Tuesday, July 27, 2010

வைஷ்ணு தேவி பயணம்


திருப்பதி - அனைவரும் அவசியம் செல்ல வேண்டிய இடம் என சொல்லியும் இதுவரை நான் போனதில்லை. பிதுங்கும் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் பக்தியும், நேரம் கொன்று நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொறுமையும் எனக்கில்லை என்பதே காரணம். தென்னிந்தியாவில் திருப்பதிக்கு இருக்கும் மரியாதையும், புகழும், பக்தர் கூட்டமும், காணிக்கைப் பணமும் வட இந்தியாவில் வைஷ்ணு தேவி தலத்திற்கு உண்டு. யோகியின் வேண்டுதலுக்காக போன வார இறுதியில் பயணமானோம் ஜம்முவிலிருக்கும் வைஷ்ணு தேவிக்கு.

ரயில் வண்டி போல முழு படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணம் ஆரம்பமானது. சோம்பல் கலையா ஆறு மணி தூக்கத்தில் தடாலென சத்தமும் சிதறிய கண்ணாடித் துண்டுகளின் தழுவலும் தூக்கத்தைக் கலைத்தன. எதிரே வந்த ட்ரக் ஒன்று எங்கள் பேருந்தின் பக்கவாட்டில் இடித்துக் கண்ணாடிகளை உடைத்து உள்ளே தள்ளிச் சென்றது. உடைந்த தூக்கத்துடனும், குத்தியக் கண்ணாடித் துண்டுகளுடனும் எழுந்து மீதி ஒரு மணி நேரப் பயணம் தொடர்ந்தது. கட்ரா (Katra) வைஷ்ணு தேவியின் அடிவாரத்திலிருக்கும் ஊர். அங்கு குளித்துத் தயாராகி ஆரம்பமானது பயணம்.

கட்ராவிலிருந்து ஒன்றரை கி.மீ.லிருக்கும் பாலகங்காவிற்கு ஆட்டோவிலும், பாலகங்காவிலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கும் செல்ல வேண்டும். பால கங்காவிலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கு 14 கி.மீ. தொலைவு. நடந்தும், குதிரையிலும், நால்வர் தூக்கிச் செல்லும் பல்லக்கிலும் செல்லலாம். யோகியின் திட்டப்படி எங்கள் பயணம் நடைப் பயணம். இல்லை மலையேறும் பயணம் எனலாம்.


அடர்த்தியான மலைகள், பாதைகளை மறைக்கும் பனி, “ஜெய் மாதா தி” என முழங்கும் பக்தர் கூட்டம், சோர்ந்த முகங்கள், தளர்ந்த நடை என வழி முழுக்க வித்தியாச அனுபவம். கைக்குழந்தைகளைக் கொண்டு செல்லும் தம்பதிகளிலிருந்து, தளர்ந்து மூன்று காலில் செல்லும் வயதானவர்கள் வரை பார்க்க முடிந்தது. வாழ்க்கையின் மீதான பற்றுதலும், கடவுளின் மீதான நம்பிக்கையும் எந்தளவு நம்மைக் கொண்டு செல்கின்றன என்னும் வியப்பு சூழ்ந்தே சென்றது என் பயணமும்.


மதியம் 2 மணிக்கு கட்ராவிலிருந்து ஆரம்பித்தோம். மலையை சென்று சேர்கையில் மணி நள்ளிரவு பனிரெண்டரை. பத்து மணி நேரத்திற்கும் மேலான நடை. அதுவும் ஊட்டி போன்றதொரு 60 டிகிரி சாலையில். சில இடங்களில் இந்தப் பாகை இன்னும் உயர்ந்தது. நடந்து, அமர்ந்து, களைப்பாறி, உண்டு, தாகம் தீர்த்து, வியர்வை துடைத்து, குளிரில் நடுங்கி கோவிலை அடைந்து விட்ட பொழுதில் தங்குமிடம் சேர இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் ஏற வேண்டுமென்ற போது தொண்டை கிழிய கத்தி அழ வேண்டும் போலிருந்தது.

பனிரெண்டரைக்கு அறை அடைந்து கோவில் செல்லத் திரானியில்லாததால் தூங்கிப் போனேன். 24 மணி நேரமும் கோவிலில் வழிபாடு உண்டு. காலை ஏழு மணிக்குத் துயில் களைந்து தயாராகி கீழே இறங்கிக் கோயிலை அடைகையில் மணி 10. ஒரு மணி நேரம் பொருட்களை பாதுகாக்குமிடத்தில் பாதணிகளை வைக்கக் காத்திருந்து, பதினொரு மணிக்கு பக்தர் வரிசையில் சங்கமித்தோம். எனக்கு எப்போதும் ஆகாதது கூட்டம். அதுவும் கடவுள் பெயர் சொல்லி மனிதம் மறந்த கூட்டம். வரிசையின் பின்னாலிருந்து சக மனிதனை ஏமாற்றி முந்திச் செல்லும் கூட்டத்தைப் பார்க்கையில் பொங்கி வந்தது கோபம். ஒருவர் மட்டுமே செல்ல முடிந்த ஒரு படிக்கட்டில் இறங்கும் பொழுது கடைசி படிக்கு முந்திய படியை அடைகையில் “கொஞ்சம் நின்னு வாப்பா” எனச் சொல்லிக் கேட்காத ஒருவனின் நெஞ்சைப் பிடித்துத் தள்ளுகையில் “நீயெல்லாம் எதுக்குடா கோவிலுக்கு வர்ற”ன்னு கேட்க நினைத்து நிராகரித்தேன்.

ஒரு மணி நேரக் காத்திருத்தலின் வலியுடன் செல்லுகையிலேயே யோகி சொன்னது நினைவிலைருந்தது. உள்ளே 2 நொடிகள் மட்டுமே தரிசனம் செய்ய முடியுமெனவும், உள்ளே எந்த உருவமும் கிடையாது, பூமியிலிருந்து சுயமாய் வந்த கல் பிண்டங்களைத் தொழுகிறார்களெனவும் அறிகையில் “இதுக்கா இவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்தோம்” என்ற எண்ணத்தோடு அரை மன நிலையிலேயே தரிசனம் செய்ய சென்றேன். ஆனால் 5 நொடி தரிசனத்திற்குப் பின் வெளிவருகையில் ஏதோ வாழ்க்கையின் பெரும் லட்சியத்தை அடைந்து விட்ட மன நிறைவு இருந்தது. நடந்த நடைக்கான களைப்பு நீங்கி மனமகிழ்வாயிருந்தது.

மறுபடியும் மதியம் ஒரு மணிக்கு மேலிருந்து இறங்க ஆரம்பித்தோம். இறக்கத்தில் இறங்குவதொன்றும் அவ்வளவு எளிதாயில்லை. தவிர ஐநூறு, ஐநூறாக இருந்த செங்குத்துப் படிக்கட்டுகளைக் கடக்கையில் முட்டியின் வலி, கண்களில் கண்ணீராய்ப் பொங்கியது. என் நிலை புரிந்து பாதி வழியில் குதிரையை ஏற்பாடு செய்தார் யோகி. 3 கி.மீ. தூரம் குதிரையில் கடந்தேன். யோகி பின்னால் நடந்து வந்தார். குதிரையைப் பார்க்கும் நேரமெல்லாம் ஜான்ஸிராணியாய் மாற நினைத்த கனவு, உண்மையில் ஏறுகையில் எவ்வளவு பயம் நிறைந்தது. குதிரை நடக்கையில் அதன் மேலிருக்கும் நாம் அசைகையில், கீழே விழுந்து “இருண்ட வீடு” கதையில் வரும் பையன் போல் முன் பல் போய் விட்டால் எப்படி இருக்குமென்ற நினைவு வர கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.


குதிரையிலிருந்து இறங்கி மறுபடியும் ஆயிரம் படிகள். நெஞ்சில் கல்லைத் தூக்கி வைத்தது போலிருந்தது. ஆனாலும் ஒரு கையில் தடியும், மறுகையில் என்னவரின் கரமும் இருக்கையில் படியைக் கடக்கும் நம்பிக்கை வர ஐந்தரை மணிக்கு அடிவாரமடைந்து விட்டோம். நாலரை மணி நேரத்தில் கீழே இறங்கியது சாதனை தான். எது எப்படியோ, இறங்கியதும் உடல் எடை பார்த்தேன். இரண்டு கிலோ குறைந்திருந்தது.

