Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, February 14, 2011

குட்லக் பாய்ஸ்!!!


காதல்ல விழுந்திருக்குற குடிமகனா நீங்கள்... ஆமான்னா இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். காதல்ங்குறது ஒரு அழகான விஷயம், அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. எப்போ அழகாகும், எப்போது ஆபத்தாகும்ன்னே சொல்ல முடியாது. இந்தக் காதல்ல இருக்குறவங்க எப்போ பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா அலையுறாங்களே அப்படி என்ன தான் பேசுவாங்கன்னு நம்ம காதைத் தீட்டி ஒட்டுக் கேட்டோம்ன்னா பெரும்பாலும் “ம்” தான் இருக்கும். ரெண்டு பேரும் மாறி மாறி “ம்” கொட்டிப்பாங்க. அடிக்கடி “வேற” அப்படிம்பாங்க. அப்படின்னா பேச ஒண்ணுமில்லை ஃபோனை வைப்பாங்கன்னு அர்த்தமில்லை. பேச ஒண்ணுமே இல்லைன்னாலும் பேசுறதுல ரொம்ப சிரத்தையா உலகத்தையே மறந்து பேசிக்கிட்டிருக்குற இவங்களைப் பார்த்தா வினோதமா இருக்கும்.


காதலனோ காதலியோ எதை, எப்படிப் பேசணும், எதைப் பேசக் கூடாதுன்னு விதிகள் உண்டு. பெரும்பாலும் இந்த விதிகள் கடைபிடிக்க வேண்டியது காதலன் தான். காதலிகளுக்குப் பெரிசா கஷ்டமான விதிகளெல்லாம் இல்லை. காதலன் கடைபிடிக்க வேண்டிய காதல் விதிகள் இங்கே.


1. நீங்க எந்த முக்கியமான வேலைல இருந்தாலும் உங்க காதலியின் அழைப்பை எடுக்காம விட்டுடாதீங்க. ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங்ல இருந்தாலும் கூட எடுத்து ஒரு ஹலோ சொல்லிட்டுப் பையில் போட்டுக்கோங்க. அடுத்து நீங்க லைன்ல இருக்கீங்களா, இல்லையாங்குற கவலையே இல்லாம அவங்க பாட்டு ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருப்பாங்க.


2. காதலி கூட எப்போவாச்சும் சண்டை போட்டா தப்பு அவங்க மேலவே இருந்தாலும் நீங்களே குற்றவாளியாகி ஸாரி சொல்லிடுங்க. “நீ செஞ்சது தப்பும்மா”ன்னு வாய் தவறிக் கூட சொல்லிடாதீங்க. அப்புறம் உங்களுக்கு உப்புமா கூட கிடைக்காது.


3. காதலிக்கு ஏதாச்சும் சோகமா.. பூக்கொத்துகளுடன் போய்ப் பாருங்க. அவங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு கால் உடைஞ்சு போய்ட்டாலோ , அவங்க பரீட்சையில் ஃபெயிலாகிட்டலோ அல்லது அலுவலகத்துல யார்கிட்டேயாவது டோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டாலோ கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு கையில் வெள்ளை மலர்க்கொத்துடன் போய் ஃபீலிங் குடுங்க. அந்த நேரத்துல நீங்க காதலிக்காகக் கண்ணீர் விடலைன்னா, அப்புறம் வாழ்நாள் முழுக்க வருத்தப்பட வேண்டியிருக்கும்.


4. உங்க காதலியோட எப்போ வெளில போனாலும் அவங்க கைல இருக்குற பெரிய பேகை நம்பிப் போகாதீங்க. அதுல பணம் தவிர எல்லாக் குப்பையும் இருக்கும். ஆனாலும் அவங்க எல்லாத்துக்கும் தானே பே பண்ற மாதிரி சீன் போடுவாங்க. ம்ஹூம், 2 ரூபாய் ஹேர்ப்பின்ல இருந்து 2000 ரூபாய் டெட்டி பியர் வரைக்கும் நீங்களே தான் செலவு பண்ணனும். பண்ணுங்க. எல்லாத்தையும் மொத்தமா அவங்கப்பா கிட்ட பின்னாடி வாங்கிக்கலாம் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா.


5. காதலியை வெளில சாப்பிடக் கூட்டிட்டுப் போய் நீங்க வயிறு நிறைய சாப்பிட்டு ஏப்பம் விடாதீங்க. அப்புறம் அம்மணி உங்ககிட்ட இருந்து ஆறடி தள்ளிப் போயிடும்.


