Sunday, August 15, 2010

வளரும் இந்தியா - புதிய விமான முனையம் IGI T3


விளையாட்டுத் திரையரங்கம், தங்கும் விடுதி, ஓய்வறை, குளியலறை, ஷாப்பிங் கடைகள் என அனைத்து வசதிகளும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. எங்கே? ஒரு நகரின் மையப்பகுதியில் என நீங்கள் நினைத்தால் இல்லை. நம் இந்தியத் தலைநகரின் விமான நிலையத்தில் போனமாதம் திறக்கப்பட்ட மூன்றாவது முனையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சௌகரியங்கள்தான் இவை.


ஜூலை மூன்றாம் தேதி டெல்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம் பிரதமர் திரு. மன்மோகன்சிங் மற்றும் திருமதி. சோனியாகாந்தியால் தொடங்கப்பட்டது. உலகத்தர சேவையை அளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விமான முனையத்தில் பயணிகளின் சாமான்கள் உள்ளிட்ட மொத்தப் பரிசோதனைக்குமான நேரம் பத்து நிமிடங்களுக்கும் குறைவாயிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக DIAL (Delhi International Airport Pvt. Limited) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பரிசோதனைகள் முடிந்த பின் பயணிகள் விமானத்தை அடையும் தூரம் வரையிலும் வழி நெடுக கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் புத்தகக் கடைகள், முண்ணனி நிறுவன ஆடை நிறுவனங்கள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், பிரத்யேக உணவகங்கள் ஆகியவை அடங்கும்.

சிறப்புக் கட்டமைப்புகள்

இந்த முனையம் முழுவதும் புகை பிடிக்க அனுமதியில்லா வண்ணம் அமைந்திருந்தாலும் புகைப்பவர்கள் வசதிக்காக தனிப் புகையறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் விளையாட்டுத் திரையரங்கில் நடப்பு விளையாட்டுகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருப்பதுடன் அங்கேயே பார்வையாளர்களுக்கு/பயணிகளுக்கு ஏற்ற மதுபான வகைகளும் கிடைக்கும். விருப்ப பானத்தை அருந்திச் சுவைத்தவாறே ஸ்கோர்களுக்கு ஆரவாரித்து மகிழலாம். நேரத்தைக் கொல்லும் விதமாக இருக்கையில் அமர்ந்து கொண்டே தூங்கும் பயணிகளுக்கென சிறப்பு ஓய்வறைகளும், தயாராகிச் செல்ல வேண்டிய பயணிகளுக்கு குளியலறைகளும் உள்ளன. குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் அம்மாக்களை ஆசுவாசிக்கும் வகையில் குழந்தைகளுக்கென தனி விளையாட்டுப் பகுதியும் திறக்கப்பட்டுள்ளது.


டெல்லியை அடையும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி பேருந்தில் விமான நிலையத்தை அடைவது வழக்கம். இப்புதிய T3 (Terminal 3) முனையத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 78 அதிநவீன ஏரோ ப்ரிட்ஜ்களின் உதவியால் 90% பயணிகள் நேரடியாக விமானத்திலிருந்து முனையத்தை அடையலாம்.

பிரதமர் உரை

முனையத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் விரிந்த பரப்பில் அமைக்கப்ப்ட்டிருகும் மூன்றாவது முனையத்தைப் பிரம்மிப்புடன் பார்த்துப் பூரிப்புடன் உரையை ஆரம்பித்தார். “இம்முனையம் அரசு-தனியார் துறைகளின் கூட்டு முயற்சியால் உருவானது. தனியார் துறையில் ஒப்படைக்கப்படும் வேலைகள் கனகச்சிதமாக நிறைவுறுவதை நிரூபிக்கும் வண்ணம் இம்முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 58க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இக்கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதன் பலன் இப்போது நம் கண் முன் பிரம்மாண்டமாக எழுந்துள்ளது.”
இவ்வாறாக T3 முனையத்தைப் புகழ்ந்ததோடு அதனாலான இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பேசினார். “குறுகிய காலத்தில் கட்டப்பட்ட T3 முனையம் உலகின் 8ஆவது பெரிய முனையமாகத் திகழ்வது மகிழ்ச்சிக்குறியது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். மற்ற நாட்டு விமானங்கள் இந்தியா வழி பறப்பதும், இந்தியப் பெரு நகரங்களில் நின்று செல்வதும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை வரும் வருடங்களில் கணிசமாக உயரும்.”

திருமதி.சோனியா காந்தியின் உரை

”காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நாள் நெருங்கும் நிலையில் டெல்லியின் இம்மூன்றாவது முனையம் தரமானதாகவும், நேர்த்தியாகவும் தயாரானது பெருமைக்குரிய ஒன்று. இதே தரம் இந்தியாவின் அனைத்துப் போக்குவரத்துகளிலும் உள்கட்டமைப்புகளிலும் வர வேண்டும். டெல்லி மெட்ரோ ரயில் இதற்கு ஒரு சான்று. இன்றைய தேதியில் டெல்லி மெட்ரோவால் பயனடைந்துள்ள சாமானியர்கள் லட்சக்கணக்கானோர். இப்படிப்பட்ட இந்தியாவின் வளர்ச்சிகளைக் கண்முன்னால் சாத்தியமாக்குவது மகிழ்ச்சிக்குரியது” என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்

* ஜூலை 3 ஆம் தேதி திறக்கப்பட்ட தலைநகரின் விமான நிலைய மூன்றாவது முனையம் ஜூலை 14 முதல் வெளிநாட்டு விமானங்களுக்கான சேவையைத் தொடங்கியது.
* உள்நாட்டு விமானங்களுக்கான சேவை ஜூலை 30 முதல் ஆரம்பமானது.
* லட்சக்கணக்கான மரக்கன்றுகள் முனையத்தைச் சுற்றிலும் நடப்பட்டுள்ளன.
* கைப்பைக்கான சோதனைக்கு 41 எக்ஸ்ரே மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 12,800 கைப்பைகள் சோதனைப்படுத்தப்படலாம்.
* 6 பொது நுழைவு வாயில்களும் 168 செக்கின் கவுண்டர்களும் 78 கேட்களும் திறக்கப்பட்டுள்ளன.
* உள்ளே தங்கும் விடுதிகளில் கட்டப்பட்டுள்ள மொத்த அறைகள் 100. இவற்றில் 68 அறைகள் உள்நாட்டுப் பயணிகளுக்கும் 32 அறைகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
* 5.5 மில்லியன் சதுர அடி பரப்பிலான மொத்த இடத்தில் 2,15,000 சதுர அடி பரப்பில் வர்த்தக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தின் கொள்ளிடம் 4300 கார்கள்.
* 97 தானியங்கித் தரை நகர்வுகள் (travelators) கொண்டுள்ள மூன்றாவது முனையத்தின் நீளமான தரை நகர்வு 118 மீட்டர் ஆகும்.
* இம்முனையம் 63 லிஃப்ட்களும் 34 தானியங்கி படிகளும் (escalators) கொண்டுள்ளது.


இம்முனையம் கட்ட செல்வழிக்கப்பட்ட மொத்தத் தொகை 2.7 பில்லியன் டாலர்.

டெல்லி T3 முனையம் - மற்ற உலக விமான முனயங்களுடன் ஒப்பீடு

உலகின் 8ஆவது மிகப்பெரிய விமான முனையமாகத் திகழ்கிறது நம் பாரதத்தின் புது முனையம். இது துபாயின் மூன்றாவது முனையத்தை அடுத்த இடமாகும். முதல் ஆறு இடங்களில் முறையே துபாயின் முதல் முனையம், பார்சிலோனா, மெக்ஸிகோ, பாங்காக், ஹாங்காங், பீஜிங் ஆகியவை உள்ளன.

சமீபத்தில் திறக்கப்பட்ட சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமான முனையங்களுடன் ஒரு சிறிய ஒப்பீடு.

சாங்கி விமான நிலையம் முனையம் 3, சிங்கப்பூர் - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1999; கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2008; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 22 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 4.1 மில்லியன் சதுர அடி.

ஹெத்ரோ விமான நிலையம் முனையம் 5, லண்டன் - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 2002;
கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2008; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 30 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 3.8 மில்லியன் சதுர அடி.

இந்திரா காந்தி இண்டர்நேஷனல் விமான நிலையம் முனையம் 3, இந்தியா - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 2007;
கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2010; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 34 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 5.5 மில்லியன் சதுர அடி.

சமீபத்தில் உலகில் கட்டப்பட்ட விமான நிலைய முனையங்களிலேயே மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டது எனும் பெருமையை நம் இந்திய விமான முனையம் பெற்றுள்ளது.

மெருகேறி வரும் தலைநகரின் சௌகரியங்கள்

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் செயல்பட்டு வரும் டெல்லி மெட்ரோ ரயில் விரைவில் டெல்லி விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது. தவிர இம்மெட்ரோ ரயில் அதி விரைவு வண்டியாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செயல்படுமாறும், மிகக் குறைவான இடங்களில் நின்று செல்லும் விதமும் இயங்க இருக்கிறது. இதன் மூலம் டெல்லியின் மையப் பகுதியான கனாட் ப்ளேசிலிருந்து (CP) டெல்லி விமான நிலையத்தை 20 நிமிடங்களில் அடையலாம். இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல்களில் இவ்விரு இடங்களுக்குமிடையேயான பயண நேரம் சாலை வழியாக சென்றால் குறைந்தது ஒரு மணி நேரம். இது தவிர பயணிகளுக்கான போர்டிங் பாஸும் கனாட் ப்ளேஸ் மெட்ரோ நிலையத்திலேயே கிடைக்குமாறும் வசதிகள் வர இருக்கின்றன. பயணிகளிடையே நிச்சயம் அதிக வரவேற்பைப் பெற இருக்கும் திட்டங்கள் இவை. கூடுதலாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மெட்ரோ ரயில்களும் டெல்லியில் இயக்கப்பட உள்ளன.

புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், மயக்கும் வர்த்தகக் கட்டிடங்கள், அதிகக் கொள்ளளவு கொண்ட அதி விரைவுப் பேருந்துகள், குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இடை நில்லாப் பேருந்துகள், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் என மெருகேறியிருக்கும் வசதிகள் ஏராளம்.

தலைநகர் என்ற அந்தஸ்தில் நிச்சயம் அதன் தனித்துவத்திற்கும் உள் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் குறைவில்லை தான். நாட்டின் வளர்ச்சி தலைநகரிலிருந்து ஆரம்பமாகிறது என்பது மிகச்சரியானது. இம்மாற்றம் விரைவில் நாடு முழுவதும் வளம் கொழிக்கச் செய்யும் வளர்ச்சியாக மாறட்டும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

Friday, August 13, 2010

பயோடேட்டா ஜங்ஷன் - பரிசல்காரன்

பெயர் - கிருஷ்ண குமார்.

அறியப்படும் பிற பெயர்கள் - பரிசல்காரன், பரிசல் கிருஷ்ணா. (பார்ப்பனவியாதி, பொறுக்கி என்ற புனைப்பெயர்களெல்லாம் இல்லையென்றாலும் டம்மி பீஸு என்று சிலர் சொல்வதாகக் கேள்வி)

வயது - எப்பவும் அண்ணாந்து வானம் பார்த்து என்னடா வாழ்க்கைன்னு சிரிக்கற வயது.

வேலை - அது இன்னும் அவருக்கே தெரியலைன்னாலும் எப்போவும் பிஸியா இருக்கற மாதிரி காட்டிக்கறது தான் வேலை.

விருப்ப வேலை - பரிசலோட்டுவது ஸாரி ப்ளாக் எழுதுவது.

நண்பர்கள் - பார்க்கும், பேசும் எல்லாரும்.

எதிரிகள் - செவ்வாய்வாசிகள்.

பிடித்த இடம் - உமா இல்லாத எந்த இடமும்.

பிடிக்காத இடம் - ஃபிகரில்லாத எந்த இடமும்.

பிடித்த உணவு - சகாக்களுடனடிக்கும் சரக்குடனான எந்த சைட் டிஷ்ஷூம். சகாவே கொடுத்தால் இன்னும் ஸ்பெஷல்.

பிடிக்காத உணவு - ஃபோர்க் நைஃப் கொண்டு சாப்பிட வேண்டிய எதுவும்.

பிடித்த உடை - எப்போவும் இருபதுன்னு நிரூபிக்க உதவற ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டும் ஜீன்ஸூம். திருப்பூர் என்பதால் விதவிதமாய்.

பிடிக்காத உடை - காவி உடை.

பொழுதுபோக்கு - பல்லைக் கடித்துக் கொண்டு விஜய்க்குப் போட்டியாய் வசனம் பேசுவது.

நம்புவது - சகாக்களை.

நம்பாதது - தோழி வைத்திருக்கும் சகாக்களை அல்லது சகாவின் தோழிகளை.

சமீபத்திய சாதனை - டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்.

வாழ்நாள் சாதனை - மேகாவும் மீராவும்.

இப்போதைய காதல் - புதிய மனிதா பூமிக்கு வா...

எப்போதுமான காதல் - சங்கத்தில் பாடாத கவிதை...

Thursday, August 12, 2010

நிறங்களற்ற நிசப்த வெளியில்...


ஆதவன் மெல்ல மெல்ல கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அந்தியில் “வசீகரா.. என் நெஞ்சினிக்க” என மொபைல் சிணுங்க “இன்னும் 15 நிமிஷத்துல நான் அங்கே இருப்பேன், ரெடியா இரு” என்றாய். “என்னடா அவசரம்” என்பதற்குள் “ட்ராஃபிக் போலிஸ் பாக்குறாண்டா, வந்து பேசறேன்” வைத்து விட்டாய்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் காருக்குள் நாமிருவரும். “என்னடா திடீர்ன்னு”
“இப்போ நேரா உன் ஃப்ளாட்டுக்குப் போறோம். அங்கே உன் ஃப்ரெண்ட் உன் ட்ரெஸ்ஸஸ் பேக் பண்ணி வெச்சிருப்பா. 2 நாள் வெளியூர் போறோம்”
“ஓய், கொழுப்பா. நான் வரல. இப்படியெலலாம் திடீர்ன்னு கூப்பிட்டா வர முடியாது”
“ஹலோ, உங்ககிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது” அதற்கு மேல் என்னைப் பேச விடவில்லை நீ.

நெடுந்தூரப் பயணம் ஆரம்பமானது. அதன் பின் ஒரேயொரு முறை கேட்டேன் “எங்கே போறோம்?” “நம்மிருவருக்கு மட்டுமேயான உலகத்திற்கு” இதற்கு மேல் தெளிவாக நீ சொல்லப்போவதில்லை எனத் தெரிந்ததால் எங்கே போகிறொமென்ற கவலையின்றி உன்னுடன் போகிறேன் என்ற மகிழ்ச்சியில் பேச ஆரம்பித்தேன். “எப்போடா கார் ஓட்டக் கத்துத் தருவ, ஃப்ராட்” “அதான் ட்ரைவர் நானிருக்கேனே மேடத்துக்கு. என்ன கவலை”

“ஏசியை செட் செய்து விட்டு, ஏ.ஆர்.ரஹ்மான்?” என்றாய். “இல்லை, இளையராஜா” என்றேன். சிரித்து விட்டு ப்ளேயரை ஆன் செய்தாய். “ஏதோ தாகம்.. ஏனோ மோகம்..” ஜானகி உருக, உன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தேன். அடுத்தடுத்து எஸ்.பி.பி.யும் சித்ராவும் சேர்ந்து தொடரத் தொடர ஆரம்பித்து விட்டாய் நீ. “ஹேய், இது என்ன சாங் தெரியுமா.. என்ன ம்யூசிக். சே.” இப்படியாக எனக்குப் பிடித்தது, உனக்குப் பிடித்தது, நம் ரசனை, வெறிச்சோடிய சாலைகள், அதற்குள்ளே தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்ட பயணம், கனவு, கற்பனை, காதல்... நீ பேசிக் கொண்டேயிருந்தாய். நான் எப்போது தூங்கினேனெனத் தெரியவில்லை.

மேனி சுடா வெயில் மேலே விழ கண் விழிக்கவிருந்த நிமிடம் என் மேலிருந்த ஷால்வையில் நிறைந்திருந்தது உன் அன்பு. மெல்ல விழி திறந்து “எங்கேடா இருக்கோம். மணி என்ன” என்றேன். இப்போதும் ஹாரிஸ் ஜெயராஜ் மெதுவாய் கசிந்து கொண்டிருந்தார். “ஆச்சு, இன்னும் பத்து நிமிஷம்” அரை மணி நேரத்தில் கெஸ்ட் ஹவுஸ் அடைந்தோம். “அப்பாவோட ஃப்ரெண்டோடது. ரொம்ப நாளா போக சொல்லிட்டிருந்தாரு. இப்போ தான் நேரம் கிடைச்சது.”

பயணக் களைப்பேயில்லை எனக்கு. “பாவம்டா நீ. நைட் முழுக்க ட்ரைவ் பண்ணியிருக்க. ரெஸ்ட் எடுத்துக்கோ” “நீ பக்கத்துல இருக்கும் போது நான் எப்படிடி டயர்டாவேன்...” இப்போதும் உன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தேன். “சரி, சீக்கிரம் ரெடியாகு. வெளில போறோம்” கிளம்பி காலை உணவு முடித்து வெளியேறுகையில் சூரியன் வெளியேறவா வேண்டாமா என்ற யோசனையிலேயே இருந்தான்.

பெரிய கடற்கரை. தூரத்தில் மனிதர்களின் தலைகள் மட்டுமே சிறிதாய்த் தெரிந்த தனிமை. அலைகளின் ஆர்ப்பரிப்பு. மனம் துள்ளியது. அலைகளுக்குள் நுழைந்து, எழுந்து ,தொலைந்து, தேடி, விளையாடிக் குளித்துத் திளைத்து வெளிவருகையில் உன் அண்மை தேவைப்பட்டது. கொஞ்ச நேரம் மணலுக்குள்ளும் குளித்து விட்டுக் கரையிலமர்ந்தோம். நீல அலைகளையும் மறுபுறத்துத் தூரத்துப் பச்சைச்செடிகளையும் உன் கரம் பற்றி ரசித்துக் கொண்டிருந்தேன். “பிடிச்சிருக்கா” என் கண்கள் பார்த்துக் கேட்டாய். “ரொம்ப தேங்க்ஸ்டா” மார்பு பற்றி அணைத்து சொன்னேன்.

மறுபடி அறை சென்று உடை மாற்றிக் கொஞ்சமாய் சுற்றிப் பின் களைத்துத் திரும்பி ஓய்வெடுத்துக் கண் விரிக்கையில் “கிளம்பலாமாடா” தலை கோதிக் கொண்டே கேட்டாய். “இப்போ எங்கேடா?” “டின்னர்”
வெளிர் நீல நிற ஜீன்ஸும், கட்டமிட்ட ஆரஞ்சு நிற சட்டையும் என்னை என்னவோ செயததென்னவோ உண்மை தான். ப்ளூ நிற சல்வாரும், நாவல் பழ நிற காட்டன் குர்தாவும் சரியாக இருந்தன எனக்கு. “லுக்கிங் கார்ஜியஸ்” கைகளால் இடுப்பைச் சுற்றிக் கொண்டாய். நான் ஒன்றும் சொல்லாமல் கேசம் வருடி சிரித்தேன்.

