Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Wednesday, September 22, 2010

நண்பேன்டா!


அரை கவுன் போட்டு, தலையில் ஒற்றைக்குடுமியுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கீழே விழுந்து அழுகையில் முட்டியில் வரும் ரத்தத்தை எச்சிலால் துடைத்துக் கண்ணீரைத் தன் சட்டையால் ஒற்றியெடுக்கும் நட்பு எப்படி இதமாயிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு இவன் நட்பு.

இவன் என் நண்பன் எனச் சொல்வதில் பெருமை உண்டா என்றால் நிச்சயம் அது மட்டுமில்லை. பெருமையைத் தாண்டி, ஒரு தாய்க்குருவி குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அணைப்பின் உஷ்ணம் உண்டு இந்த நட்பில். “ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...” என்றெல்லாம் வயது வித்தியாசமின்றி, எந்தத் தயக்கமுமின்றி ஒரு ஆரோக்கிய வழியில் எடுத்துச் சென்றது பாக்கியமே.

இவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க. வெளியே மிகவும் கரடுமுரடாக, சண்டைக்காரனாகத் தெரியலாம். ஆனால் பழகிப் பார்க்கும் நண்பர்களுக்கே தெரியும் இவன் இனிமை. நட்பிற்கு இவன் தரும் மரியாதையும், அதில் கொண்டிருக்கும் கண்ணியமும் “இவன் என் நண்பேன்டா”ன்னு சொல்ல வைக்கும். பழகிய பெண்கள் யாரும் இவனைத் தவறாகக் கூற மாட்டார்கள் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்.

இவன் தோழி அப்டேட்ஸ் எழுதறானேன்னு “யாருடா உன் தோழின்னு” கேட்டா, நடிகர் திலகம் ரேஞ்சுக்குக் கண் துடிக்க “யாரும்மா இருக்கா.. எனக்கு யாரிருக்கா..”ன்னு சீன் போடுவான். (குறும்பட நடிகராயிட்டாராமாம்!)

பேசுகையில் நிமிடத்திற்கொரு முறை மொக்கையில்லாமல் பேச சொல்லுங்களேன் இவனை. “டேய், நீ இப்படியே பேசிட்டு இருந்தா நான் ஃபோனை வெக்கறேன் போ. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன்”
“சரி போ, எனக்கும் வேலையிருக்கு” என்பான். எந்த விஷயத்திலும் ஒரு சீரியஸ்னெஸ்ஸே இல்லாதவன்.

எல்லாருக்கும் நல்லவர் பட்டம் கொடுத்து விடுவான் எளிதாக. எல்லாரிடமும் சட்டெனப் பழகிவிடுவான். இசை வெறியன். ரசனையானவன். இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன். அளவில்லா ப்ரியமானவன். கூட நடக்கையில் எங்களை நட்பாய்ப் பார்க்கத் தெரியாத கண்கள் பாவம் செய்தவை.

இவன் நட்பை நான் எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் அது மிக சிரமம். தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. எனக்குப் பொக்கிஷம் அது.

நடிகராகக் களத்திலிறங்கிவிட்ட இவருக்குக் கடும் போட்டியாக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ரெண்டு மண்டையும் ஒண்ணு. அய்யோ, அவ்ளோ அறிவாளின்னு சொல்ல வந்தேங்க. சீக்கிரமே தோழி அப்டேட்ஸ் தங்கமணி அப்டேட்ஸாக வாழ்த்தி இந்தப் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பா.

கார்க்கி “நீ என் நண்பேண்டா” - பெருமையா சொல்றேன்.

ம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.

Thursday, May 13, 2010

சிமிழ் திறந்து சீர் பெருக...

“இவன் என் நண்பன்” எனச் சொல்லுவதில் ஒரு கர்வமுண்டு தானே. அந்தக் கர்வம் உண்டு இவரிடம் எனக்கு. நான் மிகவும் மதிக்கும் நபர்களில் / நண்பர்களில் இவர் முக்கியமானவர்.

தனியே நடக்க ஆசைப்பட்டு, விழுந்து அழும் குழந்தை தேடும் தாயின் கரம், இவரது நட்பெனக்கு. நான் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர். இவருடனான அரிதான தொலைபேசி உரையாடல்களும் ஏதாவதொரு கோபமின்றி, ஒரு எரிச்சலின்றி முடிந்ததில்லை. ஏனெனில் அவ்வளவு வித்தியாசக் கருத்துடையவர்கள் நாங்கள்.