6. முடியும் போதெல்லாம் “ஐ லவ் யூ” சொல்லுங்க. பல நாட்கள் இது மட்டுமே பேச்சா ஓடலாம். உங்களுக்கு சொல்ல போரடிச்சா ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டு அவங்க ஃபோன் பண்ணும் போது போட்டு விட்டுடுங்க. அந்த ஒரே டயலாக் கேட்டே அவங்க மனசு குளிர்ந்துரும்.


7. எப்போவுமே உங்க குடும்பத்தைப் பத்திப் பேசாதீங்க. அவ்ளோ தான். இப்போவே மாமியார் துவேஷம், நாத்தனார் கடுப்பெல்லாம் ஆரம்பமாகிடும். ஆனா அவங்க குடும்பத்தைப் பத்தி அவங்க சொல்லும் போது பொறுமையா கேளுங்க. முடிஞ்சா அவங்க கையைப் பிடிச்சுகிட்டோ இல்லைன்னா தலையைத் தடவிட்டோ கேளுங்க. அப்பப்போ ஒரு “ம்” மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.


8. அவங்க என்ன ட்ரெஸ் போட்டிருந்தாலும், என்ன மேக்கப் போட்டிருந்தாலும் “வாவ்”ன்னு ஒரு வார்த்தை சொல்ல மறக்காதீங்க. உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கூட. ஆனா உங்க ட்ரெஸ் நல்லா இல்லைன்னு அவங்க சொன்னா அதை ஏத்துக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்கு ரசனை அதிகமாம்.


9. வீட்ல யார் யாரோ சமைச்சதைக் கொண்டு வந்து தானே சமைச்சதா சொல்லி உங்களுக்கு ஊட்டி விடுவாங்க. அப்போவே அந்த நல்ல சாப்பாடை அனுபவிச்சுக்கோங்க. கல்யாணத்துக்கப்புறம் தவறிக் கூட சமையலறை பக்கம் போக மாட்டாங்க. போனாலும் நீங்களே வேண்டாம்ன்னு தடுக்குற அளவுக்கு டெரரா சமைப்பாங்க.


10. அவங்க சொல்றதுல / செய்றதுல பெரும்பாலான விஷயங்கள் புரியாது. ஆனாலும் புரிஞ்ச மாதிரி மேனேஜ் பண்ணக் கத்துக்கோங்க. உதாரணத்துக்கு நிறங்களைப் பத்தி சொல்லும் போது இலைப் பச்சை, யானைக் கருப்பு, ரத்த சிவப்பு இப்படியெல்லாம் சொல்லுவாங்க. அதுக்காக போய் ஏகப்பட்ட இலை இருக்கு எந்த இலைன்னோ, ரத்தம் வரும் போது இருக்குற சிவப்பா, உறைஞ்சதுக்கப்புறம் இருக்குற சிவப்பான்னெல்லாம் கேக்கக் கூடாது. அதே மாதிரி கடை கடையா ஒரு நாள் முழுக்க அவங்க கூட உங்களை அலைய விட்டுட்டு கடைசில அம்பது பைசாவுக்கு ஒரு ஊக்கு வாங்கிட்டு வருவாங்க. அதுக்காக கடுப்பாகிக் கத்தக் கூடாது. பொறுமை முக்கியம் நண்பர்களே.


11. எல்லா மொழிலேயும் இருக்குற கொஞ்சுற வார்த்தைகளாக் கத்துக்கோங்க. அட, என்ன மொழின்னு தெரியலைன்னா கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சலா இருக்கணும் இப்படி செல்லம், சுச்சூ, புஜ்ஜூ, ப்யாரி, ஸ்வீட்டி, பப்ளி, நுன்னு,....


12. எப்போவும் எங்கேயும் அவங்களை 1 நிமிஷம் கூடக் காக்க வெச்சிடாதீங்க. அன்னிக்கு நாள் முழுக்க அர்ச்சனை வாங்குறதோட பர்ஸ் காலியாகுற அளவுக்கு ஐட்டங்களும் வாங்கிக் குடுக்கணும். ஏன்னா பொண்ணுங்க கெமிஸ்ட்ரி உங்க கூட ஒத்துப் போகுதோ இல்லையோ, தங்கம், வைரம்ன்னு நகைகள் கூட நல்லா ஒத்துப் போகும். ஆனா அவங்களுக்காக நீங்க மணிக்கணக்குல காத்திருக்குறதோட இல்லாம அதை ஒரு தடவை கூட சொல்லிக் காட்டிடாதீங்க.


