Friday, January 29, 2010

தொடரும் அன்பின் நிழல்


கன்றின் பார்வையுடன்
துவங்கியது சகியே
என்னை நானுணரும் தருணத்தில்
அறிந்தேன் இவனை.
இரவின் வானம் போல்
எத்தனைக் கண்!
கொண்டையளவு திரட்டிப்
பொட்டு வைத்தாலும்
கழியாது திருஷ்டி.

ஆலிலைக் கண்ணனிட்ட
அரைசாண் டப்பாவும் முகமப்பி
பட்டுப் பாவாடை சட்டையில்
பச்சை ரிப்பன் முடிச்சிட்ட கூந்தலுடன்
சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும்
கோழி முழி திரட்டி
பெண் போல் அவனிருக்கும்
புகைப்படம் பத்திரமாய்.

சிலேட்டுப் பருவத்தில்
அரைஞாண் கயிறு மட்டும் உடுத்தி
அடிபம்புத் தண்ணீரில் ஆடினபோது
அதட்டிக் கேட்க ஆளில்லை.
மரம் ஏறல் கற்றுத் தர அவன் செய்த திருவிளையாடல்
மாவுக்கட்டாய் என் கையில்....
கண்பொத்தி ஆட்டத்தில் தானாய் சிக்குபவன்
எனக்கு மட்டும்!

தூர நகர் கூடங்களில்
பயின்று வர சென்ற போதும்
பத்து வருடங்கள் காற்றாடி நூலாய்
காற்றில் மறைந்த போதும்
கண்ட மாத்திரத்தில் காது வலிக்கக்
கதை பேச மறந்ததில்லை.

தையல் கடை கத்திரியாய்
விரல் கவ்வும் வில்ஸ்
முறைத்துத் திட்டினாலும்
முக்குக் கடை கடன் தீர்த்தேன்.
பின்னிரவு வெறும் வயிற்று பியர்
திருட்டுத் தனமாய் வட்டிலிட்டுத்
தலை குட்டிய நாட்களவை.
எதுவுமே நினைவை விட்டு நீங்காது
தாய்ப்பாலை விடத் தூய நட்பு!

ஏதேதோ சீர் இருக்க
நண்பன் சீர் இல்லா மணவறையா....
மனக்குறை போகக்
கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி.

இன்றும்-
பண்டிகை போல் என்றோ அழைத்தாலும்
அன்றாடிய புளியமர ஊஞ்சல் நினைவாடும்
பின்னிசைத்த பறவைகளின் குரலோடு.

Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவர் ஆக


பசங்களா... போன பதிவுல சொன்னதே தான். நீங்க தான் உலகத்திலேயே அழகான ஆண்கள். ஆனா, உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் பார்த்தா கோபமா வருது. வாங்க, உங்களை Mr.Smart ஆக்கும் தொடருக்குள் நுழையலாம்.
இந்த வாரம் அறிமுகம் மட்டுமே. specific ஆ இல்லைன்னு அழப்படாது. தனித் தனி விஷயங்களைத் தனித் தனிப்பதிவா பார்க்கலாம்.


எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்... ம்... சரி, ஆண்களுக்கான ஃபார்மல்ஸ் எப்படி இருக்கணும்னு முதல்ல பார்ப்போம்.

Men's Formal Wears

* உங்களுக்கு வசதியாக அதே நேரத்தில் உங்கள் தோற்றத்திற்கு அழகு சேர்க்கும் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.

