Thursday, March 25, 2010

நல்லதொரு சிநேகம்


நான் பொதுவாக தமிழ்ப் பெண்கள் பத்திரிக்கைகளை வாசிப்பதில்லை. வாசிப்பதில்லை என்பதை விட வெறுக்கிறேன் என்று சொல்லலாம். யோகி எனக்கு ஏதாவது செய்ய நினைத்து தமிழகத்தில் தெரிந்தவர்களிடம் விபரம் கேட்டு முன்னணி (விற்பனையில்) தமிழ் பெண்கள் இதழொன்றை சப்ஸ்க்ரைப் செய்திருந்தார். ஒருமுறை அதைப் பார்த்ததோடு சரி. அதற்குப் பின் ஒரு வருடத்திற்கு அப்புத்தகங்கள் வீணாக எங்கள் புத்தக அலமாரியை அடைத்துக் கொண்டிருந்தன. காரணம் என்னவென்றால், அப்புத்தகத்திலிருக்கும் விஷயங்கள் தான். 4 சமையல் ரெசிப்பிகள், 10 கோலங்கள், இரு பக்க வீட்டுக் குறிப்புகள், 2 பெண்களின் அழுகாச்சிக் காவியங்கள், அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் குழப்புமளவுக்கு 10 பேரின் பதில்கள், எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்து நாம் பெரும்பாலும் அறிந்திருக்கும் பெண்களைப் பற்றிய கட்டுரை, இரு பக்க அழகுக் குறிப்புகள், 1 கைத் தொழில் ஐடியா, கல்லூரிப் பெண்கள் என்றாலே கடி ஜோக் சொல்ல மட்டுமே லாயக்கு என்னுமளவுக்கு வெறுப்பூட்டும் கல்லூரிப் பக்கங்கள், 10 விளம்பரங்கள் என புத்தகம் முழுக்க வியாபாரமாகவும், பெண் என்பவளை சிறுபான்மையானவளாகவும் காட்டும் அபத்தங்களும் நிறைந்த புத்தகம். பெண்ணை மேன்மையடையச் செய்வதாக நினைத்துக் கொண்டு இன்னும் சிறுமைப்படுத்துகின்றன இம்மாதிரியான பத்திரிக்கைகள்.

எனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது. அம்மாவிற்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன்.

சரி, சிநேகிதிக்கு வரலாம். நான் வாசித்தது மார்ச் 1-15 வரையிலான இதழ். வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன். புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். பெண்கள் சிறப்பு இதழென்பதால் முதல் இருபது பக்கங்களுக்கு வெவ்வேறு துறைப் பெண்கள் பற்றிய ஒரு/இரு பக்கக் கட்டுரைகள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, கலெக்டர், கோவில் கருவூலத்தில் இருக்கும் பெண், காய்கறி விற்று மருத்துவமனை கட்டிய பெண், பாடகி, புல்லாங்குழல் இசைக்கும் பெண், ஒரு குடியிருப்பில் விட்டு வேலை செய்யும் அம்மா என வித்தியாசமான பெண்கள் பற்றிய தொகுப்பு சுவாரசியம்.

உள்ளே சமையல் குறிப்பில்லை; பதிலாக அத்தியாவசிய உணவுப் பழக்க வழக்கங்கள். காஸ்மெடிக் அழகுக் குறிப்பில்லை; மாறாக உணவால் அழகாவது எப்படி. அழும், ஆறுதல் சொல்லும் சோகக் கதைகள் இல்லை; பெண்களே கருத்து சொல்லும் விவாத மேடை. இத்துடன் டாக்டர்.ஷாலினியின் அவசியமான கட்டுரை ஒன்று. வாசித்து முடித்து விட்டு அம்மாவை அழைத்து நன்றி சொன்னேன். தங்கையையும் ரெகுலராக வாசிக்க சொன்னேன். சிநேகிதியில் கொஞ்சம் அலுப்பான வுஷயம் சுய விளம்பரம். ஒருவரைப் பற்றி எழுதும் போது கூடவே “இவரும் நம் வாசகி” என சொல்வது சலிப்பாக உள்ளது. மற்றபடி ரொம்பவும் நல்லாருக்கு.
(இது வெறும் புகழ்ச்சி அல்ல. 20 ரூபாய் வீணாகாததன் மகிழ்ச்சி)

*************************************************************************************************************

போன முறை திருப்பூர் சென்றிருந்த பொழுது நான் இருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மெல்லிய பாட்டு சத்தம் கேட்டது. அங்கிருந்தவரை அழைத்து விபரம் கேட்க, இது HR பாலிஸிகளில் ஒன்று. இது போல் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு அயற்சி ஏற்படாமல் இருப்பதாகவும், வேலை செய்ய ஆர்வம் அதிகமாவதாகவும் தெரிவித்தார். அங்கிருந்த ஒரு கன்சல்டண்டைக் கேட்ட போது அது உண்மைதானென உறுதி செய்தார். எனக்கும் நன்றாகவே இருந்தது. ஆனால் இது அட்மினிஸ்ட்ரேடிவ் ப்ளாக்கில் மட்டும் இருப்பதாக சொன்னார்கள். மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன்.
(வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)

*************************************************************************************************************

ஆடிட்டர் நண்பரொருவர் மார்ச் மாதம் வருட இறுதி, வேலை அதிகமென அழாத குறையாகச் சொன்னார். ”ச்சே என்ன வாழ்க்கை இது ஒரே டென்ஷனா... ஒரு சேஞ்சே இல்ல” என்றார்.
நான் அவரிடம், “ஒரு சேஞ்சுக்கு வேலை பாருங்களேன்” என்றால் முறைக்கிறார்.(உண்மையை சொன்னா முறைக்கிறாங்க.. என்ன உலகமடா இது!)

*************************************************************************************************************


வண்ணதாசனை சமீபத்தில் தான் வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எழுத்தின் அடர்த்தி கண்டு வியந்து நிற்கிறேன். பல இடங்களில் கிராமத்துத் தமிழ் புரியாமல் அம்மாவிடமோ, நண்பர்களிடமோ அர்த்தம் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தான் புரிகிறது தமிழின் தொன்மையும், மொழியின் வளமையும். (நாம பேசுறதையும் தமிழ்ன்னு ஏத்துக்குறவங்க பெரியாளுங்க தான்)

*************************************************************************************************************

சமீபத்தில் பதிவுலகத் தோழி ஒருவரிடம் பதிவுலக அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவரின் கருத்துக்கு மாறாக பேசும் போது, எழுதும் போது கருத்துக்களை மட்டுமே விமர்சியுங்கள்; தனிமனிதர்களையல்ல. தவிர, உங்களின் எழுத்து எதிர்ப் பதிவாக இருக்க வேண்டுமேயொழிய எதிர் வாதமாக இரு குழுக்களாக நண்பர்களைப் பிரிப்பதாக வேண்டாமே. நாம் இயங்குவது ஒரு பொதுத் தளத்தில். இங்கு அனைவரின் எழுத்துகளும் ஒரு வித மதிப்போடு வாசிக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் வார்த்தைத் தேர்வுகளில் கவனம் அதிகம் தேவை. எதிர்ப் பதிவுகளை ஒதுக்கும் எனக்கு சமீபத்தில் ஒரு எதிர்ப் பதிவு அதிக கவனத்தை ஈர்த்து வியக்க வைத்தது. நீங்களும் இதை வாசித்துப் பாருங்களேன். (நம்மளையெல்லாம் எதிர்த்து எழுதினா அங்கேயும் போய் சூப்பருன்னு கும்மியடிக்குற ஆளாச்சே நாம. ஹிஹிஹி)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

