Tuesday, November 24, 2009

பத்து விதிகள் பத்தல...

எத்தனை நாள் தான் இருக்குற சரக்கையே வெச்சு ஓட்டுறது. எதிர்ப்ப் பதிவும் போடுவோமேன்னு நினைச்சு இந்தப் பதிவு.

தராசு மட்டும் தான் விதிகள் போடுவாரா... நாங்களும் எதிர்ப் பதிவா விதிகள் போடுவோம்ல.

கணவராயிருக்கப் பத்து விதிகள்.

1. எதை நாசூக்கா சொன்னாலும் புரியாதா உங்களுக்கு. மூஞ்சிக்கு நேரா நீங்க ஒரு மக்குன்னு சொல்லி உங்க முகம் போற கோணலைப் பார்க்க வேண்டாம்னு நினைச்சா வேற வழி இல்லை போலவே.

2. "உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" ன்னு நாங்க உருகி காதல் மொழி பேசும் போது "அப்போ ஒரு கப் டீ போட்டுக் கொடேன்" ன்னு உங்களால மட்டும் எப்படி எடக்கு மடக்கா யோசிக்க முடியுது.

3. தினம் தினம் நாங்க சமைக்குறதை சப்புக் கொட்டி சாப்பிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற நீங்க, எப்போவோ அதிசயமா பிரட் டோஸ்ட் பண்ணிட்டா மட்டும் அதை புகழ்ந்து ரசிச்சு சாப்பிடுற சூட்சுமம் என்னன்னு புரிய மாட்டேங்குது.

4. நாங்க முக்கியமான விஷயம் சொல்லும் போது மட்டும் அதை விட முக்கியமா பேப்பர் படிக்குற மாதிரி நடிக்குறீங்களே. அந்த பொல்லாப்பு ஏன்...

5. காலைல வீட்டுல ரெண்டு பேரும் உருண்டு புரண்டு சண்டை போடாத குறையா ஒருத்தரையொருத்தர் திட்டி சண்டை போட்டு, அவங்கவங்க ஆபிஸ் போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் ஒண்ணுமே நடக்காத மாதிரி "அந்த கடலை பக்கோடா நல்லா செய்வியே, அதை இன்னிக்கு செய்யேன்" ன்னு கூசாம எப்படி கேக்க முடியுது....

6. எப்போவாவது உடம்பு முடியலை, சமையல் எப்படிப் பண்றதுன்னு சொல்றேன் சமைச்சிடுங்கன்னு சொன்னா, ஒரு மார்க்கமா தலையாட்டிட்டு அடுக்களையையே அமர்க்களம் பண்ணி வேலையை இரு மடங்காக்கி வைக்குறீங்களே, எங்களை பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்ல.

7. ராத்திரி மூணு மணி வரைக்கும் (ஓ, அது அதிகாலையா, சரி ராத்திரிக்கும் அதிகாலைக்கும் நடுவுல ஒரு நேரத்துல) உக்காந்து ஆபிஸ் வேலையை செய்யுற நீங்க, எப்போவாச்சும் பத்து மணிக்கே தூங்கினாக் கூட அடுத்த நாள் காலைல எழுந்து வாக்கிங் போக மாட்டேங்குறீங்களே, ஏன்...

8. நியூஸ் பேப்பர்ங்குற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதே உங்களுக்காக மாதிரி நேரம் காலமில்லாம அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் வரிவரியா முந்தின நாள் நியூஸ் பேப்பர் படிக்குறீங்களே. அப்படி அதுல என்ன தான் இருக்குன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

9. கடைக்கு சாமான் வாங்கப் போகும் போது குடுக்குற லிஸ்ட்டை வாங்கிட்டு வர்றீங்களோ இல்லையோ, புதுசா எது எதையோ வாங்கிட்டு வந்து குவிக்குறீங்களே, எப்போவாவது அடுப்படி ஷெல்ஃபும், ஃப்ரிட்ஜும் நிறைஞ்சு வழியுதே எங்க வைப்போம்னு தோணியிருக்கா.....

10. நாங்க வெளியூர் போயிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போது வீடு இருக்குற அலங்கோலத்தைப் பார்த்திட்டு எங்க கிட்ட அசடு வழியுற நீங்க, சாதாரண நாட்கள்ல கீழே ஒரு பேப்பர் இருந்தா கூட என்னமோ பெரிய கொலையே நடந்திட்ட மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறது ஏன்...

உங்களைப் பத்தி சொன்னா, பத்து விதிகள் போதல. அதுனால பத்துக்கு ஒன்னு இலவசமா இன்னொன்னும் சேர்த்துக்கலாம்.
நாங்க சந்தோஷமா ஏதாவது சொன்னாலும், சீரியஸா சொன்னாலும், சோகமா சொன்னாலும், காமெடியா சொன்னாலும் கூட உங்க ஃபேஸ் ரியாக்ஷன் சேன்ஜ் ஆகாம மங்குனி மாதிரி ஒரே எபெக்டா இருக்கே, அதுல இருக்குற வில்லத்தனம் என்ன...

Thursday, November 19, 2009

உங்களுக்கு எந்த கார் பிடிக்கும்...


