Sunday, February 28, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - ரசிகையின் பார்வைசிம்புவின் கைவித்தை மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை; த்ரிஷாவின் உதடு சுழிக்கும் நடிப்பு இல்லை. இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே கௌதம் மேனனின் காதல் கதையைப் பார்க்க சென்றேன். கொஞ்சமும் ஏமாற்றவில்லை. படம் முழுக்கக் காதல். ஒவ்வொருவரும் உணர்ந்த அல்லது தன் நட்பு வட்டத்தில் யாராலேனும் உணரப்பட்டிருந்த காதலையே அழகாக சொல்லியிருக்கிறார். ஐந்து பேரில் ஒருவருக்கு வரும் முதல் காதலின் அழகான ஓவியம் “விண்ணைத் தாண்டி வருவாயா”

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து விட்டு திரைப்பட இயக்குனராகும் ஆசையில் துணை இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞன் கார்த்திக். பெற்றோருக்கு சம்மதம் இல்லாத பொழுதும் அடமாகத் தன் இலக்கை நோக்கிப் போகும் ஹீரோ. மேல் வீட்டில் குடியிருக்கும் ஹவுஸ் ஓனரின் மகள், தேவதையாக ஜெஸ்ஸி. பார்த்ததும் ஒட்டிக் கொள்ளும் இல்லை, பற்றிக் கொள்ளும் காதல், அதன் சேட்டைகள், அதை சமாளிக்கும் குறும்புத் தனமான முகம் எனத் தேர்ந்த நடிப்பு சிம்புவிடம். கார்த்திக்கின் காதலை அறியும் தங்கை ”ஜெஸ்ஸி மலையாளி; கிறிஸ்டின். அதை விட கார்த்திக்கை விட ஒரு வயது மூத்தவள்” என்ற விபரங்களை சொல்லி அவன் காதல் ஒத்து வராதெனக் கண்டிக்கிறாள். அத்தகைய குழப்பங்களில் அறிவுரை (!) கூறி காதலை வளர்க்கிறார் கேமராமேன் நண்பர். இப்படியாக ஜெஸ்ஸியின் மேல் கிரேஸியாய் அலைகிறான் கார்த்திக். ஜெஸ்ஸி தன்னைத் தம்பியென சொல்லும் தருணத்தில் பயந்து போய் “I am in Love with you" என்கிறார் ஹீரோ. முறைத்துக் கொண்டு போய் விடுகிறாள் ஜெஸ்ஸி. அடுத்த இரண்டு நாட்களில் அவளைக் காணாது தவிக்கும் அண்ணனிடம் ஜெஸ்ஸி பத்து நாட்கள் அவள் பாட்டியின் வீட்டிற்கு ஆலப்பே போயிருப்பதாக சொல்கிறாள் தங்கை.


அடுத்ததென்ன, “வாரணம் ஆயிரம்” படம் பார்த்த எஃபெக்டில் “அவனவன் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கே போறான். ஆலப்பே தானே” என ஆலப்பேக்குக் கேமராமேன் நண்பருடன் பயணமாகிறான் கார்த்திக். நான்கு நாட்கள் தேடி ஜெஸ்ஸியை சந்திக்கிறான். காதலை சொன்னதற்கான மன்னிப்புக் கேட்பதற்காக வந்ததாக சொல்லி, நட்பாகக் கைகோர்க்கின்றனர் இருவரும். எதுக்காகப் பிடிச்சது என அவர்களிருவரும் நின்று பேசும் லொக்கேஷன் அருமை. சிம்புவிற்குப் பின்னால் நீண்ட ஆறும், த்ரிஷாவிற்குப் பின்னால் படகும் என தூளான கேமரா மேனின் கைவண்ணம். ஜெஸ்ஸி சென்னைக்குத் தனியாகப் பயணிக்கிறாள் என அறிந்து அவளுடனே பயணமாகிறான் கார்த்திக். அப்போது எண்ட்ரி ஓமனப் பெண்ணே பாடல். பென்னி தயாள் ஏமாற்றவில்லை. இதில் ஹைலைட்டே கேமரா தான். அசத்தலான காட்சிகள். அழகான பெண், அவள் மேல் பைத்தியமாக அலையும் பையன், ஒரே சீட்டில் இரவுப் பயணம் - பேச்சில் ஆரம்பித்துக் கால், கை எனக் கன்னத்தில் முத்தம் வரை போகிறது.


