Thursday, July 30, 2009

ஆட்கொல்லி விஷம்



நம் முதல் சந்திப்பு
அது ஒரு இனிய மாலை நேரம்.
உன் கையை நான் பிடித்த போது கூட
உனக்கு எதுவும் தோன்றவில்லையா!
நீ சென்ற பிறகே கேட்க முடிந்தது
உன் வாசம் சொல்லும் இதமான அணைப்பு,
நெற்றி நனைக்கும் முத்தம்,
கன்னம் சிவக்கும் தொடுதல்கள்
இவை எதையுமே உன் நினைவாய்
விட்டுச் செல்லவில்லையே ஏன் என்று.
இதற்காக காத்திருக்கும் ஏக்கத்தை
விட்டுச் சென்றது போதாதா என்றாய்.
ஏக்கம் கொடுத்து
என் உயிரை அநியாயத்திற்கு எடுக்கிறாய்.

**************************************

கனவில் உனைக்
காணலாமெனக்
கண்மூடக் கருதினேன்.
என் உறக்கம் கெடுத்து
கண்ணிமைகளிடையே
கள்வா நீ!

**************************************

உன்னை நான் நேசிப்பதை
உன்னிடம் சொல்லவில்லை.
நீ என்னைக் காதலிப்பதை நானறிந்தாலும்
நீ அதை சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை.
காதலை சொல்லாமல் தவிக்கும்
இந்த தவிப்பின் சுகம்
அதை சொல்லி விட்டால் கிடைக்காதே.

**************************************

கண்கள் நோக்கி தவிர்த்த தருணங்கள்
ஒரு கோப்பை காஃபி
சில்லென்ற சாலையில் சில மணி நேர நடை
நீ பாராத நேரத்தில் உன் மீது விழும் நொடிப் பொழுது பார்வைகள்
என் துப்பட்டா வாசம்
உன்னுடனான என் நெருக்கம்
இவை எதுவுமே சொல்லவில்லையா
உன் மீதான என் காதலை!

**************************************

நீ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்
எனக்கு கோபம் வருவதில்லை.
எனக்குத் தெரியும், உன்னால்
அவர்களை பார்க்க முடியும்
என் பார்வையை மட்டுமே தவிர்க்க முடியும்.
இது போதும் எனக்கு
உன் காதலை சொல்ல.

**************************************

உன் பெயரை மட்டுமே
எழுதினேன் காகிதத்தில்.
காகிதமே கவிதையாய் மாறிவிட்டதே!

**************************************

ஊரே
உறங்கிவிட்டது.
என்னுள்ளான
உன் நினைவுகளைத் தவிர.

Wednesday, July 15, 2009

காதல் கதை - 1




ரம்யா, சுத்தமான தயிர் சாதம் என்பது முகத்திலேயே தெரியும். அக்ரஹாரத்து பொண்ணு. படிப்பது பன்னிரெண்டாம் வகுப்பு. வளர்த்தியான, உயரத்துக்கு ஏற்ற உடம்பு கொண்ட அழகான, அளவான தேகம். படிய வாரப்பட்டு பாதியில் ரிப்பன் கட்டிய இரட்டை ஜடை. அதன் ஒரு பக்கத்தில் தொங்கும் அடர் மல்லிகை. அரக்கு கலர் பாவடைக்கு பொருந்தும் பிங்க் நிற தாவாணி தான் பள்ளி சீருடை. அவள் "போயிட்டு வர்றேன்மா" என்று சொல்லும் போதே தெரு பசங்களெல்லாம் வெளியே வந்து எதேர்ச்சையாக நிற்பது போன்றோ அல்லது வீட்டினுல்லிருந்தோ அவளைப் பார்ப்பதோ அவளுக்குத் தெரியாது, அவள் தோழி பானு சொல்லும் வரை.