போன வாரத்தில் ஒரு நாள் சோகமாக யோகியிடம் சொன்னேன் “ஜி, 3 இடியட்ஸ் படத்துல அமிர்கான் ரோல்ல லல்லு* (விஜய்க்கு என்னவர் வைத்திருக்கும் செல்லப் பெயர்) நடிக்கிறாராம்”
நிஜமாகவே எது நடந்து விடக் கூடாது என அஞ்சினேனோ அது நடந்து விட்ட சோகம்.
ரொம்பக் கூலாக சொன்னார் “இதுக்கெதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற, அந்தப் பட டைட்டிலுக்கு அவரை விடப் பொருத்தமான ஆள் யாரா இருக்க முடியும்”
சோகம் மறந்து சிரிச்சுட்டேன். (டாக்டர்.விஜய் அவர்கள் என்ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்ற கொடுமையை நாம சகிச்சிக்கணும்னு தலைல எழுதிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்?)

* இந்த ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் அறிந்து மகிழ்பவர்கள் மகிழ்வீராக. தூற்றுபவர்கள் தூற்றுவார்களாக. ;)

Friday, March 19, 2010

சாப் ஸ்டிக்ஸ் பெண்ணின் தாண்டியா நடனங்கள்

சைனீஸ் உணவுகளை நல்ல சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் சுவைத்திருக்கிறீர்களா...
ஆம் எனில் நிச்சயம் நீங்கள் சைனீஸ் காதலராக இருக்க வேண்டும். என் ஆல் டைம் ஃபேவரிட் சைனீஸ் தான். உலகின் டாப் 10 உணவுகளில் ஒன்றாக இருக்கும் சைனீஸ் ஃபுட்டை போதுமான அளவில் சப்புக் கொட்டும் சுவையில் அளிக்கும் Yo!China (யோ சைனா) தான் இந்த மாத ரெஸ்டாரண்ட். ரொம்ப நாளா பலரின் (குறிப்பாக கார்க்கி மற்றும் S.K.(குமார்)) வயித்தெரிச்சலால் நின்று போன இப்பதிவு இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக வரும். நல்ல சாப்பாடை அடையாளம் காட்டாம நாம மட்டும் கொட்டிக்குறது நல்லதில்ல. :)


இது பொதுவாக டெல்லியின் பெரிய மால்களிலும் முக்கிய ஷாப்பிங் ஏரியாக்களிலும் அமைக்கப்பட்டிருப்பதால் உணவுப் பிரியர்கள் கூட்டம் எப்போதும் உண்டு. வார நாட்களில் எளிதாகவும், வாரயிறுதி நாட்களில் அரை மணி நேர காத்திருப்பிற்குப் பின்னும் உள்ளே இடம் கிடைக்கும்.

எப்போது நீங்கள் இங்கு முதல் முறை செல்கிறீர்களோ அப்போது முழு சாப்பாடும் (சைனீஸ் சாப்பாடு), அடுத்தடுத்த முறைகளில் வெவ்வேறு அயிட்டங்களும் முயற்சிக்கலாம். உங்கள் ஆர்டர் வரும் வரை பக்கத்து டேபிளைப் பார்த்து ஜொள்ளு விடக் கூடாது. ;)

இனி மெனு.
இது முதலில் நானும் யோகியும் மட்டும் போன போது கொட்டிக்கிட்டது.

Starter - ஹனி சில்லி பொடேடோ (Honey Chilli Potato)

இதை நீங்கள் வேறு இடங்களிலும் சுவைத்திருக்கலாம். ஆனால் யோ சைனாவின் ஹனி சில்லி பொடேடோவின் முதல் பீஸை வாயில் வைக்கும் போது “வாவ்” என சொல்வதை மறுக்க முடியாது.


Main Course - வெஜ் சாப்ஸி (Veg Chopusey)

குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாக இது நிச்சயம் அமையும். லேசான புளிப்பு கலந்த இனிப்புடன் கூடிய சாஸுடன் மொறுமொறுப்பான சாப்ஸியை ஃபோர்க்கால் எடுத்து சாப்பிடுவதே ஒரு கலை தான். இதில் நான் சாப் ஸ்டிக்ஸ் (Chopsticks) வைத்து வேறு முயற்சித்தேன்.


Main Course - சைனீஸ் வெஜ் மீல் (Chinese Veg Meal)

வயிறு நிறையுமளவான யம்மி சாப்பாடு இது. ஸ்டார்ட்டரில் ஆரம்பித்து, நூடுல்ஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ் எனத் தொடர்ந்து இறுதியாக கூல்ட்ரிங்க் வரை பரிமாறப்படுகிறது.

ஸ்டார்ட்டர் (Starter) - 1 வெஜ் திம்ஸம், 1 சிறிய வெஜ் ரோலுடன். (1 Veg. Dimsam and a small Veg. Roll)

மெயின் கோர்ஸ் (Main Course) - வெஜ் ஃப்ரைட் ரைஸ் வித் வெஜ் மன்சூரியன் அண்ட் வெஜ் நூடுல்ஸ் வித் சாஸ். (Veg. Fried Rice with Veg. Manchurian and Veg. Noodles with Sauce)

பிவரேஜ் (Beverage) - கோக் (Coke).


மீல்ஸை சாப் ஸ்டிக்ஸால் முயற்சிக்கும் யோகி.


அடுத்த முறை அம்மா, அப்பா, யோகி மற்றும் என் தோழியுடன் போன போது மொக்கிக்கிட்டவை கீழே.

Veg. Schezwan Mushroom Dimsum

இந்த முறை ஸ்டார்ட்டரில் வெஜ் திம்ஸமிர்க்குப் பதிலாக வெஜ் ஸ்கூஸ்வன் மஷ்ரூம் திம்ஸம். கண்ணிலும் நாவிலும் நீர் வர வைக்குமளவு காரத்துடன் சூப்பர் சுவை. இது முடித்ததும் எப்போவும் சாப்பிடும் வெஜ் திம்ஸமும் நினைவு வர இதைத் தொடர்ந்து அதுவும்.


Veg. Dimsum and Honey Chilli Potato (All Time Favourites)

ஒரு அசட்டு சிரிப்புடன் ரெகுலர் அயிட்டங்களான வெஜ் திம்ஸம், ஹனி சில்லி பொடேடோ கேட்க யோகியால் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டது.


Veg. Fried Rice

ஸ்டார்ட்டர் முடிக்கும் முன் மெயின் கோர்ஸும் வந்தது. அன்று நூடுல்ஸ் சாப்பிடும் மூட் இல்லாததால் நேரே வெஜ். ஃப்ரைட் ரைஸ்.