சென்னை திரும்பியவுடன் மறுபடியும் தடுமாறுகிறாள் ஜெஸ்ஸி. இந்தக் காதல் திருமணத்தில் முடியாது. இது தொடரக் கூடாது என்கிறாள். விடுவதாயில்லை கார்த்திக். ஒரு வழியாய்க் காதல் ஆரம்பிக்க, வழக்கம் போல் நாயகியின் அண்ணனுக்கும், நாயகனுக்கும் அடிதடியாகிறது. மறுபடியும் குழம்பும் ஜெஸ்ஸி. இந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் நிச்சயிக்கப்பட அதை சர்ச்சிலேயே மறுக்கிறாள் ஜெஸ்ஸி. அன்றிரவே கார்த்திக்கை சந்தித்து மீண்டும் மலர்ந்து, வாசம் வீசுகிறது காதல். காதல் மழையில் நனைகின்றனர் நாயகியும், நாயகனும்.

துணை இயக்குனராக முயற்சிக்கும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார். அந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் மறுபடியும் பேசப்படவே பதற்றமடைந்து கார்த்திக்கை அழைக்கிறாள். வேலைகளுக்கு நடுவே பேச முடியாத கார்த்திக்கிடம் கோபம் கொள்கிறாள். சிறிய சண்டை மனமுறிவாகப் போகிறது. கார்த்திக்கிற்காக வீட்டில் பேசும் ஜெஸ்ஸிக்கு அப்பாவின் தற்கொலை மிரட்டல் பயமுறுத்தவே காதலிலிருந்து விலக வேண்டிய கட்டாயம்.

இந்த காதல் மேலும் தொடர்ந்ததா... காதலின் முடிவு எப்படிப் போனது.... கார்த்திக் இயக்குனரா என்பது தான் படத்தின் கடைசி சில காட்சிகள். ஆனாலும் கடைசி சீன் வரை சீட்டை விட்டு நம்மை எழுந்திருக்க வைக்காமல் இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் தான்.

மிக அழகாக நேர்த்தியாகவே போகிறது காதல், வழக்கமான குழப்பங்களுடன்.

படத்திற்கு பெரிய ப்ளஸ் மனோஜின் ஒளிப்பதிவு. அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசைக்குக் குறைவில்லை என்றாலும் படம் முடிந்து வெளியே வரும் போது எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்வதை உணர முடிகிறது. அடுத்த ப்ளஸ் சிம்புவின் காஸ்ட்யூம் டிசைனர். அவரின் ஒவ்வொரு ஆடையும் மனதில் நிற்கிறது. நேர்த்தியான தேர்வு, வடிவமைப்பு. குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம். ஆனால் த்ரிஷாவிற்கான காஸ்ட்யூம் தான் சரி சொதப்பல். காட்டன் சேரியிலும், சுடிதாரிலும் கூட வெரைட்டி காட்டலாம் என்பதை மறந்து விட்டாரா டிசைனர் எனத் தெரியவில்லை. அதை விடக் கொடுமை அவரின் மேக்கப். எல்லா சீனிலும் இயற்கையாய்க் காட்டுவதற்காக தலையை சுருட்டையாய், சீவாதவாறு ஒரு மாதிரி விரித்து விட்டது சரி, கல்யாணத்திற்கு போகும் போதும் அப்படியேவா.... கடைசிக் காட்சியில் அவரின் கண்மை அழகாக உள்ளது. அப்படியே படம் முழுக்க இருந்திருந்தால் அவர் இன்னும் அழகாக இருந்திருப்பார். பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? கொஞ்சம் நெருடலான மேக்கப். ஆனால் லிப்ஸ்டிக்கைத் தீட்டி வைக்காமல் அழகாக, இயற்கையாகக் காட்டியிருக்கிறார்கள் த்ரிஷாவை.


அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள் சிம்புவும், த்ரிஷாவும். முதலில் சாதாரண காதல்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு. அது தான் அவர்களின் திறமையை முழுக்கக் கொண்டு வர உதவியுள்ளது. எந்த வாய்க் கோணல் சேட்டைகளும் இல்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல பாங்காக உள்ளார் த்ரிஷா. அவரிடம் ஒரு மெச்சூரிட்டியைக் காண முடிகிறது. அதே தான் சிம்புவிடமும். தனது 25 வது படத்திலாவது அவர் விரல் வித்தைகளைத் தவிர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கொள்ளை கொள்ளும் காதல் காட்சிகளில் 23 வயதுப் பையனாக மனதை அள்ளுகிறார். த்ரிஷாவிற்கும், சிம்புவிற்கும் நிஜமாகவே நல்ல கெமிஸ்ட்ரி.


படத்தின் ஒரே நெருடல் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் பார்த்தது போல் வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் ஆட்டம். முதலில் பார்க்கும் போது நளினமாகத் தான் இருந்தது என்றாலும் எல்லா படங்களிலும் பார்த்து சலிப்பே வருகிறது. வேண்டாம் கௌதம். கொடுமை. மத்ததெல்லாமே பெர்ஃபெக்ட்.