இவரின் சாதாரண நடையிலான எழுத்து, அவரின் எழுத்துகளுடன் ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்தியது. பலருக்கும் எழுத இவர் கொடுத்த ஊக்கம் கண்டு பொறாமையில்லாத இவர் குணத்தை வியந்திருக்கிறேன். ஒரு ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும் இவர் எழுத்துகளைத் தொடர்ந்ததாலேயே இவருக்கு மெயிலனுப்பவோ, சாட்டிப் பேசவோ ஒரு போதும் தோன்றவில்லை.

முதல் முறை இவரை சந்தித்த போது ரொம்ப இயல்பாகவே பேசினார். “பிரபலம்” என்ற பிம்பத்தை உடைத்தார். தொடர்ந்து என் வேலை, அதிலுள்ள விஷயங்கள் பற்றிப் பேசினார். எளிமையான, இயல்பான பேச்சிற்கு சொந்தக்காரர். இசை ரசிகன். நல்ல கலைஞன். ஆணவம், போலித்தனம், பொறாமை இல்லாதவர்.

முதல் சந்திப்பிற்குப் பின் பேச இருவருக்கும் நேரம் அமையவில்லை. ஒரு முறை ஒரு உதவிக்காகப் பேசினேன். எதிர்பார்த்ததை விட அதிகம் உதவினார், எந்த எதிர்பார்ப்புமின்றி. மகிழ்ச்சியாய் இருந்தது. பல நல்ல புத்தகங்களை வாங்கித் தந்தார். சிந்தை தெளிவுற உதவினார். அதன் பிறகு மறுபடியும் வேலைகள், வீடு... இருவரும் பேச முடியவில்லை.

அவரின் முதல் உதவிக்குப் பின், எப்போது என்னவொரு கஷ்டம் / குழப்பம் வந்தாலும் அழைப்பது அவரைத் தான். தெளிவாக “நீ செய்வது தவறு” என சொல்ல எப்போதும் தயங்காதவர். பெரும்பாலும் பிஸியாக இருந்தாலும் தேவையான நேரங்களில் தோள் கொடுக்கத் தவறியதில்லை. வேண்டும் நேரங்களில் தவறாமல் நட்பு அங்கிருக்கும் என அறிந்தேன் இவர் மூலம்.

கொஞ்சம் முற்போக்கு சிந்தனையாளர். ரொம்பவே கோபப்படுபவர் (நான் தான் கோபப்படுத்துறேனான்னு தெரில). கோபத்தை வார்த்தையிலும் வீசத் தெரிந்தவர். கொஞ்ச நேரத்திலேயே அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்பார். குடும்பத்தை நேசிப்பவர். மனைவியை சுவாசிப்பவர். நாங்களிருவருமே கோபத்தில் குறைந்தவர்களல்லர். பேசாமலே உர்ரென்று இருந்துவிட்டு அதற்கான காரணம் மறந்து மறுபடியும் பேசி சண்டையிட்டுக் கொள்வோம்.

நண்பனெனில் குறைகளும் உண்டு தானே. அனைவருக்கும் நல்லவர். ரொம்ப நல்லவர். எல்லாரையும் நம்புபவர். யாருக்கும் எந்த உதவியும் செய்யக் கூடியவர். “இப்படியெல்லாம் இருந்தா உங்களை ஏமாளின்னு சொல்லுவாங்க. வேண்டாம்ப்பா” என்றால் ஒரு சிரிப்பைப் பதிலாய் உதிர்ப்பவர்.

கொஞ்சம் டென்ஷனைக் குறைச்சுக்கோங்க நண்பா. ஆஃபிஸ் வேலைகள் அதிகம் தான். ஆனா வாழ்க்கையை விட்டுடாதீங்க. கொஞ்சமாவது வாழுங்கள். இயந்திரம் போல் ஓடாதீங்க. இன்னிக்கு ஜாலியா அம்மணியையும், குட்டீஸையும் கூட்டிட்டு ஜமாய்ங்க. பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் என் நண்பனாயிருக்க வேண்டுகோளும்.

(கிருஷ்ண குமார் என்ற பரிசல்காரனுக்கு.)

Wednesday, May 12, 2010

நினைவுகளின் ஈரம்

கிட்டத்தட்ட 8 வருடங்களாகத் தேடிய குரலை, முகத்தைத் திடீரென ஒரு நாள் திருவிழாக் கூட்டத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது எனக்கு நேற்று.

