Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

Thursday, July 8, 2010

மதில் மேல் பூனை



ஹாய் மக்களே எனக்கு ஒரு நல்ல சொந்தமா, எண்ணங்களைப் பகிரும் நட்பா, தோள் தட்டி வளர்க்கும் உறவாய், ஆலோசனை வழங்கும் ஆசானாய் இந்தப் பதிவுலகம் தான் இருக்கு. என் தோழிக்கொரு பிரச்சனை. அவள் என்கிட்ட கேட்டா என்ன பண்ணன்னு. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். ஆனா அது அவளுக்கு சரியாப் படலை. உங்க ஆலோசனையையும் கொஞ்சம் அள்ளி வழங்கினா அந்தப் புள்ளைக்குப் பயன்படும். அவளே என் ப்ளாக்ல போட சொன்னதால இங்கே போடறேன். விஷயம் என்னவா... குழப்பம், சோகம் எல்லாம் எதால வரும். ஆங், அதே தான். காதல். அதுவும் ரெண்டு பக்கத்துல இருந்து வந்தா?

எனக்கு ரொம்பப் பிடிச்ச தோழி இவ. ரொம்ப நல்லவளும் கூட. நான் டெல்லி வந்தப்போ யாருமே இல்லாம பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு இருந்த சமயத்துல என்கூட பேசி, எனக்கு ஹிந்தி கத்துக் குடுத்த குரு. உத்திரப் பிரதேச மாநிலப் பொண்ணு. அவளுக்கு ரெண்டு நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவளுக்கு ரொம்பப் பிடிச்சவங்க. ஒருத்தர் A, இன்னொருத்தர் B ன்னு வெச்சுக்கலாம். A அவளோட கல்லூரி முடிஞ்சு வேலைக்காக காத்திட்டிருந்து கிடைக்காம வெக்ஸ் ஆனப்போ அவளுக்கு வேலை கிடைக்க நிறைய உதவிருக்கார். மனசளவுல வீககா இருந்தவளைத் தேத்தி நார்மல் ஆக்கினார். இவளோட நல்ல நண்பன். எப்போவும் வாழ்க்கைல ஒருத்தரை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஒரு எண்ணம் இருக்கும்ல. அப்படி அவள் நினைக்குற உறவு. அந்த மிஸ் ஆகாத உறவாக இவள் அவரின் தோழியாக இருக்க வேண்டுமென நினைத்தார் அவர். ஆனா நம்ம புள்ளையோ நட்பையும் தாண்டிப் போய் காதல்ன்னுடுச்சு. அவர் ஒத்துக்கலை. இப்படியே அவருக்கு நட்பாவும், இவளுக்குக் காதலாவும் ஒரு வருஷம் போச்சு.

நடுவுல தோழியோட இன்னொரு நண்பர் “B” அவ மேல ஃபீல் ஆகி ப்ரபோஸ் பண்ணிருக்கார். அந்த நேரத்துல “A”யினோட நிராகரிப்பாலேயும், “B”யோட அக்கறையாலும் அம்மணி ஒத்துக்கிட்டா. இவளின் காதல் Aயால் நிராகரிக்கப்பட்டது Bக்குத் தெரியும். இருந்தும் இவ தொடர்ந்து Aயோட நட்பா இருக்குறதை இவர் தடுக்கல. B அவளைக் கொஞ்ச நஞ்சமில்ல. செமையா லவ் பண்றாரு. அவளுக்குக் கால் வலின்னா டாக்டரையே அவ ஹாஸ்டலுக்குக் கூட்டிட்டு வர்றதும், அவ ஸேடா இருந்தா இவர் தாடி வளக்குறதும், அவ சிரிச்சா அதை நினைச்சு நினைச்சு இவர் தூங்காம சிரிக்குறதும்ன்னு வித்தியாசமான ஆளு. ஆனா இந்த ஓவர் அக்கறை இவளுக்குப் பிடிக்கல.