மூத்தப் பதிவர் கேபிளாரின் தகப்பனார் மறைவிற்கு என் அஞ்சலியும், பிரார்த்தனைகளும். அவருக்கு வேண்டிய பொழுதில் கேட்காமலேயே ஓடோடி உதவிய மற்ற பதிவ நண்பர்களை எண்ணி வியக்கிறேன். நானும் பதிவர் ஜாதி என சொல்வதில் மகிழ்ச்சி. கேபிள் சார் நீங்கள் சீக்கிரம் இத்துயரிலிருந்து மீள மனமார பிரார்த்திக்கிறேன்.
சமீபத்தில் சகோதரரை இழந்த அரங்கப் பெருமாள் சார், நீங்களும் அத்துயரிலிருந்து மீள என் பிரார்த்தனைகள்.

****************************************************************************************************

நவம்பர் மாதம். டெல்லியில் குளிர் ஆரம்பமாகி விட்டது. நான்காண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அக்டோபரிலேயே ஸ்வெட்டருடன் நடுங்கிக் கொண்டிருந்தேன். இந்த முறை நவம்பர் பதினைந்துக்கு மேல் தான் ஆரம்பமென்றாலும் குறைவில்லாமல் நடுங்க வைக்கிறது. இன்னர் தெர்மல் வியர், ஜீன்ஸ், திக் டாப்ஸ், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா, காலில் சாக்ஸ், ஷூ, கையில் கிளவுஸ், இது எல்லாவற்றிற்கும் மேல் ஷால் என ஒரு ரேஞ்சாகத் தான் ஆபிஸ் வர வேண்டியுள்ளது. இப்போதே இப்படியென்றால் டிசம்பர், ஜனவரியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் அலுவல் வேலைகளால் இங்கிருந்து தப்பித்து வருகிறேன். இவ்வருடம் எப்படியோ...
இதற்கு நடுவே டெல்லி வந்திருக்கும் கோவைத் தோழியை இரண்டு நாட்கள் முன்னர் அழைத்து "எப்படி டெல்லிக் குளிர்" என்றேன். "கோயம்பத்தூர் மாதிரி தான் இருக்கு. ரொம்ப அதிகமில்லை" என்றார். இன்று கேட்க வேண்டும் "கோவையில் எப்போது இப்படி நடுங்கினீர்கள் என்று. (கோவை சொர்க்கம். அங்கு உடலை வருத்தும் குளிருமில்லை, வாட்டும் வெயிலுமில்லை. இது தலைநகரம் :( )

****************************************************************************************************

டெல்லியின் சாலைகளை நினைத்து மகிழும் அதே நேரத்தில், நொய்டாவின் சாலைகளை நினைத்தால் எரிச்சலே மிஞ்சும். ஆங்காங்கே உடைந்த ரோடுகள், பழுதான டிராபிக் சிக்னல்கள் என தலைவலிகள் அதிகமிங்கு. எனக்குத் தெரிந்து ஒரு டிராபிக் லைட் கடந்த ஐந்து மாதங்களாக ஒரே சிக்னலைக் காட்டிக் கொண்டுள்ளது. இதனால் ஒரு பக்கத்து வாகனங்கள் எப்போதும் இரண்டு நிமிடம் நின்று பின் சிக்னல் பழுதானதை உணர்ந்து செல்கின்றன. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இது சரிபடுத்தப்படவே இல்லை. இது குறித்து யாரிடம் புகார் கொடுக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். இந்த முறை நானே புகாரளிக்கப் போகிறேன்.
சாலைகளில் எனது அடுத்த தலைவலி, ஹார்ன் சத்தம். அடைக்கும் சாலை நெரிசலில் ஆம்புலன்ஸ் சத்தம் போல ஹார்ன் வைப்பவர்கள், அலறும் ஹார்ன் ஒலிப்பவர்கள், பைக்கில் சைலென்செர் இல்லாமல் ஓட்டுபவர்கள் இவர்களையும் ஒலி மாசுபடுத்துபவர்களாக புகாரளிக்க வேண்டும். என்ன நான் சொல்றது... (எங்க ஊருக்கு தான் இப்போ மெட்ரோ வந்துடுச்சே. இனிமே, சாலைப் போக்குவரத்து உபயோகம் குறையும்)

****************************************************************************************************

நம்ம வால் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுப் பழகலாமின்னு, சேட் பண்ண தோழிகிட்ட கேள்வி கேக்க ஆரம்பிச்சேன். அவ வெறுத்துப் போய்ட்டா. அப்படி ஒன்னும் தப்பா நான் கேட்கலையே. நீங்க சொல்லுங்க, நான் எதுவும் தப்பாவா கேட்டேன்...
Hi de, How is ur hubby babe..
Is my hubby a babe for you?
Hey stupid, U r babe. And how is ur hubby?
Haiyaa, I am a little babe??? Thank you Aunty.
Hey, I am unborn de.
So, Am I speaking to a devil?
Hey, I mean to say I am very young.
So, nee Araikuraiyaa?
.................
Ennachu chellam, Mouna virathamaa?
Offline போய் விட்டாள்.(வால், கேள்விகள் கேக்கனும்னு சொன்னீங்க. விளைவுகள் என்னன்னு சொன்னீங்களா...)