ஜெயா. என் பள்ளித் தோழி. 11,12 ஆம் வகுப்புக் குறும்புகளினூடே எப்போதும் படிப்பை மட்டுமே எங்களுக்கு நினைவூட்டும் எங்கள் நால்வர் கூட்டத்தில் ஒருத்தி. என் அம்மாவின் பெயர் கொண்டவளென்பதால் எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே பிடித்தவள். தினமும் டியூஷன் செல்ல என்னை வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றவள். மிகவும் அமைதியான, கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட அழகுப் பிசாசு.

11 ஆம் வகுப்பில் பாசானால் போதும் எனப் படித்துக் கொண்டிருந்தோம். 12 ஆம் வகுப்பில் அப்படி முடியவில்லை. கெமிஸ்ட்ரி எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்றாலும், எப்போதும் திட்டிக் கொண்டே பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி மேடத்தைப் பிடிக்காததால் டியூஷன் செல்ல வேண்டி வந்தது. ஜெயாவுக்கு கெமிஸ்ட்ரி என்றாலே உதறும் அப்போது. அதனால் இருவரும் ஒன்றாய் போனோம். சயின்ஸ் குரூப் என்றாலே எல்லாப் பாடத்திற்கும் டியூஷன் போகும் வழக்கம் இருந்த நேரமது. காலை 5.30க்கு ஆரம்பிக்கும் டியூஷன்கள் பள்ளி நேரம் வரை தொடரும். பள்ளியின் மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்குப் பின் இரவு 9 மணி வரை ஏதாவது டியூஷனில் இருப்போம்.

தேர்வு நேரங்களில் இனி டியூஷன்ஸ் வேண்டாம் என முடிவு செய்து கடைசி 3 மாதங்கள் நாங்கள் நால்வரும் ஒன்றாய் சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். எங்களில் எப்போதும் டென்ஷனாய் இருப்பாள் விஜி. சரியான படிப்ஸ். படிப்போடு வேறு கதைகளையும் அரைத்துக் கொண்டிருப்போம் கோதையும் நானும். விஜியின் டென்ஷனை சாந்தப்படுத்தி, கோதையையும் என்னையும் கெஞ்சி அழைத்துப் படிக்க வைப்பாள் ஜெயா. ரொம்ப நல்லவள். ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வீட்டில் படிப்போம். அம்மாக்களும் பிள்ளைகள் படிப்பதால் என்னென்னவோ சமைத்து ஸ்பெஷல் கவனிப்பு நடத்துவார்கள்.

ஜெயாவிற்கு அப்போது சைக்கிள் ஓட்டக் கூடப் பயம். நான் தான் சொல்லிக் கொடுத்து பள்ளிக்கு என்னுடனே அழைத்து செல்வேன். எதிரில் பஸ் வந்தால் உடனே சைக்கிளிலிருந்து இறங்கி விடுவாள். நான் அவளைக் கடந்து போய் பின் திரும்பி வந்து அழைத்து செல்வேன். ரோட்டில் பசங்கள் இருந்தால் பார்க்கக் கூடாதென்பாள். யாராவது கேலி செய்தால் “கண்டுக்காதே விக்கி. விட்டுடு” என நடுங்குவாள். அவளின் இப்படிப்பட்ட குணங்களால் என் அம்மாவிடம் “நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு” என சர்டிஃபிகேட் வாங்கினாள். அம்மா எங்களிடம் தோழி போலிருந்ததால் அவளுக்கும் அம்மாவை மிகவும் பிடிக்கும். எனக்கு அம்மாவையும், அவளையும் பார்த்தால் சிரிப்பாய் வரும். அவ்ளோ பாசம் ரெண்டு பேரும்.

ஜெயாவின் அம்மா ரொம்ப நல்லவர். எங்களைக் கவனித்த அம்மாக்களில் முதலிடம் இவருக்குத் தான். பெரும்பாலான வார இறுதி நாட்களில் நாங்கள் படித்தது அவள் வீட்டில் தான். காரணம் அம்மாவின் சமையல். அவரே எனக்கு ஃபோன் செய்து அழைப்பார். “விக்கி இன்னிக்கு இங்கே வந்து படிங்கப்பா. அம்மா உங்களுக்காக சமைச்சு வைக்கிறேன்”. “சரிம்மா”வைத் தவிர வேறு வார்த்தையில்லை.