இத்தனையையும் வெற்றிகரமா சமாளிச்சுட்டீங்க, நீங்க க்ரேட் தான். கண்ணாடி முன்னாடி போய் நின்னு தோளைத் தட்டி சபாஷ் சொல்லிக்கோங்க. ஏன்னா பொண்ணுங்களுக்காக நீங்க இவ்ளோ செஞ்சதுக்கப்புறமும் கூட அவங்க உங்களைப் பாராட்ட மாட்டாங்க. நீங்க செய்யாம விட்ட தம்மாத்துண்டு பாயிண்ட்டைப் பிடிச்சுக்குவாங்க. பீ கேர்ஃபுல் அண்ட் குட் லக் (!) பாய்ஸ்.

(இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேக்கறவங்க பலக் காதலிகள் வைத்துத் துன்புற!)

Tuesday, March 9, 2010

உறைந்திருக்கும் வசந்தம்


எனது காதலையெல்லாம்
காகிதத்தின்
ஒற்றைப் பக்கத்தில்
கவிதையாக்க முயற்சித்த
காலங்கள்

பயணங்களின் போதும்
கைப்பிடித்து
தோள் சாய்ந்து உறங்கிய
பிரியாத நெருக்கங்கள்

பொய்யாய் எனக்கு வந்த
வயிற்று வலிக்கெல்லாம்
நீ எடுத்த விடுப்புகள்

அலுவல்கள் அதிகமென்றாலும்
தவறாமல் உன்னிடமிருந்து வந்த
அலைபேசி அழைப்புகள்

நீ கொடுத்த
பரிசுப் பொருட்களைச் சுற்றி வந்த
காகிதத்தைக் கூடக்
கசங்காமல் மடித்து வைத்து
சேமித்து வைத்த காலங்கள்

உன் பெயர்
எழுதியெழுதியே
மை தீர்ந்த பேனாக்கள்

எல்லாம் அடங்கிவிட்டன
இந்த ஐந்து வருடத் திருமண வாழ்வில்

உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!


நான் கிறுக்குறது பத்தாதுன்னு கிறுக்க ஆர்வமிருக்குற எல்லாரையும் ஊக்குவிச்சுட்டு இருக்கேன். ஆயிரம் பேரை மண்டை காய விட்டாத் தான் அரைக் கவிஞர் ஆக முடியும். (ப்ளாக் மொழி) மேலே உள்ள வரிகள் என் தோழியொருத்தியின் முயற்சி, உங்கள் கருத்துகளுக்காக இங்கே.

Monday, February 15, 2010

காதலைக் கொண்டாடுங்கள்


காதலர் தினம். ஊரே கொண்டாடி ஓய்ந்து விட்டது. நேற்றும் முந்தின நாளும் டெல்லி மற்றும் பெரும்பாலான வடக்கிந்திய நகரங்களில் பொக்கே வியாபாரம் களை கட்டி விட்டது. ஐம்பது ரூபாய்க்கு ஒற்றை ரோஜா என ஆரம்பித்து பத்தாயிரம் வரை பொக்கேக்கள் குவிந்துள்ளன. இதற்கு மேலும் அதிக விலையில் வேண்டுமெனில், ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரப் பலகை வேறு. பூவிற்கே இவ்வளவு விலையா என 'ஆ'வென நாம் பார்த்திருக்கும் வேளையில், "உன் மென்மையைப் பூவைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும்" என டயலாக்குகளை அள்ளி விட்ட படி இளைஞர் பட்டாளம் அப்பாவின் கருப்புப் பணத்தை இப்படி பூவில் செலவழித்து வாட வைத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தியா வழக்கம் போல் பிச்சைக்காரர்களின் நாடாக மாறி வருகிறது.

சரி நாம இந்த காதலுக்கு வருவோம். ஒரு நாள் கொண்டாடி, பரிசுகள் வழங்கி, முத்தமிட்டு, மொத்தமும் பகிர்ந்து முடிந்து விடுவது தான் காதலா.... காதல் என்பது சிரிப்பு, அழுகை, கோபம், நேசம், துக்கம் போன்றதொரு உணர்ச்சி என சொல்லலாமா... அல்லது இவையெல்லாம் கலந்த கலவை எனக் கொள்ளலாமா... அவ்வளவு தானே. காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது.