****************************************************************************************************

எனக்குக் கார்களின் மீது எப்போதும் அலாதிப் பிரியமுண்டு. பெரும்பாலான கார்ப் பிரியர்களைக் கவர்பவை பெரிய வண்டிகள் தான். எனக்கும் தான். ஆனால் இப்போது இரண்டு சிறிய கார்கள் எப்போதும் என் கண்களை அவற்றின் பக்கம் திரும்ப வைக்கின்றன. கொள்ளை அழகாய் எனக்குத் தெரிகின்றன. Skoda Fabia & Honda Jazz. சிறிய கார்ப் பிரியர்களை மட்டுமலாது பெரிய கார்ப் பிரியர்களையும் ஈர்க்கும் இது போன்ற வடிவமைப்புகள் மனதை கொள்ளை கொள்கின்றன. (இதை என்னவர் கிட்ட சொன்னா மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்குறார். Is it called husband reaction?)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்

நான் ஏற்கனவே சொன்னது போல என்னவரின் தமிழார்வம் அதிகமாகிக் கொண்டே போகிறது. போனில் அம்மாவின் பயிற்சியும், வீட்டில் என் பயிற்சியும் அவரை (அவரின் தமிழை) ஒரு ஷேப்பாக்கி வைத்திருக்கின்றன. போன வாரம் 'தமிழன்' படம் பார்த்துக் கொண்டிருந்தோம். 'ஹாட் பார்ட்டி' பாடல் வந்ததும் என்னிடம், "பிரியங்கா சோப்ரா நல்லா தானே இருக்கா. அவன் ஏன் 'பாட்டி'ன்னு பாடுறான்" அப்படினார்.'அய்யா, தமிழார்வம் உங்களுக்கு இவ்ளோ அதிகமாகக் கூடாது' என்றவாறே 'அது பாட்டி இல்ல, பார்ட்டி' என்று விளங்க வைத்தேன். இந்தத் தமிழ் பயிற்சி என் தமிழை வளர்க்கப் போகிறதா இல்லை, மறக்கடிக்கச் செய்யப் போகிறதாவெனத் தெரியவில்லை. (இப்போது எழுத்துக்களை எழுதப் பழக ஆரம்பித்துள்ளார். என்னென்ன கமெண்ட்ஸ் வரப் போகுதோ)


Wednesday, November 18, 2009

மீண்டும் வேண்டும் நாட்கள்

கல்லூரிக்குள் நான் நுழைந்த பொழுது அது. பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தினால் அம்மா வாங்கிக் கொடுத்த எஞ்சினியரிங் சீட்டை ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டில் நேரடியாக வந்தேன். பயங்கர எதிர்பார்ப்புகள். படிப்பதற்காக முதன் முறை மதுரை. பழக்கமான ஊர் தான் என்றாலும் படிப்பதற்கு எதிர் கொள்ளப் போகும் சவால்கள் (!!??!?!?) என்னவாக இருக்கும் என்ற பயத்துடனே வந்தேன்.


முதல் நாள் வகுப்பில் நுழைந்ததுமே எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். அப்படிப் பார்க்குமளவு என்ன பிரச்சனை என எனக்குத் தெரியவில்லை. எங்கள் லெக்சரர் சக்கு மேடம். (அவர்களுக்கு எங்களின் செல்லப் (!!) பெயர்.) அவர் தான் என்னை முதலில் வகுப்பில் வரவேற்றார். மதிப்பெண்களைக் கேட்டு விட்டு, படிக்கும் பிள்ளை என நினைத்தார் போல. வகுப்பில் முதல் நாளே கடைசி பெஞ்சின் கடைசி சீட்டை தேடி அமர்ந்தேன். பின் தான் தோழிகள் ஒரு நட்புப் பார்வை பார்த்தனர். நல விசாரிப்புகள், அறிமுகங்கள் முடிந்தன. நம் பேச்சைக் கேட்ட பின்னர், நம்மைப் பிடிக்காதோர் இருப்பரா... வகுப்பிலிருந்த பத்தொன்பது பேரில் பதினெட்டு பெரும் (என்னை விடுத்து) என் தோழிகள். ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த அன்பு, இப்போது நினைத்தால் இழந்து விட்ட வலியாகத் தெரிகிறது.


சரி, கல்லூரி என்றாலே கலாய்த்தல் வேண்டாமா... மேட்டருக்கு வருவோம். வகுப்பில் ஐந்து பேர் ஹாஸ்டல் வாசிகள். எங்கள் ஐவருக்காக மற்ற தோழிகள் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களின் பேவரிட் மேடம் சக்கு. பேவரிட் என்றால் எங்களால் பாடாய்ப் படுத்தப்பட்டவர். அவர்களின் வகுப்பில் நாங்கள் செய்யாத கூத்துக்களல்ல. ஒவ்வொரு டிபன் பாக்சாய்த் திறப்பது, எல்லோருக்கும் சாக்லேட் பாஸ் செய்து சாப்பிடுவது, open hair வைத்து முடியால் ஹெட் போனை மறைத்து பாடல் கேட்பது, கிளாஸ் டெஸ்ட்களின் போது டேபிள் மேலேயே நோட் புக்கைத் திறந்து வைத்து எழுதியது, மேடம் திரும்பி போர்டில் எழுதும் நேரங்களில் வகுப்பறையிலிருந்து எழுந்து கேன்டீன் போவது என்று ஸ்ட்ரிக்டான காலேஜில் நாங்கள் செய்த சேட்டைகளுக்கு அளவில்லை.


