Wednesday, June 23, 2010

யாருக்கு விருது தரணும்...

நேற்று ஒவ்வொரு சேனலாக மாற்றி வரும் போது தமிழ்த் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பார்வை பட்டது. எனக்கென்னவோ எல்லாத் தொடர்களும் பல வகைகளில் ஒன்றுபட்டு இருப்பதாகவே தெரிகிறது. எனக்குத் தெரியும் சில ஒற்றுமைகள். உங்களுக்கு எதுவும் கூடுதலாகத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. கதை ஒரு பெண்ணைச் சுத்தியே நகரும். அந்தப் பெண்ணின் வாழ்வில் பல கஷ்டங்களும், பல அடிகளும் வந்து போகும். எப்போவும் அவரைச் சுற்றியிருக்குறவங்க அவங்களை அழிக்க சதித் திட்டம் தீட்டிட்டே இருப்பாங்க.

2. அவசியம் இன்னொரு பெண் தான் வில்லியாவும் இருப்பாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள சின்னப் புள்ளத் தனமா ஏதாச்சும் வாய்க்கால் சண்டை இருக்கும். அதுக்காக சீரியல்ல 10 வருஷம் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனாலும் கடைசி எபிசோட்ல கடைசி 10 நிமிஷத்துல ஹீரோயினோட வசனம் கேட்டுத் தப்பை உணர்ந்து திருந்திடுவாங்க.

3. கதாநாயகி சூப்பரா சேலைகட்டி, தோள்ல ஒரு ஹேண்ட் பேக் மாட்டிக்கிட்டு, மேக்கப் குறைவா போட்டுகிட்டு, எப்போவுமே அழுது வீங்கின கண்களோடவும் துணிச்சலான முகத்தோடவும் வலம் வருவாங்க. கூடவே நண்பர்ன்னு ஒருத்தர் சோக முகத்துடன் வருவார்.

4. சின்னத்திரை கதாநாயகி ஆகுறதுக்கான தகுதி என்னன்னா, கொஞ்சம் திரைப்படங்கள்ல ஹீரோயினா நடிச்சிட்டு அப்புறம் அக்கா, அண்ணி வாய்ப்புகள் வந்தும் “சினிமால நான் எல்லாப் பக்கங்களையும் பார்த்திட்டேன். இனி வளரும் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பறேன்”னு சும்மாச்சுக்கும் பேட்டி குடுத்திட்டாப் போதும்.

5. சீரியல்ல நடிச்சிட்டிருக்குற பொண்ணோ, பையனோ ஏதாச்சும் உடம்பு முடியாமப் போனாலோ, சொந்த வேலைகள் காரணமா நடிப்பைத் தற்காலிகமா துறக்க வேண்டி வந்தாலோ, அவங்களோட கதாபாத்திரங்கள் கொல்லப்படணும். இதையும் கதைக்கு நடுவுல திடீர்ன்னு கொண்டு வந்து புகுத்தி பார்க்குறவங்களை குழப்படிக்குறதுல கில்லாடிங்க சின்னத்திரை இயக்குனர்கள்.

6. கதாநாயகியைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு இவங்களைத் தவிர வேறொரு மனைவியும் இருக்கணும் அல்லது அவர் கெட்டவரா இருக்கணும். இப்படியெல்லாம் இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு அவங்க அவருக்கு சேவை பண்ணுவாங்க.

7. கண்டிப்பா ஹாஸ்பிட்டல் சீன் இல்லாம எந்த ஒரு சீரியலும் எடுத்ததா சரித்திரமே இல்ல. மாசத்துக்கு ஒரு தடவை யாராச்சும் ஏதாச்சும் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுவாங்க. அதுவும் சாகுற நிலைமைல அட்மிட் ஆனா அது செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல தான் வரும்.

8. குடும்பத்துல இருக்குற யாராச்சும் பேசாம சண்டை போட்டு இருந்தாங்கன்னா, அவங்க கண்டிப்பா ஏதாச்சும் கோவில்ல சந்திச்சுக்குவாங்க. அப்போ பேசவா, வேண்டாமான்னு அவங்க முகத்துல எல்லா ரசமும் சொட்டும்.

9. ஹீரோயினோட அப்பா ரொம்ப நல்லவராவும், பெரும்பாலும் ஏழையாவும் இருப்பார். ஆனா அவரோட சம்பந்தி வீட்டுக்கு மட்டும் அவர் எப்போவுமே ரொம்பத் தப்பானவரா தெரிவார்.

