Tuesday, February 24, 2009

காதலர் தின கூத்துக்கள்இதுவரை காதலர் தினம், கொண்டாடும் அளவுக்கு சிறப்பு தினமாக இருந்ததில்லை எனக்கு. கல்லூரி நாட்களில் அதைப் பற்றிய ஆர்வமோ, ஆசையோ இருந்ததில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் குறைந்தது 2-3 ப்ரோபோசல்கள் வந்ததுண்டு. அப்போதெல்லாம் காதல் என்றாலே ஏதோ பெரிய தவறு என்கின்ற உணர்வு. இப்படியே வேலைக்கு வரும் வரை காதல் மேலோ, காதலர் தினத்தின் மேலோ பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் இல்லை.

எங்களது திருமணம் காதல் திருமணம். திருமணத்திற்கு முன்பு வந்த இரு காதலர் தினத்திற்கும் நாங்கள் பார்த்தது கூட இல்லை. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் நாங்கள் எங்கள் வேலையில் மூழ்கியிருந்தோம். வழக்கம் போல் காலையில் ஒரு ஹாய். இரவு "Hi, How was the day. Hope things are fine at your end. Ok, bye" . அவ்வளவு தான். என்னவோ, ஒரு " I love you" கூட சொல்லிக் கொள்ள தோன்றவில்லை.

இந்த வருட காதலர் தினம் எங்களது திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினம். இந்த முறை நாங்கள் பெங்களூரில் இருந்ததால், மாலை இருவரும் Noodle Bar Restaurant, Ulsoor சென்றிருந்தோம். நாங்கள் போனது என்னவோ, நல்ல சாப்பாடு சாப்பிட்டு, அலுவலக வேலைகளை மறந்து, பேசலாம் என நினைத்து. ஆனால், அங்கு நடந்த கூத்து வேறு.

போனதும் ஒரு சிவப்பு உடை அணிந்த அரை நிர்வாணப் பெண் எங்களை வரவேற்றார். அவர் அங்கு பார்ட்டிக்கு வந்த பெண்களில் ஒருவர் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின் தான் தெரிந்தது, அவர் அந்த ஹோட்டலின் பணிப்பெண் என்பது. உள்ளே நல்ல அலங்காரம். அழகான டேபிள். அதன் நடுவே ஒரு மெழுகுவர்த்தி. மனதைக் கொள்ளை கொள்ளும் நெடியில்லாத மணம். மெல்லிய இசை என்று ரம்மியமான சூழல்.

அடடா..... "What a situation" என நினைத்த பத்தாவது நிமிடம் ஆரம்பமானது, காதைக் கிழிக்கும் இசை. அங்கு கூடியிருந்த காதலர்களில் பல பேர் எழுந்து ஆடலானார்கள். ஆரம்பித்த போது நன்றாக தான் இருந்தது. அங்கிருந்த DJ குழுவினரில் ஒருவர் வந்து எங்களுக்கு இதய வடிவ பலூன் கொடுத்து ஆட வரவேற்றார். DJ மற்றும் Dance நடந்து கொண்டிருந்த ஹாலுக்குள் நுழைந்தோம். அங்கிருந்த DJ நண்பர் காதலர்களை தங்கள் நெற்றியின் நடுவே அந்த பலூனை வைத்து ஆடுமாறு அழைத்தார். முதலில் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், நெற்றியிலிருந்த பலூன் மூக்கு, உதடு, கழுத்து.... என இறங்கி காதலர்களை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த என்னவர், "இங்கே வேணாம். வா கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்" என என்னை அந்த ஹாலை விட்டு வெளியே அழைத்து வந்தார்.

இரண்டு நேபாள சிறுவர்கள் தட்டில் சைவ மற்றும் அசைவ ஸ்நாக்ஸ்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். அதைக் கொறித்துக் கொண்டே, ஏன் திருமணத்திற்கு முன்பே எங்களுக்கு காதலர் தினம் கொண்டாட தோன்றவில்லை எனப் பேச ஆரம்பித்து, இந்த வருட டூர் ப்ளான்களை அடுக்கிக் கொண்டிருந்தோம். என்னவர் வட நாட்டுக்காரர் என்பதால், அவருக்கு கேரளா, மதுரை, சென்னை, ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி போன்ற இடங்களுக்கு போக வேண்டும் என்பது ஆசை. எனக்கு குளு, மணாலி, வைஷ்ணுதேவி, சிம்லா, ஜம்மு, ராஜஸ்தான் சுற்ற ஆசை. சரி, இருவரின் விருப்பப்படியும் இந்த ஆண்டு ஊர் சுற்றும் ஆண்டாக முடிவு செய்யப்பட்டது.

