எனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது. அம்மாவிற்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன்.
சரி, சிநேகிதிக்கு வரலாம். நான் வாசித்தது மார்ச் 1-15 வரையிலான இதழ். வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன். புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். பெண்கள் சிறப்பு இதழென்பதால் முதல் இருபது பக்கங்களுக்கு வெவ்வேறு துறைப் பெண்கள் பற்றிய ஒரு/இரு பக்கக் கட்டுரைகள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, கலெக்டர், கோவில் கருவூலத்தில் இருக்கும் பெண், காய்கறி விற்று மருத்துவமனை கட்டிய பெண், பாடகி, புல்லாங்குழல் இசைக்கும் பெண், ஒரு குடியிருப்பில் விட்டு வேலை செய்யும் அம்மா என வித்தியாசமான பெண்கள் பற்றிய தொகுப்பு சுவாரசியம்.
உள்ளே சமையல் குறிப்பில்லை; பதிலாக அத்தியாவசிய உணவுப் பழக்க வழக்கங்கள். காஸ்மெடிக் அழகுக் குறிப்பில்லை; மாறாக உணவால் அழகாவது எப்படி. அழும், ஆறுதல் சொல்லும் சோகக் கதைகள் இல்லை; பெண்களே கருத்து சொல்லும் விவாத மேடை. இத்துடன் டாக்டர்.ஷாலினியின் அவசியமான கட்டுரை ஒன்று. வாசித்து முடித்து விட்டு அம்மாவை அழைத்து நன்றி சொன்னேன். தங்கையையும் ரெகுலராக வாசிக்க சொன்னேன். சிநேகிதியில் கொஞ்சம் அலுப்பான வுஷயம் சுய விளம்பரம். ஒருவரைப் பற்றி எழுதும் போது கூடவே “இவரும் நம் வாசகி” என சொல்வது சலிப்பாக உள்ளது. மற்றபடி ரொம்பவும் நல்லாருக்கு. (இது வெறும் புகழ்ச்சி அல்ல. 20 ரூபாய் வீணாகாததன் மகிழ்ச்சி)
*************************************************************************************************************
போன முறை திருப்பூர் சென்றிருந்த பொழுது நான் இருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மெல்லிய பாட்டு சத்தம் கேட்டது. அங்கிருந்தவரை அழைத்து விபரம் கேட்க, இது HR பாலிஸிகளில் ஒன்று. இது போல் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு அயற்சி ஏற்படாமல் இருப்பதாகவும், வேலை செய்ய ஆர்வம் அதிகமாவதாகவும் தெரிவித்தார். அங்கிருந்த ஒரு கன்சல்டண்டைக் கேட்ட போது அது உண்மைதானென உறுதி செய்தார். எனக்கும் நன்றாகவே இருந்தது. ஆனால் இது அட்மினிஸ்ட்ரேடிவ் ப்ளாக்கில் மட்டும் இருப்பதாக சொன்னார்கள். மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன். (வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)
*************************************************************************************************************
ஆடிட்டர் நண்பரொருவர் மார்ச் மாதம் வருட இறுதி, வேலை அதிகமென அழாத குறையாகச் சொன்னார். ”ச்சே என்ன வாழ்க்கை இது ஒரே டென்ஷனா... ஒரு சேஞ்சே இல்ல” என்றார்.
நான் அவரிடம், “ஒரு சேஞ்சுக்கு வேலை பாருங்களேன்” என்றால் முறைக்கிறார்.(உண்மையை சொன்னா முறைக்கிறாங்க.. என்ன உலகமடா இது!)
*************************************************************************************************************
வண்ணதாசனை சமீபத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எழுத்தின் அடர்த்தி கண்டு வியந்து நிற்கிறேன். பல இடங்களில் கிராமத்துத் தமிழ் புரியாமல் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ அர்த்தம் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தான் புரிகிறது தமிழின் தொன்மையும், மொழியின் வளமையும். (நாம பேசுறதையும் தமிழ்ன்னு ஏத்துக்குறவங்க பெரியாளுங்க தான்)
*************************************************************************************************************
சமீபத்தில் பதிவுலகத் தோழி ஒருவரிடம் பதிவுலக அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே. நாம் இயங்குவது ஒரு பொதுத் தளத்தில். இங்கு அனைவரின் எழுத்துகளும் ஒரு வித மதிப்போடு வாசிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் வார்த்தைத் தேர்வுகளில் கவனம் அதிகம் தேவை. எதிர்ப் பதிவுகளை ஒதுக்கும் எனக்கு சமீபத்தில் ஒரு எதிர்ப் பதிவு அதிக கவனத்தை ஈர்த்து வியக்க வைத்தது. நீங்களும் இதை வாசித்துப் பாருங்களேன். (நம்மளையெல்லாம் எதிர்த்து எழுதினா அங்கேயும் போய் சூப்பருன்னு கும்மியடிக்குற ஆளாச்சே நாம. ஹிஹிஹி)
*************************************************************************************************************
யோகி டைம்ஸ்
போன வாரத்தில் ஒரு நாள் சோகமாக யோகியிடம் சொன்னேன் “ஜி, 3 இடியட்ஸ் படத்துல அமிர்கான் ரோல்ல லல்லு* (விஜய்க்கு என்னவர் வைத்திருக்கும் செல்லப் பெயர்) நடிக்கிறாராம்”
நிஜமாகவே எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்து விட்ட சோகம்.
ரொம்பக் கூலாக சொன்னார் “இதுக்கெதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற, அந்தப் பட டைட்டிலுக்கு அவரை விடப் பொருத்தமான ஆள் யாரா இருக்க முடியும்”
சோகம் மறந்து சிரிச்சுட்டேன். (டாக்டர்.விஜய் அவர்கள் என்ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற கொடுமையை நாம சகிச்சிக்கணும்னு தலைல எழுதிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்?)
* இந்த ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் அறிந்து மகிழ்பவர்கள் மகிழ்வீராக. தூற்றுபவர்கள் தூற்றுவார்களாக. ;)

