Monday, August 15, 2011

ஸ்திர பந்தமிது


சிறகுகளின்றிப் பறந்த கல்லூரி நாட்களின் வண்ணங்கள் நிறைந்த ஒரு ஹோலி தினத்தில் தான் அவனும் நானும் நண்பர்களானோம். ஒருவர் மேலொருவர் வண்ணங்கள் தூவி முகம் அடையாளமழிந்த பூதாகரத் தோற்றத்தில் பூத்தது அந்நட்பு. சரியாக அந்நட்பு சகோதரப் பாசமாய்ப் பரிணமிக்க எத்தனை நாட்களானதென்து என் மூளையின் ஹிப்பகேம்பஸில் சேமிக்கப்படவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பான “அண்ணா” எனும் உறவை எளிதில் யாரிடமும் உபயோகிக்கத் தயக்கம் கொண்டவள் நான். ஆனால் இவன் என் சகோதரன் என்பது மட்டும் எப்படியோ பதிந்து போனது என்னுள். அவனுள்ளும். என் நல்தோழியான அம்மாவுடனான உரையாடல்களில் “ஜனாண்ணா” அதிகமிருந்தான்.

கல்லூரி முடிந்து திரும்பும் மாலைகளில் பேருந்தைத் தவிர்த்து ஒன்றாய் நடக்கத் தொடங்கினோம். அவனுடைய பேட்மிண்ட்டன் முடியும் வரை நானும் சில நாட்களில் என் வகுப்பில் ப்ரசண்டேஷன் முடியும் வரை அவனும் காத்திருப்பது இருவருக்கும் பிடித்தமாகிப் போனது. நிறைய ரசனை பகிர்ந்தோம். ஒருவருக்கொருவர் புத்தகங்கள் பரிந்துரைத்தோம். கடைசி செமஸ்டரில் கிட்டத்தட்ட எல்லா மதிய உணவு வேளையும், மாலை நேரங்களும் ஒன்றாகவே கழிந்தன. ஒன்றாய்ப் படிக்க வேண்டுமென அமர்ந்த நேரங்களும் ஜே.கே. வின் எழுத்துகள் பற்றிய பேச்சிலேயே கரைந்து போயின. செல்ஃபோனில் அவனுக்கெனத் தனி ரிங்டோன் சேமிக்கப்பட்டது. அந்த இசை வருகையிலெல்லாம் அனிச்சையாய் “சொல்லுடா ஜனாண்ணா” என்றன உதடுகள். அவனைச் சுற்றி வந்த பெண்கள் எனக்கு அண்ணிகளாயினர். அவன் பிறந்த நாளுக்காய்ப் பகலிரவு அமர்ந்து ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்தேன். திடீரெனக் கிளம்பி நெடும்பயணம் செய்தோம். கோவில்களில் ஒன்றாய் சுற்றினோம். திரைப்படங்கள் ஒன்றாய் ரசித்தோம். கொஞ்சமாய் சண்டையிட்டோம். அதிகம் புரிந்தோம்.

“ஏய் விக்கி, நேத்து ஜனாகூட எங்கேடி போன... நீங்க அண்ணன் தங்கைன்னு எனக்குத் தெரியும். பாக்கற எல்லாரும் அப்படி நினைப்பாங்களாடி” என அரற்றிய தோழியை “சொந்த அண்ணன் கூடப் போனாலே பாய்ஃப்ரெண்டான்னு கேக்கறவங்க எங்களை மட்டும் நல்லாவா நினைச்சிடப் போறாங்க... விடுடி.. அடுத்தவங்களுக்காக வேண்டாம், நமக்காக வாழலாம். அவன் என் அண்ணன்”, தீர்க்கமாய் சொல்லிப் போனேன்.

ரக்‌ஷா பந்தன் தினத்திற்கு ஒரு வாரம் முன்பே அவன் கைகளுக்கேற்ற ராக்கி தேடியலைந்தேன். சகோதரர்களுடன் பிறந்திராத எனக்கு முதல் சகோதரனான ஜனாவுடனான அந்த ராக்கி நாளில் அலுவலகத்திற்கு விடுமுறையெடுத்து நாள் முழுவதும் அவனுடன் கொண்டாடினேன். ஆர்ச்சீஸ் பரிசுகளும், கேட்பெரீஸுமாய் கை நிறைய மனம் நிறையக் கொண்டாடினோம்.

