை சில மாதங்களா தான் பார்க்கிறேன், ஆனால் எல்லா இடத்திலேயும் பார்க்கிறேன். எல்லார் தளங்களிலும் இவர் பின்னூட்டம் இருக்கும். ஊக்கம் கொடுப்பது அதுவும் நாம இருக்கும் அதே தளத்தில் நம்முடன் வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதென்பது நிஜமாவே பெரிய காரியம் தான். தொடர் ஊக்கங்களுக்கு நன்றி சித்ரா, எல்லார் சார்பிலும். இது மட்டுமில்லாம மேடம் வெட்டிப் பேச்சுன்னு தலைப்பு வெச்சிட்டு எவ்ளோ அவசியமான விஷயங்களையும் அலசுறாங்க.


சொட்டும் காதல் வரிகளுக்கு சொந்தமானவர். இவர் வேறென்ன எழுதினாலும் இவரின் காதல் கவிதைகளுக்கு தான் நான் ஃபேன். “சொட்டச் சொட்டக் காதல்”ன்னு சீக்கிரமே புக் போடுங்க ப்ரியா.


என்னை மாதிரி கத்துக்குட்டி சமையல்காரர்களுக்கெல்லாம் குல தெய்வம். என்ன ஈசியா ஒவ்வொரு உணவையும் படங்களோட கத்துத் தர்றாங்க. சமையல்ன்னாலே வெறுப்படையுறவங்க கூட இவங்க சமையல் ரெசிப்பிஸ் பார்த்தா தூள் கிளப்பிடலாம். என் ருசிகரத் தேர்வு இவர்.

இப்படி பல திறமைகளையும் வெச்சுக்கிட்டு, ஆணுக்கு நிகரல்ல அதுக்கு மேலேயே தான்னு சொல்ற இவங்க எல்லாருமே எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க.

Tuesday, April 6, 2010

நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்துச்சு...


ஹாய் ஹாய் ஹாய்.... ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் வந்துட்டேன். இந்த 10 நாளா என்னைத் தேடினவங்கள்லாம் (அப்படி யாராவது இருந்தா) இனிமே புயல் கிளம்பிடுச்சுன்னு சூதானமா இருந்துக்கோங்க.

போன வாரம் 3 நாட்கள் யோகி ஊர்ல இல்ல. பயங்கர குஷி. ஏன்னா அவர் இல்லைன்னா நோ சமையல், இஷ்டத்துக்கு டி.வி பார்க்கலாம், தமிழ்ப் படங்கள் பார்க்கலாம். தவிர, அவரோட க்ரெடிட் கார்டை எடுத்துக்கிட்டு ஜாலியா ஊர் சுத்தலாம். இந்த முறை அவர் வெளியூர் போனது வீக்கெண்டா அமைய தோழியை வர சொல்லி ஷாப்பிங் ப்ளான் போட்டோம். வெள்ளிக் கிழமை ஒரு நாள் ஆஃபிஸ். அடுத்து 2 நாள் லீவ். நல்லா சுத்தலாம்னு முடிவு பண்ணி, லிஸ்டெல்லாம் போட்டாச்சு. டெல்லியின் பெஸ்ட் 3 மார்க்கெட்ஸ் போறதுன்னும் டிஸைட் பண்ணியாச்சு. வெள்ளிக் கிழமை ஃப்ரிட்ஜ்ல இருக்குற மிச்சம் மீதியை ஸ்டாக் க்ளியரன்ஸ் பண்ணியாச்சு.

சனிக்கிழமை லீவுன்னு சொல்லியிருந்தவ, வெள்ளிக் கிழமை சாயங்காலம் வந்து “நாளைக்கு வொர்க்கிங் விக்கி”ன்னதும் முதல் ஷாப்பிங் ப்ளான் கேன்சல். இருந்தும் எல்லாத்தையும் சண்டே ஒரே நாள்ல கவர் பண்ண திட்டம் போட்டோம். சனிக் கிழமை அவளுக்குத் தானே ஆஃபிஸ் நமக்கில்லையேன்னு வெள்ளிக் கிழமை ராத்திரி 3 படம் பார்த்தேன். Death at a Funeral (Comedy Story), விண்ணைத் தாண்டி வருவாயா ரெண்டும் பார்த்து முடிச்சிட்டுப் போதும்ன்னு நினைச்சப்போ எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னாங்களேன்னு நம்ம்ம்ம்பி “தமிழ்ப்படம்” பார்த்தேன். :( மொக்கை தாங்க முடியல.