உதிரி:

> கீழிருந்து மேலேயும், மேலிருந்து கீழேயும் நம் சுமைகளையும், குழந்தைகளையும் தூக்கி வர “பிட்டு” என அழைக்கப்படும் கூலித் தொழிலாளிகள் கிடைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முறைக்கான கூலி இருநூற்று ஐம்பது ரூபாயும், ஒரு வேளை சாப்பாடும். அதிலும் பேரம் பேசும் மனிதர்களைப் பார்க்கையில் அருவெறுப்பாய் இருந்தது.

> இந்தப் பிட்டுகள் பொதுவாக ஜம்முவிலிருக்கும் கிராமத்துவாசிகள். அவர்களின் ஊர்கள் மலைப்பகுதியிலிருப்பதால் மலையேறி இறங்கிப் பழக்கமுடையவர்கள். இந்த வேலை செய்வதற்கு வைஷ்ணு தேவி கோவில் நிர்வாகத்திடமிருந்து அவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும்.


> நான்கு பிட்டுகள் சேர்ந்து முன்னிருவர் பின்னிருவராய் நடுவில் இருக்கையில் அமர்ந்திருக்கும் மனிதர்களை சுமந்து செல்கிறார்கள். இதற்கு “பால்கி” (பல்லக்கு) என்று பெயர். ஆத்குவாரி (பாதி தூரம்) எனும் இடத்திலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கு பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்கள் சென்றாலும் அவை அரசின் பொறுப்பிலிருப்பதால் மிக மோசமான சர்வீஸ்.

> கால் கிலோ மீட்டருக்கு ஒரு அமருமிடம், அரை கிலோ மீட்டரில் தண்ணீர்க் குழாய் வசதி, ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் உணவு விடுதிகள் என பயணிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவு நியாயமான விலையில் உள்ளது. தவிர வெளியே பலகையில் “நாங்கள் லாபமுமின்றி, நஷ்டமுமின்றி இச்சேவையை உங்களுக்களிக்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய சேவையது.

> கட்ராவிலும், வைஷ்ணு தேவி மலையிலும் அரசாங்கத்தின் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் இருப்பது சிறப்பு. தரமான சேவை, நியாயமான கட்டணத்தால் பயணிகளைக் கவர்கின்றனர்.

> பால்கியையும், குதிரையையும் அதிகம் உபயோகப்படுத்துபவர்கள் தென்னிந்தியர்களாக உள்ளனர். தென்னிந்தியர்களில் அதிகம் ஆந்திர மக்களைக் காண முடிந்தது. மொத்தக் கூட்டத்தில் அதிகம் பஞ்சாபிகளிருந்தனர். ஜம்மு பஞ்சாபிற்கு அருகிலிருப்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம்.

> வைஷ்ணு தேவி மலைக்கு அக்பர் நடந்து வந்து சென்றுள்ளதாகவும், தங்கக் குடையைக் கோவிலுக்கு அளித்ததாகவும் வரலாறு சொல்கிறது.

> வித்தியாசமான அனுபவத்திற்கும், நிறைவான விடுமுறைக்கும் வைஷ்ணு தேவி அவசியம் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்.

Wednesday, July 21, 2010

தோழியையும் குத்தலாம்


கணவனை மனைவி, காதலனை தோழி, கூட இருக்கும் காதலிக்கும் நண்பனை நண்பன், கடைசியா நமக்கு நாமேன்னு எல்லாரும் குத்திக்கிட்டாச்சு. இனி நாம ஹாஸ்டல்ல கூட இருக்குற தோழியைக் குத்தலாமா...

=> காலைல அஞ்சு மணிக்கு எழுப்பு, ஜாகிங் போகலாம்ன்னு சொல்லிட்டு நைட் நமக்கு முன்னாடியே தூங்கிப்போவா. நாமளும் 4 மணில இருந்தே எழுப்ப ட்ரை பண்ணி ரெண்டு மணி நேரமா வொர்க் அவுட் ஆகாம 6 மணிக்கு நல்லா விடிஞ்சதுக்கப்புறம் ஜாக் பண்ணிட்டு, ரூம் வந்து ரெடியாகி 8 மணிக்கு ஆஃபிஸ் கிளம்பும் போது “காலைல என்னை ஏன் எழுப்பலை”ன்னு ஒப்பாரி வெச்சு சுப்ரபாதத்தை ஆரம்பிப்பாளே, அந்த வாயிலேயே ஒண்ணு.

=> லவ்வர் கூட ஊர் சுத்திட்டு இருக்கும் போது ஊர்ல இருந்து வந்த அப்பாகிட்ட பொய் சொல்லி சமாளிக்க சொல்வாளே, அப்போ.

=> அவ பாய்ஃப்ரெண்ட்கூட அதிசயமா கோவில் போறதுக்காக நம்மோட வார்ட்ரோப்ல இருக்குற எல்லாப் புடவையையும் எடுத்துக் கட்டில்ல போட்டு, காஸ்மெடிக்ஸ் எல்லாத்தையும் ரூம்ல சிதறடிச்சுச்சு, ஒரு புயல் வந்து போன எஃபெக்ட்டை ரூம்ல குடுத்து வெச்சிருப்பாளே அப்போ.

=> நாம தூங்கிட்டிருக்குற சமயத்துல “உச், உச்”ன்னு ஒரு சத்தம் கேட்டு, ரூம்க்குள்ள எலி வந்துடுச்சுன்னு அலறியடிச்சுட்டு எழுந்திருக்கும் போது நம்மளைக் கொஞ்சமும் கண்டுக்காம அந்த சத்தம் ஃபோன்ல கண்டினியூ ஆகுமே அப்போ.

=> அவளுக்கு இண்டெர்வியூன்னு ஒரு வாரம் தூங்க விடாம ப்ரிபரேஷனுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி நம்மளைப் பாடாப்படுத்திட்டு, வேலை கிடைச்ச விஷயத்தைக் கூட நம்மகிட்ட சொல்லாம லவ்வருக்கு ட்ரீட் குடுக்கப் போவாளே அப்போ.

=> அதிசயமா கோவிலுக்குப் போகலாம் வாடின்னு கூட்டிட்டுப் போய், அங்கே காத்திட்டிருக்குற அவளோட அவன் கூட கடலை போட்டு, நம்மளை செப்பல் கடை பாதுகாப்பாளரா மாத்திக் காக்க வைப்பாளே அப்போ.

=> நாம ரொம்ப நாள் தேடிப் பொக்கிஷமா ஒரு புக் வாங்கிட்டு வந்து பேர் கூட எழுதாம ஷெல்ஃப்ல வெச்சிருக்கும் போது அதை நம்மகிட்ட கேக்காமலே எடுத்துட்டுப் போய் முந்தின நாள் சண்டைக்குப் பரிசா அவ ஆள்கிட்ட குடுத்துட்டு வந்து அதைப் பெருமையா நம்மகிட்டேயே சொல்லும் போது.

=> “பெத்தவங்களுக்குத் தெரியாம நீ இப்படிப் பண்றது தப்புடி”ன்னு நம்ம ஆரம்பிக்கும் போது தான், காதல் பத்தின தத்துவ முத்துக்களையெல்லாம் கொட்டி, காதல் பண்ணாதவங்கள்லாம் பாவிகள்ங்குற ரேஞ்சுக்கு நமக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டுத் தீவிரவாதம் பண்ணும் போது கட்டி வெச்சு உடம்பு முழுக்க குத்தணும் போல இருக்கும்.

=> பகல்ல கொளுத்துற வெயில்ல போர்வை போர்த்தித் தூங்குறது பத்தாதுன்னு ராத்திரில ஏ.சி.யை 18 டிகிரிக்குக் குறைச்சு நம்மளை நடுங்க வைப்பாளே அப்போ.

=> ஸ்மார்ட்டா இருக்குற அவளோட பாய்ஃப்ரெண்டைக் கூட்டி வந்து “இவன் தாண்டி உங்க அண்ணா”ன்னு உறவு கொண்டாடும் போது.

=> இதெல்லாத்தையும் விட, தூக்கத்துல நம்மளைக் கட்டில்ல இருந்து உருட்டி விட்டுட்டு அடுத்த நாள் காலைல கட்டோட உக்காந்திருக்கும் போது “என்னடா செல்லம், யார் செஞ்ச சதி இது”ன்னு டெரராப் பேசுவாளே அப்போ....

ஸ்ஸப்பா... முடியல. இது அவ்ளோ ஈசியா முடியற விஷயமில்லை. ம்ஹூம்.

