Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Thursday, November 19, 2009

உங்களுக்கு எந்த கார் பிடிக்கும்...


மூத்தப் பதிவர் கேபிளாரின் தகப்பனார் மறைவிற்கு என் அஞ்சலியும், பிரார்த்தனைகளும். அவருக்கு வேண்டிய பொழுதில் கேட்காமலேயே ஓடோடி உதவிய மற்ற பதிவ நண்பர்களை எண்ணி வியக்கிறேன். நானும் பதிவர் ஜாதி என சொல்வதில் மகிழ்ச்சி. கேபிள் சார் நீங்கள் சீக்கிரம் இத்துயரிலிருந்து மீள மனமார பிரார்த்திக்கிறேன்.
சமீபத்தில் சகோதரரை இழந்த அரங்கப் பெருமாள் சார், நீங்களும் அத்துயரிலிருந்து மீள என் பிரார்த்தனைகள்.

****************************************************************************************************

நவம்பர் மாதம். டெல்லியில் குளிர் ஆரம்பமாகி விட்டது. நான்காண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அக்டோபரிலேயே ஸ்வெட்டருடன் நடுங்கிக் கொண்டிருந்தேன். இந்த முறை நவம்பர் பதினைந்துக்கு மேல் தான் ஆரம்பமென்றாலும் குறைவில்லாமல் நடுங்க வைக்கிறது. இன்னர் தெர்மல் வியர், ஜீன்ஸ், திக் டாப்ஸ், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா, காலில் சாக்ஸ், ஷூ, கையில் கிளவுஸ், இது எல்லாவற்றிற்கும் மேல் ஷால் என ஒரு ரேஞ்சாகத் தான் ஆபிஸ் வர வேண்டியுள்ளது. இப்போதே இப்படியென்றால் டிசம்பர், ஜனவரியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் அலுவல் வேலைகளால் இங்கிருந்து தப்பித்து வருகிறேன். இவ்வருடம் எப்படியோ...
இதற்கு நடுவே டெல்லி வந்திருக்கும் கோவைத் தோழியை இரண்டு நாட்கள் முன்னர் அழைத்து "எப்படி டெல்லிக் குளிர்" என்றேன். "கோயம்பத்தூர் மாதிரி தான் இருக்கு. ரொம்ப அதிகமில்லை" என்றார். இன்று கேட்க வேண்டும் "கோவையில் எப்போது இப்படி நடுங்கினீர்கள் என்று. (கோவை சொர்க்கம். அங்கு உடலை வருத்தும் குளிருமில்லை, வாட்டும் வெயிலுமில்லை. இது தலைநகரம் :( )

****************************************************************************************************

டெல்லியின் சாலைகளை நினைத்து மகிழும் அதே நேரத்தில், நொய்டாவின் சாலைகளை நினைத்தால் எரிச்சலே மிஞ்சும். ஆங்காங்கே உடைந்த ரோடுகள், பழுதான டிராபிக் சிக்னல்கள் என தலைவலிகள் அதிகமிங்கு. எனக்குத் தெரிந்து ஒரு டிராபிக் லைட் கடந்த ஐந்து மாதங்களாக ஒரே சிக்னலைக் காட்டிக் கொண்டுள்ளது. இதனால் ஒரு பக்கத்து வாகனங்கள் எப்போதும் இரண்டு நிமிடம் நின்று பின் சிக்னல் பழுதானதை உணர்ந்து செல்கின்றன. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இது சரிபடுத்தப்படவே இல்லை. இது குறித்து யாரிடம் புகார் கொடுக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். இந்த முறை நானே புகாரளிக்கப் போகிறேன்.
சாலைகளில் எனது அடுத்த தலைவலி, ஹார்ன் சத்தம். அடைக்கும் சாலை நெரிசலில் ஆம்புலன்ஸ் சத்தம் போல ஹார்ன் வைப்பவர்கள், அலறும் ஹார்ன் ஒலிப்பவர்கள், பைக்கில் சைலென்செர் இல்லாமல் ஓட்டுபவர்கள் இவர்களையும் ஒலி மாசுபடுத்துபவர்களாக புகாரளிக்க வேண்டும். என்ன நான் சொல்றது... (எங்க ஊருக்கு தான் இப்போ மெட்ரோ வந்துடுச்சே. இனிமே, சாலைப் போக்குவரத்து உபயோகம் குறையும்)

