செய்தி 1 : டெல்லி யூனிவர்சிட்டி மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து பேருந்திற்காகக் காத்திருந்த வேளையில் அவர் வீட்டருகே வசிக்கும் கொஞ்சம் பழகியவர் லிஃப்ட் கொடுத்திருக்கிறார். முதலில் தயங்கினாலும், தெரிந்தவர் என்பதால் அப்பெண்ணும் அந்நபருடன் காரில் சென்றுள்ளார். வழியில் இரண்டு நிமிட வேலை இருப்பதாகச் சொல்லி அப்பெண்ணை அழைத்துக் கொண்டு போனவர் அங்கிருக்கும் தன் நண்பர்களுடன் சேர்ந்து இப்பெண்ணை ஒரு கும்பலே தொடர்ந்து 6 மணி நேரம் பலாத்காரம் செய்திருக்கின்ற்னர். :(
செய்தி 2: டெல்லி கீதா காலனியில் உள்ள தாபா ஒன்றில் 10 ரூபாய்க்கு தால் வாங்கி வரச் சொல்லி மகனை அனுப்பியுள்ளார் ஓருவர். வாங்கி வந்த தாலில் தண்ணீர் அதிகமாக இருக்கவே கணவன், மனைவி இருவரும் சிறுவன் வாங்கி வாங்கி வந்த தாலை எடுத்துக் கொண்டு தாபாவில் சென்று சண்டையிட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற தாபாவாலா அருகிலிருந்த கல்லை எடுத்து அவர் மண்டையில் எறிந்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார். :(
அக்கம் பக்கமிருப்பவர், வீட்டிற்குத் தெரிந்தவர் என ஒரு மனிதனை நம்பி லிஃப்ட் பெற்றது மாணவியின் குற்றமா அல்லது ஒரு பொருளின் தரம் சரியில்லையென வாதாடி 10 ரூபாய்க்காக உயிரை விட்டது கொடுமையா...
எங்கிருக்கிறோம் நாம்... எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை.... ஒவ்வொரு மனிதனையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கி, ஒரு உள்ளூரப் பயத்துடனே தான் நகர்த்த வேண்டியிருக்கிறது நாட்களை.
மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் எனும் டார்வின் தியரியை மனிதன் மிக அழகாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு நாளும். சோம்பல் முறித்து உதிரும் பறவையின் மெல்லிய சிறகு மேலே விழும் போது கூட கண்களில் ஒரு பயத்துடனே கடந்து செல்கிறோம். வாழ்வை எப்படி ரசித்து வாழ?