Veg. Manchurian

யோ சைனா போய் வெஜ்.மன்சூரியன் சாப்பிடாமல் வந்தால் பாவம் என்பதால் ரைஸுடன் வெஜ். மன்சூரியன். ஆஹா... நினைக்கும் போதே நீர் ஊறுகிறது நாவில். அவ்வளவு சுவை. சாஃப்ட் மன்சூரியன் பால்ஸ். இந்த மன்சூரியன் பால்ஸ் சரியாக வெந்தும், கருகிவிடாமலும் இருப்பது கலை. அந்தக் கலை எப்போதும் கைவரப் பெற்றவர்கள் யோ சைனா குக்குகள்.

Mix Vegetable Curry

ஹிஹிஹி.... கடைசியா இது பேரு மட்டும் மறந்து போச்சு. இருநூறு ரூபாய்க்கு அளவு ரொம்பக் குறைவு என யோகி குறை பட்டுக் கொண்டார். நமக்கெதுக்கு அந்தக் கவலையெல்லாம். நான் நல்லா மொக்கினேன். இதுவும் செம டேஸ்ட். பேபி கார்ன், பீன்ஸ், கேப்ஸிகமெல்லாம் அரை வேக்காட்டில் சமைக்கப்பட்டு சைனீஸ் மசாலாக்கள் தூவப்பட்டுப் பறிமாரப்பட்ட இதை விலையை மறந்து உண்டால் நிச்சயம் ரசிக்கலாம். சிஸ்லர் டேஸ்டில் இருந்தது.


இவ்வளவும் சாப்பிட்டு விட்டுக் கடைசியாக டெசர்ட்டிற்கு (Dessert) வயிற்றில் இடமில்லாததால் அதை அடுத்த நாள் கோட்டாவிற்கு யோகியிடம் பேசி சரி பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.

ரெஸ்டாரண்ட் நல்ல சுத்தமாகவும், உணவுகள் நல்ல சுகாதாரமாகவும் உள்ளன. ஒரு ரெஸ்டாரண்டில் முக்கிய விஷயம் கிச்சன் மணம் வாடிக்கையாளர் மூக்கைத் தொடாமலிருப்பது தான். அந்த வகையில் யோ சைனாவின் சுத்தத்திற்கு 90% தாராளமாகத் தரலாம்.

இன்னும் தமிழ்நாட்டில் யோ சைனா வரவில்லை. வெளியில் இருக்கும் நம் மக்கள் அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். கண்டிப்பாக எனக்கு நன்றி கூறுவீர்கள். ;) மாத முதல் நாள் தவிர மற்ற நாட்களில் பார்ட்டிக்கு இங்கே செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நானும் யோகியும் மட்டும் சென்ற பொழுது 600 ரூபாயும், அடுத்த முறை சென்ற போது 800 ரூபாயும் பில் ஆகியது.

சைனீஸ் பார்த்து வயிறெரிஞ்சவங்க, கொட்டிக்கிட்டவங்க, கொட்டிக்கப் ப்ளான் பண்ணவங்க எல்லாரும் அப்படியே ஒரு ‘யூ’ டர்ன் எடுத்து இந்தப் பக்கமும் போய் பஞ்சாபி சாப்பாடை வாசனை பிடிச்சிட்டு வாங்க. வித்யாவின் சாப்பாட்டுப் பரிந்துரைகள் எப்போதுமே தவறியதில்லை. விரலை சப்புக் கொட்டிக்கிட்டு இருந்தப்போ ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறாங்க. அவ்வளவு டேஸ்டாம் தேசி ரசோயில்.

Wednesday, March 17, 2010

கேஷுவல்ஸிலும் கலக்கலாம்


நம்ம பசங்கள்ல பாதி பேருக்கு ஃபார்மல்ஸுக்கும் கேஷுவல்ஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அப்படியே காஷுவல்ஸ் போட்டாலும் மேலிருந்து கீழ் வரை பார்க்கும் போது ஒரு லுக் வர்றதில்லை. இபப்டியெல்லாம் மொக்கையா இருந்தா ரொம்பக் கஷ்டம் பசங்களா. இதோ உங்களுக்கான கேஷுவல் டிப்ஸும், அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# (#-இது கேஷுவல்ஸ் இல்ல).

* அலுவலகத்தில் கேஷுவல் அனுமதியென்பதற்காக விருப்பம் போல் அணிந்து செல்லாதீர்கள். உங்கள் உடை உங்கள் மீதான் மதிப்பைக் குறைக்கா வகையிலும், பிறர் கண் கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். ஆஃபிஸ் HR இடம் கேஷுவல் ட்ரெஸ் கோட் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* சுருக்கமான ஆடைகளை எப்போதும் அணியாதீர்கள். டி-ஷர்ட்டாக இருந்தாலும் அயர்ன் செய்ததாக இருக்கட்டும்.

* லெதர் கைக் கடிகாரங்கள் பெரிய ரவுண்ட் டயலுடன் இருப்பது கேஷுவல் ட்ரெஸ் கோடுடன் அற்புதமாக செல்லும்.


* இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்த ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். பார்ட்டிகளுக்கு ஃபார்மல்ஸும், பீச்சிற்கு (Beach) குர்தா பைஜாமாவும் உங்களை வித்தியாசமாகக் காட்டும். பார்ட்டிகளுக்குக் கேஷுவல்ஸையும் தவிருங்கள்.

* உங்களின் ஷார்ட்ஸ் முட்டிக்கு மேல் இல்லாமலும், கணுக்காலைத் தொடாமலும் இருத்தல் நல்லது. ஷாட்ஸுடன் செருப்பு அணிவது வீட்டில் ஓகே. வெளியில் வாக்கிங், ஜாகிங், பீச் செல்லும் போது வெள்ளை நிற கேஷுவல் அல்லது ஸ்போர்ட்ஸ் ஷூஸ் அணிந்து செல்லுங்கள்.


* உங்களின் Wallet நிறைந்து அழாதிருக்கட்டும். தேவையான பொருட்களை மட்டுமே அதில் வையுங்கள். உங்களின் வங்கிக் கார்டுகளை கார்ட் ஹோல்டரில் தனியாக வையுங்கள். இதனால் உங்கள் பர்சும் பெரிதாகாது. கார்டுகள் பத்திரமாகவும் இருக்கும்.

* முடிந்தவரை ஷாப்பிங்கிற்குத் தனியாக செல்லாதீர்கள். உங்களுக்கு மற்றவரின் தேர்வு சரியாக இருக்கலாம். முடிந்தால் அந்த மற்றவர் பெண்களாக இருக்கட்டும்.

* குண்டாக இருக்கும் ஆண்கள் ‘V' கழுத்து கொண்ட டி-ஷர்ட் முயற்சிக்கலாம். இது உங்களின் எடையைக் குறைத்துக் காட்டும்.


* ஆண்கள் தலைமுடி வளர்த்து போனிடைல் போடுவது சற்று உறுத்தலான, பெண்களுக்குப் பிடிக்காத ஸ்டைல். அதைத் தவிர்த்தல் நலம்.

* உங்கள் தொடை, கால்களுடன் ஒட்டிய ஜீன்ஸைத் (Skinny Jeans) தவிருங்கள்.