பேசிக் கொண்டிருந்த நேரத்தில், உள்ளிருந்து "Mauja hi mauja from Jab we met" பாடல் கேட்கவே, எனக்கு ஆட வேண்டும் போல் தோன்ற, அவரிடம் கேட்டேன். சரி என்று உள்ளே சென்று அந்த பாடலுக்கான ஆட்டத்தை போட்டுவிட்டு, அடுத்ததாய் "அப்படி போடு" பாடலுக்கு மற்றவர் ஆடுவதையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைப் போல் இன்னும் மூன்று திருமணமானவர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு ஜோடி, பயங்கர குஷியாக ஆடிக் கொண்டிருந்தனர். மற்றொரு ஜோடியில் அந்த பெண் மட்டும் ஆடிக் கொண்டும், கணவர் கம்பெனிக்காக குதித்துக் கொண்டும் இருந்தார். மற்றொரு தம்பதியினரில், கணவர் Barcade ஐ ருசித்துக் கொண்டும், மனைவி அனைவரின் ஆடல்களையும் ரசித்துக் கொண்டும் இருந்தனர்.

இதற்கு நடுவே "கடந்த ஒரு மணி நேரமாய் பலூனை எடுக்காமல் நடனமாடியவர்கள் என ஒரு ஜோடிக்கு பரிசும், Best party wear என மிகக் குறைந்த ஆடைகளே அணிந்திருந்த ஒரு பெண்ணுக்குப் பரிசும் அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்காரியாகிய நான் என்னவரிடம், "பொண்ணுங்க எப்படி இப்படியெல்லாம் டிரஸ் பண்றாங்க. வீட்ல அம்மா, அப்பா திட்ட மாட்டாங்களா" எனக் கேட்க, அவர் வழக்கம் போல், "You, my village girl" என்ற டையலாகுடன் "அவங்க அம்மாவே அப்படி டிரஸ் பண்ணிட்டு போறப்போ, பொண்ண என்ன சொல்வாங்க" என்று சொல்ல, அம்மாவுமா..... என்றேன்.

"சரி, பசிக்குது. வா சாப்பிடலாம்" என அழைத்தார். சரி என சாப்பிட போன போது தான் ஏமாற்றமே. பார்க்க அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவுகள் அனைத்தும், சுவையில் மைனஸ் மார்க் வாங்கின. Cream of Tomato soup வைத்திருந்தார்கள். அதை எடுத்து சுவைத்தால், உப்பு மிக அதிகமாய், வாயில் வைக்க முடியவில்லை. பின், அதற்கடுத்ததாய் இருந்த பட்டர் நானை பாதி எடுத்துக் கொண்டு, பட்டர் பனீர் மற்றும் யெல்லோ தாலையும், கொஞ்சமாய் சாதத்தையும் எடுத்துக் கொண்டு போய் ஒரு ஓரத்து டேபிளில் அமர்ந்தோம்.

சாப்பிட முடிந்தவற்றைக் கஷ்டப்பட்டு முடித்த எங்களுக்கு, வேறு என்ன அயிட்டங்கள் இருக்கிறது என்று கூட பார்க்க தோன்றவில்லை. அப்படி இருந்தது, ஏற்கனவே சாப்பிட்ட உணவின் சுவை. பின், என்னவர் எனக்காக ரெண்டு ஸ்பூன் தயிர் சாதம் கொண்டு வந்து குடுத்தார். அந்த டின்னரில் அவருக்கு பிடித்திருந்தது அந்த தயிர் சாதம் மட்டுமே. எப்போதும் என்னை தயிர் சாதம் என்று சொல்லும் அவரை, அன்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியாக, பாவப்பட்ட குலப் ஜாமூனும், வெனிலா ஐஸ் கிரீமும் இருந்தன. அதைப் பார்த்து முறைத்து விட்டு, மீண்டும் ரெஸ்டாரண்டிலேயே அமர்ந்தோம். அப்போதும் அந்த நேபாள சிறுவர்கள், ஸ்நாக்ஸை நீட்டினர். ஆனால், அதை எடுக்க யாரும் தயாராக இல்லை. பின், அனைத்து ஜோடிகளுக்கும் ஒரு சிவப்பு ரோஜா மொட்டு கொடுக்கப்பட்டது. அன்றைய நாளில், அது காஸ்ட்லி கிப்ட் தான். அதை வாங்கிக் கொண்டு, இதற்கு மேல் இங்கிருந்தால், இன்னும் இதை வைத்து அடுத்த கேம் ஆரம்பித்து விடுவார்கள், அந்த கருமத்தையும் பார்க்க வேண்டாம் என கிளம்பினோம்.

