Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Thursday, July 15, 2010

என்ன பதிலிருக்கிறது நம்மிடம்?

பதிவுலகம் பலருக்கும் எழுதிப் பழகுமிடமாகவும், எண்ணங்கள் பகிருமிடமாகவும் உள்ளது. அதையும் தாண்டி எப்போதும் என் மொழியையும், என் மக்களையும் என்னுடன் வைத்திருந்து என்னைத் தனிமை சிறையிலிருந்து காத்த வடிகாலாகத் தான் நான் எப்போதும் எண்ணுகிறேன். இப்பதிவுலகால் கிடைத்த நட்பு வட்டம் மிகப் பெரிது. உதவிகள் அதனினும் பெரிது. அப்படி எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத நல்லதொரு சினேகம் இலங்கைத் தோழி ஒருவர். வழக்கமாக என் பதிவுகளுக்கான அவரது நேர்மையான விமர்சனத்தை முழு நீள மெயிலாக அனுப்புவார். அவர் எனக்காக ஒதுக்கும் நேரத்தையும், பகிரும் ஆரோக்கியமான விஷயங்களையும் கண்டு ஆனந்தத்தில் திணறிப் போவேன். அவர் இன்றெனக்கு அனுப்பிய மடலின் ஒரு பகுதி இங்கே. நிஜமாய் என்ன பதிலெழுத எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி நெஞ்சைக் குத்திச் செல்கிறது.


ன்புள்ள இனிய ஸ்நேகிதிக்கும் கணவருக்கும்,
இனிமை கலந்த வணக்கங்கள் பல..
நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
தவளைக் கல் கதை.. சான்சே இலலைங்க.. கொஞ்ச நேரம் கணணித் திரையை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன்.. என் ஊரிலும் இதுபோன்ற ஒருவரை பார்த்திருக்கிறேன, பழகியிருக்கிறேன்.. எங்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டிவரும் சுந்தரி அக்காவின் தம்பி.. என்னோடு சரியான விருப்பம்.. எப்பவும் நெல்லிக்காய், முந்திரிப் பழம், அவர் வளர்த்த மாட்டுப்பால் என்று தந்து என்னோடு தங்கச்சி தங்கச்சி என்று என்னைக் கூட்டிக்கொண்டு, இல்லையில்லை தூக்கிக்கொண்டு அலைந்தவர்.. அவரின் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. என்ன உங்கள் கதை நாயகன் ராஜு அண்ணா சாலை விபத்தில் இறந்தார்.. என் அண்ணா இலங்கையில் இருக்கும் இரத்தக் காட்டேறிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு, அவர்களின் வேடிக்கைக்கு வினையாகி இறந்தார்.. அவர் இறக்கும் முன் என்னோடு பேசிவிட்டு பாதையால் சென்றார் என்பதை நான் சொன்னால் நம்ப முடிகின்றதா.. அந்த துப்பாக்கிச் சூட்டு சத்தம் இப்போதும் என் காதுகளில் கேட்கிறது.. இவர் மட்டுமா.. இவரைப் போல எத்தனை அண்ணாக்களை நான் இழந்திருக்கிறேன்.. கொஞ்ச நேரம் அவரைப் பற்றி மறந்திருந்த நினைவுகளைத் தட்டியெழுப்பி, அவரின் நினைவுகளை மன வயலில் விதைத்து விட்டீர்கள்.. இன்று வீடு சென்றதும்..அம்மாவுடன் இதுபற்றி சொல்லிக் கதைக்க வேண்டும்..

எனக்கு இரண்டு தம்பிகள் மட்டுமே என்று தெரியும் தானே.. ஏனோ எனக்கு ஒரு அண்ணா இல்லை என்ற ஏக்கம் இப்போதும் மனசில் இருக்கும்.. அதனால் எனக்கு பிடித்தவர்களை அண்ணா அண்ணா என்றழைத்து அவர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பேன்.. அவ்வாறு நான் கைபிடித்துச் சுற்றிய பலர் இப்போது என்னோடு இல்லை.. காரணம் வன்முறை.. இன்றும் என்னால் எந்தவொரு உயிருக்கும் துரோகம் செய்ய முடியாது, பாவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தை கொண்டிருப்பதற்கு.. நான் சிறுவயதில் இருந்து பார்த்த இந்த இழப்புகளும் ஒரு காரணம்..

என்னங்க நீங்க.. வேலை செய்யுற மனசையே மறக்கடிச்சுட்டீங்க.. என்னவோ போங்க.. இனி வேலை செய்யுறதுக்கு கொஞ்சம் நேரம் செல்லும்.

*******************************************

மன்னிக்கவும் தோழி. உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை. நெஞ்சைக் கிழித்துப் பாய்ந்து பரவுகிறதொரு வலி. இயலாமையின் வலி. துக்கத்தின் வலி. மௌனத்தின் வலி. இத்தனைக் கொடுமைகளையும் தினசரி வாழ்வின் பெரும்பகுதியாய் சந்தித்து வரும் உங்களுக்கு பாதுகாப்பான, பகட்டான, நிம்மதியான வாழ்வு வாழும் என்னிடம் இல்லை, எங்களிடமிருந்து எந்த பதிலுமில்லை தான். மனசாட்சி செத்துப் போய் யுகங்களாகிவிட்டன. பொய்யான வாழ்க்கையில் போலியான நாகரீகத்தில் குமுறும் உள்ளத்தை வோட்காவால் அணைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமிங்கே. ஒருவனைக் கொன்று அவன் இரத்தம் குடித்து வாழும் வாழ்வு. மனிதம் மரித்துக் கொண்டே உள்ளது. இனி ஒரு போரை எதிர்கொள்ளும் வலியையும், அதனால் வரும் சகோதர இழப்புகளையும் கடவுள் நமக்கு அளிக்காதிருப்பாராக.