பானு ஹரியின் தங்கை. ஹரி தான் அவளை ரம்யாவிடம் அனுப்பினான், தன்னை ரம்யாவிடம் அறிமுகப்படுத்தும் படி. அவன் வழிந்த அசடில் "ஹாய் அண்ணா" என தன்னை அறிமுகம் செய்து கொண்டு கிளம்பினாள். பானு ஹரியைப் பரிதாபமாகப் பார்த்தாள். ஹரி அவளை முறைத்து "அண்ணா" என்பது "ஏன்னா" என மாற எவ்வளவு நாளாகப் போகுது என தனக்குத் தானே சமாளித்து சென்றான். பானுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லைஎனினும் அண்ணின் குட்டுக்கு பயந்து வாயை மூடிக் கொண்டு உள்ளே சென்றாள்.

நாட்கள் நகர்ந்தன. தெரு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டது. காரணம் எதிர் வரும் பொதுத் தேர்வுகள். தெருவிலிருந்து மொத்தம் பதினான்கு பேர் ஒரே நேரத்தில் தேர்வை எதிர்கொண்டனர். போட்டி அதிகமான நேரத்தில் பானு ரம்யாவிடம் அதை சொல்லியிருக்க வேண்டாம் தான். ஆனால் பெண்களுக்கு எதை எப்போது பேசுவதென்ற புத்தி எப்போது இருந்திருக்கிறது. ரம்யாவை தன வீட்டிற்கு அழைத்தாள் பானு.

"சொல்லு பானு, என்ன திடீர்னு அவசரமா வர சொன்ன? ட்யூஷனுக்கு லேட் ஆறதுடி"

"இல்லடி உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல."

"என்னாச்சு பானு? எதுவும் பாடத்துல உனக்கு போயிடுத்தா... உங்க அம்மா கிட்ட பேசணுமா..."

"ஐயோ, அதெல்லாம் இல்ல. எங்க அண்ணாக்கும் எதிராத்து கார்த்திக்கும் நேத்திக்கு சண்டைடி. அண்ணா மேல கை வெச்சிட்டான்.அவன் இன்னிக்கு காலேஜ் போல."

"ஐயோ என்னாச்சுடி அண்ணாக்கு"

"ஒன்னும் இல்லை. அவன் சரி ஆகிடுவான். ஆனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதான் வர சொன்னேன். ஆத்துல யாரும் இல்ல. அதான் இப்போவே சொல்லிடலாம்னு. நீ எதுவும் குறுக்க பேசாத. நான் சொல்றத மட்டும் கேளு. எதிராத்து கார்த்தி உன்னை லவ் பண்றானாம். என் அண்ணா தற்செயலா உன்னைப் பத்தி ஏதோ சொன்னதுக்கு 'அவளைப் பத்தி நீ ஏண்டா பேசற' னு அவனை அடிச்சுட்டான். அவன் உன்னையும் ஏதாவது வம்பிளுக்கலாம். அதான் உன்கிட்ட சொல்லி வைக்கலாம்னு கூப்பிட்டேண்டி ரம்யா. பீ கேர்புல்."

ரம்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

'என்ன செய்வேன் இப்போது. ஐயோ, அவன் என் கையப் பிடித்து இழுத்து விட்டால்? ஒரு வேளை என்னை பாலோ செய்வானோ. ஸ்கூலில் டீச்சருக்கு தெரிந்தால் திட்டுவாளே'. அவ்வயதிற்கே உரிய அத்தனை இம்மச்சூரிட்டியும் சேர்ந்து அவளை என்னென்னவோ சிந்திக்க வைத்தன. அடுத்த நாள் படித்த கெமிஸ்ட்ரி பாடத்திலிருந்த எந்த சமன்பாடுகளும் மண்டையில் ஏறவில்லை. அழுகையாய் வந்தது. அன்று மாலையே பானுவின் வீட்டிற்குப் போனாள்.

