1. கதை ஒரு பெண்ணைச் சுத்தியே நகரும். அந்தப் பெண்ணின் வாழ்வில் பல கஷ்டங்களும், பல அடிகளும் வந்து போகும். எப்போவும் அவரைச் சுற்றியிருக்குறவங்க அவங்களை அழிக்க சதித் திட்டம் தீட்டிட்டே இருப்பாங்க.
2. அவசியம் இன்னொரு பெண் தான் வில்லியாவும் இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள சின்னப் புள்ளத் தனமா ஏதாச்சும் வாய்க்கால் சண்டை இருக்கும். அதுக்காக சீரியல்ல 10 வருஷம் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனாலும் கடைசி எபிசோட்ல கடைசி 10 நிமிஷத்துல ஹீரோயினோட வசனம் கேட்டுத் தப்பை உணர்ந்து திருந்திடுவாங்க.
3. கதாநாயகி சூப்பரா சேலைகட்டி, தோள்ல ஒரு ஹேண்ட் பேக் மாட்டிக்கிட்டு, மேக்கப் குறைவா போட்டுகிட்டு, எப்போவுமே அழுது வீங்கின கண்களோடவும் துணிச்சலான முகத்தோடவும் வலம் வருவாங்க. கூடவே நண்பர்ன்னு ஒருத்தர் சோக முகத்துடன் வருவார்.
4. சின்னத்திரை கதாநாயகி ஆகுறதுக்கான தகுதி என்னன்னா, கொஞ்சம் திரைப்படங்கள்ல ஹீரோயினா நடிச்சிட்டு அப்புறம் அக்கா, அண்ணி வாய்ப்புகள் வந்தும் “சினிமால நான் எல்லாப் பக்கங்களையும் பார்த்திட்டேன். இனி வளரும் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பறேன்”னு சும்மாச்சுக்கும் பேட்டி குடுத்திட்டாப் போதும்.
5. சீரியல்ல நடிச்சிட்டிருக்குற பொண்ணோ, பையனோ ஏதாச்சும் உடம்பு முடியாமப் போனாலோ, சொந்த வேலைகள் காரணமா நடிப்பைத் தற்காலிகமா துறக்க வேண்டி வந்தாலோ, அவங்களோட கதாபாத்திரங்கள் கொல்லப்படணும். இதையும் கதைக்கு நடுவுல திடீர்ன்னு கொண்டு வந்து புகுத்தி பார்க்குறவங்களை குழப்படிக்குறதுல கில்லாடிங்க சின்னத்திரை இயக்குனர்கள்.
6. கதாநாயகியைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு இவங்களைத் தவிர வேறொரு மனைவியும் இருக்கணும் அல்லது அவர் கெட்டவரா இருக்கணும். இப்படியெல்லாம் இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு அவங்க அவருக்கு சேவை பண்ணுவாங்க.
7. கண்டிப்பா ஹாஸ்பிட்டல் சீன் இல்லாம எந்த ஒரு சீரியலும் எடுத்ததா சரித்திரமே இல்ல. மாசத்துக்கு ஒரு தடவை யாராச்சும் ஏதாச்சும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுவாங்க. அதுவும் சாகுற நிலைமைல அட்மிட் ஆனா அது செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல தான் வரும்.
8. குடும்பத்துல இருக்குற யாராச்சும் பேசாம சண்டை போட்டு இருந்தாங்கன்னா, அவங்க கண்டிப்பா ஏதாச்சும் கோவில்ல சந்திச்சுக்குவாங்க. அப்போ பேசவா, வேண்டாமான்னு அவங்க முகத்துல எல்லா ரசமும் சொட்டும்.
9. ஹீரோயினோட அப்பா ரொம்ப நல்லவராவும், பெரும்பாலும் ஏழையாவும் இருப்பார். ஆனா அவரோட சம்பந்தி வீட்டுக்கு மட்டும் அவர் எப்போவுமே ரொம்பத் தப்பானவரா தெரிவார்.
10. வக்கீல், போலிஸ், டாக்டர், அரசியல்வாதி, ரௌடி, காமன் மேன் இப்படி ஹீரோயினுக்கு சம்பந்தமில்லாத, அந்த அம்மணியை முன்னப் பின்னப் பார்த்திருக்காதவங்க கூட அவங்களுக்கு நல்லது செய்யவே நினைப்பாங்க. ஏன்னா அவங்க முகத்துல அப்படி ஒரு நல்லவ அடையாளம் தெரியும். ஆனா எதிரிக்கு மட்டும் அது புரியவே புரியாது.
இப்போ சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதெல்லாம் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா உண்மையில் அதைக் கொடுக்க வேண்டியது பார்வையாளர்களுக்குத் தான். ஏன்னா எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு கதையிலேயும் இருக்குற கதாபாத்திரங்கள், சம்பவங்கள் இதையெல்லாம் நினைவு வெச்சுக்கறதோட இல்லாம, அவங்களுக்காக இவங்க அழுறதும், அவங்க வீட்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, தன் வீட்ல சமைக்காம இருக்குறதும்ன்னு இவங்க செய்ற தியாகங்கள் அதிகம். அதுனால இனி பார்வையாளர் விருதுன்னு ஒண்ணு வந்தே ஆகணும். நீங்க என்ன சொல்றீங்க...