Thursday, July 15, 2010

என்ன பதிலிருக்கிறது நம்மிடம்?

பதிவுலகம் பலருக்கும் எழுதிப் பழகுமிடமாகவும், எண்ணங்கள் பகிருமிடமாகவும் உள்ளது. அதையும் தாண்டி எப்போதும் என் மொழியையும், என் மக்களையும் என்னுடன் வைத்திருந்து என்னைத் தனிமை சிறையிலிருந்து காத்த வடிகாலாகத் தான் நான் எப்போதும் எண்ணுகிறேன். இப்பதிவுலகால் கிடைத்த நட்பு வட்டம் மிகப் பெரிது. உதவிகள் அதனினும் பெரிது. அப்படி எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத நல்லதொரு சினேகம் இலங்கைத் தோழி ஒருவர். வழக்கமாக என் பதிவுகளுக்கான அவரது நேர்மையான விமர்சனத்தை முழு நீள மெயிலாக அனுப்புவார். அவர் எனக்காக ஒதுக்கும் நேரத்தையும், பகிரும் ஆரோக்கியமான விஷயங்களையும் கண்டு ஆனந்தத்தில் திணறிப் போவேன். அவர் இன்றெனக்கு அனுப்பிய மடலின் ஒரு பகுதி இங்கே. நிஜமாய் என்ன பதிலெழுத எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி நெஞ்சைக் குத்திச் செல்கிறது.


ன்புள்ள இனிய ஸ்நேகிதிக்கும் கணவருக்கும்,
இனிமை கலந்த வணக்கங்கள் பல..
நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
தவளைக் கல் கதை.. சான்சே இலலைங்க.. கொஞ்ச நேரம் கணணித் திரையை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன்.. என் ஊரிலும் இதுபோன்ற ஒருவரை பார்த்திருக்கிறேன, பழகியிருக்கிறேன்.. எங்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டிவரும் சுந்தரி அக்காவின் தம்பி.. என்னோடு சரியான விருப்பம்.. எப்பவும் நெல்லிக்காய், முந்திரிப் பழம், அவர் வளர்த்த மாட்டுப்பால் என்று தந்து என்னோடு தங்கச்சி தங்கச்சி என்று என்னைக் கூட்டிக்கொண்டு, இல்லையில்லை தூக்கிக்கொண்டு அலைந்தவர்.. அவரின் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. என்ன உங்கள் கதை நாயகன் ராஜு அண்ணா சாலை விபத்தில் இறந்தார்.. என் அண்ணா இலங்கையில் இருக்கும் இரத்தக் காட்டேறிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு, அவர்களின் வேடிக்கைக்கு வினையாகி இறந்தார்.. அவர் இறக்கும் முன் என்னோடு பேசிவிட்டு பாதையால் சென்றார் என்பதை நான் சொன்னால் நம்ப முடிகின்றதா.. அந்த துப்பாக்கிச் சூட்டு சத்தம் இப்போதும் என் காதுகளில் கேட்கிறது.. இவர் மட்டுமா.. இவரைப் போல எத்தனை அண்ணாக்களை நான் இழந்திருக்கிறேன்.. கொஞ்ச நேரம் அவரைப் பற்றி மறந்திருந்த நினைவுகளைத் தட்டியெழுப்பி, அவரின் நினைவுகளை மன வயலில் விதைத்து விட்டீர்கள்.. இன்று வீடு சென்றதும்..அம்மாவுடன் இதுபற்றி சொல்லிக் கதைக்க வேண்டும்..

எனக்கு இரண்டு தம்பிகள் மட்டுமே என்று தெரியும் தானே.. ஏனோ எனக்கு ஒரு அண்ணா இல்லை என்ற ஏக்கம் இப்போதும் மனசில் இருக்கும்.. அதனால் எனக்கு பிடித்தவர்களை அண்ணா அண்ணா என்றழைத்து அவர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பேன்.. அவ்வாறு நான் கைபிடித்துச் சுற்றிய பலர் இப்போது என்னோடு இல்லை.. காரணம் வன்முறை.. இன்றும் என்னால் எந்தவொரு உயிருக்கும் துரோகம் செய்ய முடியாது, பாவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தை கொண்டிருப்பதற்கு.. நான் சிறுவயதில் இருந்து பார்த்த இந்த இழப்புகளும் ஒரு காரணம்..

என்னங்க நீங்க.. வேலை செய்யுற மனசையே மறக்கடிச்சுட்டீங்க.. என்னவோ போங்க.. இனி வேலை செய்யுறதுக்கு கொஞ்சம் நேரம் செல்லும்.

*******************************************

மன்னிக்கவும் தோழி. உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை. நெஞ்சைக் கிழித்துப் பாய்ந்து பரவுகிறதொரு வலி. இயலாமையின் வலி. துக்கத்தின் வலி. மௌனத்தின் வலி. இத்தனைக் கொடுமைகளையும் தினசரி வாழ்வின் பெரும்பகுதியாய் சந்தித்து வரும் உங்களுக்கு பாதுகாப்பான, பகட்டான, நிம்மதியான வாழ்வு வாழும் என்னிடம் இல்லை, எங்களிடமிருந்து எந்த பதிலுமில்லை தான். மனசாட்சி செத்துப் போய் யுகங்களாகிவிட்டன. பொய்யான வாழ்க்கையில் போலியான நாகரீகத்தில் குமுறும் உள்ளத்தை வோட்காவால் அணைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமிங்கே. ஒருவனைக் கொன்று அவன் இரத்தம் குடித்து வாழும் வாழ்வு. மனிதம் மரித்துக் கொண்டே உள்ளது. இனி ஒரு போரை எதிர்கொள்ளும் வலியையும், அதனால் வரும் சகோதர இழப்புகளையும் கடவுள் நமக்கு அளிக்காதிருப்பாராக.

Wednesday, July 14, 2010

தவளைக்கல்

“எலே ராசு, இந்தாலே இந்த ஒரு ரூவாவ வெச்சுக்க. பெறகாட்டி வாடக சைக்கிளு எடுத்து சுத்திட்டுத் திரியலாம்.”
“வேந்தாண்ணே” ஒரு விதமாய் சிரித்துக் கொண்டே மறுத்தான் இருபது வயதான ராஜு.
“அட, அண்ணே சொல்லுறேன்ல. வேணாங்குவியா... அப்படியே இந்த கடுதாசிய அந்த எதிர்த்தால வீட்டுத் திண்ணையில தாளு உருட்டிட்டிருக்குற கண்ணம்மாட்ட குடுத்துட்டு வாடா தம்பி”
“என்னாது இது” ஒரு ஆர்வமாய்க் கேட்டான் ராஜு.
“அந்தப் புள்ள தீப்பெட்டியாவிசுக்குப் போகணும்னு கேட்டுச்சு. அதுக்கு கடுதாசி வாங்கியாந்தேன் கம்பெனில இருந்து. போடான்னா வெவரம் கேட்டுட்டுத் திரியுது பாரேன் கிறுக்குப் பயபுள்ள” எடுப்பாய்ப் பொய் சொல்லி அவனை அனுப்பி வைத்தான் வெட்டியாய் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாலு.
கையில் சைக்கிள் டயரை வைத்து சுற்றிக் கொண்டே அவளை நோக்கிப் போன ராஜு கடிதத்தை அவளிடம் சேர்த்து விட்டு பாலு கொடுத்த காசுக்கு வாடகை சைக்கிளெடுக்க மணியண்ணன் சைக்கிள் கடைக்கு ஓடினான்.

“அய்யருக்குக் கஷ்ட காலம்டா. தலப் புள்ள ஆம்பளப் பய. அதுவும் புத்தி கழண்டு போய். இன்னும் இருக்குற ரெண்டு பொட்டப் புள்ளைகளக் கரை சேக்கப் பாடுபடுவாரா.. இந்த ஒண்ணைக் கட்டி மேய்ப்பாரா.. போன வாரம் கூட கெழக்கால இருந்த ஊரணிப்பக்கம் வரைக்கும் டயர ஓட்டிக்கிட்டே போன பயபுள்ள அங்கனவே என்னத்தையோ தனியா பேசிட்டு உக்காந்திட்டு இருந்துருக்கு. ரொம்ப நேரமா தேடிப்புட்டு அப்பறம் வெளக்கு வெக்க நேரம் கண்டுபிடுச்சுக் கூட்டியாந்தாய்ங்க.” வாயின் வெற்றிலை எச்சில் தெறிக்கக் கூட இருந்த வெட்டி எடுபிடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பஞ்சாயத்துத் தலைவர்.