"பானு, நான் கார்த்தி கிட்ட பேசணும். நீ உங்க அண்ணாகிட்ட சொல்லி அவன் கிட்ட சொல்ல சொல்லு. நான் நாளைக்கு நம்ம பெருமாள் கோவில்ல நடை சாத்தினதுக்கப்புறம் மூணு மணிக்கு அவனை பாக்கறேன்" சொல்லி விட்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாவிட்டாலும் அவள் சொன்னதை அப்படியே அண்ணன் மூலம் கார்த்தியிடம் சேர்த்தாள் பானு.

அடுத்த நாள். மாலை மூன்று மணி "ரம்யா, நீங்க என்னை வர சொன்னேளாமே."

"வாங்கோ கார்த்தி. நான் உங்க கிட்ட இதுக்கு முன்னாடி பேசினதே இல்லை. ஏன் நீங்க எனக்காக ஹரி அண்ணாவை அடிச்சேள்..."

"அது வந்து... வந்து...." "நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். எல்லாம் பானு என்கிட்டே சொன்னா. இங்கே பாருங்கோ நான் இப்போ +2. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போகணும். தேவையில்லாம என்னென்னவோ ஒளரிண்டு இருக்காதேள். அப்புறம் நான் மாமி கிட்ட சொல்லிடுவேன்"

"ஐயோ வேணாம். சாரி. இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா, நீ என்கிட்டே இவ்ளோ கோவிச்சுக்காதையேன். Let us be friends at least. "

அவனின் செல்லக் கொஞ்சலை இவளால் மறுக்க முடியவில்லை.

"OK, But only friends. Bye for now. ஆத்துக்குப் போனும். அம்மா தேடுவா."

தூரத்திலிருந்து பார்த்தவளை இனி தோழியாகப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவனுக்கு. கார்த்தியைப் பற்றி சொல்லவில்லையே. நல்ல உயரம், மாநிறம், உயரத்திற்கு கொஞ்சம் குறைவாய் உடம்பு, யாரையும் எளிதில் வசீகரிக்கும் கண்கள், இன்ஜினியரிங் மூன்றாம் வருடம்.

தேர்வுகள் வந்தன, அதைத் தொடர்ந்து முடிவுகளும். 94% மதிப்பெண்களுடன் மதுரையிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தாள். அதே நேரத்தில் அவர்கள் நட்பும் நன்றாகவே நெருக்கமடைந்திருந்தது. மதுரைக்கு அவள் போக ஒரு வாரமே இருந்த நிலையில் ரம்யா கார்த்தியை சந்தித்தாள்.

"கார்த்தி, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும். ஆனா, எப்படி சொல்லனு தெரியல. ஆனா, சீக்கிரமே சொல்லிடறேன்"

"என்ன ரமி, எதுவும் பிரச்சனையா... ஆத்துல அம்மா கூட எதுவும் சண்டையா..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல கார்த்தி. நான் உனக்கு அப்புறம் போன் பண்றேன்."

"ஓகே ரமி" என்று அவளை அனுப்பி விட்டு பாக்கெட்டிலிருந்த வில்சை எடுத்துப் பற்ற வைத்தான். சாயங்காலம் ஆறு மணிக்கு அம்மா கோவில் போனதும் அவனுக்கு போன் செய்தாள்.

"கார்த்தி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்"

"சொல்லு"

"என்னை எப்போ கல்யாணம் பண்ணிக்குற?"

"என்ன சொன்ன...."

"அம்மா வந்துட்டா. நான் அப்புறம் பேசுறேன்" போனை வைத்து விட்டாள்.

அவனுக்கு கை கால் ஓடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுபடியும் அவள் வீட்டுக்கு போன் செய்தான். "ஹலோ" அவள் குரல் தான் என ஊர்ஜிதப்படுத்தி விட்டு

"ஒரே ஒரு தம் அடிச்சுக்கட்டுமா.... ரொம்ப நர்வசா இருக்கு" "ம்ம்" போனை வைத்து விட்டாள்.

"யார் ரம்யா போன்ல?" அம்மா உள்ளேயிருந்து.