* ஜீன்ஸ், ட்-ஷர்ட்டுடன் சன் கிளாஸ் (Sun Glasses) அணியலாம். குர்தா-பைஜாமா, ஷார்ட்ஸுடன் சன் கிளாஸஸ் பொருத்தமாக இருக்காது.
* பெரிய ப்ரிண்டட் டிஸைனுள்ள ட்-ஷர்ட், ஷட்டுகளைத் தவிருங்கள். இது உங்கள் மதிப்பைக் குறைத்துக் காட்டக் கூடியது.


* ஷார்ட் ஷர்ட்ஸ் மிகச் சிறந்த காஷுவல்ஸ். ஆனால் பருமனான ஆண்கள் அதைத் தவிருங்கள்.


* Ugg boots ஐ முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள். அந்த ஃபேஷன் இப்போதில்லை.

* ஏதேனும் அணிகலன்கள் (செயின், மோதிரம், வாட்ச், ப்ரேஸ்லெட்) அணிவதாக இருந்தால் அவை சில்வர் நிறத்திலிருத்தல் நலம். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் அணியாதீர்கள்.

* பேகி பேண்ட் (Baggy Pants) பழைய ஃபேஷனாகி விட்டது. இப்போதைய ஓய்வு நேர ஃபேஷன் உடை ட்ராக் சூட். நியூட்ரல் நிற (கருப்பு, கிரே, நேவி, ப்ளூ, கரும்பச்சை) நிறங்கள் ஆண்களுக்கேற்றது.


* உங்கள் பணியிடத்தில் கேஷுவல்ஸ் அணிய அனுமதியிருந்தால் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ் போதுமானது. ப்ரிண்டட் மற்றும் அடர் நிற டி-ஷர்ட்கள், ஸ்டைலிஷ் தொப்பி, கலர்ஃபுல் ஷூக்களுக்கு நோ சொல்லிடுங்க.

* விளம்பரப் படங்களில் அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது அழகாகக் காட்டப்பட்டிருக்கலாம். அதற்காக மயங்கி அதே ஸ்டைலை ஃபாலோ செய்து விடாதீர்கள். அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது உங்களைக் கோமாளியாகக் காட்டும். (திட்டாதீங்க. நிஜமாவே தான்)

* மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். புது ஸ்டைல்களை முயற்சிக்கத் தயங்காதீர்கள்.

* ஃபார்மல்ஸுடன் போகாத வெள்ளை நிற சாக்ஸ் கேஷுவல்ஸுடன் நன்றாகவே செல்லும். ஆனால் ஆஃபிஸ் கேஷுவல்ஸுக்கு வெள்ளை நிற சாக்ஸ் வேண்டாம்.

* அகலமான பெல்ட்கள் கேஷுவல்ஸுக்கு ஏற்றது. அதில் பெரிய பக்கிளுடன் (Buckle) அணியலாம். பெரும்பாலும் வெண்ணிற ஷூ அணிவதால் உடைக்கு ஏற்ற வண்ண நிற பெல்ட்டைத் தேர்ந்தெடுங்கள். லைட் ப்ரௌன் நிற பெல்ட் ஆல் டைம் கேஷுவல்.


* கேஷுவல்ஸ் ரிலாக்ஸான, ஓய்வு நேர உடையென்பதால் மைல்ட் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். விளையாடும் நேரங்களில் மட்டும் ஸ்போர்ட்ஸ் பெர்ஃப்யூம் உபயோகியுங்கள்.

* இவையனைத்தும் சிரமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் பெண்களைக் கேளுங்கள். ஆண்களை விட ஆண்களுக்குப் பொருத்தமான உடை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள்:

- நேவி அல்லது கிரே நிற சூட் (ப்ளேசர்)

- கருப்பு ஷு மேட்சிங் சாக்ஸ்களுடன்

- கருப்பு மற்றும் பிரவுன் பெல்ட்

- ப்ளைன் டை

- ப்ளைன் சட்டைகள்

- பிரான்டட் ஜீன் இரண்டு கேஷுவல் ஷர்ட்டு, டி-ஷர்ட்டுகளுடன்.

- ஒரு ஓவர்கோட். (பிரவுன் அல்லது க்ரீம் நிறம் சிறப்பு)

- ஸ்போர்ட்ஸ் வியர் செட் குறைந்தது இரண்டு

- வெள்ளை நிறக் காட்டன் கைக்குட்டைகள்


- பெர்ஃப்யூம் கலெக்ஷன்ஸ்



இனி உங்களை எத்தனை பெண்கள் பார்க்கிறார்கள் என்பதை அவர்களறியாமல் கவனியுங்கள், நீங்கள் சாமர்த்தியசாலியெனில். வாழ்த்துகள் நண்பர்களே.

அடுத்த ஃபேஷன் பகுதியில் - பார்ட்டி வியர் (Party Wear)

ஃபேஷன் தொடர்பான உங்கள் கேள்விகளையும் நண்பர்கள் மெயிலலாம். முடிந்தவரை பதிலளிக்கிறேன்.

Sunday, March 14, 2010

நிறம் மாறா மனிதர்கள் - 1

இந்தத் தொடர் இரத்த சம்பந்தமில்லாத என் உறவுகள்/நட்புகளைப் பற்றியது. நொடிக்கொரு தரம் பச்சோந்தியாய் மாறும் மனித உறவுகளுக்கிடையே எனக்குத் தெரிந்த நாள் முதல் இந்நொடி வரை மாறாத தூய அன்பு கொண்ட என் சுற்றங்களைப் பற்றியது.

இப்பதிவில் குருசாமி மாமா.


என் அம்மாவின் உடன் பிறவாத இவர் எனக்குத் தாய்மாமா. எனக்கு எப்போதிலிருந்து இவரைத் தெரியுமென்றால் அந்தக் கேள்விக்குப் பதிலில்லை. நான் பிறக்கும் முன்பே என் வீட்டுடன் நட்பு கொண்டிருந்தவர். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிறந்தும், கவனிக்க/கொஞ்ச ஒரு குடும்பமே வாய்க்கப் பெற்றவள் நான். மாமாவின் அப்பாவிற்கு நான் ரொம்பச் செல்லமாம். என் சிறு வயதிலேயே அவர் இறந்து விட்டதால் எனக்கு நினைவில்லை. பாட்டியும் (மாமாவின் அம்மா), மாமாவும் தான் எனக்கு என் அம்மா, அப்பாவை விட அதிக செல்லம் கொடுத்தவர்கள். என் குடும்பத்தில் அம்மாவின் சொந்த சகோதரர்கள் 5 பேர், என்னை நடுவில் அமர வைத்து இதுல யாருடா உனக்குத் தாய்மாமாஎனும் போது அங்கில்லாத குருசாமிமாமாவைச் சொல்லி அவர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.

இவரை இத்தொடரில் நான் முதல் ஆளாக எழுதக் காரணமுண்டு. என் அம்மா அப்பாவை விட சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தவர், இப்போதும். சிறுவயதின் அனைத்து சேட்டைகளுக்கும் என்னை அனுமதித்தது இவர் தான். நான் நடக்க ஆரம்பிக்கும் முன் இந்தப் புள்ள நடக்குமாமா.. பேசுமாமா... எப்போம்மா...என மாமா அவர் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருப்பாராம். என் கால்களைத் தடவிக் கொடுத்து என்னை நடக்க வைத்தது இவர் தான். இப்போதும் பெருமைப்பட்டுக் கொள்வார். பல மாலைகளில் மாமா வீட்டிலே நான் தூங்கிப் போவதுண்டு. அப்போதெல்லாம் எந்த அசைவுகளுமின்றி கண்ணாடி தூக்கிச் செல்லும் கவனத்தோடு என் வீட்டிற்குத் தூக்கிச் சென்று, படுக்கையில் இட்டு, நான் தூங்கும் போது எந்த சத்தமும் யாரையும் எழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டிருப்பாராம்.