மொத்தமாய் இருட்டான பிரதேசம். துணைக்கு அலைகளின் சத்தம் மட்டும். இருக்கையிலமர்ந்த பின் நடுவிலிருக்கும் மெழுகை ஏற்றினாய். “நைஸ் அரோமா”. பதிலாய்ப் புன்னகைத்தேன். “நல்ல இடம். அமைதியா, நிம்மதியா, முழுமையா இருக்கு” என்றேன் உன் கண்களை நோக்கி. “தெரியும்” இருபது நொடிகள் எதுவும் பேசவில்லை. புதுமையான மௌனத்தை உடைத்தாய் “இந்த ஹோட்டல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. நண்பர்களோட வந்திருக்கேன். பால்கனில நின்னு கடலைப் பார்க்கற மாதிரி சாப்பிடும் போதே கடலைப் பார்த்திட்டே இந்தக் காற்றை ரசிச்சிட்டே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் என் தேவதையைப் பார்க்கணும். உனக்கும் பிடிக்கும்னு நினைச்சேன். சொன்னா சஸ்பென்ஸ் போய்டும்னு தான் சொல்லல.”என்றவாறே என் இடக்கரம் பிடித்து மோதிரம் நுழைத்தாய். வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்திருந்தது.

உணவு வேளையில் உணவெங்கே உள்ளே போனது... இரவுணவிற்குப் பின் காற்றைக் கிழித்துக் கொண்டு கொஞ்சம் நடந்தோம். “உட்காரலாமா” மெலிதாய்க் கேட்டேன். தூரப் பாறை ஒன்றில் அமர்ந்தோம். கொஞ்சம் தயங்கி உன் தோளில் சாய்ந்தேன்.

வாழ்வின் சிறந்த நேரமாகத் தெரிந்தது. உன் தோளில் சாய்ந்தவாறே கடலோரத்தில் அமர்ந்திருந்தேன். நிலா இன்னும் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. “இதோ நானுமிருக்கிறேன்” என்றவாறு அலைகளும் உயர எழத் துவங்கின. எதைப் பற்றிய கவலையுமின்றி என் கை பற்றிக் கொண்டிருந்தாய். நான் எரிந்து கொண்டிருந்தேன். எதுவும் பேசத் தோன்றவில்லை. நிசப்த வெளியில் இரு மனங்கள் பேசிக்கொண்டிருந்தன.

Wednesday, August 11, 2010

ஞாபகச் சிமிழ்


சமீபத்திய வாசிப்பில் என்னை வெகுவாகப் பாதித்த எழுத்து பாலசந்திரன் சுள்ளிக்காடுடையது. அழுத்தமான எழுத்து, ஆத்மார்த்தமான உணர்வு, இது தான் நான் என உரக்கச் சொல்லும் துணிவு, கூனிக் குறுகும் குற்ற உணர்ச்சி, நிமிர்ந்து பெருமிக்கும் மிடுக்கு, கையாலாகாமல் நிற்கும் மன வேதனை, எழுத்தின் மீதிருக்கும் பிடிப்பு, வாழ்க்கை மீதான ரசனை, அதன் விளைவாயான எழுத்து, கவிதைகள், அப்பாவை எதிர்த்து எழும் தான்தோன்றித் தனமான விடலைப்பருவம், அழகிய யுவதிகளின் மேல் கொள்ளும் ஆசை, விலைமகளிடம் பார்க்கும் தாய்மை, ரத்தம் கொடுத்துப் பணம் பெற்றுதவும் ஏழ்மை என வாழ்வின் அத்தனை முகங்களையும் அனாயசமாகச் சொல்லிச் சென்றிருக்கும் ஒரு அருமையான பொக்கிஷம் இவரின் சிதம்பர நினைவுகள்.

புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் புத்தகம் முழுக்க சிதம்பரம் நகரின் சிறப்புகளும் நினைவுகளுமிருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் வாழ்வின் அத்தனை அர்த்தங்களையும் எளிமையாய் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்நூல். நூலாசிரியர் பாலசந்திரன் சுள்ளிக்காடையும், மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவையும் பற்றிய ஒரு சிறு அறிமுகத்திற்குப் பின் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவோம்.

பாலசந்திரன் சுள்ளிக்காடு - நூலாசிரியர்

1957 ஆம் வருடம் கொச்சிக்கருகிலிருக்கும் பரவூரில் பிறந்த பாலசந்திரன் தன் கவிதைகளின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். பதினெட்டு கவிதைகள், அமாவாசி, கஸல், ட்ராகுலா ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஹிந்தி, பெங்காலி, தமிழ், அஸ்ஸாமி, பஞ்சாபி, மராத்தி, கன்னடம் போன்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ் ஆகிய உலக மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆச்சரியமான ஒரு விஷயம், இலக்கியத்தின் பெயரால் தரப்படும் எந்த விருதையும் பணத்தையும் இவர் பெறுவதில்லை. நிராகரித்துள்ளார். தற்போது மனைவி விஜயலக்ஷ்மியோடும், மகன் அப்புவோடும் எர்ணாகுளத்தில் வசிக்கிறார்.

ஷைலஜா பவா செல்லத்துரை - தமிழில் மொழிபெயர்ப்பு

இவர் பெயரே போதும் இவரைப் பற்றி அனைவரும் அறிய. தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளரான இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார். பாலசந்திரன் சுள்ளிக்காடின் கட்டுரைகளுடன் இவருக்கு ஏற்பட்ட அறிமுகத்தையும், அதன் பின் அவர் எழுத்துகளின் மீதேற்பட்ட மரியாதை அவரை நேரில் அழைத்துப் பேசும் உத்வேகமாக மாறி அவரின் நூலை மொழிபெயர்க்குமளவுக்கு ஆன ஆர்வமாக மாறியதெப்படி என அவரே இந்நூலில் ஒரு சிறு முன்னுரை அளித்துள்ளார். கணவர் பவா செல்லத்துரை, மகன் வம்சி, மகள் மானசியோடு திருவண்ணாமலையில் வசிக்கிறார்.

இனி புத்தகத்திற்குள்

அருமையான ஆழமான சிதம்பர நினைவுகளிலிருந்து ஆரம்பிக்கிறது நம்மை ஆக்ரமித்துக் கொள்ளப் போகும் அனுபவம் பொதிந்த எழுத்து. மொத்தம் 21 வாழ்வியல் கட்டுரைகளைக் கொண்டுள்ள இப்பொக்கிஷத்தின் கட்டுரை வரிகளே சொல்லும் அவற்றை வாசிக்கும் பேரானந்த அனுபவத்தை.

சிதம்பரம் கோவில்களில் யாரையுமறியாது அதன் அழகில் லயித்துப் போய் தங்கியிருக்கும் நாளில் கட்டுரையாசிரியர் சொல்கிறார், “கோவிலில் எல்லாவற்றையும் பார்த்து முடிக்கப் பல நாட்களாகும். பல நாட்கள் தங்கிப் பார்க்க அவ்வளவு பணம் இல்லை. பிச்சை எடுக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை, பிச்சையெடுத்தாவது எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்”. சிற்பங்களின் மீதான காதலையும், வாழ்வின் மீதான் அலட்சியத்தையும் பிரதிபலிக்கும் வரிகளிவை.

அப்பாவுடன் வாதிட்டு வீட்டை விட்டு வெளியேறி தனியே அல்லல்பட்டும் வீடு திரும்பாத நாளில் அப்பாவின் மரணச் செய்தியை அறியும் பொழுதில் வாசித்திருக்கும் கவிதை எப்படியிருக்கும்.. “என் மன அவஸ்தை அறியாத மேடையில் நின்று, நொறுங்கின இதயத்துடன், நான் கவிதை வாசித்து முடித்தேன், நீண்ட கர கோஷத்தின் அர்த்த சூன்யம் அன்றெனக்குப் புரிந்தது.”

திமிராய் மிரட்டி வாங்கிய முத்தத்தின் சுகம் எத்தகையது.. அப்படி வாங்கிய பெண்ணை பல வருடங்கள் கழித்துத் தீயில் கருகிய உயிராய்ப் பார்க்க நேர்ந்தால் ஏற்படும் குற்ற வலி எத்தகையது.. அப்பெண்ணைத் தனியாய் அழைத்து என்ன பரம ரகசியத்தை அவர் கூறியிருக்க முடியும்... “சாஹினா பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பு நான் தீயால் வெந்து சுருண்டிருக்கும் அவளது கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டேன். அவள் ஸ்தம்பித்து நின்றாள். அவளை முன்பு வேதனைப்படுத்தி வாங்கியதை நான் திருப்பித் தந்து விட்டேன்”

பால்ய நண்பனைப் பைத்தியமாய்ப் பார்த்துவிட்டு ஒன்றும் செய்ய முடியாமல் விட்டு விட்டு வந்து சில நாட்கள் கழித்து அவன் இறப்புச் செய்தியைக் கேட்கையில் வரும் குற்ற உணர்வை நம்மில் எத்தனை பேர் வெளியில் சொல்ல முடியும்.. இவர் சொல்கிறார். “சில மாதங்களுக்குப் பிறகு பட்டினி கிடந்து, கிடந்து மோகனன் இறந்து விட்டான். நான் ஒரு துக்கப் பெருமூச்சு விட்டேன். அது மட்டுமே, அது மட்டுமே, செய்ய முடிந்த பாவியானேன் நான்.