"தெரிலமா. ராங் நம்பர்." இது போல் அடிக்கடி ராங் கால்கள் வந்த போதிலும் மகள் மேலிருந்த நம்பிக்கையின் காரணமாக அவள் அம்மா எதுவும் கண்டு கொள்ளவில்லை. இதற்கு நடுவில் அவர்கள் பெருமாள் கோவில் சந்திப்பு, அவ்வப்போது அடுத்த ஊரில் ஓரிரண்டு படங்கள், தலையில் முக்காடு போட்ட இரு சக்கர வண்டிப் பயணம் என அவ்விருவரின் காதல் நான்கு வருடங்கள் அவள் இன்ஜினியரிங் முடிக்கும் வரை நன்றாகப் போனது. மதுரையில் அவர்கள் சுற்றாத இடம் இல்லை. இதற்கு நடுவில் வீட்டிற்கு தெரிந்தும் இவள் சமாளித்திருந்தாள். ஒரு முறை அவள் விடுதியிலிருந்து அவனுக்கு எழுதிய கடிதம் அவன் அம்மாவின் கையில் கிடைக்க வீடே ரெண்டாகிப் போனது. அவனும் எப்படியோ சமாளித்திருந்தான்.

இப்போது இருவரும் வேலைக்குப் போயாகி விட்டது. அவன் புனேயிலும், அவள் பெங்களூரிலும் நல்ல சம்பளத்தில் பொறுப்பான வேலை. வீட்டில் சொல்லி விடலாம் என அவள் வீட்டுக்குப் போன நாளொன்றில் அவளைப் பெண் பார்க்க வந்திருந்தனர். அவளுக்கு என்ன சொல்வது, எப்படி சமாளிப்பதேன்றே தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக பெண் பார்க்க வந்திருந்தவர் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என அழைக்க, அவரை "அண்ணா" என்றழைத்து தன் விருப்பத்தை இலைமறை காயாக சொல்லி முடித்து விட்டாள்.

அடுத்த சம்பந்தம் வருவதற்குள் இரு வீட்டிலும் காதலை சொல்லி, வழக்கம் போல் முதலில் பெற்றோர் எதிர்க்க, பின் சம்மதித்து நன்றாக திருமணம் முடிந்தது. இப்போது அவர்களிருவரும் பெங்களூரில் 'சவிதா' எனும் குழந்தைக்கு நல்ல பெற்றோராகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதில் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையிலும் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால் பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போதும் அம்மா வீடும் மாமியார் வீடும் ஒரே தெருவில் இருந்தாலும் மாமியாருக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் ரம்யா, மாமியார் மெச்சும் மருமகளாகவே உள்ளாள். அவளைப் பார்த்து பார்த்து பெருமைப்பட்டுப் போவான் கார்த்தி. அவர்கள் காதல் ஜெயித்ததில் அவர்களைப் போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி. அடுத்த பதிவில் தாராவின் காதல் தோல்வியுடன் சந்திப்போம்.

கோவை, திருப்பூர் நண்பர்களே...


இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயார்க் படம் பார்த்தோம். வித்தியாசமான, வலுவான கதை, கதைக்கு வலு சேர்க்கும் இர்ஃபான் கானின் நடிப்பு, காட்சி அமைப்புகள், அழகான காதலை வெளிப்படுத்தும் கேட்ரினா கைஃப் என படமே தூள். மசாலா வகையறாக்கள் இல்லாத மற்றுமோர் படம் பாலிவுட் சினிமாவில்.

