கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், இன்று தற்செயலாக யாகூவில் சுபாவை ஆன்லைனில் பார்த்தேன். ஒரு ஹாய் சொன்ன போது, அவளிடமிருந்து பதில் வந்தது. மிகவும் பிஸியாக இருந்த போதிலும் என்னிடம் ஒரு பத்து நிமிடம் சாட் செய்து விட்டு போனாள். அவள் போனதும் என் கோவை நாட்கள் கண்முன் வந்தன.
சுபா என் அபார்ட்மென்ட் தோழி. நான் கோவையில் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்த போது, அபார்ட்மென்ட் ஒன்றில் குடியேறினேன். ஒரு பெரிய வரவேற்பறை, அதே அளவுக்கு விசாலமான சமையலறை, இரண்டு குளியலறைகளுடன் கூடிய படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய். நாங்கள் மூன்று பெண்கள் சேர்ந்து அதை வாடகைக்கு எடுத்திருந்தோம். எல்சா, திவ்யா மற்றும் நான். திவ்யா HR. நான் sales executive. எல்சா B.Com. Student. மூன்று பெண்கள் ஒரு வீட்டில் இருந்தால் கண்டிப்பாக பேச ஏதாவது இருக்கும். அதுவும் நாங்களோ மூன்று வேறு துறை சேர்ந்தவர்கள். எனவே சொல்லவே வேண்டாம். வீட்டில் நாங்கள் சேர்ந்து இருக்கும் பன்னிரண்டு மணி நேரத்தில் தூங்கும் நேரம் போக மீதி நேரம் பேச்சு, சமையல், கலகலப்பு தான்.
எங்களுக்கு அடுத்த flat இல் இருந்த தோழிகள் தான் அர்ச்சனா, சுபா மற்றும் ஆர்த்தி. அப்போது மூவரும் Post graduate students. ஆர்த்தி, அர்ச்சனா ஒரே கல்லூரியில் ஒரே துறைத் தோழிகள். மேக்கப், புடவை, நகைகள் என எல்லாவற்றிலும் அதிக ஆர்வம் காட்டும் தோழிகள். ஆனால், சுபா மேக்கப் செய்தோ, புடவை உடுத்தியோ நான் பார்த்ததில்லை.அவள் எப்போதும் எளிமையாக தான் இருப்பாள். சுருண்ட, குட்டைக் கூந்தல், எப்போதும் ஒரு சல்வார் கமீஸ் என்று தான் இருப்பாள். இவர்கள் ஐந்து பேருமே எனக்கு நல்ல தோழிகள். ஐந்து பேருக்குமே நான் நல்ல தோழி. (அட சொல்லிக்கிறேனே). அடிக்கடி எங்கள் வீட்டிற்கும், அவர்களின் வீட்டிற்குமிடையில் சமையல் பரிவர்த்தனை நடக்கும்.
அந்த நாட்கள் எப்போதும் மறக்க முடியாத இனிமையானவை. வீட்டில் நான், திவ்யா, எல்சா மூவரும் தான். திவ்யா எப்போவும் பிசியான பொண்ணு. தினமும் ஆபிசில் ஏதாவது பிரச்சனை, கூப்பிட்டு வச்சு அட்வைஸ் பண்ணேன் என்பாள். தினமும் காலை எட்டரை மணிக்கே ஓட வேண்டும் அவள். இரவு ஏழு மணிக்கு மேல் தான் வருவாள். காலையில் அவள் ஆபிஸ் போகும் போது தான் எல்சா எழுந்திருப்பாள். பின் நிதானமாய் காலேஜ் கிளம்பி போவாள். சாயங்காலம் திவ்யா ரூமுக்கு வரும்போது, எல்சா அவள் பிரென்ட்ஸோடு எங்காவது போயிருப்பாள் அல்லது தூங்கிக் கொண்டிருப்பாள்.
