Thursday, January 29, 2009

கிராமத்து இல்லைகளும், நகரத்து தொல்லைகளும்

கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் அந்த வாழ்க்கையை மிகவும் ரசித்து வளர்ந்தேன். வீட்டை சுற்றி மரங்கள், செடிகள்; நடந்து போகும் தூரத்தில் பம்புசெட்; கூட்டிப் போக மாமா; கூட விளையாட சக தோழிகள்; ஓடிப்பிடித்து விளையாட நிறைய இடம்; ஓசியில் பறித்து வந்த வெண்டை, தக்காளி; வீடு தேடி வந்து வெங்காயம், கிழங்குகள் கொடுத்து விட்டு சென்ற பழகிய தாத்தா; ஐம்பத்து காசுக்கு அரை மணி நேரம் சைக்கிள் வாடகைக்கு கொடுத்த மணி அண்ணன்; பத்து ரூபாய்க்கு அரை கிலோ சேவு; காலையில் மலை நடுவில் உதிக்கும் சூரிய தரிசனத்துடன் காபி.... இன்னும் பல.

எனக்கு விவரம் தெரிந்து நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என்னை மெட்ராஸ்க்கு (இன்றைய சென்னைக்கு) அழைத்துப் போனார் அம்மா. அதுவரை அப்பா கூட மதுரை வரை மட்டுமே போய், மதுரை தான் மிகப் பெரிய சிட்டி என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மெட்ராஸ் மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஊராய் தெரிந்தது. தாத்தாவுடன் பீச், மாமாவுடன் ஐஸ் கிரீம் பார்லர், அத்தையுடன் பாண்டி பஜார் என இரண்டு, மூன்று இடங்களை பார்த்ததுமே பிடித்து போனது. ஒரு புதிய ஹேர் ஸ்டைலுடன் ஊர் திரும்பினேன்.

ஊர் திரும்பிய எனக்கு கிராமத்து கம்மாயை விட மெட்ராஸ் பீச் தான் பிடித்திருந்தது. ஐம்பத்து பைசா குச்சி ஐஸை விட அங்கு குளு குளு அறையில் சாப்பிட்ட கலர் கலர் ஐஸ் கிரீம் தான் பிடித்தது போலிருந்தது.

கிராமத்தில் பீச் இல்லை, கலர் கலர் ஐஸ் இல்லை, பேல்பூரி இல்லை, நீண்ட பஜார் இல்லை, விரைந்து செல்லும் கார்கள் இல்லை, சுடிதார் போட்ட ஆன்ட்டிகள் இல்லை, ப்யூட்டி பார்லர்கள் இல்லை, அடுக்கு மாடி கட்டடங்கள் இல்லை, அண்ணார்ந்து பார்க்க ஆகாய விமானம் இல்லை என்ன கிராம வாழ்க்கையோ என்று என் அம்மாவிடம் இத்தனை இல்லைகளையும் அடுக்கினேன். " நீ நல்லா படிச்சு, வேலைக்கு போகும் போது இல்லாததெல்லாம் இருக்காகி விடும். மெட்ராஸ் என்ன, இன்னும் நிறைய இடத்துக்கு நீ போவ. சரியா...." என்று சமாதானம் சொன்னாள் அம்மா.

அம்மாவின் சமாதானத்தை ஏற்று, பொது தேர்வுகளில் தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல் வாங்கி, விரும்பிய படிப்பை எடுத்து படித்து, படிக்கும் போது வேலையும் கிடைத்து, விரும்பியவரை மணமுடித்து, இந்த நகரத்தின் ஓட்டத்தில் ஓடும் போது தான் அம்மாவிடம் சொன்ன இல்லைகள் நினைவுக்கு வந்தன.