ஒரு நாள் நானும் என் தோழி ரேவதியும் வகுப்பில் காரணமே இல்லாமல் சிரிக்க வெறுப்பாகி விட்டார் மேடம். இருவரையும் எழுப்பி காரணம் கேட்க, காரணமே இல்லை என சொல்லியும் அவரால் அதை ஏற்க முடியவில்லை. நாங்கள் அவரைத் தான் கேலி செய்து சிரிப்பதாக அவர் எண்ணிவிட்டார் போலும். அவர் தொடர்ந்து கோபத்தில் கத்த, விடாமல் நாங்கள் சிரிக்க, வெறுத்துப் போய் வகுப்பிலிருந்து வெளியேறி விட்டார். உண்மையிலேயே அன்று சிரித்ததற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.


இப்படியே எல்லா சேட்டைகளிலும் மைய ஆளாக நானிருக்க, தனியாக focus செய்யப்பட்டேன். வாரத்திற்கொரு முறை டிபார்ட்மென்ட் என்கொயரியில் நின்று, கேள்வி கேட்டவர்களே வெறுத்துப் போய் என்கொயாரி கேன்சல் செய்ததெல்லாம் உண்டு. வகுப்பில் எந்த ஒரு காதல் விவகாரம் கசிந்தாலும் அழைக்கப்படுவது நான் தான். அப்போது எனக்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் தோழிகளின் காதலுக்குத் துணை போயிருப்பேன் என்றொரு நல்ல பெயர். அப்போதும் ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விட்டு வந்து விடுவேன். அதை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு கதை ஓடும். இதனிடையே பிரச்சனை யாருக்கோ அவள் Out of focus ஆகி விடுவாள். நான் மாட்டிக் கொள்வேன்.


அப்படித் தான் ஒரு முறை தோழியின் காதல் கடிதமொன்று மேடம் கையில் கிடைத்து விட்டது. அவளை அழைக்காமல், வழக்கம் போல் என்னை அழைத்தார்கள். ஐந்து வருடமாய்த் தொடர்ந்த தோழியின் காதல் கதை அது. இருவருக்குள்ளும் ஏதோ சிறு சண்டை வர, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தான். கடிதத்தின் விவரம் எனக்கு சொன்னதும், நான் மேடமிடம் "இது ஒரு தலைக் காதல். அவன் தேவையில்லாது அவள் பின்னால் வருகிறான். ஒவ்வொரு முறையும் இவள் அவனை திட்டுவதும், அதற்குப் பின் அவன் தவறுக்கு வருந்தி இவளிடம் மன்னிப்புக் கேட்பதும் தொடர்கிறது. இதில் அவளின் தவறொன்றுமில்லை. என்ன, கோபத்தில் ஒரு நாள் அவன் இவளைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறான்." என்று சொல்லி விட்டேன்.


இதில் குழப்பம் என்னவென்றால் கடிதம் எழுதப்பட்டது சுபஸ்ரீ என்ற சுபாவிற்கு. நான் கதை சொன்னது சுபாஷினி என்ற சுபாவை வைத்து. இதில் சுபஸ்ரீக்கு எந்தக் குழப்பமுமில்லாமல் காதல் நகர, சுபாஷினி வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவளின் அண்ணன் அவளை தினமும் வந்து கல்லூரிக்கு விட்டு செல்வதும், அழைத்து செல்வதுமாக கூத்து தொடர்ந்தது. சுபாஷினிக்கு விஷயம் தெரியுமென்றாலும் அவளும் இன்னொரு சுபாவைக் காப்பத்துவதற்காக ஒன்றும் சொல்லவில்லை.இப்படி பல கதைகள் பல விதமாக மாற்றப்பட்டு வலம் வந்த நாட்களவை.


மதியம் வகுப்பிலிருக்கும் பத்தொன்பது பேரும் ஒன்றாக ஒரு பெரிய ரவுண்டாக அமர்ந்து அனைத்து வீட்டு உணவையும் ஆளுக்கொரு வாயாக சாப்பிட்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து பொறாமை கொள்ளாத டிபார்ட்மென்ட் இல்லை. ஒவ்வொருவரையும் எவ்வளவு காலை வாரினாலும் கோபம் கொள்ள மாட்டோம். நல்ல நட்பு, அதையும் தாண்டிய புரிதல், விட்டுக் கொடுக்கும் அன்பு, பொறாமையில்லாத போட்டி, உரிமையான செல்லக் கோபம், உடனே ஆகும் சமாதானம், எதிர்பார்ப்பில்லாத உதவி என அன்பு மழையில் நாங்கள் நனைந்த நாட்களவை.


கிளாஸ் முழுவதும் மாஸ் பங்கடித்தது, சினிமா தியேட்டரில் பசங்களை விட அதிக சவுண்டு விட்டு விசிலடித்துக் கத்தியது, ட்ரைனிங் போகும் போது பஸ்ஸில் செய்த சேட்டைகள், பெரியார் பஸ் ஸ்டாண்டில் டாப்படித்த பிளாட்போர்ம்கள், மதுரையில் மிச்சம் வைக்காமல் சுற்றிய ஏரியாக்கள், எக்சாமில் ஒருவருக்கொருவர் பேப்பர் பாஸ் செய்து உதவிய நேரங்கள் என அகலாத நினைவுகள் பல.


இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல், எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா", "மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.


ஒரு பக்கத்துக்கு
மூன்றாம் பிறை
மறுபக்கத்துக்கு
துப்பட்டா
சிறகு முளைத்த பருவம் அது

பூப்பதற்கு காரணம் கேட்டால்
விழிக்கும் செடி போல்தான்
பின் வரிசை புன்னகைகள்

மேகத்தை விரித்து வெட்டி
நட்சத்திர பொத்தான் தைக்கும்
கனாப் பருவம்

மாறாத சோலையாய்
பால்யத்தின்
நினைவுத் தடங்கள்.

காலங்கள் கடந்துவிட்டாலும்
நம் நினைவுகளை
கடக்கையில்
எப்போதோ வந்து போன
அம்மைத் தழும்பாய்
ஏதோ ஒரு பிரிவு வலி.

Wednesday, November 11, 2009

நேய தவம்


காதல் என்றால் என்ன?

I love you சொல்லி, ஒருவருக்கொருவர் உருகி உருகி காதல் மொழி பேசி, கண்ணும் கண்ணும் கலந்து, கவிதைகளென காகிதங்களைக் கரைத்து, சாக்லெட் பேப்பர் முதல் சாரி பின் வரை சேர்த்து வைத்து, பிறந்த நாளுக்கு வாழ்த்து மடலனுப்பி, முத்தங்களை பத்திரமாய் சேமித்து, யார் சொல்லியும் கேளாமல் வீட்டை எதிர்த்து மணந்து, பின் தினம் போடும் சண்டைகளாய்த் தான் தொடர்கின்றன இன்றைய பல காதல்கள்.

இது தான் காதலா....
காதல் புனிதமானதெனில் காதல் வாழ்வு மட்டும் ஏன் சாபமாகிறது?
காதலுக்கும் ஆயுட்காலம் உண்டா...
அப்படியானால் திருமணத்திற்கு முன் வந்தது உண்மைக் காதலில்லையா...

இப்படிப் பல கேள்விகள் விவாகரத்து வரை போகும் காதல் திருமணங்களைப் பார்க்கும் போது என்னுள் எழுகின்றன.

காதல் என்றால் என்ன...
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு கொண்டு, அந்த அன்பு எந்த அளவுக்கும் மிகுந்து திகட்டி விடாமல், அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிக்காமல், துணையின் ரசனையைக் கெடுக்காமல், அவரை முழுமையாய்ப் புரிந்து கொண்ட மனமாய், எப்போதும் துணையாய் நிற்கும் தூணாய், நல்ல நட்பாய், எல்லாவற்றிற்கும் மேலாக காதல் ஒத்துக் கொள்ளப்பட்ட அன்று மனமடைந்த மகிழ்ச்சி நிலை ஒவ்வொரு நாளும் தொடர்வதாய் இருக்க வேண்டும்.

வண்ணங்களாய்த் தொடங்கிய காதல் வாழ்க்கை அழகான ஓவியம் போன்ற திருமண வாழ்க்கையாக நகருவதால் அதன் சில ரகசியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

காலைப் பொழுது எப்படி இருந்தாலும் ஒரு புன்னகையோடு உங்கள் துணையை எதிர் கொள்ளுங்கள். அது அந்த முழு நாளின் மகிழ்ச்சிக்கும் அடித்தளம்.

இருவரும் வேலைக்கு செல்வதாக இருந்தாலும், அல்லது வீட்டிலேயே வேலை அதிகமாக இருந்தாலும் கூட காலை தேநீர் நேரத்தை உங்கள் துணைக்காக (குடும்பத்திற்காக) ஒதுக்க மறக்காதீர்கள். இதற்காக பத்து நிமிடம் முன்னதாக எழுந்திருக்க வேண்டுமானால் தவறில்லை.

எதிர்பார்ப்பைக் குறைத்து பொறுப்பை உணரும் வாழ்க்கை இது.

குடும்பத்தில் ஒருவருக்குப் பிடிக்காத உணவு ஏதேனும் சமைக்கப்பட்டால், அதனுடன் சேர்த்து எளிமையான இன்னொரு உணவையும் செய்து விடுங்கள். இது உங்களுக்கு அவர் மீதான அக்கறையைக் காட்டும்.

எக்காரணம் கொண்டும் உங்கள் துணையின் குடும்பம் / உறவினர் பற்றி தவறாகப்
பேசாதீர்கள். மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக் கூடியவர்கள். ஆனால் அவர்களின் தவறை சுட்டிக் காட்ட உங்கள் பேச்சுரிமையைப் பயன்படுத்த வேண்டாம்.

உண்மையாய் இருங்கள். உங்கள் துணையே உங்களின் நல்ல நண்பராக / தோழியாக இருக்கட்டும்.

எப்போதாவது ஒருவருக்கு தனிமை தேவைப்படும் நேரங்களில் மற்றவர் அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம்.