கெமிஸ்ட்ரி வகுப்பில் மேடம் கேள்வி கேட்டால் ஜெயாவுக்கு நான் சொல்லித் தருவேன். ஃபிசிக்ஸ் புயல் அவள். “ஜெயா பெண்டுலம்ல 10 ரீடிங்ஸ் எடுக்கணுமாம். கொஞ்சம் எடுத்துத் தாயேன்” இப்படிப் பெரும்பாலான ப்ராக்டிகல் வகுப்புகள் அவள் உதவியுடனே கடந்தன.

பள்ளி நாட்களுக்குப் பின் அனைவரும் அறிவியல் பட்டப் படிப்பிற்குச் செல்ல நான் மட்டும் வேறு திசையில் பயணமானேன். எல்லாரும் ஹாஸ்டல் சிறையில் அடைபட்டதால் தொடர்ந்து காண்டாக்டில் இருக்க முடியவில்லை. கல்லூரி இரண்டாம் வருடத்தில் கோதையின் திருமணம் ஏற்பாடானது. அதற்கும் ஜெயாவால் வர முடியவில்லை. ஜெயாவின் அம்மாவை மட்டுமே பார்க்க முடிந்தது. “வீட்டுக்கு வாப்பா” என்றார்கள். “கண்டிப்பாம்மா” என்றேன். ஆனால் அதை முற்றிலும் பொய்யாக்கியது கல்லூரி நாட்கள். சில வருடங்களுக்குப் பின் அவளின் வீட்டு எண்ணிற்கு முயற்சித்தேன். மாற்றியிருந்தார்கள்.

என் திருமணம் நிச்சயமாயிருந்த பொழுது அவளைத் தொடர்பு கொள்ள மிகவும் முயற்சித்தேன். முடியவில்லை. அவள் வீட்டிற்கு செல்லும் வழியையும் மறந்திருந்தேன். மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. பல மாதங்களாய் கோதையிடம் சொல்லி அவள் எண்ணை அறிந்து சொல்லும்படி கேட்டேன். அவளும் பலரைக் கேட்டறிந்து நேற்று கொடுத்தாள். 8 வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறோம். கொஞ்சம் கலாய்க்கலாம் என நினைத்து “ஹலோ ஜெயாங்களா?” என்றேன். “ஹேய், விக்கி......” என்றாள். மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. அவள் குரலைக் கேட்டு 7,8 வருடங்களிருக்கும். என் அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லையெனினும் குரல் கேட்ட அடுத்த நொடியே அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அவளின் நட்பை நினைத்துக் கலங்கிவிட்டேன். வார்த்தைகள் வரவில்லை. அப்புறம் பேச ஆரம்பித்தோம். பேசிக் கொண்டே..... இருந்தோம். நேற்று வெளியில் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் வைக்க மனமின்றி 1 மணி நேரத்திற்குப் பிறகு ரிசீவரை வைத்தேன், இன்று மறுபடியும் அழைப்பதாய் உறுதியளித்து.

புகைப்படங்களை மெயிலில் பரிமாறினோம். ஒவ்வொருவருக்கும் காலம் கொடுத்த மாற்றங்களை எண்ணி வியந்தோம். அவள் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. வகுப்பில் நடுங்கிக் கொண்டிருந்தவள் இன்று மாணவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறாள். தமிழ்ப் பிரியையான நான் பஞ்சாபி மருமகள். கணிதப் புலியான கோதை கரண்டியுடன் கணவரையும், பையனையும் மிரட்டிக் கொண்டுள்ளாள். படிப்ஸ் விஜி வேலை பார்த்துக் கொண்டே இன்னும் ஏதேதோ படித்துக் கொண்டே இருக்கிறாள். அனைவருக்கும் எதிர்பார்க்காத வாழ்க்கை. ஆனால், மகிழ்ச்சியாய்.

அம்மாவுக்கு ஃபோன் செய்து மகிழ்ச்சியைப் பரிமாறினேன். யோகியிடம் அவர் காது வலிக்க எங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து சொன்னார், “அம்மா ஸ்கூல் டைம்ல உன்னைப் படிக்க சொல்லாம நல்லா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஏன் சுத்த விட்டாங்க. இப்போ பாரு அதுனால ஃபோன் பில் கூடுது. என் காதும் வலிக்குது”. இதுக்கு மேலேயும் நான் சமைச்சிருப்பேன்? நேற்றிரவு பீட்ஸா ஹட்டில் ட்ரீட், தோழி திரும்பக் கிடைத்ததற்காக.

