Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Friday, April 9, 2010

பதின்ம வயது டைரிக் குறிப்பு

கேலியான, மாறுதலான, வாழ்வின் அசடுகள் நிறைந்த, தைரியமான, தயக்கமான, கேனைத்தனமான இந்த பதின்ம வயது அனைவர் வாழ்விலும் அழியாக் கோலமிட்டிருக்கிறது. என் பதின்ம வயது டைரிக் குறிப்புகளில் நிரம்பி வழிந்தவை நட்புகளும், நட்புகளின் காதல்களுமே. தவிர சில தேவதாஸ்களை உருவாக்கிய சாகசமும் உண்டு. ;)

பதின்ம வயதில் எனக்கு வந்த முதல் காதல் கடிதம் நான் ஏழாம் வகுப்பில் இருந்த போது. ஆனால் அது தவறுதலாக அம்மா கையில் போய்விட அம்மாவும், அப்பாவும் நன்றாகவே கவ்னித்தார்கள் அவனை. இது எனக்குத் தெரிந்தது பதின்ம வயதின் இறுதியில். அறிந்தபோது ரொம்பவே காமெடியாக இருந்தது. அதற்குப் பின் கொடுத்தவனைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றி கேட்காமலேயே விட்டு விட்டேன் “எங்கம்மாவுக்கு லெட்டர் கொடுத்தா எங்கப்பா சும்மா விடுவாரா?”

என் குழந்தைப் பிராயத்திலிருந்தே என் நல்ல நண்பன் என் மாமன் மகன். என்னை விட மூன்று வயது பெரியவன். அவனுக்கும் எனக்கும் இருந்த சினேகம் அழகானது. பதின்ம வயதில் என் எல்லா சேட்டைகளிலும், தவறுகளிலுமிருந்து என்னை அவன் தான் காத்தான். சேட்டைன்னா உங்கூட்டு சேட்டை இல்ல, என்கூட்டு சேட்டை இல்ல. உலக சேட்டை. அப்படித் தான் எங்கூட்ல சொல்லுவாங்க. எங்கம்மா, அப்பா ரெண்டு பேருமே எப்போவுமே தங்களுக்கு ஆண்மகனில்லை என வருந்தியதில்லை. நான் வருத்தப்பட விட்டதில்லை. :)

ஒரு முறை பள்ளி வந்து கொண்டிருந்த தோழியை மறித்து என் மீதான காதலை ஒருவன் சொல்லி அவளைத் தூது போக சொல்ல அவள் பயந்து போய் அழுது விட்டாள். மாலை வீட்டிற்குப் போய் அம்மாவை உடனழைத்துக் கொண்டு அந்தப் பையன்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அவன் என்னிடம் அதிகம் பேசவும் அறைந்து விட்டேன். அம்மா ரொம்பவே பயந்து விட்டாள். அவன் கன்னம் வீங்கி, காது கேட்காமல் போய், என் அம்மா அவனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ செலவுக்குப் பணம் கொடுத்து வந்தார். இதனால் மற்ற பசங்களுக்குப் பயமிருந்து அந்த நேரத்தில் ஒதுங்கி விட்டாலும், அதற்குப் பின் எங்கள் தெருவில் இரவு நேரங்களில் வந்து கத்துவது, மொட்டை மாடியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது கேலி செய்வது எனத் தொடர்ந்தனர். அப்போவும் அவர்களுடன் நான் வம்பிழுக்கப் போக, பயந்த அம்மா என் கஸினை அழைத்து விபரம் சொல்ல அவன் தான் தன் நண்பர்களுடன் சென்று பிரச்சனையைத் தீர்த்து வந்தான். இப்போது என் கஸின் எங்கு, எப்படி இருக்கிறான் எனத் தெரியாது. ஒரு குடும்ப மனஸ்தாபத்தில் இரு வீட்டுக்கும் பேச்சு நின்று போனது. என் பதின்ம வயதின் மிகப் பெரிய இழப்பு அவன் நட்பு.