* உங்கள் நிறத்திற்கேற்ற உடைகளைத் தேர்ந்தெடுங்கள். நல்ல நிறமானவர்கள் எந்த நிற உடைகள் அணிந்தாலும் நன்றாக இருக்கும். ஆனால், மேட்சிங்கில் கவனம் கொள்ளுங்கள். சற்று மாநிறம் அல்லது கருமையானவர்கள் வெளிர், ப்ரைட் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அடர்ந்த நிறம் கொண்டவர்கள் Navy Blue, Dark Green, Dark Brown, Dark Yellow, Red, Orange மற்றும் மிகுந்த வெளிர் நிறங்களைத் தவிர்க்கலாம். வெள்ளை நிறத்தவர்கள் வெள்ளை, மஞ்சள், க்ரீம் போன்ற நிறங்களில் பேன்ட் மற்றும் ஷர்ட்டை ஒன்றாக அணிவதைத் தவிருங்கள்.

* அதிக தளர்ச்சியில்லாத, அதிக பிடித்தமில்லாத சரியான அளவான ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்.* மேட்சிங் என்பது முக்கியமானதாக இருக்கட்டும். உதாரணமாக கட்டம் போட்ட சட்டையுடன் கோடு போட்ட பேன்ட் போகாதிருக்கட்டும். கட்டம் அல்லது டிசைனுள்ள சட்டையுடன் ப்ளைன் பேன்ட் சிறந்தது. அதே போல் ப்ளைன் சட்டையுடன் Self Striped Trousers அணிவது அழகூட்டும்.* எப்போதும் உங்களுக்கென ஒரு ஸ்டைல் வைத்துக் கொண்டு அதே மாதிரியான ஆடைகளை மட்டும் அணியாதீர்கள். உங்களுக்கு எல்லா ஆடைகளும் பொருந்தும் எல்லாவற்றையும் முயற்சி செய்யுங்கள். முயல்வதில் தவறில்லை.

* நீங்கள் ஆடைகளுக்கு மேல் கோட் அல்லது ஸ்வெட்டர் அணிவதாக இருந்தால் அது உங்கள் ஆடைக்குப் பொருத்தமானதாக நிறத்திலும், துணியிலும் இருப்பது நல்லது. சில்க் சட்டைக்கு மேல் காட்டன் கோட் போடாமலிருங்கள்.


* ஒல்லியாக இருப்பவர்கள் Blazer அணிய நேர்ந்தால் தோள்ப் பகுதியில் padded (Shoulder Padding) ஆக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள். அது உங்கள் தோள் எலும்புகளை வெளியில் காட்டாமலிருக்கும்.

* குண்டானவர்கள் Blazer ஐ மூன்று பட்டன் (3 Button Blazer) உள்ளதாகத் தேர்ந்தெடுங்கள். இது உங்களை உயரமாகக் காட்டும். அதனால் உங்களின் எடை குறைவாகத் தெரியும்.
* ஃபார்மல்ஸ் உடைகளை அணியும் போது முகம் Clean Shave ஆக இருத்தல் அழகு சேர்க்கும். அடர் மீசை உள்ளவர்களாயின் அதை அழகாக ட்ரிம் செய்திருத்தல் நலம்.

* வண்ண நிற பேண்டுகளைத் தவிருங்கள். Neutral நிறங்களான கருப்பு, கிரே, காக்கி, நேவி ப்ளு, க்ரீம், பிரவுன் பேண்டுகளே ஆண்களுக்கு சரியானவையாக இருக்கும்.* காலநிலைக்கு ஏற்ற நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். குளிர் காலங்களில் இளநிற உடைகளையும், வெயில் காலங்களில் வெளிர் நிறங்களையும், மழைக் காலங்களில் அடர் நிறங்களையும் அணியுங்கள்.

* அலுவலகத்திற்கு டை அணிபவராக இருந்தால், ப்ளைன் அல்லது செல்ஃப் டிசைனைத் தேர்ந்தெடுங்கள்.* எப்போதும் சட்டையை tuck in செய்து, ஷூஸ் அணியுங்கள்.

* உங்கள் பெல்ட் நிறமும் ஷு நிறமும் ஒன்றாக இருக்கட்டும். அது போல் உங்களின் பெல்டின் பக்கிளின் (Buckles) நிறமும், வாட்சின் செயின் நிறமும் ஒன்றாக இருக்கட்டும்.

