Friday, June 19, 2009

எல்லாத்தையும் பார்த்திட்டோம் இதைப் பார்க்க மாட்டோமா.....

தேர்வு முடிவுகள் என்பது வாழ்வின் பல விஷயங்களைத் தீர்மானிக்கப் போவது. ஆனால், அதற்காக நாம் ஏன் தேவையில்லாமல் அல்லல்பட வேண்டும். வருடம் முழுக்கப் படித்துக் கிழித்து தேர்வறையில் உள்ள மூன்றே மணி நேரத்தில் தோன்றியதையெல்லாம் எழுதி (இதில் நடுவில் சினிமாப் பாடல்கள் வேறு நினைவிற்கு வந்து தொலையும்) டென்ஷனாக கட்டிக் கொடுத்து விட்டு வெளியே வந்தால் அங்கிருக்கும் சில படிப்ஸ்களின் தொல்லை தாங்க முடியாது. "விக்கி, நீ இந்த கேள்விக்கு என்ன பதில் எழுதின. ஏய், இந்த க்வெஸ்டின் சிலபஸ்லேயே இல்லபா. ஐயோ எனக்கு ஒரு மார்க் போய்டுச்சேனு" சீன் போடுற பத்மாக்கள பார்த்தா கோவமா வரும். இதையெல்லாம் ஒரு வழியா தாண்டி குதிச்சு வந்து நின்னா, "லீவ்ல கோச்சிங் கிளாஸ் போ. ஹிந்தி க்ளாஸ் போ" னு தொல்லை வேற. இதையும் நம்ம சித்தி அல்லது மாமா, அவங்க வீட்டுக்கு அழைப்பு விடுத்து நம்மள தப்பிக்க வச்சிடுவாங்க.


அங்கே போய் நல்லா அருவியிலேயும், காட்டுலேயும் ஆட்டம் போட்டு ரிசல்ட் டைம்ல வீடு வந்து சேர்ந்தா நம்ம குடும்பமே பாச மலர் சிவாஜி ரேஞ்சுக்கு பீலிங்ல உக்காந்து இருப்பாங்க. "என்ன மார்க் எடுக்கப் போறாளோ, நம்மள தலை நிமிர வைப்பாளா அல்லது ஒரேடியா குனிஞ்சே நடக்க வச்சிருவாளா.... அடுத்து படிக்க வைக்க நல்ல ஸ்கூல் அல்லது காலேஜ் கிடைக்குமா.... " இது போன்ற வசனங்களைத் தாங்க வேண்டியிருக்கும். இதுக்கு நடுவுல தங்கச்சி வேற இளிப்சைக் குடுத்திட்டு நிப்பா.


எனக்கும் ரிசல்ட் வந்தது. 2 முறை. முதல்ல பத்தாம் வகுப்புல. பள்ளிக்குப் பக்கத்திலேயே என் வீடு. அப்போவெல்லாம் இன்டர்நெட்ல மார்க் பாக்குறது குறைவு. நான் என் அண்ணா கிட்ட நம்பர் குடுத்து, அவன் அதை எடுத்துட்டு சிவகாசி போய்ட்டான் மார்க் பார்க்க. வீட்டுல ஒரே டென்ஷன். ஐயோ, என்ன மார்க் வரப் போகுதோ. மாமா பையன விட குறைய எடுத்திட்டா அம்மா கேசரி பண்ணித் தர மாட்டாளே. சித்தி பொண்ணை விட குறைஞ்சிட்டா, அவ அதை சொல்லிக் காமிப்பாளோனு என்னென்னவோ மனசில ஓடுது. ரிசல்ட் வந்திடுச்சு. விக்னா 92% னு அண்ணன் போன் பண்ணி சொல்லிட்டான். மாமாவும் போன் பண்ணி வாழ்த்திட்டார். இருந்தாலும் மருமகள நேர்ல வந்து வாழ்த்துறேன்னு அம்மா கிட்ட கேசரி பண்ண சொல்லிட்டு குடும்பத்தோட வந்திட்டார். அம்மா கேசரி பண்ணி, எல்லாரும் சாப்பிட்டு பயங்கர புகழ்ச்சி வேற. (புகழ்ச்சி கேசரிக்கு இல்ல, எனக்கு) அது கேசரிய விட இனிமையா இருந்தது. அப்படியே வாய மூடிட்டு சாப்பிட்டு இருந்திருக்கலாம். "அம்மா, வாங்களேன். ஸ்கூல் வரைக்கும் போய் எல்லாரையும் பார்த்திட்டு வரலாம்" னு நான் சொல்ல, அம்மாவும் சரினு கிளம்பிட்டாங்க. ஆனா, அங்கே தான் சனி என்னை எதிர்பார்த்துக் காத்திட்டிருக்குனு எனக்கு தெரியாம போச்சு.


