Tuesday, July 27, 2010

வைஷ்ணு தேவி பயணம்


திருப்பதி - அனைவரும் அவசியம் செல்ல வேண்டிய இடம் என சொல்லியும் இதுவரை நான் போனதில்லை. பிதுங்கும் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் பக்தியும், நேரம் கொன்று நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொறுமையும் எனக்கில்லை என்பதே காரணம். தென்னிந்தியாவில் திருப்பதிக்கு இருக்கும் மரியாதையும், புகழும், பக்தர் கூட்டமும், காணிக்கைப் பணமும் வட இந்தியாவில் வைஷ்ணு தேவி தலத்திற்கு உண்டு. யோகியின் வேண்டுதலுக்காக போன வார இறுதியில் பயணமானோம் ஜம்முவிலிருக்கும் வைஷ்ணு தேவிக்கு.

ரயில் வண்டி போல முழு படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பயணம் ஆரம்பமானது. சோம்பல் கலையா ஆறு மணி தூக்கத்தில் தடாலென சத்தமும் சிதறிய கண்ணாடித் துண்டுகளின் தழுவலும் தூக்கத்தைக் கலைத்தன. எதிரே வந்த ட்ரக் ஒன்று எங்கள் பேருந்தின் பக்கவாட்டில் இடித்துக் கண்ணாடிகளை உடைத்து உள்ளே தள்ளிச் சென்றது. உடைந்த தூக்கத்துடனும், குத்தியக் கண்ணாடித் துண்டுகளுடனும் எழுந்து மீதி ஒரு மணி நேரப் பயணம் தொடர்ந்தது. கட்ரா (Katra) வைஷ்ணு தேவியின் அடிவாரத்திலிருக்கும் ஊர். அங்கு குளித்துத் தயாராகி ஆரம்பமானது பயணம்.

கட்ராவிலிருந்து ஒன்றரை கி.மீ.லிருக்கும் பாலகங்காவிற்கு ஆட்டோவிலும், பாலகங்காவிலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கும் செல்ல வேண்டும். பால கங்காவிலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கு 14 கி.மீ. தொலைவு. நடந்தும், குதிரையிலும், நால்வர் தூக்கிச் செல்லும் பல்லக்கிலும் செல்லலாம். யோகியின் திட்டப்படி எங்கள் பயணம் நடைப் பயணம். இல்லை மலையேறும் பயணம் எனலாம்.


அடர்த்தியான மலைகள், பாதைகளை மறைக்கும் பனி, “ஜெய் மாதா தி” என முழங்கும் பக்தர் கூட்டம், சோர்ந்த முகங்கள், தளர்ந்த நடை என வழி முழுக்க வித்தியாச அனுபவம். கைக்குழந்தைகளைக் கொண்டு செல்லும் தம்பதிகளிலிருந்து, தளர்ந்து மூன்று காலில் செல்லும் வயதானவர்கள் வரை பார்க்க முடிந்தது. வாழ்க்கையின் மீதான பற்றுதலும், கடவுளின் மீதான நம்பிக்கையும் எந்தளவு நம்மைக் கொண்டு செல்கின்றன என்னும் வியப்பு சூழ்ந்தே சென்றது என் பயணமும்.


மதியம் 2 மணிக்கு கட்ராவிலிருந்து ஆரம்பித்தோம். மலையை சென்று சேர்கையில் மணி நள்ளிரவு பனிரெண்டரை. பத்து மணி நேரத்திற்கும் மேலான நடை. அதுவும் ஊட்டி போன்றதொரு 60 டிகிரி சாலையில். சில இடங்களில் இந்தப் பாகை இன்னும் உயர்ந்தது. நடந்து, அமர்ந்து, களைப்பாறி, உண்டு, தாகம் தீர்த்து, வியர்வை துடைத்து, குளிரில் நடுங்கி கோவிலை அடைந்து விட்ட பொழுதில் தங்குமிடம் சேர இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர் ஏற வேண்டுமென்ற போது தொண்டை கிழிய கத்தி அழ வேண்டும் போலிருந்தது.