சிறு முடிவுகள் எடுப்பதில் கூட துணையின் ஆலோசனையைக் கேளுங்கள். ஒரு மனிதரின் கருத்துகள் மதிக்கப்படும் போது, அதை மதிக்கும் உங்கள் மீதும் மதிப்பும் அன்பும் அதிகரிக்கும்.

முடிந்தவரை சுயக் கட்டுப்பாட்டில் இருங்கள். உங்களின் கோபம், வார்த்தைகள் உங்களவரையும், குழந்தைகளையும் பாதிக்காதவாறு நடந்து கொள்ளுங்கள்.

எப்போதும் வீட்டின் அனைத்து வேலைகளையும் ஒண்டியாய் செய்யும் மனைவிக்கு முடியும் போது உதவுங்கள். நீங்கள் உதவாவிடில் கூட உதவ வந்ததை நினைத்தே உங்கள் துணை மகிழ்ச்சி அடைவார்.

பெண்கள் ஆண்களுக்கு செய்யும் பெரிய உதவி, அவர்களின் அலுவல்களில் தலையிடாது இருப்பது தான். வீட்டில் என்றாவது உங்களவர் வேலை பார்க்க நேர்ந்தால் அதற்காக கோபித்துக் கொள்ளாமல், ஒரு டீ போட்டுக் கொண்டு போய் கொடுத்துப் பாருங்கள். அடுத்த நாள் ஈவினிங் ஷோ நிச்சயம்.

குழந்தைப் பராமரிப்பிலும் இருவரின் பங்கும் சமமாக இருக்கட்டும். 'அவன் அம்மா பையன், அவ அப்பா பொண்ணு' என்றில்லாமல், "எங்கள் குழந்தை(கள்)" என்று வளருங்கள்.

எப்போதாவது பிரச்சனை வரும் நேரங்களில் அதிகம் பேசி ஒருவர் ஒருவரை காயப்படுத்துவதை விட, பேசாமல் இருந்து விடுங்கள். மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை.

முடியும் போது சிறு சிறு அன்றாடத் தேவைகளைப் பரிசாகக் கொடுத்து அவர்கள் முகமடையும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.

முடிந்தால் வருடத்திற்கொரு முறை வேலைகளை மறந்து (துறந்து) துணையுடன் எங்காவது குறைந்தது மூன்று நாட்கள் சென்று வாருங்கள்.

உங்களுக்கான நேரத்தையும் அன்யோன்யத்தையும் அதிகப்படுத்தும் விஷயங்களில் அக்கறை கொள்ளுங்கள்.

திருமண வாழ்வு காதல் வாழ்வை விட பன்மடங்கு இனிக்கும்.
அப்புறம் உங்கள் துணையை 'தங்கமணி, ரங்கமணி' என்றெல்லாம் உங்களால் நிச்சயம் விளிக்க முடியாது.

சக ஹிருதயத்தின் மீது
நேயமுற்று
அந்த மென் உணர்வு
மிகுந்து கசந்து விடாமல்
பிறிதோர் சுயம் கெடாமல்
இணையின் ரசனையோடு
இழைந்து
புரிதல் பூர்த்தியும்
பூரணமுமாய் வளர்ந்து
நல் சிநேகமாய்.. .
காதலை பரிமாறிப் பெற்ற
சம்மத நொடியின் பரவசம்
ஒவ்வொரு விடியலின் போதும்
இருத்தல்
காதலுக்கு அழகு

Monday, November 9, 2009

நானும் எழுதிட்டேன்

போன வாரம் முழுக்க பதிவுலகின் முக்கியப் பதிவாக இருந்த "பிடித்தது, பிடிக்காதது" இந்த வாரம் எனக்கும். ஐந்து அதி முக்கிய நண்பர்கள் அழைத்திருக்கும் காரணத்தால் இதோ எனது "பிடித்ததும், பிடிக்காததும்"

அழைத்த நண்பர்கள் ராஜன், நாஸியா, அம்மிணி, ரோமியோபாய், பா.ராஜாராம் - அனைவருக்கும் என் நன்றிகள்.

எல்லாரும் போட்ட மாதிரியே நாமளும் போட்டாச்சு விதிகள்.

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுக்குள்ள இல்ல, பிடிச்சவங்க மட்டும் தமிழ்நாட்டுலே இருக்கனுமா...)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் (இது வேறவா.... இன்னும் யாராவது மிச்சம் இருக்காங்க இதை எழுதாம...)

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். (பிரபலமாக்கிடலாம்) அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். (இது தப்பில்லையோ...)

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். (தாண்டாது.... தாண்டாது.)

5. நீங்கள் குறிப்பிடும் பிரபலம் உயிருடன் இருக்க வேண்டும். (மறைந்த சாதனையாளர்களை மறத்தல் தகுமோ...)

இப்போ கேள்விகளுக்குள்.

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் : தமிழ்நாட்டுக்குள்ள யாருமில்ல.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும்.

2.எழுத்தாளர்
பிடித்தவர் : பாலகுமாரன். (பலருக்கும் பிடிக்காதவரெனினும் காதலை அவர் சொல்லும் அழகுக்காகப் பிடிக்கும்)
பிடிக்காதவர்: முன்னாடி தேவியின் நாவல் புத்தகம் ஒன்னு வரும். (இப்போ வருதான்னு தெரியல.) அதுல எழுதுறதா சொல்லுற எல்லோரையும்.