இந்த முறை அம்மா தனது பொங்கல் விடுமுறைக்கு என்னுடன் ஒரு வாரம் தங்கிப் போக டெல்லி வந்த போது "நானும் என் பொண்ணால டெல்லி பாக்கணும்னு இருக்கு. ஒரு சின்ன ஊர்ல பொறந்து, வீட்டுக்குள்ள மட்டுமே சுத்தி வந்த பொண்ணா இப்போ இப்படி தைரியமா இருக்கா.... பிளைட்ல தனியா போறா, வர்றா... வெளிய எல்லார்கிட்டேயும் ஹிந்தி பிரமாதமா பேசுறா... மாப்பிள்ளை வெளியூர் போனா, தனியா சமாளிசுக்குறா.... இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறா......................." இவ்வாறாக அம்மா தன் தோழியிடம் போனில் சொல்லிக் கொண்டிருக்க, " அம்மா, எப்போமா நான் ஊருக்கு வரட்டும்" என்றவாறே அம்மாவின் மடியில் சாய்ந்தேன்.

"இங்கே எல்லாமே இருக்குமா, ஆனா ஒண்ணுமே இல்ல. இவ்வளவு பெரிய வீடு, வசதி. ஆனா, இருந்து அனுபவிக்க நேரம் இல்லைமா. அடுக்களை நிறைய சாமான்கள் இருந்தும் நல்ல, ருசியான அம்மா கை சாப்பாடு இல்லை, காலையில் பிரெட்டை தவிர வேறு சாப்பாடு இல்லை, யாரையும் நம்பி பையா (அண்ணா) என்று அழைக்க முடிவதில்லை, ஒரு சுளுக்குக்கு கூட ஐநூறு ரூபாய்க்கு குறைய கன்சல்டிங் பீஸ் வாங்கும் டாக்டர்ஸ் இல்லை, தலை வாரி பின்னும் பெண்கள் இல்லை, விஜய் ஆதிராஜ் போல மீசை உள்ள ஆண்கள் இல்லை, பாவப்பட்டு உதவி செய்ய உள்ளங்கள் இல்லை, மேக்கப் இல்லாத முகங்கள் இல்லை, மனம் விட்டுப் பேச தோழிகள் இல்லை, காலாற நடக்க சுத்தமான காற்று இல்லை, வளரும் அடுக்கு மாடி கட்டடங்களால் சூரியனை பார்க்க முடிவதில்லை, ஐம்பது ரூபாய்க்கு குறைவாய் சிற்றுண்டி கூட முடிக்க முடிவதில்லை" இந்த இல்லைகளெல்லாம் வலி தரும் தொல்லைகளாகவே உள்ளன.

பத்து வருடத்திற்கு முன் நான் சொன்ன இல்லைகளுக்கும், இப்போது சொல்லும் இல்லைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தாய் அறிவாள். "செல்லம், இது தான்டா வாழ்க்கை. இல்லாததை பார்க்காதே. இருக்குறத மட்டும் பாரு. நல்ல மாப்பிள்ளை, நல்ல வாழ்க்கை. அனுபவிச்சு வாழு" என்று அவளால் முடிந்த அறிவுரையை சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

"அனுபவிச்சு வாழு" என்று அம்மா சொன்னதை நினைத்துக் கொண்டிருக்கையில் தான் செல்லில் இருந்த ரிமைண்டர் Complete the to do list and send the reply mail by today என்று கத்த, மீண்டும் புகுந்தேன் நகரத்து தொல்லைகளுக்குள்.

9 comments:

trdhasan said...

வீடு தேடி வந்து வெங்காயம் // அருமையான எழுத்து.

" அம்மா, எப்போமா நான் ஊருக்கு வரட்டும்"// எதார்த்தம்.

யாரையும் நம்பி பையா (அண்ணா) என்று அழைக்க முடிவதில்லை//

மொத்தம படிச்ச பிறகு என்ன சொல்றதுன்னு தெரியல.

வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கைக்கும் வரிகளுக்கும்

Ganesan said...