தினமும் என்னைக் காட்டிற்குத் தூக்கிச் சென்று வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டே எழுத்துக்கள், சொற்கள் கற்றுக் கொடுத்தார். கிராமத்து பம்ப் செட்டில் குளிப்பாட்டி விட்டு அங்கிருந்து திரும்பி வீடு வரும் போது என் காலில் மண் ஒட்டிவிடாமலிருக்க சைக்கிளின் பெடலில் என் கால்களை வைத்து டக்கடிப்பதுஇல் ஆரம்பித்து நான் கற்றது தான் மிதிவண்டி. அப்போதும் ஏதேனும் பாடங்கள் சொல்லிக் கொண்டே வருவார். மாமாவின் லைஃப்பாய் சோப்பின் மணம் இப்போது நினைத்தாலும் என்னைக் கடந்து போகும் காற்றில் கலந்து செல்கிறது.

கிராமத்து வாசனையுடன் என் பெயரை அழைக்கும் ஒரே மனிதர். விக்கினேசுஎன மாமா அழைக்கும் போது வரும் சந்தோஷமே தனி. சிறு வயதில் பல முறை இவர் இப்படி அழைப்பதைக் கூறி அழுதிருக்கிறேன், என் பேர் விக்னேஷ்வரி. விக்னேஷ்ன்னு சொல்லுங்கஅப்படின்னு. ஆனால் இப்போது மாமாவால் அழைக்கப்படும் போது மட்டும் தான் என் பெயர் அழகாகத் தெரிகிறது.

பள்ளி செல்வதற்கு நான் தயாரான போது மாமாவின் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது. சுற்றியிருந்தோர் உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அப்புறமெல்லாம் இப்படி உன்னைத் தூக்கிக்கிட்டு சுத்த மாட்டான்என சொல்லிச் சிரித்த நேரங்களில் வெம்மையான நீர் கண்களை நிறைத்துக் கொள்ளும். மாமாவின் அம்மாவிடம், “பாட்டி, மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டா வர்ற அத்தை, என்னை மாமா கூட பம்ப் செட் போக விட மாட்டாங்களா?” எனக் கண்ணீர் பொங்கக் கேட்டு அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் வர்றவ அப்படி சொன்னா அவ அம்மா வீட்டுக்கே அனுப்பிருவேன்டா கண்ணு. நீ அழாதஎனப் பாட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். அந்த வயதில் தோன்றிய அறிவாளித் தனமான ஐடியாவால் கொஞ்ச நாளைக்கு நானே எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் நானும் மாமாவும் பம்ப் செட் போவோம், காட்டுக்குப் போவோம், எல்லா இடத்துக்கும் சுத்துவோம்என சொல்லித் திரிந்திருக்கிறேன்.

எனக்கு 14 வயதிருக்கும் போது மாமாவுக்குத் திருமணமானது. அப்போது புதிதாய் வரப் போகும் அத்தையைக் காணும் ஆவல் மட்டுமே இருந்தது. கொஞ்சம் சிறுபிள்ளைத் தனம் குறைந்திருந்ததோ என்னவோ. மாமாவிற்குத் திருமணமான பின்பும் என் மீதான அன்பு மாறவில்லை. பள்ளி செல்லும் காலை அவசரத்தில் மாமா போயிட்டு வரேன்ன்னு கத்திக்கிட்டே ஓடும் போது இருடா கண்ணுஎனத் தன் பையிலிருந்து எவ்வளவு எனப் பாராமல் கையில் வந்த சில்லரைகளைக் கொடுத்தனுப்புவார். வேண்டாம் மாமா அப்பா திட்டுவாங்கஎன்றால் என் மருமகளுக்கு நான் செய்றேன், யார் என்ன சொல்றதுஎன்ற அவரின் உரிமை, அவர் மீதான அன்பை அதிகரிக்கும்.

பள்ளி நாட்களில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால் நேராக மாமாவிடம் தான் ப்ராக்ரஸ் கார்டை நீட்டுவேன். அப்படியே மாமா வீட்டிலேயே புத்தக மூட்டையை வைத்து விட்டு நேரே ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுவார். முதல் ரேங்க் எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரின் கற்பகம் (ஹோட்டல்) சோலா பூரியும், ஒரு டசன் வளையலும் எனக்குக் கிடைப்பது உறுதி. அம்மா, அப்பாவின் மீதான பாசமும், பயமும் பெற்றுத் தராத அந்த முதல் மதிப்பெண்ணை என்னைத் தொடர்ந்து பெற வைத்தது மாமாவின் அன்பும், சோலா பூரியும் தான்.

எதிர்பார்ப்பு, ஆதாயம், தன்னலம், சூது இவை எதுவுமில்லாத அதே தூய அன்பை 2 குழந்தைகளுக்குத் தகப்பனான பின்பும் மாமாவிடம் பார்க்க முடிகிறது. போன முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “விக்கினேசு கண்ணு, உன்னை வயக்காட்டுக்கும், பம்பு செட்டுக்கும் கூட்டிட்டுப் போய் ஆனா, ஆவன்னா’ சொல்லிக் குடுத்து அடிப்படைக் கல்வி குடுத்ததால தான்டா இன்னிக்கு இவ்ளோ பெரிய உத்தியோகத்தில இருக்க”. ஒவ்வொரு முறையும் அவர் சொல்வது. அவரின் அன்பைப் பெற்ற கர்வத்தில் ஒரு சிரிப்புடன் ஆமா மாமா கண்டிப்பாஎன்பேன். வயதின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் மாமாவிடம் அதே ஓட்டத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் நான் வந்தால் உடனே அவரின் ஸ்பெஷலான இஞ்சி டீ கொண்டு வந்து கொடுத்துக் குடிடா கண்ணுஎன்பார். இப்போ தான் மாமா காஃபி குடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சுக் குடிக்குறேன்என்றால் அதனால் வாடிப் போகும் அவர் முகம் பார்க்க சங்கடமாயிருக்கும். அதனால் டீயையும் குடித்து விடுவேன். மாமாவின் பாசத்தையும், அக்கறையும் விட வயிற்றுப் பிரச்சனை பெரிதா என்ன.

