Wednesday, May 12, 2010

நினைவுகளின் ஈரம்

கிட்டத்தட்ட 8 வருடங்களாகத் தேடிய குரலை, முகத்தைத் திடீரென ஒரு நாள் திருவிழாக் கூட்டத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது எனக்கு நேற்று.

ஜெயா. என் பள்ளித் தோழி. 11,12 ஆம் வகுப்புக் குறும்புகளினூடே எப்போதும் படிப்பை மட்டுமே எங்களுக்கு நினைவூட்டும் எங்கள் நால்வர் கூட்டத்தில் ஒருத்தி. என் அம்மாவின் பெயர் கொண்டவளென்பதால் எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே பிடித்தவள். தினமும் டியூஷன் செல்ல என்னை வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றவள். மிகவும் அமைதியான, கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட அழகுப் பிசாசு.

11 ஆம் வகுப்பில் பாசானால் போதும் எனப் படித்துக் கொண்டிருந்தோம். 12 ஆம் வகுப்பில் அப்படி முடியவில்லை. கெமிஸ்ட்ரி எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்றாலும், எப்போதும் திட்டிக் கொண்டே பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி மேடத்தைப் பிடிக்காததால் டியூஷன் செல்ல வேண்டி வந்தது. ஜெயாவுக்கு கெமிஸ்ட்ரி என்றாலே உதறும் அப்போது. அதனால் இருவரும் ஒன்றாய் போனோம். சயின்ஸ் குரூப் என்றாலே எல்லாப் பாடத்திற்கும் டியூஷன் போகும் வழக்கம் இருந்த நேரமது. காலை 5.30க்கு ஆரம்பிக்கும் டியூஷன்கள் பள்ளி நேரம் வரை தொடரும். பள்ளியின் மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்குப் பின் இரவு 9 மணி வரை ஏதாவது டியூஷனில் இருப்போம்.

தேர்வு நேரங்களில் இனி டியூஷன்ஸ் வேண்டாம் என முடிவு செய்து கடைசி 3 மாதங்கள் நாங்கள் நால்வரும் ஒன்றாய் சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். எங்களில் எப்போதும் டென்ஷனாய் இருப்பாள் விஜி. சரியான படிப்ஸ். படிப்போடு வேறு கதைகளையும் அரைத்துக் கொண்டிருப்போம் கோதையும் நானும். விஜியின் டென்ஷனை சாந்தப்படுத்தி, கோதையையும் என்னையும் கெஞ்சி அழைத்துப் படிக்க வைப்பாள் ஜெயா. ரொம்ப நல்லவள். ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வீட்டில் படிப்போம். அம்மாக்களும் பிள்ளைகள் படிப்பதால் என்னென்னவோ சமைத்து ஸ்பெஷல் கவனிப்பு நடத்துவார்கள்.

ஜெயாவிற்கு அப்போது சைக்கிள் ஓட்டக் கூடப் பயம். நான் தான் சொல்லிக் கொடுத்து பள்ளிக்கு என்னுடனே அழைத்து செல்வேன். எதிரில் பஸ் வந்தால் உடனே சைக்கிளிலிருந்து இறங்கி விடுவாள். நான் அவளைக் கடந்து போய் பின் திரும்பி வந்து அழைத்து செல்வேன். ரோட்டில் பசங்கள் இருந்தால் பார்க்கக் கூடாதென்பாள். யாராவது கேலி செய்தால் “கண்டுக்காதே விக்கி. விட்டுடு” என நடுங்குவாள். அவளின் இப்படிப்பட்ட குணங்களால் என் அம்மாவிடம் “நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு” என சர்டிஃபிகேட் வாங்கினாள். அம்மா எங்களிடம் தோழி போலிருந்ததால் அவளுக்கும் அம்மாவை மிகவும் பிடிக்கும். எனக்கு அம்மாவையும், அவளையும் பார்த்தால் சிரிப்பாய் வரும். அவ்ளோ பாசம் ரெண்டு பேரும்.

ஜெயாவின் அம்மா ரொம்ப நல்லவர். எங்களைக் கவனித்த அம்மாக்களில் முதலிடம் இவருக்குத் தான். பெரும்பாலான வார இறுதி நாட்களில் நாங்கள் படித்தது அவள் வீட்டில் தான். காரணம் அம்மாவின் சமையல். அவரே எனக்கு ஃபோன் செய்து அழைப்பார். “விக்கி இன்னிக்கு இங்கே வந்து படிங்கப்பா. அம்மா உங்களுக்காக சமைச்சு வைக்கிறேன்”. “சரிம்மா”வைத் தவிர வேறு வார்த்தையில்லை.