அடுத்ததாய் காதல் ரோமியோக்கள். காலை 6 மணிக்கு ஃபிஸிக்ஸ் டியூசன் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு மேத்ஸ் டியூசன் முடித்து வரும் வரை ஒவ்வொரு முறை நான் கடக்கும் போதும் காத்திருந்து எழுந்து தன் இருப்பைக், காத்திருப்பைக் காட்டிக் காதலித்த ஒருவன், மேத்ஸ் டியூசனில் நேரே சொல்லத் துணிவில்லாமல் நண்பர்கள் மூலம் சொல்லிக் காதலித்தவன், ஒரு முறை வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமே சொல்லி அனுமதி கேட்டவன், பஸ்ஸில் பாட்டுப் பாடி காதல் சொன்னவன், சைக்கிளில் உடன் வந்து விருப்பம் சொன்னவன், தெருவில் கடக்கும் போது பாட்டுப் போட்டுக் காதல் தெரிவித்தவன், ஒரு பெரிய அசைன்மெண்ட் அளவிற்குக் காதல் கடிதம் தீட்டிக் கையில் தந்தவன், ஃபோனில் அழைத்துக் காதல் சொன்னவன், கல்லூரியில் சிட்டை எழுதித் தூக்கியெறிந்தவன், கண்ணைப் பார்த்து காதல் சொன்னவன், மழையில் நனைந்து கொண்டே சொன்னவன் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. ஆனால் இவர்களிடம் என்னால் காதலையன்றி காமெடியையே பார்க்க முடிந்தது. ஒருவழியாக எல்லாரும் தப்பித்து விட்டார்கள். யோகி மாட்டிக் கொண்டார். சரி, அந்த சோகக் கதை இப்போதெதற்கு...

என் பதின்மத்தில் கிடைத்த நட்புகளே என் நெஞ்சம் நிறைந்து, இப்போதும் தொடர்பவை. ஏப்ரல் மாதத்தில் படம் பார்த்து விட்டுத் தோழியைத் தேடி சென்று அழுத அனுபவமெல்லாம் உண்டு. :)

கேனைத் தனமாய் கவிதை முயற்சித்த பள்ளிக் கடைசி நாள் பிரிவு டைரிகள், கவிதைகளாய் நிரப்பித் தந்த தோழிகளின் காதல் கடிதங்கள், அழகாய்க் கடக்கும் பசங்களுக்கெல்லாம் கூட்டாய்ப் போட்ட மதிப்பெண்கள், க்ரூப் ஸ்டடியில் அடித்த லூட்டிகள், ஒன்றிரெண்டாய் அமைந்து விட்ட பள்ளி நாள் திரைப்படங்கள், பால்கோவா வாசமும், தீப்பெட்டி வாசமும், புழுதி வாசமும், நூலுக்கேற்றப்படும் சாய வாசனையும், மஞ்சள், குங்கும வாசனையும் கலந்து சுவாசிக்கக் கொடுத்தத் தெருக்கள், தோழிகளின் காதலுக்கு ஒப்புவித்த அறிவுரைகள், பதுங்கும் நேரங்களில் அமைந்து விட்ட ஆசிரியரின் கேள்விகள், அதற்காய்த் தலை குனிந்து நிற்கும் நேரத்திலும் விலகாத புன்னகைகள், நேராய் இருந்தும் சரி செய்யப்பட்ட தாவணித் தலைப்புகள், முழுதாய்த் தெரியாமல் முயற்சித்து பால் குக்கர் போல் முடிந்து விட்ட விசிலுடனான படங்கள், நட்பின் காதலுக்காய் கட்டிய கைகளுடன் உதடுகளும் ஒட்டிப் போன என்கொயரிகள், சைக்கிள் சக்கரம் தேய அளக்கப்பட்ட ஊரின் புழுதிச் சாலைகள், ஆசிரியரின் மீதான பயத்துடனே வரிசையில் போய் வந்த சுற்றுலாத் தளங்கள், வாய்க்குள் செல்லும் சாப்பாடு எதுவென்றே தெரியாமல் முடிந்த தோழமைக் கைகள், கிறிஸுதுமஸுக்கும் பொங்கலுக்கும் காத்திருந்து அனுபவித்த விடுமுறை தினங்கள், கணினியை முதன் முதலாய்த் தொட்டுப் பார்த்து சிலிர்த்த விரல்கள், இம்போசிஷன் நாட்களில் வரும் பொய்க் காய்ச்சல்கள், ஒரு ஊசிக்காக டாக்டரை சுற்றிலும் ஓட விட்ட மருத்துவமனை வராண்டாக்கள், ஒரு பக்க ஜடையை இருபக்க ஜடையாய் மாற்றி இருபக்கப் பூவை ஒரு பக்கப் பூவாய் மாற்றிய அலங்காரங்கள் என கலவையானது பதின்ம நினைவுகள்.