இப்படியே போயிட்டிருந்த கதைல ஒரு ட்விஸ்ட்டா, A இவளோட காதலை ஒத்துக்கிட்டதோட அவங்க வீட்லேயும் பேச சம்மதிச்சிருக்கார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடக்கக்கூடாதான்னு ஏங்கிட்டிருந்த தோழி இப்போ செம ஷாக்ல இருக்கா. கண்டிப்பா இப்போவும் இவளுக்கு B ஐ விட A வைத் தான் பிடிக்கும். விலகிப் போற உறவுகள் மேல எல்லாருக்குமே இருக்கும் ஈர்ப்பாவும் இருக்கலாம். ஆனா இவளால மிஸ்டர்.B யைக் கஷ்டப்படுத்த முடியல. ஏன்னா அவ்ரும் நல்ல நண்பர். என்ன செய்யன்னு தெரியாம என்கிட்ட வந்தா.

நான் என்ன சொன்னேன்னா, A ரொம்ப அக்கறையா இல்ல, காதலிக்கிறேன்னு சொல்லத் துணிவுமில்ல. தவிர, இப்போ கூட இவளோட கேரியர்ல கவனம் செலுத்த சொல்றாரு. ஒரு சாதாரண நண்பன் என்ன மாதிரி இருப்பானோ அப்படி தூரமா இருக்குறார். செம பொஸஸிவ். இவ வேற பையன் கிட்ட பேசினா தொலைச்சிடுவாரு. இப்படியெல்லாம் இருக்குறதால Aயை யோசிச்சு முடிவெடுக்கலாம்.

ஆனா B ரொம்பப் பிரியமானவர். காதலிச்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் இவளைத் தலைல வெச்சுக் கொண்டாடுறாரு. இவளுக்காக உருகுறாரு. ஒரு நல்ல நண்பனா இவளோட மற்ற நட்புகள் பத்திக் கேக்குறாரு, புரிஞ்சுக்குறாரு. இவளோட விருப்பம் என்னவோ அப்படியே இவ வாழணும்னு நினைக்கிறாரு. அதுனால என்னோட சப்போர்ட் Bக்குத் தான்.

மறுபடியும் என்ன குழப்பம்னா, 2 தங்கச்சிகளுக்கும், 1 தம்பிக்கும் அக்காவா இருக்குற நம்ம ஹீரோயின் ஜாதியும் பார்த்து முடிவு பண்ண வேண்டிருக்கு. ஜாதின்னதும் கல்லைத் தூக்கி எறியாதீங்க. நார்த்ல இது அதிகம் பார்ப்பாங்க. A யும் இவளும் கிட்டத்தட்ட ஒரே ஜாதிப் பிரிவுலேயும், B இவளை விட ரொம்பக் குறைவான பிரிவுலேயும் வர்றாரு. இதுனால அம்மணிக்கு அடுத்தக் குழப்பம். என் சஜெஷன் என்னன்னா, “ஜாதியெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. கல்யாணம் பண்ணி நல்லா இருந்தா அதையெல்லாம் யாரும் பாக்கப் போறதில்ல.” இப்படியெல்லாம் சொல்லி இவளைக் கன்வின்ஸ் பண்ணிட்டிருக்குற நேரம் A கால் பண்ணி ஹாய்ன்னதும் இவ ப்ரைட் ஆகிட்டா. இப்போ Aயை 100% பிடிக்கும்ன்னும், Bயை 99.9999% பிடிக்கும்ன்னு சொல்ற இவளுக்கு, அந்த .0001%க்கான காரணம் சொல்லத் தெரியல. இப்போ யார்கிட்ட நோ சொல்லி யாரைக் கல்யாணம் பண்ணிக்குறது, நோ சொல்றவர்கிட்ட மனசு நோகாம எப்படி சொல்லிக் கன்வின்ஸ் பண்றதுன்னு பயங்கரக் குழப்பத்துல இருக்கா.

இது ரெண்டுக்கும் நடுவுல வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பம். செம டெரர் ஆகி ஹாரர் மூவியை தனியாப் பார்த்தவள மாதிரி கன்னத்தைப் பிடிச்சுட்டு சோகமா லுக் விட்டுட்டு உக்காந்திருக்கா. எதுனாலேயும் அவ எடுக்கும் முடிவால பின்னாடி அவ வருத்தப்படக் கூடாதுன்னு நான் ப்ரார்த்திச்சிட்டிருக்கேன். என்னதான் பண்றது இப்போ...