Tuesday, April 28, 2009

கலைஞரின் நடிப்புத் திறமை

இன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தி. கலைஞர் உண்ணாவிரதம், இலங்கைப் போர் தற்காலிக நிறுத்தம்.
இன்றைய தினமலரில் முதல் பக்கம் ஓய்ந்தது குண்டு சத்தம் என கொட்டை எழுத்துகளில் வந்துள்ளது. எங்கே ஓய்ந்தது.... அதே தினமலரில், அதே முதல் பக்கத்தில் கீழே மற்றுமொரு செய்தி. போர் நிறுத்த அறிவிக்குப் பின்னும் தாக்குதல்.நல்லா நம்மள கேனையன் ஆக்குறாருயா. இத்தனை நாள் இதை செய்யத் தெரியாமல் நேற்று தான் கலைஞருக்கு ஞானம் பிறந்ததா? இல்லை நேற்று தான் இலங்கையில் பல உயிர்கள் சாகின்றன என்பது கலைஞர் புத்திக்கு தெரிந்ததா? அல்லது பதவி பயம் வந்ததால் செய்யும் பாசாங்கா? மாறாக, கூட்டுக் கட்சியிலிருந்து சிங், தேர்தலுக்கு பதினைந்து நாள் முன்னாள் இப்படி செய்தால் நல்லது என ட்ரைனிங் கொடுத்தாரா....

எத்தனை கேள்விகள் அனைவர் மனதிலும். இத்தனை கேள்விகள் எல்லோர் மனதில் இருந்தும், அவரின் அடிவருடிகளைத் தவிர யாரும் கலைஞரின் நாடகத்தை ஏற்பதாக இல்லை. இன்னொரு விசேஷம் என்னவென்றால் அவரால் நான்கு மணி நேரத்திற்கு மேல் உட்கார முடியவில்லை எனவும், அதற்குப் பிறகு மருத்துவர்களின் அறிவுரையால் அவர் படுத்துக் கொண்டே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் எனவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அப்படி படுக்க வேண்டுமானால், தரையில் ஒரு பாயை விரித்தோ அல்லது கயிற்றுக் கட்டிலிலோ கடல் காற்று வாங்க வேண்டியது தானே. அதை விட்டு சாவகாசமான மரக்கட்டிலில் மெத்தை, தலையணையுடன், இரண்டு மின் விசிறிகள் மற்றும் இரண்டு ஏர் கூலர்கள், கூட பத்து பேர் காவலுக்கு. என்ன சொல்லி திட்டினா, இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும் எனத் தெரியவில்லை. கோபம் கோபமா வருது. முடியல.

சரத்பாபு.... நீங்க ஜெயிக்கணும். அப்போ தான் கலைஞரையும், அம்மாவையும் ஒண்ணா உக்கார வச்சிட்டு, அவங்க இவ்வளவு நாள் என்னத்த கிழிச்சாங்கனு நாம கிழிச்சுக் காட்ட முடியும். உங்களை ஜெயிக்க வைப்போம்.
தென் சென்னை மக்களே, மனசு வைங்க. நல்லது உங்க தொகுதில இருந்து ஆரம்பிக்க வழி செய்யுங்க.


நன்றி : தினமலர்.

Friday, April 24, 2009

ஆகிரிதியின் மறைவு கவனக் குறைவா?


ஆகிரிதி. வசந்த் குஞ் இல் இருக்கும் மாடர்ன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி, போன செவ்வாய் காலை வரை. செவ்வாய் (21/04/09) காலை பள்ளிக்கு சென்ற பெண்ணிற்கு ஆஸ்த்மா வரவே அவளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம். பெற்றோர் வந்து பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த பொழுது, பாவம் அவள் உயிருடன் இல்லை.


இந்த சம்பவம் அவள் குடும்பத்தாருக்கு மிகுந்த துக்கத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியிருந்தாலும் டெல்லிப் பள்ளிக் குழந்தைக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கண்டிப்பாக பீதியை ஏற்படுத்தி உள்ளது. மாடர்ன் பள்ளி டெல்லியின் சிறந்த பள்ளிகளில் ஒன்று. ஆனால் அங்கிருந்த மாணவிக்கு உடல் நிலை சரியில்லாத போது முதலுதவி கொடுக்கவோ, உடனே ஆம்புலன்சை அழைக்கவோ தவறிவிட்டது பள்ளி. இது குறித்து அப்பெண்ணின் மாமா பள்ளி நிர்வாகத்தைப் பற்றி புகார் கொடுத்துள்ளார்.