போனதும் தமிழ் மிஸ்ஸின் வாயிலிருந்து நல்வார்த்தை. "நாயே நாயே ஒரு மார்க் கூட எடுத்திருந்தா நீயும் தமிழ்ல ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கியிருக்கலாம்ல. அதை ஏண்டி விட்ட வெங்காயம்" எங்க தமிழ் மிஸ் எப்போவுமே இப்படி தான் தூய தமிழ்ல பேசுவாங்க. பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு அந்த பக்கம் போனா மேத்ஸ் மிஸ். "என்ன விக்னேஷ்வரி, சென்டம் இல்லையா...." லேசாக அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டேன். இதையெல்லாம் அடுத்து க்ளாஸ் மிஸ்ஸும், என் ஏழாம் வகுப்பு தமிழ் மிஸ்ஸும் வந்தனர். "என்ன விக்னேஷ்வரி, நீ தான் ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன்னு மார்க் சீட் வந்ததும் உன் பேரைத் தான் பார்த்தோம். ஆனா, இப்படி பண்ணிட்டியேமா" எனக்கு ஏதோ பெரும் தவறு செய்து விட்டதைப் போன்ற எண்ணம். இருந்தும் "மிஸ், ஸ்கூல் பர்ஸ்ட் யாரு?" "ரம்யா" இது மிஸ். "அவ வருவான்னு நாங்க நெனைக்கவே இல்ல." இதுவும் அவரே.
"ஓகே மிஸ். நான் கிளம்புறேன்"

முல்லை சொன்ன ஹேமாவும் ஞானசௌந்தரியும் போல் என் வாழ்விலும் ரம்யாவும் சரண்யாவும் அதிகமாகவே விளையாடினர். பயந்து கொண்டே வீட்டிற்கு வந்தால், அடுத்து பத்து நாட்களுக்கு வீட்டில் பூகம்பம் தான். ஒரு நாளும் இரவு கண்ணீரில்லாமல் தூங்கியதில்லை. சரியாக தூங்கும் நேரம் தான் அம்மா ஆரம்பிப்பார். "எடுத்திருக்கா பாரு மார்க். யார் கிட்டேயாவது சொல்ல முடியுதா.... ஸ்கூல் பக்கம் தலை காட்ட முடியல. அடுத்து நீ அந்த ஸ்கூல்ல படிக்க வேணாம். எனக்கு மானமே போகுது" என்ன சொல்லவெனத் தெரியாமல் கண்ணீரிலேயே தூங்கிப் போனேன். ஆனா, அப்பாவின் சப்போர்ட் உண்டு.

இப்படியாக வேறு பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் +1, +2 க்கு. அங்கு போனதிலிருந்து பயங்கர ஜாலி, நல்ல பிரெண்ட்ஸ் வட்டம் என்று படிப்பு குறைந்தது. ட்யூஷன் அனுப்பினர். அங்கு குல்பி சாப்பிடுவது, கடலை போடுவது என ஆட்டம். எல்லாம் முடிந்து ஒரு சுபயோக சுப தினத்தில் எமகண்ட நேரத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் வந்தன. அதையும் தாண்டிக் குதித்தேன். ரிசல்ட் நாளும் வந்தது. இந்த முறை நோ ரியாக்ஷன்.

"இன்னிக்கு ரிசல்ட். உன் கிளாஸ் மேட்ஸ், பிரெண்ட்ஸ் எல்லோரும் ரிசல்ட் பார்க்க ப்ரொவ்சிங் சென்டெர் போயாச்சு. நீயும் போனா என்னம்மா....." - அம்மா.
அகைன், நோ ரியாக்ஷன்.

"செல்லம், போய் ரிசல்ட் பார்த்திட்டு வாடா".

"வேணாம்மா... "

"போடா குட்டி"

"நான் நேத்தே நம்ம தெருல என்னை சைட்டடிச்சிட்டு இருப்பானே அந்த வளந்தவன் கிட்ட சொல்லிட்டேன். அவன் பார்த்திட்டு வந்து சொல்லுவான்மா..."

"ஏண்டி இப்படிப் பொறுப்பில்லாம இருக்க. நீ போய் பார்க்க மேல் வலிக்குதா.. நான் இங்க டென்ஷன்ல இருக்கேன். உனக்கு அந்த கவலையே இல்லையே"


இதற்கு மேல் வீட்டிலிருந்தால் சுப்ரபாதம் கந்த சஷ்டியாக மாறி இறுதியாக மகிசாஷுர மர்த்தினியாக உருவெடுக்கும் எனத் தெரிந்து அங்கிருந்து கிளம்பி டிப்ளோமா படிக்கும் என் பிரென்ட் வீட்டிற்குப் போனேன். அவளும் ரிசல்ட் என்னடி என்ற கேள்வியை அம்மாவை மாதிரியே கேட்க, அங்கிருந்து கிளம்பி மற்றொரு தோழி வீடு. அவளுக்கு ரிசல்ட் வந்து விட்டது. வீட்டு வாசல் வரை அழுகைச் சத்தம். அவள் அம்மா என்னைக் கூப்பிட்டு சமாதானப்படுத்தும்படி கூறினார். இப்போது எனக்கும் பீதி வந்து விட்டது. விரைந்தேன் ப்ரொவ்சிங் சென்டருக்கு. வழியில் வளர்ந்தவன். என்னை வழிமறித்து நிறுத்தினான். சரி, ரிசல்ட் வந்துவிட்டது என தெரிந்து விட்டது.