3.கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து. (அவரின் வைர வரிகளுக்காக.)
பிடிக்காதவர்: வாலி

4.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம், ராதா மோகன்
பிடிக்காதவர்: சேரன்

5.நடிகர்
பிடித்தவர் : கமலஹாசன்
பிடிக்காதவர்: பரத்

6.நடிகை
பிடித்தவர் : பாவனா
பிடிக்காதவர்: தமனா

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர்: தேவிஸ்ரீ பிரசாத்

8. நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர்: வெண்ணிற ஆடை மூர்த்தி

9. வில்லன் நடிகர்
பிடித்தவர் : ரகுவரன் (ஐயோ அவர் இப்போ இல்லையா....), பிரகாஷ் ராஜ்.
பிடிக்காதவர்: ஆஷிஷ் வித்யார்த்தி. (உங்களுக்கு நடிப்பே வரல. இதுல வில்லத் தனம் வேறையா.... ஐயோ, ஐயோ...)


அப்படியே நம்மையும் மதிச்சு விருது குடுத்த விதூஷ் வித்யாவிற்கு நன்றிகளும்.
அப்படியே இந்த தொடரை கண்டின்யூ பண்ண நண்பர் செல்வேந்திரனையும், தோழி விதூஷ் வித்யாவையும் அழைக்கிறேன்.

Wednesday, November 4, 2009

பல்பு மேல் பல்பு வாங்கி...


நண்பரின் பரிந்துரையின் பேரில் "2 States by Chetan Bhagat" நாவல் வாங்கி நூறு பக்கங்களுக்கு மேல் வாசித்தும் விட்டேன். முதல் முறை இந்திய ஆங்கில நாவல் படிக்கிறேன். ஆங்கிலம் ஓகே (நமக்கு புரியும்) அளவுக்கு இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்து வாசிக்க ஆரம்பித்த நாவலிது. முதலில் என் வாழ்க்கையோடு பல விஷயங்கள் ஒத்துப் போவதால் படிக்க சுவாரசியமாக இருந்தது. ஆனால், இந்தி சீரியலும் தமிழ் சீரியலும் மாத்தி மாத்திப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படிப் போகிறது. எல்லாருக்கும் பிடிக்கும் என சொல்ல முடியாத நாவல். இருந்தாலும் இந்த கதை எனக்கு ஒரு வித்தியாச அனுபவத்தை, என் நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இருப்பது மகிழ்ச்சி.
(தமிழ்ப் பொண்ணு, பஞ்சாபிப் பையன் இவர்களுக்கிடையேயான காதல், வீட்டின் மோதல், கடைசியில் கூடல் இது தான் கதை. ஒரு முறை வாசிக்கலாம்)

****************************************************************************************************

குழந்தைகளுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி எப்போதும் ஒத்துப் போவதுண்டு. என் அக்கா குழந்தை என்னிடம் சீக்கிரமே ஒட்டி விட்டாள். அவளும் நானும் கடைகளுக்குப் போவது, அம்மாவிற்குத் தெரியாமல் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, பிரிட்ஜில் இருக்கும் சாக்லேட்டுகளை யாருக்கும் தெரியாமல் ஆட்டையப் போடுவது என பல விஷயங்களில் கூட்டு சேர்ந்து என்ஜாய் செய்தோம். அவளுக்கு மேக்கப்பில் அதிக ஆர்வம். எனது மேக்கப் சாதனங்களை எடுத்து தனக்கு தோன்றிய வகையில் முகத்தில் அலங்கோலம் செய்வது தான் பிடித்த பொழுதுபோக்கு. அப்படி ஒருநாள் எடுத்தவள், "சித்தி, இது என்ன" என்றாள் எதையோ கையில் எடுத்தபடி.
"அது 'Body Wash' டா குட்டி" என்றேன்.
"எதுக்கு?"
"குளிக்க"
"அய்ய, நீங்க சோப் போட்டு குளிக்க மாட்டீங்களா" என்றாள் முகத்தை ஏதோ மாதிரி வைத்துக் கொண்டு.
"இதுவும் சோப்பு தான்டா. Liquid Soap. Like Shampoo"
"Body Wash......." என்று அதை கையில் எடுத்து வாசித்தவள், ஏதோ தெளிவடைந்தவள் போல்,
"நம்ம வீட்டுல Clothes Wash, Car Wash இருக்கே. அது மாதிரி இது Body Wash ஆ" என்றாள்.
என்ன சொல்ல?!?!?!?!?!?
(பல்பு வாங்குறதென்ன நமக்குப் புதுசா...)