* பேண்ட்டின் நிறமும் சாக்க்சின் நிறமும் ஒன்றாகவோ அல்லது Monochromatic ஆகவோ இருத்தல் நல்லது.

* ஃபார்மல்சுடன் சில்வர் நிற செயினுள்ள வாட்சை அணியுங்கள். லெதர் வாட்சை விட இது பொருத்தமாக இருக்கும். சதுர அல்லது செவ்வக டயல்கள் ஆண்களைக் கம்பீரமாகவும், வட்ட டயல்கள் மென்மையானவராகவும் காட்டும்.* போல்டான மணமுள்ள பெர்ஃப்யூம் தேர்ந்தெடுங்கள்.

இதுவே நிறைய ஆகிடுச்சோ... சரி, கேஷுவல்ஸ் மற்றும் அத்தியாவசிய ஆண்கள் அலமாரிப் பொருட்கள் அடுத்த பதிவில்.

ஆபிஸ் ப்யூன் கூட பார்க்காத உங்களை இனி ஆபிசில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பார்க்க வாழ்த்துக்கள்.

தோழிகளே, இனி உங்களவரையும் கொஞ்சம் அழகாக்குங்கள்.

Monday, January 18, 2010

அழகாவோம் பொண்ணுங்களே


வலையுலகின் புது முயற்சி இது. ஏதேதோ கிறுக்கி வந்த எனக்கு முதல் முறையாக துறைப் பதிவெழுதும் ஆர்வம். துறைப் பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு வந்தாலும் எனது துறை வித்தியாசமானது: எல்லோருக்கும் பிடித்தமானது; தேவையானதும் கூட. இந்தத் துறைப் பதிவிற்கு என்னை வழி நடத்தி கருத்தளித்து அனைவருக்கும் உபயோகமானதாக மாற்ற உங்களை என்னுடன் அழைக்கிறேன்.பெண்களுக்கான அவசியமான ஆடைக் குறிப்புகளுடன் இன்றைய பதிவைஆரம்பித்து, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான அவசியமான விஷயங்களைப் பகிர்கிறேன்.

Fashion & Interior - இது தான் இந்த தொடர் பதிவில் அலசப் படப் போவது.உடனே பொண்ணுங்களுக்கான தொடர்ன்னு நினைச்சு ஓடும் ஆண்களே, ஒரு நிமிஷம். நீங்களும் உடுத்துறீங்க. ஒரு வீட்ல இருக்கீங்க. உங்களையும், உங்களின் இடத்தையும் அழகாக வைக்கும் யுத்திகள் உங்களுக்கும் தெரிந்திருக்கட்டும்.

இந்த வாரம் Fashion சார்ந்த சிறிய அறிமுகம் மட்டுமே.

ஆள் பாதி ஆடை பாதி என்பது எவ்வளவு உண்மையான விஷயம். எவ்வளவு சுமாரானவரையும் அழகாக்கும் ஆடைகள். எவ்வளவு அழகானவரையும் பொலிவிழக்கச் செய்பவையும் அவையே.

யாருக்கு எந்த மாதிரி ஆடைகள் அழகாக, சரியாக இருக்கும் என்பது பற்றிய பெண்களுக்கான டிப்ஸ் இங்கே.

பெண்களுக்கான முக்கியமான விஷயம் இந்த ஆடைகள். ஆண்களை விட பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை பல. ஏனெனில், அழகாய் இருக்கப் படைக்கப்பட்டவர்களே பெண்கள் என்பது என் கருத்து. அழகாக இருப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாகும். அது ஆடைகள் மூலம் சாத்தியமாவது மறுக்க முடியாதது.

* எப்போதும் பளிச்சென்ற நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அவை உங்களை ரசனையானவரகவும் காட்டும்.


* ஆடைகளை சிக்கென அணியுங்கள். தளர்ச்சியான ஆடைகளைத் தவிர்த்தல் நல்லது.