"எவ்வளவு" - நான்.

"நீங்களே பாருங்க" ஒரு துண்டு காகிதத்தை நீட்டினான்.

"இல்ல, சொல்லுங்க" ஒரு பயத்துடன்.

"ஆயிரத்து முப்பத்தி..... " அவன் அதை முடிக்கும் போது நான் அங்கு இல்லை.

நேராக சைக்கிளில் வீட்டிற்கு விரைந்து உள்ளே சென்று வீட்டின் நீளமான ஹாலில் உருண்டு அழ ஆரம்பித்து விட்டேன்.


"என்னாச்சு டா" அம்மா.

"ஐயோ அம்மா நான் உங்களை ஏமாத்திட்டேன் மா. நான் என்ன பண்ணுவேன். உங்க நம்பிக்கையெல்லாம் உடைய வெச்சிட்டேனே. என்னை மன்னிச்சிடுங்கமா...."
பாட்டி சமையலறையிலிருந்து வந்தவள் என்னைப் பார்த்து பயந்து விட்டாள்.

"விடுடி, எவனாவது தப்பா போட்டிருப்பான். இன்னொரு தடவை செக் பண்ணிப் பாரு" பாட்டியின் கமெண்டிற்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டேன்.

அம்மா ரொம்பவே விறைத்து விட்டாள். "அம்மா, எந்த பாடத்திலேயும் போய்டுச்சோ என்னவோ" அம்மா பாட்டியிடம் சொன்னது தெளிவாகக் கேட்டது.

"சொல்லேன் விக்னாமா எவ்வளோனு" மறுபடியும் அம்மா கேட்க அழுகைச் சத்தம் முன்பை விட அதிகமானது.

காலிங் பெல் சத்தம் கேட்டு அம்மா போய்ப் பார்த்து வளந்தவனிடம் இருந்து மார்க் அறிந்து வந்தாள்.

"செல்லம் நல்ல மார்க் தான்டா எடுத்திருக்க. அழாதம்மா."

"இல்லம்மா, நீங்க என்னை நினச்சு எவ்ளோ கனவு கண்டீங்க. நான் எல்லாத்தையும் உடைச்சிட்டேனே. இனிமே உங்க முகத்துல எப்படி முழிப்பேன்."

"இல்ல டா. நீ பேஷன் டிசைனிங் தானே படிக்கப் போற. அதுக்கு இந்த மார்க் போதும்மா. அழாத டா"

இன்னும் அழுகை தொடர்கிறது. அம்மா ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தி எழுப்பி, முகம் கழுவச் செய்து ஜூஸ் கொடுத்து என உபச்சாரம் தான். பின் அப்பாவிடம் மார்க் சொல்ல அம்மா போன் பக்கம் நகர்ந்த போது,

"என்ன பொண்ணைப் பெத்து வெச்சிருக்கா உங்க அம்மா. இப்படி ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் உருண்டு அழுதுக்கிட்டு" என பாட்டி புலம்ப.


"எங்க அம்மா பொண்ணை நல்லா தான் பெத்து வச்சிருக்கா. நீ தான் சரியா பெக்கல. பாரு போன முறை எல்லாரும் நல்ல மார்க்குன்னு பாராட்டினப்போ என்னை எவ்ளோ திட்டினா அம்மா. இந்த முறை நான் இப்படி சீனைப் போட்டதால எல்லார்கிட்டேயும் என்னைப் புகழ்ந்திட்டு இருக்கா. நடக்கட்டும். நீ எனக்கு அந்த பிஸ்கட்டை எடுத்துக் கொடு"


பாவம் என்ன சொல்வாள் பாட்டி. :)

Wednesday, June 17, 2009

என் சமையலறையில்

எனக்கு சமைக்க தெரியுங்கறதை பல பேரை நம்ப வைக்குறதே பெரும் கஷ்டமா இருக்கு. இதுக்காகவே இந்த ஸ்டில்ஸ். போன வாரம் நானே என் வீட்டு சமையலறையில் சமைச்ச அயிட்டங்கள். இப்போவாவது நம்புங்க மக்கா....

Poha Chewda - போஹா சூடா - அவல், உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பு, தேங்காய் இன்னும் பல விஷயங்களைக் கலந்து செஞ்ச ஈவினிங் ஸ்நாக்ஸ்.