"அவள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவே காரணம். ஆகிரிதி மூச்சு விட முடியாமல் தவித்த போது, பள்ளியினர் ஆம்புலன்சை அழைக்காமல் எங்கள் வீட்டு வாகனம் வரும் வரை ஏன் காத்திருந்தனர். நாங்கள் வந்து அவளை மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவள் இறந்து விட்டிருந்தாள். இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ஆகிரிதியின் மாமா திரு.வெர்மா புகாரளித்துள்ளார்.


இது குறித்து Delhi Commission for Protection of Child Rights அமைப்பும் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "பள்ளியில் அடிப்படை முதலுதவி வசதிகள் இல்லாததாலும், ஆகிரிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது அதை சரியாக கையாளத் தெரியாததாலும் தான் அவள் இறந்தாள். இதற்கு தக்க விளக்கத்தை பள்ளி முதல்வர் ஏழு நாட்களுக்குள் தர வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இது போன்ற பள்ளியின் கவனக் குறைவுகளால் நாம் இன்னும் பல ஆகிரிதிகளை இழக்கும் முன்னர் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. போன பின் புலம்புவது வேலைக்காகாது. வரும் முன் காப்போம்.


ஆகிரிதிக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.

Tuesday, April 21, 2009

Haldirams

நம்ம வித்யா ஸ்டைல்ல நானும் ரெஸ்டாரன்ட்ஸ் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். வகை, வகையா சாப்பிடுறோம். ஆனா, அதை எழுதனும்னு தோணலையே. அப்புறம் நாம Foodie யா இருந்து என்ன பிரயோஜனம். :) தேங்க்ஸ் பார் த ஐடியா வித்யா.

இந்த பதிவை எழுதனும்னு போன மாசத்துல இருந்து நினைச்சிட்டு இருக்கேன். ஆனா, நேரம் கிடைக்கல. ஒரு வழியா, இப்போ நேரம் கிடைச்சுடுச்சு. போன மாத விரத தின ரெஸ்டாரண்ட் Haldirams.


விரத மெனு போர்டை வாசலிலேயே வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் போது, நல்லா இருக்கும் என்ற எண்ணம் வரவேயில்லை. நான் இங்கு சொன்ன மாதிரி, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாமல் எப்படி ருசியாய் சமைப்பது என்ற கேள்விகளுடன், அவரின் வற்புறுத்தலுக்காக போனேன். என்ன சாப்பிட என பத்து நிமிடம் சிந்தித்து விட்டு கடைசியாய், வ்ரத் தாலி (விரத சாப்பாடு) என முடிவு செய்தோம். நவராத்திரி வ்ரத் தாலிக்கு பெயர் போனது Haldirams என எனக்கு அப்போது தெரியாது. அடடே, என்ன ருசி. வாயில் வைத்ததுமே "WOW" என வந்தது. என்னவரிடம், தினமும் சமைத்து விட்டு, எப்படி இருக்குன்னு கேட்டாக்கூட ஒன்னும் சொல்ல மாட்டார். சில நேரங்களில் ஒன்னும் கேட்காமலே 'வாவ்' என்பார். அதன் அர்த்தம் அப்போது தான் எனக்குப் புரிந்தது.


சமக் ரைஸ் கிச்சடி - குருணை போன்ற ஒரு அரிசியில் கிச்சடி செய்திருந்தார்கள். அடடா என்ன ருசி.


குட்டு (கேப்பை) பராட்டா - கேப்பை மாவுல என்னால ரொட்டியே பண்ண முடியல. ஆனா இங்க அழகா டேஸ்ட்டா பராட்டா.


அரபி கி (சேப்பங்கிழங்கு) சப்ஜி - அது சேப்பங்கிழங்குனு மெனு கார்டு பார்த்து தான் தெரிஞ்சது. சேப்பங்கிழங்குல இவ்வளவு யம்மியா ஒரு டிஷ்ஷா....


பனீர் மக்னி - Haldirams பனீர் மக்னி பத்தி சொல்லவே வேணாம். அங்க பனீர் மக்னி சாப்பிட்டவங்க அதை எப்போ நினைச்சாலும் ருசிக்கும்.


கேசர் மலாய் கோஃப்தா - இதுவும் ரொம்ப நல்லா இருந்தது. ஆனா, ஹெவி.


ஸ்வீட் ஃப்ருட் ரைதா - இதுக்காகவே இந்த தாலி செலக்ட் பண்ண அவருக்கு தேங்க்ஸ். ரொம்ப ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டேன்.


பேருக்கு குகும்பெர் சாலட் - அதான் சொல்லியாச்சே. பேருக்கு ஒரு சாலட்.