****************************************************************************************************

நம்ம வால் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுப் பழகலாமின்னு, சேட் பண்ண தோழிகிட்ட கேள்வி கேக்க ஆரம்பிச்சேன். அவ வெறுத்துப் போய்ட்டா. அப்படி ஒன்னும் தப்பா நான் கேட்கலையே. நீங்க சொல்லுங்க, நான் எதுவும் தப்பாவா கேட்டேன்...
Hi de, How is ur hubby babe..
Is my hubby a babe for you?
Hey stupid, U r babe. And how is ur hubby?
Haiyaa, I am a little babe??? Thank you Aunty.
Hey, I am unborn de.
So, Am I speaking to a devil?
Hey, I mean to say I am very young.
So, nee Araikuraiyaa?
.................
Ennachu chellam, Mouna virathamaa?
Offline போய் விட்டாள்.(வால், கேள்விகள் கேக்கனும்னு சொன்னீங்க. விளைவுகள் என்னன்னு சொன்னீங்களா...)

****************************************************************************************************

எனக்குக் கார்களின் மீது எப்போதும் அலாதிப் பிரியமுண்டு. பெரும்பாலான கார்ப் பிரியர்களைக் கவர்பவை பெரிய வண்டிகள் தான். எனக்கும் தான். ஆனால் இப்போது இரண்டு சிறிய கார்கள் எப்போதும் என் கண்களை அவற்றின் பக்கம் திரும்ப வைக்கின்றன. கொள்ளை அழகாய் எனக்குத் தெரிகின்றன. Skoda Fabia & Honda Jazz. சிறிய கார்ப் பிரியர்களை மட்டுமலாது பெரிய கார்ப் பிரியர்களையும் ஈர்க்கும் இது போன்ற வடிவமைப்புகள் மனதை கொள்ளை கொள்கின்றன. (இதை என்னவர் கிட்ட சொன்னா மட்டும் காதிலேயே வாங்கிக்க மாட்டேங்குறார். Is it called husband reaction?)

****************************************************************************************************

யோகி டைம்ஸ்

நான் ஏற்கனவே சொன்னது போல என்னவரின் தமிழார்வம் அதிகமாகிக் கொண்டே போகிறது. போனில் அம்மாவின் பயிற்சியும், வீட்டில் என் பயிற்சியும் அவரை (அவரின் தமிழை) ஒரு ஷேப்பாக்கி வைத்திருக்கின்றன. போன வாரம் 'தமிழன்' படம் பார்த்துக் கொண்டிருந்தோம். 'ஹாட் பார்ட்டி' பாடல் வந்ததும் என்னிடம், "பிரியங்கா சோப்ரா நல்லா தானே இருக்கா. அவன் ஏன் 'பாட்டி'ன்னு பாடுறான்" அப்படினார்.'அய்யா, தமிழார்வம் உங்களுக்கு இவ்ளோ அதிகமாகக் கூடாது' என்றவாறே 'அது பாட்டி இல்ல, பார்ட்டி' என்று விளங்க வைத்தேன். இந்தத் தமிழ் பயிற்சி என் தமிழை வளர்க்கப் போகிறதா இல்லை, மறக்கடிக்கச் செய்யப் போகிறதாவெனத் தெரியவில்லை. (இப்போது எழுத்துக்களை எழுதப் பழக ஆரம்பித்துள்ளார். என்னென்ன கமெண்ட்ஸ் வரப் போகுதோ)


Monday, June 15, 2009

மற்றுமோர் பள்ளி, மற்றுமோர் மாணவி, மற்றுமோர் துயரம்


போன வாரம் மும்பை அரசு குழந்தைகள் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கக் கூடாது எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு விஷயம் இது. வீடுகளிலும் தொழில் துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர்களை தடை செய்த அரசு எப்போதும் இந்த தொலைக்காட்சியின் குழந்தை நட்சத்திரங்களைக் கண்டு கொண்டதில்லை. இப்போது அதுவும் கவனத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நடிப்பின் காரணமாக படிப்பை நிறுத்தும் அவலம் அகலும் என எதிர்பார்ப்போம். (உயர் தட்டு மக்களுக்கு ஒரு சட்டம் வசதியில்லாதோருக்கு ஒரு சட்டம் என்னும் நிலை மாறி வருவது மகிழ்ச்சி)
**************************************************