Friday, January 29, 2010

தொடரும் அன்பின் நிழல்


கன்றின் பார்வையுடன்
துவங்கியது சகியே
என்னை நானுணரும் தருணத்தில்
அறிந்தேன் இவனை.
இரவின் வானம் போல்
எத்தனைக் கண்!
கொண்டையளவு திரட்டிப்
பொட்டு வைத்தாலும்
கழியாது திருஷ்டி.

ஆலிலைக் கண்ணனிட்ட
அரைசாண் டப்பாவும் முகமப்பி
பட்டுப் பாவாடை சட்டையில்
பச்சை ரிப்பன் முடிச்சிட்ட கூந்தலுடன்
சைக்கிளில் தலைகீழாய்த் தொங்கும்
கோழி முழி திரட்டி
பெண் போல் அவனிருக்கும்
புகைப்படம் பத்திரமாய்.

சிலேட்டுப் பருவத்தில்
அரைஞாண் கயிறு மட்டும் உடுத்தி
அடிபம்புத் தண்ணீரில் ஆடினபோது
அதட்டிக் கேட்க ஆளில்லை.
மரம் ஏறல் கற்றுத் தர அவன் செய்த திருவிளையாடல்
மாவுக்கட்டாய் என் கையில்....
கண்பொத்தி ஆட்டத்தில் தானாய் சிக்குபவன்
எனக்கு மட்டும்!

தூர நகர் கூடங்களில்
பயின்று வர சென்ற போதும்
பத்து வருடங்கள் காற்றாடி நூலாய்
காற்றில் மறைந்த போதும்
கண்ட மாத்திரத்தில் காது வலிக்கக்
கதை பேச மறந்ததில்லை.

தையல் கடை கத்திரியாய்
விரல் கவ்வும் வில்ஸ்
முறைத்துத் திட்டினாலும்
முக்குக் கடை கடன் தீர்த்தேன்.
பின்னிரவு வெறும் வயிற்று பியர்
திருட்டுத் தனமாய் வட்டிலிட்டுத்
தலை குட்டிய நாட்களவை.
எதுவுமே நினைவை விட்டு நீங்காது
தாய்ப்பாலை விடத் தூய நட்பு!

ஏதேதோ சீர் இருக்க
நண்பன் சீர் இல்லா மணவறையா....
மனக்குறை போகக்
கண் பொங்க அணைத்துச் சொன்ன வாழ்த்து
கற்பை விட கர்வமடி.

இன்றும்-
பண்டிகை போல் என்றோ அழைத்தாலும்
அன்றாடிய புளியமர ஊஞ்சல் நினைவாடும்
பின்னிசைத்த பறவைகளின் குரலோடு.

Wednesday, November 18, 2009

மீண்டும் வேண்டும் நாட்கள்

கல்லூரிக்குள் நான் நுழைந்த பொழுது அது. பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தினால் அம்மா வாங்கிக் கொடுத்த எஞ்சினியரிங் சீட்டை ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டில் நேரடியாக வந்தேன். பயங்கர எதிர்பார்ப்புகள். படிப்பதற்காக முதன் முறை மதுரை. பழக்கமான ஊர் தான் என்றாலும் படிப்பதற்கு எதிர் கொள்ளப் போகும் சவால்கள் (!!??!?!?) என்னவாக இருக்கும் என்ற பயத்துடனே வந்தேன்.


முதல் நாள் வகுப்பில் நுழைந்ததுமே எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். அப்படிப் பார்க்குமளவு என்ன பிரச்சனை என எனக்குத் தெரியவில்லை. எங்கள் லெக்சரர் சக்கு மேடம். (அவர்களுக்கு எங்களின் செல்லப் (!!) பெயர்.) அவர் தான் என்னை முதலில் வகுப்பில் வரவேற்றார். மதிப்பெண்களைக் கேட்டு விட்டு, படிக்கும் பிள்ளை என நினைத்தார் போல. வகுப்பில் முதல் நாளே கடைசி பெஞ்சின் கடைசி சீட்டை தேடி அமர்ந்தேன். பின் தான் தோழிகள் ஒரு நட்புப் பார்வை பார்த்தனர். நல விசாரிப்புகள், அறிமுகங்கள் முடிந்தன. நம் பேச்சைக் கேட்ட பின்னர், நம்மைப் பிடிக்காதோர் இருப்பரா... வகுப்பிலிருந்த பத்தொன்பது பேரில் பதினெட்டு பெரும் (என்னை விடுத்து) என் தோழிகள். ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த அன்பு, இப்போது நினைத்தால் இழந்து விட்ட வலியாகத் தெரிகிறது.


