Friday, September 10, 2010

பழக்கத்தில் வந்தது


பதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வாசிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)


*************************************************************************************************************


கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )


*************************************************************************************************************


க.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் மஞ்சள் வெயில்ஐக் கையிலெடுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)


*************************************************************************************************************


லஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)


*************************************************************************************************************

நா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)


*************************************************************************************************************


வாசிப்பில் கவர்ந்தது

பழக்கத்தில் வந்தது..

பள்ளியே எனக்காகக்

கைதட்டியபோது

ஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..

மக்கு என்றார்கள் அவளை!


மேலே படிக்க

நான் கெஞ்சி நின்ற போது

தவறிய பேப்பர் எழுத

முரண்டு பிடித்தாள்..

ஞான சூன்யம் என்றார்கள் அவளை!


அரசு வேலைக்காக

நான் தேர்வெழுதிய போது

அம்மாவுக்குப் போட்டியாக

வீட்டு வேலை செய்தாள்..

இது இவ்வளவு தான் என்றார்கள் அவளை!


போஸ்டிங் வாங்கியதும்

என்னைப்

பெண் கேட்டு வந்தார்கள்..

இதுவும் இருக்கே என

அவளைத் தான் முறைத்தார்கள்!


யாருமே எதிர்பார்க்கவில்லை..

ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு

அவளுக்குக் காதல் வருமென்று!


சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு

ஃபாரின் பறந்தவள்

அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!

- கோ. தமிழ்ச்செல்வி


*************************************************************************************************************


யோகி டைம்ஸ்

யோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என் மேலே போடுகிறார்.

20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.

“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )

40 comments:

Anbu said...

வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார்

:-)))

கவிதை சூப்பர்...

தராசு said...

//நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார்//

எப்படி, ஷாஹித் கபூர் மாதிரியான உடம்பா?????

sathish said...

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!superb line

KATHIR = RAY said...

http://classroom2007.blogspot.com
இந்த தளத்தில் நீங்கள் ஜோதிடம் படிக்கலாம்

வினோ said...

/ யாருமே எதிர்பார்க்கவில்லை..
ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு
அவளுக்குக் காதல் வருமென்று!

சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு
ஃபாரின் பறந்தவள்
அடிக்கடி ஃபோன் செய்கிறாள்.. /

இது எல்லாம் இப்போ சகஜம் விக்கி..

எல் கே said...

yogi times and kavithai super vigneswari

அன்பரசன் said...

கவிதை பிரமாதம்.

R. Gopi said...

எல்லாமே நல்லா இருக்கு.

sakthi said...

அழகாய் தொகுத்து உள்ளீர்கள்

பதிவர் சந்திப்பு நீங்கள் வாசித்த புத்தகம்பற்றி, பார்த்த திரைப்படம்
நீங்கள் ரசித்து படித்த கவிதை
என

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களோடு சில கணங்களை உபயோகமாகக் கழிக்க முடிந்ததில் சந்தோஷம் தோழி..:-))

@@

சிவக்குமாரின் பலமே அவருடைய மொழிநடைதான்.. அடுத்ததாக மஞ்சள் வெயிலா? மீண்டும் ஒரு முறை காதலில் செத்துப் பிழைக்கத் தயாராகுங்கள்..அருமையான புத்தகம்.. அதைப் படித்து மூன்று நாட்கள் பேய் பிடித்தது போலச் சுத்தியிருக்கிறேன்..:-))

@@

யோகி டைம்ஸ் - :-)))))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

(வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )

:-)
உண்மை சிலசமயம் கசக்கும் விக்கி!!!

Jerry Eshananda said...

மன்னிக்க வேணும் விக்கி...மதுரை பதிவர் சந்திப்பில் உங்களை மிஸ் பண்ணிட்டேன்,"அடுத்த வாட்டி..நம்மூருக்கு வர்றப்போ..கடா வெட்டி கஞ்சி ஊத்துறேன்."

அமுதா கிருஷ்ணா said...

கவிதை அருமை.சென்னைக்கு எப்ப வரீங்க..ஙே அருமை..

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Hi,

I just started reading blog.

