Tuesday, October 12, 2010

மழை மரப் பறவைகள்

அன்றைய நாளின் அத்துணை இறுக்கத்தையும் நெகிழ்த்துவதாய் ஜன்னல் வழி பூமிக்கு நிழல் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது ஆகாயத்தின் துளிகள். மழை! மருதாணி கழுவிய உள்ளங்கையாய் பளிச்சென புதுசாக்கிக் கொண்டிருந்தது பெருங்குரலில்.

கூரையால் பாதுகாக்கப்பட்ட மாடித் தளத்திலிருந்து மழையைப் பார்ப்பது கொஞ்சம் பொறாமையாகத் தானிருந்தது. கீழே உற்றுப் பார்க்கும் தூரத்தில் செடியருகே ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு மரவட்டை. நீரைப் போலவே கரை புரளும் தாறுமாறான சிந்தனைகள். அலுமினியப் பாத்திரங்கள் வைத்துத் தொட்டி நிறைத்துத் தருவதாய் போலி சொற்களால் அனுமதி பெற்று, நீரூற்றாய்ப் பெருகி வரும் தற்காலிக மழையருவியில் ஆடிய ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து வரும் ஒரு ஜோடி விடுமுறை நாட்களும் நினைவில் வந்து போயின. மழையை ரசித்துத் தொடர்ந்த உரையாடல்கள், பெரு மழை நாளில் தொடர்ந்தொலித்த வானொலி மழைப்பாடல்கள், குடையையும், ரெய்ன் கோட்டையும் வேண்டுமென்றே மறந்து வைத்து விடும் குறும்பு நாட்களென ஒவ்வொரு மழை நாளும் நினைவுகளில் ஆர்ப்பாட்டமானது.

பல வருடப் பின்னோக்கிய சிந்தனைகளிலிருந்து இருந்த நிமிடத்திற்கழைத்து வந்தது மழையின் காரணமாய்க் கேட்காமலே வந்த ப்ளாக் காஃபி. மழை ஒரு ரசனையெனில் கையில் புகையெழும்பும் காஃபிக் கோப்பை அதனினும் ரசனை. கண் மூடி மழை சத்தத்தை செவிகளுக்களித்து உதடுகளுடன் ஒண்டவிருக்கும் காஃபிக் கோப்பை அதற்கும் முன்னால் தன் வாசத்தை நாசிக்குள் இழுத்து செல்வதென நொடிப் பொழுது சுகம். காஃபிக் கோப்பையைக் காலி செய்த நேரம் மழை விட்டு சேய்த்தூறல் மிச்சமிருந்தது. தனியே விளையாடும் குழந்தை பார்ப்பவர்களையெல்லாம் விளையாட உடனழைப்பதைப் போல் என் மேலும் விழுந்தழைத்தது அத்தூறல்.

அதியுற்சாகமாக உடை மாற்றிக் கிளம்பினேன். தெரியா ஊரில் தொலைந்து விட்டால் திரும்பி வர கையில் கைபேசியும், பாக்கெட்டில் சில நூறுகளையும் திணித்துக் கொண்டேன். எங்கே போகிறேனெனத் தெரியாது. தெரிந்து போகும் பயணங்களை விட இலக்கில்லாப் பயணங்கள் சுவாரசியமெனக் கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அனுபவித்து மகிழ ஆயத்தமாகிவிட்டேன். உடன் யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை. நிலா வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கும் மாலை.

வழியெங்கும் சகதி. திரும்பிவிடலாமா? கருமேக முகடுகளைப் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்த வேளை, தெருவோரக் கல்லிலிருந்து எதிரேயிருந்த தண்ணீர்த் தேங்கலை நோக்கிக் குதித்தது தவளையொன்று. பறவையின் சிலும்பலிலிருந்து தெளித்த நீர் விழுந்து தலை தாழ்ந்தது அருகிலிருந்த செடியின் இலை. தெரிந்தவனைத்து ராகங்களையும் ஒலித்துக் கொண்டிருந்தன மழை ஈசல்கள். இவற்றின் துணையுடன் நடப்பது பரமசாத்தியமானதாக இருந்தது.

மணல் வழியெங்கும் மழை விட்டுச் சென்ற காகிதக் கப்பலுக்கான சிறு குளங்கள். எதிர் வரும் வாகனங்களில் பட்டுத் தெறிக்கும் தண்ணீர்த் துளிகளில் மின்கம்பங்களின் ஒளி பட்டு மிளிரும் தங்கத் துளிகள், புது முக மனிதர்கள், புரியாத பாஷை, திக்குக்கொன்றாய் பல இனங்களின் இரவுக் கூச்சலென பரவச உணர்வுகள் பூத்துச் சொரிந்திருந்த நேரம். எல்லாம் நல்லதாய் நடப்பதாகவே ஒரு தோணல்.

