எனக்கு மந்திர மற்றும் தந்திர வார்த்தைகளாகப் படும் சில இங்கே.
I love you
இந்த வார்த்தைகளுக்குத் தான் எவ்வளவு சக்தி. இதை உங்களால் யாரிடமெல்லாம் சொல்ல உரிமை உள்ளதோ அவர்களிடம் அன்பான அவசியமான நேரங்களில் சொல்லிப் பாருங்கள், பிறகு தெரியும். (அதற்காக பாக்குற பொண்ணுங்க கிட்டேயெல்லாம் சொல்லி பசங்க அடி வாங்கினா நான் பொறுப்பில்ல)
அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், வாழ்க்கைத் துணை, குழந்தை இன்னும் யாரிடமெல்லாம் சொல்லலாமோ அவர்களிடம் நீங்கள் சொல்லும் நேரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். அடடா... எத்தனை அற்புதம்.
பாராட்டுங்கள் (பாராட்டு வார்த்தைகள்)
எப்போதும் எல்லாரும் விரும்பும் ஒரு விஷயம் பாராட்டு. அதை அளிக்க எப்போதும் தயங்காதீர்கள். ஒரு கெட்ட விஷயத்தைக் கூட நல்ல விதமாகப் பாராட்டிப் பாருங்கள். நீங்கள் பாராட்டுபவருக்கும் உங்களுக்கும் ஒரு அன்யோன்யம் வரும். பாராட்டுங்கள். அதிகமாகப் புகழாதீர்கள்.
ஒருவரின் செயலில் அவரது முயற்சி, நேரம், உழைப்பு எல்லாம் உள்ளது. அதனால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். நான் எப்போதும் என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணைக் கூட பாராட்டுவது வழக்கம். அவளின் வேலை பாத்திரங்களை சுத்தம் செய்வது. அதற்காக அவள் பணம் பெறுகிறாள். இதில் பாராட்டுதல் எதற்கு என்ற எண்ணம் வேண்டாம்.
"அடடே, இன்னிக்கு எல்லா வேலையும் இவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டியே."
"இன்னிக்கு பாத்திரமெல்லாம் பளபளன்னு இருக்கு. குட்."
உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் எப்போதாவது புது உடை அணிந்து வந்தால்
"Your dress is nice" என்றோ,
"You look great in this" என்றோ,
"There is a change in you which makes you bright today" என்றோ சொல்லுங்கள்.
அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி உங்களிடம் அவர்களின் சிநேகத்தைக் கூட்டும்.
நன்றி
இந்த வார்த்தையைப் பலரும் உபயோகிக்க வேண்டாம் என சொல்லுவது ஏன் எனத் தெரியவில்லை. இதை வெறும் ஃபார்மாலிடி வார்த்தையாகப் பார்க்காமல் ஒருவர் உங்களுக்கு அளிக்கும் சன்மானம் எனக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு விஷயத்தை செய்யும் போது அடுத்தவர் மனம் உகந்து சொல்லும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
ஆபிசில் உங்களுக்கு டீ கொண்டு வரும் பியூனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு வேண்டிய சிறு பொருளை எடுத்து உங்களைத் தேடி வரும் குழந்தைக்கு நன்றி சொல்லுங்கள். அதுவும் உங்களிடமிருந்து அந்த பழக்கத்தைக் கற்றுக் கொள்ளும்.
எப்போதெல்லாம் உங்கள் மனம் பிறரின் செய்கைகளால், வார்த்தைகளால் மகிழ்கிறதோ அப்போது நன்றி சொல்லத் தவறாதீர்கள். இது தவிர எப்போதும் அழகை மிகைக்காத ஒரு புன்னகை, தெவிட்டாத வார்த்தைகள் என ஒரு நாள் இருந்து பாருங்கள். கண்டிப்பாக நீங்கள் அந்த நாளை புது ஊக்கத்தோடு எதிர்கொள்வீர்கள். வார்த்தைகள் செய்யும் மந்திரங்கள் அழகானவை. நீங்கள் போடாத மந்திரங்களை அவை போடும்.
****************************************************************************************************
உங்களிடம் பேசும் யாரும், "ச்சே, என் நேரமெல்லாம் இந்த ஆள் கிட்ட பேசி விரயமாகிடுச்சு" என்றோ, "இவ கிட்ட பேசினாலே எரிச்சல் தான் வருது. அது என்ன தேவையில்லாத வார்த்தை" என்றோ
சொல்லாமல் இருக்க வேண்டுமானால் முடிந்தவரை கீழேயுள்ள வார்த்தைகளைத் தவிருங்கள்.
Brother / Sister
என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தைகள் இவை. ஒருவரைப் பார்த்தவுடன் (சில நேரங்களில் பார்க்காமலே) எப்படி இந்த சகோதரப் பாசம் பொங்குகிறது எனத் தெரியவில்லை. ஒருவரை நம்ப வேண்டுமானால் அல்லது நம்ப வைக்க வேண்டுமானால் அது இவ்வார்த்தைகளால் தான் முடியும் என எண்ணாதீர்கள். பல நேரங்களில் அது ஒருவர் மீது மற்றவருக்கு இல்லாத நம்பிக்கையையே காட்டுகிறது.
எப்படி உங்களால் ஒருவரைப் பார்த்தவுடன் 'அன்பே' என விளிக்க முடியாதோ அதே போல் 'அண்ணா' என்றும் சொல்லக் கூடாது. ஒருவரைப் பற்றிய அந்த உறவின் உணர்வு வராமலே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தைகளை நான் எப்போதும் வெறுக்கிறேன்.
என்னை யாராவது சிஸ்டர் அல்லது சகோதரி என்றால் அவருடன் பேசுவதை நான் விரும்புவதில்லை. ஒரு ஆணை ஒரு பெண் இந்த வார்த்தைகளால் தான் நம்ப வேண்டுமெனில் அந்த கீழ்த் தரமான செயலை நான் முழுவதும் எதிர்க்கிறேன். அந்த வார்த்தைகளை வெறும் கவசமாகவே கொண்டு பல தவறு செய்பவர்கள் இருக்கும் போது வெறும் வார்த்தைகளில் போலித் தனம் எதற்கு?
Sorry
தேவைப்படும் இடங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டிய வார்த்தை இது. ஒரு வரைமுறை இல்லாது இவ்வார்த்தை எப்போதும் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு சலிப்பையே தருகிறது. தவறுகள் செய்து விட்டு ஸாரி சொல்வதைத் தவிர்த்து அதை செய்யாமல் இருக்க முயற்சிக்கலாம் என்பது என் அபிப்பிராயம். தவிர, எப்போதும் ஸாரி சொல்லும் ஒருவரின் மதிப்பும் குறைந்து போவது உண்மை.
இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்டினால் அது ஒரு ஃபேஷன் என ஆகி விட்டது. ஆனால் அதை உங்களால் உங்கள் பெற்றோர் முன்னோ, குழந்தை முன்னோ பேச முடியுமா என யோசித்துப் பாருங்கள். அவர்கள் முன் பேசும் அளவுக்கு அவ்வார்த்தைக்கான தகுதி இல்லையெனில் அது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது.
இது தவிர உங்களிடம் மற்றவர் உபயோகிக்கும் எந்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ அவைகளை நீங்களும் தவிருங்கள். மற்றவர் நேசிக்கும்படி உங்கள் வார்த்தைகள் அமைய வாழ்த்துக்கள்.