ஒரு ரொமான்டிக் டின்னர்க்கு போய் அது கடைசியில், டெர்ரிபிக் டின்னராக முடிந்தது. அந்த இரவு, பெண்கள் கேட்ட சம உரிமை, விடுதலை எல்லாம் இப்படி அரைகுறை ஆடையில் அலையத்தானா என்ற சிந்தனையிலேயே தூங்கிப் போனேன். என்ன கலாச்சாரமோ
.

14 comments:

trdhasan said...

இங்கே பார்ட்டிகளுக்கும், குத்தாட்டாத்துக்கும் செல்ல நேரம் இருக்கும் காதலர்களுக்கு தங்கள் கருத்துக்களை மனவிட்டு பேச நேரம் இருப்பதில்லை.

காதலர்தினம் இங்கே காவாலித்தனமாகத்தான் கொண்டாடப்படுகிறது.

இங்கே கொண்டாடத்தினங்களில் சுற்றி திரியும் காதலர்களில் (காதலர்கள் என்று சொல்ல கூச்சமாகத்தான் இருகிறது) எத்தனை பேர் பெற்றோருக்கு தெரிந்து வந்திருப்பார்கள்.

பெற்றோரை விட்டு தள்ளுங்கள் எத்தனை பேர் சுயநினைவோடு இருந்திருக்கக்கூடும். அவன் வேலை அவனுக்கும், அவள் வேலை அவளுக்கும் நடந்துகொண்டிருக்கும்.

காதலர்தினம் என்பதை விட இன்று அது உடல் ஈர்ப்பு தினமாக அது மாறிவிட்டது.

இங்கே எத்தனை பேருக்கு நான் காதலிக்கறேன் என்று சொல்ல தைரியம் இருக்கிறது.

Raja Manickam said...

Vigneshwari..
Writing on your Valentine's Day celebrations was very nice..
Indeed you had a Terrific Day...
keep writing..
Raja

விக்னேஷ்வரி said...

இங்கே பார்ட்டிகளுக்கும், குத்தாட்டாத்துக்கும் செல்ல நேரம் இருக்கும் காதலர்களுக்கு தங்கள் கருத்துக்களை மனவிட்டு பேச நேரம் இருப்பதில்லை. //

உண்மை தான், அதனால் தான் பெரும்பாலான காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.

விக்னேஷ்வரி said...

Vigneshwari..
Writing on your Valentine's Day celebrations was very nice..
Indeed you had a Terrific Day...
keep writing..
Raja //

Thank you Raja.

Nilavan said...

// பெண்கள் கேட்ட சம உரிமை, விடுதலை எல்லாம் இப்படி அரைகுறை ஆடையில் அலையத்தானா என்ற சிந்தனையிலேயே //


ஒவ்வொரு பெண்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒன்று.. தாங்களை கவர்ச்சிப் பொருளாகவே கடுகளவும் கூச்சமின்றி பெண்ணுரிமை பேசும் பெண்களை சிந்திக்க உங்களின் அனுபவம் உதவும்..

வாழ்க தமிழுடன்,
நிலவன்

http://eerththathil.blogspot.com

deesuresh said...

விக்கி, உனது அனுபவம் அழகான வடிவில் எழுத்துக்களாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

காதலர் தினத்தன்று நடக்கும் கூத்துக்கள் இந்த வருடம் சற்றுக் குறைந்திருந்தன என்று சொல்லலாம்.

விக்னேஷ்வரி said...

நன்றி நிலவன்.

விக்னேஷ்வரி said...

நன்றி சுரேஷ் அண்ணா. இந்த வருடம் குறையவில்லை. காவலர்களின் பாதுகாப்போடு நன்றாகவே நடந்துள்ளது.

Purush said...

Thangachi naan Sivakasi kaaran. Eppadima irukka? very nice post. keep it up. Take Care.

விக்னேஷ்வரி said...

சிவகாசியா.... நல்லது புருஷோத்தமன் அண்ணா... :)

CHANDRA said...

// சகோதரி, மிக சத்தியமான வார்த்தைகள். பெண் தனக்கு கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன் படுத்தி,, Living together with out marriage என சென்றால் முடிவில் வாழ்க்கையயும், மன நிம்மதியையும் இழப்பது உறுதி.

நமது கலாச்சாரத்தை பின் பற்றி ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை பின் பற்றி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதுதான் உசிதம்.

Unknown said...

Nicely written.. Keep going...

Wishes
"Srivilliputtur"karan

விக்னேஷ்வரி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திரா.

Thank you Rajkumar.

தமிழன் சுந்தரா said...

பாவப்பட்ட குலப் ஜாமூனும், வெனிலா ஐஸ் கிரீமும் இருந்தன. அதைப் பார்த்து முறைத்து விட்டு///

hahaha

சிரிக்காம இருக்க முடியல, ஐயோ பாவம்:(