Chole - சோலே - நம்ம ஊரு வெள்ளை கொண்டைக்கடலைய பஞ்சாபி ஸ்டைலில் பண்ணது. Garnishing கொஞ்சம் அதிகமாயிட்டதால கொண்டைக்கடலை தெரியல. :P பூரி அல்லது பட்டுராவுடன் சாப்பிட சுவையானது. ப்ரட்லேயும் வச்சு சாப்பிடலாம். இந்த அயிட்டத்துக்கு இப்போ ஆபிஸ்ல பேன்ஸ் அதிகம்.


Paneer Makhani - பனீர் மக்கனி - வெரி டேஸ்டி பனீர் கிரேவி இது.அவருடைய பேவரிட்.


Paneer Makhani with Lachcha Paratha - லச்சா பராட்டா - நம்மூருல பண்ற மைதா பராட்டா இங்கே கோதுமையில். மக்கனியுடன் சாப்பிட டேஸ்டி க்ரிஸ்ப்பி பராட்டா.


Microwave Sooji Cake - ரவா கேக் - இது அவர் சொல்லித் தந்த ஐட்டம். ரவை, தயிர், உப்பு, மிளகாய்த் தூள், ஈனோ கலந்து மைக்ரோவேவ் ஹைல அஞ்சு நிமிஷம் வச்சா கேக் ரெடி. இதுவும் ரொம்ப டேஸ்டி. பாதி சாப்பிட்டப்புறம் தான் போட்டோ எடுக்க தோணிச்சு. :P


Boondi Raita - பூந்தி ரைத்தா - சம்மருக்கு இந்த ரைத்தா செஞ்சு ஒரு மணி நேரம் ப்ரிஜ்ல வச்சு சில்லுனு சாப்பிட்டா அடடா......


படம் பார்த்தாச்சா..... அப்படியே ஏப்பம் விட்டுட்டு போய் வேலையப் பாருங்க. :)

Monday, June 15, 2009

மற்றுமோர் பள்ளி, மற்றுமோர் மாணவி, மற்றுமோர் துயரம்


போன வாரம் மும்பை அரசு குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கக் கூடாது எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு விஷயம் இது. வீடுகளிலும் தொழில் துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர்களை தடை செய்த அரசு எப்போதும் இந்த தொலைக்காட்சியின் குழந்தை நட்சத்திரங்களைக் கண்டு கொண்டதில்லை. இப்போது அதுவும் கவனத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நடிப்பின் காரணமாக படிப்பை நிறுத்தும் அவலம் அகலும் என எதிர்பார்ப்போம். (உயர் தட்டு மக்களுக்கு ஒரு சட்டம் வசதியில்லாதோருக்கு ஒரு சட்டம் என்னும் நிலை மாறி வருவது மகிழ்ச்சி)
**************************************************

டெல்லியில் வெயில் மண்டையைப் பிளக்கிறது. எப்போதாவது அதைத் தணிக்க லேசான தூறல் இருந்த போதிலும் வெக்கை அதிகம் உள்ளது. போன வருடம் முழுக்க நான் டூரிங்கில் இருந்ததால், டெல்லியின் வெயில் மற்றும் குளிர் காலங்களில் தப்பித்துக் கொண்டேன். இப்போது எனது ப்ரோஜெச்டுகள் முடிந்து விட்ட நிலையில் புது ப்ரொஜெக்டை எதிர்பார்த்துக் காத்துள்ளேன், டெல்லி வெயிலிலிருந்து தப்பிக்க. அடிக்கும் வெயிலைக் குறைக்கும் வகையில் அவர் பெங்களூருக்கு எஸ்கேப். நானும் அடுத்த மாதம் கோவை போகலாமென நினைக்கிறேன். பார்ப்போம் முடிகிறதா என்று. (நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை)

**************************************************

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மிகவும் வேடிக்கையானதாக இருந்தது. மணி சங்கர அய்யரின் ஹாட் மெயில் கணக்கை யாரோ ஒரு விஷம ஆசாமி ஹைஜாக் செய்து அனைவருக்கும் ஒரு மெயில் அனுப்பியிள்ளார். அந்த மெயிலில் உள்ள செய்தி "நான் ஒரு கருத்தரங்கிற்காக இங்கிலாந்து சென்றதை உங்களிடம் தெரிவிக்க மறந்து விட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் எனது கைப்பையைத் தொலைத்து விட்டேன். கையில் பணம் இல்லாத நிலையில் என்னால் நாடு திரும்ப இயலவில்லை. இந்த மெயிலைப் பார்த்தவுடனேயே எனக்கு பண உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு அவசர பண உதவியாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள்" இது குறித்து மணி சங்கர அய்யரிடம் கேட்ட போது யாரோ அவரது மெயில் ஐடியின் பாஸ்வோர்டை மாற்றி விட்டதாகவும், அதன் காரணமாக இப்பிரச்சனை குறித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தான் இப்போது அமேரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (என்னவோல்லாம் காமெடி நடக்குது உலகத்துல.)