பனிரெண்டரைக்கு அறை அடைந்து கோவில் செல்லத் திரானியில்லாததால் தூங்கிப் போனேன். 24 மணி நேரமும் கோவிலில் வழிபாடு உண்டு. காலை ஏழு மணிக்குத் துயில் களைந்து தயாராகி கீழே இறங்கிக் கோயிலை அடைகையில் மணி 10. ஒரு மணி நேரம் பொருட்களை பாதுகாக்குமிடத்தில் பாதணிகளை வைக்கக் காத்திருந்து, பதினொரு மணிக்கு பக்தர் வரிசையில் சங்கமித்தோம். எனக்கு எப்போதும் ஆகாதது கூட்டம். அதுவும் கடவுள் பெயர் சொல்லி மனிதம் மறந்த கூட்டம். வரிசையின் பின்னாலிருந்து சக மனிதனை ஏமாற்றி முந்திச் செல்லும் கூட்டத்தைப் பார்க்கையில் பொங்கி வந்தது கோபம். ஒருவர் மட்டுமே செல்ல முடிந்த ஒரு படிக்கட்டில் இறங்கும் பொழுது கடைசி படிக்கு முந்திய படியை அடைகையில் “கொஞ்சம் நின்னு வாப்பா” எனச் சொல்லிக் கேட்காத ஒருவனின் நெஞ்சைப் பிடித்துத் தள்ளுகையில் “நீயெல்லாம் எதுக்குடா கோவிலுக்கு வர்ற”ன்னு கேட்க நினைத்து நிராகரித்தேன்.

ஒரு மணி நேரக் காத்திருத்தலின் வலியுடன் செல்லுகையிலேயே யோகி சொன்னது நினைவிலைருந்தது. உள்ளே 2 நொடிகள் மட்டுமே தரிசனம் செய்ய முடியுமெனவும், உள்ளே எந்த உருவமும் கிடையாது, பூமியிலிருந்து சுயமாய் வந்த கல் பிண்டங்களைத் தொழுகிறார்களெனவும் அறிகையில் “இதுக்கா இவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்தோம்” என்ற எண்ணத்தோடு அரை மன நிலையிலேயே தரிசனம் செய்ய சென்றேன். ஆனால் 5 நொடி தரிசனத்திற்குப் பின் வெளிவருகையில் ஏதோ வாழ்க்கையின் பெரும் லட்சியத்தை அடைந்து விட்ட மன நிறைவு இருந்தது. நடந்த நடைக்கான களைப்பு நீங்கி மனமகிழ்வாயிருந்தது.

மறுபடியும் மதியம் ஒரு மணிக்கு மேலிருந்து இறங்க ஆரம்பித்தோம். இறக்கத்தில் இறங்குவதொன்றும் அவ்வளவு எளிதாயில்லை. தவிர ஐநூறு, ஐநூறாக இருந்த செங்குத்துப் படிக்கட்டுகளைக் கடக்கையில் முட்டியின் வலி, கண்களில் கண்ணீராய்ப் பொங்கியது. என் நிலை புரிந்து பாதி வழியில் குதிரையை ஏற்பாடு செய்தார் யோகி. 3 கி.மீ. தூரம் குதிரையில் கடந்தேன். யோகி பின்னால் நடந்து வந்தார். குதிரையைப் பார்க்கும் நேரமெல்லாம் ஜான்ஸிராணியாய் மாற நினைத்த கனவு, உண்மையில் ஏறுகையில் எவ்வளவு பயம் நிறைந்தது. குதிரை நடக்கையில் அதன் மேலிருக்கும் நாம் அசைகையில், கீழே விழுந்து “இருண்ட வீடு” கதையில் வரும் பையன் போல் முன் பல் போய் விட்டால் எப்படி இருக்குமென்ற நினைவு வர கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.


குதிரையிலிருந்து இறங்கி மறுபடியும் ஆயிரம் படிகள். நெஞ்சில் கல்லைத் தூக்கி வைத்தது போலிருந்தது. ஆனாலும் ஒரு கையில் தடியும், மறுகையில் என்னவரின் கரமும் இருக்கையில் படியைக் கடக்கும் நம்பிக்கை வர ஐந்தரை மணிக்கு அடிவாரமடைந்து விட்டோம். நாலரை மணி நேரத்தில் கீழே இறங்கியது சாதனை தான். எது எப்படியோ, இறங்கியதும் உடல் எடை பார்த்தேன். இரண்டு கிலோ குறைந்திருந்தது.

