நேற்று செல்வேந்திரனை நீயா நானாவில் பார்க்க நேர்ந்த போது மிகுந்த மகிழ்ச்சி. என்னவரையும், அப்பாவையும் கூப்பிட்டுக் காண்பித்தேன். அடுப்பில் வைத்திருந்த ரொட்டியை அணைத்து விட்டு டிராயிங் ரூம் வந்து விட்டேன்.
நாகரிகமான உடை, கச்சிதமான உடல் மொழி என கலக்கி விட்டார் செல்வேந்திரன். அவரை நான் மூன்று முறை மட்டுமே சந்தித்துள்ளேன் என்றாலும், மணிக் கணக்கில் பேசியிருக்கிறேன். முதல் முறை அவரை சந்திக்க போயிருந்த போது அவர் கொஞ்சம் தாமதமாக வர நேர்ந்தது. காரணம் கேட்ட போது, "இல்ல விக்கி, வர்ற வழில ரோட்டுல வெயில் காரணமா ஒரு பெரியவர் மயங்கி விழுந்துட்டார். பார்த்திட்டு அப்படியே எப்படி வர்றது. அதான் மருத்துவனையில் சேர்த்து விட்டு, கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு வந்தேன்" என்றார். "யாரவர்" என்ற எனது கேள்விக்கு அவரது ஒற்றைப் பதில் "தெரியாது".
அவர் நிகழ்ச்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை என்னிடம் அடிக்கடி சொல்லுவார். ஒன்று, நம் உறவினர், நம்மைச் சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினர், பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள் என நம்மை அறிந்த பல உறவுகள் இருக்கும் போது, முகம் தெரியாத ஓர்குட், பேஸ் புக், ப்ளாக் இதன் மூலம் வரும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என நாம் நினைப்பது ஏன்? அடுத்தது, பாட்டன், பூட்டன் பெயர் என்ன, அவர்கள் என்ன தொழில் செயதார்கள் என்ற விவரங்களை அறிய நாம் காட்டும் அக்கறையை விட யாரோ முகம் தெரியாதவரைப் பற்றி அறிய அதிக அக்கறை காட்டுவதேன்...
என்னை சிந்திக்க வைத்து சீரமைத்தவை அவரின் எழுத்துக்களும், கருத்துகளும். செல்வேந்திரனை நான் மதிக்க காரணங்கள் சில.
* மிக எளிமையானவர். எல்லோரிடமும் பழகுவதற்கு இனியவர்.
* தன் எழுத்துகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் காரணமாய் எப்போதும் தற்பெருமை கொள்ளாதவர்.
* ஆங்கிலம் தெரியாமல் தப்பு தப்பாகப் பேசும் பீட்டர்களுக்கு நடுவே ழகரம், ளகரத்தைத் தவிர மற்ற தமிழ் உச்சரிப்புகளைத் தெளிவாக, எளிமையாகப் பேசுபவர்.
* சபை நாகரீகம் அறிந்தவர். யாராவது தவறான வார்த்தைகள் உபயோகித்துத் திட்டினாலும் அவரை எதிர்த்துப் பேசாமல் பொறுமையாய் சிரித்துப் போவார்.
* பல வெட்டிக்கதை ஆசாமிகளுக்கு நடுவே எப்போதும் பிஸியாக தன் வேலையில் ஓடிக் கொண்டிருப்பவர்.
* பல தரப்பட்ட நட்பு வட்டங்கள் இருந்தும் எவ்வித கெட்ட பழக்கங்களையும் கற்றிருக்காதவர்.
* யாருக்கு எந்த உதவி என்றாலும் தன்னால் முடியுமானால், யோசிக்காமல் செய்யக் கூடியவர்.
* நேரத்தைப் பொன் போல மதிப்பவர்.
* சொந்தக் காரர்களையும், சிறு வயது நண்பர்களையும் எப்போதும் மறவாமல் நட்பு பாராட்டுபவர்.
* மொக்கைகளை மட்டுமே கொண்டுள்ள பல பதிவர்களுக்கு நடுவே தரமான உபயோகமான பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் சொற்பப் பதிவர்களுள் ஒருவர்.
* எப்படிப் பட்ட கோபத்தையும் அழகான புன்னகையால் வெளிப்படுத்துபவர்.
* தனக்கு எதிரில் தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட ஆண்மகன்.
இந்த குணங்களையெல்லாம் கண்டு வியந்த நான் ஒரு முறை அவரிடம், "எப்படி செல்வா, இப்படி?" எனக் கேட்ட போது அவர் எனக்கு சொன்னது, "விக்கி, நாம ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி நாம எப்படிப் பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம், என்ன சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம், நம் பெற்றோர் எப்படிப் பட்டவர்கள், நாம் செய்யும் செயல்களை அவர்கள் அறிய நேர்ந்தால் என்ன நினைப்பர் என்ற கேள்விகளை நினைத்துப் பார்த்தால் மகாத்மாகவல்ல, ஒரு நல்ல மனுஷனாக வாழ முடியும்."
சரி தான் செல்வா. நீயா நானா நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்து கோபிநாத் யாரையும் இவ்வளவு பாராட்டியதில்லை. செல்வா எனக்கும் நண்பர் என சொல்வதில் மிகப் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் செல்வா நீ இன்னும் வளரவும், பல உயரங்களை அடையவும்.