10. வக்கீல், போலிஸ், டாக்டர், அரசியல்வாதி, ரௌடி, காமன் மேன் இப்படி ஹீரோயினுக்கு சம்பந்தமில்லாத, அந்த அம்மணியை முன்னப் பின்னப் பார்த்திருக்காதவங்க கூட அவங்களுக்கு நல்லது செய்யவே நினைப்பாங்க. ஏன்னா அவங்க முகத்துல அப்படி ஒரு நல்லவ அடையாளம் தெரியும். ஆனா எதிரிக்கு மட்டும் அது புரியவே புரியாது.

இப்போ சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதெல்லாம் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா உண்மையில் அதைக் கொடுக்க வேண்டியது பார்வையாளர்களுக்குத் தான். ஏன்னா எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு கதையிலேயும் இருக்குற கதாபாத்திரங்கள், சம்பவங்கள் இதையெல்லாம் நினைவு வெச்சுக்கறதோட இல்லாம, அவங்களுக்காக இவங்க அழுறதும், அவங்க வீட்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, தன் வீட்ல சமைக்காம இருக்குறதும்ன்னு இவங்க செய்ற தியாகங்கள் அதிகம். அதுனால இனி பார்வையாளர் விருதுன்னு ஒண்ணு வந்தே ஆகணும். நீங்க என்ன சொல்றீங்க...

Tuesday, June 22, 2010

டெல்லி டு கோலாப்பூர் - 2

ஏதாவது ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சா அது ஏன் பாதிலேயே விட்டுப் போய்டுது... சரி, மறுபடியும் ஞாபகம் வந்த இந்தத் தொடரை சீக்கிரம் எழுதித் தள்ளிடலாம்.

முதல் பகுதி இங்கே.

கடைசியா எங்கே விட்டோம், ஆங்... கிங் ஃபிஷர்ல ஏறி ஏற்கனவே உக்காந்திருந்த ரெண்டு அங்கிளையும் எழுப்பி ஜன்னலோர சீட்ல துண்டைப் போட்டு உக்காந்தாச்சு. முதல்ல கிங் ஃபிஷர் அக்கா வந்து ஹெட் செட் குடுத்துட்டுப் போச்சு. ஒரு 3 வருஷம் முன்னாடி அவங்க குடுத்ததுக்கும், இப்போ குடுக்குறதுக்கும் தரத்துல உள்ள வித்தியாசம் ரொம்ப மோசம். தவிர, முன்னாடி இருந்த சர்வீஸ், ஹாஸ்பிடாலிட்டி இது எதுவுமே இப்போ இல்லாத மாதிரி இருக்கு.

அடுத்தது சாப்பிட சாம்பார் இட்லி குடுத்தாங்க. நான்-வெஜ் ஆப்ஷனே இல்ல. பாவம் நான்-வெஜ் விரும்பிகள். அதையும் குடுத்த விதம் நம்ம ரெய்ல்வேஸ் மாதிரியே இருந்தது. யூஸ் அண்ட் த்ரோ வகை டப்பாக்களில். ஒரு ஸ்வீட் டிஷ் இல்ல, கூல் ட்ரிங்க்ஸ் இல்ல. அட, சாக்லேட் கூட குடுக்கலைங்க. :( முன்னாடி அவங்க சாப்பாடு லீ மெரிடியன்ல (Le Meridien) இருந்து வரும். இப்போ அவங்களே வெச்சிருக்குற ஹோட்டல்ஸ்ல இருந்து வருது போல. ஆனாலும் டிக்கெட் விலை மட்டும் குறைக்கல. அதே மாதிரி ரொம்ப நல்லா இருந்த இன் ஃப்ளைட் மேகசின் (In Flight Magazine) போய் இப்போ சினிமா க்ளிட்ஸ் புத்தகம் வெச்சிருக்காங்க. அதுல இந்த பாலிவுட் கிசுகிசு தவிர வேறொன்னுமில்லை. “ச்சே”ன்னு அலுப்பாகி, டி.வியும் பார்க்கப் பிடிக்காம தூங்கிட்டேன். ஒரு வழியா புனே வந்தாச்சு. லேண்டிங்ல அநியாய ஜெர்க். காது வலியோட புனேல லேண்ட் ஆகி கார்ல ஏறி உக்காந்தாச்சு. அடுத்து 5 மணி நேர சாலைப் பயணம் கோலாப்பூருக்கு, அதுவும் இண்டிகால.