****************************************************************************************************

பள்ளித் தோழியொருத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அழைத்திருந்தாள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பினனர்
"இன்னிக்கு என்னடி சமைச்ச" - நான்.
"இன்னிக்கு நான் சமைக்கல. என் மாமியார் தான் சமைச்சாங்க. ஒரு வாரமா தினமும் நான் சமைக்கிறேன்னு இன்னிக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க"
"ஐயோ பாவம், ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடனும்னு அவங்களுக்கு தோணாதா"
"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
"அப்புறம் தீபாவளிக்கு என்ன ஸ்வீட் பண்ண" அவள்.
"நான் ஒன்னும் பண்ணல. கடைல இருந்து ரெண்டு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டு வந்தேன். அவ்வளவு தான். நீ என்ன பண்ண?"
"இந்த முறை புதுசா ஒன்னு ட்ரை பண்ணேன்"
"ச்சே, அப்போ தீபாவளி ஹேப்பி தீபாவளியா இல்ல..."
"நீ என்கிட்டே அடி வாங்கப் போற. ஒருமுறை என் சமையல சாப்பிட்டுப் பாரு. அப்புறம் தெரியும் எப்படி இருக்குன்னு" என்றாள் பாவமாக.
"உன் சமையல சாப்பிட்டப்புறம் நான் இருப்பேன்னு நீ நினைக்கிறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு." என்றேன் அவளைப் போலவே நானும் பாவமாக.
அதற்கு மேலும் அவள் என்னிடம் பேசியிருப்பாளா என்ன...
(நல்ல வேளை, என் சமையல் பத்தின பேச்சு வரவில்லை)

****************************************************************************************************

போன மாதம் இந்நேரம் வெக்கையில் அவிந்து கொண்டிருந்தோம். ஒரு நிமிடம் கூட ஏ.சி. இல்லாமல் இருக்க முடியவில்லை. இன்று ஸ்வெட்டர் இல்லாமல் உட்கார முடியவில்லை. குளிர் பாடாய்ப் படுத்துகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் ஒரு மாதம் விடாமல் வைரல் ஃபீவர் வேறு. மூன்று நாளைக்கொரு முறை டாக்டரைப் பார்த்து வருகிறேன். எல்லா டெஸ்ட் ரிசல்ட்டும் ஓகே. ஆனாலும், சரியாகவில்லை. எதிர்நீச்சல் படத்தில் வருகிற இருமல் தாத்தா தோத்துப் போகும் அளவுக்கு இருமிக் கொண்டிருக்கிறேன். (எப்படியோ வீட்டு வேலைகளிலிருந்து ஒரு மாதம் விடுமுறை)

****************************************************************************************************

போன வாரம் என் நாத்தனாரின் ஒன்றரை வயது குழந்தையுடன் மூன்று நாட்கள் கழித்தேன். குழந்தைகள் வளரும் போது அவர்கள் செய்யும் எல்லாமே பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் அழகு தான். அவன் மாடியிலிருந்து கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் கீழே தூக்கி எறிந்து விட்டு "கிர்கயா (விழுந்து விட்டது)" என சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அந்த வார்த்தையை சரியாகச் சொல்லி நினைவு வைத்துக் கொள்வதற்காகவே வீட்டிலிருக்கும் எல்லா சாமான்களையும் (அவனால் தூக்க முடிந்த) தூக்கிப் போட அனுமதிக்கப்பட்டான். குழந்தைகளின் மழலை மொழி செய்யும் மேஜிக் தான் என்ன...
(ஒவ்வொரு முறையும் கீழிருந்து பொருட்களை மேலே எடுத்து வந்து நல்ல எக்சர்சைஸ் தான் எனக்கு)

****************************************************************************************************

பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் என் தங்கைக்கு காலை ஏழு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் வைப்பதாக அம்மா கூறினார். ஐந்து மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு பஸ் பிடித்து ஏழு மணி வகுப்பில் சேரும் அவள், மாலை வகுப்பு முடிந்து வீடு வந்து சேர ஒன்பதாகிறது. வீட்டில் படிக்க முடியாமல் இப்படி வகுப்பெடுப்பதன் காரணம் எனக்கு விளங்கவேயில்லை. இதனால் குழந்தைகள் அசதியுறுவார்களே தவிர படிக்க மாட்டார்கள். பள்ளிகள் யோசிக்காதா...
(இந்த சைக்காலஜி தெரியாமல் இவர்களெல்லாம் குழந்தைகளை எப்படித் தான் ஹேண்டில் செய்கிறார்களோ..)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்

என்னவரின் தமழ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. அதன் விளைவு சில காமெடிகளையும் நான் சந்திக்க வேண்டியுள்ளது. 'நாடோடிகள்' பட டிவிடி கிடைக்கவே அவரைப் படம் பார்க்க அழைத்தேன். படத்தின் பெயர் விளக்கம் கேட்டார்.
"ஊர் ஊராக சுற்றுபவர்கள் தான் நாடோடிகள்" என்றேன்.
"You mean Consultants?" என்றார்.
"!!????!!?!!!!?!?!??!?!?"
நாங்கள் ப்ராஜெக்ட் கன்சல்டன்ட்ஸ். வேலை விஷயமாக மாதத்தில் இருபது நாட்கள் ஊர் ஊராக அலைவது வழக்கம். அவர் நான் சொன்ன வார்த்தையை இப்படி புரிந்து கொள்வார் என நினைக்கவில்லை. :(

இதே போல 'அயன்' படம் பார்க்க போன போது அதற்கான பொருளைக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவராகவே 'அயர்ன்' என்று அர்த்தம் கொண்டுவிட்டார். அவரின் தமிழ் வகுப்புகள் எனக்கு நல்ல பொழுதுபோக்காக உள்ளன. :) (ஆமா, அயனுக்கு அர்த்தம் என்னப்பா...)