திருமணம் முடிந்ததும் திருமணத்திற்கு வர முடியாத நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி, திருமண நிகழ்வை விசாரித்தனர். அவர்களுக்கு என் திருமண நிகழ்வைக் கூறி கூடிய செல்பேசி கட்டணத்தால், எல்லோரையும் என் ப்ளாக் இல் படிக்க சொல்லி குருஞ்சேதி அனுப்பி விட்டு, இங்கே எழுதுகிறேன்.
திருமணத்திற்கு முன்பு முக்கியமான விஷயம் என் முதல் நெடுந்தூர ரயில் பயணம். அதை பற்றி அடுத்த கட்டுரையில் விவரிக்கிறேன்.
மூன்று நாட்கள் திருமணம் மிக விமரிசையாக சுற்றம் சூழ, சொந்தங்கள் வாழ்த்த இனிதாய் நடந்தது.
முதல் நாள் - மெஹந்தி செரிமனி
முதல் நாள் ஜலந்தர் (அது தான் என் மாமியார் ஊர்) போய் சேர்ந்ததும், என்னவரின் அக்கா வந்து, என்னை ப்யூட்டி பார்லருக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். அங்கு அவர்கள் வைத்திருந்த அனைத்து கிரீம்களையும் ஒன்றன் பின் ஒன்றாக, என் முகத்தில் பூசி, பூதம் போல் உட்கார வைத்தனர். எப்போதும் இது போன்ற நேரங்களில் அங்கு இருக்கும் புத்தகங்களில் மூழ்கிப் போகும் என் தங்கை, அங்கிருந்த ஹிந்தி புத்தகங்களை வெறித்து விட்டு, என்னையும் முறைத்தாள். அவளை தவிர துணைக்கு வேறு யாரும் துணைக்கு இல்லாத காரணத்தால், அவளிடம் அசடாக சிரித்து சமாளித்து உட்கார வைத்தேன். அவளுக்கும் சில பூச்சுகள் நடந்ததால், அன்று அவளிடம் அவ்வளவாக திட்டு வாங்காமல் தப்பினேன்.
பார்லர் முடிந்து, நான்கு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்த களைப்பில் சிறிது நேரம் கண்ணயரலாம் என எண்ணி, எனது அறைக்கு வந்தேன். மூன்று மெஹந்தி வாலாக்கள் ஒரு மணி நேரமாய் என் வருகைக்காக காத்திருந்தனர். வந்ததும், காத்திருந்த கடுப்பில் ஆளுக்கு ஒரு கையை பிடித்து வரைய ஆரம்பித்தனர். மிக சிரமப்பட்டு அவர்களிடம் வெகு நேரமாய் கை நீட்டியதன் விளைவாய் கை வலி வந்தது. வரைய ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் கழித்து, முழு கையையும் வரைந்து முடித்தவர்கள், காலில் இட ஆரம்பித்தனர். எனக்கு தான் மிகுந்த சிரமமாய் இருந்ததே தவிர அவர்களுக்கு இல்லை. முழங்கால் வரை அழகாய் வரைந்து முடித்தனர். இந்த நேரத்தில், மற்றொரு பக்கம், என் அம்மா, தங்கை மற்றும் அனைத்து உறவினர் பெண்களும் அவர்களுக்கு மெஹந்தி இட்டுக் கொண்டிருந்தனர். நான்கு மணி நேரம் தொடர்ந்த மெஹந்தி செரிமனி மாலை எட்டரை மணிக்கு முடிந்தது.
பின் அப்படியே சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பத்தரை மணிக்கு கை கழுவிய போது, நான்கு மணி நேரமாய் அமர்ந்திருந்த களைப்பு முழுவதுமாய் போனது. அவ்வளவு அழகாக இருந்தது கை. பெண்களுக்கு மெஹந்தி இவ்வளவு அழகைக் கூட்டுமா என எனக்கு நானே சிந்தித்து கொண்டு, இரவு உணவையும், கல்யாண அரட்டைகளையும் முடித்து, இரவு பணிரண்டரைக்கு மெஹந்தி வாசனையுடன் உறங்க சென்றேன்.
இரண்டாம் நாள் - நிச்சயதார்த்தம்
காலை ஒன்பது மணிக்கே என்னைக் கொண்டு போய் ப்யூட்டி பார்லரில் விட்டனர். அங்கிருந்த பெண்மணி மறுபடியும் என்னவெல்லாம் அவரிடம் உள்ளதோ, அத்தனையும் என் முகத்தில் அளவாய் அப்பினார். எல்லா மேக் அப்பையும் வெற்றிகரமாய் ஒரே மணி நேரத்தில் முடித்து விட்ட சந்தோஷத்தில், நான் கிளம்பி நிச்சயதார்த்த ஹோட்டலுக்கு சென்றேன். இன்று நிறைய நேரம் முதுகு வலிக்க உட்காரவில்லை என்ற குஷி.