சாபுதானா (ஜவ்வரிசி) பாப்பட் - நம்ம ஊரு வடகத்த கம்பேர் பண்ணும் போது இது கொஞ்சம் கம்மி தான்.


ரசகுல்லா - Haldirams ரசகுல்லா எப்போவுமே நல்லா இருக்கும். Yummy.

நாங்க சாப்பிட்டது ஸ்பைஸ் மாலில் இருக்கும் Haldirams இல். இரண்டு பேருக்கு டாக்ஸ் சேர்த்து 310 ரூபாய் ஆனது. வெங்காயம் வெள்ளைப்பூண்டு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் இவ்வளவு நல்ல சாப்பாடு சாப்பிட தாராளமாக செலவு செய்யலாம். ஆனா சாப்பாடு அளவு ரொம்ப அதிகம். பாதிக்கு மேல வேஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு.

Friday, April 17, 2009

Chandni Chowk


என்னவரும் நானும் ஒரே ஆபிசில் வேலை செய்கிறோம். காலையும், மாலையும் சேர்ந்து வருவது வழக்கம். போன வாரம் அவர் ஆபிசில் மீட்டிங் முடிந்து ஒன்பது மணிக்கு தான் கிளம்பினார். ஏழு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது. கிளம்பி போகலாம் என்றால், இங்கு ஆட்டோகாரன் போகும் விதத்தை நினைத்தாலே, போக பிடிக்காது. ஆட்டோ, மேலும் கீழும் குலுங்கிச் செல்லும். நொய்டா ரோடு அப்படி. வேறு வழியின்றி, எட்டு மணி வரை கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு, காத்திருந்தேன். பசி காதை அடைக்க, கோபம் வந்து விட்டது. பேசாமல் கண்களை மூடி உட்கார்ந்து விட்டேன். அவர் வந்து "Sorry dear, ரொம்ப லேட் ஆகிடுச்சா" ன்னார். வந்த கோபத்தை அப்படியே சிரித்து சமாளித்து, "No Problem, இன்னிக்கு டின்னர் வெளில" என்றேன்.

டெல்லியில் குறைந்தது டின்னருக்கு 500 ரூபாய் செலவாகும். சரி எனக் கிளம்பி, Pizza Hut போகலாம் என்றவரை, Domino's போகலாம் என நான் சொல்ல, Shopprix Mall இல் உள்ள Domino's போனோம். இது வரை அவ்வளவு மோசமான பிட்சாவை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. ஓரங்கள் உலர்ந்து, பார்க்க ஒரு அப்பீலே இல்லாமல் இருந்தது. இருந்த பசியில் ஒன்றும் சொல்லாமல், சாப்பிட்டாச்சு. அறுநூறு ரூபாய் பில் வேறு. வெளியே வந்தவர் என்னைப் பார்த்து, "தன்வி, நல்ல பிட்சா சாப்பிடனும். சீக்கிரமே பிட்சா ஹட் போகலாம்" என்றார். என்ன சொல்ல எனத் தெரியாமல் "ஈ ஈ...." என்றேன். அப்புறம் சொன்னார், "இனிமே ஆபிசிலிருந்து ஏழு மணிக்கே கிளம்பிடலாம். ஒவ்வொரு தடவை லேட் ஆகும் போதும் என்னால இவ்வளவு செலவு பண்ண முடியாது" என்றார். நம்ம ஐடியா வொர்க் அவுட் ஆனதில் அநேக குஷி. (சில நேரங்களில் விவேகம் முக்கியம். விக்கி, புரிஞ்சிக்கிட்ட) **************************************************

