Tuesday, December 21, 2010

இனிது இனிது காதல் இனிது


இந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.

காதலின் இனிமையை, காதலின் வலியை, காதல் தரும் நிதானத்தை, காதல் தரும் உறுதியை, காதல் தரும் தெய்வீகத்தை, காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசத்தை, இடைவெளியை எளிதாய், அருகிலேயே அமர்ந்து தோள் பற்றி நண்பன் சொல்வதற்கு நிகராய் சொல்கிறார் பாலகுமாரன்.

காதலில் எத்தனை வகை, எப்படியெல்லாம் காதல் வரும், எதையெல்லாம் காதலெனலாம், காதலில் வெற்றி எது, காதலில் தோல்வியுண்டா... என காதலைப் பற்றிய எல்லாக் கேள்விகளையும் தெளிவாய், பொறுமையாய் அவர் சந்தித்தக் காதல் அனுபவங்கள் கொண்டு அழகாய் விளக்கியுள்ளார். எங்குமே யாருக்குமே அறிவுரை கூற அவர் எத்தனிக்கவில்லை. முழுக்க முழுக்க வாழ்க்கைப் பாடங்களை புத்தக வரிகளாய்க் கொடுத்துள்ளார்.

அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கோர்வையின்றி மடித்து மடித்தெழுதி, சினிமாத்தனமான காதலை இந்தத் தலைமுறைக்குத் திணிக்கும் சில காதல் கவிஞர்களென அழைக்கபடுகிறவர்கள் மத்தியில் காதலின் உண்மையை, உன்னதத்தைத் தெரிவிக்கும் இந்நூலை ஒரு வருடமாக என் வீட்டுப் புத்தக அலமாரியில் வைத்துப் பூட்டிய பாவியானேன். மிஞ்சிப் போனால் நான்கே நாட்களில் இரண்டு பாகங்களையும் முடித்து விடுமளவு எளிமையான மொழி. வாழ்க்கையின் அர்த்தத்தைத் அறிவித்துப் போகிறது.

புத்தகத்தில் அடிக்கோடிட வேண்டிய வரிகள் என்றில்லாது மொத்தப் புத்தகமுமே சம்பவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் வந்து வந்து போகிறது. நிச்சயம் நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்.

பாலகுமாரன் பெண்களின் மனதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் என அம்மாவில் ஆரம்பித்து அனேகமாய் அவரை வாசித்தவர்கள் அனைவரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் மனதை மட்டுமல்ல. மனித மனதை, மனித மனத்தின் உணர்வுகளை நன்கு புரிந்தவரென்பதை இப்புத்தகத்திலும் காட்டியுள்ளார்.

காதலிப்பவர்கள், காதலை வெறுப்பவர்கள், காதலைத் தூற்றுபவர்கள், போற்றுபவகள், கொண்டாடுபவர்கள், காதலில் திளைப்பவர்கள், காதலைக் கடந்தவர்கள் என எல்லாராலும் விரும்பப்படும் புத்தகமிதென்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இது காதலருக்கான புத்தகமல்ல. காதலின் புத்தகம்.

பெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.

புத்தகம் - இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2)
ஆசிரியர் - பாலகுமாரன்.
வெளியீடு - விசா பதிப்பகம்.
விலை - ரூ. 75 + ரூ. 68/-
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 1991.

18 comments:

இராயர் said...

நூறு தடவையாவது படிச்சி இருப்பேன்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி !

நிலாமதி said...

நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்..........


True))

Unknown said...

welcome back.

தராசு said...

நல்ல விமர்சனம். சரி, அனுபவம் பேசுது. ரைட்டு.

கனிமொழி said...

:) அடுத்து இந்த புத்தகம் தான் வாங்க போறேன்..........

Arun Prasath said...

நமக்கு தேவையான புக் தான்.. படிச்சதில்ல... வாங்கிடறேன்

க.பாலாசி said...

நன்றிங்க பகிர்வுக்கு.. நானும் இன்னும் வாசித்ததில்லை.. வாங்கி படிக்கிறேன்.

அன்பேசிவம் said...

ஹாய் விக்கி, இன்னும் படிச்சதில்லை, நல்ல அறிமுகம்..
//உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன்//

பரிந்துரைத்ததெல்லாம் போதும், பரிசளியுங்கள்... அண்ணனுக்கும்ங்கிறத சேர்த்திக்கலாமே... :-)

trdhasan said...

நான் இன்னும் படிக்கல. எப்படி தவறா விட்டேன்னு தெரியல. கண்டிப்ப எனது அடுத்த வாசிப்பு "இனிது இனிது காதல் இனிது" தான்.

விக்னேஷ்வரி said...

ஓ, நானும் வாசிச்சிட்டே இருக்கேங்க இராயர்.

நன்றி கனாக்காதலன்.

வாங்க நிலாமதி.

நன்றி கலாநேசன்.

வாங்க தராசு. :)

ஓ, கண்டிப்பா பெண்களுக்குப் பிடிக்கும் கனிமொழி.

நிச்சயம். வாசிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க அருண் ப்ரசாத்.

நல்லது பாலாசி. தவற விடாதீங்க.

அனுப்பிடலாம் ப்ரதர். அட்ரெஸ் மெய்ல் பண்ணிடுங்க. காதலைக் கடந்த அண்ணனுக்கும் பரிசளிக்கலாம். :)

மிக்க மகிழ்ச்சி டி.ஆர்.தாசன். நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும்.

Thamira said...

இன்னும் படிச்சதில்லை, நல்ல அறிமுகம்..

இந்த புக் ஃபேரில் வாங்கிவிடவேண்டியதுதான்.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாம் பகுதியை விட முதல் பகுதியைத் தான் நான் அதிகம் ரசித்தேன் - படித்தேன். நல்ல பகிர்வு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் இடுகை. நன்று.

CS. Mohan Kumar said...

இந்த புத்தகத்தில் என்னுடைய முன்னுரை மூணு பக்கத்துக்கு வந்திருக்கு. ம்ம் அது ஒரு காலம் அப்போ நான் பால குமாரன் ரசிகன் !! புத்தகம் கையிலிருந்தால் எடுத்து பாருங்கள். மோகன் குமார் நீடாமங்கலம் (சொந்த ஊர்!!) என்ற பெயரில் கடிதம் இருக்கும் !!

ADHI VENKAT said...

நல்லதோர் நூல் அறிமுகம். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

//பெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.//

நானும் இன்னும் படிச்சதில்லை.. நிச்சயம் வாங்கி படிக்கிறேன்.

Nagasubramanian said...

வாசித்துப் பார்க்கிறேன்.
விகடனின் "காதல் படிக்கட்டுக்கள், காதல் கல்வெட்டுக்கள்" புத்தகங்களையும் படித்துப் பாருங்கள்.

dr.tj vadivukkarasi said...

hello madam,after reading ur post felt like reading the book again. had read in my school days. not enough should read it again.thanks.