ஓணத் திருநாளில் கையில் காசின்றி நண்பனுடன் விறைப்பு காட்டி கால் போகும் போக்கில் நடந்து பசி மயக்கத்தில் ஒரு வீட்டில் பிச்சைக்காரனாய் பாவிக்கப்பட்டு உணவுண்ணும் வேளையில் அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவரை அடையாளம் காண்கையில் ஏற்படும் அவமானம் எப்படியிருக்கும்.. மானமா.. பசியா.. “உள்ளேயிருந்து அந்தப் பெண் தன்னை அடையாளம் கண்டு கொண்டு குடும்பத்தாருடன் பேசிய சத்தம் வந்தது. கடவுளே! பாதி கூட சாப்பிடலையே, எழுந்து ஓடிவிடலாமா? - வேண்டாம், ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றைத் தூக்கியெறியவா? மதிப்பும் மரியாதையையும் விடப் பெரியது பசியும் சோறும் தான். நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்”

இருபத்தி மூன்று வயதில் பட்டப்படிப்பு முடிக்காத நிலையில் இருபது வயதுப் பெண்ணை மணந்து அவள் கர்ப்பமாயிருப்பதை உணரும் தருணம் எவ்வளவு கொடுமையானது.. அக்கருவைக் கலைத்து விட்டு மனக் குமுறலுடன் கவிஞன் பாடுகிறான்
உலகின் முடிவுவரை பிறக்காமல்
போக இருக்கும் என் மகனே,
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும் போது
தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத் தவிர - ஆனாலும்
மன்னித்துவிடு என் மகனே.
(பிறக்காது போன என் மகனுக்காக)

இப்படியாக ஒவ்வொரு ஏற்றத்தையும், இறக்கத்தையும், கசப்பையும், வலியையும், அவமானத்தையும் புத்தகம் முழுக்க தூவிச் சென்றுள்ளார் ஆசிரியர். அவை வாழ்வியல் நிகழ்ச்சிகளாக இருக்கையில் நிச்சயம் வீரியமானவையாகவும் இருக்கின்றன.

கையில் காசின்றி ரத்தம் விற்றுக் காசு தேற்றப் போன இடத்தில் தங்கைக்காக அழும் அண்ணனின் கண்ணீர் கண்டு தன் இரத்தம் விற்ற பணத்தையும் அவன் கையில் கொடுத்து விட்டு வந்தவராய்...

இரவு ஸ்நேகிதியாய் வந்தவளை உடனழைத்துச் சென்று மனைவிக்கு அறிமுகம் செய்துவிட்டுத் தூங்கப் போன கனமான கணம் மறுநாள் அவள் கிளம்புகையில் கண்களை நிறைத்த கண்ணீராய்..

வருடந்தவறாமல் காவடி எடுத்துப் போகும் செட்டியாரின் மகன் இறந்து போன சோகத்தில் தைப்பூசத்தன்று சலனமில்லாமல் உட்கார்ந்திருக்கும் அய்யாவுச் செட்டியாரின் சோகமாய்..

ஒரு நேர சாப்பாட்டிற்காகவும், ஐந்து ரூபாய் கூலிக்காகவும் சிவாஜி கணேசன் நடித்த படத்தை கேரளத் தெருக்களில் விளம்பரம் செய்த மனிதன், முப்பதாண்டுகள் கழித்து அவரது வீட்டில் அவருடன் அருந்திய ஜானி வாக்கர் ப்ளாக் லேபில் விஸ்கியைப் பற்றி சிலாகித்த பூரிப்பாய்..

யாருமில்லாத தனிமையில் வீட்டிற்கு வரும் இளம்பெண்ணின் மீது சபலப்பட்டு இடையைப் பிடிக்க அவளிடம் அறை வாங்கிய அவமானமும் பின் அவள் காதலனுடனான திருமணத்திற்குப் பின் தன்னிடம் ஆசி பெற்றுச் சென்றதை வெளிப்படையாய் எடுத்து வைக்கும் மனமாய்..

யாரையும் கவர்ந்திழுக்கச் செய்யும் காந்தமென வசீகரிக்கும் பெண், தற்கொலை செய்து கொண்டு போஸ்ட்மார்ட்டம் அறையில்மொட்டைத் தலையுடனும், உடையணியாத உடலுடனும் கிடத்தி வைக்கப்பட்டிருக்கையில் ஏற்படும் நிசப்தமான பெரும் மன அலறலாய்..

பிரம்மாண்டமான எழுத்துகளை வரமாய்க் கொண்ட கவிஞன் அன்றாடச் செலவுக்கே அல்லல்படுவதை நினைத்து வருந்தி உதவ வேண்டிய பொழுதில் பணமெனும் அரக்கன் வதைப்பதை உணரும் நிதர்சனமாய்..

பல ஆண்களால் மோகிக்கப்படும் பெண்ணுடன் இரவு ஒன்றாய் அவளறையில் ஜின்னருந்திவிட்டுக் கோபம் கொண்டு வந்துவிட்டு அவளின் முடிவு கண்டு உறைந்து போனவராய்..

அட்லாண்டிக் சமுத்திரக் கரையோரம், மஹாத்மா காந்தியின் சுயரிதையைத் தேடும் ஆஃப்ரிக்கப் பெண்ணுடனான உரையாடலின் போது நெகிழ்வாய்..

கடற்கரைத் தனிமையில் யாருமில்லாதிருக்கும் விலைமகளின் கதை கேட்டு விட்டு இறுதியில் அவள் மடியிலேயே தலை வைத்துத் தூங்கும் சகோதரனாய்..

நோபல் பரிசு அரங்கில் அந்தப் பரிசு தனக்குக் கிடைக்காதா என ஏங்கிக் கிடக்கும் முகங்களைப் பார்த்தவண்ணம் எந்தப் பரிசும் எனக்கு வேண்டாம் என தைரியமாய் சொல்லி வந்த மிடுக்காய்...

- என தன் வித்தியாச முகங்கள் ஒவ்வொன்றாய்க் காட்டி உயர்கிறார் இம்மனிதர். கிட்டத்தட்ட ஒரு மாதமாய் என்னை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள புத்தகமிது. எந்த மனிதனால் தன்னை ஒரு அயோக்கியன், பெண் பித்தன், காமம் கொள்பவன் என்றெல்லாம் சொல்லத் துணிவிருக்கும். ஒருவன் சொல்வானேயானால் அந்த ஆண்மகனை நான் சற்றே அதிக பிரம்மிப்புடன் பார்க்கிறேன்.

இப்புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பர் முரளிக்கும் வாங்கியனுப்பிய நண்பர் சிவாவுக்கும் என் நன்றிகள்.

வாசிப்புக் காதலர்கள் தவறவிடக்கூடாத புத்தகமிது.

புத்தகம் - சிதம்பர நினைவுகள்
வெளியீடு - வம்சி புக்ஸ்
விலை - ரூ. 100/-

Tuesday, August 10, 2010

சித்திரம் பேசுதடி!!!


டெல்லி வரும் நண்பர்கள் பலருக்குமான பிரச்சனை தங்குமிடம். தலை நகரின் பிரம்மாண்டங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவை இங்கிருக்கும் செலவுகளும். குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியிலேயே இரண்டாயிரம் ரூபாய்க்குள் டெல்லியை அடைந்து விடும் பலருக்கும் அறையெடுத்துத் தங்குவதென்பது மிரட்சியான விஷயம். சில ஆயிரங்களுக்குள் நல்ல, தரமான, பாதுகாப்பான, நகரின் பிரதான இடத்திலிருக்குமாறு தங்கும் விடுதிகள் கிடைப்பது அசாத்தியமே. இக்குறையைப் போக்க டாடா அறிமுகப்படுத்தியுள்ள பட்ஜெட் ஹோட்ட்ல்கள் “Ginger” (ஜிஞ்சர்). ஆயிரம் ரூபாய்க்கே குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை கிடைக்கிறது. அனைத்து வசதிகளுமிருக்குமாறும் தரமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும் இது டெல்லி ரயில் நிலையத்தின் முன்னேயே அமைந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கிளைகளை ஆரம்பித்தும், வாடிக்கையாளர்களை த்ருப்திப்படுத்தும் சலுகைகளை அளித்தும் பலரையும் வரவேற்கிறது இவ்விடுதிகள். இவர்களின் இத்தனித்தன்மையான சேவையால் அறைகள் கிடைப்பதில் எப்போதும் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் முன்பதிவு அவசியமாகிறது. இனி இந்தியாவின் பெரு நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் அனைவரும் முன்னமேயே பதிவு செய்து இவ்விடுதிகளின் வசதியை அனுபவிக்கலாம் (பேர் தான் ஜிஞ்சர்ன்னு காரமா இருக்கு. வசதிகள் சொகுசாவே இருக்கு)