**************************************************

அபியும் நானும் படம் வெளிவந்து பல மாதங்கள் கழித்து போன வாரம் தான் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைவாகத் தான் படத்தை தந்திருக்கின்றனர் ராதா மோகனும், பிரகாஷ் ராஜும். எல்லா கேரக்டர்களும் ஓகே. த்ரிஷா கேரக்டரை இன்னும் அழகுற செதுக்கியிருக்கலாம். படத்தில் பிரகாஷ் ராஜின் அன்பு காட்டப்பட்ட விதத்தை ஒப்பிடும் போது த்ரிஷாவின் அன்பு காட்டிய விதம் கொஞ்சம் நெருடல். இன்னும் கொஞ்சம் அட்டாச் ஆன பெண்ணாக த்ரிஷாவைக் கொடுத்திருக்கலாம். ஏனெனில் பெண்கள் எப்போதும் அப்பாவின் மீது அன்பு மிகுந்தவர்கள். பஞ்சாபிக் கணவன் வந்த போதிலும் வேட்டி கட்டும் அப்பாவே ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் ஹீரோ என்பதை அழுத்தி சொல்லியிருக்கலாம். (அனுபவம் பேசுகிறது)

**************************************************

ஒன்றரை மாதத்திற்கு முந்திய செய்தி. இப்போது தான் தெரிந்தது. மூச்சுத் திணறி இறந்த ஆகிரிதி மற்றும் ஏழு செங்கற்களை முதுகில் தாங்கி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த ஷன்னோவை அடுத்து தலைநகரின் அடுத்த கொடுமை பதினைந்து வயது சிறுமி ஜீனத் பர்வீனின் தற்கொலை.
டெல்லியில் உள்ள பச்சான் பிரசாத் சர்வோதய கன்ய வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜீனத். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வகுப்பாசிரியரால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அடித்து வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாள். அவள் திருடியது உறுதிப்படுத்தப்படாத செய்தி. வெறும் சந்தேகம் காரணமாகவே நடந்த கொடுமை இது. அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசிரியர் வெளியேற்றி பெற்றோரை அழைத்து வருமாறு சொல்லவே, பெற்றோர் வந்திருக்கின்றனர். அவர்களிடம் ஆசிரியர் ஜீனத் செய்த தவறின் காரணமாக அவளை பள்ளியிலிருந்தே நீக்கப் போவதாகக் கூறி கடும் வார்த்தைகளால் சாடி "இவள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உட்காரவைத்து வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்" என சொல்லியிருக்கிறார். பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் சில சாமான்கள் வாங்குவதற்காக ஜீனத்தின் அம்மா செல்லவேண்டியிருந்ததால், ஜீனத்தை வீட்டிற்குப் போக சொல்லியிருக்கிறார். வீட்டிற்கு வந்த அம்மா ஜீனத் தனது துப்பட்டாவை ஃ பேனில் மாட்டி தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்து போன ஜீனத்தின் கண்களை அவர் பெற்றோர் தானம் செய்து மற்றொருவரின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளனர். (வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி உயிர் வாங்கிகளாக இருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.)

Wednesday, June 3, 2009

நான் நானாக

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?  

எங்க அம்மா, அப்பாவிற்கு 11 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்து பிள்ளையாரிடம் வேண்டி நான் பிறந்ததால் விக்னேஷ்வரனின் பெயரிலிருந்து 'விக்னேஷ்வரி' வந்தது.  

கல்யாணத்திற்குப் பிறகு ஜோசியர் 'த' அல்லது 'ல' வில் ஆரம்பிக்கும் பெயர் வைத்தால் தான் எனக்கும் அவருக்கும் சண்டை இல்லாம குடும்ப வாழ்க்கை போகும் என சொன்னதால் 'தன்வி' என்ற பெயர் வந்தது.  

இரண்டு பெயர்களுமே அம்மாக்களின் தேர்வு என்பதாலோ என்னவோ எனக்குப் பிடிக்கும்.  

2. கடைசியாக அழுதது எப்பொழுது?  

நேற்று. அவரிடம் கோபப்பட்டு கோபம் தவறு என வருந்தி அழுதேன்.  

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?  

தேர்வின் கடைசி அரை மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் என் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.  

4. பிடித்த மதிய உணவு என்ன?  

நான் ஒரு சரியான Foodie. எது சாப்பிட்டாலும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என நினைப்பேன். அதுனால எல்லா வெஜ் ஐடெமும் ஓகே. இருந்தாலும் ஆல்டைம் ஃபெவரிட் தயிர் சாதம், மாவடு தான்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?  

அந்த வேறு யாருடன் என்பது யார் என்பதைப் பொறுத்தது என் பதில்.  

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?  