இதை நினைக்கையில் மீண்டும் அந்நாட்களுக்குத் திரும்ப மனது கெஞ்சுகிறது. ஆனால் அவ்வயதில் வாசித்த கதையில் வரும் டைம் மெஷின் என்னிடம் இல்லையே :(

நினைவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு கொடுத்த பா.ராஜாராம் மாம்ஸுக்கு நன்றிகள்.

இதைத் தொடர அதே ஊரின் தெருக்களில் வலம் வந்த ஸ்ரீவி சிவாவையும், குறும்பு நண்பர் ரகுவையும் அழைக்கிறேன்.

Wednesday, April 7, 2010

எனக்குப் பிடித்த 10 பெண்கள்

தொடர் பதிவுகள்னாலே அதிகம் எழுதாமல் அப்படியே இருந்து விடுகிறது. எல்லாரும் எழுதி வாசித்து விட்ட அயற்சியா அல்லது ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொன்னால் அதைப் பற்றி எழுதத் தெரியவில்லையா எனப் புரியவில்லை. எப்படியோ இந்தத் தொடரை ஆரம்பித்த சர்ஃபுதீனும், தொடர்ந்து நண்பர் ரகுவும் அழைத்ததால் இதோ நானும் எழுதிட்டேன்.

எனக்குப் பிடித்த 10 பெண்கள். இன்னும் அதிகமானவர்களைப் பிடிக்குமென்றாலும் இப்போதைக்கு அதுல இருந்து 10 பேர் மட்டுமே. அடுத்த வருஷம் மீதி பேரை சேர்த்துக்கலாம்.

சரி, மக்களை எழுதுறதுக்கு முன்னாடி விதிகளைப் போட்டுடலாம். இல்லைன்னா சாமி கண்ணைக் குத்தும்.

1. உங்களுக்குப் பிடித்தவர்கள் உங்கள் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது.
2. வரிசை முக்கியமில்லை.
3. வெவ்வேறு துறையிலிருந்து 10 பெண்களை எழுதுங்கள்.

ஓகே, ஸ்டார்ட் ம்யூஸிக்.


“சே என்ன வாழ்க்கை இது” என சலித்துக் கொள்ளும் சராசரி மனுஷியான என்னை வாழ்வின் மீதான சலிப்பைப் போக்கித் தன்னம்பிக்கை தர வைத்தது இப்பெண்ணின் வைராக்கியமான வாழ்வு தான். நகைச்சுவை எழுத்துகளால் மட்டுமே கவர்ந்து கொண்டிருந்தவர் ஒரு தன்னம்பிக்கை மனுஷியாகவும் தன்னை நிரூபித்து எல்லாருக்கும் முன்மாதிரியாய் வாழ்பவர். ஐ லவ் யூ ரம்ஸ்.


உண்மையிலேயே நான் வியந்த துணிச்சல் இவரது. வீட்டை, நிர்வாகத்தை, அலுவலை, குழந்தைகளை, குடும்பத்தை என எல்லாத்தையும் ஒரு பெண் அணைத்துப் போகையில் அவளையும் அதே அரவணைப்பில் கொண்டு போக ஆட்கள் இருப்பர். ஆனால் யாரின் அணைப்பும், அரவணைப்பும் தேவையில்லையென தைரியத்தின் முழு வடிவாய் இருக்கும் விஜியை இன்னும் பிரம்மிப்புடனே தூர நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


எல்லாரும் மொக்கை போடுவதுண்டு. அந்த மொக்கையையே சீரியஸாகப் போட்டு நம்மை விழுந்து விழுந்து சிரிக்க 100% கியாரண்டி, வாரண்டி, கொட்டிக்க ஒரு கப் டீ எல்லாம் தருபவர் இவர். தவிர, ட்ரையான விஷயத்தையும் லேசாக சொல்லக் காரணம் இவரையும் அறியாமல் இவரின் மொக்கை கலந்திருப்பதே. நல்ல ரசனையான எழுத்து இவரது. இவர் எழுத்து மட்டும் தான் இப்படி என்றால் பேச்சும் மொக்கைகலந்தது தான். மனம் சோர்ந்த நேரங்களில் இப்பெண்ணுடன் கொஞ்சம் கதைத்தால் போதும்.


ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் உணர்வுதான். ஆனால் இவரைப் போல் ஒரு தாயாக இருக்க வேண்டும் என நினைக்க வைக்கும் தாய்மை இவரது. ஒரு குழந்தையை இவ்வளவு ரசித்து அதையும் ஒன்று விடாமல் பதிந்து வரும் இவரின் எழுத்துகளுக்கு ரசிகை நான். குழந்தைக்குத் தேவையான பாசம், கண்டிப்பு, தைரியம், ஊக்கம் கூடவே அப்பப்போ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என எல்லாம் உண்டு இவரிடம். குழந்தை வளர்வது தாயின் கையில் என்பார்கள். நிச்சயம் பப்பு பெரிய ஆளாக வருவாள் என்ற எண்ணம் இத்தாயைப் பார்க்கையில் தோன்றுகிறது. Happy Birthday Mullai.


ஜாலி பார்ட்டியான இவருக்குள் இருக்கும் ஆன்மீகத் தேடல் வியக்க வைக்கிறது. ஃபேஷன் டிசைனிங், மார்டன் லைஃபிற்கு நடுவே அவசியமான ஆன்மீக விஷயங்களை அலசுகிறார் இவர். பல சமஸ்கிருதக் கதைகளையும், நிகழ்வுகளையும் தமிழில் மொழிபெயர்த்து நம் அறிவில் ஏறுமாறு தரும் இவரைப் பார்த்தால் பெருமையாய் உள்ளது.


நெகிழ்த்தும் சிறுகதைகளுக்கு சொந்தக்காரர் இவர். இவரின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து, மிகவும் கவனிக்கப்பட்டுத் தீட்டப்பட்டிருக்கும். பல நேரங்களில் நம் மனம் கனத்துப் போகும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். மாஸ்டர் பீஸ் என்று இவருக்கு மட்டும் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் எழுதும் ஒவ்வொன்றையும் மாஸ்டர் பீஸாக செதுக்குபவர். அகலாக் கண்களுடன் நான் வியக்கும் பெண் இவர்.


எதாவது மனசு சரியில்லையா “திறந்திடு சீசே”ன்னு இவங்க வலைப்பக்கத்தைத் திறந்தால் போதும். அப்படியே அழுதிட்டிருந்த கண்ணு, சிரிச்சு நிறையும். நகைச்சுவை, மொக்கையோ மொக்கை இல்லாமல் இதுவரை இவர் எழுதியதில்லை என நினைக்கிறேன். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் எழுத்திற்கு உரிமையாளர். தொடரட்டும் உங்கள் மொக்கைப் பணி.


இவங்களை சில மாதங்களா தான் பார்க்கிறேன், ஆனால் எல்லா இடத்திலேயும் பார்க்கிறேன். எல்லார் தளங்களிலும் இவர் பின்னூட்டம் இருக்கும். ஊக்கம் கொடுப்பது அதுவும் நாம இருக்கும் அதே தளத்தில் நம்முடன் வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதென்பது நிஜமாவே பெரிய காரியம் தான். தொடர் ஊக்கங்களுக்கு நன்றி சித்ரா, எல்லார் சார்பிலும். இது மட்டுமில்லாம மேடம் வெட்டிப் பேச்சுன்னு தலைப்பு வெச்சிட்டு எவ்ளோ அவசியமான விஷயங்களையும் அலசுறாங்க.


சொட்டும் காதல் வரிகளுக்கு சொந்தமானவர். இவர் வேறென்ன எழுதினாலும் இவரின் காதல் கவிதைகளுக்கு தான் நான் ஃபேன். “சொட்டச் சொட்டக் காதல்”ன்னு சீக்கிரமே புக் போடுங்க ப்ரியா.


என்னை மாதிரி கத்துக்குட்டி சமையல்காரர்களுக்கெல்லாம் குல தெய்வம். என்ன ஈசியா ஒவ்வொரு உணவையும் படங்களோட கத்துத் தர்றாங்க. சமையல்ன்னாலே வெறுப்படையுறவங்க கூட இவங்க சமையல் ரெசிப்பிஸ் பார்த்தா தூள் கிளப்பிடலாம். என் ருசிகரத் தேர்வு இவர்.

இப்படி பல திறமைகளையும் வெச்சுக்கிட்டு, ஆணுக்கு நிகரல்ல அதுக்கு மேலேயே தான்னு சொல்ற இவங்க எல்லாருமே எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க.