புனே மட்டுமல்ல மஹாராஷ்டிராவுக்கு என் முதல் பயணம் இது. நல்லா பராக்கு பார்த்துக்கிட்டே போனேன். புனே ஏர்போர்ட் ரொம்பச் சின்னது. நம்ம கோயம்புத்தூர் ஏர்போர்ட் மாதிரி தான் இருக்கு. அதுக்குக் காரணம் பக்கத்துலேயே மும்பை ஏர்போர்ட் இருக்கறதுதானாம். பெரும்பாலும் எல்லாரும் மும்பைல இருந்து பயணிக்கிறாங்க. புனேவின் ரோடுகள் நல்லாவே இருந்தாலும் சாலையில் திணறடிக்கும் போக்குவரத்து நெரிசல். புனேவை விட்டு வெளியேறவே 1 மணி நேரமாச்சு. அப்புறம் பயணித்த வழியெல்லாம் அத்தனை அழகு.

ஒரு மலை வாசஸ்தலம் போவது போன்ற சந்தோஷம். நெளிவான, ஏற்றமான சாலைகள், சாலையின் இருபுறமும் மலையும், மரங்களும். பயணக் களைப்பைத் தூங்கித் தீர்க்க விடாத அழகு. எல்லா ஊர்களிலேயும் மாறாத ஒரு விஷயம், பின் சீட்டில் முகத்தை துப்பட்டாவால் மறைத்து இருவர் ஒருவராய் பைக்கில் பயணிக்கும் காதல் ஜோடிகள். நிச்சயம் புனே காதலர்கள் சுற்றிலும் அழகான இடங்கள் வாய்க்கப் பெற்றவர்கள்.

வாகன ஓட்டுனர் என்னைப் பஞ்சாபி என நினைத்து அங்குள்ள விஷயங்களை தில்லி மற்றும் பஞ்சாபிலிருக்கும் விஷயங்களோடு ஒப்பிட்டுக் கூறிக் கொண்டே வந்தார். அருகிலிருக்கும் இடங்கள், அந்த ஊரின் சிறப்புகள், அங்கு ஸ்பெஷலான உணவு வகைகள், அங்கிருந்த மன்னர்கள் என அடுத்த ஒரு மணி நேரப் பயணம் மிகவும் உபயோகமாய், அந்த இடத்தைப் பற்றி அறியும் வகையில் இருந்தது. பயணங்களில் பேசாமல் அமைதியாய் ரசிப்பது எனக்கு மிகப் பிடித்தம். ஆனாலும் தெரியாத ஊரில் அந்த ஊரின் சிறப்புகளை அங்கிருப்பவரே சொல்லக் கேட்டுப் பயணிப்பது புது அனுபவமாக நன்றாகவே இருந்தது.

ஏற்கனவே அங்கு பயணித்து வந்த என் மேலாளர் என்னிடம் கிட்டத்தட்ட 6 முறை சொல்லியனுப்பியிருந்தார். என்னவா... அங்கிருக்கும் “ஜோஷி வடைவாலா” பற்றி தான். அது நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு மஹாராஷ்ட்ரியன் தாபா. வெறும் 14 ரூபாய்க்கு 1 ப்ளேட் வடாபாவ். யம்மி டேஸ்ட்டில். கூடவே டக்கரான டீ. வயிறு நிறைய அங்கிருந்து கிளம்பினோம். 20 ரூபாய்க்குள் மதிய உணவை சுவையாக முடித்து விட்டது மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. தில்லியில் மிகக் குறைந்த மதிய உணவு 40 ரூபாய்க்குக் கிடைக்கும்.

இதற்கு மேல் இந்த ஓட்டுனர் பேசினால் கேட்கும் மூடில் இல்லை நான். எரிகின்ற வெயிலில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு, வயிறு நிறைந்ததை அறிவிக்கும் வண்ணம் விழிகள் மூடின. 1 மணி நேரம் நல்ல தூக்கம். மறுபடியும் அழகான சாலைகள். இப்படியாக 5 மணி நேரப் பயணம் முடிந்து மாலை 4 மணிக்கு கோலாப்பூர் கெஸ்ட் ஹவுஸ் அடைந்தாயிற்று. காரில் தொடங்கிய தூக்கத்தைத் தொடர்ந்து விட்டு வருகிறேன். அடுத்த பதிவு கோலாப்பூர் ஸ்பெஷல்.

Friday, June 11, 2010

சிறிய வீட்டை அழகாக்க..சிறு வீடுகளில் வாழ்வதென்பது சிக்கலான விஷயமே அல்ல. ஏனெனில் அவற்றைப் பராமரிக்கும் செலவும்,நேரமும் குறைவு. ஆனால் வித விதமான அலங்காரப் பொருட்களையும், இடத்தை அடைக்கும் ஃபர்னிச்சர்களையும் போட்டு அலங்கரிப்பதென்பது இயலாத ஒன்று. மேலும் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் தனி நேரம் ஒதுக்குதல் என்பதும் முடியாத விஷயம். குறைந்த நேரத்தில், எளிய முறையில், குறைந்த பொருட்செலவில் உங்கள் சிறிய வீட்டை அழகாக்குவோம் வாருங்கள்.