திவ்யா, சில நேரங்களில் எனக்கு சமையலில் உதவுவாள். எல்சாவுக்கு சமையலறை எங்கே என்று கூடத் தெரியாது. ஆனால், அவள் தான் எங்களில் மிகவும் குட்டிப் பெண் என்பதால், அவளுக்கு சலுகைகள் அதிகம். தினமும் அவளை சாப்பிட வைப்பது எனக்கு பெரும்பாடு. மூன்று வேளையும், ஏதாவது ஜூசைக் குடித்து, சாப்பிடாமல் இருப்பது தான் எல்சாவின் வேலை. வீட்டிலிருந்து வெளியே வந்ததும் ஆர்யாஸ் இருந்தாலும், நாங்கள் யாரும் ஆர்யாஸ் பக்கம் போகவே மாட்டோம். காரணம், நாங்கள் தினமும் அந்த கிச்சனைப் பார்த்து, பயந்து போனவர்கள்.
திவ்யா, எல்சா இருவரும் மலையாளிகள். எனக்கு மலையாளம், ஹிந்தி கற்றுத் தருவது திவ்யாவின் பொழுதுபோக்கு. எப்போதும் நான் பார்க்கும் சில சீரியல்களைத் திட்டிக் கொண்டே, ஏதாவது ஆங்கில அல்லது ஹிந்தி நிகழ்ச்சிகளை மாற்றுவாள் திவ்யா. எல்சாவுக்கு தூக்கம் மட்டும் போதும். "ஏண்டி டிவி வாங்கின. அதுல என்ன உருப்படியா இருக்கு" என்றும், காலையில் நான் ஹிந்து படிக்கும் போது, "விக்கி, உனக்கு பைத்தியம் பிடிக்கப் போகுது. நைட் டிவில நியூஸ் பாக்குற. காலைல பேப்பரை ஒரு பக்கம் விடாம படிக்குற. ஏண்டி இப்படி" என கமெண்ட் மட்டும் தருவாள்.
அந்த வீட்டில், டிவி, காஸ் அடுப்பு, மெத்தைகள் மற்றும் பல பொருட்களை வாங்கி நாங்கள் சமைத்து, நட்புகளைப் பகிர ஆரம்பித்த நேரத்தில் எனக்கு டெல்லிக்கு மாறுதல் வந்தது. அவ்விடத்தை விட்டு வர மனமில்லாமல் கோவையிலிருந்து விமானம் ஏறினேன். நான் அங்கிருந்து சென்ற சில நாட்களில் திவ்யாவும் சென்னையில் வேறு வேலை பார்த்து சென்று விட்டாள். சுபா, ஆர்த்தி, அர்ச்சனா, எல்சா அனைவரும் ஒரே பிளாட்டிற்கு வந்து விட்டதாக, போன் பண்ண போது சொன்னார்கள்.
பின் ஒரு நாள் போன் செய்த போது, அவர்கள் மூவரும், படிப்பு முடிந்து சென்று விட்டதாகவும், எல்சா மட்டுமே தனியாக இருப்பதாகவும் சொன்னாள். ஐயோ, சின்ன பொண்ணு, எப்படி தனியா இருக்காளோனு கஷ்டமா இருந்தது.
போன வருடம் ஒரு வேலை விஷயமாக, நான் கோவை சென்று ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். எல்சாவுக்கு போன் செய்த போது அவள் கோவையில் இல்லை. நான் போன் செய்த அன்றே இரவு பஸ் பிடித்து, மறுநாள் காலை நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து என்னை பிளாட்டிற்கு அழைத்து சென்றாள். ஒரு வாரம் அவளுடன் தங்கிவிட்டு, வேலையை முடித்து திரும்பும் போது, என்னுடன் ஏர்போர்ட் வந்து விட்டு சென்றாள். எப்போதாவது போன் செய்தால், தூங்கிக் கொண்டிருந்தாலும், "சொல்லு விக்கி" என ஆரம்பித்து, குறைந்தது ஒன்றரை மணி நேரம் நீளும் எங்கள் நட்புப் பேச்சு.
Missing Kovai and Friends....