உதிரி:

> கீழிருந்து மேலேயும், மேலிருந்து கீழேயும் நம் சுமைகளையும், குழந்தைகளையும் தூக்கி வர “பிட்டு” என அழைக்கப்படும் கூலித் தொழிலாளிகள் கிடைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முறைக்கான கூலி இருநூற்று ஐம்பது ரூபாயும், ஒரு வேளை சாப்பாடும். அதிலும் பேரம் பேசும் மனிதர்களைப் பார்க்கையில் அருவெறுப்பாய் இருந்தது.

> இந்தப் பிட்டுகள் பொதுவாக ஜம்முவிலிருக்கும் கிராமத்துவாசிகள். அவர்களின் ஊர்கள் மலைப்பகுதியிலிருப்பதால் மலையேறி இறங்கிப் பழக்கமுடையவர்கள். இந்த வேலை செய்வதற்கு வைஷ்ணு தேவி கோவில் நிர்வாகத்திடமிருந்து அவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும்.


> நான்கு பிட்டுகள் சேர்ந்து முன்னிருவர் பின்னிருவராய் நடுவில் இருக்கையில் அமர்ந்திருக்கும் மனிதர்களை சுமந்து செல்கிறார்கள். இதற்கு “பால்கி” (பல்லக்கு) என்று பெயர். ஆத்குவாரி (பாதி தூரம்) எனும் இடத்திலிருந்து வைஷ்ணு தேவி மலைக்கு பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்கள் சென்றாலும் அவை அரசின் பொறுப்பிலிருப்பதால் மிக மோசமான சர்வீஸ்.

> கால் கிலோ மீட்டருக்கு ஒரு அமருமிடம், அரை கிலோ மீட்டரில் தண்ணீர்க் குழாய் வசதி, ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் உணவு விடுதிகள் என பயணிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவு நியாயமான விலையில் உள்ளது. தவிர வெளியே பலகையில் “நாங்கள் லாபமுமின்றி, நஷ்டமுமின்றி இச்சேவையை உங்களுக்களிக்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய சேவையது.

> கட்ராவிலும், வைஷ்ணு தேவி மலையிலும் அரசாங்கத்தின் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் இருப்பது சிறப்பு. தரமான சேவை, நியாயமான கட்டணத்தால் பயணிகளைக் கவர்கின்றனர்.

> பால்கியையும், குதிரையையும் அதிகம் உபயோகப்படுத்துபவர்கள் தென்னிந்தியர்களாக உள்ளனர். தென்னிந்தியர்களில் அதிகம் ஆந்திர மக்களைக் காண முடிந்தது. மொத்தக் கூட்டத்தில் அதிகம் பஞ்சாபிகளிருந்தனர். ஜம்மு பஞ்சாபிற்கு அருகிலிருப்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம்.

> வைஷ்ணு தேவி மலைக்கு அக்பர் நடந்து வந்து சென்றுள்ளதாகவும், தங்கக் குடையைக் கோவிலுக்கு அளித்ததாகவும் வரலாறு சொல்கிறது.

> வித்தியாசமான அனுபவத்திற்கும், நிறைவான விடுமுறைக்கும் வைஷ்ணு தேவி அவசியம் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்.

55 comments:

http://rkguru.blogspot.com/ said...

நல்ல ஆன்மிக பதிவு....வாழ்த்துகள்

தராசு said...

சூப்பர். அருமையான ஃப்ளோ. இன்னும் நிறைய எழுதாம விட்டுட்டீங்க. பாதி வழில ஏற சோம்பேறித்தனப் பட்டுட்டு, நான் வரமாட்டேன்னு சண்டித்தனம் பண்ணி யோகி கிட்ட அடி வாங்குனது, அப்புறம் கோவில்ல போய் எனக்கு பலூன் வாங்கிக் குடுன்னு அடம் பிடிச்சது, இதையெல்லாம் எழுதலையே.....

trdhasan said...

சொல்லவே இல்ல!

கார்க்கிபவா said...

தராசு கமெண்ட்.. ஹிஹிஹி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உடைந்த தூக்கத்துடனும், குத்தியக் கண்ணாடித் துண்டுகளுடனும்//
வருத்ததோடு அட போடவைக்கிறது வரி..
நல்ல இடம் . திருப்பதியைப்போலவே மாதா எப்ப அழைப்பாளோ அப்பத்தான் பாக்கியம் ந்னு சொல்றாங்க..

என் அப்பாவும் மகளும் அடிக்கடி ஜெய் மாதா தி சொல்வாங்க.. :)

Ganesan said...

