இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியாது போல பேசுவார்கள். கடைக்காரரிடம் "ஒன் ருப்பீ" என்றால் ஏற இறங்க பார்ப்பார். "ஏக் ருப்யா" தான் இங்கே சலேகா. படித்தவர்கள் கூட ஹிந்தியில் பேசுவதையே விரும்புவார்கள். நமக்கு ஹிந்தி தெரியாது என்றாலும் நம்மை மதித்துக் கூட ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஹிந்தியில் உரையாடும் போது ஆங்கில வார்த்தைகளின் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த விஷயத்தில் இவர்கள் மொழிப் பற்றாளர்கள். (நான் மொழி வெறியர்கள்னு சொல்லல.)
**************************************************
சில நாட்களுக்கு முன் ஒரு உறவுக்கார தீதியிடம் பேசிக்கொண்ட போது என்னைப் பார்த்துக் கேட்டார். "நாளைக்கு தானே மஞ்சள் நிற உடை போடணும். இன்னிக்கு ஏன் உடுத்தின?" எனக்குப் புரியாமல் அவரிடம் முழித்த போது அவர் தந்த விளக்கம் எனக்கு வித்தியாசமாய் இருந்தது. திங்கள் கிழமை வெள்ளை அல்லது கிரீம் நிற உடை, செவ்வாய் மற்றும் வெள்ளி தினங்களில் சிவப்பு, புதன் பச்சை, வியாழன் மஞ்சள், சனி கருப்பு தவிர மற்ற உடைகள் என உடுத்த வேண்டுமாம். ஞாயிறு இந்த ரெஸ்ட்ரிக்ஷன் இல்லையாம். தினமும் ஒரு கடவுள் என வைத்து அந்தந்த கடவுளுக்கு ஏற்ற வகையில் உடையணிந்தால் நமக்கு நல்லது என லெக்சர் கொடுத்தார்.
இது போதாதென்று திருமணத்துக்கு முன்பு நான் தங்கியிருந்த வீட்டில் உள்ள ஆன்ட்டி வியாழக் கிழமைகளில் பண்ணும் லந்து அதிகம். அவர் சாய்பாபா பக்தை. வியாழன்று மஞ்சள் நிற உடை அணிவார்; நெற்றியில் மஞ்சள் இடுவார்; அன்று மஞ்சள் நிற பதார்த்தங்களையே சமைப்பார்; ஏழைகளுக்கு 'கடி' எனும் மஞ்சள் நிற உணவை அன்ன தானம் செய்வார். இன்னும் பல பல. இப்படி எல்லாம் மஞ்சள் மஞ்சளாக இருந்தால் கடவுள் அருள் புரிவாரா? எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை.
**************************************************
நம்மூரில் திருமணமான பெண்கள் என்றால் கழுத்தில் தாலி இருக்கும். காலில் மெட்டி இருக்கும். திருமணமான சில நாட்களுக்கு வீட்டிலுள்ள அனைத்து தங்கமும் பெண் கழுத்தில் பார்க்கலாம். தலை நிறைய பூ. மதுரைக்காரப் பெண் என்றால் தலை நிறைய மணக்க மணக்க மல்லிகை. ஆனால் வடக்கில் வித்தியாசம். இங்கும் திருமணத்தின் போது கருகுமணி செயின் தாலியாக அணிவிக்கப்படும். ஆனால் அதைத் தொடர்ந்து அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. மெட்டி திருமணத்தின் போது பெரும்பாலும் அணிவிக்கப்படுவதில்லை. அதற்குப் பின் ஃபேஷனுக்காக பெண்கள் அணியலாம். பெரும்பாலும் அதையும் யாரும் அணிவதில்லை. நெற்றியில் போட்டு வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பூ கலாச்சாரம் அறவே இல்லை. பட்டுப் புடவைகள் கிடையாது. எவ்வளவு பெரிய விழாக்களுக்கு போவதென்றாலும் கழுத்தில் ஒரு நகைக்கு மேல் அணிவதில்லை. இதெல்லாம் இல்லை, சரி என்ன உண்டு? நெற்றியில் வகிடை ஒட்டி இடும் சிந்தூர் கண்டிப்பாக இட வேண்டும். புதிதாய்த் திருமணமான பெண், டிசைனர் உடைகளே பெரும்பாலும் அணிய வேண்டும். ஜீன்ஸ் டாப்பும் அணியலாம். எப்போதும் ஃபுல் மேக்கப்பில் இருக்க வேண்டும், அடுப்படியில் வேலை செய்வதானால் கூட. டார்க் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். கை நிறைய வளையல் அணிய வேண்டும். திருமணமான சில நாட்கள் வரை சிவப்பு வளையல்கள் அவசியம். மொத்தத்தில் எப்போதும் ஷோ கேஸ் பொம்மை போல காட்சியளிக்க வேண்டும்.