Friday, December 11, 2009

நன்றி மக்கா



பத்து நாட்களாகப் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. ஆனாலும், தொடர்ந்து மெயிலனுப்பி விசாரித்த நண்பர்களை எனக்குத் தந்த இந்தப் பதிவுலகிற்கு மிக்க நன்றி.

சுசி அழைத்திருந்த ஒரு தொடர் பதிவு ரொம்ப நாளா பெண்டிங். இன்னிக்கு அதை முடிச்சிடுவோம்.
நான் பதிவெழுத வந்த கதை. (எழுதுற கொடுமை போதாதுன்னு அதை எப்படி எழுத வந்தன்னு கதை வேறவான்னு மனசுக்குள்ள திட்டாதீங்க மக்கா....)

பதிவெழுத நான் ஆரம்பித்தது மார்ச் 2008. நான் தமிழை மிகவும் இழந்த நேரமது. தமிழ்ப் பேச்சு, நண்பர்கள், புத்தகங்கள் என எதுவுமில்லாமல் ஆங்கிலமே தாய் மொழியாகி விடுமே என்ற அச்சம் கொண்ட நேரத்தில் நண்பர் செல்வேந்திரனின் பதிவுகள் படிக்க நேர்ந்தது. அவர் பதிவுகளை பல நாட்களாக வாசித்து வந்த நிலையில், சரி நாமும் எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தின் உருவாக்கமே vigneshwari.blogspot.com. அப்போது தோழியின் காதல் பிரிவு நிகழவே அதை வைத்து எனக்குத் தெரிந்த எளிமையான வார்த்தைக் கோர்வைகளுடன் எழுதப்பட்டதே என் முதல் பதிவு. ஆனால் அதற்குப் பின் இரண்டு மாதங்களுக்கு ஒன்றும் எழுதவில்லை. அப்போதெல்லாம் பதிவுலக வாசிப்பு மிகக் குறைவு.

பின் ஆணிகள் இல்லாத நாளொன்றில் வெட்டியாக ஒரு பதிவை ஜூலையில் எழுதினேன். அதற்குப் பின் வேலை, வெளியூர் பயணம் என தொடர் காரணங்களால் பதிவுலகை மறந்து போனேன். இதற்கு நடுவே திருமணமாகி மொத்த பஞ்சாபியாக மாறிய பின், தமிழை இழந்து விட்ட வேதனை அதிகமாகியது. அப்போது தான் நிறைய நண்பர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். எப்படியெல்லாம் எழுதலாமென்ற ஐடியா கிடைத்தது. எழுத ஆரம்பித்து என்னவெல்லாமோ கிறுக்கித் தள்ளினேன். என்னாலே சகிக்க முடியாமல் போன போது அதை மாற்ற முயற்சித்தேன்.

இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதக் கற்று, எல்லாரும் இருநூறு, ஐநூறு என போய்க் கொண்டிருக்க நான் ஐம்பது பதிவுகள் மட்டுமே ஒப்பேத்தியுள்ளேன்.

எழுத ஆரம்பித்தது தமிழைத் தக்க வைக்க மட்டுமே. ஆனால், பதிவுலகம் எனக்குப் பல விலைமதிக்க முடியாத நண்பர்களைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கவுமில்லை. இப்போது பல நாடுகளில், பல மாநிலங்களில், பல ஊர்களிலிருந்து நட்புகள் இந்தப் பதிவுலகத்தின் மூலம் கிடைத்துள்ளன. அந்த நட்புகளின் பாராட்டுகளாலும், விமர்சங்னகளாலும் தான் இன்னும் எழுதும் ஆர்வம் குறையாமல் போய்க் கொண்டுள்ளது. ஆனாலும், எழுத நேரம் தான் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் எனது மொக்கைப் பணியை செவ்வனே செய்து வருகிறேன்.
(இதை நீ சொல்லித் தான் தெரியனுமா...) நண்பர்களும் தவறாமல் பின்னூடங்களில் ஊக்கமளித்து வருகிறீர்கள், திட்டுகிறீர்கள், பாராட்டுகிறீர்கள். அதுவே நல்ல எழுத்தை என்னிலிருந்து இன்னும் கொண்டு வரும் என நம்புகிறேன். (விதி வலியது)

பதிவுலகம் பற்றி எழுதும் இந்த நேரத்தை மிக நெகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நண்பர்களின் அங்கீகாரங்கள் பின்னூட்டங்களாகவும், தொடர் பதிவுகளாகவும், மின் மடல்களாகவும், விருதுகளாகவும் என்னை வந்து சேர்ந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நன்றி மக்கா.