I really like these lines:

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!

Very realistic words and showcase of modern Indian society.

velji said...

/அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம்/
அருமை!

பிரபஞ்ஜத்தின் அளவு 2500 கோடி ஓளி வருடமாம். ஒளி செகண்டுக்கு 300000கிலோ மீட்டர் செல்கிறது.அப்படி ஒரு வருடத்திற்கு செல்லும் தூரம் ஒரு ஒளிவருடமாம்.astrlogy-ஐ reconsider செய்யுங்கள்!

கவிதை.. நிதர்சனம்!

Cable சங்கர் said...

பழக்கத்தில் வந்தது.. இண்ட்ரஸ்டிங்.. கம்பைளிங்.. எப்ப சென்னை வர்றீங்க?

mightymaverick said...

அம்மிணி... மதுரை பதிவர் சந்திப்பு என்று ஒரு கோடிட்டு காட்டி இருந்தால், நானும் வந்து கலந்து கொண்டிருப்பேனுல்லோ... சரி விடுங்க... நாலு வருசத்துக்கு முன்னாடி சொன்னதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வச்சு அப்படியேவா சொல்லுவது... கொஞ்சம் வித்தியாசமாய் சொன்னா இப்படி பேக்கு ஆவதில் இருந்து தப்பிக்கலாம்ல...

a said...

//
கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன்
//
ஹா ஹா ஹா...................

என் அம்மாவிடமும் இதே வார்த்தைகளை நான் பலமுறை சொல்லிஇருக்கிறேன்....

ADHI VENKAT said...

அழகாக தொகுத்துள்ளீர்கள். கவிதை அருமை.

vinu said...

ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (: vara vara blog ulagil oru puthu viyaathi, kalyanam aanvargal ellorukkum thotrikkondu varugirathu, ithu pola kaathil pugai varum mater eathayavathu posttil pottu engali ppondra singler's vayeatherichalai kottikolvayhae vealaiyaagipponathu

Unknown said...

கவிதை அருமை.

ஜோசியமெல்லாம் சும்மாங்க....

Siva said...

சஞ்சீவ் கபூர் முதல்ல ஹோட்டல் திறந்தது எங்க ஊருதாங்க.. ஹைதராபாத் ... அவர் ஆரம்பம் எப்போதும் நல்லா இருக்கும் பினிஷிங்ல சொதப்பிடுவாரு. இப்ப சாப்பிட முடியலை

Unknown said...

வெல்கம் பேக்கு சிஸ்டர்....
:-)

'பரிவை' சே.குமார் said...

கவிதை சூப்பர்..!

பதிவர் சந்திப்பு இனிதாய் அமைந்தது என்பது உங்கள் வரிகளில் தெரிகிறது.

R.Gopi said...

ஹை...ஹை...ஹை....

நிறைய சுவாரசியமான செய்திகளின் தொகுப்பு, படிக்கவே ஜோராய் இருந்தது.

பல விஷயங்களை தொகுத்து, அழகிய மாலையாக்கியமை பாராட்டுக்குறியது..

//படித்து சேகரித்த ஆங்கிலத்தை
விழுங்கி செரிக்கிறது
பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!//

இந்த வரிகள் சூப்பர்

பதிவர் சந்திப்பு பலே...

Raghu said...

தாடைல‌ கை வெச்சு போஸ் குடுக்க‌றீங்க‌...ப்ச் பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்னாலே இப்ப‌டித்தான் போல‌!

//வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் //

பாவ‌ம் எவ்வ‌ளோ நாள்தான் அவ‌ரால‌யும் பொறுத்துட்டிருக்க‌ முடியும் சொல்லுங்க‌ :)))

Ganesan said...

இந்த மதுரகாரங்க பதிவர் சந்திப்பு போட்டா, பதிவுல போட்டா தானே வரமுடியும்.

மார்கண்டேயன் said...

மருதக் காரங்க கொஞ்சம் பாலரெங்கபுரம் பக்கம் வந்துட்டுப் போறது . . . அதாங்க நம்ம கட பக்கம்

Vidhya Chandrasekaran said...