அருமையான பயண கட்டுரை விக்கி.

வைஷ்ணவி தேவி யோகிக்கு கிடைக்கட்டும்.

RAMYA said...

படிக்க ரொம்ப திரில்லிங்காக இருந்தது விக்கி, உங்களின் விளக்கம் நேரே பார்த்தது போல மனதினில் திருப்தி கிடைத்தது.

அந்த இடத்திற்கு செல்லஆசையாக இருக்கிறது என்னால் செல்ல இயலுமா? அந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா?

ஈரோடு கதிர் said...

||இதுக்கா இவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்தோம்||

பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் தோன்றும் வரி

R. Gopi said...

மிக அருமையான பதிவு. நானும் நீண்ட நாட்களாகச் ​​செல்ல நினைத்துக் ​​கொண்டிருக்கிறேன். ​வேளை இன்னும் வரவில்லை.

ஆர்.கோபி,​பெங்களூரு

Unknown said...

நல்ல பதிவு. நண்பர்கள் எல்லோரும் பொய் வந்தனர். நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. பால்கி, குதிரை மட்டுமல்லாமல் சிறு விமான சேவையும் இருக்கிறது.

Chitra said...

அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு.

சுசி said...

நல்லவேளை.. கண்ணாடி குத்தினதோட போச்சு..

யோகிக்காகன்னாலும் நீங்க போய் வந்ததாலதான் எங்களுக்கும் படிச்சு தெரிஞ்சுக்கிற பாக்கியம் கிடைச்சுது.

பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

காணோமேன்னு நினைச்சேன் :))

'பரிவை' சே.குமார் said...

அருமையான படங்களுடன் நல்ல பயண கட்டுரை.

மணிநரேன் said...

அங்கு செல்லவேண்டுமென்ற ஆவலை அதிகப்படுத்திய பயண கட்டுரை.

Madumitha said...

ரொம்ப நாள் கனவு எனக்கு.
உங்களுக்கு வாய்த்துள்ளது.
மேலும் மேலும்
ஆவலைத் தூண்டுகிறது.
மிக்க நன்றி.

ஸ்ரீ.... said...

படங்களும், தகவல்களும் அழகு. இன்னும் படங்களை இணைத்திருக்கலாம்!

ஸ்ரீ....

janaki said...

இரண்டு கிலோ குறைந்திருந்தது//////// 2 kilova haiyayo........

janaki said...

இரண்டு கிலோ குறைந்திருந்தது//////// 2 kilova haiyayo........

வெங்கட் நாகராஜ் said...

ஜெய் மாதா தி! நான் இரண்டு முறை சென்று இருக்கிறேன் வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு. நல்லதொரு பயணக்கட்டுரை. தேவி கோவில் பார்த்த பிறகு அதற்கு மேலே இருக்கும் ”பைரவ் மந்திர்” என்ற இடத்திற்கும் சென்று இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

KaRa said...

வைஷ்ணு தேவி கோவிலை பற்றி ஒரு கருத்து உண்டு, உங்களுக்கு எப்பொழுது இங்க வரவேண்டும் என்று விதிக்கபட்டிருகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் செல்ல முடியும்

r.v.saravanan said...

அருமை படங்களுடன் நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி.

Pattu & Kuttu said...

enjoyed reading..pl send/post more travel blogs/experiences..

VS Balajee

அமுதா கிருஷ்ணா said...

நான் மார்ச்சில் ஒரு முறையும், மே மாதத்தில் இன்னொரு முறையும் இந்த வருடமே இரண்டு முறை போய் வந்தேன்.முதல் முறை போன போது ஒரு இரவு அங்கு தங்கி வந்தோம்.இரண்டாவது முறை போன போது மாலை மலை ஏற ஆரம்பித்து இரவு 9 மணிக்கு தரிசனம் முடித்து இரவு 3 மணிக்கு காட்ரா திரும்பினோம். பாதிவழி நடை, மீதி குதிரை..மறு நாள் யாரும் யார் கூடவும் பேச முடியவில்லை அவ்வளவு டய்ர்டாகி போனோம்

அமுதா கிருஷ்ணா said...

மார்ச்சில் சென்ற போது பைரவ் மந்திரும் சென்றேன்.ஏறும் போது குதிரையில் செல்வது நன்றாக உள்ளது. இறங்கும் போது சொல்வதற்கில்லை..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்ல பயண கட்டுரை!!!
பட், தராசு சொன்னமாதிரி நிறையா எடிட் செஞ்சுடீங்க போல
:-)

அன்பேசிவம் said...