என் திருமணத்தின் போது என் அப்பாவைக் காட்டிலும் அதிக பிஸியாக இருந்தார் மாமா. நான் மறந்து விட்ட ஒரு பதற்ற கணத்தில் என்னவர் மாமா எங்கேஎனத் தேடி மணவறைலிருந்து இறங்கிச் சென்று சமையலறையிலிருந்த மாமாவை அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்தார். 25 வருடங்களுக்கு முன்பிலிருந்து தொடரும் மாமாவின் அதே அன்பை இப்போது அத்தையிடமும் அவரின் குழந்தைகளிடமும் பார்க்கும் போது அதை விட சந்தோஷமும் நிம்மதியும் தரக் கூடியது வேறெதுவுமில்லை எனத் தோன்றும். மாமாவை டெல்லி அழைத்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்ச நாள் எங்களுடன் தங்கிப் போக. உன் குழந்தை வரட்டும்டா. அதுக்கு ஆனா, ஆவன்னாசொல்லித் தர வாரேன்என்கிறார். டெல்லில பம்ப்செட் இல்லையே மாமா என்றேன் ஒருவித மெல்லிய இழப்புடன்.

Tuesday, March 9, 2010

உறைந்திருக்கும் வசந்தம்


எனது காதலையெல்லாம்
காகிதத்தின்
ஒற்றைப் பக்கத்தில்
கவிதையாக்க முயற்சித்த
காலங்கள்

பயணங்களின் போதும்
கைப்பிடித்து
தோள் சாய்ந்து உறங்கிய
பிரியாத நெருக்கங்கள்

பொய்யாய் எனக்கு வந்த
வயிற்று வலிக்கெல்லாம்
நீ எடுத்த விடுப்புகள்

அலுவல்கள் அதிகமென்றாலும்
தவறாமல் உன்னிடமிருந்து வந்த
அலைபேசி அழைப்புகள்

நீ கொடுத்த
பரிசுப் பொருட்களைச் சுற்றி வந்த
காகிதத்தைக் கூடக்
கசங்காமல் மடித்து வைத்து
சேமித்து வைத்த காலங்கள்

உன் பெயர்
எழுதியெழுதியே
மை தீர்ந்த பேனாக்கள்

எல்லாம் அடங்கிவிட்டன
இந்த ஐந்து வருடத் திருமண வாழ்வில்

உனக்கான அலுவல்களில் நீயும்
எனக்கான வேலைகளில் நானும்
மூழ்கிப் போய் விட்டாலும்
அமைதியாய் அழகாய்
ஆழப் பதிந்து விட்டது
உன் மீதான அன்பு மட்டும்!


நான் கிறுக்குறது பத்தாதுன்னு கிறுக்க ஆர்வமிருக்குற எல்லாரையும் ஊக்குவிச்சுட்டு இருக்கேன். ஆயிரம் பேரை மண்டை காய விட்டாத் தான் அரைக் கவிஞர் ஆக முடியும். (ப்ளாக் மொழி) மேலே உள்ள வரிகள் என் தோழியொருத்தியின் முயற்சி, உங்கள் கருத்துகளுக்காக இங்கே.

Sunday, February 28, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - ரசிகையின் பார்வை



சிம்புவின் கைவித்தை மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை; த்ரிஷாவின் உதடு சுழிக்கும் நடிப்பு இல்லை. இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே கௌதம் மேனனின் காதல் கதையைப் பார்க்க சென்றேன். கொஞ்சமும் ஏமாற்றவில்லை. படம் முழுக்கக் காதல். ஒவ்வொருவரும் உணர்ந்த அல்லது தன் நட்பு வட்டத்தில் யாராலேனும் உணரப்பட்டிருந்த காதலையே அழகாக சொல்லியிருக்கிறார். ஐந்து பேரில் ஒருவருக்கு வரும் முதல் காதலின் அழகான ஓவியம் “விண்ணைத் தாண்டி வருவாயா”

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து விட்டு திரைப்பட இயக்குனராகும் ஆசையில் துணை இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞன் கார்த்திக். பெற்றோருக்கு சம்மதம் இல்லாத பொழுதும் அடமாகத் தன் இலக்கை நோக்கிப் போகும் ஹீரோ. மேல் வீட்டில் குடியிருக்கும் ஹவுஸ் ஓனரின் மகள், தேவதையாக ஜெஸ்ஸி. பார்த்ததும் ஒட்டிக் கொள்ளும் இல்லை, பற்றிக் கொள்ளும் காதல், அதன் சேட்டைகள், அதை சமாளிக்கும் குறும்புத் தனமான முகம் எனத் தேர்ந்த நடிப்பு சிம்புவிடம். கார்த்திக்கின் காதலை அறியும் தங்கை ”ஜெஸ்ஸி மலையாளி; கிறிஸ்டின். அதை விட கார்த்திக்கை விட ஒரு வயது மூத்தவள்” என்ற விபரங்களை சொல்லி அவன் காதல் ஒத்து வராதெனக் கண்டிக்கிறாள். அத்தகைய குழப்பங்களில் அறிவுரை (!) கூறி காதலை வளர்க்கிறார் கேமராமேன் நண்பர். இப்படியாக ஜெஸ்ஸியின் மேல் கிரேஸியாய் அலைகிறான் கார்த்திக். ஜெஸ்ஸி தன்னைத் தம்பியென சொல்லும் தருணத்தில் பயந்து போய் “I am in Love with you" என்கிறார் ஹீரோ. முறைத்துக் கொண்டு போய் விடுகிறாள் ஜெஸ்ஸி. அடுத்த இரண்டு நாட்களில் அவளைக் காணாது தவிக்கும் அண்ணனிடம் ஜெஸ்ஸி பத்து நாட்கள் அவள் பாட்டியின் வீட்டிற்கு ஆலப்பே போயிருப்பதாக சொல்கிறாள் தங்கை.


அடுத்ததென்ன, “வாரணம் ஆயிரம்” படம் பார்த்த எஃபெக்டில் “அவனவன் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கே போறான். ஆலப்பே தானே” என ஆலப்பேக்குக் கேமராமேன் நண்பருடன் பயணமாகிறான் கார்த்திக். நான்கு நாட்கள் தேடி ஜெஸ்ஸியை சந்திக்கிறான். காதலை சொன்னதற்கான மன்னிப்புக் கேட்பதற்காக வந்ததாக சொல்லி, நட்பாகக் கைகோர்க்கின்றனர் இருவரும். எதுக்காகப் பிடிச்சது என அவர்களிருவரும் நின்று பேசும் லொக்கேஷன் அருமை. சிம்புவிற்குப் பின்னால் நீண்ட ஆறும், த்ரிஷாவிற்குப் பின்னால் படகும் என தூளான கேமரா மேனின் கைவண்ணம். ஜெஸ்ஸி சென்னைக்குத் தனியாகப் பயணிக்கிறாள் என அறிந்து அவளுடனே பயணமாகிறான் கார்த்திக். அப்போது எண்ட்ரி ஓமனப் பெண்ணே பாடல். பென்னி தயாள் ஏமாற்றவில்லை. இதில் ஹைலைட்டே கேமரா தான். அசத்தலான காட்சிகள். அழகான பெண், அவள் மேல் பைத்தியமாக அலையும் பையன், ஒரே சீட்டில் இரவுப் பயணம் - பேச்சில் ஆரம்பித்துக் கால், கை எனக் கன்னத்தில் முத்தம் வரை போகிறது.