காலைல 5 மணிக்கு தலை வலியோட தூங்கப் போனா 6 மணிக்கு அலாரம் அடிக்குது. சரின்னு எழுந்து அவளுக்கு லஞ்ச் செய்து பேக் பண்ணிக் குடுத்து அனுப்பிட்டுப் படுத்தா, மறுபடியும் மணி அடிக்குது. தூக்கக் கலக்கத்துல அலாரத்துத் தலைல தட்டி கைல அடி. அப்புறம் தான் தெரிஞ்சது அடிச்சது அலாரமில்ல, காலிங் பெல். வீட்டுல வேலை பாக்குறவங்க வந்தாச்சு. எழுந்து அவங்க போற வரை உக்காந்திருந்தேன். மணி 10 ஆச்சு. சரி, சாப்பிட்டுத் தூங்கலாம்ன்னு ஒரு ப்ரெட் டோஸ்ட்டைப் போட்டுத் தின்னுட்டுப் படுத்தேன். மறுபடியும் காலிங் பெல். அயர்ன் துணி கேட்டு அயர்ன் பண்றவர். அவர்கிட்ட துணி குடுத்திட்டு கொஞ்ச நேரம் நெட்ல மேயலாம்னு சிஸ்டத்தைத் திறந்தா சமையல் குறிப்பு கேக்குறா ஃப்ரெண்ட் ஒருத்தி. நோ சமையல் டே அன்னிக்கு நோ ரெசிப்பீஸ் டூன்னு சொல்லிட்டு சிஸ்டத்தைக் க்ளோஸ் பண்ணிட்டு மறுபடியும் பெட் ரூம் போனேன்.

கண்ணசந்த அஞ்சாவது நிமிஷத்துல “ டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா”ன்னு தங்கை கால். அவகிட்ட ராத்திரி படம் பார்த்த சோகக் கதையை சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி தூங்கப் பெர்மிஷன் கேட்டு ஒரு மணி நேரம் தூங்கினேன். மணி 3 ஆகிடுச்சு. பசி. கிச்சன் பக்கம் போய் அலமாரியைக் குடைஞ்சதுல மேகி ஒண்ணு கிடைச்சது. அதை வெந்தும் வேகாம தின்னுட்டு டி.வியை ஆன் பண்ணா கொடுமைக்கு கேப்டன் ஆடிக்கிட்டிருக்கார். அதைப் பார்த்து சிரிச்சுப் புரையேறி மேகி சிதறினது தான் மிச்சம்.

ஒரு மனசா குளிக்க முடிவு பண்ணி ஷவரைத் திறந்தா வெந்நீர் கொட்டுது. அதுல குளிச்சுட்டு வந்து ஏ.சி.யை ஆன் பண்ணா கரண்ட் போயிடுச்சு. ஒரு வழியா ஃபேன்லையே சமாளிச்சு உக்காந்திருந்தேன். சாயங்காலம் ஃப்ரெண்ட் வந்ததும் அன்னிக்கு முழுக்க தூங்க முடியாம போன சோகத்தை சொல்லி டின்னருக்கு வெளிய போய் சாப்பிடலாம்னு முடிவாச்சு.

ஓகே, மறுபடியும் சைனீஸ். இந்த முறை Bercos. டெல்லி, நொய்டால ரொம்ப ஃபேமஸ் ரெஸ்டாரண்ட்டாம். அடிச்சுப் பிடிச்சு சீட் போட்டு போய் டேபிள்ல உக்காந்திட்டு ஒரு வீர சிரிப்பு சிரிச்சேன். ஃப்ரெண்ட் கேவலமா ஒரு லுக் விட்டா. அடுத்ததா ஆர்டர் எடுக்க வந்தவன் நம்மள மதிக்காம பின்னாடி இருக்குற டி.வி.ல ஐ.பி.எல்லைப் பார்த்துக்கிட்டே தண்ணியை டேபிள்ல கொட்டினப்போவே எழுந்து வந்திருக்கணும். ஃப்ரெண்ட் அமைதி காக்கச் சொன்னதால பொருளை எடுக்கல.