ஆனால், என்னை நன்றாகக் காக்க வைத்தார் என்னவர். காலை பத்தரை மணியிலிருந்து என்னை ஒரு அறையில் உட்கார வைத்து விட்டு, "அவர் வந்ததும் ஒரு மணி நேரத்தில் உன்னை அழைக்கிறோம்" என்று சொல்லி விட்டுப் போனவர்கள், வரவே இல்லை. இரண்டு மணி நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல், யாராவது வர மாட்டார்களா என அந்த அறையிலேயே காத்திருந்தேன்.
ஒரு மணிக்கு ஒருவர் வந்து ஜல்ஜீரா கொடுத்து சென்றார். இருந்த தாகத்தில் அதைக் குடித்து விட்டேன். பின் நன்றாக பசிக்க ஆரம்பித்து விட்டது. பிறகு, தங்கைகள் இருவரும் வந்து பனீர் கட்லட்டையும், கோப்தாவையும் கொடுத்தனர். எங்கிருந்தோ உயிர் வந்தது.
இறுதியாக மதியம் மூன்று மணிக்கு அழைத்தனர். ஹாலில் இருந்த அனைவரும் பெண் (என்) வருகைக்காக காத்திருந்தனர். நான் நுழைந்ததும் பயங்கர கூச்சல். மேடை வரை பெண்கள் சூழ்ந்து வர, மேடையில் என்னவர் கை கொடுத்து ஏற்றி விட்டார். ஏதோ ஒரு பதற்றம் தொற்ற, கொஞ்சமும் முகத்தில் சிரிப்பில்லாமல் மிரண்டு போய் அமர்ந்திருந்தேன். பின், மோதிரங்கள் தரப்பட்டு, மாற்றப்பட்டன. ஏராளமான நகைகளும், பணமும் அன்பளிப்பாய் வந்தன. ஒரு மாத காலம் சம்பளம் இல்லாமல் வேலைக்கு மட்டம் போட்டுவிட்ட கவலை, கொஞ்சம் தீர்ந்தது.
குடும்ப சகிதம் அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்தவுடன், சாப்பிட அழைக்கப்பட்டோம். மிகப் பெரிய மேஜையில் இரு வீட்டாருடனும், நன்றாக உண்டு களித்தோம். பின், என்னவருக்கு பிரியா விடை கொடுத்து, என் வாகனத்தை நோக்கி நான் சென்றேன். இரவு பெண்கள் சங்கீத நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை பார்த்து வேகமாய் தலையாட்டினேன், அவர்கள் மிக நாகரீகமாய் பொண்ணை தவிர எல்லாரும் வாங்க என சொல்லி சென்றனர். அது தான் வழக்கமாம்.
இரண்டாம் நாள் மாலை - பெண்கள் சங்கீத நிகழ்ச்சி
இரவு எட்டு மணிக்கு, மாப்பிள்ளை வீட்டார் அழைத்தது போலவே அனைவரும் என்னை தனியாய் விட்டு விட்டு, சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றனர். நான் என்ன செய்ய என தெரியாமல், தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி அலுத்து, உறங்கி விட்டேன்.
இரவு பதினொன்றரை மணிக்கு திரும்பியவர்கள், பெண் தூங்குவதைக் கூட பொருட்படுத்தாமல், மாப்பிள்ளையின் பெருமைகளை பேசிக் (கத்திக்) கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு எழுந்த போது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல, "நீ தான் வரல. நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணோம் தெரியுமா... மாப்பிள்ளை என்னமா ஆடினார். எப்படியும் ரெண்டு கிலோ குறைஞ்சிருப்பார். சாப்பாடு பிரமாதம், அதிலேயும் ஐஸ் கிரீம் அடடா..... உனக்கும் எடுத்திட்டு வரலாம்னு நினைச்சோம்; ஆனா, நீ சாப்பிடுவியோ, இல்லையோனு தான் எடுத்திட்டு வரல" என்றார் சித்தி. சித்தி................. என்று ஒரு கத்தலோடு முறைக்க, "இந்தா மாப்பிள்ளை உனக்கு சாப்பாடு கொடுத்து விட்டார்" என்று அம்மா எடுத்து ஊட்ட, அவரின் காதலையும், அம்மாவின் பாசத்தையும் சேர்த்து சுவைத்தேன்.அதன் பிறகு, அந்த இரவு முழுக்க அனைவரும் மாப்பிளையின் புராணம் பாட, அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.
மூன்றாம் நாள் - திருமணம்
காலை எழும் போதே ஒரு வித அயர்வு. இரண்டு நாட்களும் மெஹந்தி வாலாவுக்கு கை காட்டி உட்கார்ந்தது, ப்யூட்டி பார்லரில் முகம் காட்டி அலுத்தது, எல்லாவற்றையும் விட முந்திய நாள் அவருக்காக மூன்று மணி நேரம் முதுகு வலிக்க காத்திருந்தது எல்லாம் சேர்ந்து காய்ச்சலாய் ஆகி இருந்தது. சாயங்காலம் திருமணம், காலையில் எழ முடியாமல் காய்ச்சல், அனைவரும் பயந்து போய் (நானும் தான்!) டாக்டரிடம் போனோம். அவர் நூற்றி மூன்று டிகிரி என்று சொன்னதும், எனக்கு அழுகையே வந்தது. ஆனால், என்ன ஆச்சரியம்! ஒரு ஊசி கூட போடாமல் மூன்றே மூன்று மாத்திரைகளில் காய்ச்சலை விரட்டி விட்டார் மருத்துவர்.
