கோக்
கசட்டா
காஜுகத்லி
கஸ்டர்ட்
எதுவுமே ருசிக்கவில்லை
உன் இதழ் பதித்து
மீதி வைத்த
பாதிக் கோப்பைத்
தண்ணீரை விட.
****************************************************************************************************
உனைப் பற்றி எழுத நினைத்து
உன் பெயரை மட்டுமே எழுதினேன்.
வார்த்தைகள் கூட
நாணத்தோடு
ஓடி ஒளிந்து கொள்கின்றன!
****************************************************************************************************
உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம்.
****************************************************************************************************
சாப்பிடச் சொன்னால்
ஊட்டி விடுகிறாய்.
தூங்கச் சொன்னால்
தூங்க வைக்கிறாய்.
படிக்கச் சொன்னால்
கற்றுத் தருகிறாய்.
பேசாதிரு என்றால்
கதை...யளக்கிறாய்.
காதலிக்கச் சொன்னால்
கிறுக்கித் தள்ளுகிறாய்.
உன்னை வைத்துக் கொண்டு
என்னடா செய்ய...
****************************************************************************************************
"கார் ஓட்டப் பழக வேண்டும்" என்றேன்
"சரி வா சொல்லித் தரேன்" என்றாய்
"நீ இடது பக்கம் உட்கார்ந்தால்
நான் எப்படி சாலை பார்த்து ஓட்டுவேன்"
என்ற என் கேள்விக்கு
என்னை அடிப்பதாய் கை ஓங்கி
அணைத்துக் கொண்டே சொன்னாய்
"நீ மாறவே மாட்டியாடி?"
"நீ என்னை மாற்றி விட்ட பின்
வேறெப்படி மாற நான்?"
****************************************************************************************************
"உன் சட்டை கொடு
நீ இல்லாத நேரங்களில்
எனக்குத் துணையாக"
என்றேன்.
"சட்டைக்குள் நான் இருந்தால்
சம்மதமா"
என்கிறாய்.
"ச்சீ போடா" என்கிறது உதடு
"வேண்டாமென்றா சொல்வேன்"
என்ற மனதின்
குரலை மறைக்க.
****************************************************************************************************
"நான் போறேன்டா."
"பத்திரமா போயிட்டு வாடா "
"கண்டிப்பா போகனுமா"
"ஆமாடா செல்லம்"
"போகப் பிடிக்கலைடா"
"தெரியும் டா"
"நான் உன்னை விட்டுப் போகலடா"
"சரி போகாத."
"இல்ல, போய்த் தான் ஆகணும்."
"ம்ம்"
பிரிதலின் போதான
நமது உரையாடல்கள்
எப்போதும் மாறுவதேயில்லை
நம் காதலைப் போன்றே!
****************************************************************************************************
அழகிய மழைநாளில்
ஒதுங்கிய கூரைக்குக் கீழே
நடுங்கிய கைகளுக்குள்ளே
மூச்சுக் காற்றின் உஷ்ணம்
அதிகரிக்கும் வேளையில்
நடக்கிறது
ஒரு பனிப் போர்
உன் ஆண்மைக்கும்
என் பெண்மைக்கும்.