ஆர்டர் பண்ண 5 நிமிஷத்துல எல்லாமே வந்தாச்சு. எல்லாம் வெஜ் தான். சாப்பிட்டு அங்கே கேஸினோ வாசிச்சிட்டிருந்தவரை ரசிச்சுக்கிட்டே யோகிக்கு ஃபோன் பண்ணி உங்க பெர்த் டே ட்ரீட் இங்கே தான்னு சொன்னேன். அவர் வயிறெரிஞ்ச புகைச்சல் வாசனை எனக்கு வந்ததும், ஃபோனை வெச்சுட்டேன்.

நைட் வீட்டுக்கு வர்ற வழில 2 ஐஸ் க்ரீம் ஃப்ரெண்ட் ஸ்பான்சர் பண்ணா. வீட்ல வந்து ஃப்ரீசர்ல இருந்த பிஸ்தா பாரையும் விடாம சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த நாள் முழுக்க வேலை செய்த களைப்புல (கண்டுக்காதீங்க மக்கள்ஸ்) கவுந்தாச்சு.

காலைல எழுந்திருக்கும் போதே வயிறு ஒரு மாதிரி இருந்தது. “வெளில சாப்பிடும் போது வயிற்றுப் பிரச்சனையெல்லாம் ஜகஜம்”ன்னு வடிவேலு மாதிரி எனக்கு நானே சமாதானம் சொல்லிட்டு, காலை ஷாப்பிங் ப்ளானை அவகிட்ட கெஞ்சி சாயாங்காலத்துக்கு மாத்தினேன். நம்மூர் தயிர் சாதம் என்னவோ ரொம்ப காம்ப்ளிகேடட் டிஷ் மாதிரி நினைச்சுக்கிட்டு “விக்கி எனக்கு தயிர் சாதம் பண்ணக் கத்துக்குடு”ன்னா ஃப்ரெண்ட். ஓகே. வேலை மிச்சம்னு ரெண்டு பேரும் தயிர் சாதம் பண்ணி சாப்பிட்டு மறுபடியும் தூங்கிட்டோம்.

சாயங்காலம் எழுந்தா தலை தரைலேயும் கால் ஃபேனுக்குப் பக்கத்திலேயும் போயிட்ட மாதிரி ஒரு ஃபீல். வயித்துக்குள்ள சுனாமியே வந்த மாதிரி இருக்கு. அலறியடிச்சிட்டு டாக்டர் கிட்ட போனா, எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு, கொஞ்சம் பெரிய நோட்டுகளையும் பிடுங்கிகிட்டு “உங்களுக்கு ஃபுட் பாய்ஸன் ஆகியிருக்கு. ஸோ நோ சாலிட் ஃபுட் ஃபார் அ வீக்” அப்படின்னுட்டார். அங்கேயே உஜாலா சிஸ்டர் ஒருத்தரைக் கூப்பிட்டு “டேக் கேர் ஆஃப் ஹெர். ஷி இஸ் இன் வெரி பிட்டி கண்டிஷன்” அப்படின்னார். கண்ணுல ஜலம் கட்டிடுத்து. யோகி வேற இன்னும் வரல.

அந்த சேச்சியும் படுக்கைல படுக்க வெச்சு குளுக்கோஸ் பாட்டிலை தலைகீழாத் தொங்க விட்டு “டேக் கேர் மேடம்”ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு. ஒரு வாரத்துக்கு ஏதோ ஜூஸாக் குடுத்து தேத்திக் காப்பாத்திட்டாங்க. யோகி, புதுப் பொண்டாட்டி கிடைக்கும்ன்னு நினைச்ச சந்தோஷத்துக்குக் குழி பறிச்சாச்சு. ;)


ஊட்டுக்காரர் ஊட்டுல இல்லைன்னு வெளில போய் சாப்பிட்டது ஒரு குத்தமா... அதுக்கு ஒரு வாரம் பெட்டா... என்ன கொடுமை இது. இதுனால இனிமே ஆணியே பிடுங்க வேண்டாம்ன்னு வெளில சாப்பிடுறதையே விட்டுடலாம்ன்னு நினைச்சப்போ புது ரெஸ்டாரண்ட் மெனு கார்ட் ஒண்ணு கைல வந்தது. விடவா முடியும்.... மறுபடியும் ஃபுட் பாய்ஸன் ஆனா, அதே சேச்சி காப்பாற்றும். :)

எதுக்கு இந்த மொக்கைப் பதிவுன்னு குமுறுபவர்களுக்கு: என்ன ஆனாலும் என் மொக்கைல இருந்து மட்டும் தப்பிக்க முடியாது நீங்க. ஆங்ங்ங்ங்..