* குள்ளமானவர்கள் நீளமான ஒல்லியான பேன்ட் அணியலாம்.அது உங்களின் உயரக் குறைபாட்டை மறைக்கும்.


* ஒரே நிற ஆடையாய் இல்லாமல் வண்ணங்கள் கலந்த மேலாடைகள் உங்களை உயரமாகவும் ஒல்லியாகவும் காண்பிக்கக் கூடியவை. ஆனால், கலந்திருக்கும் வண்ணங்கள் Monochromatic ஆக இருக்கட்டும்.

* நீளவாக்கில் டிசைன் செய்யப்பட்ட ஆடைகள் உங்களை ஒல்லியாகவும்,உயரமாகவும் காட்டும்.


* உயரமான, ஒல்லியானவர்கள் குறுக்கு வாக்கில் உள்ள டிசைன்களை அணிவது நல்லது. அது உங்களின் உயரத்தைக் குறைத்துக் காட்டக் கூடியது.


* அகன்ற கழுத்து கொண்ட ஆடைகள் பெண்களை ஒல்லியாகக் காட்டக்கூடியவை.

* நீளமான பாவாடைகளுடன் (Long skirts) டி-ஷர்ட் அணிவது உங்களை குண்டாகக் காட்டும். தவிர, நல்ல combination உம் இல்லை. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. Long Skirt உடன் ஸ்லீவ்லெஸ் டாப் எடுப்பாகச் செல்லும்.


* எந்த ஆடை அணிந்தாலும் உங்கள் உள்ளாடைகள் வெளியில் தெரியா வண்ணம் அணியுங்கள். அது உங்களை விரசமாகக் காட்டாதிருக்கும்.

* கருப்பு நிற லிப்ஸ்டிக் தவிருங்கள்.

* பகல் நேரத்திற்கு அதிக மேக்கப் வேண்டாம். இயல்பான தோற்றம் நல்லது.

* உங்களிடம் இருக்கும் அனைத்து அணிகலன்களையும் ஒன்றாக எடுத்துப் போட வேண்டாம். உதாரணத்திற்கு எல்லா விரல்களிலும் மோதிரம் போடுவது அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சங்கிலிகள் அணிவதைத் தவிர்க்கலாம்.

* உங்கள் தோற்றத்தின் ப்ளஸ்ஸாக நீங்கள் நினைக்கும் விஷயம் தெரியும் விதமும், மைனசாக நினைக்கும் விஷயத்தை மறைக்கும் வகையிலும் ஆடைகளை உடுத்துங்கள்.

* அழகாகத் தெரிய வேண்டுமென்பதற்காக உங்களுக்கு சௌகரியமில்லாத ஆடைகளை அணிய வேண்டாம்.

* உங்கள் கால நிலைக்குத் தகுந்த உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.

* உங்கள் தலையலங்காரம் எப்போதும் உங்கள் உடைக்குப் பொருத்தமானதாக இருக்கட்டும்.

* வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உடை உங்களின் ரசனையைக் காட்டுவதாகவும், உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கா வண்ணமும் இருக்கட்டும். தோள்கள், முதுகு, வயிற்றுப் பகுதிகளை முழுவதுமாக மறைப்பதாக இருக்கட்டும் உங்கள் ஆடைகள்.


* உங்களின் செருப்பு உங்கள் பாதம் முழுவதையும் உட்கொண்டிருக்கட்டும்.பெண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10பொருட்கள்.

- இளநிற பளிச்சென்ற ஒரு காட்டன் புடவை / சுடிதார்.

- சரியாக ஃபிட்டாகும் ப்ரான்டெட் ஜீன் (Branded Jean).

- 'V' கழுத்து டாப்.

- வெள்ளை மற்றும் பிரவுன் நிற பெல்ட்.- பட்டுப் புடவை அதற்கு ஒத்துப் போகும் அணிகலன்களுடன்.


