கல்லூரிக்குள் நான் நுழைந்த பொழுது அது. பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தினால் அம்மா வாங்கிக் கொடுத்த எஞ்சினியரிங் சீட்டை ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டில் நேரடியாக வந்தேன். பயங்கர எதிர்பார்ப்புகள். படிப்பதற்காக முதன் முறை மதுரை. பழக்கமான ஊர் தான் என்றாலும் படிப்பதற்கு எதிர் கொள்ளப் போகும் சவால்கள் (!!??!?!?) என்னவாக இருக்கும் என்ற பயத்துடனே வந்தேன்.
முதல் நாள் வகுப்பில் நுழைந்ததுமே எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். அப்படிப் பார்க்குமளவு என்ன பிரச்சனை என எனக்குத் தெரியவில்லை. எங்கள் லெக்சரர் சக்கு மேடம். (அவர்களுக்கு எங்களின் செல்லப் (!!) பெயர்.) அவர் தான் என்னை முதலில் வகுப்பில் வரவேற்றார். மதிப்பெண்களைக் கேட்டு விட்டு, படிக்கும் பிள்ளை என நினைத்தார் போல. வகுப்பில் முதல் நாளே கடைசி பெஞ்சின் கடைசி சீட்டை தேடி அமர்ந்தேன். பின் தான் தோழிகள் ஒரு நட்புப் பார்வை பார்த்தனர். நல விசாரிப்புகள், அறிமுகங்கள் முடிந்தன. நம் பேச்சைக் கேட்ட பின்னர், நம்மைப் பிடிக்காதோர் இருப்பரா... வகுப்பிலிருந்த பத்தொன்பது பேரில் பதினெட்டு பெரும் (என்னை விடுத்து) என் தோழிகள். ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த அன்பு, இப்போது நினைத்தால் இழந்து விட்ட வலியாகத் தெரிகிறது.
சரி, கல்லூரி என்றாலே கலாய்த்தல் வேண்டாமா... மேட்டருக்கு வருவோம். வகுப்பில் ஐந்து பேர் ஹாஸ்டல் வாசிகள். எங்கள் ஐவருக்காக மற்ற தோழிகள் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களின் பேவரிட் மேடம் சக்கு. பேவரிட் என்றால் எங்களால் பாடாய்ப் படுத்தப்பட்டவர். அவர்களின் வகுப்பில் நாங்கள் செய்யாத கூத்துக்களல்ல. ஒவ்வொரு டிபன் பாக்சாய்த் திறப்பது, எல்லோருக்கும் சாக்லேட் பாஸ் செய்து சாப்பிடுவது, open hair வைத்து முடியால் ஹெட் போனை மறைத்து பாடல் கேட்பது, கிளாஸ் டெஸ்ட்களின் போது டேபிள் மேலேயே நோட் புக்கைத் திறந்து வைத்து எழுதியது, மேடம் திரும்பி போர்டில் எழுதும் நேரங்களில் வகுப்பறையிலிருந்து எழுந்து கேன்டீன் போவது என்று ஸ்ட்ரிக்டான காலேஜில் நாங்கள் செய்த சேட்டைகளுக்கு அளவில்லை.
ஒரு நாள் நானும் என் தோழி ரேவதியும் வகுப்பில் காரணமே இல்லாமல் சிரிக்க வெறுப்பாகி விட்டார் மேடம். இருவரையும் எழுப்பி காரணம் கேட்க, காரணமே இல்லை என சொல்லியும் அவரால் அதை ஏற்க முடியவில்லை. நாங்கள் அவரைத் தான் கேலி செய்து சிரிப்பதாக அவர் எண்ணிவிட்டார் போலும். அவர் தொடர்ந்து கோபத்தில் கத்த, விடாமல் நாங்கள் சிரிக்க, வெறுத்துப் போய் வகுப்பிலிருந்து வெளியேறி விட்டார். உண்மையிலேயே அன்று சிரித்ததற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.
இப்படியே எல்லா சேட்டைகளிலும் மைய ஆளாக நானிருக்க, தனியாக focus செய்யப்பட்டேன். வாரத்திற்கொரு முறை டிபார்ட்மென்ட் என்கொயரியில் நின்று, கேள்வி கேட்டவர்களே வெறுத்துப் போய் என்கொயாரி கேன்சல் செய்ததெல்லாம் உண்டு. வகுப்பில் எந்த ஒரு காதல் விவகாரம் கசிந்தாலும் அழைக்கப்படுவது நான் தான். அப்போது எனக்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் தோழிகளின் காதலுக்குத் துணை போயிருப்பேன் என்றொரு நல்ல பெயர். அப்போதும் ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விட்டு வந்து விடுவேன். அதை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு கதை ஓடும். இதனிடையே பிரச்சனை யாருக்கோ அவள் Out of focus ஆகி விடுவாள். நான் மாட்டிக் கொள்வேன்.