சரி, கல்லூரி என்றாலே கலாய்த்தல் வேண்டாமா... மேட்டருக்கு வருவோம். வகுப்பில் ஐந்து பேர் ஹாஸ்டல் வாசிகள். எங்கள் ஐவருக்காக மற்ற தோழிகள் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களின் பேவரிட் மேடம் சக்கு. பேவரிட் என்றால் எங்களால் பாடாய்ப் படுத்தப்பட்டவர். அவர்களின் வகுப்பில் நாங்கள் செய்யாத கூத்துக்களல்ல. ஒவ்வொரு டிபன் பாக்சாய்த் திறப்பது, எல்லோருக்கும் சாக்லேட் பாஸ் செய்து சாப்பிடுவது, open hair வைத்து முடியால் ஹெட் போனை மறைத்து பாடல் கேட்பது, கிளாஸ் டெஸ்ட்களின் போது டேபிள் மேலேயே நோட் புக்கைத் திறந்து வைத்து எழுதியது, மேடம் திரும்பி போர்டில் எழுதும் நேரங்களில் வகுப்பறையிலிருந்து எழுந்து கேன்டீன் போவது என்று ஸ்ட்ரிக்டான காலேஜில் நாங்கள் செய்த சேட்டைகளுக்கு அளவில்லை.


ஒரு நாள் நானும் என் தோழி ரேவதியும் வகுப்பில் காரணமே இல்லாமல் சிரிக்க வெறுப்பாகி விட்டார் மேடம். இருவரையும் எழுப்பி காரணம் கேட்க, காரணமே இல்லை என சொல்லியும் அவரால் அதை ஏற்க முடியவில்லை. நாங்கள் அவரைத் தான் கேலி செய்து சிரிப்பதாக அவர் எண்ணிவிட்டார் போலும். அவர் தொடர்ந்து கோபத்தில் கத்த, விடாமல் நாங்கள் சிரிக்க, வெறுத்துப் போய் வகுப்பிலிருந்து வெளியேறி விட்டார். உண்மையிலேயே அன்று சிரித்ததற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.


இப்படியே எல்லா சேட்டைகளிலும் மைய ஆளாக நானிருக்க, தனியாக focus செய்யப்பட்டேன். வாரத்திற்கொரு முறை டிபார்ட்மென்ட் என்கொயரியில் நின்று, கேள்வி கேட்டவர்களே வெறுத்துப் போய் என்கொயாரி கேன்சல் செய்ததெல்லாம் உண்டு. வகுப்பில் எந்த ஒரு காதல் விவகாரம் கசிந்தாலும் அழைக்கப்படுவது நான் தான். அப்போது எனக்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் தோழிகளின் காதலுக்குத் துணை போயிருப்பேன் என்றொரு நல்ல பெயர். அப்போதும் ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விட்டு வந்து விடுவேன். அதை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு கதை ஓடும். இதனிடையே பிரச்சனை யாருக்கோ அவள் Out of focus ஆகி விடுவாள். நான் மாட்டிக் கொள்வேன்.


அப்படித் தான் ஒரு முறை தோழியின் காதல் கடிதமொன்று மேடம் கையில் கிடைத்து விட்டது. அவளை அழைக்காமல், வழக்கம் போல் என்னை அழைத்தார்கள். ஐந்து வருடமாய்த் தொடர்ந்த தோழியின் காதல் கதை அது. இருவருக்குள்ளும் ஏதோ சிறு சண்டை வர, அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தான். கடிதத்தின் விவரம் எனக்கு சொன்னதும், நான் மேடமிடம் "இது ஒரு தலைக் காதல். அவன் தேவையில்லாது அவள் பின்னால் வருகிறான். ஒவ்வொரு முறையும் இவள் அவனை திட்டுவதும், அதற்குப் பின் அவன் தவறுக்கு வருந்தி இவளிடம் மன்னிப்புக் கேட்பதும் தொடர்கிறது. இதில் அவளின் தவறொன்றுமில்லை. என்ன, கோபத்தில் ஒரு நாள் அவன் இவளைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறான்." என்று சொல்லி விட்டேன்.