நியூயார்க்கில் WTC தகர்க்கப்பட்ட போது அங்கிருந்த இந்தியர்களின் நிலையை கொஞ்சமே கண்ணீருடன் அழுத்தமாய் சொல்லியிருக்கும் படம். படம் முழுவதும் நியூயார்க்கில் எடுக்கப்பட்டிருந்தும் தேவையில்லாமல் நாட்டை வலம் வரும் பாடல் காட்சிகள் இல்லாதது படத்தின் ப்ளஸ். எவ்வித காரணத்தாலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்ற வாதம் ஏற்புக்குடையது. காதலுக்காக கதறும் கடைசிக் காட்சியில் கேட்ரினா அசத்தியிருக்கிறார். விவரிக்க வார்த்தை இல்லையெனினும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் நல்ல படம் பார்த்த முழு திருப்தியில் வெளிவரலாம். படம் பார்த்த யாரும் டோட்டாவை (டோட்டா என்ற வார்த்தையை) மறக்க முடியாது.
(ஜான் ஆப்ரகாமின் குழி விழும் சிரிப்பிற்காக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும் ;) )

**************************************************



இப்போதெல்லாம் எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சலிப்பைத் தரும் நிலையில் சற்றே ரசிக்க வைக்கின்றன விளம்பரங்கள். நடிகைகளை அரைகுறை ஆடையுடனும், இயல்பற்ற நடிப்பிலும் பார்த்து போரடித்த நிலையில் ஹீரோ ஹோண்டாவின் விளம்பரத்தில் வரும் எளிமையான பெண்ணின் காதல் சொல்லும் பார்வை ரொம்பவே இயல்பு. இப்படி ஒரு பெண்ணின் சிரிப்பிற்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் வருவார்கள் ஆண்கள்.

எப்போதுமே அனைவரும் ரசிக்கும், மதிக்கும் விளம்பரங்களைத் தருவதில் ஏர்டெல்லுக்கு நிகர் ஏர்டெல் மட்டுமே. முன்பு வந்த இந்தியா, பாகிஸ்தான் குழந்தைகளின் விளம்பரத்தில் ஒரு பட்டம் மூலம் ஒற்றுமையை வலியுறுத்தியது. மாதவன், வித்யா பாலனின் காதல் ரம்மியமாக இருந்தது. அப்பாவின் கையுடன் கயிறு கட்டி பையன் தொலையாமல் காட்டியதில் அப்பாவின் பாசமிருந்தது. ஸைப் அலிகான், கரீனா கபூர் மற்றும் ஷாருக் வந்த போதும் அழகான நட்பு மற்றும் காதலை வெளிப்படுத்தியது. சிறிது நாள் முன் வந்த ஏர்டெல் சிறுவன் ரொம்ப சமர்த்தாக அப்பாவிடம் அம்மாவை கம்ப்ளைன்ட் செய்ததை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த விளம்பரங்களுக்கு குறையாத வகையில் இப்போதைய ஏர்டெல் விளம்பரமும். பையனுக்கு குரல் கொடுக்கும் மக்களைப் பார்த்து பெருமிதப்படும் அப்பாவும், அவர்களுக்காக மகனின் குரல் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அப்பாவின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கும் பொறுப்பான மகனையும் பார்க்க பெருமையாய் உள்ளது. (சல்யூட் ஏர்டெல்)

**************************************************

என்னவர் என்னை வேலையை விட்டு விட்டு தொடர் கதை எழுத சொல்கிறார். (!?!!?!!?!!?!!??!!!!!!)
தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு. ஆனால் எனக்கு முதல் நாள் வந்த கனவு அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் கிடையாது. இது எதுவும் பிரச்சனையா? தகவல் தெரிந்தோர் சொல்லுங்கப்பா. (தமிழ் சீரியல்களில் நடிக்க புது முகங்கள் வரவேற்கப்படுகிறார்கள். கதை: அட, என் கனவுகள் தாங்க.)

**************************************************

அப்படி இப்படி என தள்ளிப் போன ப்ராஜெக்ட் விசிட் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. வரும் திங்கள் காலை கோயம்பத்தூருக்குப் பறக்கிறேன். அங்கே வெதர் நன்றாக இருப்பதாக தோழி சொன்னாள். டெல்லி வெக்கையிலிருந்து விடுதலை என நினைக்கும் போதே மனசுக்குள் மழை அடிக்கிறது. (கோயம்பத்தூர், திருப்பூர் பதிவர்களின் / நண்பர்களின் நேரம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு சரியில்லை என்பது அரசமரத்தடி சித்தர் வாக்கு)