இப்போதெல்லாம் ஆபிசில் வேலை பார்க்கவே பிடிக்கவில்லை. எப்போதும் ஏதாவது ப்ளாக்களை மேய்ந்து கொண்டோ அல்லது சமையல் ரெசிபிகளை தேடியோ பொழுதைக் களிக்கிறேன். இப்படியாக படித்த ரெசிபிகளைக் கொண்டு போன வாரம் முழுக்க சமைக்க, என்னவருக்கு பயங்கர சந்தோசம். "இவ்ளோ நாள் இந்த திறமை எல்லாம் எங்க போச்சு" எனப் புகழும் அளவுக்கு ஆகி விட்டது. வெளிநாட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தும் நண்பர் சத்யாவிடம் இதை சொல்லிக் கொண்டிருந்த பொழுது சொன்னார், " The main ingredient of food is love" இது தான் அவர் ரெஸ்டாரண்டின் தாரக மந்திரமாம். நல்ல விஷயம் தான். இது போல் எல்லோரும் நினைத்தால், கஸ்டமர்ஸ் பெருகுவார்கள். (இப்படியே சொல்லிகிட்டே சாப்பாடுல வேண்டியதை போட மறந்துடாதீங்க மக்கா)
**************************************************
ரெண்டு வாரம் முன்னாடி, சாந்தினி சோக் ஷாப்பிங் போயிருந்தோம். நொய்டாவிலிருந்து டூ வீலரில் அரை மணி நேரத்தில் ரெட் போர்ட் போயாச்சு. அங்கே இருந்து அரை கிலோமீட்டர் இருக்கும் மார்க்கெட் போக ஒரு மணி நேரம் முழுதாய் ஆனது. அவ்வளவு டிராபிக் ஜாம். வார நாள், விடுமுறை நாள் என பாராபட்சமின்றி எல்லா நாளும் கூட்டம் இருக்கும் இடம் சாந்தினி சோக். எனக்குத் தெரிந்து இந்தியாவின் மிகப் பெரிய ஹோல் சேல் மார்க்கெட். அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. அங்கு ஷாப்பிங் செல்ல ஒரு முழு நாள் வேண்டும். டெல்லி மார்கெட்களில் சாந்தினி சோக் என்னுடைய ஒன் ஆப் த பேவரிட்ஸ். ஒரு சமோசா, ஒரு கச்சோரி, ஒரு கிளாஸ் ரப்டி பலூடா, முடிந்தது லஞ்ச். முடித்து விட்டு, ஷாப்பிங் ஆரம்பித்தோம். எட்டு சல்வார் மட்டீரியல். ஒரு மின்ட் பிளாங்கெட், ரெண்டு ஸ்டோல் என சூப்பெர் ஷாப்பிங். நீங்க எப்போ டெல்லி வந்தாலும் சாந்தினி சோக் ஷாப்பிங் மிஸ் பண்ணிடாதீங்க. (ரெட் போர்ட் பார்த்திட்டு, அப்படியே ஷாப்பிங் போயிட்டு வர ஒரு நாள் வேணும்)
**************************************************
எல்லா இடத்திலேயும் எலெக்ஷன் பத்தி பேச்சு. காலைல நியூஸ் பேப்பெர்ல எலெக்ஷன் பத்தி செய்தி. வெளில போனா பெரிய பெரிய கட் அவுட், போஸ்டர்ல அத்வானி சிரிக்குறாரு. டிவில பிரச்சாரம். எப்போ தான் இது முடியுமோன்னு இருக்கு. இந்த அத்வானி, மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா, ஷீலா தீக்ஷித் இன்னும் பல கிளடுங்கல்லாம் எப்போ தான் ரிட்டயர்ட் வாங்கிப் போவாங்களோ. இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம இவங்க தொல்லையெல்லாம் தாங்கி ஆகணுமோ. யாராவது இளைஞர்கள் முன்னால வந்தா, கொஞ்சம் நல்லா இருக்கும். சினிமால காமிக்குற ஹீரோ மாதிரி, நிஜத்துல யார் வரப் போறா. இப்படியே நாம காலம் காலத்துக்கும் புலம்ப வேண்டியது தான். (இந்திய சினிமா பார்த்து ரொம்ப தான் கேட்டுப் போய்ட்டேனோ)
**************************************************


போன வாரம் மட்டும் நாலு சினிமா பார்த்தாச்சு. Diamonds are forever, Forrest Gump, Just My Luck and Hancock. இதுல Diamonds are forever பத்தி நான் எதுவும் சொல்ல வேணாம். 70 களில் வந்த James Bond படம். சூப்பர்.

Forrest Gump - பிதாமகன் விக்ரம் நடிப்பை மிஞ்சிட்டார், Tom Hanks. ச்சே, என்ன கதை, என்ன நடிப்பு. பிரமாதம். 3 Golden Globe Awards உம், 6 Academic Awards (OSCAR) உம் வாங்கிருக்குற படம். கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.

Just my luck - Okay kind of a movie. எப்போதும் குட் லக் உடைய ஹீரோயினும், பேட் லக்குடைய ஹீரோவும் முதல் முத்தத்தில் தங்கள் லக் மாற, தொடர்ந்து தங்கள் லக்கைத் தக்க வைக்க என்ன செய்கிறார்கள் என்பது தான் கதை. பார்க்கலாம்.