நடந்து நடந்து எங்கு சென்றேனெனத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு கடை தெரிந்தது. காஃபி ஷாப்பாக இருக்கலாம். நெருங்கிப் பார்க்கையில் தான் தெரிந்தது பேஸ்ட்ரி ஷாப்பென. எதையோ யோசித்துக் கொண்டே “ஒரு ப்ளாக்பெரி” என்றேன். அழகாய் சிரித்தவன், “ப்ளாக்ஃபாரஸ்ட்?” என்றான். ஒரு கண் மூடி நா கடித்து “யெஸ்” என்றேன். கையில் பேஸ்ட்ரியுடன் மேஜை தேடி அமர்கையில் பக்கமிருந்த மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி.

மறுபடி பிடித்துக் கொண்டது மழை. பெருமழை. அறைக்குப் போய்ச் சேரும் வழியை மறந்து விட்டேன். வெளியில் கடந்த ஆட்டோவை அழைத்து விலாசம் சொல்லி சென்றடைந்ததும் எவ்வளவெனக் கேட்க, மிகப் பரிதாபமாய் 12 ரூபாய் எனக் காட்டிய மீட்டர் பார்த்து “பந்த்ரா ருப்யா தீஜியே மேடம்” என்றார் ஆட்டோ ஓட்டுனர். அதிசயமாயிருந்தது. 1 கிமீக்கு பதினைந்து ரூபாய், அதுவும் கொட்டும் மழையில். தவிர அதைக் கேட்ட விதம் மிக பவ்யமாயிருந்தது.

ஒரு மணி நேரம் எனக்கே எனக்காய் விருப்பமாய் செலவழித்து அறை நோக்கி நடக்கையில் துடைத்து சுத்தமாக்கப்பட்ட விஸ்தார வெளியில் பறந்து கொண்டிருந்தது மனது. “பறவையின் சிறகு வாடகைக்கு கிடைத்தால் உடலுக்குள் பொருத்தி பறந்து விடு” தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

36 comments:

Priya said...

ரசனையான‌ நிமிடங்கள்...!!!!!

commomeega said...

நல்லா இருக்கு.
மீண்டும் நாளை விரிவான பின்னுட்டம்

R. Gopi said...

சூப்பர்

குட்டிப்பையா|Kutipaiya said...

மழையின் சாரலாய் நினைவுகள்..அருமை!

அன்புடன் அருணா said...

மழையும் தனிமையும் நிறைய வாழ்வை ரசிக்க வைக்கும்!

rajasundararajan said...

அது ஒரு விடுதலை உணர்வு. அதைக் கூடுமானதாக ஆக்குதற்கு இளமை வேண்டும் - உடம்பில் என்பதைவிட மனதில். கூடியிருக்கிறது உங்களுக்கு. வாழ்க!

உங்கள் எழுத்தில் - ஏர்போர்ட், மேம்பாலம், ஃபாஷன் பற்றியவற்றில் அல்ல - இப்படி உணர்வோடு கூடிய எழுத்தில் உள்ள பரவசம் வாசிக்கும் எம்மையும் தொற்றிக்கொள்கிறது. அவ்வளவு துல்லியமான தமிழ். மொழியில் எளிமை, உணர்வில் இளமை உள்ளவர்களுக்கே கூடும்.

sakthi said...

ஒரு ப்ளாக்பெரி” என்றேன். அழகாய் சிரித்தவன், “ப்ளாக்ஃபாரஸ்ட்?” என்றான். ஒரு கண் மூடி நா கடித்து “யெஸ்” என்றேன். கையில் பேஸ்ட்ரியுடன் மேஜை தேடி அமர்கையில் பக்கமிருந்த மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி.


ஒரு அழகான காட்சியை கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள் விக்கி

Unknown said...

நல்லா இருக்குங்க...

இப்போ தான் மழை இல்லையே.இது போன மாத அனுபவமா?

மணிநரேன் said...

ரசனை..:)

கார்க்கிபவா said...

கடைசி பாட்டுதான் டச்சிங்..

உண்மையா பாடுச்சா?

Anonymous said...

மாலைத்தூறல் நிமிடங்கள் அருமை..

//மழைமரப் பறவைகள்..//
ரசனை :)

பவள சங்கரி said...

நல்ல பகிர்வுங்க. நன்றி.

Romeoboy said...

ரொம்ப அழகா இருக்கு பதிவு ...

விக்னேஷ்வரி said...

ஆமா ப்ரியா.

நன்றி commomeega.

நன்றி கோபி.

நன்றி குட்டிபையா.

ஆமா அருணா.

மிக்க நன்றி ராஜசுந்தரராஜன் சார். நீங்க குறிப்பிட்ட மற்றதெல்லாம் எழுத வேண்டாம்னு சொல்றிங்களா..

விக்னேஷ்வரி said...

வாங்க சக்தி.

நன்றி கலாநேசன். இல்லைங்க, போன வார அனுபவம், வெளியூரொன்றில்.

நன்றி மணிநரேன்.

ஆமா கார்க்கி. :)

நன்றி பாலாஜி சரவணா.

நன்றி நித்திலம்.

நன்றி ரோமியோ.

Ahamed irshad said...