**************************************************

சீக்கிரமே காதல் கதைகள் எழுதி உங்களையெல்லாம் இம்சிக்கலாம் என நினைக்கிறேன். என் எல்லா மொக்கைகளையும் தாங்கும் நண்பர்கள் இதையும் தாங்குவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வருகிறது அடுத்த பதிவு காதல் கதை - 1. அனைவரும் காதல் கதை எழுதும் போது இந்த கதைகளில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்போருக்கு, இவை அனைத்தும் என் வாழ்க்கையில் நான் பார்த்த என் நண்பர்கள் மற்றும் தோழிகளின் உண்மைக் கதைகள். அவர்களிடம் அனுமதி வாங்கியே எழுதப்படும். (இந்த அறிவிப்பு நீங்கள் தப்பிப்பதற்காக. இதற்கு மேலும் படித்து மாட்டிக் கொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது)

**************************************************

கடைசியாக பதிவுலக கிசுகிசு

* அனைவரையும் கலாய்த்து எழுதி வரும் இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மிகத் திகிலுடன் எதிர்கொண்டுள்ளார் இந்த ஜிம்பலக்கா. காரணம் என்னவென்றால் ரொமான்டிக்காக பேச பெண்ணுக்குத் தெரியவில்லையாம். மாப்பிள்ளை எவ்வளவு அழகாகப் பேசினாலும் இவர் அதை விட அழகாய்க் கலாய்த்து நகைச்சுவையாக்கி விடுவதால் அந்த பக்கம் இப்போதைக்கு கப்சிப். (கல்யாணத்துக்கு அப்புறம் ராமனுக்கேத்த சீதையா இருந்து தானே ஆகணும்)

* இன்று மட்டும் ஆறு முறை அழைத்து விட்டார் இந்த யூத் பதிவர். காரணம் என்னவெனில் நடிகையின் பெயர் கொண்ட பெண்ணிடமிருந்து வந்த மெயில் தானாம். உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. அந்த எழுத்துக் கடலில் நான் தொபுக்கடீர்னு விழுந்து விட்டேன் என்றெல்லாம் எழுதியதோடு மட்டுமல்லாமல் முடிக்கும் போது 'என்றும் அன்புடன்' என்றிருப்பதால் அந்த "என்றும்" அன்புடனுக்கான அர்த்தம் புரியாமல் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். (சீக்கிரமே அதற்கான அர்த்தம் அறிய வாழ்த்துக்கள்)

Wednesday, July 8, 2009

டெல்லியும் சில வித்தியாசப் பழக்கங்களும்.

டெல்லி வந்த சில நாட்களில், ஏன் இப்போதும் கூட எனக்கு (ஒரு மதுரைக்காரியாய்) வித்தியாசமாகத் தெரிந்த / தெரியும் சில விஷயங்கள் இங்கே. டெல்லி என்ற பிரம்மிப்புடன் வந்த எனக்கு முதலில் ஏர்போர்ட்டிலிருந்து கரோல் பாக் வரையான ரோடுகள் வித்தியாசமாகவே இருந்தன. இவ்வளவு தானா டெல்லி என சலிப்படையச் செய்தது. அதற்குப் பிறகு பிரம்மாண்ட மால்கள், சீரான சாலைகள் கொண்ட சவுத் டெல்லி என்று பார்த்தும் முதலில் பார்த்த காடு போன்ற சாலைகளை இன்னும் கடக்கும் போதும் ஏன் டெல்லியின் ஒரு பக்கம் இப்படி எனத் தோன்றும்.

இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியாது போல பேசுவார்கள். கடைக்காரரிடம் "ஒன் ருப்பீ" என்றால் ஏற இறங்க பார்ப்பார். "ஏக் ருப்யா" தான் இங்கே சலேகா. படித்தவர்கள் கூட ஹிந்தியில் பேசுவதையே விரும்புவார்கள். நமக்கு ஹிந்தி தெரியாது என்றாலும் நம்மை மதித்துக் கூட ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஹிந்தியில் உரையாடும் போது ஆங்கில வார்த்தைகளின் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த விஷயத்தில் இவர்கள் மொழிப் பற்றாளர்கள். (நான் மொழி வெறியர்கள்னு சொல்லல.)
**************************************************

சில நாட்களுக்கு முன் ஒரு உறவுக்கார தீதியிடம் பேசிக்கொண்ட போது என்னைப் பார்த்துக் கேட்டார். "நாளைக்கு தானே மஞ்சள் நிற உடை போடணும். இன்னிக்கு ஏன் உடுத்தின?" எனக்குப் புரியாமல் அவரிடம் முழித்த போது அவர் தந்த விளக்கம் எனக்கு வித்தியாசமாய் இருந்தது. திங்கள் கிழமை வெள்ளை அல்லது கிரீம் நிற உடை, செவ்வாய் மற்றும் வெள்ளி தினங்களில் சிவப்பு, புதன் பச்சை, வியாழன் மஞ்சள், சனி கருப்பு தவிர மற்ற உடைகள் என உடுத்த வேண்டுமாம். ஞாயிறு இந்த ரெஸ்ட்ரிக்ஷன் இல்லையாம். தினமும் ஒரு கடவுள் என வைத்து அந்தந்த கடவுளுக்கு ஏற்ற வகையில் உடையணிந்தால் நமக்கு நல்லது என லெக்சர் கொடுத்தார்.

இது போதாதென்று திருமணத்துக்கு முன்பு நான் தங்கியிருந்த வீட்டில் உள்ள ஆன்ட்டி வியாழக் கிழமைகளில் பண்ணும் லந்து அதிகம். அவர் சாய்பாபா பக்தை. வியாழன்று மஞ்சள் நிற உடை அணிவார்; நெற்றியில் மஞ்சள் இடுவார்; அன்று மஞ்சள் நிற பதார்த்தங்களையே சமைப்பார்; ஏழைகளுக்கு 'கடி' எனும் மஞ்சள் நிற உணவை அன்ன தானம் செய்வார். இன்னும் பல பல. இப்படி எல்லாம் மஞ்சள் மஞ்சளாக இருந்தால் கடவுள் அருள் புரிவாரா? எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை.
**************************************************

நம்மூரில் திருமணமான பெண்கள் என்றால் கழுத்தில் தாலி இருக்கும். காலில் மெட்டி இருக்கும். திருமணமான சில நாட்களுக்கு வீட்டிலுள்ள அனைத்து தங்கமும் பெண் கழுத்தில் பார்க்கலாம். தலை நிறைய பூ. மதுரைக்காரப் பெண் என்றால் தலை நிறைய மணக்க மணக்க மல்லிகை. ஆனால் வடக்கில் வித்தியாசம். இங்கும் திருமணத்தின் போது கருகுமணி செயின் தாலியாக அணிவிக்கப்படும். ஆனால் அதைத் தொடர்ந்து அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. மெட்டி திருமணத்தின் போது பெரும்பாலும் அணிவிக்கப்படுவதில்லை. அதற்குப் பின் ஃபேஷனுக்காக பெண்கள் அணியலாம். பெரும்பாலும் அதையும் யாரும் அணிவதில்லை. நெற்றியில் போட்டு வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பூ கலாச்சாரம் அறவே இல்லை. பட்டுப் புடவைகள் கிடையாது. எவ்வளவு பெரிய விழாக்களுக்கு போவதென்றாலும் கழுத்தில் ஒரு நகைக்கு மேல் அணிவதில்லை. இதெல்லாம் இல்லை, சரி என்ன உண்டு? நெற்றியில் வகிடை ஒட்டி இடும் சிந்தூர் கண்டிப்பாக இட வேண்டும். புதிதாய்த் திருமணமான பெண், டிசைனர் உடைகளே பெரும்பாலும் அணிய வேண்டும். ஜீன்ஸ் டாப்பும் அணியலாம். எப்போதும் ஃபுல் மேக்கப்பில் இருக்க வேண்டும், அடுப்படியில் வேலை செய்வதானால் கூட. டார்க் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். கை நிறைய வளையல் அணிய வேண்டும். திருமணமான சில நாட்கள் வரை சிவப்பு வளையல்கள் அவசியம். மொத்தத்தில் எப்போதும் ஷோ கேஸ் பொம்மை போல காட்சியளிக்க வேண்டும்.
**************************************************