இதில் குழப்பம் என்னவென்றால் கடிதம் எழுதப்பட்டது சுபஸ்ரீ என்ற சுபாவிற்கு. நான் கதை சொன்னது சுபாஷினி என்ற சுபாவை வைத்து. இதில் சுபஸ்ரீக்கு எந்தக் குழப்பமுமில்லாமல் காதல் நகர, சுபாஷினி வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவளின் அண்ணன் அவளை தினமும் வந்து கல்லூரிக்கு விட்டு செல்வதும், அழைத்து செல்வதுமாக கூத்து தொடர்ந்தது. சுபாஷினிக்கு விஷயம் தெரியுமென்றாலும் அவளும் இன்னொரு சுபாவைக் காப்பத்துவதற்காக ஒன்றும் சொல்லவில்லை.இப்படி பல கதைகள் பல விதமாக மாற்றப்பட்டு வலம் வந்த நாட்களவை.


மதியம் வகுப்பிலிருக்கும் பத்தொன்பது பேரும் ஒன்றாக ஒரு பெரிய ரவுண்டாக அமர்ந்து அனைத்து வீட்டு உணவையும் ஆளுக்கொரு வாயாக சாப்பிட்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து பொறாமை கொள்ளாத டிபார்ட்மென்ட் இல்லை. ஒவ்வொருவரையும் எவ்வளவு காலை வாரினாலும் கோபம் கொள்ள மாட்டோம். நல்ல நட்பு, அதையும் தாண்டிய புரிதல், விட்டுக் கொடுக்கும் அன்பு, பொறாமையில்லாத போட்டி, உரிமையான செல்லக் கோபம், உடனே ஆகும் சமாதானம், எதிர்பார்ப்பில்லாத உதவி என அன்பு மழையில் நாங்கள் நனைந்த நாட்களவை.


கிளாஸ் முழுவதும் மாஸ் பங்கடித்தது, சினிமா தியேட்டரில் பசங்களை விட அதிக சவுண்டு விட்டு விசிலடித்துக் கத்தியது, ட்ரைனிங் போகும் போது பஸ்ஸில் செய்த சேட்டைகள், பெரியார் பஸ் ஸ்டாண்டில் டாப்படித்த பிளாட்போர்ம்கள், மதுரையில் மிச்சம் வைக்காமல் சுற்றிய ஏரியாக்கள், எக்சாமில் ஒருவருக்கொருவர் பேப்பர் பாஸ் செய்து உதவிய நேரங்கள் என அகலாத நினைவுகள் பல.


இப்போதும் எப்போதாவது தொலை பேச நேர்ந்தாலோ, நேரில் சந்தித்தாலோ அதே அன்பு மாறாமல், எங்கள் கதை பேச நேரங்கள் போதவில்லை. "அவர் வந்திடுவாரு நான் கிளம்பறேன்", "குழந்தை எழுந்திருச்சிருப்பா", "மாமியாரை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்" என்று ஏதோ ஒரு பொறுப்பு நினைவிற்கு வர சொல்லா நட்பின் இதத்தை ஒரு கட்டியணைத்தலில் பரிமாறி விடை பெறுகிறோம்.


ஒரு பக்கத்துக்கு
மூன்றாம் பிறை
மறுபக்கத்துக்கு
துப்பட்டா
சிறகு முளைத்த பருவம் அது

பூப்பதற்கு காரணம் கேட்டால்
விழிக்கும் செடி போல்தான்
பின் வரிசை புன்னகைகள்

மேகத்தை விரித்து வெட்டி
நட்சத்திர பொத்தான் தைக்கும்
கனாப் பருவம்

மாறாத சோலையாய்
பால்யத்தின்
நினைவுத் தடங்கள்.

காலங்கள் கடந்துவிட்டாலும்
நம் நினைவுகளை
கடக்கையில்
எப்போதோ வந்து போன
அம்மைத் தழும்பாய்
ஏதோ ஒரு பிரிவு வலி.

Wednesday, October 21, 2009

தொலைத்த நாட்கள்



பல வருடங்கள் கழித்து என் சிறு வயது புகைப்படங்களை, ஸ்டூல் போட்டு ஏறி எடுத்துப் பார்க்கும் ஆவல் வந்தது. ஒற்றைக் குடுமி போட்டோக்களைப் பார்த்தால் என்ன வரும், அதே..... பிளாஷ்பேக் தான்.