டெல்லியில் வெயில் மண்டையைப் பிளக்கிறது. எப்போதாவது அதைத் தணிக்க லேசான தூறல் இருந்த போதிலும் வெக்கை அதிகம் உள்ளது. போன வருடம் முழுக்க நான் டூரிங்கில் இருந்ததால், டெல்லியின் வெயில் மற்றும் குளிர் காலங்களில் தப்பித்துக் கொண்டேன். இப்போது எனது ப்ரோஜெச்டுகள் முடிந்து விட்ட நிலையில் புது ப்ரொஜெக்டை எதிர்பார்த்துக் காத்துள்ளேன், டெல்லி வெயிலிலிருந்து தப்பிக்க. அடிக்கும் வெயிலைக் குறைக்கும் வகையில் அவர் பெங்களூருக்கு எஸ்கேப். நானும் அடுத்த மாதம் கோவை போகலாமென நினைக்கிறேன். பார்ப்போம் முடிகிறதா என்று. (நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை)

**************************************************

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மிகவும் வேடிக்கையானதாக இருந்தது. மணி சங்கர அய்யரின் ஹாட் மெயில் கணக்கை யாரோ ஒரு விஷம ஆசாமி ஹைஜாக் செய்து அனைவருக்கும் ஒரு மெயில் அனுப்பியிள்ளார். அந்த மெயிலில் உள்ள செய்தி "நான் ஒரு கருத்தரங்கிற்காக இங்கிலாந்து சென்றதை உங்களிடம் தெரிவிக்க மறந்து விட்டதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் எனது கைப்பையைத் தொலைத்து விட்டேன். கையில் பணம் இல்லாத நிலையில் என்னால் நாடு திரும்ப இயலவில்லை. இந்த மெயிலைப் பார்த்தவுடனேயே எனக்கு பண உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு அவசர பண உதவியாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள்" இது குறித்து மணி சங்கர அய்யரிடம் கேட்ட போது யாரோ அவரது மெயில் ஐடியின் பாஸ்வோர்டை மாற்றி விட்டதாகவும், அதன் காரணமாக இப்பிரச்சனை குறித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தான் இப்போது அமேரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். (என்னவோல்லாம் காமெடி நடக்குது உலகத்துல.)

**************************************************

அபியும் நானும் படம் வெளிவந்து பல மாதங்கள் கழித்து போன வாரம் தான் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைவாகத் தான் படத்தை தந்திருக்கின்றனர் ராதா மோகனும், பிரகாஷ் ராஜும். எல்லா கேரக்டர்களும் ஓகே. த்ரிஷா கேரக்டரை இன்னும் அழகுற செதுக்கியிருக்கலாம். படத்தில் பிரகாஷ் ராஜின் அன்பு காட்டப்பட்ட விதத்தை ஒப்பிடும் போது த்ரிஷாவின் அன்பு காட்டிய விதம் கொஞ்சம் நெருடல். இன்னும் கொஞ்சம் அட்டாச் ஆன பெண்ணாக த்ரிஷாவைக் கொடுத்திருக்கலாம். ஏனெனில் பெண்கள் எப்போதும் அப்பாவின் மீது அன்பு மிகுந்தவர்கள். பஞ்சாபிக் கணவன் வந்த போதிலும் வேட்டி கட்டும் அப்பாவே ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் ஹீரோ என்பதை அழுத்தி சொல்லியிருக்கலாம். (அனுபவம் பேசுகிறது)

