சலித்துக் கொண்டே உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளிடம்
“வெறும் 15 நாள் தானா..
அங்கேயே ஒரு பையனாப் பாத்து செட்டிலாகிடேன்.
நான் நிம்மதியாயிருப்பேன்”
என்றாள் அறைத் தோழி.
“ச்சீ, மீசையில்லாத பையனை சைட்டடிக்க கூட மாட்டேன்”
டெல்லி வந்தாயிற்று.
“இந்த சௌத் இண்டியன்ஸ் எப்போவுமே
குளிக்காதவங்க மாதிரியே இருக்காங்களே ஏன்..”
அப்பாவியாய் அவர் கேட்கையில்
கோபத்தை மீறி சிரிப்பும் வந்தது.
வாழ்வின் சுழலில், சூழலில் காதல் கொண்டு
மனவயப்பட்ட காதல் மணவறை சென்று
இன்றோடு இரு வருடங்கள்
இனிதாய் நிறைவடைகின்றன.
அதிகாலைத் துயிலெழ விருப்பம் எனக்கு.
9 மணி அலாரத்தை 10 முறை அணைத்து எழுகிறாய் நீ.
காலையில் பழங்கள் மட்டுமே உணவாக நான்.
“பரோட்டா எங்கே?” - இது நீ.
சுஜாதா, வண்ணதாசன், லா.சா.ரா.,
பெரியார், வைரமுத்து, பாஸ்கர் சக்தி,
தமிழினி, கல்குதிரை, ஆனந்த விகடன்
என எதாயிருந்தாலும் குறைந்தது
ஒரு மாதம் வாசிக்கிறேன்.
சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம்,
டேன் ப்ரௌன், ஜெஃப்ரி ஆர்சர்,
அகதா க்ரிஸ்டி, ஸ்டீக் லார்சன் என
யாவரின் எழுத்தையும் அதிகப்படியாக
இரண்டு நாட்களில் வாசித்து முடிக்கிறாய்.
எப்போதும் பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன் நான்.
பாடல்கள் எதுக்கு ஒரு படத்திலென
திரைப்படங்களை மட்டுமே விரும்புகிறாய் நீ.
என் உடைகளை நானே தீர்மானிக்கிறேன்.
உன் உடைகளை ஒரு போதும் நீ தீர்மானிப்பதில்லை.
“ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு அடை பண்ணட்டுமா?” கேட்கிறேன்.
“குல்சா பண்ணியும் ரொம்ப நாளாச்சுல்ல?” பதிலளிக்கிறாய்.
மனிதர்களை மறந்து வேலையில் மூழ்கிப் போகிறாய்.
எல்லா வேலைகளிலும் மனிதர்களைச் சுற்றியே வாழ்கிறேன் நான்.
வெகேஷனுக்கு மனாலி போகலாமென்கிறாய்.
அம்மா வீட்டிற்குப் போகலாமென்கிறேன் நான்.
செடிகளைத் தடவித் தழுவி வளர்க்கிறேன் நான்.
செயற்கைப் பூக்களை வீடெங்கும் வைத்து அழகு பார்க்கிறாய் நீ.
பெட் ரூமுக்கு பெயிண்ட்
பிங்க் கலர்?
ம், சன்செட் ஆரஞ்ச்?
இருவரின் எண்ணமும் வண்ணங்களாக.
“காஃபி தரட்டுமாப்பா”
“டீ கொடேண்டா”
ஹிந்தி படம் போவோம்ங்க.
ஆங்கிலப் படம் போகலாமே.
ஷாஹித் கபூர் அழகென்கையில்
ஆமோதித்து செல்லமாய் முறைக்கிறாய்.
சாலையில் அழகாய்ப் பெண் போனால்
உன்னை அழைத்துக் காண்பிப்பதை
விரும்புகிறேன் நான்.
“ஏதாச்சும் எழுதட்டுமா...”
“ என் கூட கொஞ்சம் நேரம் உட்காறேன்”
வெவ்வேறு திசைகள்,
இரு வேறு எண்ணங்கள்,
எதிரெதிர் ரசனைகள்,
வித்தியாச வண்ணங்கள்...
எல்லாமே ஒருமிக்கிறது
காதலென்னும் புள்ளியில்.
எந்த ஊடலுமின்றி
மனக்கசப்புமின்றி
அழகாய்
அமைதியாய்
சீராய்
ரசனையாய் பயணிக்கிறோம்
வாழ்க்கைப் படகில்.
உன் ரசனைகளை
உன்னுடன் சேர்த்து
நான் ரசித்தவாறும்
என் தினசரியை
எப்போதும் நீ பாராட்டியவாறும்.
வாழ்க்கை வரமெனக்கு.