வழியை அடைக்காதீர்கள்வீட்டில் நுழைந்தவுடன் உங்கள் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நுழைந்ததும் ஆடம்பர, விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தாலும் அவை உங்கள் வழியை அடைக்காமலும், தேவையான நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். அமருவதற்கெனவும் பேசுவதற்கெனவும் தனி அறைகள் உள்ள பட்சத்தில் சோஃபா அங்கிருத்தல் நலம். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இடத்தை விசாலமாகக் காட்ட உதவும்.


அலங்காரப் படங்களைக் குறையுங்கள்

பெரிய வீடுகளில் அல்லது விசாலமான இடங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், படங்களை வாங்கி வந்து வீட்டை நிரப்பாதீர்கள். இந்தப் படங்களால் உங்கள் வீட்டு சுவர் முழுவதும் அடைக்கப்படும் போது உங்கள் இருப்பிடம் இன்னும் சிறியதாகத் தெரியும். தெய்வங்களின் படங்கள் பூஜையறையில் மட்டும் இருக்கட்டும். பல படங்களையும், அலங்காரப் பொருட்களையும் மாட்டும் போது வீடு அடைந்து போய் சுத்தமில்லாதது போன்றும், வீட்டில் இடமில்லாததை எடுத்துக் காட்டும் விதமாகவும் அமைந்து விடும்.


தகுந்த ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள்அழகான, சிறிய, உபயோகமான ஸ்மார்ட் ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். இதனால் அதை வைக்கும் இடம் குறைக்கப்படுவதுடன் பயனும் இரட்டிப்பாகும். உதாரணமாக டேபிளில் ட்ராயர் மற்றும் அடுக்குகள் உள்ள மாதிரி வாங்குங்கள். செண்டர் டேபிளில் கீழும் அடுக்குகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்தீர்களானால் உங்கள் தினசரிகள் அதில் வரும். மல்ட்டி ஸ்டோரேஜ் வசதி (multi storage facility) கொண்ட ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். மேலும் உபயோகமில்லாத நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை உபயோகிப்பதால் இடம் அடையாமல் இருக்கும்.


கண்ணாடியின் மூலம் இடத்தை விரிவுபடுத்தலாம்.

வித்தியாசமான ஐடியாவாகத் தெரியலாம். ஆனால், உங்கள் வீட்டின் அளவை இது அதிகப்படுத்திக் காட்டுவது கண்டு மகிழ்வீர்கள். வரவேற்பறையின் இரு எதிரெதிர்ப் பக்கங்களில் கண்ணாடிகள் வையுங்கள். இந்தக் கண்ணாடிகள் அளவில் பெரிதாக இருத்தல் நல்லது. சுவர் சிறிதாக இருக்கும் பட்சத்தில் முழு சுவரையும் மறைக்கும் வகையில் கண்ணாடியால் அலங்கரிக்கலாம். இந்தக் கண்ணாடிகள் தரையிலிருந்து நான்கடி உயரத்திற்கும் மொத்த அகலம் இரண்டடி கொண்டதாகவும் நீளவாக்கில் தொடர்ந்து சுவர் முழுக்க இருக்கும்படியும் அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு பெரிதாகக் காட்டப்படுவது கண்டு நிச்சயம் மகிழ்வீர்கள்.


வண்ணங்களில் விளையாடுங்கள்உங்கள் சுவர்களுக்கு பளிச்சென்ற, கண் கவரும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அத்துடன் சுவரின் நிறம் உங்கள் ஃபர்னிச்சர், கர்ட்டைன், தரை விரிப்பு மற்றும் கால் மிதியடிகள் இவற்றுடன் ஒத்துப் போகும் வகையில் இருப்பது உங்கள் வீட்டை சிறியதாகக் காட்டாதிருக்கும். அதற்காக அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், ஒரே குடும்ப நிறத்தில் இருந்தால் நல்லது. இந்த ஒரு வண்ணக் குறைபாட்டை சுவர்க் கடிகாரம், மலர் ஜாடி, டேபிள் மேட்டுகள் போன்ற சிறு பொருட்களில் நிற வித்தியாசத்தைக் கொடுத்து மாற்றலாம். நினைவில் கொள்ளுங்கள், வண்ணங்களுக்கு உங்கள் மனநிலையை மாற்றும் சக்தி உண்டு.