என் முதல் நாள் பள்ளிக்கு எப்படிப் போனேன் என நினைவிலில்லை. ஆனால், LKG, UKG படிக்கும் போது தலை நிறைய எண்ணெய் வைத்து, குட்டி குட்டியாய் நீட்டிக் கொண்டிருக்கும் முடிகளை சேர்த்து ஒற்றைக் குடுமி போட்டு அதில் மல்லிகையும் கனகாம்பரமும் தொங்கும் அளவு சுற்றி, நெத்தியில் கண்மையால் ஒரு பொட்டு (நல்ல வேளையாக கன்னத்திலெல்லாம் மையில்லை), நல்ல டார்க் நிற பிராக் (அப்போவெல்லாம் தினசரி யூனிபார்ம் கிடையாது), முகத்தில் திட்டு திட்டாக பவுடர், ஊரே பயந்து போகுமளவு கண்ணுக்கு கண்மை இப்படியாக ஒரு பூச்சாண்டி போல் பள்ளிக்கு அனுப்புவார்கள். இன்னும் நினைவிருக்கிறது, அவற்றில் சில நாட்கள்.

சுதா என்றொருத்தி என் வகுப்பில் இருந்தாள். அவள் தான் கிளாஸ் லீடர் ( KG படிக்கும் போது லீடெரெல்லாம் எதற்கு வைத்தார்கள் எனத் தெரியவில்லை). நானும் அவளும் டான்ஸ் க்ளாஸ் மேட்ஸ். அதனால் எப்போதும் என் பெயர் பேசுபவர்கள் லிஸ்ட்டில் இல்லாதவாறு அவள் பார்த்துக் கொள்வாள். நானும் அவளுக்கு அடிக்கடி முழு குச்சி கொடுத்து நட்பு பாராட்டி வந்தேன். :)

எனக்கு நினைவு தெரிந்து என் மிக நல்ல நண்பனாக இருந்தது பிரகாஷ். நானும் அவனும் ஒன்றாகத் தான் பள்ளி செல்வோம். என் அப்பாவும் அவன் அப்பாவும் நண்பர்களாதலால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் எங்களிருவரையும் பள்ளியில் சைக்கிளில் விட்டு வருவார்கள். பள்ளி என்பது செல்வராஜ் சார், மேடம் (பெயர் நினைவில்லை), அப்புறம் ஒரு ஆச்சி, முப்பது பிள்ளைகள் அவ்வளவு தான். என்ன படித்தோம் என்றெல்லாம் நினைவில்லை. (வழக்கம் போல் A,B,C,D,.... அ,ஆ,இ,ஈ.... இன்னும் சில ரைம்ஸாகத் தான் இருக்கும். பின்ன என்ன IAS ஆ படிச்ச என நீங்கள் கோபப்பட வேண்டாம் ;) ) மதியம் வரிசையாய் அமர வைத்து சாப்பாடு, பின் அங்கேயே சில மணி நேரத் தூக்கம். சாயங்காலம் மறுபடியும் இருபது நிமிட சைக்கிள் பயணம். கவலையில்லாத நாட்கள் அவை. மீண்டும் பெறத் துடிக்கும் தருணங்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான்கு நண்பர்களுடன் தொடர்பிருந்தது. இப்போது அதுவுமில்லை. ஒரே ஒரு முறை என் முதல் தோழன் பிரகாஷைப் பார்த்தேன். அப்போது அவன் இன்ஜினியரிங் முடித்து வேலைக்கு சேர்ந்திருந்தான்.

ஒருவருக்கொருவர் மாறி மாறி உணவு பகிர்ந்த மதிய வேளைகள், ஒரு முறை நான் கீழே விழுந்ததிற்காக அவன் உதிர்த்த கண்ணீர், அவனுக்கும் சேர்த்து நான் எடுத்து வந்த பல்பம், எனக்காக அவன் வாங்கித் தந்த பென்சில், நாங்கள் கைப்பிடித்து நடந்த நாட்கள், ஒன்றாக எழுதிய 'அ', எச்சிலுடன் பகிர்ந்த லாலிபாப் இவையெல்லாம் நினைவிருக்கிறதா என அவனிடம் கேட்க நினைத்த போது "எப்படி இருக்கீங்க?" என்றான். "நல்லா இருக்கேன்" என்று மட்டும் சொல்லி ஒரு புன்னகையை உதிர்த்து நகர்ந்தோம். என்னைப் போல் அவனும் இவையெல்லாவற்றையும் யோசித்திருப்பானா... அடுத்து அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகக் கேட்பேன். ஏனெனில் முதல் காதலை விட மரியாதையானது, மகிழ்ச்சியானது, பொக்கிஷமானது முதல் நட்பு.

"அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது"

இந்த அறிவுமதியின் வரிகள் எங்கோ இருக்கும் என் முதல் நண்பனுக்காக.