திடீரென வந்த காய்ச்சலால் மதியம் ஒரு மணிக்கு நடைபெற இருந்த சூடா செரிமனி (வளையல் சூடும் நிகழ்ச்சி), மாலை நான்கு மணிக்கு தள்ளிப் போனது. மருத்துவரிடம் போய் வந்த தெம்பில், அப்பாவையும், மாமாவையும் எனக்கு காவல் வைத்துவிட்டு ஷாப்பிங் போய் விட்டனர் அனைவரும். மதிய ஓய்வுக்கு பின், மாலை நான்கு மணிக்கு சூடா செரிமனிக்கு அவசரமாய் தயாராகி ஓடினேன்.என்னை கண் மூடி உட்கார சொல்லி, என் கையில் வளையல்களை அடுக்கினார் மாமா. கண் திறந்து பார்த்தபோது, கைக்கு நாற்பத்தி நான்கு வளையல்கள் அடுக்கப்பட்டிருந்தன.
மறுபடியும் அவசரமாய் கிளம்பி, திருமண அலங்காரத்திற்காக பார்லர் விரைந்தேன், தோழி மோனிகாவுடன். அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பல பெண்களும் புடவை கட்ட தெரியாமல், பார்லரில் வந்து பணம் கொடுத்து கட்டி சென்றனர். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது அலங்காரத்திற்கான அழைப்பு வந்தது. ஒரு மணி நேரத்தில் என் தோற்றம் முழுவதுமாய் மாற்றப்பட்டிருந்தது. என்னை பார்த்தால், நமது ஊர் ஊசி, பாசி விற்பவர்கள் போல் (அது தான் அங்கு திருமண அலங்காரமாம்) இருந்தது. என்னை நானே ஒரு பரிதாபப் பார்வையோடு பார்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பினேன்.
ஹோட்டேலில் ஒரு அறையில் முந்தைய தினத்தைப் போலவே காக்க வைக்கப்பட்டேன். அதிசயமாய் அரை மணி நேரத்திலேயே அழைத்தார்கள். போனதும், என்னவரும் பயமுறுத்தும் கோலத்தில் காட்சியளித்தார். வந்த பயத்தையும், சிரிப்பையும் ஒரு வழியாய் அடக்கிக் கொண்டு, அவரருகில் போய் நின்றேன். மறுபடியும் பரிசுகள், அன்பளிப்புகள், உறவினர்களுடன் புகைப்படங்கள். நடுவில் அனைவரும் சேர்ந்து (எங்களிருவரையும் சேர்த்து தான்) ஒரு ஆட்டம் வேறு.
பசித்த வேளையில் சாப்பிட போகலாம் என்று அவர் சொன்னதும், வேகமாய் சிரித்து தலையாட்டினேன். நடுவில் புகைப்படக்காரர் நுழைந்து தனிப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றதும் வேண்டா வெறுப்பாக, சிரித்து புகைப்படங்கள் எடுத்து முடித்தோம். ஒரு வழியாய் தட்டிற்கு முன் அமர்ந்து ஸ்பூனை கையில் எடுத்த போது தான் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது. சாப்பிட்டு முடித்தும், மொட்டை மாடியில் ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஒலிக்க, மங்கள் சூத்ரா (தாலி) அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்டி அணிவிப்பும், குங்குமம் இடுதலும் நடந்தன.
அனைத்து சடங்குகளையும் முடித்து விட்டு, மனையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், என் இரு குறும்பு தங்கைகளும் அவரின் ஷுவை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு, அதைத் திருப்பித் தர பேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஷுவை திருப்பிக் கொடுக்க என் தங்கைகள் கேட்ட தொகை ஐம்பதாயிரம். ஒரு வழியாக பேரம் ஐயாயிரத்து நூறில் முடிந்து, அவர் ஷூ திரும்பி வாங்கப்பட்டது. தங்கைகளும் சமர்த்தாய் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு, மீதியை ரிசெப்ஷனில் வாங்கிக் கொள்கிறோம் என்று விட்டனர்.
எல்லாம் முடிந்து கிளம்பும் நேரம். அழ வேண்டும் என கூட்டத்தில் யாரோ சொன்னதும், முதலில் சித்தப்பாவின் தோளிலும், பின் அம்மாவின் தோளிலும் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழ தொடங்கி விட்டேன். ஒரு வழியாய் எல்லோரும் சமாதானப் படுத்த, அங்கிருந்து கிளம்பி அவரது வீட்டிற்கு சென்றேன். அதிகாலை ஐந்து மணிக்கு எங்களை ஆரத்தி எடுத்து, அவரது அம்மா வரவேற்க, வீட்டிற்குள் நுழைந்து புது வாழ்க்கையை இனிதாய் தொடங்கினோம்.
Showing posts with label கல்யாண வைபோகம். Show all posts
Showing posts with label கல்யாண வைபோகம். Show all posts