யோகி உண்மையத்தான் சொல்லுவார்:))

அப்புறம் திரும்ப ஒரு சாரி. நீங்க தப்பிச்சிட்டீங்க:)

Unknown said...

"படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!"தலைப்பு அருமை... கவிதை அருமை... தொகுப்புகள் அருமை...

பாராட்டுக்கள்...

commomeega said...

தம்பதியினர் ஒரு நாளைக்கு பல டைம் i love you தங்களுக்குள் சொல்லி கொள்ள வேண்டுமாம் .ஒரு i love you ஆயிரம் அன்பு வார்த்தைகளுக்கு சமம். ஆபீஸ்யில் இருக்கும் போது-உம் போன் போட்டு சொல்ல வேண்டுமாம்.பார்க்கும் போதல்லாம் சொல்ல வேண்டுமாம் . என்று மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.எனவே நீங்கள் சொன்னது மிக சரி.

Thamira said...

முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது//சீக்கிரம் இலக்கியவாதியாயிடுவீங்கன்னு நினைக்கிறேன். :-)

அப்புறம் கவிதை அழகு.

தருமி said...

புதிதாக வந்தேன். நல்ல நடை. அழகாக இருக்கிறது - சொல்ல வந்த எல்லாமே.

ஸாதிகா said...

//சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு
ஃபாரின் பறந்தவள்
அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..
படித்து சேகரித்த ஆங்கிலத்தை
விழுங்கி செரிக்கிறது
பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!
// அருமை!

vinu said...

வர வர ப்ளாக் உலகில் ஒரு புது வியாதி , கல்யாணம் ஆனவர்கள் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டு வருகிறது , இது போல காதில் புகை வரும் மேட்டர் எதையாவது போஸ்ட்டில் போட்டு எங்களை போன்ற singler's வயீதெரிச்சலை கொட்டிகொல்வதே வேலையாகிபோனது

Sen22 said...

அருமையான கவிதை...

cheena (சீனா) said...

அன்பின் விக்னேஸ்வரி

அலுவல் - பணிச்சுமை காரணமாக - வெளியூரில் இருந்ததன் காரணமாக - மதுரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. நல்லதொரு சந்திப்பினை நழுவ விட்டேனே !

ஆகா ஆகா - சென்னை - டில்லி - கானல்நீரும் மஞ்சள் வெயிலுமா - பலே பலே -

லஃபாங்கே பரிந்தே - பட விமர்சனம் அருமை

யெல்லோ சில்லி - மெனு கார்ட் - விலை - கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமை - ஸ்டார்ட்டர் - அளவு - ஆரோக்கியம் - அப்பா - இப்படி எல்லாம் விவரித்து ஒரு உணவகத்தைப் பற்றி எழுத இயலுமா - அருமை அருமை

படித்ததில் பிடித்தது - படித்து சேகரித்த ஆங்கிலத்தைவிழுங்கி செரிக்கிறதுபழக்கத்தில் வந்த ஆங்கிலம்!- கோ. தமிழ்ச்செல்வி

சூப்பர்

யோகி டைம்ஸ் கேக்கறாருல்ல - ஐ லவ் யூக்குப் பதிலா வேற ஏதாச்சும் சொந்தமா காப்பி அடிக்காம சொல்லலாம்ல - அவர் தானே ட்ரெயினிங் கொடுத்தாரு மொத மொதல்ல

நல்லதொரு இடுகை - இரசித்து மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள் விக்னேஸ்வரி
நட்புடன் சீனா

janaki said...

சொந்த ஊர் பயணம் பலமா இருந்து இருக்கும் போல ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம் .......

சி.பி.செந்தில்குமார் said...

ரசித்தேன்,குறிப்பா (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)என்ற லைன் அற்புதம். அம்மா சொன்னாள் என்பதை சொன்னார் என மாற்றினால் நல்லாருக்கும்னு நினைக்கறேன்

Thenammai Lakshmanan said...

எங்கே சுத்தினாலும் ரங்கனை சேவி என்பது போல அவரவர் கணவர் என்பது அவரருக்கு பொக்கிஷம்தானே விக்கி..:))