Hancock - 2008 இல் வெளிவந்த Will Smith படம். கேனைத்தனமான படம். இதைத் தவிர இந்த படத்தைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. (படம் பார்க்க நேரமே இல்லை என்றாலும் எப்படியாவது வாரத்திற்கு குறைந்தது மூன்று படங்கள் பார்த்து விடும் கப்பிள் நாங்கள்)

Monday, April 13, 2009

கோவை நினைவுகள்கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், இன்று தற்செயலாக யாகூவில் சுபாவை ஆன்லைனில் பார்த்தேன். ஒரு ஹாய் சொன்ன போது, அவளிடமிருந்து பதில் வந்தது. மிகவும் பிஸியாக இருந்த போதிலும் என்னிடம் ஒரு பத்து நிமிடம் சாட் செய்து விட்டு போனாள். அவள் போனதும் என் கோவை நாட்கள் கண்முன் வந்தன.சுபா என் அபார்ட்மென்ட் தோழி. நான் கோவையில் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்த போது, அபார்ட்மென்ட் ஒன்றில் குடியேறினேன். ஒரு பெரிய வரவேற்பறை, அதே அளவுக்கு விசாலமான சமையலறை, இரண்டு குளியலறைகளுடன் கூடிய படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய். நாங்கள் மூன்று பெண்கள் சேர்ந்து அதை வாடகைக்கு எடுத்திருந்தோம். எல்சா, திவ்யா மற்றும் நான். திவ்யா HR. நான் sales executive. எல்சா B.Com. Student. மூன்று பெண்கள் ஒரு வீட்டில் இருந்தால் கண்டிப்பாக பேச ஏதாவது இருக்கும். அதுவும் நாங்களோ மூன்று வேறு துறை சேர்ந்தவர்கள். எனவே சொல்லவே வேண்டாம். வீட்டில் நாங்கள் சேர்ந்து இருக்கும் பன்னிரண்டு மணி நேரத்தில் தூங்கும் நேரம் போக மீதி நேரம் பேச்சு, சமையல், கலகலப்பு தான்.எங்களுக்கு அடுத்த flat இல் இருந்த தோழிகள் தான் அர்ச்சனா, சுபா மற்றும் ஆர்த்தி. அப்போது மூவரும் Post graduate students. ஆர்த்தி, அர்ச்சனா ஒரே கல்லூரியில் ஒரே துறைத் தோழிகள். மேக்கப், புடவை, நகைகள் என எல்லாவற்றிலும் அதிக ஆர்வம் காட்டும் தோழிகள். ஆனால், சுபா மேக்கப் செய்தோ, புடவை உடுத்தியோ நான் பார்த்ததில்லை.அவள் எப்போதும் எளிமையாக தான் இருப்பாள். சுருண்ட, குட்டைக் கூந்தல், எப்போதும் ஒரு சல்வார் கமீஸ் என்று தான் இருப்பாள். இவர்கள் ஐந்து பேருமே எனக்கு நல்ல தோழிகள். ஐந்து பேருக்குமே நான் நல்ல தோழி. (அட சொல்லிக்கிறேனே). அடிக்கடி எங்கள் வீட்டிற்கும், அவர்களின் வீட்டிற்குமிடையில் சமையல் பரிவர்த்தனை நடக்கும்.அந்த நாட்கள் எப்போதும் மறக்க முடியாத இனிமையானவை. வீட்டில் நான், திவ்யா, எல்சா மூவரும் தான். திவ்யா எப்போவும் பிசியான பொண்ணு. தினமும் ஆபிசில் ஏதாவது பிரச்சனை, கூப்பிட்டு வச்சு அட்வைஸ் பண்ணேன் என்பாள். தினமும் காலை எட்டரை மணிக்கே ஓட வேண்டும் அவள். இரவு ஏழு மணிக்கு மேல் தான் வருவாள். காலையில் அவள் ஆபிஸ் போகும் போது தான் எல்சா எழுந்திருப்பாள். பின் நிதானமாய் காலேஜ் கிளம்பி போவாள். சாயங்காலம் திவ்யா ரூமுக்கு வரும்போது, எல்சா அவள் பிரென்ட்ஸோடு எங்காவது போயிருப்பாள் அல்லது தூங்கிக் கொண்டிருப்பாள்.திவ்யா, சில நேரங்களில் எனக்கு சமையலில் உதவுவாள். எல்சாவுக்கு சமையலறை எங்கே என்று கூடத் தெரியாது. ஆனால், அவள் தான் எங்களில் மிகவும் குட்டிப் பெண் என்பதால், அவளுக்கு சலுகைகள் அதிகம். தினமும் அவளை சாப்பிட வைப்பது எனக்கு பெரும்பாடு. மூன்று வேளையும், ஏதாவது ஜூசைக் குடித்து, சாப்பிடாமல் இருப்பது தான் எல்சாவின் வேலை. வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஆர்யாஸ் இருந்தாலும், நாங்கள் யாரும் ஆர்யாஸ் பக்கம் போகவே மாட்டோம். காரணம், நாங்கள் தினமும் அந்த கிச்சனைப் பார்த்து, பயந்து போனவர்கள்.திவ்யா, எல்சா இருவரும் மலையாளிகள். எனக்கு மலையாளம், ஹிந்தி கற்றுத் தருவது திவ்யாவின் பொழுதுபோக்கு. எப்போதும் நான் பார்க்கும் சில சீரியல்களைத் திட்டிக் கொண்டே, ஏதாவது ஆங்கில அல்லது ஹிந்தி நிகழ்ச்சிகளை மாற்றுவாள் திவ்யா. எல்சாவுக்கு தூக்கம் மட்டும் போதும். "ஏண்டி டிவி வாங்கின. அதுல என்ன உருப்படியா இருக்கு" என்றும், காலையில் நான் ஹிந்து படிக்கும் போது, "விக்கி, உனக்கு பைத்தியம் பிடிக்கப் போகுது. நைட் டிவில நியூஸ் பாக்குற. காலைல பேப்பரை ஒரு பக்கம் விடாம படிக்குற. ஏண்டி இப்படி" என கமெண்ட் மட்டும் தருவாள்.அந்த வீட்டில், டிவி, காஸ் அடுப்பு, மெத்தைகள் மற்றும் பல பொருட்களை வாங்கி நாங்கள் சமைத்து, நட்புகளைப் பகிர ஆரம்பித்த நேரத்தில் எனக்கு டெல்லிக்கு மாறுதல் வந்தது. அவ்விடத்தை விட்டு வர மனமில்லாமல் கோவையிலிருந்து விமானம் ஏறினேன். நான் அங்கிருந்து சென்ற சில நாட்களில் திவ்யாவும் சென்னையில் வேறு வேலை பார்த்து சென்று விட்டாள். சுபா, ஆர்த்தி, அர்ச்சனா, எல்சா அனைவரும் ஒரே பிளாட்டிற்கு வந்து விட்டதாக, போன் பண்ண போது சொன்னார்கள்.பின் ஒரு நாள் போன் செய்த போது, அவர்கள் மூவரும், படிப்பு முடிந்து சென்று விட்டதாகவும், எல்சா மட்டுமே தனியாக இருப்பதாகவும் சொன்னாள். ஐயோ, சின்ன பொண்ணு, எப்படி தனியா இருக்காளோனு கஷ்டமா இருந்தது.