கெமிஸ்ட்ரி வகுப்பில் மேடம் கேள்வி கேட்டால் ஜெயாவுக்கு நான் சொல்லித் தருவேன். ஃபிசிக்ஸ் புயல் அவள். “ஜெயா பெண்டுலம்ல 10 ரீடிங்ஸ் எடுக்கணுமாம். கொஞ்சம் எடுத்துத் தாயேன்” இப்படிப் பெரும்பாலான ப்ராக்டிகல் வகுப்புகள் அவள் உதவியுடனே கடந்தன.

பள்ளி நாட்களுக்குப் பின் அனைவரும் அறிவியல் பட்டப் படிப்பிற்குச் செல்ல நான் மட்டும் வேறு திசையில் பயணமானேன். எல்லாரும் ஹாஸ்டல் சிறையில் அடைபட்டதால் தொடர்ந்து காண்டாக்டில் இருக்க முடியவில்லை. கல்லூரி இரண்டாம் வருடத்தில் கோதையின் திருமணம் ஏற்பாடானது. அதற்கும் ஜெயாவால் வர முடியவில்லை. ஜெயாவின் அம்மாவை மட்டுமே பார்க்க முடிந்தது. “வீட்டுக்கு வாப்பா” என்றார்கள். “கண்டிப்பாம்மா” என்றேன். ஆனால் அதை முற்றிலும் பொய்யாக்கியது கல்லூரி நாட்கள். சில வருடங்களுக்குப் பின் அவளின் வீட்டு எண்ணிற்கு முயற்சித்தேன். மாற்றியிருந்தார்கள்.

என் திருமணம் நிச்சயமாயிருந்த பொழுது அவளைத் தொடர்பு கொள்ள மிகவும் முயற்சித்தேன். முடியவில்லை. அவள் வீட்டிற்கு செல்லும் வழியையும் மறந்திருந்தேன். மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. பல மாதங்களாய் கோதையிடம் சொல்லி அவள் எண்ணை அறிந்து சொல்லும்படி கேட்டேன். அவளும் பலரைக் கேட்டறிந்து நேற்று கொடுத்தாள். 8 வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறோம். கொஞ்சம் கலாய்க்கலாம் என நினைத்து “ஹலோ ஜெயாங்களா?” என்றேன். “ஹேய், விக்கி......” என்றாள். மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. அவள் குரலைக் கேட்டு 7,8 வருடங்களிருக்கும். என் அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லையெனினும் குரல் கேட்ட அடுத்த நொடியே அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அவளின் நட்பை நினைத்துக் கலங்கிவிட்டேன். வார்த்தைகள் வரவில்லை. அப்புறம் பேச ஆரம்பித்தோம். பேசிக் கொண்டே..... இருந்தோம். நேற்று வெளியில் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் வைக்க மனமின்றி 1 மணி நேரத்திற்குப் பிறகு ரிசீவரை வைத்தேன், இன்று மறுபடியும் அழைப்பதாய் உறுதியளித்து.

புகைப்படங்களை மெயிலில் பரிமாறினோம். ஒவ்வொருவருக்கும் காலம் கொடுத்த மாற்றங்களை எண்ணி வியந்தோம். அவள் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. வகுப்பில் நடுங்கிக் கொண்டிருந்தவள் இன்று மாணவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறாள். தமிழ்ப் பிரியையான நான் பஞ்சாபி மருமகள். கணிதப் புலியான கோதை கரண்டியுடன் கணவரையும், பையனையும் மிரட்டிக் கொண்டுள்ளாள். படிப்ஸ் விஜி வேலை பார்த்துக் கொண்டே இன்னும் ஏதேதோ படித்துக் கொண்டே இருக்கிறாள். அனைவருக்கும் எதிர்பார்க்காத வாழ்க்கை. ஆனால், மகிழ்ச்சியாய்.

அம்மாவுக்கு ஃபோன் செய்து மகிழ்ச்சியைப் பரிமாறினேன். யோகியிடம் அவர் காது வலிக்க எங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து சொன்னார், “அம்மா ஸ்கூல் டைம்ல உன்னைப் படிக்க சொல்லாம நல்லா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஏன் சுத்த விட்டாங்க. இப்போ பாரு அதுனால ஃபோன் பில் கூடுது. என் காதும் வலிக்குது”. இதுக்கு மேலேயும் நான் சமைச்சிருப்பேன்? நேற்றிரவு பீட்ஸா ஹட்டில் ட்ரீட், தோழி திரும்பக் கிடைத்ததற்காக.