**************************************************

ஒன்றரை மாதத்திற்கு முந்திய செய்தி. இப்போது தான் தெரிந்தது. மூச்சுத் திணறி இறந்த ஆகிரிதி மற்றும் ஏழு செங்கற்களை முதுகில் தாங்கி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த ஷன்னோவை அடுத்து தலைநகரின் அடுத்த கொடுமை பதினைந்து வயது சிறுமி ஜீனத் பர்வீனின் தற்கொலை.
டெல்லியில் உள்ள பச்சான் பிரசாத் சர்வோதய கன்ய வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜீனத். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வகுப்பாசிரியரால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அடித்து வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாள். அவள் திருடியது உறுதிப்படுத்தப்படாத செய்தி. வெறும் சந்தேகம் காரணமாகவே நடந்த கொடுமை இது. அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசிரியர் வெளியேற்றி பெற்றோரை அழைத்து வருமாறு சொல்லவே, பெற்றோர் வந்திருக்கின்றனர். அவர்களிடம் ஆசிரியர் ஜீனத் செய்த தவறின் காரணமாக அவளை பள்ளியிலிருந்தே நீக்கப் போவதாகக் கூறி கடும் வார்த்தைகளால் சாடி "இவள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உட்காரவைத்து வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்" என சொல்லியிருக்கிறார். பள்ளியிலிருந்து திரும்பி வரும் வழியில் சில சாமான்கள் வாங்குவதற்காக ஜீனத்தின் அம்மா செல்லவேண்டியிருந்ததால், ஜீனத்தை வீட்டிற்குப் போக சொல்லியிருக்கிறார். வீட்டிற்கு வந்த அம்மா ஜீனத் தனது துப்பட்டாவை ஃ பேனில் மாட்டி தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். இது தொடர்பாக பள்ளி ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்து போன ஜீனத்தின் கண்களை அவர் பெற்றோர் தானம் செய்து மற்றொருவரின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளனர். (வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி உயிர் வாங்கிகளாக இருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.)

Friday, April 24, 2009

ஆகிரிதியின் மறைவு கவனக் குறைவா?


ஆகிரிதி. வசந்த் குஞ் இல் இருக்கும் மாடர்ன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி, போன செவ்வாய் காலை வரை. செவ்வாய் (21/04/09) காலை பள்ளிக்கு சென்ற பெண்ணிற்கு ஆஸ்த்மா வரவே அவளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம். பெற்றோர் வந்து பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த பொழுது, பாவம் அவள் உயிருடன் இல்லை.


இந்த சம்பவம் அவள் குடும்பத்தாருக்கு மிகுந்த துக்கத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியிருந்தாலும் டெல்லிப் பள்ளிக் குழந்தைக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கண்டிப்பாக பீதியை ஏற்படுத்தி உள்ளது. மாடர்ன் பள்ளி டெல்லியின் சிறந்த பள்ளிகளில் ஒன்று. ஆனால் அங்கிருந்த மாணவிக்கு உடல் நிலை சரியில்லாத போது முதலுதவி கொடுக்கவோ, உடனே ஆம்புலன்சை அழைக்கவோ தவறிவிட்டது பள்ளி. இது குறித்து அப்பெண்ணின் மாமா பள்ளி நிர்வாகத்தைப் பற்றி புகார் கொடுத்துள்ளார்.


"அவள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவே காரணம். ஆகிரிதி மூச்சு விட முடியாமல் தவித்த போது, பள்ளியினர் ஆம்புலன்சை அழைக்காமல் எங்கள் வீட்டு வாகனம் வரும் வரை ஏன் காத்திருந்தனர். நாங்கள் வந்து அவளை மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவள் இறந்து விட்டிருந்தாள். இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ஆகிரிதியின் மாமா திரு.வெர்மா புகாரளித்துள்ளார்.


இது குறித்து Delhi Commission for Protection of Child Rights அமைப்பும் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "பள்ளியில் அடிப்படை முதலுதவி வசதிகள் இல்லாததாலும், ஆகிரிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது அதை சரியாக கையாளத் தெரியாததாலும் தான் அவள் இறந்தாள். இதற்கு தக்க விளக்கத்தை பள்ளி முதல்வர் ஏழு நாட்களுக்குள் தர வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இது போன்ற பள்ளியின் கவனக் குறைவுகளால் நாம் இன்னும் பல ஆகிரிதிகளை இழக்கும் முன்னர் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. போன பின் புலம்புவது வேலைக்காகாது. வரும் முன் காப்போம்.


ஆகிரிதிக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.