போன வருடம் ஒரு வேலை விஷயமாக, நான் கோவை சென்று ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். எல்சாவுக்கு போன் செய்த போது அவள் கோவையில் இல்லை. நான் போன் செய்த அன்றே இரவு பஸ் பிடித்து, மறுநாள் காலை நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து என்னை பிளாட்டிற்கு அழைத்து சென்றாள். ஒரு வாரம் அவளுடன் தங்கிவிட்டு, வேலையை முடித்து திரும்பும் போது, என்னுடன் ஏர்போர்ட் வந்து விட்டு சென்றாள். எப்போதாவது போன் செய்தால், தூங்கிக் கொண்டிருந்தாலும், "சொல்லு விக்கி" என ஆரம்பித்து, குறைந்தது ஒன்றரை மணி நேரம் நீளும் எங்கள் நட்புப் பேச்சு.Missing Kovai and Friends....

Saturday, April 4, 2009

DASVIDANIYA - The Best Goodbye Ever!ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த பீலிங். கதாநாயகன், கதாநாயகி, டூயட் சாங், பைட் இப்படி எந்த மசாலாவும் இல்லாம ஒரு மனுஷனோட ஆசைகளை, இன்னும் மூனே மாசத்துல சாகப்போற மனுஷனோட ஆசைகளை சொல்லிருக்குற படம், DASVIDANIYA.மும்பையில் வாழும் ஒரு சராசரி மனிதன் AMAR KAUL (VINAY PATHAK). நல்ல ஹீரோ தேர்வு. மும்பையில் வாழும் பல லட்சம் சராசரி மனிதர்களைப் போல் வாழ்க்கையில் எதற்கும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் அமருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. எப்போதும் தன்னிடம் ஒரு "To do list" ஐ வைத்துக் கொண்டு தன் வேலைகளை சரி வர செய்கிறார், தன்னைப் பற்றியோ, தன் வாழ்க்கையைப் பற்றியோ சிந்திக்க நேரமில்லாமல்.