- டிசைனர் புடவை அதற்கான அணிகலன்களுடன்.

- நெடியில்லாத பெர்ஃப்யூம்

- மேக்கப் கிட்.

- ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற உடை.

- குறைந்தது இரண்டு Hand Bgas.இதெல்லாம் முடியுமான்னு யோசிக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா உங்க மேல அக்கறை எடுக்க ஆரம்பிங்க. உங்களுக்கே பிடிக்கும். கலக்குங்க லேடீஸ்

நம்ம ஊர் ஆண்கள் தான் உலகத்திலே அழகான ஆண்மக்களாக நான் நினைப்பவர்கள். ஆணுக்கு அழகு அவர்களின் மாநிறமே. ஆனால், இவ்வளவு அழகான நம்மூர்ப் பசங்க அணியும் ஆடைகளைப் பார்த்தால் கோபமா வரும். ஏன்பா உங்களுக்கு ரசனையே இல்ல? உங்களுக்கான டிப்ஸ் அடுத்த பதிவில். கொஞ்சமாவது ஸ்மார்ட்டா இருங்க பசங்களா...


Thursday, January 14, 2010

லோடி கொண்டாடியாச்சு


இன்று லோடி (Lohri) தினம். பஞ்சாபிப் பொங்கல். கோதுமை அறுவடை நாள். இன்று மாலை நேரத்தில் வீட்டிற்கு முன் நெருப்பிட்டு அக்னி தேவனை வணங்கும் நாள். அக்னியை சுற்றி வந்து வணங்கி, கடலை, எள் மிட்டாய், எள்ளுருண்டை, பாப்கார்ன், முள்ளங்கி ஆகியவற்றை அக்னிக்குப் படைத்து நன்றி கூறும் நாள். திருமணமான பின் வரும் முதல் லோடியும், குழந்தைக்கு வரும் முதல் லோடியும் மிகச் சிறப்பு. நெருப்பை வணங்கிய பின் டோல் எனப்படும் இசைக்கருவியை ஒலித்து நெருப்பை சுற்றி முழுக் குடும்பமும் அமர்ந்து பேசி மகிழும் நன்னாள். லோடி பற்றிய நண்பர் செல்வேந்திரனின் விரிவான பதிவு இங்கே. எங்க வீட்டில் லோடி முடிஞ்சது.

லோடிக்குத் தயாராய் கடலை, முள்ளங்கி, பாப்கார்ன், எள்ளுருண்டை மற்றும் எள் மிட்டாய்.


குக்கர் பொங்கல் போல பால்கனியில் மண்தொட்டி லோடி (எங்கள் வீட்டில்)பக்கத்து வீட்டில் தயாராகும் லோடி


தீமூட்டத் தொடங்கும் ஆண்கள்


அதை சுற்றி வணங்கும் மொத்தக் குடும்பம்


பூஜை முடித்து இரவு உணவு வெல்ல சாதம் பாஸ்மதி அரிசியில். (கடைசியா நம்மூரு பொங்கலுக்கு வந்தாச்சா... )லோடி தினத்தன்று இந்தப் பாடலைப் பாடி பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் பணம் வாங்குவது வழக்கம்.(பாட்டெல்லாம் பாடாம கால்ல விழுந்தே கலெக்ஷன் கரெக்ட் பண்ணிட்டோம்ல நாம)
தேரா கோன் விச்சாரா ஹோ
துல்லா பட்டி வாலா ஹோ
துல்லா தி தீ வ்யாயே ஹோ
சேர் ஷக்கர் பாயி ஹோ..........
எனத் தொடங்கி போகும் சிறுவர்களின் கலாய்க்கும் பாடல்.

நம்மூர்ப் பொங்கலுக்கு சிறிதும் குறைவில்லாமல் போகும் கலாட்டாக்கள். முழுப் பஞ்சாபியாய் மாறி விட்ட பின் பொங்கல் சாப்பிட முடியலைன்னு மட்டும் வருத்தப்பட முடியுமா.