அப்படித் தான் ஒரு முறை தோழியின் காதல் கடிதமொன்று மேடம் கையில் கிடைத்து விட்டது. அவளை அழைக்காமல், வழக்கம் போல் என்னை அழைத்தார்கள். ஐந்து வருடமாய்த் தொடர்ந்த தோழியின் காதல் கதை அது. இருவருக்குள்ளும் ஏதோ சிறு சண்டை வர, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தான். கடிதத்தின் விவரம் எனக்கு சொன்னதும், நான் மேடமிடம் "இது ஒரு தலைக் காதல். அவன் தேவையில்லாது அவள் பின்னால் வருகிறான். ஒவ்வொரு முறையும் இவள் அவனை திட்டுவதும், அதற்குப் பின் அவன் தவறுக்கு வருந்தி இவளிடம் மன்னிப்புக் கேட்பதும் தொடர்கிறது. இதில் அவளின் தவறொன்றுமில்லை. என்ன, கோபத்தில் ஒரு நாள் அவன் இவளைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறான்." என்று சொல்லி விட்டேன்.
இதில் குழப்பம் என்னவென்றால் கடிதம் எழுதப்பட்டது சுபஸ்ரீ என்ற சுபாவிற்கு. நான் கதை சொன்னது சுபாஷினி என்ற சுபாவை வைத்து. இதில் சுபஸ்ரீக்கு எந்தக் குழப்பமுமில்லாமல் காதல் நகர, சுபாஷினி வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவளின் அண்ணன் அவளை தினமும் வந்து கல்லூரிக்கு விட்டு செல்வதும், அழைத்து செல்வதுமாக கூத்து தொடர்ந்தது. சுபாஷினிக்கு விஷயம் தெரியுமென்றாலும் அவளும் இன்னொரு சுபாவைக் காப்பத்துவதற்காக ஒன்றும் சொல்லவில்லை.இப்படி பல கதைகள் பல விதமாக மாற்றப்பட்டு வலம் வந்த நாட்களவை.
மதியம் வகுப்பிலிருக்கும் பத்தொன்பது பேரும் ஒன்றாக ஒரு பெரிய ரவுண்டாக அமர்ந்து அனைத்து வீட்டு உணவையும் ஆளுக்கொரு வாயாக சாப்பிட்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து பொறாமை கொள்ளாத டிபார்ட்மென்ட் இல்லை. ஒவ்வொருவரையும் எவ்வளவு காலை வாரினாலும் கோபம் கொள்ள மாட்டோம். நல்ல நட்பு, அதையும் தாண்டிய புரிதல், விட்டுக் கொடுக்கும் அன்பு, பொறாமையில்லாத போட்டி, உரிமையான செல்லக் கோபம், உடனே ஆகும் சமாதானம், எதிர்பார்ப்பில்லாத உதவி என அன்பு மழையில் நாங்கள் நனைந்த நாட்களவை.
கிளாஸ் முழுவதும் மாஸ் பங்கடித்தது, சினிமா தியேட்டரில் பசங்களை விட அதிக சவுண்டு விட்டு விசிலடித்துக் கத்தியது, ட்ரைனிங் போகும் போது பஸ்ஸில் செய்த சேட்டைகள், பெரியார் பஸ் ஸ்டாண்டில் டாப்படித்த பிளாட்போர்ம்கள், மதுரையில் மிச்சம் வைக்காமல் சுற்றிய ஏரியாக்கள், எக்சாமில் ஒருவருக்கொருவர் பேப்பர் பாஸ் செய்து உதவிய நேரங்கள் என அகலாத நினைவுகள் பல.
இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல், எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா", "மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.
மூன்றாம் பிறை
மறுபக்கத்துக்கு
துப்பட்டா
சிறகு முளைத்த பருவம் அது
பூப்பதற்கு காரணம் கேட்டால்
விழிக்கும் செடி போல்தான்
பின் வரிசை புன்னகைகள்
மேகத்தை விரித்து வெட்டி
நட்சத்திர பொத்தான் தைக்கும்
கனாப் பருவம்
மாறாத சோலையாய்
பால்யத்தின்
நினைவுத் தடங்கள்.
காலங்கள் கடந்துவிட்டாலும்
நம் நினைவுகளை
கடக்கையில்
எப்போதோ வந்து போன
அம்மைத் தழும்பாய்
ஏதோ ஒரு பிரிவு வலி.