அவருக்கு வயிற்று வலி வரவே, மருத்துவமனைக்கு செல்வதற்காக பாஸிடம் பெர்மிஷன் கேட்க செல்கிறார். அப்போது அவரிடம் சில பைல்களை குடுத்து முடித்து மறுநாள் கொண்டு வருமாறு பாஸ் சொல்கிறார். மருத்துவமனையில் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களே அவரின் வாழ்நாள் எனவும் மருத்துவர் கூறவே, என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வருகிறார்.இந்த மூன்று மாதங்களில் தனக்காக வாழ்வது, தன் ஆசைகளை பூர்த்தி செய்வது என முடிவெடுத்து, அதற்கென ஒரு "To do list" ஐத் தயாரிக்கிறார் 37 வயதான அமர்.1. New Car
2. Foreign trip
3. Neha
4. Guitar
5. Boss of boss
6. Mumma
7. Rajiv Jhula
8. Love
9. Gaurav
10. Photo on Newspaper
இது தான் அவரின் கடைசி To do List.இந்த லிஸ்டை அமர் எப்படி பூர்த்தி செய்தார், பத்துக்கு பத்து வாங்கினாரா என்பது தான் கதை.ஒவ்வொரு இடத்திலும் அவர் படும் மன வேதனையைப் பார்க்கும் போது, இதுக்கே இவர் செத்தே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கார் வாங்கும் போது தவணையை மூன்று மாதமாக குறைக்க சொல்லி கேட்கும் போதும், கிடார் மாஸ்டரிடம் ஏழு மாத க்லாஸ்ஸைக் குறைக்கச் சொல்லிக் கேட்கும் போதும், வெளிநாட்டில் பெண்களிடம் அடி வாங்கி, தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும், நேஹாவிடம் காதலை வெளிப்படுத்தும் போதும் நமக்கு மனதிற்கு கஷ்டமாக உள்ளது.நேஹாவிடம் காதலைச் சொல்லும் அந்த ஒரு சீனிற்காகவே படம் பார்க்கலாம். நல்ல நடிப்பு, போரடிக்காத திரைக்கதை, மூன்றே பாடல்கள், அழுகையில்லாத சோகம் இவற்றிற்காக படம் பார்க்கலாம். மற்றபடி, மிக சாதாரணமான படம். சொல்லிக் கொள்ளும் அளவு பிரம்மாண்டம் எதுவும் இல்லை.படம் முடியும் போது, ஒருவேளை நமது வாழ்நாளும் நமக்கு தெரியுமானால், நாம் செய்ய விரும்பும் கடைசிக் காரியங்கள் எவையாக இருக்கும் என்னும் கேள்வி மனதில் எழுகிறது. DASVIDANIYA - The Best Goodbye Ever!நீங்கள் இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருப்பீர்களானால், நீங்கள் செய்ய விரும்புபவை எவையாக இருக்குமென பின்னூட்டமிடுங்களேன்.

Wednesday, April 1, 2009

டெல்லி வாங்க, நல்ல கிளைமேட்.இப்போதான் ப்ரொஜெக்டை முடிச்சிட்டு, சைட்ல இருந்து ரெண்டு மாசம் கழிச்சு ஆபிஸ் வந்திருக்கேன். போன வாரம் முழுக்க, ஆபிஸ்ல இன்டர்நெட் வொர்க் ஆகாததால, சீனியர் ஸ்டாப்ஸ வீட்டுலேயே வொர்க் பண்ண சொல்லி லீவு குடுத்துட்டாங்க. இந்த திங்கக் கிழமைல இருந்து ஆபிஸ்ல எம்.டி. பங்க்சுவலா பத்து மணிக்கே வர்றதுனால, அவருக்கு முன்னாடி போகனும்னு பறக்க வேண்டி இருக்கு. ரெண்டு நாளா கொஞ்சம் ப்ரீயா இருந்ததால, பொழுது போகாம நிறைய பதிவுகளைப் படிச்சிட்டிருந்தேன். இன்னைக்கு வீட்டுல இருக்கும் போதே PM போன் பண்ணி, இன்னிக்கு நிறைய வொர்க் இருக்குன்னு இன்பார்ம் பண்ணிட்டாரு. மாசம் வேற ஸ்டார்ட் ஆகிட்டதால, New Assignments and Targets வந்துடுச்சு. நாலு நாள் வொர்க்கை குடுத்து, உனக்கு ரெண்டு நாள் தான் டைம் அதுக்குள்ளே முடிச்சுக் குடுங்குறார். "இல்ல சார், கஷ்டம்" அப்படினா, "Vigneshwari, why are you so panic. I have confidence on you that you will complete this" என்றார். ஒரு அசட்டு சிரிப்போடு அவர் கேபினிலிருந்து வெளியேறினேன். (என்னப் பத்தி எனக்கு தெரியாதா.... வேலையக் குடுத்துட்டு இப்படி வஞ்சப் புகழ்ச்சி வேற.)