**************************************************
அடுத்ததா சாப்பாடு. நம்மூரில் எனக்குத் தெரிந்து நெய் அதிகம் வடிவது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகில் தான். ஆனால் இங்கு எல்லா பலகாரங்களிலும் / சாப்பாடுகளிலும் நெய்யும் வெண்ணையும் மிக அதிகம். இனிப்பு படு தூக்கலாக இருக்கும். கலர் கலராக இருக்கும். ஒரே பதார்த்தம் பல பெயர்களில் சிறு வித்தியாசங்களுடன் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாமே பார்க்க அழகாகவும், உண்ண படு சுவையாகவும் இருக்கும். ஆனால் அதை பார்த்தும் பார்க்காமல் வந்தால் தான் உடலுக்கு நல்லது.
நாம் யார் வீட்டிற்காவது போனால் பழங்கள் அல்லது இனிப்பு காரம் வாங்கிச் செல்வோம். ஆனால் இங்கு பழங்கள் நோயுற்றவர்களுக்கு மட்டுமே வாங்கி செல்லப்படுகிறது. யார் வீட்டிற்குப் போவதாக இருந்தாலும் இனிப்புடன் சேர்த்து காரம் எப்போதும் வாங்கிப் போக மாட்டார்கள். இனிப்பு மட்டுமே கிலோ கணக்கில் வாங்கிப் போகும் கலாச்சாரம் இங்கே.
**************************************************
இங்கு யாரும் யாரையும் சாப்பிட கட்டாயப்படுத்துவதில்லை. சாப்பிடும் போது இருக்கும் பல வித உணவுகளில் நமக்கு என்ன வேண்டுமோ, பிடிக்குமோ அதை சாப்பிடலாம். வேண்டுமானால் ஒரு முறை கேட்பார்கள் என்ன வேண்டும் என்று. நீங்கள் ஒன்றும் வேண்டாம் என்றால் "வேண்டாமா ஓகே" என சொல்லி முடித்து விடுவார்கள். கட்டாயப்படுத்தி போட மாட்டார்கள். இது ஒரு நல்ல பழக்கமாகவே நான் நினைத்தாலும் வீட்டில் கிடைக்கும் "இன்னும் ஒண்ணே ஒண்ணு போட்டுக்கோடா செல்லம்" என்னும் அம்மாவின் கவனிப்பெல்லாம் இந்த ஊரில் கிடையாது.
**************************************************
பெண்கள் மேக்கப் மங்கைகளாகவும், குட்டி பாப்பா கவுனுக்கு மாடல்களாகவும் இருப்பார்கள்.ஆண்கள் சென்ட் கடை ஓனர் போலவும், பான் பராக் வாயர்களாகவும் திரிவார்கள்.
எல்லாத்துக்கும் மேல யாரும் யாருக்காகவும் எதைப் பத்தியும் கவலையில்லாமல் நிம்மதியாக அவரவருக்கு பிடித்த மாதிரி வாழ்வது தான் இப்போதைய மெட்ரோ கலாச்சாரம். டெல்லி தான் அந்த கலாச்சாரத்தின் துவக்கம் என நான் நினைக்கிறேன். ஆண் பெண் சமத்துவம் புகை பிடிப்பதிலும், ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதிலும் இங்கு அதிகம் வெளிப்படுவதைக் காணலாம். இதையெல்லாம் கண்டும் காணாமல் போனால் மட்டுமே நகரின் வேகத்திற்கேற்ப நாமும் ஓட முடியும்.