ஐம்பத்து காசுக்கு அரை மணி நேரம் சைக்கிள் வாடகைக்கு கொடுத்த மணி அண்ணன்;

வாடகை சைக்கிள் மிதிச்ச‌தை நினைவு கொண்டு வ‌ருகிறீர்கள்.


ஊர் திரும்பிய எனக்கு கிராமத்து கம்மாயை விட மெட்ராஸ் பீச் தான் பிடித்திருந்தது.

சிறூ வ‌ய‌தில் எல்லோருக்கும் வ‌ரும் நிக‌ழ்வு.பத்து வருடத்திற்கு முன் நான் சொன்ன இல்லைகளுக்கும், இப்போது சொல்லும் இல்லைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தாய் அறிவாள்.


ச‌த்திய‌மான‌ உண்மை.சென்னையிலே வாழ முடிய‌வில்லை.

வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி. எழுதுங்க‌ள்.

அன்புடன்

காவேரி க‌ணேஷ்

விக்னேஷ்வரி said...

வருகைக்கு நன்றி டி.ஆர்.தாசன் மற்றும் காவேரி கணேஷ்.

Nithi... said...

படித்தேன் ரசித்தேன்

Sundar Raj said...

உங்கள் எழுத்தில் தேர்ந்த எழுத்தாளருக்கு உண்டான நடை தெரிகிறது...நீங்கள் மேலும் எழுத வாழ்த்துக்கள்...

A said...

தூரத்தில் பம்புசெட்..
அரை மணி நேரம் சைக்கிள் ...
சூரிய தரிசனத்துடன் காபி...
கிராமத்து கம்மாய்..
ஐம்பத்து பைசா குச்சி ஐய்ஸ் ....
மறந்து போன அந்நாட்களை ஞாபகப் படுத்துகின்றன .....
கிராமத்து இல்லைகளால் எந்த தொல்லையும் இல்லை..
அனால் நகரத்து இல்லைகளால் இல்லாத தொல்லைகள் இல்லை ...என்பதை மிக அழகாக சொல்லிருகீங்க ..வாழ்த்துக்கள்..

விக்னேஷ்வரி said...

நன்றி நிதி, சுந்தர்ராஜ், ஆனந்த்.

mightymaverick said...

நானும் கடந்த ஏழு ஆண்டுகளாக, தாய் மண்ணாம் மதுரையை விட்டு வெளியேதான் இருக்கிறேன்... (ஒரு ஆண்டு கோவையையும் விட்டு வைக்க வில்லை). ஆனாலும் சென்னை கடற்கரையை விட, ஊரிலுள்ள கண்மாய் கரையை அதிகம் ரசித்திருக்கிறேன். எப்போதும் நெரிசலான ரங்கநாதன்தெரு மற்றும் பாண்டி பஜாரை விட மதுரையில் சித்திரை திருவிழாவிற்கும் தீபாவளிக்கு முந்தைய நாளின் கூட்டத்தையும் ரசித்திருக்கிறேன்... வைகையில்வந்த வெள்ளம், மிதிவண்டியிலேயே சுற்ற முடிந்த மொத்த ஊர், அழகர் மலையில்கானகத்திற்குள் நடந்து சென்று சேரும் பழமுதிர்சோலை, அடிக்கடி ஓடிப்போய் நனையும் சுருளி அருவி (இன்று கூட பல நேரம் shower-இல் குளிக்கும் போது, சுருளிஅருவியின் ஞாபகம் தான் வரும்) இதை மீண்டும் ரசிக்க மனசு ஏங்குகிறது... ஆனால் பின்னால் இருந்து PM-இன் அர்ச்சனை இதை எல்லாம் மறக்க செய்கிறது...

விக்னேஷ்வரி said...

ஓ, நீங்களும் மதுரையா.. ஆமா, அதெல்லாம் திரும்ப பெற முடியாத இனிய பொழுதுகள் Mighty Maverick.