**************************************************


நவராத்திரி விரதம் போய்ட்டிருக்கு. இன்னும் மூணு நாள் பாக்கி. இது தான் எனக்கு முதல் நவராத்திரி விரதம். அது என்னவோ, இப்போதான் Mc Donald Burger சாப்பிடணும்னு ஆவலா இருக்கு.இதை விட பெரிய கொடுமை சமைக்குறது தான். எனக்கு ஒரு நாளைக்கு அரைக் கிலோ வெங்காயம் வேணும். எல்லாத்துலேயும் வெங்காயம் சேர்த்து சமைச்சிட்டு, இப்போ ஏதோ பத்திய சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கு. என்னவர் வந்து வெங்காயம், பூண்டு, மசாலா பொடி, மஞ்சள் பொடி, உப்பு, பருப்பு, அரிசி, ரவை, கோதுமை, மைதா இப்படி சேர்க்கக் கூடாத ஐட்டத்தோட லிஸ்ட் குடுத்ததும், என்ன தான் சாப்பிடுறதுன்னு கேட்டேன். குட்டு மாவு (நம்ம ஊர் கேழ்வரகு மாவு), எல்லா காய்கறிகள், பழங்கள், பால், தயிர், சேந்தா நமக் எனப்படுகின்ற உப்பு, ஜவ்வரிசி, குருணை மாதிரி ஒரு அரிசி இதெல்லாம் தான் சேர்க்கணும்னு சொன்னார். இதை வைத்து சமையல் செஞ்சு சாப்பிடுவதற்குள் போதும், போதும்னு ஆகிடுது. பெரும்பாலும் Fruit salad & Fruit Juice தான் சாப்பாடா போய்ட்டிருக்கு. நான் இது வரை விரதமே இருந்ததில்லை, ஏன்னா, சாப்பிடக் கூடாதுன்னு யார் சொன்னாலும் எனக்கு பிடிக்காது. கல்யாணத்துக்கப்புறம் மாமியார் சொன்னா, பிடிக்காதுன்னு சொல்ல முடியுமா...!!!!!! (இந்த weekend ஏதாவது நல்ல restaurant போய் நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரணும்)

**************************************************


போன வாரம் ஒரு பிரபல நியூஸ் சேனலை மத்தியான நேரத்தில பார்த்திட்டு இருக்கும் போது, அதுல ராமனோட பேரன் செத்தது எப்படி, கண்ணன் பண்ண லீலைகள் இப்படி வெட்டிக் கதை ஒரு மணி நேரமா போயிட்டிருந்தது. என்னவர் இதைப் பார்த்துட்டு, "பார்த்தியா, இந்த சேனலுக்கு எதுவும் நியூஸ் கிடைக்கலைனு எப்படி வெட்டியா ஓட்டிட்டு இருக்கானு. அங்கேயும் சம்பளம் குடுக்காம நிறைய நிருபர்கள குறைச்சதுனால தான் இப்படி" னார். அதுக்காக நியூஸ் சேனல்னு பேர் வச்சுட்டு சாமிக் கதையை விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்களேன்னு தலைல அடிச்சுட்டு டிவிய ஆப் பண்ணேன். (Recession இவ்வளவு மோசமாவா போய்ட்டிருக்கு...)

**************************************************


வாவ், என்ன ஒரு கிளைமேட் இப்போ டெல்லில. எல்லாரும் என்கிட்டே டெல்லி வர்றதுக்கு நல்ல சீசன் எதுன்னு கேப்பாங்க. அது மார்ச் தான்னு கண்டிப்பா சொல்லலாம். டிசம்பர், ஜனவரியில ஹீட்டர் இல்லாம வீட்டுல இருக்க முடியல. இப்போ ஹீட்டர், ஸ்வெட்டெர் எல்லாத்தையும் மூட்டை கட்டியாச்சு. fan உம் யூஸ் பண்றதில்லை. ரம்மியமான கிளைமேட். மழை வர்ற மாதிரி இருக்கு. ஆனா, சாயங்காலத்துல லேசாத் தூறிட்டு போய்டுது. ஆனா, அது வந்து போன சுவடு மட்டும் காயாம, சில்லுனு காத்தா வந்திட்டுருக்கு. இந்த டைம்ல ஷாப்பிங், ஊர் சுத்துறதுனு எல்லாம் பண்ணலாம். விடுவேனா, போன வாரம் மட்டும் நாலு நாள் நாள் ஷாப்பிங் போயாச்சு. இந்த வாரம் ஷாப்பிங் ஸ்பாட் "Chandhini Chowk". (எனக்கு குஷி. பாவம், அவர் பர்ஸ் தான் வெயிட் குறையுது ;) )