Monday, May 18, 2009

தேர்தல் கலாச்சாரம்

இரு வாரங்களுக்கு முன்பு மதுரை சென்று வந்த அம்மா பயங்கர புலம்பல். காரணம், மதுரையில் ஒரு ஓட்டிற்கு ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம். தவிர, குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பணமும், தாய்மார்களுக்கு ஒரு பட்டு சேலையும் வழங்கியிருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பதற்கேற்ப மதுரையில் அழகிரி ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து விட்டார். தேர்தல் முடிவுகள் வந்த அன்று அம்மாவின் வயிற்றெரிச்சல் இன்னும் அதிகமாகி விட்டது. " இப்படி குடியுரிமையை வியாபரமாக்கிட்டானே, போகும் போது என்னத்த கொண்டு போகப் போறானோ" என்ற அம்மாவின் வசைகள் நாட்டின் தலை எழுத்தையா மாற்றப் போகிறது. (நம்ம ஓட்டு வியாபாரமாக ஆகாத வரையில் மகிழ்ச்சி)  
**************************************************

கொளுத்தும் வெயிலைத் தணிக்கும் வகையில் பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லியில் பனி மழை பொழிந்தது. மாலை நேரங்களில் புழுதிக் காற்றுடன் கூடிய மழையால் அலுவகத்திலிருந்து வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டாலும் இரவு நேரத்தில் வெக்கை தணிந்திருந்தது. ஆனால், டெல்லி வாசிகள் மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது மறுபடியும் கொளுத்த ஆரம்பித்து விட்டார் சூரிய பகவான். இன்றைய வெப்ப நிலை 43 டிகிரி. இது இன்னும் மே மாத இறுதி மற்றும் ஜூனில் உயரும். கூலரில் சமாளித்து விடலாம் என நினைத்த எங்களுக்கு ஏ.சி. வாங்கியே தீர வேண்டும் எனக் கட்டாயம். இந்த மாத சம்பளத்தில் ஏ.சி. பண்டுக்கென தனியாக ஒதுக்கியாச்சு. சீக்கிரமே வாங்கி வர வேண்டும். குளிர் காலத்தில் ஹீட்டரும், கோடை காலத்தில் ஏ.சி.யும் இல்லாமல் டெல்லியில் இருப்பது மிகவும் கடினம். (தலைநகரில் சவுகரியங்களைப் போல் அசவுகரியங்களுக்கும் குறையில்லை)  
**************************************************

நீங்கள் எப்போதாவது ஹிந்தி சீரியல்களைப் பார்த்திருக்கிறீர்களா... நான் ரெகுலராகப் பார்க்கும் வழக்கம் இல்லை எனினும், யாராவது பார்க்கும் போது தவிர்க்க முடியாமல் பார்க்க நேர்கிறது. நம் தமிழ் சீரியல்களில் அழுகையும், வில்லத்தனமும் எந்த அளவு சகிக்க முடியாதவையாக இருக்கின்றனவோ அதை விட அதிகமாகவே ஹிந்தி சீரியல்களில் மேக்கப்பும், ஓவர் ஆக்டிங்கும் தாங்க முடியவில்லை. தூங்கி எழும் சீனில் கூட நடிகையின் தலை சீராக வாரப்பட்டு, லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐ ஷாடோ மற்றும் அனைத்து அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு ஒரு செயற்கைத்தனத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர நல்ல கதைகள் கொண்ட சில சீரியல்களில் கூட நடிகர், நடிகைகளின் நடிப்பு திகட்டுகிறது. உத்ரன் என்றொரு நல்ல கதை. அதில் வரும் சிறுமிகளின் முக பாவனைகளைப் பார்க்கும் போது ஐயோ என அலறி டிவியை அணைத்து விட தோன்றுகிறது. இது போதாதென்று எல்லா சேனல்களிலும் வரும் கலவரமூட்டும் ரியாலிட்டி ஷோக்கள். யாராவது இருவரை சண்டை போட வைத்து அதில் காசு பார்க்கும் வியாபார புத்தி, மிகுந்த எரிச்சலூட்டுகிறது. தற்போது நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள் இரண்டு. விஜய் டிவியின் " நீயா நானா? " மற்றும் " குற்றம் நடந்தது என்ன? " இதையும் சன் மற்றும் கலைஞர் டிவியினர் காப்பி அடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். (சன் மற்றும் கலைஞர் டிவியின் இம்சைகள் தாங்க முடியவில்லை. ஈயடிச்சான் காப்பி என்பதற்கு அப்படியே பொருந்துவது போல அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் participants ஐயும் காப்பி அடித்தது கொடுமையிலும் பெருங்கொடுமை)  
**************************************************