லைட்டிங்கில் அடுத்த கவனம்

வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஆங்காங்கே இடைவெளிகளில் சிறிய லைட்டுகளை வடிவமைப்பதன் மூலம் வித்தியாச வெளிச்சம் கொடுத்து அழகாக்கலாம். பெரும்பாலும் வாசிக்கும் / படிக்கும் அறையைத் தவிர மற்ற அறைகளில் டியூப் லைட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். இது உங்களின் அலர்ட்னஸைக் குறைத்து, உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும். வண்ண விளக்குகள், வீட்டில் மேலும் கீழுமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் இவற்றின் மூலம் உங்கள் வீடு நிச்சயம் மாறுபட்ட, சற்றே அகலமான தோற்றத்தைத் தரும்.இரவு நேரத்திற்கு ஹாலில் ஒரு சிறிய மின் விளக்குடன், அரோமா மெழுகுவர்த்தியை உபயோகிக்கலாம். இது நண்பர்கள், உறவினர்களுடன் பேச நல்ல, ரம்மியமான சூழ்நிலையைக் கொடுப்பதுடன் உங்கள் மின்சாரத்தையும் சிக்கனப்படுத்தும். ஆனால், இந்த மெழுகுவர்த்தி நாளிதழ், கர்ட்டன்கள், சோஃபா ஆகியவற்றின் பக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். லைட்டுகள், மெழுகுவர்த்திக்குப் பதிலாக லேம்ப்களையும் பயன்படுத்தலாம்.


சமையலறை செட்டிங்இப்போது அதிகமான வீடுகளில் திறந்த சமயலறைகளே உபயோகப்படுத்தப்படுகின்றன. இதனால் உங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருப்பவருக்கு சமையல் வாசனையிலிருந்து கமறல் வரை போகும். எனவே அவசியம் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்களை உபயோகியுங்கள். சமையலறையில் பொருட்கள் வெளியில் இறைந்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருட்களுக்கு ஏற்ற வகையில் நல்ல ஸ்டோரேஜ்களை உபயோகியுங்கள்.


சிறிய வீடுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்* விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக அழகு சாதனப் பொருட்களால் வீட்டை நிரப்பாதீர்கள்.

* பெரிய படங்கள் மாட்டுவதைத் தவிருங்கள். சிறு பொருட்களைக் கொண்டும் அழகாக்கலாம்.

* ஒரு அறையின் மணம் மறு அறையில் பரவாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* பளிச்சென்ற நிறத்தில் சுவர் வண்ணங்கள் இருக்கட்டும். ஆனால் கண்களைப் பறிக்கும் நிறத்திலல்ல.

* பொருட்களின் தேவையையும், வீட்டின் இடத்தையும் கருத்தில் கொண்டு பொருட்களின் இடத்தைத் தீர்மானியுங்கள்.

* மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய அளவில் வீட்டில் மாற்றங்கள் செய்யுங்கள். உங்கள் சோஃபாக்களின் திசையை மாற்றியோ டி.வியின் இடத்தை மாற்றியோ முயற்சியுங்கள். இது உங்கள் வீட்டிற்குப் புது தோற்றத்தைத் தரும்.

* இயற்கை ஒளி அதிகம் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைகளையும் நெட் துணிகளில் வடிவமைக்கலாம்.

* ஜன்னல், டி.வி ஸ்டாண்ட், டெலிஃபோன் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் வேண்டாத பொருட்களை வைத்து அலங்கோலமாக்காதீர்கள்.

* குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்கக் கற்றுக் கொடுங்கள்.

* ஒவ்வொரு பொருளுக்குமான இடத்தை முடிவு செய்து விட்டால் எதுவும் வெளியில் இல்லாமல் வீடு சுத்தமாகத் தெரியும். சுத்தமான வீடு நிச்சயம் பெரிதாகத் தெரியும்.

* வீட்டில் நேரமிருந்தால் உங்கள் கையினாலே பொருட்கள் செய்து வீட்டை அழகாக்குங்கள். நாம் செய்யும் பொருளெனும் போது அது அழகாகவும், அது வைக்கும் இடம் சுத்தமாகவும் இருக்க வேண்டுமெனும் எண்ணம் அவசியம் வரும்.


உங்கள் வீட்டை ஜொலிக்க வைக்கும் நட்சத்திரமாக நீங்கள் மின்ன வாழ்த்துகள்.


நன்றி தினமணி-மகளிர்மணி.