முக்கு வீட்டுப் பெரிய தோட்ட வீடு பஞ்சாயத்துத் தலைவர் சின்னப்ப முதலியுடையது. அங்கிருக்கும் பெரிய திண்ணை தான் ஊர்ப் பெரியவர்களின் வெட்டிப் பேச்சுக்கான இடம். க்ரில் கம்பி போடப்பட்டிருந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டே வெளியே நடக்கும் கூத்துகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரக்கமின்றி ராஜுவைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். பள்ளி முடித்து அந்தப் பக்கமாக வந்த ஜெயா டீச்சர் அவர்களைத் திட்டி விட்டு, அங்கே நின்று கொண்டிருந்த அவளது முன்னாள் மாணவன் பாலுவையும் “இனிமே அவளுக்குக் கடுதாசி குடுக்கணும்னா நீ போய்க் குடு. எங்க வீட்டுப் புள்ளையக் கூப்பிட்டே தோல உரிச்சுருவேன் படவா” என சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

ராஜுவை நினைத்து அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. ராஜுவின் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளியிருக்கும் ஜெயா டீச்சருக்கு ராஜுவின் மீது இரக்கம் கலந்த அன்பு உண்டு. வீட்டு விசேஷங்களுக்கும், தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களுக்கும் ராஜுவின் அப்பா தான் சமையல், பலகாரமெல்லாம். அப்படித் தான் ரெண்டு வீட்டுக்கும் பழக்கம். ராஜுவின் அப்பா அந்த ஏரியாவுக்கே பிரபலமான சமையல்காரர்.

ஒரு மணி நேரம் சைக்கிளை உருட்டிவிட்டு ருக்குவைத் தேடி வந்த ராஜூவை முறைத்தாள் ஜெயா டீச்சர். “டீச்சதத்தா, தித்தாத. நான் ஒண்ணும் போகல. அந்த பாது பயதான் கூப்புத்தான்” அழும் தோரணையில் சொல்லும் ராஜுவை திட்ட முடியாது கலங்கிப் போனாள். டீச்சரத்தையின் ஒரே மகள் ஆறு வயது ருக்மணி, ராஜுவின் செல்லம். இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள். கடைக்கு ஒன்றாகப் போவார்கள். வீட்டில் அவள் பாட்டி முறுக்கு செய்ய செய்ய எடுத்துக் காலி செய்து கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசமின்றி நல்லதொரு சினேகம் இருவருக்குள்ளும் இருந்தது.

“துக்கு, அத்த தீத்தூள் வாங்கித்து வர தொன்னா. கடத் தெதுவுக்குப் போலாம். வா” என அவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு போவான் ராஜு. அவள் வயது பிள்ளைகளெல்லாம் ராஜுவை கேலியாகவும், மிரட்சியாகவும் பார்ப்பார்கள். ஆனால் அவளுக்கு மட்டும் அவனை மிகப் பிடித்திருந்தது. “ராஜுண்ணா, என்னை இறக்கி விடு. நானே நடந்து வரேன்” மழலை மொழியைத் திட்டுவான். “ஏய், அதெல்லாம் வேந்தாம். அப்புதம் நீ சைக்கிள்ல விலுந்துருவ. அத்த என்னய வையும்” “அய்யோ ராஜுண்ணா, நான் உன் கையைப் பிடிச்சுக்கிட்டே வரேன். விழ மாட்டேன்” கொஞ்சினாள். “சதி துக்கு” இறக்கி விட்டான். எதிரில் பனங்காய்களை சக்கரங்களாய்க் கொண்டு கை வண்டி ஓட்டி வந்த பத்து வயது சிறுவனைத் திட்டினான். “தேய், பாப்பா மேல வந்தி ஏத்துத. திமிதா...” மறுபடியும் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான்.

அவனின் ரகரத்தைக் கேலி செய்து விளையாடும் முக்குத் தெரு பிள்ளைகள் மேல் கோபம் கொண்டாள். “ராசு, நீ உன் பேர சரியா சொல்லு பார்ப்போம்”
“தாசு” - கைகொட்டி சிரித்தார்கள் பிள்ளைகள்.
“ஏய், அவனை ஏண்டா பார்த்து சிரிக்குறீங்க. அவன் என் அண்ணன். யாராச்சும் அவனை கேலி பண்ணா அப்பாகிட்ட சொல்லிக் குடுத்துடுவேன். போங்கடா, உங்க வேலையைப் பார்த்துகிட்டு. ஆளப் பாரு, வந்துட்டாய்ங்க” குழந்தைக் காளியாய்த் தெரிந்தாள்.

ஒருமுறை அவளுக்குக் காய்ச்சல் வந்து டாக்டரிடம் அழைத்துப் போயிருந்தார்கள். “நம்ம ருக்குக்குக் காச்சலாம். டீச்சர் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காக” அவன் அம்மாவிடம் கீரைக்காரி சொன்னது கேட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். ஊசி போட்டு விட்டு அழுதுகொண்டிருந்தவளின் தலையைத் தடவி விட்டு அவனும் அழுதான். அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊரணிப் பக்கம் போகாமல், டயரைத் தொடாமல், அவள் கூடவே இருந்தான். தூங்குகையில் இருமும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். உடல் சரியாகி “ராஜுண்ணா இன்னிக்கு எதிர்த்தால வேப்ப மரத்துல ஊஞ்சல் கட்டுவோமா” அவள் சொன்ன போது தான் அவன் மூச்சுவிட்டான்.

பஞ்சாயத்துத் தண்ணீர் குழாயில் கொட்டிக் கொண்டிருந்தது. தண்ணீர் பிடித்து, தொட்டி, குடம், பாத்திரமெல்லாம் நிரப்பிவிட்டு அத்தையிடம் கேட்டான் “அத்தா இன்னும் தண்ணி வதுது. எங்கே ஊத்த?”
“என் தலையில கொட்டு” அடுத்த நிமிஷம் ஒரு குடம் தண்ணீரை அவள் தலையில் கொட்டி விட்டான். ருக்கு வாய் விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பதற்காய் தொடர்ந்து தன் தலையில் தண்ணீர் கொட்டிக் கொண்டு நின்றான்.

அவளின் ஒற்றைக் குடுமிக்காய் தினமும் தன் வீட்டுக் கனகாம்பரம் பறித்து வருவான். அவளின் “ஹையா”விற்காக அவன் அப்பா செய்யும் ஜாங்கிரியைத் திருட்டுத் தனமாய்க் கொண்டு வந்து தருவான். “இவ இந்தக் கிறுக்குப் பயலோட எங்கே போய் விளையாடிட்டுக் கெடக்காளோ” எனும் பாட்டியை வஞ்சிக்க அவளின் மூக்குக் கண்ணாடியை ஒளித்து வைத்து விடுவான். இப்படியாக நாட்கள் கடந்தன. ருக்குவின் அன்றாட பள்ளிக் கதைகள் சொல்ல அவன் தேவைப்பட்டான். குடும்ப உறுப்பினர்கள் என அவள் எழுதுகையில் அண்ணன் இடத்தில் ‘ராஜு’ என எழுதினாள். இரண்டு வட்டங்கள் போட்டு நெட்டை நெட்டையாய்த் தலைமுடி வரைந்து, கூட கை கோர்த்து இருக்கும் உருவத்தில் ‘ராஜுண்ணா’ என் எழுதினாள். அவன் தங்கையின் ஊருக்கு நான்கு நாட்கள் போயிருக்கையில் அவனில்லாமல் சாப்பிட மறுத்தாள். திரும்பி வந்து அவன் பாக்கு மிட்டாய் வங்கிக் கொடுத்த போது தான் சிரித்தாள்.

குடும்பக் க்டன்கள் காரணமாய் ராஜுவின் அப்பா அவர் அண்ணனுடன் சேர்ந்து தொழில் செய்ய வேறு ஊருக்குப் போகையில் குடும்பத்தை அழைத்து செல்ல வேண்டி வந்தது. நான்கு நாட்களில் திரும்பி வருவதாய் சொல்லி ஏமாற்றி ராஜுவை அழைத்துச் சென்றார்கள். சிவந்த கண்களுடன் ருக்குவைப் பிரிந்து போனான். அவன் இல்லாமல் ருக்குவுக்கு எதுவுமே ஓடவில்லை. ஒரு முறை அம்மாவுடன் அவன் ஊருக்குப் போய் பார்த்து வந்தாள். கொஞ்சம் வளரவும், பள்ளி நண்பர்கள் மற்றும் புதிய அண்டைவீட்டு ஸ்நேகங்களால் ராஜுவின் பிரிவுத் துயர் குறைந்திருந்தது.