*************************************************************************************************************

நண்பர் ஒருவர் வருத்தத்துடன் பகிர்ந்த ஒரு வீடியோவைக் கண்டு மிகுந்த சினமானது. டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், கே.பி. சுந்தராம்பாள் என பாடல்களால் நம்முள் பக்தியை ஊற்றியவர்கள் பலர். இப்போதும் முருகன் பாடல்களில் டி.எம்.எஸ். குரலுக்கு இணையேது. இது போன்றே நம்மை ஆனந்தப்படுத்தும் பாடல்களைத் தருபவர் பெங்களூர் இரமணியம்மா. அவரது வேலவா வடிவேலவா எனும் பாடலை எந்த ஊரிலெனத் தெரியவில்லை, யாரென்றும் தெரியவில்லை போட்டு சாவடிச்சிருக்காங்க. ஓங்கி அறைய நினைத்து முடியாமல் போன இயலாமையும், ஒரு பக்திப் பாடலுக்கு அந்தப் பெண் அணிந்திருக்கும் அரைகுறை உடைகளும், உடலசைவுகளும் உள்ளுக்குள் ஏனோ அதீத வருத்தத்தைத் தருகின்றன. இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நேரில் காண நேர்ந்தால் யோகியைத் தனியாக விட்டுப் போவதை எண்ணிக் கூட வருந்தாமல் அப்பெண்ணைப் போட்டுத் தள்ளிவிட்டு கம்பி எண்ணப் போயிருப்பேன். (என்ன கொடுமை சரவணன் இதுன்னு கூட சொல்ல முடியாதே. கொடுமையே சரவணனுக்குத் தானே :( )

*************************************************************************************************************


நம் குடும்பத்தின் முந்தைய தலைமுறையினரை நாம் அறிந்திருக்கவில்லை; மூதாதையர் பெயர் தெரியவில்லை எனக் குமுறுவதை நிறுத்திவிட்டு வரும் தலைமுறைக்கு நம் பெற்றோர் மற்றும் நம் பெயரை எப்படி எடுத்துச் செல்வது என யோசிக்கலாமே. மும்பையிலிருக்கும் என் அண்ணன் ஒருவர் குடும்ப வரைபடமொன்றை ஏற்படுத்தி அதில் ஒவ்வொருவரின் மெய்ல் ஐடியையும் சேர்த்திருந்தார். கடந்த ஒரு வருடத்தில் உறவுகளுக்குள் மிகுந்த மாற்றம். மொத்தக் குடும்பத்தில் எத்தனை பேரிருக்கின்றனர் எனக் கூடத் தெரியாமலிருந்தவர்கள் இப்போது ஒவ்வொருவரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களுக்கு வாழ்த்துவது, அடிக்கடி மெயிலில் பேசிக் கொள்வதென ஒரு நல்ல பகிர்வும், மனமகிழ்வும் ஏற்பட்டிருக்கிறது. தவிர, குடும்பத்திலிருக்கும் வித்தியாச உறவுகளை அறியவும் முடிந்தது. எங்கள் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என அனைத்து மொழி சொந்தங்களும் உள்ளன. ஆம், என் அண்ணாக்கள் பலரும் காதல் திருமணம். ஒவ்வொருவரும் அவர்கள் சென்று குடியேறிய ஊர்களிலேயே காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இதில் எல்லாவற்றிற்கும் மேலாக என் அத்தை பையனொருவர் அமெரிக்காவிலேயே ஒரு கிறித்துவரை மணமுடித்து எங்கள் குடும்பத்தில் ஒரு கேத்தரினும் இருக்கிறார். இவையனைத்தையும் அறியவும், அனைவருடனும் தொடர்பிலிருக்கவும் உதவிய அண்ணனுக்கும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட Geni இணையதளத்திற்கும் நன்றி. நீங்களும் முயற்சிக்கலாமே. (நேர்ல எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பொங்கச் சோறு வெச்சு சாப்பிட்டக் காலமெல்லாம் போய் மெயிலில் ஹாய் எனத் தொடரும் மாற்றங்கள்)

*************************************************************************************************************

வைஷ்ணு தேவி பயணம் குறித்து எழுதியிருந்த பொழுது ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல மறந்து விட்டேன். அது என்னவென்றால் மலைக்கு ஏறும்முன் கீழிருந்து ஒரு சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். அச்சீட்டில் எத்தனை பேர் செல்கிறோமென்ற எண்ணிக்கை மட்டுமிருக்கும். இச்சீட்டு இலவசமாகக் கட்ராவிலேயே கிடைக்கும். மட்டுமல்லாமல் பெரும்பாலான SBI ATMகளிலும் கிடைக்கிறது. இச்சீட்டின்றி மேலே செல்ல அனுமதி கிடையாது. இதன் மூலம் எந்த ஒரு அபாய நேரத்திலும் மலை மேல் எத்தனை மக்கள் உள்ளனர் என அறியலாம் என்பதே நோக்கம். நல்ல விஷயமாகப்பட்டது. (மலைக்குப் போன இடத்துல ஏதாச்சும் ஆச்சுன்னா மீடியாக்காரங்களுக்கு எண்ணிக்கை வேணும்ல)

*************************************************************************************************************

மதராசப்பட்டினத்தின் பாடலொன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் போன வாரம் தான் அமைந்தது. பாடல் காட்சி லகான் திரைப்படத்தை நினைவூட்டியது. படம் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பலரின் விமர்சனங்கள் கொண்டு பார்க்கையில் லகான் மற்றும் டைட்டானிக்கின் தாக்குதல் படத்திலிருப்பதாகத் தெரிகிறது. அங்காடித் தெரு, களவாணி வரிசையில் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். (எப்படியோ அங்கீகாரப் பூர்வமான டிவிடி வந்து தான் பாக்கப் போற. ஏன் இந்த பில்டப் என துப்புபவர்கள் தூரப் போக ;) )

*************************************************************************************************************

வட இந்தியத் தொலைக்காட்சிகளின் ஒரு நல்ல விஷயம், வெளியாகி திரையரங்கில் ஓடாமல் திரையரங்கை விட்டு ஓடிடும் படங்கள் விரைவிலேயே சின்னத் திரையில் வந்துவிடும். அதாவது படம் வெளியாகி ஒரு மாதத்தில். அதுவே சூப்பர் ஹிட் படமெனில் ஆறு மாதங்களில். உதாரணத்திற்கு ப்ளூ, கைட்ஸ், 3 இடியட்ஸ், மை நேம் இஸ் கான், கார்த்திக் காலிங் கார்த்திக் எனத் தொடர்ந்து போன வாரம் ஒளிபரப்பப்பட்ட ராவண் வரை. ஆனால் நம்மூரில் ஓடாத படத்துக்கே ஓவர் பில்டப் குடுக்குறாங்களே அது ஏன்... (இந்த ஊர் கல்சரை அங்கே ஃபாலோ பண்ணினா இந்நேரம் சன் பிக்சர்ஸின் அவ்வளவு படங்களும் தொலைக்காட்சியில் வந்திருக்கும்)

*************************************************************************************************************

விகடனில் நாலு வரிக்கு நாம சொன்ன விஷயம் வந்ததுக்கே என்ன ஒரு ரெஸ்பான்ஸ். அது தான் விகடன் ரீச். ரொம்ப மகிழ்வாகவும், நெகிழ்வாகவுமிருந்தது. என் மனதிலிருந்து இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டுமெனில் அது பரிசல் கிருஷ்ணாவிற்குத் தான். ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா. (விகடனில் சுஜாதாவையும், எஸ்.ரா.வையும் பார்த்து மிரண்டிருக்கிறேன். அதில் நானுமா.. இன்னும் நம்ப முடியவில்லை.)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

போன வாரம் ரொம்ப ஆசையாய் “ரசம் பண்ணேன்” என்றார் என்னவர். ரசம் சாதம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என்றதும் ரசம் செய்தேன். நிறைய ரசம் விட்டு சாப்பிட்டவர் என் தட்டிலும் ரசத்தை ஊற்றிக் கொண்டேயிருந்தார். “ஜி, போரும் ரசம்” என்றேன். “ஓ, இந்த ரசம் பேரு போரும் ரசமா.. எப்படிப் பண்ண... ரொம்ப நல்லாருக்கு” என அப்பாவியாய்க் கேட்க மறுபடி “நான் போதும் ரசம்ன்னேன்” என்றேன். இவருக்காக நான் பேசும் தமிழை டீஃபால்ட்டாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

போன வார இறுதியில் தமிழ்ப்படம் பார்க்க வேண்டுமென சித்திரம் பேசுதடி டிவிடி வாங்கி வந்தோம். தமிழைப் படப் பெயர்களின் வழியாய்க் கற்கும் யோகியிடம் “சித்திரம் பேசுதடி. சொல்லுங்க. என்ன அர்த்தம்னு” என்றேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு “சித்திட்ட பேசணுமா” என்றார். ஙே என முழித்துக் கொண்டு “இல்லை இல்லை” என்றேன். “ஓகே, எக்ஸாக்ட்டா அது இல்லைன்னா சம்திங் ரிலேட்டட் டு சித்திகிட்ட பேசறது”ன்னார். என்ன சொல்லவெனத் தெரியாமல் கொல்லென சிரித்து வைத்தேன். (சித்திரம் பேசுதடி ன்னு வெச்சு புரிஞ்சிருக்கார்)

Monday, August 9, 2010

இக்கரைக்கு அக்கரை பச்சை

திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகப் போகின்றன. தினசரி ஒரே கதை. காலை ஏழு மணிக்கு அலாரம், எட்டு மணிக்கு சமையலறை, ஒன்பது மணிக்கு பூஜை, பத்து மணிக்கு அலுவலகம். எட்டு முதல் பத்து மணி நேர வேலையில் க்ளையண்ட் இஷ்யூஸ், சப்போர்ட் க்வெரி, சேல்ஸ் கால்ஸ் மானிட்டரிங், சேல்ஸ் ஃபாலோஅப், சேல்ஸ் ஸ்ட்ரேடஜி, இன்வாய்ஸ் ப்ரிபரேஷன், நடுவே புத்துணர்ச்சிக்கு யோகியின் புன்னகை. மாலை 8 மணிக்கு வீடு. மறுபடியும் சமையலறை. ஒன்பதரைக்கு சாப்பாடு. அரை மணி நேரம் தொலைக்காட்சிக்கும், 1 மணி நேரம் புத்தகத்திற்குமென பகிர்ந்தளித்துப் பின் 12 மணிக்குத் தூக்கம். நடுவே தொழில் பயணங்கள். வேலைக்கான நேரம் இவ்வளவென குறிப்பிட்டுக் கூற முடியா அளவு ஒரு கையில் டூத் ப்ரஷுடனும், மறுகையில் லேப்டாப்புடனும் ஆரம்பாமகும் வேலைகள். இரவு கண்ணயர்ந்து மூடும் வேளை லேப்டாப்பை அணைக்கக் கூட முடியாது. இவைகளுக்கு நடுவே எங்காவது சென்று 4 நாட்கள் களைப்பாறி வர எண்ணும் பொழுதுகளிலும் அலுவலகத்திலிருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருக்கும்.

