
அழகான மாலைப் பொழுதில் கடற்கரையில் சந்திப்பாதாய் முடிவு செய்தோம். மற்ற நாட்களை விட அன்று உனக்குப் பிடித்த உடையில் நானும், எனக்குப் பிடித்த உடையில் நீயும். (நீ எது அணிந்திருந்தாலும் எனக்குப் பிடிக்கும் தானே.)
முதன் முறை உன்னுடன் பைக்கில். நகரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்க, எல்லாமே நின்று போனதாய் எனக்கு மட்டும். உன் நெருக்கத்தை உணர்ந்த தருணமது. சில நிமிடங்களில் கடற்கரை. சில்லென்ற காற்று கேசம் கலைக்க, சிலையாய் நின்று நான் உன்னை ரசிக்க ரம்மியமான மாலை அது.
ஏதோ கடற்கரை மணலில் நடை பழகுவது போல கால்களை மணலுக்குள் புதைத்து முழித்து நான் நிற்க, என் செல்லக் குறும்பைப் புரிந்தவனாய் உன் கைகள் கொடுத்தாய். அதன் பின் மலர்கள் மீது நடப்பது போன்றிருந்தும், முட்கள் மேல் நடப்பது போல் நான் சிரமப்பட உன் பிடிமானம் இறுகியது என் கைகளில். கடல் இன்னும் தூரத்தில் இருக்கக் கூடாதா என் ஏங்கியது மனது.
லேசானத் தூறலுக்கு எழுந்து ஓடும் சிலர், தூறல் விழுவதே தெரியாமல் காதலில் விழுந்திருக்கும் பலர் இருக்கும் கடற்கரையில் அலைகளுக்கு சில அடிகள் தூரத்தில் அமர்ந்தோம். மயக்கும் உன் சட்டை வாசம், அந்த வாசனையை உணரும் நெருக்கம், நமக்குத் துணையாய் முழு நிலவு, என் அண்மைக்குப் போட்டியாய் உன்னைத் தொட ஆர்ப்பரிக்கும் அலைகள், அவற்றைப் பெருமிதப் பார்வையுடன் பார்க்கும் நான், என்னை ரசித்து என் வெட்கம் தின்னும் உன் கண்கள், வேறெந்த நேரம் அமைய முடியும் இதை விட ரசனையாய்!
ஏதோ முக்கியக் கருத்தரங்கின் நாயகன் போல பேசிக் கொண்டே....... போகிறாய். கடல், அலை, நிலா, காற்று, மேகம், வைரமுத்து, காதல், கமலஹாசன் என முடிவற்றுப் போகின்றது என்னை மயக்கும் உன் நீண்ட உரையாடல். "போதும்டா, நிறுத்து. எப்படி இப்படி வாய் வலிக்காம பேசுற! நீ பேசுறதைப் பார்த்தே எனக்கு தாகமெடுக்குது" என்று நடுவே நான் சொன்னதை நீ மதித்ததாகவே தெரியவில்லை.
"உனக்கான வெளி மிகப் பெரியது, வான் போல. அதில் எனக்கான இடம் சிறு விண்மீனது" என்றேன். "விண்மீன்கள் வானில் பலவுண்டு. நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்" என்றாய். என்ன சொல்ல எனத் தெரியாமல் "காஃபி?" என்றேன்.
பதிலாய் நீ சிரிப்பை உதிர்க்க காஃபி ஷாப் நோக்கிச் சென்றன இரு ஜோடிக் கால்களும். வரும் போது கைபிடிக்கத் தயங்கிய உன் கைகளில் ஒன்று என் இடையிலும், மற்றொன்று எனது கைகளுக்குள்ளும். கடற்கரை மணல் ஒன்று விடாது அனைத்திலும் நம் பாதம் பதிய நடை பயின்றோம். ஒன்றரை மணி நேர நடை ஒரு சில வினாடிகளாக உருக, மீதி நேரம் காஃபி ஷாப்பிற்குள்.
சுற்றிலும் காற்றும், கடலும் மட்டுமே இருந்த வெளியை விட்டு வெளிவந்தோம். அதாவது காஃபி ஷாப்பின் உள்ளே வந்தோம். என்ன வேண்டுமென்பது போல் நான் பார்க்க, நீதான் என்பது போல் நீயும் பார்க்க, "What would you like to have mam?" என்றவனை சிரித்தபடி முறைத்துக் கொண்டிருந்தாய். ஐரிஷ் காஃபி என்று முடிவானதும்தான் நகர்ந்தான் அவன்.
பேசிப்பேசியே கடற்கரையில் கடந்த நேரம், இங்கு பேசாமலே போனது. அடுத்தடுத்து அமர்ந்திருந்ததால் முகம் பார்க்க முடியாமல் போனதாய் சொன்னாய். இங்கே முகம் மட்டுமே பார்த்தபடி இருக்கிறோம். "முகம் பார்த்தபடி பேச எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க எத்தனித்த நேரம் ஐரிஷ் காஃபி வந்தது. காதலால் கரைந்த நாம் காஃபியிலும் கரைந்தோம். "சர்க்கரை போடவில்லையோ.." என்றாய். கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.