படத்தில் கொஞ்சம் லாஜிக் இல்லையெனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்கு - காதல் லாஜிக் இல்லாதது தான். இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் கொஞ்சம் கிறுக்குத் தனமானது தான். அது தான் காதலின் அழகு. ரசியுங்கள்.

யோகி கமெண்ட்ஸ் - முதல் முறையாக ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமென்பதால் என்னைப் போலவே ஆர்வம் குறையாமல் ரசித்தார். விஜய்யையும், அஜித்தையும் பார்த்து போரடித்துப் போனவருக்கு சிம்புவின் துடிப்பான துள்ளல் ரொம்பவே பிடித்து விட்டது. Worth spending 170 rupees per ticket and a travel of 60 Kms.

தியேட்டர் வாய்ஸ் - படம் முடிந்து வெளிவரும் பலரும் மனோஜின் ஒளிப்பதிவைப் புகழ்ந்தது தெளிவாகவே கேட்டது.

த்ரிஷாவை ரசித்த கணவர்களை முறைத்த பெண்களைக் காண முடிந்தது.

ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல காதல் படத்திற்குக் கூட்டி வந்ததாக ஒரு காதலி தன் காதலனைப் புன்னகைத்தார்.

ஓரிருவர் மட்டும் கிளைமாக்ஸ் சொதப்பி விட்டதாகப் பேசி சென்றனர். பலருக்கும் கிளைமேக்ஸ் பிடித்திருந்தது என்பதும் அறிய முடிந்தது.


மொத்தத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா - திகட்டத் திகட்டக் காதல் - மனதை அள்ளும் வசீகரம்.

கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.

Friday, February 19, 2010

குழந்தையின் வாழ்த்து

சிகரங்களில் கூடு கட்டும்
பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து
தெரியும் பூமியில்
நீர்க் கிழித்து எழுந்து மறையும்
டால்ஃபின் கண்ணில் தெரியும் ஆகாயமாய்
அர்த்தம் தெறித்து மறையும்
கவிதைகள் கண்ணாமூச்சி

துண்டு துண்டாய் வெட்டுபட்டாலும்
கவிதையில் இருக்கிறது
மண் புழுவாய் உயிர்
காட்டு நதியில்
நீர் குடிக்கும் மான்களின் மௌனம்
சலனமுறுகிறது
நிழல் இருக்கும் மரத்தின்
ஒரு முதிர்ந்த இலையுதிர்வில்

பெரும் பாலையின்
பறவைகள், மிருகங்கள்
கால் வலி கடக்கும்
மணல் சூரையின் உஷ்ணம் சொற்கள் இருந்தாலும்
ஒட்டகத்தின் வயிற்றில் எப்போதுமிருக்கும்
நீர்மை அன்பு
காகித மிருகத்தின்
கண்களில் ஒலிக்கும் பசி
கால்களுக்களிக்கும் பிடிவாத ஓட்டத்தின்
சுவடுகளின் அழுத்தம்
செலுத்திக் கொண்டிருக்கிறது
உன்னையும் உன் கவிதையையும்

இருவிரல் பற்றிக் கடித்த ஆப்பிளாய்
பூமியின் உள்ளும் புறமும்
கிளை மற்றும் வேர் விரித்து
கவிதை மனத் தாவரம்

கோபுர நிழலை
மிதிக்கத் தயங்கும்
குழந்தையின் கால்கள் வார்த்தைகளாக
வாழ்த்தித் தொடர்கிறேன்
இந்த நாளை

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(உங்களைப் போல் எழுதி உங்களை வாழ்த்த விரும்பினாலும், உங்களளவுக்கு இல்லை தான். புழக்கடைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பா.)

(திரு. நேசமித்திரன் அவர்களுக்கு.)

Monday, February 15, 2010

காதலைக் கொண்டாடுங்கள்


காதலர் தினம். ஊரே கொண்டாடி ஓய்ந்து விட்டது. நேற்றும் முந்தின நாளும் டெல்லி மற்றும் பெரும்பாலான வடக்கிந்திய நகரங்களில் பொக்கே வியாபாரம் களை கட்டி விட்டது. ஐம்பது ரூபாய்க்கு ஒற்றை ரோஜா என ஆரம்பித்து பத்தாயிரம் வரை பொக்கேக்கள் குவிந்துள்ளன. இதற்கு மேலும் அதிக விலையில் வேண்டுமெனில், ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரப் பலகை வேறு. பூவிற்கே இவ்வளவு விலையா என 'ஆ'வென நாம் பார்த்திருக்கும் வேளையில், "உன் மென்மையைப் பூவைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும்" என டயலாக்குகளை அள்ளி விட்ட படி இளைஞர் பட்டாளம் அப்பாவின் கருப்புப் பணத்தை இப்படி பூவில் செலவழித்து வாட வைத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தியா வழக்கம் போல் பிச்சைக்காரர்களின் நாடாக மாறி வருகிறது.

