Showing posts with label பாலகுமாரன். Show all posts
Showing posts with label பாலகுமாரன். Show all posts

Tuesday, December 21, 2010

இனிது இனிது காதல் இனிது


இந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.

காதலின் இனிமையை, காதலின் வலியை, காதல் தரும் நிதானத்தை, காதல் தரும் உறுதியை, காதல் தரும் தெய்வீகத்தை, காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசத்தை, இடைவெளியை எளிதாய், அருகிலேயே அமர்ந்து தோள் பற்றி நண்பன் சொல்வதற்கு நிகராய் சொல்கிறார் பாலகுமாரன்.

காதலில் எத்தனை வகை, எப்படியெல்லாம் காதல் வரும், எதையெல்லாம் காதலெனலாம், காதலில் வெற்றி எது, காதலில் தோல்வியுண்டா... என காதலைப் பற்றிய எல்லாக் கேள்விகளையும் தெளிவாய், பொறுமையாய் அவர் சந்தித்தக் காதல் அனுபவங்கள் கொண்டு அழகாய் விளக்கியுள்ளார். எங்குமே யாருக்குமே அறிவுரை கூற அவர் எத்தனிக்கவில்லை. முழுக்க முழுக்க வாழ்க்கைப் பாடங்களை புத்தக வரிகளாய்க் கொடுத்துள்ளார்.

அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கோர்வையின்றி மடித்து மடித்தெழுதி, சினிமாத்தனமான காதலை இந்தத் தலைமுறைக்குத் திணிக்கும் சில காதல் கவிஞர்களென அழைக்கபடுகிறவர்கள் மத்தியில் காதலின் உண்மையை, உன்னதத்தைத் தெரிவிக்கும் இந்நூலை ஒரு வருடமாக என் வீட்டுப் புத்தக அலமாரியில் வைத்துப் பூட்டிய பாவியானேன். மிஞ்சிப் போனால் நான்கே நாட்களில் இரண்டு பாகங்களையும் முடித்து விடுமளவு எளிமையான மொழி. வாழ்க்கையின் அர்த்தத்தைத் அறிவித்துப் போகிறது.

புத்தகத்தில் அடிக்கோடிட வேண்டிய வரிகள் என்றில்லாது மொத்தப் புத்தகமுமே சம்பவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் வந்து வந்து போகிறது. நிச்சயம் நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்.

பாலகுமாரன் பெண்களின் மனதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் என அம்மாவில் ஆரம்பித்து அனேகமாய் அவரை வாசித்தவர்கள் அனைவரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் மனதை மட்டுமல்ல. மனித மனதை, மனித மனத்தின் உணர்வுகளை நன்கு புரிந்தவரென்பதை இப்புத்தகத்திலும் காட்டியுள்ளார்.

காதலிப்பவர்கள், காதலை வெறுப்பவர்கள், காதலைத் தூற்றுபவர்கள், போற்றுபவகள், கொண்டாடுபவர்கள், காதலில் திளைப்பவர்கள், காதலைக் கடந்தவர்கள் என எல்லாராலும் விரும்பப்படும் புத்தகமிதென்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இது காதலருக்கான புத்தகமல்ல. காதலின் புத்தகம்.

பெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.

புத்தகம் - இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2)
ஆசிரியர் - பாலகுமாரன்.
வெளியீடு - விசா பதிப்பகம்.
விலை - ரூ. 75 + ரூ. 68/-
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 1991.