//எது எப்படியோ, இறங்கியதும் உடல் எடை பார்த்தேன். இரண்டு கிலோ குறைந்திருந்தது//

அப்டியா...? அப்ப இன்னொரு ரெண்டு மூணு தடவை போயிட்டு வாங்க விக்கி. :-))
எல்லாம் வயித்தெரிச்சல கொட்டிக்கவே இப்படி ஊர் ஊரா சுத்தி, பயணக் கட்டுரை எழுதுறிங்க.. ம்ம் ரைட்டு

Anonymous said...

நல்ல பயணக்கட்டுரை விக்கி.
நானும் திருப்பதிக்கு போனதே இல்லை

சிவகுமார் said...

Devi tharisanam nalla iruthathu , one time gone tirupathi.

Anbu said...

கார்க்கி கமெண்ட்.. ஹிஹிஹி

:-))

ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல விவரிப்பு... அற்புதமான கட்டுரை.

சக்தி பீடத்தை தரிசித்த அனுபம் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறீர்கள்.

sakthi said...

அருமையான பகிர்வு விக்கி

ஜோசப் பால்ராஜ் said...

திருப்பதி போயிருக்கேன் விக்கி. வைஷ்ணவ தேவி கோயில் பத்தி சிங்கை சக பதிவர் வெற்றிக் கதிரவன் சொல்லிருக்கார். போலாம்னு ஒரு திட்டம் இருக்கு. நல்லா எழுதியிருந்திங்க.

Thamira said...

ஏறி இறங்கியதை டெரராக பதிவு செய்துவிட்டு நீங்களும் போய்ட்டு வாங்களேன்வா? என்ன கிண்டலா.? :-)

துளசி கோபால் said...

வைஷ்ணவோ தேவி பயணம் அருமைப்பா. ரொம்ப ஆசைப்பட்ட பயணம் அது. என்னால் போக முடியாது. உடல்நிலை இடம் கொடுக்காது தற்சமயம். உங்கள் இடுகை மூலமாக தரிசனம் செஞ்சுக்கிட்டேன். நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

நல்லா எழுதியிருக்கீங்கப்பா.. ரங்க்ஸ் போயிட்டுவந்துட்டார்.. எனக்குத்தான் எப்போ கொடுத்துவெச்சிருக்கோ!!!

Priya said...

எப்படியோ இரண்டு கிலோ குறைந்துவிட்டது:)

//அதுவும் கடவுள் பெயர் சொல்லி மனிதம் மறந்த கூட்டம். //... எனக்கும் கூட சில சமயம் இப்படிதான் தோணும்.

நல்ல அனுபவம்தான்.

ReeR said...

அனுபவ பயணத்தை அழகா எழுதியிருக்கீங்க....

இவன்

படுகை.காம்

சுசி said...
This comment has been removed by a blog administrator.
சி.பி.செந்தில்குமார் said...

இதுவரை நான் போனதில்லை. பிதுங்கும் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் பக்தியும், நேரம் கொன்று நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொறுமையும் எனக்கில்லை என்பதே காரணம்-

ரொம்ப கரெக்ட்.
நல்ல பதிவு.சரளமான நடை

Vijayashankar said...

ரொம்ப அருமையா எழுதுறீங்க. நல்லா இருந்தது. தரிசனம் பார்த்த மகிழ்வு. ஒரு செகண்ட் தான் வாழ்கையில் எல்லாம் நடக்கும்....

கோவில் சென்று வர, காரில் பயணம் செய்ய முடியாதா?

ஹெலிகாப்டர் வசதி உண்டு என்று சொன்னார்களே?

ஜம்மு கேஷ்மிர் நிலைமை மோசம் என்று டிவியில் செய்திகள் வந்தாலும், இங்கு அந்த பிரச்சனை இல்லையா?

Vijayashankar said...

திருப்தியில் காசு கொள்ளையடிப்பது மாதிரி இங்கு இல்லை என்பதால் மகிழ்ச்சி.

அங்கு மேலேயே தங்குராங்களா?

Keezhappatti said...

எமக்கு போய்வந்த அனுபவம் உண்டாயிற்று...........நல்ல புகைப்படங்களுடன்.........."வைஷ்ணு தேவியை தரிசித்தாயிற்று.....