அருவியில். கடலில் குளிப்பதே எனக்குப் பிடிக்காது. பிசுபிசுவென்று உப்பெல்லாம் ஒட்டி, வாய்க்குள் உப்புத் தண்ணி போய்.... ச்சீ.... எனது சித்தி குற்றாலத்தில் இருப்பதால் குற்றால அருவிகளில் குளித்த அனுபவம் நிறைய உண்டு. இப்போதெல்லாம் பாத்ரூமில் ஷவரையே குற்றால அருவியாக பாவித்துக் குளிக்க வேண்டிய நிலைமை.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?  

உடை. Fashion Designing படித்ததின் விளைவு. அடுத்ததாக கண்டிப்பாக கண்கள்.  

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?  

பிடிச்ச விஷயம் - என்னுடைய தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு, வளர்ச்சி. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த என்னை தலைநகர் வரை கொண்டு வந்தவை இவை தான். 
அது போக அதிகம் விட்டுக் கொடுப்பது மற்றும் எல்லாரையும் அனுசரித்துப் போவது.  

பிடிக்காத விஷயம் - எப்போதாவது அழுவது, அனாவசியக் கோபம், கொஞ்சமே கொஞ்சமான சோம்பேறித்தனம்.  

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?  

பிடித்த விஷயம் - அவரிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும். அவரின் பொறுமை, அக்கறை, பாசம், காதல், உண்மை, கடின உழைப்பு, இன்னும் பல. இவை தான் ஒரு தமிழச்சியை பஞ்சாபியாக மாற்றின. 

சமீப காலமாக அவர் கிட்ட ரொம்ப ரொம்ப பிடிச்சது, அவரின் கொஞ்சும் தமிழ்.  

பிடிக்காத விஷயம் - வேலை என வந்து விட்டால் அனைத்தையும் மறந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்ப்பது.  

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?  

கண்டிப்பாக என் அம்மா. சின்ன வயசிலிருந்து ஒரு தாயாய் இல்லாமல், தோழியாய் இருந்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் என்னை வழி நடத்திக் கொண்டு வந்தவர்கள்.  
I really miss my mom.  

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?  

ஆரஞ்சும், பச்சையும் கலந்த டிசைனர் சூட்.  

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?  

பதிவை மட்டுமே பார்த்து எழுதி கொண்டிருக்கிறேன்.  

"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தினமும் குறைந்தது ஒரு முறையாவது இப்பாடலைக் கேட்பது வழக்கம். இளையராஜாவின் தாலாட்டிற்காக.  

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?  

கருப்பு.  

14. பிடித்த மணம்?  

Remy Marquis  

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?  

சந்தன முல்லை - ஒரு பதிவரால் நான் அதிகம் கவரப்பட்டேன் என்றால், அது இவரால் தான். பிள்ளையின் சேட்டைகளைக் கூட இவ்வளவு சுவாரசியமாகச் சொல்ல முடியுமா என என்னை "அட" போட வைத்தவர்.  

சத்யா - தான் ஒரு தொழிலதிபர் என்ற எந்த பெருமையும் இல்லாமல் அனைவரிடமும் இனிமையாகப் பழகும் மனிதர். பல போலி எழுத்துக்களுக்கு நடுவே தனக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவர்.  

வித்யா - என் எல்லாப் பதிவுகளுக்கும் ஒரு ஸ்மைலியாவது போட்டு பிரசென்ட் சொல்லி விட்டுப் போபவர். நல்ல எழுத்துத் திறமை உள்ளவர். முக்கியமாக என்னைப் போலவே அவரும் ஒரு சாப்பாட்டுப் பிரியர்.  

லதானந்த் சார் - சிறந்த சிறுகதை எழுத்தாளர். வித்தியாசமான வேலையில் இருந்து வித்தியாசமான அனுபவங்களை நம்முடன் பகிர்பவர். அவர் மேல எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. காரணம், அவரின் மனைவியின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டதால்.

நால்வரையும் அழைக்கக் காரணம், அவங்களப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான்.  

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?  

இரண்டு பேர் என்னை அழைத்துள்ளனர்.  

சஞ்சய் - நல்ல படைப்புத் திறமை கொண்டவர். அவரின் கவிதைகளை நான் மிகவும் ரசித்துப் படித்துள்ளேன். தன் கருத்துகளை நேரடியாக சொல்லும் தைரியம் கொண்டவர். இவரின் எல்லாப் பதிவுகளுமே வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். சமீபத்தில் பிடித்தது http://podian.blogspot.com/2009/06/blog-post_02.html  

லோகு - நன்றாக எழுதுகிறார். ஒரு முறை உரிமையாய் சண்டை போட்டு இப்படி எழுதாதீங்கன்னு சொன்னதிலிருந்து அப்படி எழுதாதவர். மிக சிறியவர். ஆனாலும் நல்ல எழுத்துகளைத் தருபவர். இவரையும் நான் தொடர்ந்து படித்து வந்தாலும் இவரின் காதல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை http://acchamthavir.blogspot.com/2009/04/blog-post_28.html  

17. பிடித்த விளையாட்டு?  