என் அம்மாவின் சுவீகரிக்கப்பட்ட மகனானான். திருமணத்திற்கு முன்னரே என்னவரின் பெயர் தவிர்த்து “மாப்பிள்ளை”யென அழைத்தான்.

வாழ்க்கைப் பயணத்தில் இரு வேறு திசைகளில் பயணமானோம். எந்தப் போலி முகங்களுமின்றி இயல்பாய் விடைபெற்றோம். எப்போதாவது நடக்கும் தொலைபேசி உரையாடல்களும் வாழ்க்கை, பொறுப்பு, வேலை என்பதைப் பற்றிய பேச்சாகவே தொடர்ந்தன.வாழ்வோட்டத்தில் ரசனைகளுக்கு நேரமின்றிப் போனது.
“ஏண்டா ஜனாண்ணா அப்பா சொல்ற மாதிரி வேலைக்குப் போயேண்டா”
“இல்லடா.. நான் பிசினஸ் தான் பண்ணப் போறேன். எனக்கு வேலையெல்லாம் சரிப்படாது”
“சரிடா, அதையும் கத்துக்கிட்டு செய்யுன்னு தான அப்பா சொல்றாரு”
“நீச்சலடிக்கணும்னு சொல்றேன். அதை புக்கைப் பாத்துக் கத்துக்கோங்கறாரு அவரு. நீயும் அவருக்கு சப்போர்ட் பண்றியா..”
எனத்தொடங்கும் உரையாடல் வசைகளிலும், அறிவுரைகளிலும் காரமேறிப் போகும்.
வருடம் முழுவதும் பேசாமலிருந்துவிட்டு ரக்‌ஷாபந்தனன்று வாழ்த்திக் கொள்வோம். என் ராக்கி அவனைத் தேடிச் சேர்ந்தது.

ஒரு ரக்‌ஷாபந்தனன்று காலை கைபேசியில் வாழ்த்திவிட்டு நேரமில்லா நாளின் மாலை நேரம் வேலை முடித்துப் பேருந்து நிலையம் விரைகையில் அங்கு வந்து நின்றான் என் அண்ணன். நெகிழ்ந்து போனேன். அங்கேயே ராக்கி கட்டி இனிப்புகள் பகிர்ந்து கொண்டோம்.

அவனைப் பார்க்க முடியா வருடங்களிலும் அவனுக்கென வாங்கி ராக்கிகள் சேமித்து வைத்தேன். ஒரு மாதம் முன்பழைத்து சொன்னான். “ஹேய், டெல்லில இருக்கேண்டா. ரக்‌ஷா பந்தன் அன்னிக்கு வீட்டுக்கு வரேன்.” தரைக்கும் வானுக்குமாய்க் குதித்தேன். அந்நாள் முழுதும் அவன் கதை பேசினேன் என்னவரிடம். ரக்‌ஷா பந்தனன்று பயணிக்கும்படி அலுவல் வேலை அழுத்தியது. எவ்வளவோ மறுத்தும் வேறு வழியின்றிப் போக வேண்டியிருந்தது. ஜனாவை ஒரு வாரம் முன்பே அழைத்து “நீ வந்து ராக்கி வாங்கிட்டுப் போடா. ரக்‌ஷா பந்தன் அன்னிக்கு நீயே என் பேர் சொல்லிக் கட்டிக்கோ. நான் டெல்லி ரிட்டர்னானதும் ஒரு வீக்கெண்ட் பார்த்து செலப்ரேட் பண்ணிக்கலாம்” என சோகமாய் சொன்னேன். வீடு வந்து ராக்கி வாங்கிச் சென்றான். கூடவே என் அலமாரி திறந்து புத்தகங்களும் எடுத்துக் கொண்டான். பஞ்சாபி முறைப்படி ராக்கியுடனிருக்க வேண்டிய சில பொருட்களையும் கொடுத்தனுப்பி அதைக் கட்டிக் கொள்ளும் முறையைப் பத்து தடவைகளுக்கு மேல் விளக்கிச் சொல்லியனுப்பினேன். நம்மூரில் பலருக்கும் விளையாட்டாய்த் தெரியும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை உண்மையில் விளையாட்டான விஷயமில்லை. ஒவ்வொரு உறவுக்கும் வலிமை, உண்மை இருப்பது போல் இதற்கும் ஒரு உறுதியுண்டு. அண்ணன்-தங்கை உறவும் புனிதமானதே. அதை யாரேனும் கேலியாக்குகையில் கோபம் பொங்குகிறது.