ருக்கு வளர்ந்து, கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தாள். ஆன்சைட்டிற்காக கலிஃபோர்னியாவும், சிட்னியும் தனியாகப் பறந்து கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் ராஜு அண்ணாவைப் பார்க்கும் ஆவல் வந்தது. அடுத்த முறை ஊர் சென்ற போது அம்மாவிடம் சொல்லி அவன் இருக்கும் ஊருக்கு சென்று ஒரு நாளைக் கழித்து விட்டு வர எண்ணிக் கிளம்பினாள்.

“ஏடி.... துக்கு” என அவளைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான். தாடையைச் சுற்றி கொஞ்சம் முடியும், சற்றே தளர்ந்த உடலும் தவிர வேறேதும் மாற்றமில்லை அவனிடம். கண்களில் நீர் திரள “ராஜுண்ணா” என்றாள். முப்பத்தேழு வருடமாய் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து மேலாடை இல்லாமல் சுற்றி வந்தவன், அவள் சட்டை வாங்கிக் கொடுத்ததும் வாழ்க்கையில் முதல் முறையாக அணிந்து பரவசமானான். அவளுக்கு சூஸ்பரி வாங்கித் தந்தான். “ராஜுண்ணா, சீக்கிரமே எனக்குக் கல்யாணம் இருக்கும். வருவ தானே” என்றாள். “கந்திப்பா. அப்பா, அப்பா வேந்தாம். நா மத்தும் வதேன்” என்றான். மாலையில் கிளம்பும் போது கலங்கிய கண்களுடன் வழியனுப்பினான். நூறு முறை டிரைவரிடம் சொன்னான், “தைவர், என் தங்கத்தி, பாத்துக் கூத்தித்துப் போ, ஆமா.. சதியா..”

சொன்ன மாதிரியே அவள் திருமணத்திலும் வாசலில் நின்று “வாங்க, வாங்க, என் தங்கத்தி கல்யாணம். உள்ள இதுக்கா. போங்க” என மகிழ்ச்சியாய் வரவேற்றான். இரண்டாண்டுகள் கழித்து அவள் மெக்ஸிகோவில் கணவனின் வேலை விஷயமாக உடனிருந்த போது அம்மாவின் ஃபோன் வந்தது “ருக்கும்மா, ராஜு நேத்து காலைல டவுன்ல தனியா நடந்து போயிட்டிருக்கும் போது ஒரு சரக்கு லாரில மோதி இறந்துட்டானாம்டா” துக்கம் அவள் தொண்டையைக் கவ்வியது. கை பிடித்தும், தோளில் சுமந்தும், பார்த்துப் பார்த்துக் கூட இருந்த அண்ணன் தவறிவிட்டான். பனங்காய் கைவண்டி அவள் மேலின் மோதிய போது மோதியவனைத் திட்டியவனின் உடல் லாரிக்கு அடியிலா... நினைக்கவே முடியவில்லை அவளுக்கு. ஏதோ ஆணிவேரைப் பிடுங்கியெறிந்த செடி போலானாள். அழப் பிடிக்கவைல்லை. தூரத்துக் கண்ணீரில் என்ன சாதித்து விடப் போகிறாள். “இல்லை, அவன் சாகலை. அவன் எப்போவும் என்கூடவே தான் இருக்கான்” திடமாய் நம்பினாள். வயிற்றிலிருக்கும் குழந்தையைத் தடவினாள் “ராஜுண்ணா”

Thursday, July 8, 2010

மதில் மேல் பூனைஹாய் மக்களே எனக்கு ஒரு நல்ல சொந்தமா, எண்ணங்களைப் பகிரும் நட்பா, தோள் தட்டி வளர்க்கும் உறவாய், ஆலோசனை வழங்கும் ஆசானாய் இந்தப் பதிவுலகம் தான் இருக்கு. என் தோழிக்கொரு பிரச்சனை. அவள் என்கிட்ட கேட்டா என்ன பண்ணன்னு. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். ஆனா அது அவளுக்கு சரியாப் படலை. உங்க ஆலோசனையையும் கொஞ்சம் அள்ளி வழங்கினா அந்தப் புள்ளைக்குப் பயன்படும். அவளே என் ப்ளாக்ல போட சொன்னதால இங்கே போடறேன். விஷயம் என்னவா... குழப்பம், சோகம் எல்லாம் எதால வரும். ஆங், அதே தான். காதல். அதுவும் ரெண்டு பக்கத்துல இருந்து வந்தா?

எனக்கு ரொம்பப் பிடிச்ச தோழி இவ. ரொம்ப நல்லவளும் கூட. நான் டெல்லி வந்தப்போ யாருமே இல்லாம பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு இருந்த சமயத்துல என்கூட பேசி, எனக்கு ஹிந்தி கத்துக் குடுத்த குரு. உத்திரப் பிரதேச மாநிலப் பொண்ணு. அவளுக்கு ரெண்டு நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவளுக்கு ரொம்பப் பிடிச்சவங்க. ஒருத்தர் A, இன்னொருத்தர் B ன்னு வெச்சுக்கலாம். A அவளோட கல்லூரி முடிஞ்சு வேலைக்காக காத்திட்டிருந்து கிடைக்காம வெக்ஸ் ஆனப்போ அவளுக்கு வேலை கிடைக்க நிறைய உதவிருக்கார். மனசளவுல வீககா இருந்தவளைத் தேத்தி நார்மல் ஆக்கினார். இவளோட நல்ல நண்பன். எப்போவும் வாழ்க்கைல ஒருத்தரை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஒரு எண்ணம் இருக்கும்ல. அப்படி அவள் நினைக்குற உறவு. அந்த மிஸ் ஆகாத உறவாக இவள் அவரின் தோழியாக இருக்க வேண்டுமென நினைத்தார் அவர். ஆனா நம்ம புள்ளையோ நட்பையும் தாண்டிப் போய் காதல்ன்னுடுச்சு. அவர் ஒத்துக்கலை. இப்படியே அவருக்கு நட்பாவும், இவளுக்குக் காதலாவும் ஒரு வருஷம் போச்சு.

நடுவுல தோழியோட இன்னொரு நண்பர் “B” அவ மேல ஃபீல் ஆகி ப்ரபோஸ் பண்ணிருக்கார். அந்த நேரத்துல “A”யினோட நிராகரிப்பாலேயும், “B”யோட அக்கறையாலும் அம்மணி ஒத்துக்கிட்டா. இவளின் காதல் Aயால் நிராகரிக்கப்பட்டது Bக்குத் தெரியும். இருந்தும் இவ தொடர்ந்து Aயோட நட்பா இருக்குறதை இவர் தடுக்கல. B அவளைக் கொஞ்ச நஞ்சமில்ல. செமையா லவ் பண்றாரு. அவளுக்குக் கால் வலின்னா டாக்டரையே அவ ஹாஸ்டலுக்குக் கூட்டிட்டு வர்றதும், அவ ஸேடா இருந்தா இவர் தாடி வளக்குறதும், அவ சிரிச்சா அதை நினைச்சு நினைச்சு இவர் தூங்காம சிரிக்குறதும்ன்னு வித்தியாசமான ஆளு. ஆனா இந்த ஓவர் அக்கறை இவளுக்குப் பிடிக்கல.

இப்படியே போயிட்டிருந்த கதைல ஒரு ட்விஸ்ட்டா, A இவளோட காதலை ஒத்துக்கிட்டதோட அவங்க வீட்லேயும் பேச சம்மதிச்சிருக்கார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடக்கக்கூடாதான்னு ஏங்கிட்டிருந்த தோழி இப்போ செம ஷாக்ல இருக்கா. கண்டிப்பா இப்போவும் இவளுக்கு B ஐ விட A வைத் தான் பிடிக்கும். விலகிப் போற உறவுகள் மேல எல்லாருக்குமே இருக்கும் ஈர்ப்பாவும் இருக்கலாம். ஆனா இவளால மிஸ்டர்.B யைக் கஷ்டப்படுத்த முடியல. ஏன்னா அவ்ரும் நல்ல நண்பர். என்ன செய்யன்னு தெரியாம என்கிட்ட வந்தா.