ஆடம்பர டிஸ்கோக்கள், அளவுக்கதிகமான சாப்பட்டு வகைகள், அதிக விலைப் பயணங்கள், அடுத்த நாள் தூக்கியெறியப்படும் மலர்க் கொத்துக்கள், என்றோ உடைந்து போகும் பரிசுப் பொருள்கள் இவைகளில் இல்லை காதல்.

கல்லூரி நாட்களில் தோழிகளிடம் காதலர் தினம் பற்றிய பேச்சு வந்துள்ளது. முதல் முத்தம், ஒரு டைரிக் கவிதைகள், கட்டித் தூங்க ஒரு டெட்டி பியர், நாட்குறிப்பில் புதைத்து வைக்க ஒற்றை ரோஜா எனக் காதலர்கள் சேமித்த யாவும் ஏதேனும் ஒரு தோழியிடம் பத்திரமாய் ஒளித்து வைக்கப்பட்டு (முத்தம் தவிர ;) ), மனதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள காதலுடன் மணவறை ஏறிய கதைகள் ஆயிரம். காதலின் முடிவு திருமணம் என்றில்லை. ஒவ்வொரு காதல் வெற்றியைப் போலவே கொண்டாடப்பட வேண்டியது காதல் தோல்வியும். அந்தக் காதல் தோல்வியும் இனிமையாய் இருந்தால் தானே இனிக்கும். ஒரு காலத்தில் உயிராய் இருந்த இருவர் சில வருடங்கள் கழித்துக் கண்டும் காணாமல் முறைத்துப் போவது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. காதலித்ததை ஒரு போதும் தவறென குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

காதலிக்கத் துணிவிருந்தது போல் அதை பெற்றோரிடம் சொல்லவும் துணிவிருக்கட்டும். காதலை வைத்துக் கல்யாணத்திற்காகப் பிச்சை எடுக்க வேண்டாம். காதல் அழகான விஷயம். அதை அதே அழகுடன் வாழ்நாள் முழுக்கக் கொண்டு செல்லுங்கள். தோழிகளுக்குள் திருமணமான அனைவரும் தங்களது காதலர் தின கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தோழியின் கணவர் அவள் நீண்ட நாளாய் ரிப்பேர் செய்து தர சொல்லிக் கேட்டிருந்த அவளது கேமராவை சரி செய்து பரிசளித்திருக்கிறார். மற்றவர், அன்று முழுவதும் அவளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சமைத்திருக்கிறார். இன்னொமொரு தோழி அவள் கணவர் நீண்ட நாளாக வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்கிப் பரிசளித்தருக்கிறாள். மற்றுமொரு காதல் ஜோடி அவர்களின் காதல் நாட்களில் சென்று வந்த இடங்களுக்கு மறுமுறை சுற்றி வந்திருக்கிறது. ஐம்பதுகளில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் காலாற நடந்து கதை பேசி ஒன்றாக அனைத்து வேலைகளையும் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல.

காதல் என்பது உணர்ந்து அனுபவிக்கப்ப்ட்டு வாழ வேண்டியது. கட்டாயத்தாலோ, பரிசுப் பொருட்களாலோ அல்ல. காதலை உணருங்கள், பகிருங்கள், மூழ்குங்கள். காதலர் தினம் ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 லிருந்து அடுத்த ஃபிப்ரவரி 14 வரை தொடரும் பயணம். ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம், ஒரு நாள் மட்டும் காதலிக்க அல்ல.

நாங்களும் காதலில் பிஸியாக இருந்ததால் ஒரு நாள் லேட் பதிவு. :)

காதலர் தின வாழ்த்துக்கள். காதலைக் கொண்டாடுங்கள் - ஒவ்வொரு நாளும்.

Wednesday, December 2, 2009

பிரெஞ்சு முத்தக் காற்றும் ஐரிஷ் காஃபியும்


அழகான மாலைப் பொழுதில் கடற்கரையில் சந்திப்பாதாய் முடிவு செய்தோம். மற்ற நாட்களை விட அன்று உனக்குப் பிடித்த உடையில் நானும், எனக்குப் பிடித்த உடையில் நீயும். (நீ எது அணிந்திருந்தாலும் எனக்குப் பிடிக்கும் தானே.)