வார்த்தைகளின் கோர்வை அற்புதம் விக்கி..

Ahamed irshad said...

வார்த்தைகளின் கோர்வை அற்புதம் விக்கி..

Ganesan said...

விக்கி,

எழுத்தின் அருமை, இன்னும் எழுத்துக்களை வாசிக்க ஆசைப்படுகிறது.

தராசு said...

ஹலோ, ஹலோ, ஹலோஓஓஓஓஓ.....

என்ன இது, கலக்கறீங்க விக்கி.

வார்த்தைக் கோர்வை... சான்சே இல்லை.

வர்ணிப்பு.... வார்த்தைகள் இல்லை.

வாழ்த்துக்கள்.

valli said...

அழகான பதிவு! மழையைப் போலவே

rajasundararajan said...

//நீங்க குறிப்பிட்ட மற்றதெல்லாம் எழுத வேண்டாம்னு சொல்றிங்களா..?//

அப்படிச் சொல்லலை. அது தகவல் எழுத்து - பத்திரிக்கைகள்ல வர்றா மாதிரி. எப்பவாவது வர்ற பஸ்ஸெப் பிடிக்க கிராமத்துச் சனங்க ஓடுறா மாதிரி, காலை ஆறு மணிக்கே தில்லி விமான நிலையத்துல கிடைக்கிற பரபரப்பு வேடிக்கையானதுதான். உடுப்புகள்ல நீங்க சொல்ற கலர் மேட்ச் ரெம்பப் பேருக்குப் பயன்படும். அதனால அதையும் எழுதுங்க.

மறுத்து, உணர்வுகளோடு கூடிய உங்க எழுத்துல படைப்புத்தன்மை கூடி வர்றதுனால அப்படியே எங்களையும் பத்திக்குதுன்னு சொன்னேன். அவ்வளவுதான்.

நேசமித்ரன். said...

மொழியில் நிகழும் பரிணாமம் வியப்பளிக்கிறது.

ரசிக்க வாய்த்த தனிமையுடன் நின்று விடுவோர் மத்தியில், மழையிறங்கி மனம் மலர்த்தி ...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி////

:) அழகுதான்..

Vidhya Chandrasekaran said...

மழை பெஞ்சா ஜல்பு பிடிக்கும்.

ஊஹூம். சேர்க்கை சரியில்லை. இலக்கியவாதி ஆகிட்டு வர்றீங்க. உங்க கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிட்டென் பண்ணிக்கிறேன். வியாதி எனக்கும் வந்திருச்சுன்னா:)))

விக்னேஷ்வரி said...

நன்றி அஹமது இர்ஷாத்.

நன்றி காவேரி கணேஷ்.

தராசு, கலாய்க்கறீங்களா..

நன்றி வள்ளி.

ஓ, நன்றி ராஜசுந்தரராஜன் சார்.

நன்றி நேசமித்ரன்.

ஆமா முத்துலெட்சுமி.

அட, நம்மல்லாம் எப்போவுமே ஒண்ணு தான் வித்யா. :)

Unknown said...

ரொம்ப ரசனையோட எழுதி இருக்கீங்க..மிக மிக அருமை

VR said...

ஆஹா........ இலக்கியவாதி ஆகி விடீர்களா என்ன?

VR said...

இரு தடவை வாசித்துவிட்டேன் ....

மீண்டும் சிலமுறை வசிக்க வேண்டும் ..........

commomeega said...

மழை காலத்தை,மண் வாசனை கமழ நினைவுட்டியது. நடை உங்கள் எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை காட்டுகிறது.
கோலாப்பூர் என்றவுடன் கூட திராட்சை-உம் நாபகம் வருகிறது.

RVS said...

நானும் கொஞ்ச நாழி மழையில் நனைந்தது போன்ற உணர்வு. "ஜோ"ன்னு மழை பெய்தார்ப் போல நடை. நல்லா இருந்தது.

Raghu said...

ஹ‌லோ...இது விக்னேஷ்வ‌ரியோட‌ ப்ளாக்தானே? ;))

//மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி//

ரொம்ப‌ புடிச்சிருக்கு இந்த‌ வ‌ரிக‌ள் :)

நீங்க‌ளும் எல‌க்கிய‌....ச‌ரி ந‌ம‌க்கெதுக்கு வ‌ம்பு!

erodethangadurai said...

ரொம்ப ரசனையோட எழுதி இருக்கீங்க..! மிக மிக அருமை....

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

நினைவுகள் அருமை.

நிலாமதி said...

என் தளத்துக்கு உங்கள்வருகைக்கு நன்றி .உங்களுக்கு தெரிவிகக் இதை எழுதுகிறேன் பயிற்செய்கை உத்தியோகத்தர் என்றால் ...உங்கள் வழக்கில் விவசாய மேற்பார்வையாளர்.

நிலாமதி said...

ரொம்ப ரசனையோட எழுதி இருக்கீங்க..! மிக மிக அருமை....

ADHI VENKAT said...

ரொம்ப ரசனையோட அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.