நான் என்ன சொன்னேன்னா, A ரொம்ப அக்கறையா இல்ல, காதலிக்கிறேன்னு சொல்லத் துணிவுமில்ல. தவிர, இப்போ கூட இவளோட கேரியர்ல கவனம் செலுத்த சொல்றாரு. ஒரு சாதாரண நண்பன் என்ன மாதிரி இருப்பானோ அப்படி தூரமா இருக்குறார். செம பொஸஸிவ். இவ வேற பையன் கிட்ட பேசினா தொலைச்சிடுவாரு. இப்படியெல்லாம் இருக்குறதால Aயை யோசிச்சு முடிவெடுக்கலாம்.

ஆனா B ரொம்பப் பிரியமானவர். காதலிச்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் இவளைத் தலைல வெச்சுக் கொண்டாடுறாரு. இவளுக்காக உருகுறாரு. ஒரு நல்ல நண்பனா இவளோட மற்ற நட்புகள் பத்திக் கேக்குறாரு, புரிஞ்சுக்குறாரு. இவளோட விருப்பம் என்னவோ அப்படியே இவ வாழணும்னு நினைக்கிறாரு. அதுனால என்னோட சப்போர்ட் Bக்குத் தான்.

மறுபடியும் என்ன குழப்பம்னா, 2 தங்கச்சிகளுக்கும், 1 தம்பிக்கும் அக்காவா இருக்குற நம்ம ஹீரோயின் ஜாதியும் பார்த்து முடிவு பண்ண வேண்டிருக்கு. ஜாதின்னதும் கல்லைத் தூக்கி எறியாதீங்க. நார்த்ல இது அதிகம் பார்ப்பாங்க. A யும் இவளும் கிட்டத்தட்ட ஒரே ஜாதிப் பிரிவுலேயும், B இவளை விட ரொம்பக் குறைவான பிரிவுலேயும் வர்றாரு. இதுனால அம்மணிக்கு அடுத்தக் குழப்பம். என் சஜெஷன் என்னன்னா, “ஜாதியெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. கல்யாணம் பண்ணி நல்லா இருந்தா அதையெல்லாம் யாரும் பாக்கப் போறதில்ல.” இப்படியெல்லாம் சொல்லி இவளைக் கன்வின்ஸ் பண்ணிட்டிருக்குற நேரம் A கால் பண்ணி ஹாய்ன்னதும் இவ ப்ரைட் ஆகிட்டா. இப்போ Aயை 100% பிடிக்கும்ன்னும், Bயை 99.9999% பிடிக்கும்ன்னு சொல்ற இவளுக்கு, அந்த .0001%க்கான காரணம் சொல்லத் தெரியல. இப்போ யார்கிட்ட நோ சொல்லி யாரைக் கல்யாணம் பண்ணிக்குறது, நோ சொல்றவர்கிட்ட மனசு நோகாம எப்படி சொல்லிக் கன்வின்ஸ் பண்றதுன்னு பயங்கரக் குழப்பத்துல இருக்கா.

இது ரெண்டுக்கும் நடுவுல வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பம். செம டெரர் ஆகி ஹாரர் மூவியை தனியாப் பார்த்தவள மாதிரி கன்னத்தைப் பிடிச்சுட்டு சோகமா லுக் விட்டுட்டு உக்காந்திருக்கா. எதுனாலேயும் அவ எடுக்கும் முடிவால பின்னாடி அவ வருத்தப்படக் கூடாதுன்னு நான் ப்ரார்த்திச்சிட்டிருக்கேன். என்னதான் பண்றது இப்போ...

Wednesday, July 7, 2010

கும்மலாம் வாங்க

தராசு - இவரின் வலைத்தளத்தின் பெயரைப் போலவே அதிலுள்ள விஷயங்களும் சரியானதாகவே இருக்கும். எந்தவொரு விஷயத்தை எழுதினாலும் முழு ஈடுபாடோடும், அதைப் பற்றிய ஆழ்ந்த அறிதலோடும் இவர் எழுதுவது எனக்கு மிகுந்த ஆச்சரியம்.

கொங்கு மண்ணில் பிறந்து, சென்னையில் கண்ணாலம் கட்டிக்கிட்டு, மத்தியப் பிரதேசத்தில் ஆணி பிடுங்கிட்டு இருக்கும் இவரின் நிஜப் பெயர் கொஞ்ச பேருக்குத் தான் தெரியும். இந்த பெஞ்சமின் பொன்னைய்யா வட்டார வழக்குப் பதிவுகளாகட்டும், ஜூகல் பந்தியில் தகவல்களைக் கொட்டுவதாகட்டும், வீட்டு அம்மணியைக் கலாய்ப்பதாகட்டும், விளையாட்டுப் பற்றிய பதிவுகளாகட்டும் ஒரு ரவுண்டு பின்னி விடுகிறார்.

மெல்லிய புன்னகையையும் கூடவே கொஞ்சம் யோசனையையும் தர வைக்கும் இவரது “ங்கொய்யால பக்கங்கள்” என் ஃபேவரிட். விவரங்கள் தெரிந்த மனிதன், நாகரீகமான நண்பன், அன்பான கணவன், அனுசரணையான மகன், தோழமையான தகப்பன் என எல்லா முகங்களிலும் தன்னை சிறப்பாக நிரூபித்துள்ள இவரை இன்னிக்கு எல்லாரும் கும்மு கும்முன்னு கும்மலாம். ஏன்னா நாற்பத்தி... சரி அது வேண்டாம், கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி தல இன்னிக்குத் தான் பொறந்தாராம். மேட்டர் அவ்ளோ தான்.

அவருக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி, அவர் மனம் நிறையக் கும்மும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பெஞ்சு, பில்டப்பு போதும்ல. ஸ்டார்ட் ம்யூசிக்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெஞ்சமின்.

Tuesday, July 6, 2010

ரொம்ப நல்ல பசங்க


போன வாரம் முழுக்க வீடு கலகலவென இருந்தது. சென்னையிலிருந்து அத்தை குடும்பமும் கூடவே அத்தை பையனின் 2 நண்பர்களும் வந்திருந்தனர். வீடு நிறைய சந்தோஷம். பசங்க 3 பேரும் கல்லூரி முதல் ஆண்டு சேரப் போகிறார்கள். எப்போவும் லேப்டாப்பும், விடியோ கேம்ஸுமாய் இருக்கும் பசங்களுக்கு இந்த ட்ரிப் செம ஜாலியா இருந்திருக்கும். அவங்களுக்கு இருந்ததோ இல்லையோ எனக்கு இருந்தது.

டெல்லி, ஆக்ரா, மதுரா எல்லாம் சுற்றிக் களைப்படையும் வேளையில் இந்தப் பசங்க மூணும் பேச ஆரம்பிச்சுதுங்கன்னா போதும். ஸ்ஸப்பா... பேசிட்டே இருக்கானுங்க. “டேய், பேசிப் பேசியே டயர்டாக மாட்டீங்களாடா”ன்னா... “நோ வே”ன்னு கோரஸ் சௌண்ட் வேற.

அஞ்சு நாட்களா பசங்க செய்த கலவரங்களில் சேம்பிளுக்கு இங்கே கொஞ்சூண்டு.

வீட்டுக்கு வந்து சேர்ந்த அன்னிக்கு “போய்க் குளிச்சிட்டு வாங்கடா. நான் ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணி வைக்கறேன்” அப்படின்னேன்.
முதலாய்க் குளிச்சிட்டு வந்த அத்தை பையன் பாலாஜி கிச்சனில் வந்து சொன்னான். “அக்கா சமைக்குறதை ஃபோட்டோ எடுத்து வைக்கணும். சில அரிய விஷயங்கள்லாம் எப்போதும் பார்க்கக் கிடைப்பதில்லை”

காலை சாப்பிட அவல் உப்மா ரெடியானதும் எல்லாரும் மூக்குப் பிடிக்கக் கொட்டிக்க்கிட்டு சொல்றாங்க. “அக்கா இருந்த பசில டேஸ்ட் கூட தெரியாமக் கொட்டிக்கிட்டோம். அப்படியே இதுக்கு நீங்க என்ன பேர் வெச்சிருக்கீங்கன்னும் சொல்லிடுங்களேன்”

நானும் என்னவரும் வீட்டில் பேசிக்கிட்டிருந்தோம். பேந்தப் பேந்த முழித்த பாலாஜி சொன்னான் “வெறும் சத்தம் மட்டும் தான் கேக்குது. ஒண்ணும் புரியல”. எங்களுக்கும் ஹிந்தி தெரியும் என அவன் நண்பர்கள் கிஷோரும், லோகேஷும் ஹிந்திப் படப் பேர்களா சொல்லி சாவடிச்சுட்டாங்க.