முதன் முறை உன்னுடன் பைக்கில். நகரமே வேகமாக ஓடிக்கொண்டிருக்க, எல்லாமே நின்று போனதாய் எனக்கு மட்டும். உன் நெருக்கத்தை உணர்ந்த தருணமது. சில நிமிடங்களில் கடற்கரை. சில்லென்ற காற்று கேசம் கலைக்க, சிலையாய் நின்று நான் உன்னை ரசிக்க ரம்மியமான மாலை அது.

ஏதோ கடற்கரை மணலில் நடை பழகுவது போல கால்களை மணலுக்குள் புதைத்து முழித்து நான் நிற்க, என் செல்லக் குறும்பைப் புரிந்தவனாய் உன் கைகள் கொடுத்தாய். அதன் பின் மலர்கள் மீது நடப்பது போன்றிருந்தும், முட்கள் மேல் நடப்பது போல் நான் சிரமப்பட உன் பிடிமானம் இறுகியது என் கைகளில். கடல் இன்னும் தூரத்தில் இருக்கக் கூடாதா என் ஏங்கியது மனது.

லேசானத் தூறலுக்கு எழுந்து ஓடும் சிலர், தூறல் விழுவதே தெரியாமல் காதலில் விழுந்திருக்கும் பலர் இருக்கும் கடற்கரையில் அலைகளுக்கு சில அடிகள் தூரத்தில் அமர்ந்தோம். மயக்கும்
உன் சட்டை வாசம், அந்த வாசனையை உணரும் நெருக்கம், நமக்குத் துணையாய் முழு நிலவு, என் அண்மைக்குப் போட்டியாய் உன்னைத் தொட ஆர்ப்பரிக்கும் அலைகள், அவற்றைப் பெருமிதப் பார்வையுடன் பார்க்கும் நான், என்னை ரசித்து என் வெட்கம் தின்னும் உன் கண்கள், வேறெந்த நேரம் அமைய முடியும் இதை விட ரசனையாய்!

ஏதோ முக்கியக் கருத்தரங்கின் நாயகன் போல பேசிக் கொண்டே....... போகிறாய். கடல், அலை, நிலா, காற்று, மேகம், வைரமுத்து, காதல், கமலஹாசன் என
முடிவற்றுப் போகின்றது என்னை மயக்கும் உன் நீண்ட உரையாடல். "போதும்டா, நிறுத்து. எப்படி இப்படி வாய் வலிக்காம பேசுற! நீ பேசுறதைப் பார்த்தே எனக்கு தாகமெடுக்குது" என்று நடுவே நான் சொன்னதை நீ மதித்ததாகவே தெரியவில்லை.

"உனக்கான வெளி மிகப் பெரியது, வான் போல. அதில் எனக்கான இடம் சிறு விண்மீனது" என்றேன். "விண்மீன்கள் வானில் பலவுண்டு. நீ தான் என் வானின் நிலவு. நான் அழகாவது உன்னாலும், நீ ஒளிர்வது என்னாலும்" என்றாய். என்ன சொல்ல எனத் தெரியாமல் "காஃபி?" என்றேன்.

பதிலாய் நீ சிரிப்பை உதிர்க்க காஃபி ஷாப் நோக்கிச் சென்றன இரு ஜோடிக் கால்களும். வரும் போது கைபிடிக்கத் தயங்கிய உன் கைகளில் ஒன்று என் இடையிலும், மற்றொன்று எனது கைகளுக்குள்ளும். கடற்கரை மணல் ஒன்று விடாது அனைத்திலும் நம் பாதம் பதிய நடை பயின்றோம். ஒன்றரை மணி நேர நடை ஒரு சில வினாடிகளாக உருக, மீதி நேரம் காஃபி ஷாப்பிற்குள்.

சுற்றிலும் காற்றும், கடலும் மட்டுமே இருந்த வெளியை விட்டு வெளிவந்தோம். அதாவது காஃபி ஷாப்பின் உள்ளே வந்தோம். என்ன வேண்டுமென்பது போல் நான் பார்க்க, நீதான் என்பது போல் நீயும் பார்க்க, "What would you like to have mam?" என்றவனை சிரித்தபடி முறைத்துக் கொண்டிருந்தாய். ஐரிஷ் காஃபி என்று முடிவானதும்தான் நகர்ந்தான் அவன்.