36 comments:

Unknown said...

eeram ninaivukaLil, :-)
pothuvaaka ellorukkum ippadiyaana anupavangka irukkum, sonna vitham arumaiyaa irukku, jeyaavaiyum keettathaa sollunga.

Anonymous said...

//நேற்றிரவு பீட்ஸா ஹட்டில் ட்ரீட், தோழி திரும்பக் கிடைத்ததற்காக.//

Happy for You Vicki
Its always so nice to have your friends back.

Raghu said...
This comment has been removed by the author.
ஷர்புதீன் said...

"நீங்க‌ க‌வ‌னிக்க‌றீங்க‌ளா இல்லையான்னு தெரிய‌ல‌ விக்கி. ந‌ட்பைப் ப‌ற்றி, உற‌வுக‌ளைப் ப‌ற்றி எழுதும்போதெல்லாம் உங்க‌ எழுத்து ஒரு புத்துண‌ர்ச்சியோடு இருக்கு." - ரகு


இதற்கு நீங்கள் இருக்கும் தூரம் கூட முக்கிய காரணம் என்று சிக்மன்ட் பிராய்டு சொல்லுறாருன்னு சொன்ன சரிதானே...?!

ஹுஸைனம்மா said...

மிக உண்மை விக்னேஷ்வரி. சில நாட்கள் முன்பு இணையத்தில் மட்டுமே அறிந்த தோழிகள் முதன்முறை இங்கு சந்தித்துக் கொண்டபோதும் இதே மகிழ்ச்சி, துள்ளல்.

வரும் ஜூலையில் இந்தியாவில் கல்லூரித் தோழிகள் சந்திக்க முயன்று வருகிறோம். அதை நினைத்தால் இப்போதே மனது குதியாட்டம் போடுகிறது.

Vidhoosh said...

//interesting (0) cool (0) good (0)///

இது மூன்றுமாக மட்டும் தான் எங்கள் ரிஆக்ஷன் இருக்கணும்னு நீங்க கட்டாயப் படுத்துவதை கடுமையாக கண்டுபிடிக்கிறேன்... அஹ் அஹ் கண்டிக்கிறேன்.

நண்பிகள் கிடைச்சதுக்கு சந்தோசம்..

///இதுக்கு மேலேயும் நான் சமைச்சிருப்பேன்?//

யாருக்கிட்ட.. அட யாருக்கிட்டேன்ன்னேன் ?? :-))

யோகியை ஹடயோகியாக்கிடப் போறீங்க.. ஜாக்கிரதை மக்கா

Menaga Sathia said...

பள்ளித்தோழிகளிடம் மீண்டும் பேசுவதம்,சந்திப்பதும் அலாதி சந்தோஷம்தான்.எனக்கும் அந்த வாய்ப்பு எப்போ கிடைக்கும்னு தெரியவில்லை,நானும் ஒரு சிலரை தெடிக்கொண்டிக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி விக்கி!! உங்களை விக்கி ந்னு சுருக்கமாக கூப்பிடலாம் தானே??

Unknown said...

பிரிந்த நட்பை அடைதலில் வரும் சந்தோசம்....உணர்திருக்கிறேன் நானும்...

வாழ்த்துக்கள் விக்கி ...அப்டி டீச்சர் அக்காக்கும் சொல்லிடுங்க...
//இப்போ பாரு அதுனால ஃபோன் பில் கூடுது. என் காதும் வலிக்குது”. //

இனிமே எல்லாம் இப்டித்தான் யோகி...:-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நண்பர்களிடம் நெடுநாள் கழித்து பார்த்தாலோ, பேசினாலோ கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாதது. அது உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ்

அமுதா கிருஷ்ணா said...

என்னோட நெருங்கிய தோழி பெயரும் ஜெயாதான்..நல்ல பதிவு ....

சுசி said...

போங்க விக்கி.. உங்க பேச்சு கா..

இப்போ எனக்கு என் தோழி ஞாபகம் வந்திடிச்சு..

இன்னமும் தேடிட்டு இருக்கேன் அவளை..

கணேஷ் said...