யோகியிடம் கடந்த ஒரு வருடமாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன் வேலையை விட்டு விடுகிறேனென. ஓய்வாய் உட்கார்ந்திருப்பது அவ்வளவு எளிதில்லை என்கிறார், அதுவும் எனக்கு. வீட்டிலிருந்து விடலாமெனும் நினைப்பு அதிகமாகும் நேரங்களில் வேலை பார்க்க முடியாமல் அலுவல்களில் குற்ற உணர்ச்சி மேலிடுவது கண்டு மிரள்கிறேன். வேலையின் மீதான காதல் குறைவது கண்டு வருத்தமாயிருக்கிறது. தவிர, வீட்டையும் அவரையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் மனைவியாய் இருக்கவும் ஆசையாயிருக்கிறது. இக்குழப்பத்துடன் உடனிருப்போரைக் கேட்டால் அவர்களனைவரும் ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் குழப்புகிறார்கள். இறுதியாய் ஒரு வார விடுமுறையெடுத்து வீட்டிலிருப்பதன் சவால்களை சந்திக்கத் தயாராகிவிட்டேன். ஒரு வாரம் சலிக்கவில்லையெனில் இதை ஒரு மாதமாக நீடித்து அதற்கு மேலும் வீட்டிலிருப்பது சிரமமாயிருந்தால் அலுவலகம் போகலாமென எண்ணம். இதுவே பிடித்தமாயிருந்தால் நல்லதொரு இல்லத்தரசியாய் இருந்து விட ஆசை. முழு ஒத்துழைப்பு தர என்னவர் இருக்கையில் என்ன கவலை...

சென்ற வெள்ளிக் கிழமையிலிருந்து விடுமுறை ஆரம்பம். பத்து மணிக்கு அவரை அலுவலனுப்பி விட்டு, வீட்டு வேலைகளை பணிப்பெண்ணிடம் முடித்து வாங்கிவிட்டு, ஃபேஸ்புக், ப்ளாக், சமையல், வாசிப்பு, பெயிண்டிங் என்கையில் இதமாயிருக்கிறது, புதிதாயும். முதல் அத்தியாயத்துடன் நிற்கும் பல புத்தகங்களையும் தூசி தட்டி எடுத்தாயிற்று. அலமாரியை அழகாய் அடுக்கியாயிற்று. ரொம்ப நாளாய் செய்ய வேண்டியிருந்த வீட்டு இண்டீரியரின் மாற்றங்கள் செய்து கொண்டுள்ளேன். புதிதாய்ச் செடிகள் வாங்கி வந்து நட்டாயிற்று. தினமும் நீரூற்றி அவற்றுடன் பேச பத்து நிமிடங்கள் தேவையாயிருக்கிறது. பால்கனியில் நின்றவாறே கீழே கிரிக்கெட் விளையாடும் வாண்டுகளை ரசிக்கப் பிடித்திருக்கிறது. “ஆன்ட்டி, பால்” என வரும் சிறுவர்களுக்கு பந்துடன் சாக்லேட்டுகளையும் கொடுக்கையில் பதிலாய் அவர்கள் தரும் குறும்புச் சிரிப்பு நிறைவாயிருக்கிறது. மாமியாருக்காய் கிருஷ்ணர் பெயிண்டிங் செய்து அனுப்ப வேண்டும். யோகியின் கைக்குட்டைகளில் எம்ப்ராய்டிங் செய்ய வேண்டும். சமைக்க மறந்திருக்கும் கீரைகளை ஆய்ந்து சமைக்க வேண்டும். மாலையில் அவர் வருகையில் விதம் விதமாய் சமைத்து அசத்த வேண்டும். அட, வீட்டிலும் செய்ய எவ்ளோ வேலைகளிருக்கு.

செய்யலாம், சலித்துப் போகும் வரை அல்லது அலுத்துப் போகும் வரை அல்லது அலுவல் அழைக்கும் வரை. நிச்சயமாய் எத்தனை நாட்களுக்கு நல்லதொரு மனைவியாய் வீட்டிலேயே இருக்க முடியுமெனத் தெரியவில்லை. எக்கரை பச்சை எனப் பார்த்து விடலாம்.

கடைசியா, எதுக்கு இவ்ளோ பெரிய பதிவெழுதினன்னு உறுமுறவங்களுக்கு... , ம். அதே தான். இவ்வாரம் முழுக்க நான் வீட்டில். அதனால் தினம் பதிவுகளுண்டு. மொக்கைகளுமுண்டு. குல தெய்வத்தை வேண்டிட்டு இந்தப் பக்கம் தினம் வந்து போங்க மக்கா.

Monday, August 2, 2010

தமிழ் வலைப்பூக்கள்

வலைத்தளம் என்பது கருத்துப் பகிர்தலுக்கான இணைய வெளி. பள்ளிக்கால டைரிக் குறிப்புகளையும், கல்லூரிக் கால எழுத்தார்வத்தையும் பத்திரிக்கைகளில் தொடர முடியாதவர்களுக்கு வலைப்பக்கங்கள் வடிகால். வலைப்பக்கத்தை எழுத்துலகின் புதிய புரட்சி எனலாம். கடிதங்கள் ஈ-மெயிலாய் மாறியதைப் போல், தொலைபேசிகள் கைபேசிகளாய் வளர்ச்சியடைந்தது போல், எழுத்துலகில் காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்த கருத்துத் தொகுப்பு இபோது வலைத்தளம் என்ற பரிணாமத்தை அடைந்துள்ளது.

1997 ஆம் ஆண்டு வலைத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கடந்த 5 ஆண்டுகளாக இதன் ஆளுமை அதிகமாக உள்ளதெனலாம். இலக்கிய எழுத்துகள் மட்டுமின்றி அன்றாட நிகழ்வுகளும், அரசியல், தொழில்நுட்பம், திரையுலகம், மருத்துவம் எனப் பன்முகம் காட்டும் வலையுலகின் வீச்சு எல்லையற்றது. தமிழகத்திலிருந்து தொலைவில் வாழும் தமிழர்களின் தொப்புள் கொடி இணையம் இந்த வலையுலகம். தினசரி நிகழ்வுகளைப் பதிவதாகத் துவங்கி எழுத்தார்வம் உள்ள அனைவருக்கும் பயிற்சிக் களம் இந்த வலைப்பதிவுகள்.

வலைப்பதிவுகளை அவை தாங்கி வரும் பதிவுகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலாம்.

தனிநபரின் வலைப்பதிவுகள்
ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையும், சுற்றியுள்ள விஷயங்களையும் தொகுக்கும் இவ்வகை வலைப்பதிவுகளில் நாடு, ஊர், விழாக்கள், சிந்தனை, கருத்துகள், சுய விருப்பங்கள், கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பகிரப்படுகின்றன. ஒருவரின் சொந்தக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் அனுபவப் பதிவுகளாக தொகுக்கப்படும் இவ்வலைப்பூக்கள் பெரும்பாலும் தனி நபருடையவை. இது போன்ற பதிவுகள் சில சமயம் ஒரு குறிப்பிட்ட நண்பர் குழுக்குள் மட்டுமே பகிரப்பட்டும், எழுத்தப்பட்டும் வருவதும் உண்டு. இப்படிப்பட்ட பெரும்பாலான தமிழ் வலைப்பூக்கள் சுவாரஸ்ய எழுத்துகளுக்குக் குறைவில்லாதவை.

நிறுவனம் மற்றும் அமைப்புகளின் வலைப்பதிவுகள்
ஒரு தொழில் நிறுவனத்தையோ, ஏதேனும் அமைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றியோ எழுதப்படும் இவ்வகை வலைப்பூக்கள் அந்நிறுவன அல்லது அமைப்பில் இருப்பவர்களுக்கும், அதைப் பற்றி அறிய விரும்பும் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கும் விதமாக அமைகின்றன. இவை பொதுவாக மார்கெட்டிங், ப்ராண்டிங் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஊடகத் துறை வலைப்பதிவுகள்
பொது வாழ்வின் விஷயங்களை, செய்திகளை எல்லோரும் அறிய, அலச, பாராட்ட, விமர்சிக்க, எதிர்க்க என பத்திரிக்கைகள் காகிதங்கள் வழியாகச் செய்யும் எதற்கும் குறைவில்லாது வலைப்பதிவுகள் மூலமாகவும் செய்கின்றன இவ்வகை வலைப்பக்கங்கள். இதனால் செய்திகளை வலைப்பக்கங்களில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது எங்கிருந்தும். முண்ணனி ஆங்கில மற்றும் தமிழ்ப் பொது ஊடகங்களான பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் தங்களுக்கான வலைப்பதிவுகளைக் கொண்டிருப்பதே சான்று.