இந்த ரக்‌ஷா பந்தனன்று நான் கொடுத்த ராக்கியை முறைப்படிக் கட்டிக் கொண்டானாம். எந்த முறைகளும் தெரியாமல் கோவையில் கொண்டாடி மகிழ்ந்த ரக்‌ஷாபந்தனின் இனிமை இப்போது ஏனோ இல்லை. எனக்கு ஏனோ இவ்வருடம் இன்னும் ரக்‌ஷா பந்தன் வரவில்லை. என் அண்ணன் கேட்பெரீஸூடன் வரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன்.

மிஸ் யூ ஜனாண்ணா.

26 comments:

கோவை நேரம் said...

நெஞ்சை தொட்டு செல்லும் உங்களது வரிகள் .மென் மேலும் வளர வாழ்த்துக்கள்..

சுசி said...

எழுதுங்க எழுதுங்கன்னு சொன்னா கேக்கணும்.

அழகான எழுத்துக்கும் உங்க பாசத்துக்கும் வாழ்த்துகள் விக்கி :))

பரிசல்காரன் said...

வெல்கம் பேக்! 

பதிவு பிடிச்சிருக்கு. பதிவைவிட ஒரு சிட்டிகை அதிகமா லேபிள் பிடிச்சிருக்கு! 

Yaathoramani.blogspot.com said...

சொல்லும் விஷயமும்
அதைச் சொல்லிச் செல்லும் விதமும்
அருமையிலும் அருமை
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

Good feel.

என்னங்க... ரொம்ப நாளா ஆளையேக் காணோம்.

தராசு said...

கலக்கல்,

முன்பொருமுறை நானும் இதை சகோதரத்துவத்தின் உன்னதம் என பதிவிட்டுள்ளேன்.

Unknown said...

அருமையான பந்தத்தை கூறினீர்கள் நன்றி

Unknown said...

அருமையான பந்தத்தை கூறினீர்கள் நன்றி

Unknown said...

அருமையான பந்தத்தை கூறினீர்கள் நன்றி

DINESH said...

welcome back....gud one..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு விக்கி. சகோதரத்துவம் என்பது நல்ல உணர்வு.

நீண்ட இடைவெளிக்குப் பின் நல்லதோர் இடுகை... வாழ்த்துகள்.

CS. Mohan Kumar said...

Welcome back. Keep writing.

prenitha said...

very nice

Raghu said...

நீங்க‌ ப்ளாக்லாம் கூட‌ எழுதுவீங்க‌ளா விக்கி ;))

//ஸ்திர பந்தமிது//

//சகோதரப் பாசமாய்ப் பரிணமிக்க எத்தனை நாட்களானதென்து என் மூளையின் ஹிப்பகேம்பஸில் சேமிக்கப்படவில்லை//

ஸ்ஸ்ஸ்....You are really back!

//கேடெப்ரீஸூடன் வரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன்.//

உங்க‌ளோட‌ ப‌திவில் எழுத்துப்பிழை!

ஷர்புதீன் said...

welcome back!

:-)

'பரிவை' சே.குமார் said...

அழகான எழுத்துக்கும் உங்க பாசத்துக்கும் வாழ்த்துகள்.

KSGOA said...

manadai totta padivu.niraya elzudunga.

Unknown said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களது பதிவு.படிக்கவே சந்தோஷமா இருக்கு.
அண்ணாவைப் பற்றி அருமையா எழுதிருக்கீங்க.
தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பதிவு தந்திருக்கீங்க.

சகோதரத்துவம் என்றுமே சிறந்தது.

அன்பேசிவம் said...

நல்லா இருக்கு விக்கி.

தங்கைக்கும்,ஜனான்ணாவுக்கும் வாழ்த்துகள்.

Natraj said...

விக்கி மேடம் , மாசத்துக்கு ஒன்றாவது எழுதுங்கள் , வி மிஸ் யு

லதானந்த் said...

என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது இந்தப் பதிவு.

மாலதி said...

ஒரு நேர்த்தியான இலவாழ்கையை கண்முன்னே கொண்டு வந்தத்தைபோல சிறப்பான பதிவாக இருக்கிறது பாராட்டுகள் தொடருங்கள் ...

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

சி.பி.செந்தில்குமார் said...

நீட்

வானவில்லின் வண்ணங்கள் said...

nice flow, i realy enjoy the feel.