மெட்ரோ பயணம் அவங்களுக்குப் புதுசு. நல்லா என்ஜாய் பண்ணிப் பயணித்துக் கொண்டிருந்தோம். இடம் கிடைத்து உட்கார்ந்திருந்த ரெண்டு பேரும் அங்க நின்னுட்டிருந்த முதியவருக்கு எழுந்து இடம் கொடுத்தாங்க. நம்ம ஊட்டுப் பசங்களா இப்படின்னு புல்லரிச்சுப் போச்சு. இறங்கும் போது தான் கவனித்தேன் அந்தப் பக்கம் நின்னுட்டு இருந்த பிங்க் டாப்ஸை.

ரெட் ஃபோர்ட் போயிருந்தோம். அங்கிருந்த ஒரு இடத்தைக் காண்பித்து, “அது மன்னரோட அறை. போய்ப் பார்த்திட்டு வாங்கடா பசங்களா” என்றார் அத்தை. சோம்பேறிப் பசங்க சொன்னாங்க “ஸாரி ஆண்ட்டி. அடுத்தவங்களோட அறையை எட்டிப் பாக்குற பழக்கம் எங்களுக்கில்லை”

ன்னை அக்கான்னும், என்னவரை அங்கிள்ன்னும் கூப்பிட்டிருந்த பசங்ககிட்ட சொன்னேன். “டேய், அங்கிள்ன்னா ரொம்பப் பெரியவரா இருக்கு. அக்கா புருஷனுக்கு ஹிந்தில ‘ஜிஜூ’. அப்படியே சொல்லுங்கடா”. கொஞ்ச நேரம் கழிச்சு அவரை நான் கூப்பிட்டேன் “ஜி..” பின்னாடியிருந்து மூணு பேரும் ஒரு சேர “ஜூ”ங்குறாங்க.

போகும் வழி முழுக்கப் பேசிக்கிட்டே வந்தாங்க. பாலாஜி சொன்னான் என் தங்கையைப் பற்றி. “அக்கா, வர வர அவ ரொம்ப நல்லாப் பேச ஆரம்பிச்சுட்டா. முன்னல்லாம் ரொம்ப அமைதியா இருப்பா. இப்ப செமையா பேசுறா.”
“காலேஜ் போய்ட்டாலப்பா அதான்” நான்.
“டேய் பாலாஜி, அவ நமக்கு அத்தை பொண்ணுடா. சூப்பர்” மூணு பேரும் சேர்ந்துக்கிட்டாங்க. (இதுலெல்லாம் ஒற்றுமை தான்)
“டேய் அவ உன்னை விட ரெண்டு மாசம் பெரிய பொண்ணுடா” நினைவூட்டினேன்.
“அய்யயோ பாலாஜி, வட போச்சே” - கிஷோர்.
“டேய், நீயும் அவளை விட சின்னவன் தாண்டா” - பாலாஜி.
“உனக்கும் வட போச்சே” சந்தோஷமாக சொன்னான் லோகேஷ்.

நல்ல பசங்க இல்லை. ரொம்ப நல்ல பசங்க.

ல்லாரும் செம வெயிலில் 4 நாட்கள் சுத்தினதால் ஃபேஷியல் செஞ்சு விடறேன்னு சொல்லிருந்தேன். அதை ஞாபகப்படுத்துமாறு லோகேஷ் சொன்னான் “அக்கா, உங்களை விட அழகாயிடுவோன்னு தானே எங்களுக்கு ஃபேஷியல் பண்ணி விடாம ஏமாத்துறீங்க”
கிஷோர், “டேய், கம்ப்ளெய்ண்ட் பண்ணுவன்னு பார்த்தா, அவங்க அழகா இருக்காங்கன்னு காம்ளிமெண்ட்டா தர்ற” என முறைக்க, பின்னாடி ரெண்டு பேர்கிட்டேயிருந்தும் மொத்து வாங்கினான் லோகேஷ்.

டெல்லி மால்ஸ் காமிக்கலாம் பசங்களுக்குன்னு கூட்டிட்டுப் போனார் என்னவர். பசங்களோட ப்ரைவஸியை ஸ்பாயில் பண்ணக் கூடாதுன்னு அவங்களுக்கு டைம் குடுத்துத் தனியா அனுப்பிட்டார். நாங்க லேடீஸ் ஒரு இடத்துல தனியாவும், யோகியும் அங்கிளும் வேறொரு இடத்திலேயும் சுத்திட்டு இருந்தோம். கடைசியா எல்லாரும் சேர்ந்து வெளில வரும் போது யோகி கேட்டார் “இங்கே மால் எப்படி இருக்கு?” லோகேஷ் ஆர்வமா சொன்னான் “எங்கூர் மாதிரி தான் இருக்கு. ஆனா கல்ர்ஃபுல்லா இருக்கு” சுதாரித்தவன், “நான் கடைகளை சொன்னேன்” என்றான்.
“ஓகேடா, நீங்க நல்லவனுங்க இல்லை. ரொம்ப நல்லவனுங்க”ன்னேன் நான்.

வங்க ஊருக்குக் கிளம்புற அன்னிக்கு சப்பாத்தி பண்ணிட்டிருந்தேன். நான் டைரக்டா பர்னர்ல வெச்சுப் பண்றதைப் பார்த்த பாலாஜி சொன்னான் “வெரி குட். சப்பாத்தி சாஃப்ட்டா இருக்கு. சூப்பர். அப்படித் தான் நாங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே செய்யணும்”.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ருக்குக் கிளம்பிட்டாங்க. ரொம்ப ஃபீலிங்க்ஸோட நான் அழுதிட்டே வழியனுப்பப் போனேன். பாலாஜி ஃபைனல் டச்சாக “அக்கா, பேசாம நீங்களும் எங்க கூடவே வந்திடுங்க. ஜப் வீ மெட்ல கரீனாகபூர் டி.டி.யைக் கன்வின்ஸ் பண்ற மாதிரி நாங்க பேசிக் கன்வின்ஸ் பண்றோம். அப்படியே அவர் ஒத்துக்கலைன்னா மண்டைல ரெண்டு தட்டு தட்டி ‘போ, போய் வீட்ல யாராச்சும் பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா’ன்னு அனுப்பிடலாம்” என்றான். கண்ணீரோடே சிரித்தேன்.

ட்ரெய்ன் வந்தாச்சு. எல்லாரும் ஏறினதுக்கப்புறம் பை சொல்லிவிட்டு நாங்கள் இறங்கினோம். எங்கள் கூடவே வந்த மூணு பசங்களும் சொன்னாங்க. “அக்கா, 20-26”
நான் ரொம்ப அக்கறையா “இல்லப்பா, உங்க சீட் 49-54”
“அக்கா, நீங்க இன்னும் வளரணும். நாங்க சொன்னது இந்த கம்பார்ட்மெண்ட்ல இருக்குற பொண்ணுங்க வயசு.”
அடப்பாவி, இதுக்குத் தான் சார்ட் எப்போ ஒட்டுவாங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்களா....

செமஸ்டர் விடுமுறையில் வருவதாக சொல்லிப் போனவர்களை இப்போதிருந்தே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

Sunday, July 4, 2010

சண்டே... ஷாப்பிங் டே.