சுசி - என் வரலாறு உங்க அளவுக்கு இல்லைங்க. நான் எப்போவுமே வரலாறுல வீக். இப்போ இந்த வரலாறைத் தொடர நான் அழைப்பது Scribblings வித்யா.
மோகன் குமார் - தனிப் பதிவெழுதி என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
கோபிநாத் - விருதுகளுக்கு நன்றி கோபி. வாங்கின விருதை இவர்களுக்கெல்லாம் அளிக்கிறேன்.

ஏற்கனவே வாங்கியிருந்தாலும் பரவாயில்ல. இன்னொன்னும் சேர்த்து வெச்சுக்கோங்க.

சுசி - மின்னும் நகைச்சுவைக்காக.
நேசமித்திரன் - நிறைய யோசிக்க வைப்பதற்காக.
குறும்பன் - குறும்பு தெறிக்கும் எழுத்திற்காக.

மறுபடியும் நன்றி மக்கா.
அடுத்த வாரம் திருப்பூரிலிருந்து சந்திக்கிறேன்.

Monday, November 9, 2009

நானும் எழுதிட்டேன்

போன வாரம் முழுக்க பதிவுலகின் முக்கியப் பதிவாக இருந்த "பிடித்தது, பிடிக்காதது" இந்த வாரம் எனக்கும். ஐந்து அதி முக்கிய நண்பர்கள் அழைத்திருக்கும் காரணத்தால் இதோ எனது "பிடித்ததும், பிடிக்காததும்"

அழைத்த நண்பர்கள் ராஜன், நாஸியா, அம்மிணி, ரோமியோபாய், பா.ராஜாராம் - அனைவருக்கும் என் நன்றிகள்.

எல்லாரும் போட்ட மாதிரியே நாமளும் போட்டாச்சு விதிகள்.

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுக்குள்ள இல்ல, பிடிச்சவங்க மட்டும் தமிழ்நாட்டுலே இருக்கனுமா...)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் (இது வேறவா.... இன்னும் யாராவது மிச்சம் இருக்காங்க இதை எழுதாம...)

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். (பிரபலமாக்கிடலாம்) அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். (இது தப்பில்லையோ...)

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். (தாண்டாது.... தாண்டாது.)

5. நீங்கள் குறிப்பிடும் பிரபலம் உயிருடன் இருக்க வேண்டும். (மறைந்த சாதனையாளர்களை மறத்தல் தகுமோ...)

இப்போ கேள்விகளுக்குள்.

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் : தமிழ்நாட்டுக்குள்ள யாருமில்ல.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும்.

2.எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன். (பலருக்கும் பிடிக்காதவரெனினும் காதலை அவர் சொல்லும் அழகுக்காகப் பிடிக்கும்)
பிடிக்காதவர்: முன்னாடி தேவியின் நாவல் புத்தகம் ஒன்னு வரும். (இப்போ வருதான்னு தெரியல.) அதுல எழுதுறதா சொல்லுற எல்லோரையும்.

3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து. (அவரின் வைர வரிகளுக்காக.)
பிடிக்காதவர்: வாலி

4.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம், ராதா மோகன்
பிடிக்காதவர்: சேரன்

5.நடிகர்
பிடித்தவர் : கமலஹாசன்
பிடிக்காதவர்: பரத்

6.நடிகை
பிடித்தவர் : பாவனா
பிடிக்காதவர்: தமனா

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர்: தேவிஸ்ரீ பிரசாத்

8. நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர்: வெண்ணிற ஆடை மூர்த்தி

9. வில்லன் நடிகர்
பிடித்தவர் : ரகுவரன் (ஐயோ அவர் இப்போ இல்லையா....), பிரகாஷ் ராஜ்.
பிடிக்காதவர்: ஆஷிஷ் வித்யார்த்தி. (உங்களுக்கு நடிப்பே வரல. இதுல வில்லத் தனம் வேறையா.... ஐயோ, ஐயோ...)


அப்படியே நம்மையும் மதிச்சு விருது குடுத்த விதூஷ் வித்யாவிற்கு நன்றிகளும்.