இந்த தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் சரத் பாபு பெற்ற ஓட்டுகள் 14101. அறியும் போதே பெருமையாய் இருக்கிறது. இதுவே அவருக்கு கிடைக்கும் பெரும் வெற்றியாக நான் எண்ணுகிறேன். எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் துணிச்சலாய் சுயேச்சையாய் நின்று 14101 வாக்குகளைப் பெற்ற சரத் பாபுவிற்கு வாழ்த்துக்கள். அடுத்த தேர்தலில் இன்னும் பலரது கண்கள் திறக்கும். அவர் வெற்றி பெறுவார் என நம்புவோம். (அரசியல் ஒரு சாக்கடை என்று மட்டுமே நினைத்திருக்கும் நம் நடுவே அதை சுத்தப்படுத்த அதற்குள் இறங்கிய சரத்பாபு உண்மையிலே பலரின் உள்ளங்களில் ஜெயித்து விட்டார்)

Friday, May 15, 2009

ஜலந்தரில் ஒரு வாரம்.


பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சு. காரணம் என்னன்னா, பிஸியான அலுவல்களுக்கு நடுவே ஒரு வாரம் ரிலாக்ஸா ஜலந்தர் வந்தேன், மாமியார் வீட்டுக்கு ஸாரி அம்மா வீட்டுக்கு. :) எப்போவும் ஜலந்தர் வருவதென்றால் எனக்கு மிகப் பிரியம். இங்கே அம்மா, அப்பாவுடன் அனைத்து சொந்தங்களும் ஒரே தெருவில் பத்து வீடு இடைவெளியில் இருக்கிறார்கள். எப்போதும் அனைவரின் அன்பும் அக்கறையும் நம்மீது இருக்கும்.  

மாமா பெங்காளி ஸ்வீட் ஸ்டாலில் இருந்து ரசமலாய் அனுப்புவார். மாமி வீட்டில் மாடு இருப்பதால், தினமும் பால், தயிர் மற்றும் பனீர் கொடுத்தனுப்புவார். இம்முறை மோஸி (சித்தி) வீட்டிற்கு வந்திருந்த போது டீ போட்டுக் கொடுத்ததற்காக கையில் இருநூறு ரூபாயைத் திணித்து விட்டு சென்றார். முதல் முறை நான் அவருக்கு டீ போட்டுக் கொடுத்ததற்காகவாம். "அடுத்த முறை வாங்க, சமைச்சு தரேன்"னு சொல்லி அனுப்பினேன். "சாச்சி டாஃபி" என என்னைத் தேடி வரும் அண்ணன் பசங்கள், அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பதற்காக என்னைத் திட்டும் பாபி, ருசியாய் சமைத்துக் கொடுக்கும் பூவா (அத்தை), வீட்டில் இருக்கும் பொருட்கள் போதாதென்று பிரிட்ஜை நிரப்பி வைக்கும் அப்பா, பொண்ணு பாவம்னு என் ரூமுக்கு வந்து கூல்ட்ரிங்க்ஸ் கொடுக்கும் அம்மா என மிகுந்த குஷி. இவை எல்லாவற்றையும் விட அம்மாவுக்கு நான் போகும் போதெல்லாம் என் மருமக வந்துட்டாங்குற ஒரு பெருமை. நானும் அம்மாவும் சேர்ந்து ஷாப்பிங் கிளம்பினா நல்லா சுத்திட்டு அம்மாவுக்கு நான் நிறைய பொருட்களும் எனக்கு அம்மா நிறைய கிஃப்ட்ஸும் வாங்கி வருவோம். வழியில் கோல்கப்பா, ஆலூ டிக்கி, பகோடா, சமோசா னு எல்லாம் ஒரு கட்டு கட்டிட்டு வருவேன்.  