காலையில் பொங்கலும், கையில் கரும்புமாக பொங்கல் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Thursday, January 7, 2010

Public Display of Affection - உங்கள் கருத்தென்ன?


புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே. இந்த வருடம் மிக அழகாய்த் தொடங்கியுள்ளதாய் ஒரு உணர்வு. எல்லாம் நல்லதாய் அமையட்டும். தயவு செய்து New Year Resolution(s)ங்குற பேர்ல எதையாவது மாத்தணும்னு கஷ்டப்பட்டு கங்கணம் கட்டிக்கிட்டு அலையாதீங்க. நீங்க நீங்களாவே இருங்க. அழகான வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் அழகாகவே ரசிப்போம். முடியாததை முயற்சி செஞ்சு, தோற்றுப் போய் உங்க மேலேயே வெறுப்பை வளர்த்துக்காதீங்க. All is well. (நாங்களும் 3 Idiots பார்த்துட்டோம்ல.)

****************************************************************************************************

நேற்றிரவு வானொலியில் ஒரு கேள்வி கேட்டார்கள். Public Display of Affection ஐ ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா, சரியா, தவறா என்றெல்லாம். பலரும் பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கையைப் பிடிப்பது, கட்டிக் கொள்ளுவது, முத்தமிடுவது தவறு என சொல்லிக் கொண்டிருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் எதுவும் ஒரு லிமிட்டுடன் இருந்தால் சரி, கை பிடிப்பது, கட்டியணைப்பதெல்லாம் சரி தான். ஆனால், அதற்கு மேல் கூடாது எனவும், இன்னும் சிலர் மறைவான இடமாக, யாரும் பார்க்காமல் இருந்தால் முத்தமிடுவதும் தவறில்லை என்றும் வித்தியாசமான விமர்சனங்கள் போய்க் கொண்டிருந்தன. முடிந்ததும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இது சரியா தவறா என்பதை விட, என் கருத்து எங்கு எப்படி நடந்து கொள்கிறோம் என்பது தான். டெல்லியின் சாந்தினி சோக் போன்ற மார்கெட் ஏரியாவில் கைப் பிடித்துக் கொண்டு போனால் கூட தவறாகத் தான் இருக்கும். அதே விமான நிலையத்தில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாலும் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. அதனால் எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு இருந்தால் போதுமானது. யாரும் நம்மை வித்தியாசமாகப் பார்க்க மாட்டார்கள். (இது என் கருத்து மட்டுமே. உங்கள் கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.)

****************************************************************************************************

3 Idiots படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிந்து விட்டது. காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கின்றனர். அமீர் கான் தனது ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு Perfectionist என்பதை நிரூபித்து வருகிறார். தேர்ந்த மிகையில்லாத நடிப்பு, உறுத்தாத இசை, மிடுக்கான துள்ளல், சீரான வேகம் என எல்லாமே பெர்ஃபெக்ட் படத்தில். கஜினியில் கூட அமிர்கானை இவ்வளவு ரசிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் பக்கத்திலிருந்த என்னவரை மறந்து ரசிக்க வைத்து விட்டார். முழு நீள வசனங்கள், பஞ்ச் டயலாக், குத்துப் பாட்டு, மசாலா வாசம் என இருக்கும் தமிழ்த் தலைகளும், தளபதிகளும் இவர் படம் பார்த்து கொஞ்சம் நமக்கு வித்தியாசமாகக் கொடுத்தால் சரி. ஆனால், இதே படத்தை தமிழில் ரீமேக் செய்தால் எல்லா கொடுமைகளும் இருக்கும். (தயவு செய்து இந்தப் படம் சன் பிக்சர்ஸ் கண்ணில் பட்டு விடக் கூடாது என அருள்மிகு ஸ்ரீ பராக்கிரம கோலிவுட்டம்மனை வேண்டிக் கொள்கிறேன்.)

