Wednesday, January 19, 2011

மதன்-மது-அது

அவளுக்காகவே அன்று அலுவலகத்தில் பாதி நாள் விடுமுறையெடுத்து வீடு திரும்பினான் மதன். சாவியின் ‘க்ளுக்’ சத்தம் கூடக் கேட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதவைத் திறந்து அவளை ஆச்சரியப்படுத்த நுழைந்தவனின் உடல் அதிர்ந்து நடுங்கியது. ஹாலின் சுவர் ஓரமாய், முகம் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு உள்ளே மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தாள் மது. சுவாசமே ஒரு நொடி நின்று போயிருந்தவன் அவசரமாய் ஓடி அவளை விடுவித்துத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசிக்கையில் அவளை விட அவனுக்கு அதிகமாய் இதயம் படபடத்தது.

“என்னடா இதெல்லாம்” மதனின் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
“சும்மா ஒரு முயற்சி தான், ஆனா சாக மாட்டேன்”
“.........ஆமா, இது நாலாவது தடவ. எனக்கென்னவோ பயமா இருக்கு”
“பயப்படாதீங்க, ஒண்ணும் ஆகாது. இந்த தடவை நிறைய எக்ஸ்பீரியன்ஸ்” அந்த சோர்விலும் சிரித்தபடி சொன்னாள்.

கூடவே அவள் கையில் ஒரு கடிதம்.

“தற்கொலைன்னா என்ன, அது எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கத் தான் முயற்சிக்கிறேன். இதுல எதுவும் விபரீதமாகி என் உயிர் போச்சுன்னா அதுக்கு யாரும் காரணமில்லை. முழுக்க என் மரணத்திற்கு நானே காரணம். - இப்படிக்கு மது.”

முறைத்த மதனைப் பார்த்துக் கெஞ்சலாக, “இல்லைங்க, உண்மையிலேயே உயிர் போய்டுச்சுன்னா என்னால உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்திடக் கூடாதுல்ல. அதான். சாரிப்பா” என்றவளை ஓங்கி அறையலாம் போலிருந்தது அவனுக்கு.

மது அழகில் குறைந்தவளில்லை. வளைந்த புருவங்கள், நீள மூக்கு, நேர்த்தியான பல்வரிசை, தொட்டாலே சிவக்கும் நிறம், சுண்டியிழுக்கும் அழகு. எம்.ஏ.சைக்காலஜி முடித்திருந்தவள், திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாததால் வீட்டிலிருந்தாள்.

இவளைத் தனிமையில் விட்டிருப்பது தவறோ? இவளுக்கு இப்படி ஒரு விபரீத சிந்தனை எப்படி வந்தது? மரணம் என்றால் என்ன, தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் ஒருவருக்கு வருகிறது, உண்மையில் தற்கொலையின் போது அதை மேற்கொள்பவரின் மனஓட்டம் எப்படி இருக்கும் என்ற விசித்திரக் கேள்விகளுக்கு விடை தேடுகிறாளாம். பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அவள் மீதான அதீத காதல் அவளைக் கடுமையாகக் கண்டிக்கவோ தண்டிக்கவோ தடுத்தது.

திருமணமான புதிதில் அவள் திடீரென ஆழ்ந்த யோசனைக்குப் போய்விடுவதை மதன் கவனிக்கத் தவறவில்லை. அதுவே படிப்படியாய் இப்படி சோதனை முயற்சிகளுக்கு வந்த போது அவன் ரொம்பத்தான் கலங்கிப் போனான். என்னதான் சைக்காலஜி படித்திருந்தாலும் இப்படித் தற்கொலை அனுபவத்தை உணர்ந்து பார்க்க வேண்டும் என்ற அவளது விபரீதமான ஆசை கொஞ்சம் அதிகம் தான். இதுவரை 4 வெவ்வேறு தற்கொலை முறைகளை முயற்சித்து விட்டாள்.

இரண்டாவது முறை முயற்சித்த போதே இந்த விஷயத்தை அவளது பெற்றோருக்கும் தெரிவித்துக் கண்டிக்க சொன்னான். ஆனால் “கல்யாணத்துக்கு முன்னாடியும் முயற்சி செஞ்சிருக்கா. இனி நீங்களே திருத்துங்க” என்பதே அவர்களின் பதிலாகவும் இருந்தது அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

இருவரும் அப்படி ஒரு கச்சிதமான ஜோடியாகத் தான் இருந்தார்கள். விரைவாய் நகரும் பெங்களூரின் ஜெய் நகரிலிருக்கும் இந்த ஃப்ளாட்டிற்குக் குடி வந்து ஆறு மாதங்களாகின்றன. அமைதியான, சகல வசதிகளும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடம். ஆறு மாதங்களுக்கு முன்னால் தான் அவர்கள் திருமணம் பெற்றவர்களால் நிச்சயிக்கப்பட்டு தஞ்சாவூரின் ஓரியண்டல் டவர்ஸ் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது. முதல் ஒரு வருடத்திற்குக் குழந்தை வேண்டாமென முதலிரவிலேயே தீர்மானித்து விட்டனர். வழக்கமான கொஞ்சல்களுடன் இனிமையாய்ப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை. ஒரு முறை கூட அவளைப் பெயர் சொல்லி அழைத்திருக்க மாட்டானவன். செல்லம், அம்மு, குட்டி தான். அவ்வளவு நேசித்தான் அவளை.