சரி நாம இந்த காதலுக்கு வருவோம். ஒரு நாள் கொண்டாடி, பரிசுகள் வழங்கி, முத்தமிட்டு, மொத்தமும் பகிர்ந்து முடிந்து விடுவது தான் காதலா.... காதல் என்பது சிரிப்பு, அழுகை, கோபம், நேசம், துக்கம் போன்றதொரு உணர்ச்சி என சொல்லலாமா... அல்லது இவையெல்லாம் கலந்த கலவை எனக் கொள்ளலாமா... அவ்வளவு தானே. காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது.

ஆடம்பர டிஸ்கோக்கள், அளவுக்கதிகமான சாப்பட்டு வகைகள், அதிக விலைப் பயணங்கள், அடுத்த நாள் தூக்கியெறியப்படும் மலர்க் கொத்துக்கள், என்றோ உடைந்து போகும் பரிசுப் பொருள்கள் இவைகளில் இல்லை காதல்.

கல்லூரி நாட்களில் தோழிகளிடம் காதலர் தினம் பற்றிய பேச்சு வந்துள்ளது. முதல் முத்தம், ஒரு டைரிக் கவிதைகள், கட்டித் தூங்க ஒரு டெட்டி பியர், நாட்குறிப்பில் புதைத்து வைக்க ஒற்றை ரோஜா எனக் காதலர்கள் சேமித்த யாவும் ஏதேனும் ஒரு தோழியிடம் பத்திரமாய் ஒளித்து வைக்கப்பட்டு (முத்தம் தவிர ;) ), மனதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள காதலுடன் மணவறை ஏறிய கதைகள் ஆயிரம். காதலின் முடிவு திருமணம் என்றில்லை. ஒவ்வொரு காதல் வெற்றியைப் போலவே கொண்டாடப்பட வேண்டியது காதல் தோல்வியும். அந்தக் காதல் தோல்வியும் இனிமையாய் இருந்தால் தானே இனிக்கும். ஒரு காலத்தில் உயிராய் இருந்த இருவர் சில வருடங்கள் கழித்துக் கண்டும் காணாமல் முறைத்துப் போவது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. காதலித்ததை ஒரு போதும் தவறென குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

காதலிக்கத் துணிவிருந்தது போல் அதை பெற்றோரிடம் சொல்லவும் துணிவிருக்கட்டும். காதலை வைத்துக் கல்யாணத்திற்காகப் பிச்சை எடுக்க வேண்டாம். காதல் அழகான விஷயம். அதை அதே அழகுடன் வாழ்நாள் முழுக்கக் கொண்டு செல்லுங்கள். தோழிகளுக்குள் திருமணமான அனைவரும் தங்களது காதலர் தின கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தோழியின் கணவர் அவள் நீண்ட நாளாய் ரிப்பேர் செய்து தர சொல்லிக் கேட்டிருந்த அவளது கேமராவை சரி செய்து பரிசளித்திருக்கிறார். மற்றவர், அன்று முழுவதும் அவளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சமைத்திருக்கிறார். இன்னொமொரு தோழி அவள் கணவர் நீண்ட நாளாக வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்கிப் பரிசளித்தருக்கிறாள். மற்றுமொரு காதல் ஜோடி அவர்களின் காதல் நாட்களில் சென்று வந்த இடங்களுக்கு மறுமுறை சுற்றி வந்திருக்கிறது. ஐம்பதுகளில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் காலாற நடந்து கதை பேசி ஒன்றாக அனைத்து வேலைகளையும் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல.

காதல் என்பது உணர்ந்து அனுபவிக்கப்ப்ட்டு வாழ வேண்டியது. கட்டாயத்தாலோ, பரிசுப் பொருட்களாலோ அல்ல. காதலை உணருங்கள், பகிருங்கள், மூழ்குங்கள். காதலர் தினம் ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 லிருந்து அடுத்த ஃபிப்ரவரி 14 வரை தொடரும் பயணம். ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம், ஒரு நாள் மட்டும் காதலிக்க அல்ல.

நாங்களும் காதலில் பிஸியாக இருந்ததால் ஒரு நாள் லேட் பதிவு. :)

காதலர் தின வாழ்த்துக்கள். காதலைக் கொண்டாடுங்கள் - ஒவ்வொரு நாளும்.