பேசிப்பேசியே கடற்கரையில் கடந்த நேரம், இங்கு பேசாமலே போனது. அடுத்தடுத்து அமர்ந்திருந்ததால் முகம் பார்க்க முடியாமல் போனதாய் சொன்னாய். இங்கே முகம் மட்டுமே பார்த்தபடி இருக்கிறோம். "முகம் பார்த்தபடி பேச எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க எத்தனித்த நேரம் ஐரிஷ் காஃபி வந்தது. காதலால் கரைந்த நாம் காஃபியிலும் கரைந்தோம். "சர்க்கரை போடவில்லையோ.." என்றாய். கோப்பைகளை இடம் மாற்றி வைத்தேன். இரண்டு பாக்கெட் சர்க்கரை மிச்சமானது.

Thursday, October 29, 2009

காதல் என்னும் முடிவிலி


கோக்
கசட்டா
காஜுகத்லி
கஸ்டர்ட்
எதுவுமே ருசிக்கவில்லை
உன் இதழ் பதித்து
மீதி வைத்த
பாதிக் கோப்பைத்
தண்ணீரை விட.

****************************************************************************************************

உனைப் பற்றி எழுத நினைத்து
உன் பெயரை மட்டுமே எழுதினேன்.
வார்த்தைகள் கூட
நாணத்தோடு
ஓடி ஒளிந்து கொள்கின்றன!

****************************************************************************************************

உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம்.

****************************************************************************************************

சாப்பிடச் சொன்னால்
ஊட்டி விடுகிறாய்.
தூங்கச் சொன்னால்
தூங்க வைக்கிறாய்.
படிக்கச் சொன்னால்
கற்றுத் தருகிறாய்.
பேசாதிரு என்றால்
கதை...யளக்கிறாய்.
காதலிக்கச் சொன்னால்
கிறுக்கித் தள்ளுகிறாய்.
உன்னை வைத்துக் கொண்டு
என்னடா செய்ய...

****************************************************************************************************

"கார் ஓட்டப் பழக வேண்டும்" என்றேன்
"சரி வா சொல்லித் தரேன்" என்றாய்
"நீ இடது பக்கம் உட்கார்ந்தால்
நான் எப்படி சாலை பார்த்து ஓட்டுவேன்"
என்ற என் கேள்விக்கு
என்னை அடிப்பதாய் கை ஓங்கி
அணைத்துக் கொண்டே சொன்னாய்
"நீ மாறவே மாட்டியாடி?"
"நீ என்னை மாற்றி விட்ட பின்
வேறெப்படி மாற நான்?"

****************************************************************************************************

"உன் சட்டை கொடு
நீ இல்லாத நேரங்களில்
எனக்குத் துணையாக"
என்றேன்.
"சட்டைக்குள் நான் இருந்தால்
சம்மதமா"
என்கிறாய்.
"ச்சீ போடா" என்கிறது உதடு
"வேண்டாமென்றா சொல்வேன்"
என்ற மனதின்
குரலை மறைக்க.

****************************************************************************************************

"நான் போறேன்டா."
"பத்திரமா போயிட்டு வாடா "
"கண்டிப்பா போகனுமா"
"ஆமாடா செல்லம்"
"போகப் பிடிக்கலைடா"
"தெரியும் டா"
"நான் உன்னை விட்டுப் போகலடா"
"சரி போகாத."
"இல்ல, போய்த் தான் ஆகணும்."
"ம்ம்"
பிரிதலின் போதான
நமது உரையாடல்கள்
எப்போதும் மாறுவதேயில்லை
நம் காதலைப் போன்றே!

****************************************************************************************************

அழகிய மழைநாளில்
ஒதுங்கிய கூரைக்குக் கீழே
நடுங்கிய கைகளுக்குள்ளே
மூச்சுக் காற்றின் உஷ்ணம்
அதிகரிக்கும் வேளையில்
நடக்கிறது
ஒரு பனிப் போர்
உன் ஆண்மைக்கும்
என் பெண்மைக்கும்.

Friday, October 16, 2009

என் ஆன்ம வெளியில் ஆதர்ச பிம்பமானவன்..


நீ-
என்னில் கவிதையாய் நுழைந்து
காதலாய்க் கலந்தவன்.
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு பொழுதும்
உள்ளுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி.

****************************************************************************************************

இப்படித் தான் பேச வேண்டும்
என்றில்லாமல்
நீ நீயாகப் பேசியதில் தான்
இழந்தேன் என்னை.