ஐ.டி.கம்பெனியொன்றில் குறைவில்லாத சம்பளமும் கட்டுக்கடங்கா வசதிகளும் கொடுக்கப்பட்டிருந்த உயர் பதிவியிலிருந்தான் மதன். “டேய், நீ காக்க காக்க சூர்யா மாதிரி இருக்க. ஆஃபிஸ்ல எத்தனை பேர்டா சைட்டடிக்குறாளுங்க உன்னை” என அவன் மீசை இழுத்து அவள் கேட்கும் நேரங்களில் “அடியே, என்னால உன் ஒருத்தியையே சமாளிக்க முடியல. இன்னொன்னா... வேண்டாம்மா” என குறும்பாய்ச் சொல்லி அவள் காது கடிப்பான்.

பலதும் ஏனோ நினைவிற்கு வந்தது. அந்தப் பாலிதீன் பை குப்பைக்குப் போய் 3 மணி நேரமாகியும் மதன் அது தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் இருந்தான். எதுவுமே நடக்காதவளாய் மது படுக்கையில் ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்து, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

இப்படியே விட்டால் ஆபத்து என அடுத்த வாரமே அவளை கூர்க் அழைத்துச் சென்றான். இரண்டாவது தேனிலவு. மூன்று நாட்கள் முழுவதுமாய் அவளுடனிருந்தான். நிதானமாய் அவளிடம் பேசிப் புரிய வைத்தான். இனி இந்த விளையாட்டுத் தனங்களெல்லாம் கூடாது எனத் திட்டவட்டமாய்க் கூறினான். உறுதி வாங்கினான். “ப்ராமிஸ் டார்லிங்” என அவன் தலையிலடித்து அவள் சத்தியம் செய்த போது நெகிழ்ந்து போனான்.

அன்றிலிருந்து சரியாக ஆறு மாதம். அவர்களது திருமண நாள் அன்று. அவள் பரிசளித்த வெளிர் நீல நிற நேர்கோடுகளிட்ட சட்டையும், அடர் நீல நிற பேண்டும் அணிந்து கம்பீரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
“லுக்கிங் ஸ்மார்ட். ஹேப்பி வெட்டிங் அனிவெர்ஸரி. வேர் இஸ் த பார்ட்டி” என்ற நண்பனுக்குப் புன்னகைப் பரிசளித்தான்.

“பார்ட்டி இஸ் ஒன்லி வித் மை வொய்ஃப்” கண்ணடித்துப் பதிலளித்தான்.

மதிய சாப்பாடை முடித்து விட்டு அலுவலக மீட்டிங்கில் இருக்கையில் அவனது ப்ளாக்பெரி சிணுங்கியது.
“சார் இல்லி ஜெய்நகர் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரமேஷா மத்தாடுத்தாயிதினி”

மதனின் கண்கள் பெரிதாயின. கைகள் விறைத்தன. செய்தி கேட்டு சுற்றி இருந்தவர்களும் அதிர்ந்தனர்.

“பை டார்லிங்” எனக் காலையில் முத்தமிட்டு வழியனுப்பியவளின் உடலைச் சுற்றி கட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இன்ஸ்பெக்டர் ரமேஷ், “நஞ்சு தாகொண்டிதானே” என்றவாறு அவளருகிலிருந்த கடிதத்தை அவனிடம் காண்பித்தார். முதல் முறை எழுதியிருந்த அதே வாசகங்களுடனும் அவளின் அழகிய கையொப்பத்துடனும். “பாவி கல்யாண நாளன்னிக்கா இப்படிப் பண்ணி வைக்கணும்” ஃப்ளாட்டில் பலரின் முணுமுணுப்பாக இருந்தது.

ஓங்கிக் குரலெடுத்து அழுத மதனை நண்பர்கள் தேற்ற முயற்சித்துத் தோற்றனர். மறுநாள் உறவினர் அனைவரும் வந்து சேர எலெக்ட்ரிக் க்ரிமேஷன் மூலம் பஸ்பமாகிப் போனாள் மது.

ஒரே மாதம். திட்டவட்டமாகத் தற்கொலை, அதுவும் சைக்கோத் தனமான தற்கொலை. இதற்கு யாரும் காரணமல்ல என அப்பெண்ணே கைப்பட எழுதிய கடிதம். அவளின் பெற்றோரே அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததாய் வாக்குமூலமளிக்க, மதுவின் கேஸ் மூடப்பட்டு ஃபைல் அலமாரிக்குப் போனது.