அப்படியே இந்த தொடரை கண்டின்யூ பண்ண நண்பர் செல்வேந்திரனையும், தோழி விதூஷ் வித்யாவையும் அழைக்கிறேன்.

Wednesday, October 14, 2009

நன்றி நண்பர்களே

சில வேலைகளின் காரணமாக நாற்பது நாட்கள் ப்ரேக்கிற்குப் பின் போன வாரம் தான் எழுத வந்தேன். இதற்காக மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்த நண்பர்களே, முடிந்தது உங்கள் மகிழ்ச்சி. இனி வாரத்திற்கு ஒரு போஸ்டாவது எழுத வேண்டும் என நினைத்துள்ளேன். முடிகிறதா எனப் பார்ப்போம்.

இடைப்பட்ட நேரத்தில் எனக்கு விருது கொடுத்து மகிழ்ச்சிப்படுத்திய சுரேஷ் மற்றும் இயற்கை ராஜிக்கும், தொடர் பதிவிற்கு அழைத்த அரங்கப் பெருமாள் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கு Sorry.

சுவாரசியப் பதிவர் விருதிற்கு நன்றி சுரேஷ். நீங்களும் சுவாரசியப் பதிவர் என்பதால் என் சார்பாக இந்த விருது உங்களுக்கும்
.

நட்பு விருதிற்கு நன்றி இயற்கை ராஜி. இந்த விருதை உங்களைத் தவிர வேறு யாருக்குத் தந்தால் தகும். அதனால் என்னிடமிருந்து உங்களுக்கும்.

அரங்கப் பெருமாள் அவர்கள் அழைத்த தொடர்பதிவு.
உங்கள் விதிகளை மீறுவதற்காக மன்னிக்கவும். அதிக நாட்களாகி விட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.

1. அன்புக்குரியவர்கள் : பழகிய அனைவரும்.
2. ஆசைக்குரியவர் : எப்போதும் என்னவர்.
3. இலவசமாய் கிடைப்பது : எதுவுமேயில்லை.
4. ஈதலில் சிறந்தது : கல்வி.
5. உலகத்தில் பயப்படுவது : என்னைத் தவிர யாருக்குமில்லை.
6. ஊமை கண்ட கனவு : ஊமை ப்ளாக்கராக இருந்தால் கனவை ஊருக்கே சொல்லலாம்.
7. எப்போதும் உடனிருப்பது : புன்னகை.
8. ஏன் இந்த பதிவு : அரங்கப் பெருமாள் அழைத்ததால்.
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயில்லா வாழ்வு.
10. ஒரு ரகசியம் : அப்படி எதுவும் என்னிடமில்லை.
11. ஓசையில் பிடித்தது : புல்லாங்குழல் இசை.
12. ஔவை மொழி ஒன்று : பிச்சை புகினும் கற்கை நன்றே.
13. அஃறிணையில் பிடித்தது : அவசியமான அனைத்தும்.



1. A – Available/Single? : Married and Available only for Mr. 'Y'.
2. B – Best friend? : My Diary.
3. C – Cake or Pie? : Cake.
4. D – Drink of choice? : Cappuccino.
5. E – Essential item you use every day? : Tooth Brush.
6. F – Favorite color? : Pink.
7. G – Gummy Bears Or Worms? : Nothing.
8. H – Hometown? : Srivilliputtur.
9. J – January or February? : Of course, January. Because of my arrival to this great world.
10. K – Kids & their names? : Only me as of now. :)
11. L – Life is incomplete without? : Friends and Feelings.
12. M – Marriage date? 06 September.
13. N – Number of siblings? 1 Sweet sister.
14. O – Oranges or Apples? Apples.
15. P – Phobias/Fears? Technophobia.
16. Q – Quote for today? : Everyday is blessed. Enjoy it.
17. R – Reason to smile? : Always smile to others without any reason to make the day light and sweet.
18. S – Season? : Winter.
19. T – Tag 4 People? : Sorry Aranga Perumal Sir.
20. U – Unknown fact about me? : Who knows it??
21. V – Vegetable you don't like? : Nothing came to mind.
22. W – Worst habit? : Nothing as such.
23. X – X-rays you've had? : Don't remember exactly.
24. Y – Your favorite food? : Anything edible (Preferably Vegetarian).

I & Z ஏன் மிஸ் பண்ணிட்டீங்க சார்..