விக்னேஷ்வரி said...

நன்றி rk guru.

நன்றி தராசு. ஹிஹிஹி...

ஆமா டி.ஆர்.தாசன், திடீர் ட்ரிப்.

வாங்க கார்க்கி. ஃபோட்டோல ஏன் முறைச்சுக்கிட்டிருக்கீங்க...

நன்றி முத்துலெட்சுமி அக்கா. ஆமா, நானும் இப்படிப் பல பேர் சொல்லிக் கேள்விப்பட்டேன். ஓ, நல்ல பழக்கம் பொண்ணுக்கு.

நன்றி காவேரி கணேஷ். :)

விக்னேஷ்வரி said...

நன்றி ரம்யா. கண்டிப்பா போகலாம் ரம்யா. ஹெலிகாப்டர் வசதி இருக்கு. ஆனா கோடைக்காலத்தில் ப்ளான் பண்ணுங்க. மூடுபனியிருந்தால் ஹெலிகாப்டர் ரத்து செய்யப்படுகிறது.

ஆமா கதிர்.

நன்றி கோபி. வேளை தானாக அமையும். திடீர்ன்னு ஒரு முறை போவீங்க பாருங்க.

நன்றி கலாநேசன். சீக்கிரமே ஒரு ட்ரிப் அடிங்க. நல்லாருக்கு. ஆமாங்க, அது விமானமில்லை. ஹெலிகாப்டர் வசதி. நாங்க போனப்போ பனி அதிகமா இருந்ததால ரத்து பண்ணிட்டாங்க.

நன்றி சித்ரா.

ஆமா சுசி, ஒண்ணும் அதிக சேதமில்லை :)

விக்னேஷ்வரி said...

தேடினதுக்கு நன்றி விஜி. :)

நன்றி குமார்.

நன்றி மணிநரேன். சீக்கிரம் போய் வாங்க.

நன்றி மதுமிதா. உங்கள் கனவு விரைவில் நிறைவேறட்டும்.

நன்றி ஸ்ரீ. அடுத்த முறை கட்டுரை எழுதுகையில் படங்களை இன்னும் அதிகம் சேர்க்கிறேன்.

ஆமா ஜானகி, ஆனா நடந்து போய் வர்றது ரொம்பக் கஷ்டம்.

விக்னேஷ்வரி said...

ஜெய் மாதா தி வெங்கட். பைரவ் மந்திர் போக எங்களுக்கும் ஆசை தான். ஆனால் சுத்தமா முடியல.

ஆமா KaRa. சமய் வரும் போது தானா போவோம்ன்னு சொல்வாங்க.

நன்றி சரவணன்.

நன்றி VS பாலாஜி.

ஓ, சூப்பர் அமுதா. நல்ல அனுபவம். ஆமாங்க, கொடும் பயணக் களைப்பு.

நாங்கள் இருந்த களைப்பில் பைரவ் மந்திர் செல்ல முடியவில்லை. நான் குதிரையில் ஏறினதும் அலறி அழ ஆரம்பிச்சுட்டேன் அமுதா. ஹிஹிஹி...

விக்னேஷ்வரி said...

நன்றி பாலகுமாரன். நீங்களுமா... ரைட்டு, நடத்துங்க.

முரளி, ரெண்டு மூனு தடவை போறதுக்கு அது என்ன எங்க வீட்டு பால்கனிலயா இருக்கு. ஒரு முறை போய்ப் பாருங்க. கஷ்டம் தெரியும். சீக்கிரம் நீங்களும் ஒரு பயணக் கட்டுரை போடுங்க, கண்ணுக்கு இதமான புகைப்படங்களுடன்.

நன்றி அம்மணி. ஹையா, ரெண்டு பேரும் இதுல ஒத்துப் போறோமே...

நன்றி சிவகுமார். நானும் ஒரு முறையாவது திருப்பதி போகணும்.

வாங்க அன்பு.

விக்னேஷ்வரி said...

நன்றி ஸ்வாமி ஓம்கார்.

நன்றி சக்தி.

ஓ, அவசியம் நண்பர்களோட போங்க ஜோ. செம ஜாலியா இருக்கும்.

கிண்டலெல்லாம் இல்லை ஆதி. ரமா டயர்டாகி அன்னிக்காச்சும் உங்களைத் திட்டாம தூங்கிடுவாங்க. ;)

நன்றி துளசி கோபால். முடியும் போது அவசியம் போய் வாங்க.