ஆனால் மதனால் தான் மதுவின் நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை. அவற்றில் பலவும் இனித்தன. கடைசியாய் ஒன்று மட்டும் அவன் மனதை ரம்பமாக அறுத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் கல்யாண நாளாச்சே என்று அவளை ஆச்சர்யப்படுத்த, ரகசியமாய் அவளுக்கு வாங்கி வந்திருந்த அந்த வைர நெக்லஸை அவளது பீரோவில் ஒளித்து வைக்கும்போதுதான் அங்கே ஏற்கனவே ஒளிந்திருந்த அந்த டைரி ஒரு பூனைக்குட்டியாய் வெளிவந்து விழுந்தது.. யதேச்சையாய் அதைப் புரட்டியவன் சில பக்கங்களில் அதிர்ந்து போனான். படித்தவனின் மனசெல்லாம் ரத்தம்.

அவளது கல்லூரிக் காதலன் யுவனைப் பற்றிய ரகசிய பரிமாற்றங்கள், சந்திப்புகள், திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்கிற திட்டமிட்ட நுணுக்கம்.... மதன் உடைந்தே போனான். என் மதுவா? ஆனால்... கூடவே யுவனுடான கலர் கலர் படங்கள் ‘ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ?’ என்று கேட்டு அவனைப் பார்த்து பல்லிளித்து நகைத்தன.

விடிந்தால் முதல் திருமண நாள். இப்படி ஒரு ஏமாற்றமா? மதன் முடிவு செய்து விட்டான்.

கையிலிருந்த வில்ஸ் சுடுகையில் தன்னிலைக்கு வந்தான். அவளின் நினைவுகளால் ஆக்கிரமித்திருந்த அந்த தனிமையான மாலையில் தன்னறையிலிருந்த அவளின் டைரியை இறுதியாய் ஒரு முறை பார்த்து, எரித்து ஃப்ளஷ் செய்தான். கரும் திப்பிகளாய்க் கரைந்தன யுவனுடனான மதுவின் தொடர்ந்த காதலும் மதனை ஏமாற்றி அவர்கள் சந்தித்ததன் அடையாளங்களும். வேர்ல்பூலிலிருந்து குளிர்ந்த நீர் எடுக்கப் போனவனுக்குக் கண்ணில் பட்டது கடைசியாய் அவளுக்கு மட்டும் கலந்து கொடுத்த ரோஸ்மில்க் எசன்ஸ். சலனமற்றிருந்த வீட்டில் இவன் காதுகளில் மட்டும் அவளின் முத்த சத்தம்.

Wednesday, January 5, 2011

முத்த மார்கழிகாகிதத்தில்
காதல் செதுக்கி
நீட்டினேன் கிறுக்கலாய்.
எனக்காகவா எழுதினாய் என்கிறாய்.
என் மொழியே நீயாகிவிட்ட பின்
வார்த்தைகள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும்...

****************************************************************************************************

முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை எப்போதும்.
அதிகாலை விழிப்பு
தேனீர் வெதுப்பு
ஈரக்கூந்தல் துவட்டல்
விரையும் அலுவல் போது
வீடடையும் அந்தி
கொட்டும் இரவுப் பனி
கூடிக்களையும் சாமம்
சாத்தியம் எதுவாயினும்
உன் வன்முத்தம்
முற்றுப் புள்ளியாயிருப்பதில்லை
ஒரு போதும்

****************************************************************************************************

அசந்து உறங்கிக் கொண்டிருந்த
பின்னிரவில் அழைத்தாய்
நீளாத முன் தூறல் பேச்சு
ஒற்றைக் கன முத்தத்துடன்
துண்டித்தாய் தூரபேசியை.
நீ தூங்கிப் போனாய்.
நான் தான்-
இரவின் வளர்சிதை மாற்றத்திற்கு
விடியல் வரை சாட்சியாய்.

****************************************************************************************************

எந்தப் பூவெனத் தெரியவில்லை.
தெருவோரத்து மரத்திலிருந்து
வீதியெங்கும் வாசம் நிறைக்கிறது.
உயிருருக்கும்
மார்கழி வைகறைக் குளிரில்
மொட்டை மாடி பிறை சந்திரனுக்குத் துணையாய்
தனிமையை ரசிக்கிறேன்.
விழிமூடித் தலையுயர்த்துகிறேன்.
கூடவே-
உன் வெம்முத்தத்தை
நினைத்துக் கொள்கிறேன்.

****************************************************************************************************

எப்போதும் காதலில்
விழுவதில்லை நான்.
ஒவ்வொரு முறையும்
என்னை எழத் தான் செய்கிறது
உன் காதல்.

****************************************************************************************************

மீண்டெழும் இடம் தான்
வெவ்வேறாய் இருக்கிறது
ஈர்க்கும் உன் விழிகளில்
அணைக்கும் உன் கரங்களில்
ஊண் உறைக்கும் உன் முத்தங்களில்
உயிர் வாங்கும் உன் ஸ்பரிசத்தில்.
விரும்பித் தொலைகிறேன்
ஒவ்வொரு முறையும்
குழந்தையிடம்
அகப்படவென்றே
ஒளியும் தாயாய்.