குழும அல்லது துறை சார் வலைப்பதிவுகள்
தன் துறை சார்ந்த விஷயங்களையும் அதில் தினம் நடக்கும் மாறுதல்கள், கண்டுபிடிப்புகளைப் பகிரும் இவ்வகை வலைப்பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை எனலாம். இதில் அரசியல் வலைப்பதிவுகள், பயண வலைப்பதிவுகள், புகைப்பட வலைப்பதிவுகள், தகவல் தொழில் நுட்ப வலைப்பதிவுகள், ஃபேஷன் வலைப்பதிவுகள், பெண்களின் வீட்டு நிர்வாகம் பற்றிய வலைப்பதிவுகள், இசைப்பதிவுகள், கல்விப்பதிவுகள் எனப் பல குழுக்கள் அமைந்துள்ளன.

வலைப்பதிவுகள் கணினியில் மட்டுமல்லாது செல்ஃபோன்களிலிருந்து செய்யும் வண்ணம் எளிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொபைல் ஃபோனிலிருந்து செய்யப்படும் ப்ளாகிங் மோப்ளாக் (moblog) என அறியப்படுகிறது. தவிர பதிவர்களின் சமீபத்திய ஈடுபாடாகக் குறும்பதிவுகள் என அழைக்கப்படும் ”ட்விட்டர்” பிரபலமடைந்துள்ளது.

வலைப்பதிவின் நன்மைகள் என்ன...
 • பத்திரிக்கைகளில் எழுதக் காத்திருந்த காலம் போய், தோன்றுவதை எழுத, இருக்கும் எழுத்துத் திறமையைத் தொடர ஒரு களமாக அமைகிறது.
 • துறை சார் பதிவுகள் தாய் மொழியில் வாசிக்க கிடைக்கின்றன.
 • பல அரிய, புதிய புத்தகங்கள், உலகத் திரைப்படங்கள், பிற மொழிப் பாடல்கள், இலக்கியங்கள் என அனைத்திற்குமான விமர்சனமறியும் ஒரு இடமாக அமைகிறது.
 • ஒருவரின் திறமையை உலகறியச் செய்யும் ஒரு வாய்ப்பு இந்த வலைப்பதிவுகள். அதுவும் நாம் விரும்பும் வகையில், நாம் விரும்பும் நேரத்தில்.
 • புத்தகங்களுடன் விட்டுப் போன வாசிப்பைத் தாண்டி ஒரு வித்தியாச வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
 • தன் துறையுடன் ஒன்றுபட்ட ஒரு நட்பு வட்டத்தை அமைத்துத் தருகின்றன இந்த வலைப்பக்கங்கள்.
 • நகர வாழ்க்கையின் நரக வேதனையினிடையே நம் கவலை மறந்து சிரிக்க, தகவல்கள் அறிய, காதல் கவிதைகளில் உணர, சிறுகதைகளில் வாழ ஒரு அற்புத வாசிப்பனுபவத்தைத் தருகின்றது.
 • பின்னூட்டங்கள் என அறியப்படும் வாசிப்பவர்களின் கருத்துகள் எழுதுபவருக்கு ஒரு தூண்டுதலையும், சிறந்த எழுத்திற்கு வழிகாட்டுதலாகவும் அமைவது மறுக்க முடியாதது.
 • வலைப்பூக்களில் எழுதும் பல பதிவர்கள் பத்திரிக்கைக்காரர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கதாசிரியர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
 • பிரபல எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துகளை / எண்ணங்களை அவர்களது வலைப்பதிவில் பதிவதனால் அவர்களின் வாசகர்களுக்கு அவை எளிமையாக சென்றடைவதுடன் எழுத்தாளர் - வாசகர் வட்டமும் நேரடித் தொடர்பைப் பெற்றுள்ளது.
 • எழுத்தினால் ஏற்பட்ட நட்புகள் எழுத்தைத் தாண்டி எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் என் “பதிவ நண்பர் இருக்கிறார்” என்ற அழுத்தமான நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்..
உங்களுக்குக் கொஞ்சம் நேரமும், எழுத்தார்வமும் இருந்தால் போதும். நீங்கள் வலைப்பதிவராகலாம். வலைப்பதிவ எழுத்தாளராகலாம்.

உங்களுக்கான வலைப்பதிவைத் தொடங்குவது எப்படி

பல ப்ளாகர் சைட்டுகள் இச்சேவையை இலவசமாக வழங்குகின்றன. அவற்றில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருபவை
www.blogger.com - மிக அதிகப் பதிவர்களால் உபயோகிக்கப்பட்டு வரும் தளம். இதனைக் கையாளுவது எளிதென்பது இதன் ப்ளஸ்.
www.wordpress.com - ப்ளாகரைத் தொடர்ந்து அதிகமானவர்களால் உபயோகிக்கப்படுவது.
www.blog.com - இதன் அன்லிமிட்டெட் பேண்ட்விட்த் ப்ளாக் சேவை பலரால் விரும்பி உபயோகிக்கப்படுகிறது.
www.blogster.com - இலவச ப்ளாக் சேவையுடன் இலவச படங்களையும் வழங்கும் சிறப்பு சேவை இதனுடையது
www.opendiary.com - அன்லிமிட்டெட் தகவல் சேமிப்பு வசதியும், அன்லிமிட்டெட் பதிவுகளும் இலவசமாக வழங்குவதோடு மிகக் குறைந்த விலையில் அட்டகாசமான வசதிகளையும் அளிக்கிறது.
இது தவிர, கிட்டத்தட்ட 40 சிறந்த இண்டர்நெட் சைட்டுகள் ப்ளாகிங் சேவையை இலவசமாக வழங்குகின்றன.


திரட்டிகள்

வலைப்பதிவுகளில் பதியப்படும் உங்கள் கருத்துகளுக்கு அடுத்த நிமிடமே பின்னூட்டங்கள் என அழைக்கப்படும் வாசிப்பவர் கருத்துகள் வந்து சேரும். உங்களுக்கு ஊக்கமளிக்கும் அந்தக் கருத்துகளை மற்றவருக்கு எப்படி எடுத்துச் செல்வது... அதற்கான வேலையைச் செய்கின்றன வலைப்பதிவு திரட்டிகள். தமிழ்மணம், தமிலிஷ், உலவு, தமிழ் கணிமை, தமிழ் 10, தமிழ்வெளி, நியூஸ் பண்ணை, சங்கமம் மற்றும் பல திரட்டிகளில் நம் பதிவுகளைப் பதியலாம். இத்திரட்டிகளின் வழியாக மற்றவர்களின் பதிவுகளை நாம் வாசிக்கும் அனுபவமும் பெறலாம்.

ப்ளாக் வடிவமைப்பு

நம் வலைப்பக்கங்களை வடிவமைக்க பல்வேறு டெம்ப்ளேட்டுகளும் காட்ஜெட்ஸ், விட்ஜெட்ஸ்களும் கிடைக்கின்றன. இவற்றையும் இலவசமாகப் பெறலாம்.
உங்கள் வலைப்பதிவுக்கான டெம்ப்ளேட்டுகளைத் தேர்ந்தெடுக்க கீழே குறிப்பிடப்படுள்ள தளங்களைப் பார்வையிடலாம்.

இது தவிர, ஃபாலோயர்ஸ் எனப்படும் உங்களைத் தொடர்ந்து வாசிக்க விரும்புவர்களின் பட்டியல், உங்கள் வலைப்பக்கத்தின் மொத்தப் பார்வையாளர்களை அறிய ஹிட் கவுன்ட்டர், நீங்கள் செயல்படும் வேறு தளத்துக்கான சுட்டிகள், இன்றைய காலநிலை, நாள்காட்டி, வெல்கம் நோட் என நீள்கிறது இவ்வரிசையும்.

உங்களால் ஒரு தளமே வடிவமைக்கபட்டு அதில் நீங்களே ஆசிரியராகப் பொறுப்பேற்று உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களுக்குப் பிடித்தமானதை எழுதித் தள்ளுங்கள் என்றால் ஆனந்தமாயிருக்காதா என்ன...
நிச்சயம் இருக்கும். அப்படி சில ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளில் தங்கள் எழுத்துகள் மூலம் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தையும், நட்பு வட்டத்தையும், அடுத்ததடுத்த வெற்றிகளையும் குவித்து வரும் சில பதிவர்களின் அனுபவங்களைக் கேட்போம்.

அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் அறிவியல் முன்னேற்றத்தை ஏற்று செல்லாத எந்தக் கலையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய வாய்ப்புண்டு. எழுத்து என்பது பேனா, பேப்பர் என்பதை மறந்து கணினிக்குள் வந்தபிறகு எழுத்தாளர்கள் கணினியில் தட்டச்சு செய்வது அதிகரித்தது. அதன்பின் வலையுலகம் என்பது வந்து கட்டற்ற சுதந்திரம் கொடுத்து, எல்லாருமே எழுதி பயிற்சி பெற்றுக்கொள்ளக் கூடிய களமாக மாறி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தி, எழுதி அச்சு ஊடகங்களில் தங்கள் பெயரைப் பதித்த பலபேரின் வெற்றியே இதற்கு உதாரணம்” என்கிறார் கடந்த இரு வருடங்களாக பதிவுலகில் தன் எழுத்துகளால் ‘பரிசல்காரன்’ என்ற பெயரில் அறியப்பட்டு வரும் திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண குமார். இவரது வலைப்பதிவுகளின் எழுத்தனுபவம் மூலமாக ”டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்” என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. இவரின் வலைப்பூ முகவரி www.parisalkaaran.com

கண்டம் விட்டுக் கண்டம் கடந்து வாழும் மதுரைத் தமிழரான நேசமித்திரன் கூறுகையில் “அயல்தேசத்தின் தனிமையில் வலையுலகம் எனக்கு திறந்த ஜன்னல், புதிய கிரகங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறது . ஒரு கவிதையை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்து .. எதனால் நிராகரிக்கப்பட்டது என்று காரணமறியாமலே குமைந்து கிடந்தது ஒரு காலம் . இன்று இடுகையிட்ட நொடிப்பொழுதில் கிடைக்கும் மறுமொழிகள்- எதிர்வினைகள் தரும் ஊக்கம், புத்தகம் வெளியிடும் தூரம் வரை பயணித்ததற்கு வலையுலகும் நட்பும் மட்டுமே காரணம்” இவரும் விரைவில் தன் கவிதைத் தொகுப்பை வெளியிட உள்ளார். வாசிப்பவரை அதிகம் யோசிக்க வைக்கும் கொஞ்சம் சிக்கலான மொழிக்கு சொந்தக்காரரான இவரின் வலைப்பூ www.nesamithran.blogspot.com

வலைப்பூக்களில் கமர்ஷியல் ஹிட் அடைந்துள்ள கேபிள் சங்கர் என்ற சங்கர நாராயணன் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தும், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும், வசனம் எழுதியும், ஒரு குறும்படம் இயக்கியும் உள்ள இவரின் திரைப்பட இயக்குனர் ஆர்வம் வலைப்பதிவுகளின் மூலம் பூர்த்தியாகப் போகிறது. அது எப்படி என அவரிடமே கேட்போம் “ஒரு பொழுது போக்காத் தான் எழுத வந்தேன். எழுத வந்து இரண்டு வருடங்கள் கூட முடியாத நிலையில் இன்றைய அதிக ஹிட்டுகள் வாங்கும் பதிவர் என்ற இடத்திற்குக் கொண்டு சென்ற வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்னால் சிறுகதை எழுத முடியும் என நினைத்தது கூட இல்லை. வலைப்பதிவில் என் எழுத்துகளுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும், ஊக்கமும் தான் என் எழுத்தை மெருகேற்றி என்னை ஒரு சிறுகதை எழுத்தாளனாக மாற்றியது. ”லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்”, ”மீண்டும் ஒரு காதல் கதை” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளும், ”சினிமா வியாபாரம்” எனும் புத்தகமும் எழுதும் நம்பிக்கையைத் தந்தது வலைப்பதிவே. வலைப்பதிவுகளில் என் எழுத்தை வாசித்தும், என்னைப் பற்றி அறிந்தும் என் மீது நம்பிக்கை கொண்டு படம் செய்ய முன் வந்திருக்கிறார் என் ப்ரொடியூசர். பல வருட இயக்குனர் முயற்சி இரு வருட வலைப்பதிவுப் புகழால் கிடைப்பது சொல்லிட முடியா ஆனந்தமே” அவரின் படத்திற்கு வாழ்த்துகள். நாளைய இயக்குனரின் இன்றைய வலைப்பக்க முகவரி www.cablesankar.blogspot.com

எழுத்தாளர் மட்டும் எழுதுமிடம் என்றில்லாமல் வாசிப்பனுபவம் கொண்டவர்கள், எழுத்தார்வம் மிக்கவர்களும் வலைப்பக்கங்களில் எழுதுகிறார்கள். ”ரொம்ப நாளா மற்றவர் பதிவுகளை வாசிச்சுட்டுத் தான் வந்தேன். நாமளும் எழுதலாமேன்னு உள்ளுக்குள் ஒரு ஆர்வம் இருந்தாலும் அனுபவமில்லாததால் ஏதோ கிறுக்கி வந்த என் ஆரம்ப கால எழுத்தையும் ஒரு வருடம் கழித்து வாசிக்கும் என் சமீப எழுத்துகளிலும் ஏற்பட்டிருக்கும் மாறுதலும் முன்னேற்றமும் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது. அலுவலின் முழு நாள் டென்ஷனுக்குப் பிறகு ஒரு மணி நேர ஆசுவாசம் வலைப்பூக்கள் வாசிப்பதும், எழுதுவதும்” என்கிறார் சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் ரகு என்ற பதிவர். இவரின் வலைப்பக்கம் www.kurumbugal.blogspot.com

இது தவிர தனது சுவாரசிய வலைப்பதிவுகளால் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் பதிவர்கள் - ஈரோடு கதிர், ஆதிமூலகிருஷ்ணன், செல்வேந்திரன், கார்க்கி, பட்டர்ஃப்ளை சூர்யா, அப்துல்லா, வடகரை வேலன், சஞ்சய் காந்தி, வெயிலான், நாடோடி இலக்கியன், மோகன் குமார், முரளிக்குமார் பத்மநாபன், ஜெட்லி, ஜெய், ஹாலிவுட் பாலா, தராசு..............

வலைப்பதிவ ஆண்களுக்குக் கொஞ்சமும் குறைந்தவர்களல்லர் பெண்பால் பதிவர்கள்.
தமிழ்நதி, ரம்யா, வித்யா, லாவண்யா, கலகலப்ரியா, ரோகிணி, ராஜி, விஜி, சந்தனமுல்லை, ப்ரியா, மேனகாசாத்தியா, அனாமிகா, ஹுஸைனம்மா, ராமலட்சுமி எனத் தொடரும் பெண் பதிவர்கள் எல்லாத் துறைப் பதிவுகளிலும் கலக்குகிறார்கள். இவர்களில் ஐ.டி.துறைப் பெண்கள், மேலாண்மைப் பதவியில் இருப்போர், சொந்தத் தொழில் செய்வோர், மருத்துவர், பேராசிரியை, இல்லத்தரசிகள் என அனைவரும் அடக்கம். இவர்கள் அனைவரும் உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து வலைப்பதிவுகளின் மூலம் இணைந்து நல்ல நட்பைப் பின்னூடங்கள் மூலம் தொடர்கின்றனர்.

கிறுக்கல்கள் எனப் பொருள்படும் “Scribblings" என்ற வலைப்பக்கத்தை கடந்த 5 வருடங்களாக எழுதி வரும் வித்யா சொல்கிறார், “வீட்டுல இருக்குற என்னை மாதிரி இல்லத்தரசிகளுக்கு நல்ல பொழுதுபோக்கு மற்றும் உலகத்துடன் தொடர்பிலிருக்க வலைப்பக்கங்கள் உதவுகின்றன. என் கருத்துகளை எனக்குப் பிடிச்ச மாதிரி, என் தளத்தை நானே வடிவமைச்சுப் போட்டுக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” வீடு, சமூகம், இடங்கள், பொதுப் பிரச்சனைகள் என அனைத்தையும் ஒரு கை பார்க்கும் இவரின் தளத்தில் அதிகம் வரவேற்பைப் பெற்ற பதிவுகள் ரெஸ்டாரண்ட் பற்றிய இவரின் விமர்சனம். சென்னையின் அனைத்து இடங்களிலும் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரண்ட்டுகளின் சுவையும் தரமும் அறிய இவர் பதிவைப் பாருங்கள். www.vidhyascribbles.blogspot.com

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சாவின் விளிம்பு வரை சென்று திரும்பி வந்த ரம்யாவின் வலைப்பக்கத்தின் பெயரே அவர் தன்னம்பிக்கைகுச் சான்று. www.ramya-willtolive.blogspot.com இல் எழுதி வரும் இவர் எழுத வந்ததன் நோக்கம் பல நட்புகளின் மூலம், தான் செய்ய விரும்பிய பொது நலச் சேவையை வெளிக் கொண்டு செல்வதானாம். நல்லதொரு நகைச்சுவை நடையில் எழுதும் இவரின் பதிவுகளில் தூய நட்பைக் காணலாம். இவரிடம் பேசுகையில் நமக்கும் ஒரு தன்னம்பிக்கை வெளிப்படும். “நான் இன்னிக்கு என் வாழ்க்கைல வாழ்றதுக்கே போராடிட்டிருக்கேன். அதுனால யாருக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை முன்னாடி வெச்சுப் பார்த்து வந்த கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தூக்கிப் போட்டுப் போயிட்டே இருக்கணும். இந்த என் மெஸேஜ் எல்லாரையும் அடையணும்னு தான் எழுத வந்தேன். தன்னம்பிக்கையை மட்டுமே கருவா வெச்சு என் பதிவுகளை எழுதிட்டிருக்கேன்” என்கிறார்.

இப்படி வலைப்பதிவர்கள் தங்களுக்குள் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டாலும் அவ்வப்போது சிறு பிள்ளைகள் போல் குழுக்களாக சண்டையிட்டுக் கொள்வதும், சமாதானமாகி விடுவதும் உண்டு.

பலரும் வலைப்பக்கங்களுக்கு அடிமையாகி வேலை நேரங்களில் வேலையைக் கெடுத்து வாசிக்கிறார்கள்/எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு புறமிருந்தாலும் அதற்கான நேர எல்லையை நாம் வரையறை செய்து கொண்டோமானால் எப்பிரச்சனையும் இல்லை. வலைப்பதிவினால் வரும் தீமை என சொல்ல ஒன்றுமில்லை அதை அளவாக நல்ல விதத்தில் உபயோகித்தால்.

ஜூன்16-30,2010 “தமிழ் கம்ப்யூட்டர்” இதழில் நான் எழுதி வெளியான கட்டுரை.