****************************************************************************************************
உனக்காக என்ன வாங்க என யோசித்தே
பொழுதைக் கழித்தேன் நான்.
எந்த யோசனையுமின்றி
எனை இறுக அணைத்து
என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.

****************************************************************************************************
உன் காதல்
ஒரு ஆண் பெண்ணிடத்தில் கொள்ளும்
நேசத்தையும் தாண்டி
தாய் சேயை நேசிப்பது போன்ற
எதிர்பார்ப்பற்றது
பரிசுத்தமானது!

****************************************************************************************************

உன் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன்னுடன் பேச நினைக்கிறேன் நான்.
என் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன் கண் மூடி உன்னுள் இருக்கும்
என்னுடன் பேசுகிறாய் நீ

****************************************************************************************************
உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
உன் தோழமையை எனக்கு சொல்லின.
உன் கேச வருடல்
உன் நேசத்தை அறிவித்தது.
உன் அணைப்பு
உன் அன்பைக் காட்டிற்று .
உன் முத்தம்
உன் காதலை மொத்தமாய்த் தந்தது.
வேறென்ன வேண்டுமெனக்கு...

****************************************************************************************************

"இப்படி இருடா... அப்படி பண்ணாதடா..." என்ற
என் தினசரி செல்லக் குறைகளை ஏற்றவாறே
என் நெற்றி முகர்ந்தவன் நீ.
எப்போதும் உனக்காக நான் மாற வேண்டும்
என நீ சொன்னதில்லை.
என் கோபங்கள், சிறு களிப்புகள் என
அனைத்தையும் என்னுடனே
இருந்து ரசிப்பவன் நீ.

இன்று போல் என்றும்
என்னுடன் நீ இருக்க வேண்டும் எனும்
வரம் மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்.
தருவாயா?


Thursday, July 30, 2009

ஆட்கொல்லி விஷம்



நம் முதல் சந்திப்பு
அது ஒரு இனிய மாலை நேரம்.
உன் கையை நான் பிடித்த போது கூட
உனக்கு எதுவும் தோன்றவில்லையா!
நீ சென்ற பிறகே கேட்க முடிந்தது
உன் வாசம் சொல்லும் இதமான அணைப்பு,
நெற்றி நனைக்கும் முத்தம்,
கன்னம் சிவக்கும் தொடுதல்கள்
இவை எதையுமே உன் நினைவாய்
விட்டுச் செல்லவில்லையே ஏன் என்று.
இதற்காக காத்திருக்கும் ஏக்கத்தை
விட்டுச் சென்றது போதாதா என்றாய்.
ஏக்கம் கொடுத்து
என் உயிரை அநியாயத்திற்கு எடுக்கிறாய்.

**************************************

கனவில் உனைக்
காணலாமெனக்
கண்மூடக் கருதினேன்.
என் உறக்கம் கெடுத்து
கண்ணிமைகளிடையே
கள்வா நீ!

**************************************

உன்னை நான் நேசிப்பதை
உன்னிடம் சொல்லவில்லை.
நீ என்னைக் காதலிப்பதை நானறிந்தாலும்
நீ அதை சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை.
காதலை சொல்லாமல் தவிக்கும்
இந்த தவிப்பின் சுகம்
அதை சொல்லி விட்டால் கிடைக்காதே.

**************************************

கண்கள் நோக்கி தவிர்த்த தருணங்கள்
ஒரு கோப்பை காஃபி
சில்லென்ற சாலையில் சில மணி நேர நடை
நீ பாராத நேரத்தில் உன் மீது விழும் நொடிப் பொழுது பார்வைகள்
என் துப்பட்டா வாசம்
உன்னுடனான என் நெருக்கம்
இவை எதுவுமே சொல்லவில்லையா
உன் மீதான என் காதலை!

**************************************

நீ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்
எனக்கு கோபம் வருவதில்லை.
எனக்குத் தெரியும், உன்னால்
அவர்களை பார்க்க முடியும்
என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும்.
இது போதும் எனக்கு
உன் காதலை சொல்ல.

**************************************

உன் பெயரை மட்டுமே
எழுதினேன் காகிதத்தில்.
காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே!

**************************************

ஊரே
உறங்கிவிட்டது.
என்னுள்ளான
உன் நினைவுகளைத் தவிர.