****************************************************************************************************

தோழியொருத்தி நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியிருந்தாள். பேசிக் கொண்டே இருக்கும் போது அவள் பக்கமிருந்து நிறைய சத்தம் வந்து தொந்தரவு கொடுக்கவே
"என்னடி சத்தம்" என்றேன்.
"குழந்தைகள் விளையாட்டு சத்தம்" என்றதோடு முடித்திருந்தால் ஷாந்தியாகியிருப்பேன்.
"நான் எங்க வீட்டு பால்கனில நின்னு பேசிட்டிருக்கேனா. குழந்தைங்க கீழ விளையாடிட்டு இருக்காங்க. அதான் ஒரே சத்தம். யு நோ, எங்க வீட்டு பால்கனி ரொம்பப் பெரிசு."
"ஓ"
"பிரியாத வரம் வேண்டும் படத்துல வர்ற பால்கனி மாதிரி பெரிசா.... இருக்கும். It is lovely to walk here and talk"
"ஆமா, ஹால் கட்ட முடியாதவன் அதை அப்படியே திறந்து விட்டுட்டு பால்கனின்னு பேர வெச்சுக்குறான். என்ன சொல்ல?"
"ஹேய், எங்க வீட்டு ஹாலும் பெரிசு."
"ஆமா, உங்க வீட்டு ஹாலும் பெரிசு, ஆளும் பெரிசு"
போனை வெச்சிட்டா.(அவ சொல்லும் போது நான் கேட்டுட்டு இருந்தேன்ல. நான் சொன்னதும் என்னா வில்லத்தனம்.....)

****************************************************************************************************

சேதன் பகத்தின் 2 States முடித்து விட்டு, One night @ Call Center வாசித்துக் கொண்டுள்ளேன். ஒரு மனுஷன் எவ்வளவு மொக்கை போட முடியுமோ அவ்வளவு மொக்கை போட்டிருக்கார். இன்னும் நூறு பக்கங்களைத் தாண்டவில்லை. தலைப்பு வைத்து விட்டதால் கதையை அந்த ஒரு இரவை வைத்தே ஓட்ட வேண்டும் என்பதாலோ என்னவோ அதிலுள்ள ஐந்து பேர் தும்முவது, இருமுவது, அழுவது, வாஷ் ரூம் போவது என அனைத்தையும் சொல்லி கழுத்தருக்கிறார் மனுஷன். நிஜாமகவே சிட்னி ஷெல்டன், டேன் பிரவுன் எல்லாம் வாசித்து விட்டு, இவரை வாசித்தால் கொடுமை தான். (நல்ல வேளை, வாஷ் ரூமில் தண்ணி வரலைன்னெல்லாம் எழுதாம விட்டார். கிர்ர்ர்ர்ர்....)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்.
இப்போது தான் எழுத்துகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். போன வாரம் முறுக்கு செய்து கொண்டிருந்தேன். சமயலறையில் நுழைந்தவர், "இது என்ன ஷேப்பே இல்லாம செய்ற. தள்ளு" என்று சொல்லி விட்டு "அ", "ஆ", "இ" என்று முறுக்குகள் செய்ய ஆரம்பித்து விட்டார். அத்துடன் இல்லாமல் "நான் தமிழ் கத்துக்கணும். அதுனால அல்பபெட்ஸ்லேயே முறுக்கு செய்" என எனக்கும் உத்தரவு வேற. தமிழ் நாட்டில் இருந்தப்போ கூட சாதா முறுக்கு தான் சாப்பிட்டிருக்கேன். இங்கே வந்து தான் "தமிழ் முறுக்கு" கத்துக்கிட்டேன். (இனி அவரின் திறமையை பேப்பர் பேனாவில் மட்டுமே காட்டும் படி சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்)