இதோட முக்கியமான ஒரு விஷயம் பஞ்சாபி. எனக்கு மிகவும் பிடித்த மொழி. "துஸ்ஸி, அஸ்ஸி" னு வித்தியாசமா இருக்கும். ரொம்ப போல்டான லாங்குவேஜ். இன்னொரு முக்கியமான விஷயம் பஞ்சாபின் வளமை. மிகவும் செழிப்பான ஊர். பிச்சைக்காரர்கள் இருக்கலாம். ஆனால் மிகக் குறைவு. இது வரை நான் ஒருவரையும் பார்த்ததில்லை. தினமும் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு நேரம் முனிசிபல் தண்ணீர் வருகிறது. இந்த கோடையிலும் பவர் கட் இல்லை. 24 மணி நேரமும் குருத்துவாராவில் அன்ன தானம் உண்டு. இந்த மாதிரி இங்க நல்ல விஷயங்களுக்கு பஞ்சமே இல்லை.  

இங்கு சில நாட்கள் இருந்து விட்டு டெல்லி செல்லும் போது அனைத்து சொந்தங்களையும் விட்டு செல்லும் வெறுமையும், எப்படி ஏமாற்றலாம் என்ற எண்ணம் கொண்ட டெல்லிவாசிகளைப் பார்க்கும் போது கோபமும் வரும். என்ன செய்ய, அங்கு தானே வாழ்ந்தாக வேண்டும். எப்போதாவது உங்களுக்கு வடநாடு செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் கண்டிப்பாக பஞ்சாப் சென்று வாருங்கள். முக்கியமாக பஞ்சாபின் சோலே குல்சேக்காக. நினைத்தாலே சுவையூறும்... அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. நான் போறேன். டெல்லி வந்த பின் சந்திப்போம். Bye from Punjab.

Monday, May 4, 2009

Pizza Hutபோன வீகென்ட் சைனீஸ் சாப்பிடலாம்னு நொய்டாவின் பேமஸ் ரெஸ்டாரண்ட் பெர்கோஸ் போனோம். அங்கு சாப்பாடின் சுவை, உள்ளமைப்பு (Ambience) மற்றும் ட்ரிங்க்ஸ்க்காக எப்போதும் கூட்டம் உண்டு. நாங்கள் போனது ஞாயிறு டின்னருக்கு. அதனால் இடம் இல்லை. ஏற்கனவே இருபதுக்கும் மேலானோர் காத்துக் கிடக்கவே சைனீஸ் சாப்பிடலாம் என்ற எண்ணத்தை இட்டலியனாக மாற்றி, பீட்சா ஹட் போனோம்.


பீட்சா ஹட் வழக்கமான ரெஸ்டாரண்ட் தான் என்றாலும் இந்த முறை முயற்சித்தது கோல்டன் சர்ப்ரைஸ் (Golden Surprise). அங்கேயும் ஐந்து நிமிட காத்திருப்பிற்குப் பின்னரே டேபிள் கிடைத்தது. நியூ அரைவலான கோல்டன் சர்ப்ரைசில் இருந்த வெரைட்டிகளில் (Veggie Crunch, Veggie Lovers, Country Feast and Veggie Supreme) Veggie Supreme உம், ஆளுக்கொரு கோல்ட் டிரிங்கும் ஆர்டர் செய்தோம். முதலில் இது போதாது என நினைத்தாலும், சாப்பிட்டு விட்டு மீதி ஆர்டர் தரலாம் என 
நினைத்தால், இதுவே சாப்பிட முடியாத அளவுக்கு ஹெவியாக இருந்தது. (மேல இருக்குற பீட்ஸா ஹட் போட்டோ அட்டா மார்க்கெட், நொய்டா ல நைட் பத்து மணிக்கு எடுத்தது.)

இது நான் ஆர்டர் செய்த ஐஸ் டீ வித் வனிலா. ஸ்பெஷலா சொல்ல ஒண்ணும் இல்ல. ட்ரை பண்ணலாம்.

இது அவரின் மாங்கோ ட்ரிங்க். ரஸ்னா மாங்கோ ட்ரிங்க் மாதிரி இருக்குன்னார்.


இது நம்ம Veggie Supreme Golden Surprise Pizza.


Very Very Yummy. Don't miss it.


mm..... crunchy....


ஒரு பீட்ஸா, ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ் வித் டாக்ஸ் 563 ரூபாய் . ஆனா, இவ்வளவு டேஸ்டி பீட்சாவுக்கு இவ்வளவு செலவு செய்யலாம். இந்த Golden Surprise Pizza தாராளமா ரெண்டு அல்லது மூணு பேர் சாப்பிடலாம்.

சீக்கிரமே ஒரு நல்ல நார்த் இந்தியன் புட் பதிவும், சைனீஸ் பதிவும் வரப் போகுது. காத்திட்டிருங்க SK. ;)