\\ர‌கு said...
நீங்க‌ க‌வ‌னிக்க‌றீங்க‌ளா இல்லையான்னு தெரிய‌ல‌ விக்கி. ந‌ட்பைப் ப‌ற்றி, உற‌வுக‌ளைப் ப‌ற்றி எழுதும்போதெல்லாம் உங்க‌ எழுத்து ஒரு புத்துண‌ர்ச்சியோடு இருக்கு. எழுத்தில் இருக்கும் ம‌கிழ்ச்சி வாசிப்ப‌வ‌ரையும் மிக‌ எளிதாக‌ சென்ற‌டைகிற‌து.\\

உண்மைதாங்க....நல்லாயிருக்கு....

மிக்க மகிழ்ச்சி.....

S Maharajan said...

பதின்ம தோழியை கண்டு பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

S Maharajan said...

பதின்ம தோழியை கண்டு பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

யோகி இம்புட்டு அப்பாவியா? பீட்ஸா ஹட் போக இப்படி ஒரு ப்ளானா? :))

Raghu said...

////கெமிஸ்ட்ரி எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்றாலும்//

க‌லா மாஸ்ட‌ருக்கும்....;))

//1 மணி நேரத்திற்குப் பிறகு ரிசீவரை வைத்தேன்//

ரிசீவ‌ரே அழுதிருக்கும்...ஹி..ஹி...

//படிப்ஸ் விஜி வேலை பார்த்துக் கொண்டே இன்னும் ஏதேதோ படித்துக் கொண்டே இருக்கிறாள்//

விஜியை ரொம்ப‌ விசாரிச்ச‌தா சொல்லுங்க‌

//இப்போ பாரு அதுனால ஃபோன் பில் கூடுது. என் காதும் வலிக்குது//

ஹாஹ்ஹா, யோகியோட‌ சிக்ஸ‌ர் :)

நீங்க‌ க‌வ‌னிக்க‌றீங்க‌ளா இல்லையான்னு தெரிய‌ல‌ விக்கி. ந‌ட்பைப் ப‌ற்றி, உற‌வுக‌ளைப் ப‌ற்றி எழுதும்போதெல்லாம் உங்க‌ எழுத்து ஒரு புத்துண‌ர்ச்சியோடு இருக்கு. எழுத்தில் இருக்கும் ம‌கிழ்ச்சி வாசிப்ப‌வ‌ரையும் மிக‌ எளிதாக‌ சென்ற‌டைகிற‌து. வெறும் வார்த்தை விளையாட்டுக‌ள் போல் அல்லாம‌ல், உள்ள‌த்தில் தூய‌ ந‌ட்பும், உற‌வும் இருந்தால்தான் இது போன்ற‌ ப‌திவுக‌ளெல்லாம் சாத்திய‌ம். இதில் நீங்க‌ ரொம்ப‌வே அனாய‌சமா பின்னி எடுக்க‌றீங்க‌...

விக்னேஷ்வரி said...

வாங்க முரளி, நன்றி.

ஆமா அம்மணி.

ரகு, ஆரம்பிச்சுட்டீங்களா?
கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரி வேற. நம்மது வேறப்பா.
விஜிகிட்ட வழியாதீங்க ரகு.
நன்றி ரகு.

இருக்கலாம் ஷர்ஃபுதீன்.

வாங்க ஹூஸைனம்மா. சூப்பர், எஞ்சாய்.

சாரி விதூஷக்கா. வேற ரியாக்‌ஷனைக் கொட்டத் தானே கமெண்ட்ஸ் இருக்கு.
:)

சரியா சொன்னீங்க மேனகாசாதியா. அட, எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்கங்க.

வாங்க ஹனிஃப் ரிஃபே. ஹாஹாஹா...

நன்றி வெங்கட்.

நன்றி அமுதா கிருஷ்ணன்.

சீக்கிரம் உங்க தோழியும் கிடைச்சுடுவாங்க சுசி. எங்கே, இப்போ பழம் விடுங்க. ஆங், இது நல்ல பிள்ளைக்கழகு.

நன்றி கணேஷ்.

நன்றி மஹாராஜா.

ஹிஹிஹி... விஜி கண்டுபிடிச்சுட்டீங்களா? ;)

Anonymous said...

டே பாண்டி எப்படீடா இருக்க?
உங்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு...

ம் நானும் உங்க பதிவா படிச்சுட்டு enfriendpandikrishnanuku கால் பண்ணி பேசினிங்க..
ஏன்டா எவ்ளோ நாளா பேசவில்லைன்னு...உங்கபதிவு பார்த்தவுடன்
சந்தோசமா இருந்துச்சு.