சென்னை திரும்பியவுடன் மறுபடியும் தடுமாறுகிறாள் ஜெஸ்ஸி. இந்தக் காதல் திருமணத்தில் முடியாது. இது தொடரக் கூடாது என்கிறாள். விடுவதாயில்லை கார்த்திக். ஒரு வழியாய்க் காதல் ஆரம்பிக்க, வழக்கம் போல் நாயகியின் அண்ணனுக்கும், நாயகனுக்கும் அடிதடியாகிறது. மறுபடியும் குழம்பும் ஜெஸ்ஸி. இந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் நிச்சயிக்கப்பட அதை சர்ச்சிலேயே மறுக்கிறாள் ஜெஸ்ஸி. அன்றிரவே கார்த்திக்கை சந்தித்து மீண்டும் மலர்ந்து, வாசம் வீசுகிறது காதல். காதல் மழையில் நனைகின்றனர் நாயகியும், நாயகனும்.

துணை இயக்குனராக முயற்சிக்கும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார். அந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் மறுபடியும் பேசப்படவே பதற்றமடைந்து கார்த்திக்கை அழைக்கிறாள். வேலைகளுக்கு நடுவே பேச முடியாத கார்த்திக்கிடம் கோபம் கொள்கிறாள். சிறிய சண்டை மனமுறிவாகப் போகிறது. கார்த்திக்கிற்காக வீட்டில் பேசும் ஜெஸ்ஸிக்கு அப்பாவின் தற்கொலை மிரட்டல் பயமுறுத்தவே காதலிலிருந்து விலக வேண்டிய கட்டாயம்.

இந்த காதல் மேலும் தொடர்ந்ததா... காதலின் முடிவு எப்படிப் போனது.... கார்த்திக் இயக்குனரா என்பது தான் படத்தின் கடைசி சில காட்சிகள். ஆனாலும் கடைசி சீன் வரை சீட்டை விட்டு நம்மை எழுந்திருக்க வைக்காமல் இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் தான்.

மிக அழகாக நேர்த்தியாகவே போகிறது காதல், வழக்கமான குழப்பங்களுடன்.

படத்திற்கு பெரிய ப்ளஸ் மனோஜின் ஒளிப்பதிவு. அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசைக்குக் குறைவில்லை என்றாலும் படம் முடிந்து வெளியே வரும் போது எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்வதை உணர முடிகிறது. அடுத்த ப்ளஸ் சிம்புவின் காஸ்ட்யூம் டிசைனர். அவரின் ஒவ்வொரு ஆடையும் மனதில் நிற்கிறது. நேர்த்தியான தேர்வு, வடிவமைப்பு. குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம். ஆனால் த்ரிஷாவிற்கான காஸ்ட்யூம் தான் சரி சொதப்பல். காட்டன் சேரியிலும், சுடிதாரிலும் கூட வெரைட்டி காட்டலாம் என்பதை மறந்து விட்டாரா டிசைனர் எனத் தெரியவில்லை. அதை விடக் கொடுமை அவரின் மேக்கப். எல்லா சீனிலும் இயற்கையாய்க் காட்டுவதற்காக தலையை சுருட்டையாய், சீவாதவாறு ஒரு மாதிரி விரித்து விட்டது சரி, கல்யாணத்திற்கு போகும் போதும் அப்படியேவா.... கடைசிக் காட்சியில் அவரின் கண்மை அழகாக உள்ளது. அப்படியே படம் முழுக்க இருந்திருந்தால் அவர் இன்னும் அழகாக இருந்திருப்பார். பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? கொஞ்சம் நெருடலான மேக்கப். ஆனால் லிப்ஸ்டிக்கைத் தீட்டி வைக்காமல் அழகாக, இயற்கையாகக் காட்டியிருக்கிறார்கள் த்ரிஷாவை.


அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள் சிம்புவும், த்ரிஷாவும். முதலில் சாதாரண காதல்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு. அது தான் அவர்களின் திறமையை முழுக்கக் கொண்டு வர உதவியுள்ளது. எந்த வாய்க் கோணல் சேட்டைகளும் இல்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல பாங்காக உள்ளார் த்ரிஷா. அவரிடம் ஒரு மெச்சூரிட்டியைக் காண முடிகிறது. அதே தான் சிம்புவிடமும். தனது 25 வது படத்திலாவது அவர் விரல் வித்தைகளைத் தவிர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கொள்ளை கொள்ளும் காதல் காட்சிகளில் 23 வயதுப் பையனாக மனதை அள்ளுகிறார். த்ரிஷாவிற்கும், சிம்புவிற்கும் நிஜமாகவே நல்ல கெமிஸ்ட்ரி.


படத்தின் ஒரே நெருடல் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் பார்த்தது போல் வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் ஆட்டம். முதலில் பார்க்கும் போது நளினமாகத் தான் இருந்தது என்றாலும் எல்லா படங்களிலும் பார்த்து சலிப்பே வருகிறது. வேண்டாம் கௌதம். கொடுமை. மத்ததெல்லாமே பெர்ஃபெக்ட்.


படத்தில் கொஞ்சம் லாஜிக் இல்லையெனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்கு - காதல் லாஜிக் இல்லாதது தான். இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் கொஞ்சம் கிறுக்குத் தனமானது தான். அது தான் காதலின் அழகு. ரசியுங்கள்.

யோகி கமெண்ட்ஸ் - முதல் முறையாக ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமென்பதால் என்னைப் போலவே ஆர்வம் குறையாமல் ரசித்தார். விஜய்யையும், அஜித்தையும் பார்த்து போரடித்துப் போனவருக்கு சிம்புவின் துடிப்பான துள்ளல் ரொம்பவே பிடித்து விட்டது. Worth spending 170 rupees per ticket and a travel of 60 Kms.

தியேட்டர் வாய்ஸ் - படம் முடிந்து வெளிவரும் பலரும் மனோஜின் ஒளிப்பதிவைப் புகழ்ந்தது தெளிவாகவே கேட்டது.

த்ரிஷாவை ரசித்த கணவர்களை முறைத்த பெண்களைக் காண முடிந்தது.

ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல காதல் படத்திற்குக் கூட்டி வந்ததாக ஒரு காதலி தன் காதலனைப் புன்னகைத்தார்.

ஓரிருவர் மட்டும் கிளைமாக்ஸ் சொதப்பி விட்டதாகப் பேசி சென்றனர். பலருக்கும் கிளைமேக்ஸ் பிடித்திருந்தது என்பதும் அறிய முடிந்தது.


மொத்தத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா - திகட்டத் திகட்டக் காதல் - மனதை அள்ளும் வசீகரம்.

கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.

