சனிக்கிழமை கரோல்பாகின் நீண்ட பஜாரில் ஷாப்பிங். இரவு வீடு திரும்பி, சமைத்து, சாப்பிட்டு, பேக் செய்து, அவருக்கு ஒரு வாரத்திற்கு சமைத்து வைத்து, காலையில் நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விமான நிலையம் சென்று அயர்ந்த கண்களுடன் ஏர் இந்தியா ஆன்ட்டிகளின் வணக்கம் ஏற்று ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப் போன அசதியுடன் கோவை வந்திறங்கினேன். கோவையிலிருந்து திருப்பூருக்கான ஒரு மணி நேரப் பயணம் மிகுந்த அயற்சியைத் தந்தது. ஆனால், அந்த அலுப்பே தெரியா வண்ணம் அந்த இள மாலைப் பொழுதைப் பொன் மாலையாய் மாற்றிய பதிவ நண்பர்களுக்கு மிகப் பெரிய நன்றியைப் பகிர்ந்து பதிவைத் தொடங்குகிறேன்.
"ஞாயிற்றுக் கிழமை மதியம் திருப்பூர் வருகிறேன் பதிவர்களை சந்திக்க முடியுமா" என்று கேட்டதற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் எப்படி என யோசித்தாலும் தலைவரே மகிழும் அளவிற்கு பிரமாதமாக நடத்தி விட்டார் "திருப்பூர் பதிவர் பேரவைப் பொருளாளர்" சுவாமிநாதன். (நீங்க வாங்கிக் குடுத்த சாப்பாட்டிற்கு பட்டம் போதுமா...)
உண்மையிலேயே எதிர்பாரா வண்ணம் பல நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியே.
கோவையிலிருந்து விஜி, தாரணிப் பிரியா, வடகரை வேலன் வர, கதவு திறந்து வரவேற்ற என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனாலும் சுதாரித்து சிரித்ததற்கு நன்றி. (தூங்கிட்டிருக்கும் போது எழுப்பினா என்ன பண்ண...)
முதல் அரை மணி நேரம் மூன்று பெண்களின் பாக்கியத்தால் வடகரை வேலன், "அண்ணாச்சி"யிலிருந்து பதவி உயர்வு பெற்று "சித்தப்பு"வானார். (இன்னும் எத்தனை நாளைக்கு தான் வயசு கேட்டா பேச்சை மாத்துவீங்க சித்தப்பு...)
விஜியின் கைப்பக்குவத்தில் சாம்பார் சாதம் அருமை. (ராம்க்கு நல்ல ட்ரைனிங் குடுத்திருக்கீங்க விஜி.)
அமைதியாக இருந்தாலும் தேவைப்படும் நேரங்களில் அரட்டையடிக்கவும், கலாய்க்கவும் மறக்கவில்லை தாரணி. அவரின் ஒன்னாம் தேதி சபதம் வெற்றியடைய வாழ்த்துக்கள். (அது உண்மையிலேயே நடந்தா சொல்லுங்க தாரணி.)
அடுத்ததாய் உள்நுழைந்தார் பொருளாளர் சுவாமிநாதன். திருப்பூர் வரும் பதிவர்களைக் கவனித்தே அவர் இளைத்து விட்டதை உணர முடிந்தது. "ஆமா, அறை எண் 308 தான்" என அவர் மற்ற பதிவர்களுக்கு கைபேசியில் வழி சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், சித்தப்பு "அறை என 308 இல் பிசாசு" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டது அவரின் எளிமையைக் காட்டுகிறது.
அடுத்ததாக ராமன் வந்தார். விஜி அவரை கலாய்க்கிறார் என்று கூட தெரியாமல் அவரின் நக்கல்களுக்கும் பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த நல்லவர் அவர். அவர் டயட்டீசியன் என அவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்தது. (உங்க கம்பெனிக்கு நீங்க தாங்க மாடல்)
இவர்களின் சுவாரசியக் காலாய்த்தல்களுக்கு நடுவே அறையில் நுழைந்தார் ஒரு ஐயப்ப சாமி. நம் முரளிகுமார் பத்மநாபன். கொஞ்ச நேரம் எல்லார் பேசுவதையும் உட்கிரகித்து விட்டு பின் பேச ஆரம்பித்தவர் பல விஷயங்களைப் பேசினாலும், மற்றவர் கருத்துகளை ஆமோதித்தும், பேச விட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் ஹீரோவான எஸ்.ரா.வைப் பற்றிய பேச்சும், அவர் மீதான பதிவர்களின் பார்வையும் வித்தியாசமானது. அதையடுத்து, சித்தப்புவிடம் "இலக்கியம் என்றால் என்ன" என்றெல்லாம் கேள்விகளை அவர் ஆரம்பித்த நேரத்தில் மகளிரணி அறையை விட்டு வெளிநடப்பு செய்தது. (இலக்கியமா..... பைத்தியக்காரன் கிட்ட போய் கேளுங்க முரளி. ஒரு பட்டறை போட்டு விளக்குவார்).