Shuttle badminton. காலேஜ் டேஸ்ல பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து விளையாடினதோட சரி. இப்போவும் விளையாட ஆசைப் பட்டு அவரைக் கூப்பிட்டா நேரம் இல்லைன்னு சொல்லித் தப்பிச்சுடுறார்.  

18. கண்ணாடி அணிபவரா?  

நொய்டா ரொம்ப டஸ்டி. கண்ணாடி இல்லாம வெளில போனா கண்ணு இன்பெக்ஷன் ஆகி டாக்டர் கிட்ட போகணும். அதுனால வீட்டை விட்டு வெளிய போகும் போது மட்டும் Goggles போட்டுப்பேன். மத்தபடி பவர் எல்லாம் இல்லை. இந்த போட்டோ நான் ஆபீஸ் கிளம்பும் போது எடுத்தது.
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?  

இது தான் அடுத்த காட்சி, இது தான் முடிவு என நம்மை ஊகிக்க வைக்க முடியாத படங்கள் பிடிக்கும். ஆனா, சொதப்பக் கூடாது. சரியா சொல்லனும்னா, பாலசந்தர் படங்கள் மாதிரியான படங்கள்.  

20. கடைசியாகப் பார்த்த படம்?  

தியேட்டரில் அயன். திருமணத்திற்குப் பிறகு எங்களின் முதல் படம்.  
வீட்டில் கடைசியாக பார்த்தது Die Hard 4. நேற்றிரவு HBO வில்.  

21. பிடித்த பருவ காலம் எது?  

எல்லா பருவமும் ஆரம்பிக்கும் போது பிடிக்கும். லேசான தூறல் தரும் மழைக் காலம், சிலு சிலுக்கும் குளிர் காலம், குளிரைப் போக்க சூரியன் வெளிவரும் வெயில் காலம், தென்றல் வீசும் வசந்த காலம் இப்படி எல்லாமே தொடங்கும் போது மனதிற்கு இதமாகவும் ரம்மியமாகவும் இருக்கும்.  

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

:( இப்போதைக்கு எதுவும் இல்ல. நேரம் கிடைத்தால் படிக்க நிறைய புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்துள்ளேன்.  

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?  

பதினைத்து நிமிடத்திற்கு ஒரு முறை. ஆட்டோமாடிக் செட்டிங் போட்டு வச்சிருக்கேன்.  

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?  

குழந்தை அழுற சத்தத்திலிருந்து குழலோசை வரை எல்லா சத்தமும் சங்கீதம் தானே. 
ஹாரன் சத்தத்தைத் தவிர.  

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?  

அம்மா வீட்டிலிருந்து மாமியார் வீடு வரை. ;) 2940 கிலோமீட்டர்.  

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?  

பெயிண்டிங்ல ஆர்வம் உண்டு. அதுல கோச்சராவும் இருந்திருக்கேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பாரதம், ஃபோல்க் மற்றும் வெஸ்டர்ன் நடனங்கள் பண்ணிருக்கேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பல பரிசுகள் வாங்கிருக்கேன். என்னுடைய சமையல் எனக்கு ப்ளஸ்னு எங்க அப்பாவும், அவரும் சொல்லுவாங்க. இந்த மாதிரி basic qualifications தவிர எக்ஸ்ட்ராவா எந்த தனித் திறமையும் கிடையாது.  

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?  

நம்பிக்கை துரோகம்.  

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?  

Blog reading  

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?  

Switzerland and Sydney என் வாழ்நாள் கனவு. இதுவரை நான் பார்த்ததில் பிடித்தது சண்டிகர். ஒரு நாள் டூருக்கு ஏற்ற அழகான, தூய்மையான நகரம். நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானாலும் பிடிக்கும்.30. எப்படி இருக்கணும்னு ஆசை?  

எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க, " யாருக்காகவும் நம்ம கொள்கைய மாற்றி, நம்ம தனித் தன்மையை இழந்து வாழக் கூடாது" ன்னு. அதே மாதிரி இப்போ வரை நான் நானாக தான் இருக்கேன். அப்படியே இருக்கணும்னு ஆசை.  

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?  

அவர் இல்லாம எதுவும் செய்யனும்னு நான் இது வரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எல்லாமே அவராக இருக்கவே நான் விரும்புகிறேன்.  

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?  

இன்றைய வாழ்வு இறைவன் கொடுத்த பரிசு. அதனால் நீ நீயாகவே வாழ்.

அப்பாடா... முடிஞ்சதா!!! :)

Monday, June 1, 2009

செல்வேந்திரன்.


நேற்று செல்வேந்திரனை நீயா நானாவில் பார்க்க நேர்ந்த போது மிகுந்த மகிழ்ச்சி. என்னவரையும், அப்பாவையும் கூப்பிட்டுக் காண்பித்தேன். அடுப்பில் வைத்திருந்த ரொட்டியை அணைத்து விட்டு டிராயிங் ரூம் வந்து விட்டேன்.