Friday, February 19, 2010

குழந்தையின் வாழ்த்து

சிகரங்களில் கூடு கட்டும்
பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து
தெரியும் பூமியில்
நீர்க் கிழித்து எழுந்து மறையும்
டால்ஃபின் கண்ணில் தெரியும் ஆகாயமாய்
அர்த்தம் தெறித்து மறையும்
கவிதைகள் கண்ணாமூச்சி

துண்டு துண்டாய் வெட்டுபட்டாலும்
கவிதையில் இருக்கிறது
மண் புழுவாய் உயிர்
காட்டு நதியில்
நீர் குடிக்கும் மான்களின் மௌனம்
சலனமுறுகிறது
நிழல் இருக்கும் மரத்தின்
ஒரு முதிர்ந்த இலையுதிர்வில்

பெரும் பாலையின்
பறவைகள், மிருகங்கள்
கால் வலி கடக்கும்
மணல் சூரையின் உஷ்ணம் சொற்கள் இருந்தாலும்
ஒட்டகத்தின் வயிற்றில் எப்போதுமிருக்கும்
நீர்மை அன்பு
காகித மிருகத்தின்
கண்களில் ஒலிக்கும் பசி
கால்களுக்களிக்கும் பிடிவாத ஓட்டத்தின்
சுவடுகளின் அழுத்தம்
செலுத்திக் கொண்டிருக்கிறது
உன்னையும் உன் கவிதையையும்

இருவிரல் பற்றிக் கடித்த ஆப்பிளாய்
பூமியின் உள்ளும் புறமும்
கிளை மற்றும் வேர் விரித்து
கவிதை மனத் தாவரம்

கோபுர நிழலை
மிதிக்கத் தயங்கும்
குழந்தையின் கால்கள் வார்த்தைகளாக
வாழ்த்தித் தொடர்கிறேன்
இந்த நாளை

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(உங்களைப் போல் எழுதி உங்களை வாழ்த்த விரும்பினாலும், உங்களளவுக்கு இல்லை தான். புழக்கடைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பா.)

(திரு. நேசமித்திரன் அவர்களுக்கு.)

Monday, February 15, 2010

காதலைக் கொண்டாடுங்கள்


காதலர் தினம். ஊரே கொண்டாடி ஓய்ந்து விட்டது. நேற்றும் முந்தின நாளும் டெல்லி மற்றும் பெரும்பாலான வடக்கிந்திய நகரங்களில் பொக்கே வியாபாரம் களை கட்டி விட்டது. ஐம்பது ரூபாய்க்கு ஒற்றை ரோஜா என ஆரம்பித்து பத்தாயிரம் வரை பொக்கேக்கள் குவிந்துள்ளன. இதற்கு மேலும் அதிக விலையில் வேண்டுமெனில், ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரப் பலகை வேறு. பூவிற்கே இவ்வளவு விலையா என 'ஆ'வென நாம் பார்த்திருக்கும் வேளையில், "உன் மென்மையைப் பூவைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும்" என டயலாக்குகளை அள்ளி விட்ட படி இளைஞர் பட்டாளம் அப்பாவின் கருப்புப் பணத்தை இப்படி பூவில் செலவழித்து வாட வைத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தியா வழக்கம் போல் பிச்சைக்காரர்களின் நாடாக மாறி வருகிறது.

சரி நாம இந்த காதலுக்கு வருவோம். ஒரு நாள் கொண்டாடி, பரிசுகள் வழங்கி, முத்தமிட்டு, மொத்தமும் பகிர்ந்து முடிந்து விடுவது தான் காதலா.... காதல் என்பது சிரிப்பு, அழுகை, கோபம், நேசம், துக்கம் போன்றதொரு உணர்ச்சி என சொல்லலாமா... அல்லது இவையெல்லாம் கலந்த கலவை எனக் கொள்ளலாமா... அவ்வளவு தானே. காதலில் எதையும் எதிர்பார்க்காதீர்கள், நேசத்தைத் தவிர. அன்பு பகிர்வதாய் இருக்கட்டும், எதிர்பார்த்து யாசிப்பதாய் இல்லாமல். பரிசுப் பொருள்களில்லை காதல். எதிர்பாராமல் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் தான் உள்ளது.

ஆடம்பர டிஸ்கோக்கள், அளவுக்கதிகமான சாப்பட்டு வகைகள், அதிக விலைப் பயணங்கள், அடுத்த நாள் தூக்கியெறியப்படும் மலர்க் கொத்துக்கள், என்றோ உடைந்து போகும் பரிசுப் பொருள்கள் இவைகளில் இல்லை காதல்.

கல்லூரி நாட்களில் தோழிகளிடம் காதலர் தினம் பற்றிய பேச்சு வந்துள்ளது. முதல் முத்தம், ஒரு டைரிக் கவிதைகள், கட்டித் தூங்க ஒரு டெட்டி பியர், நாட்குறிப்பில் புதைத்து வைக்க ஒற்றை ரோஜா எனக் காதலர்கள் சேமித்த யாவும் ஏதேனும் ஒரு தோழியிடம் பத்திரமாய் ஒளித்து வைக்கப்பட்டு (முத்தம் தவிர ;) ), மனதில் மறைத்து வைக்கப்பட்டுள்ள காதலுடன் மணவறை ஏறிய கதைகள் ஆயிரம். காதலின் முடிவு திருமணம் என்றில்லை. ஒவ்வொரு காதல் வெற்றியைப் போலவே கொண்டாடப்பட வேண்டியது காதல் தோல்வியும். அந்தக் காதல் தோல்வியும் இனிமையாய் இருந்தால் தானே இனிக்கும். ஒரு காலத்தில் உயிராய் இருந்த இருவர் சில வருடங்கள் கழித்துக் கண்டும் காணாமல் முறைத்துப் போவது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. காதலித்ததை ஒரு போதும் தவறென குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

காதலிக்கத் துணிவிருந்தது போல் அதை பெற்றோரிடம் சொல்லவும் துணிவிருக்கட்டும். காதலை வைத்துக் கல்யாணத்திற்காகப் பிச்சை எடுக்க வேண்டாம். காதல் அழகான விஷயம். அதை அதே அழகுடன் வாழ்நாள் முழுக்கக் கொண்டு செல்லுங்கள். தோழிகளுக்குள் திருமணமான அனைவரும் தங்களது காதலர் தின கொண்டாட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தோழியின் கணவர் அவள் நீண்ட நாளாய் ரிப்பேர் செய்து தர சொல்லிக் கேட்டிருந்த அவளது கேமராவை சரி செய்து பரிசளித்திருக்கிறார். மற்றவர், அன்று முழுவதும் அவளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சமைத்திருக்கிறார். இன்னொமொரு தோழி அவள் கணவர் நீண்ட நாளாக வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்கிப் பரிசளித்தருக்கிறாள். மற்றுமொரு காதல் ஜோடி அவர்களின் காதல் நாட்களில் சென்று வந்த இடங்களுக்கு மறுமுறை சுற்றி வந்திருக்கிறது. ஐம்பதுகளில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் காலாற நடந்து கதை பேசி ஒன்றாக அனைத்து வேலைகளையும் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் காதலை வாழ வைக்கின்றன. ஆடம்பரக் கூத்துக்களல்ல.

காதல் என்பது உணர்ந்து அனுபவிக்கப்ப்ட்டு வாழ வேண்டியது. கட்டாயத்தாலோ, பரிசுப் பொருட்களாலோ அல்ல. காதலை உணருங்கள், பகிருங்கள், மூழ்குங்கள். காதலர் தினம் ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 லிருந்து அடுத்த ஃபிப்ரவரி 14 வரை தொடரும் பயணம். ஒவ்வொரு வருடமும் இந்த பயணத்தைப் புதுப்பித்து மகிழவே காதலர் தினம், ஒரு நாள் மட்டும் காதலிக்க அல்ல.

நாங்களும் காதலில் பிஸியாக இருந்ததால் ஒரு நாள் லேட் பதிவு. :)

காதலர் தின வாழ்த்துக்கள். காதலைக் கொண்டாடுங்கள் - ஒவ்வொரு நாளும்.