விஜி வெளியேறிய போது ராமன் கொடுத்த எபெக்ட் தான் அந்த நாளின் டாப் ஆக்ஷன். (ஆனால் அவர் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்பது அவரின் தனிப்பட்ட சோகம்)
இதனிடையே ஓஷோவைப் பற்றி பேச அடுத்ததாக அறைப் பிரவேசம் செய்தார் பேரரசன். எல்லோரையும் அழ வைத்த விஜி, இவரையும் விடவில்லை. ஆனாலும் கன்னக் குழி சிரிப்புடனும், "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...." என்ற ஒரே பிரம்மாஸ்திரத்தாலும் (ஏன் இந்த நடிப்பு பேரரசன்?) விஜியின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட்டார். ஆனால், என்னை தமிழச்சி என இவர் நம்ப மறுத்தது தான் சோகம். (உங்களுக்கு வரும் மனைவியின் தமிழ் உச்சரிப்புகள் தாறுமாறாகப் போக என சபிக்கப்படுகிறீர்கள் என்னால் :) )
Last but not Least என்ற தலைவரின் வசனப்படி தலைவரின் ரசிகர் கிருஷ்ண குமார் (பரிசல்காரன்) குடும்பத்தோடு வந்தது அன்றைய போனஸ். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தது போல் வித்தியாசமாக வந்தார் நண்பர். அவரின் குட்டீஸ் அவரைப் போலல்லாமல் ரொம்ப ஸ்வீட். ஏங்க கிருஷ்ண குமார், சாயங்காலம் ஏழு மணிக்கு மேல கார்ல போறதுக்கு எதுக்குங்க தொப்பி? (என்னா அலும்பலு.... )
ஒரு வழியாக வெளியில் சாப்பிட செல்லலாமென அனைவரும் அவரவர் வாகனங்களில் கிளம்பினர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த அதே திருப்பூர். பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே உடைந்த ரோடுகள், நெரிசலான போக்குவரத்து, போக்குவரத்து விதிகள் என்றால் என்ன எனக் கேட்கும் திருப்பூர்வாசிகள். ஒரு வேளை இது தான் திருப்பூருக்கு அழகோ?
நல்ல தென்னிந்திய சாப்பாடு வேண்டுமென்றதால் தேர்வானது ரமணாஸ். அங்கேயும் யாரும் பேசுவதை நிறுத்தவில்லை. எங்களுக்கு உணவு பரிமாறியவர் ஒரு விதமாக முழித்தது தனி கதை. ரமணாசில் காத்திருந்தது அடுத்த மகிழ்ச்சி: சுவாமிநாதனின் மனைவியும், குழந்தையும். முதலில் அம்மாவைப் போல் அடக்கமாக அமைதியாக இருந்த குழந்தை, அடுத்த டேபிளுக்கு ஒரு சக வயது சிறுவன் வந்ததும் என்னா லுக்கு, சைட்டு.... இந்த டேபிளிருந்து அங்கு தாவி விழாத குறை. "சுவாமி, பொண்ணுக்கும் இப்போவே ட்ரைனிங்கா" என்றதைக் கேட்டு அவர் அசடு வழிந்தது ஒரு புறம்.
சாப்பிட்டு வெளியில் வந்தால் எங்களைப் போலவே மகிழ்ச்சியாய், மலர்ச்சியாய்த் தெரிந்தது வானம். லேசான தூறலுடன் திருப்பூருக்கு வித்தியாசமான காலநிலை. அனைவரும் அதே புன்னகையுடன் விடை கொடுத்துப் பிரிந்தோம். அனைவர் மனதிலும் ஒரு அழகான பொழுதிற்கான நாளேடுக் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
குறிப்பு: புகைப்படங்களை சீக்கிரமே தலைவரோ, செயலாளரோ, பொருளாளரோ வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம் :) .