நன்றி அமைதிச்சாரல். நீங்களும் சீக்கிரம் போகலாம்.

விக்னேஷ்வரி said...

ஆமா ப்ரியா, ரெண்டு நாள்ல ரெண்டுகிலோ என் வாழ்நாள் சாதனை. :)

நன்றி படுகை.காம்

ஹாய் சுசி, ஓ மெயில்லயா... இதோ வரேன்.

நன்றி செந்தில்குமார்.

நன்றி விஜயஷங்கர். இல்லைங்க, அங்கே எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. நடைப்பயணம் தான். முடியாதுன்னா குதிரை, பால்கி அல்லது ஹெலிகாப்டர். ஹெலிகாப்டரை முழுக்க நம்ப முடியாது. பனி அதிகமா இருந்தா சேவையை நிறுத்திடறாங்க. நாங்க போனப்போ ஹெலிகாப்டர் சேவை நிறுத்திருந்தாங்க.

பிரச்சனை காஷ்மீர்ல தாங்க இருக்கு. இது ஜம்முல இருக்கறதுனால பாதுகாப்பா தான் இருக்கு. தவிர ஒரு மீட்டருக்கு ஒரு போலீஸ் இருக்காங்க. ரொம்ப நல்ல பாதுகாப்பு கோவிலுக்கு.

ஆமாங்க, மேலேயே அரசு தங்கும் விடுதிகள் இருக்கு. ஆனா ஒரு மாசத்துக்கு முன்னாடியே முன்பதிவு செஞ்சிடணும். 24 மணி நேரமும் அங்கு சென்று சேரலாம். ஒரு நாள் கணக்குன்னு இல்லாம குறைந்தது 4 மணி நேரக் கணக்குல கூட அறைகள் தர்றாங்க.

நன்றி கிருஷ்ணன்.

சாமக்கோடங்கி said...

//திருப்பதி - அனைவரும் அவசியம் செல்ல வேண்டிய இடம் என சொல்லியும் இதுவரை நான் போனதில்லை. பிதுங்கும் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் பக்தியும், நேரம் கொன்று நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொறுமையும் எனக்கில்லை என்பதே காரணம். //
//எனக்கு எப்போதும் ஆகாதது கூட்டம். அதுவும் கடவுள் பெயர் சொல்லி மனிதம் மறந்த கூட்டம். வரிசையின் பின்னாலிருந்து சக மனிதனை ஏமாற்றி முந்திச் செல்லும் கூட்டத்தைப் பார்க்கையில் பொங்கி வந்தது கோபம். ஒருவர் மட்டுமே செல்ல முடிந்த ஒரு படிக்கட்டில் இறங்கும் பொழுது கடைசி படிக்கு முந்திய படியை அடைகையில் “கொஞ்சம் நின்னு வாப்பா” எனச் சொல்லிக் கேட்காத ஒருவனின் நெஞ்சைப் பிடித்துத் தள்ளுகையில் “நீயெல்லாம் எதுக்குடா கோவிலுக்கு வர்ற”ன்னு கேட்க நினைத்து நிராகரித்தேன்.
//
என் மன உணர்வுகளைக் கண்ணாடி கொண்டு பார்த்தது போல் இருந்தது...

வாழ்த்துக்கள்..

மங்குனி அமைச்சர் said...

நல்ல விஷயம்

Unknown said...

அருமையான ஒரு இடம்...நாங்கள் சென்ற வருடம் போய் வந்தொம். எங்கள் பயணம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கத்ராவிலிருந்து ஆரம்பம் ஆனது. நள்ளிரவு ஒரு மணிக்கு கோயிலை அடைந்தோம். இரண்டு மணிக்கு தரிசனம் முடிந்து, ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு மீண்டும் கத்ராவை அடைந்தோம்.... பயணம் முழுவதும் நடந்தே சென்றோம்...அவ்வளவு இனிமையான பயணமாக முடிந்தது...

priya.r said...

சென்ற வாரத்தில் சன் தொலைகாட்சியில் யமுனாதேவி யாத்திரையை ஒளிபரப்பினார்கள் .
பார்க்கும் போது உங்கள் பயண கட்டுரையின் நினைவு வந்தது.
நல்ல பதிவு .

commomeega said...

பயனுள்ள,பயண கட்டுரை.