அடுத்ததா சாப்பாடு. நம்மூரில் எனக்குத் தெரிந்து நெய் அதிகம் வடிவது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகில் தான். ஆனால் இங்கு எல்லா பலகாரங்களிலும் / சாப்பாடுகளிலும் நெய்யும் வெண்ணையும் மிக அதிகம். இனிப்பு படு தூக்கலாக இருக்கும். கலர் கலராக இருக்கும். ஒரே பதார்த்தம் பல பெயர்களில் சிறு வித்தியாசங்களுடன் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாமே பார்க்க அழகாகவும், உண்ண படு சுவையாகவும் இருக்கும். ஆனால் அதை பார்த்தும் பார்க்காமல் வந்தால் தான் உடலுக்கு நல்லது.

நாம் யார் வீட்டிற்காவது போனால் பழங்கள் அல்லது இனிப்பு காரம் வாங்கிச் செல்வோம். ஆனால் இங்கு பழங்கள் நோயுற்றவர்களுக்கு மட்டுமே வாங்கி செல்லப்படுகிறது. யார் வீட்டிற்குப் போவதாக இருந்தாலும் இனிப்புடன் சேர்த்து காரம் எப்போதும் வாங்கிப் போக மாட்டார்கள். இனிப்பு மட்டுமே கிலோ கணக்கில் வாங்கிப் போகும் கலாச்சாரம் இங்கே.
**************************************************

இங்கு யாரும் யாரையும் சாப்பிட கட்டாயப்படுத்துவதில்லை. சாப்பிடும் போது இருக்கும் பல வித உணவுகளில் நமக்கு என்ன வேண்டுமோ, பிடிக்குமோ அதை சாப்பிடலாம். வேண்டுமானால் ஒரு முறை கேட்பார்கள் என்ன வேண்டும் என்று. நீங்கள் ஒன்றும் வேண்டாம் என்றால் "வேண்டாமா ஓகே" என சொல்லி முடித்து விடுவார்கள். கட்டாயப்படுத்தி போட மாட்டார்கள். இது ஒரு நல்ல பழக்கமாகவே நான் நினைத்தாலும் வீட்டில் கிடைக்கும் "இன்னும் ஒண்ணே ஒண்ணு போட்டுக்கோடா செல்லம்" என்னும் அம்மாவின் கவனிப்பெல்லாம் இந்த ஊரில் கிடையாது.
**************************************************

பெண்கள் மேக்கப் மங்கைகளாகவும், குட்டி பாப்பா கவுனுக்கு மாடல்களாகவும் இருப்பார்கள்.ஆண்கள் சென்ட் கடை ஓனர் போலவும், பான் பராக் வாயர்களாகவும் திரிவார்கள்.

எல்லாத்துக்கும் மேல யாரும் யாருக்காகவும் எதைப் பத்தியும் கவலையில்லாமல் நிம்மதியாக அவரவருக்கு பிடித்த மாதிரி வாழ்வது தான் இப்போதைய மெட்ரோ கலாச்சாரம். டெல்லி தான் அந்த கலாச்சாரத்தின் துவக்கம் என நான் நினைக்கிறேன். ஆண் பெண் சமத்துவம் புகை பிடிப்பதிலும், ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதிலும் இங்கு அதிகம் வெளிப்படுவதைக் காணலாம். இதையெல்லாம் கண்டும் காணாமல் போனால் மட்டுமே நகரின் வேகத்திற்கேற்ப நாமும் ஓட முடியும்.