ம் எவ்ளோவு புது நண்பர்கள் கிடைத்தாலும்
பழைய நட்புகள் போல வராதுங்க..

மிகவும் நிகிழ்ச்சியான பதிவுகள்

நன்றி
வாழ்க வளமுடன்
காம்ப்ளான் சூர்யா

Thamira said...

நட்பு மிளிர்கிறது.. வரிகளில்.!

iniyavan said...

விக்கி,

இடுகை அருமையா இருக்கு, ப்ரொபைல் போட்டாவும்.

க ரா said...

நட்புன்னா என்னிக்கும் ஸ்பெஷல்தான். அதுவும் இத்தன வருசம் கழிச்சு பேசறப்போ இன்னும் ஸ்பெஷல்.

நேசமித்ரன். said...

நினைவுகள் ஈரமா இருக்குறவரைதானே
வாழ்க்கை சக்கரம் ஈசியா நகரும்

நட்பு மீண்டமைக்கு வாழ்த்துகள்

Chitra said...

Its a blessing to have good friends and to be in touch with them. Enjoy!

Unknown said...

தமிழ்ப் பிரியையான நான் பஞ்சாபி மருமகள்....... அவ்வ்வ்வ்...


சூப்பருங்கோ..

நான் இடுகையை சொன்னேன்

Romeoboy said...

நீண்ட நாள் கழித்து நட்பை புதுப்பித்தது உங்கள் பதிவில் அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

நட்பை மீண்டும் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

தொடரட்டும் நட்பு.

சுசி said...

உங்க வாக்கு பலிக்கட்டும் விக்னேஷ்வரி.. :))

அதான் பழம் விட்டாச்சே.. கூட்டிப் போய் உங்க தோழி கிடைச்ச ட்ரீட் குடுங்க..

ஹேமா said...

நட்பின் குதூகலம் விக்கி.சந்தோஷம். நானும் அனுபவிச்சிருக்கேன்.

Priya said...

படிச்சதும் எனக்கு என் பழைய பிரென்ட்ஸ் நியாபகம் எல்லாம் வந்துடிச்சி.

நீண்ட நாட்களுக்கு சாரி வருடங்களுக்கு பின் இப்படி தொலைபேசியில் தொடர்பு கொண்ட என் தோழியிடம் பேசிய போது இப்படிதான் உங்களை போலவே இரண்டும் நிமிடம் வார்த்தைகளே வரவில்லை.

பழைய தோழிகளிடம் பேசிய பின் மனதில் ஏற்படும் உற்சாகத்திற்கு அளவே இல்லைதான்.

Jerry Eshananda said...

சந்தோசம்.

Unknown said...

hello vigneshwari,
this is tamil, jeya cousin
Unga frndshp ninaikum pothum,enala words la express pana mudiyala.unga frndshp ah inimel miss panidathenga.
Unga kavithai thanamana pechu romba
naluruku
Hope ur frndshp makes the diff in both of ur future

Unknown said...

hello vigneshwari,
this is jeya cousin
Unga frndshp ninaikum pothum,enala words la express pana mudiyala.unga frndshp ah inimel miss panidathenga.
Unga kavithai thanamana pechu romba
naluruku
Hope ur frndshp makes the diff in both of ur future

Unknown said...

hello vigneshwari,
this is jeya cousin
Unga frndshp ninaikum pothum,enala words la express pana mudiyala.unga frndshp ah inimel miss panidathenga.
Unga kavithai thanamana pechu romba
naluruku
Hope ur frndshp makes the diff in both of ur future

ஸ்ரீவி சிவா said...

ரகு சொன்னது சரிதான்...
இந்த எழுத்து ஒரு தனி புத்துணர்ச்சியோடு இருக்குது.
கலக்குறீங்க.

அப்புறம், அடுத்த முறை நான் ஊருக்கும் போகும்போது ஜெயாவை பார்த்து உங்களுக்கு ஏதாவது சேதி இருக்கானு கேட்டு வர்றேன். ஜெயாவோட அட்ரஸ் ப்ளீஸ்.
;)

பாலராஜன்கீதா said...

பள்ளி / கல்லூரி நண்பர்களைத் தேட http://www.batchmates.com/default.aspx என்ற சுட்டி உங்களுக்கு உதவலாம்.

Padma said...

Hai vigna akka...jeya pathi knjam over ah than eluthi irukurenga...bt elamae unmai....inum avaluku cycle otta theriyathu.....bt romba miratura elaraiyum....ena pandrathu teacher agita la...
ok ka...very happy to see ur photos....Meet u again...