ஞாயிற்றுக் கிழமைன்னாலே எல்லா இடங்கள்லேயும் கூட்டம் அலை மோதி கடைகள் நிறைஞ்சு வழியுது. என்னோட ஷப்பிங்கெல்லாம் போன வாரமே முடிஞ்சு போச்சு. தவிர, யோகியைக் கூட்டிக்கிட்டு நான் போற ஒரே ஷாப்பிங் ப்ளேஸ் பிக் பஸார். மத்த இடங்களுக்கு அவர் கார்ட் மட்டும் போதும். பிக் பஸார்ல சாமான் அதிகம்ங்குறதால கூட சேர்ந்து எடுத்திட்டு வர அவர் வேணும். :)

ஓகே, இந்த வார ஷாப்பிங் ப்ளேஸ் பிக் பஸார். கிட்டத்தட்ட எல்லா பெரு நகரங்களிலும் பிக் பஸார் வந்துடுச்சு. அண்ணாச்சி கடைல மளிகை லிஸ்ட் குடுத்து தினசரிக் காகிதத்துல பொட்டலம் போட்டு வாங்கிட்டிருந்த கலாச்சாரத்தை இந்த மாதிரி கன்ஸ்யூமர் ஸ்டோர்ஸ் மாத்திருக்கு. எல்லாப் பொருட்களுக்கும் தனித்தனி செக்‌ஷனும், தகுந்த அலமாரிகளும் குடுத்து, கூடவே எல்லாத்தையும் நம்ம தலைல கட்டுற மாதிரி ஆஃபரும் குடுத்து அடுக்கி வெச்சிருக்காங்க. தேவையோ இல்லையோ பாக்குறதையெல்லாம் வாடிக்கையாளர்களைப் பிக் பண்ண வைக்குற இந்த ஸ்டோர் மேனேஜ்மெண்ட் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. குறைஞ்சது 2-3 மணி நேரமாவது ஆகுற பிக் பஸார் ஷாப்பிங்கை டக்குன்னு 10 நிமிஷத்துல பட்டியலிடலாமா...


* உள்ளே போனதும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காஸ்மெடிக்ஸ், ஆஃபர் இல்லாமல் பெண்களைக் கவர்வதில்லை. VLCC யின் எடைக் குறைப்பு மற்றும் அழகுப் பொருட்கள் ஸ்டோரின் முதல் பிரிவின் முதல் ஷெல்ஃபில் இடம் பிடித்தாலும் வாடிக்கையாளர்களின் கூடைகளில் வந்து சேர்வதில்லை.

* மொபைல் ஃபோன்களுக்கென ஆஃபர்களை அள்ளி வழங்கும் மொபைல் ஷாப்புகளுக்கு நடுவே பிக் பஸார் போட்டியிட முடியவில்லை என்பது உண்மை. பலரும் மாடல்கள் அறியவே மொபைல் பகுதியில் கூடி விசாரித்து செல்கின்றனர்.

* எப்போதும் ஆஃபர் இருக்கும் ஆடைகள் பகுதியும் அதிகம் கவரவில்லை. அதற்குக் காரணம் அவர்களின் ஆடைகளின் தரமெனலாம். டெல்லியின் லோக்கல் மார்கெட்டில் கிடைக்கும் 100 ரூபாய் குர்தாக்களை, பிக்பஸாரின் ஆஃபருடன் கூடிய 800 ரூபாய் குர்தாக்கள் ஜெயிக்க முடிவதில்லைஎன்பது மறுக்க முடியா உண்மை.

* ஆண்கள் பகுதியிலும், குழந்தைகள் பகுதியிலிருக்கும் உடைகள் தினசரி அல்லது வீட்டில் உபயோகிப்பதற்கு ஏற்ற விலையிலும், தரத்திலும் கிடைக்கின்றன.

* இவர்களின் தங்க ஆபரணப் பகுதியில் இதுவரை நான் நுழைந்ததில்லை. அதனால் அது பற்றிய விவரங்கள் ஏதுமில்லையெனினும் அப்பகுதி பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் இல்லாமலே ஈயாடிக் கொண்டுள்ளது.

* சமையல் பாத்திரங்கள் மற்றும் டப்பாக்களுக்கு என் சாய்ஸ் பிக் பஸார் தான். பல கம்பெனிகளின் தரமான கட்லெரீஸ் அதற்கேற்ற விலையில் சமயங்களில் ஆஃபர்களுடன் கிடைப்பது சிறப்பு.

* எலெக்ட்ரானிக்ஸ் பிரிவும் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே அறியலாம். ஆனால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அந்தப் பொருட்களைப் பற்றின போதிய அறிவு இருக்குமாறு பயிற்சி அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

* குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் இருக்குமிடத்தில் ஆஃபர்கள் இருக்குமளவு வெரைட்டி இல்லை. டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் வந்துவிட்ட நிலையில் இவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தாவிடில் இங்கு வியாபாரம் பெரிதாய் ஒன்றும் நிகழப் போவதில்லை.

* காலணிகள் பிரிவு ஓகே ரகம்.

* டூரிஸ்ட் பேக்குகள் மற்றும் ட்ராலிகளுக்கு ஆல்டைம் ஆஃபர் அளிக்குமிடம் பிக் பஸார். தவிர குறைந்தது 4-5 ப்ராண்டுகளின் ஒப்பீடு கிடைக்கும். நல்ல, தரமான பொருள் தேர்ந்தெடுக்க இது உதவும்.

* பலசரக்குப் பிரிவு தான் பிக் பஸாரின் ப்ளஸ். கடையின் மொத்தக் கூட்டத்தில் பாதிக்கு மேல் நிரம்பி வழிவது இங்கு தான். எல்லாப் பொருட்களும் கிடைப்பதும், ஒவ்வொன்றிலும் இருக்கும் ப்ராண்டுகளை ஒப்பிட்டு வாங்குவதும், அதிலும் தொடர்ந்த ஆஃபர்களும் இங்கிருக்கும் அதிக வியாபாரத்திற்குக் காரணம். டெல்லி பிக் பஸார்களில் கடந்த ஒரு வருடமாக இட்லி, தோசை மாவுகள் உள்ளேயே அரைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்கும் நல்ல வரவேற்பு.

* எல்லா வகைக் காய் கறிகளும் மலிவான விலையிலும் ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கின்றன. சீசனில்லாத பழங்கள் கூட சரியான விலையில் கிடைக்கின்றன.

* நீண்டு வழியும் கவுண்ட்டர்களும், சில பொருட்களில் பார்கோட் ஸ்கேனர்கள் வேலை செய்யாமல் ஏற்படும் தாமதமும் 2-3 மணி நேர ஷாப்பிங்கிற்குப் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அயற்சியைத் தருவதாய் உள்ளது.

* பிக் பஸாரை விட்டு வெளியேறும் வழியில் மருந்துகளும், சாப்பிடக் கடைகளும் இருப்பது நல்ல விஷயம். மருந்துக் கடையில் யாரும் நுழைகிறார்களோ இல்லையோ, சாப்பாட்டுக் கடைகளில் நல்ல கூட்டம்.

* நொய்டாவின் பிக்பஸார் அடித்தளத்தில் அமைந்திருப்பதால் வெளியே இருக்கும் மார்பிள் பெஞ்சஸ் காதலர்களுக்கு வசதியான இடம். 20 ரூபாய்க்கு பார்கார்னும், 20 ரூபாய்க்குக் குல்ஃபியும் வாங்கிக் கொண்டு அது உருக உருக இவர்களும் காதல் செய்ய வேண்டியது தான்.

* சில பல குறைகள் இருந்தாலும் எல்லாப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பதாலும், அவற்றில் ஒரு வெரைட்டி கொடுப்பதாலும், வருடம் முழுக்க இருக்கும் தொடர் ஆஃபர்களினாலும் பிக் பஸார் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சிக்குறியது. கூடவே எல்லா பலசரக்குப் பொருட்களின் மேனுஃபேக்சரிங் தேதிகளும் ஒரு மாதத்திற்குள்ளாகவே இருப்பது சிறப்பு.

யோகி பார்ப்பதையெல்லாம் வாங்க நினைப்பார். நான் அவர் கையிலெடுக்கும் ஒவ்வொன்றிற்கும் “வேண்டாம்” சொல்லிக் கொண்டே வந்தேன். சில்லி சாஸ் எடுக்கப் போன இடத்தில் ஐரோப்பியர் ஒருவர் வினிகரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி வந்து “பேபி, இனஃப். இட்ஸ் டூ மச் யூ ஹேவ் டேக்கன்” என்ற போது “ஓகே, ஓகே, ஐ ஆம் நாட் டேக்கிங் ஸ்வீட்டி” என அவர் ஓடும் போது புரிந்தது. “இந்தியாவிலிருந்து யூரோப் வரை கணவன் கணவன் தான். மனைவி மனைவி தான்”.

சந்தைக்குப் புதுசு - சச்சின் டெண்டுல்கரும் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸில் இறங்கிவிட்டார். அவரின் தயாரிப்பான Sach எனும் புது டூத் பேஸ்ட் வந்துள்ளது. 3 ஃப்ளேவர்களில் அறிமுகமாகியிருக்கும் சச் டூத் பேஸ்ட் 150 கிராம் ட்யூப், 1 டூத் ப்ரஷ், 1 சிறிய டவலுடன் சேர்த்து 55 ரூபாய்க்குக் கிடைக்கிறது.