நாகரிகமான உடை, கச்சிதமான உடல் மொழி என கலக்கி விட்டார் செல்வேந்திரன். அவரை நான் மூன்று முறை மட்டுமே சந்தித்துள்ளேன் என்றாலும், மணிக் கணக்கில் பேசியிருக்கிறேன். முதல் முறை அவரை சந்திக்க போயிருந்த போது அவர் கொஞ்சம் தாமதமாக வர நேர்ந்தது. காரணம் கேட்ட போது, "இல்ல விக்கி, வர்ற வழில ரோட்டுல வெயில் காரணமா ஒரு பெரியவர் மயங்கி விழுந்துட்டார். பார்த்திட்டு அப்படியே எப்படி வர்றது. அதான் மருத்துவனையில் சேர்த்து விட்டு, கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு வந்தேன்" என்றார். "யாரவர்" என்ற எனது கேள்விக்கு அவரது ஒற்றைப் பதில் "தெரியாது".

அவர் நிகழ்ச்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை என்னிடம் அடிக்கடி சொல்லுவார். ஒன்று, நம் உறவினர், நம்மைச் சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினர், பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள் என நம்மை அறிந்த பல உறவுகள் இருக்கும் போது, முகம் தெரியாத ஓர்குட், பேஸ் புக், ப்ளாக் இதன் மூலம் வரும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என நாம் நினைப்பது ஏன்? அடுத்தது, பாட்டன், பூட்டன் பெயர் என்ன, அவர்கள் என்ன தொழில் செயதார்கள் என்ற விவரங்களை அறிய நாம் காட்டும் அக்கறையை விட யாரோ முகம் தெரியாதவரைப் பற்றி அறிய அதிக அக்கறை காட்டுவதேன்...

என்னை சிந்திக்க வைத்து சீரமைத்தவை அவரின் எழுத்துக்களும், கருத்துகளும். செல்வேந்திரனை நான் மதிக்க காரணங்கள் சில.

* மிக எளிமையானவர். எல்லோரிடமும் பழகுவதற்கு இனியவர்.

* தன் எழுத்துகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் காரணமாய் எப்போதும் தற்பெருமை கொள்ளாதவர்.

* ஆங்கிலம் தெரியாமல் தப்பு தப்பாகப் பேசும் பீட்டர்களுக்கு நடுவே ழகரம், ளகரத்தைத் தவிர மற்ற தமிழ் உச்சரிப்புகளைத் தெளிவாக, எளிமையாகப் பேசுபவர்.

* சபை நாகரீகம் அறிந்தவர். யாராவது தவறான வார்த்தைகள் உபயோகித்துத் திட்டினாலும் அவரை எதிர்த்துப் பேசாமல் பொறுமையாய் சிரித்துப் போவார்.

* பல வெட்டிக்கதை ஆசாமிகளுக்கு நடுவே எப்போதும் பிஸியாக தன் வேலையில் ஓடிக் கொண்டிருப்பவர்.

* பல தரப்பட்ட நட்பு வட்டங்கள் இருந்தும் எவ்வித கெட்ட பழக்கங்களையும் கற்றிருக்காதவர்.

* யாருக்கு எந்த உதவி என்றாலும் தன்னால் முடியுமானால், யோசிக்காமல் செய்யக் கூடியவர்.

* நேரத்தைப் பொன் போல மதிப்பவர்.

* சொந்தக் காரர்களையும், சிறு வயது நண்பர்களையும் எப்போதும் மறவாமல் நட்பு பாராட்டுபவர்.

* மொக்கைகளை மட்டுமே கொண்டுள்ள பல பதிவர்களுக்கு நடுவே தரமான உபயோகமான பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் சொற்பப் பதிவர்களுள் ஒருவர்.

* எப்படிப் பட்ட கோபத்தையும் அழகான புன்னகையால் வெளிப்படுத்துபவர்.

* தனக்கு எதிரில் தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட ஆண்மகன்.

இந்த குணங்களையெல்லாம் கண்டு வியந்த நான் ஒரு முறை அவரிடம், "எப்படி செல்வா, இப்படி?" எனக் கேட்ட போது அவர் எனக்கு சொன்னது, "விக்கி, நாம ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி நாம எப்படிப் பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம், என்ன சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம், நம் பெற்றோர் எப்படிப் பட்டவர்கள், நாம் செய்யும் செயல்களை அவர்கள் அறிய நேர்ந்தால் என்ன நினைப்பர் என்ற கேள்விகளை நினைத்துப் பார்த்தால் மகாத்மாகவல்ல, ஒரு நல்ல மனுஷனாக வாழ முடியும்."

சரி தான் செல்வா. நீயா நானா நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்து கோபிநாத் யாரையும் இவ்வளவு பாராட்டியதில்லை. செல்வா எனக்கும் நண்பர் என சொல்வதில் மிகப் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் செல்வா நீ இன்னும் வளரவும், பல உயரங்களை அடையவும்.