Wednesday, July 8, 2009

டெல்லியும் சில வித்தியாசப் பழக்கங்களும்.

டெல்லி வந்த சில நாட்களில், ஏன் இப்போதும் கூட எனக்கு (ஒரு மதுரைக்காரியாய்) வித்தியாசமாகத் தெரிந்த / தெரியும் சில விஷயங்கள் இங்கே. டெல்லி என்ற பிரம்மிப்புடன் வந்த எனக்கு முதலில் ஏர்போர்ட்டிலிருந்து கரோல் பாக் வரையான ரோடுகள் வித்தியாசமாகவே இருந்தன. இவ்வளவு தானா டெல்லி என சலிப்படையச் செய்தது. அதற்குப் பிறகு பிரம்மாண்ட மால்கள், சீரான சாலைகள் கொண்ட சவுத் டெல்லி என்று பார்த்தும் முதலில் பார்த்த காடு போன்ற சாலைகளை இன்னும் கடக்கும் போதும் ஏன் டெல்லியின் ஒரு பக்கம் இப்படி எனத் தோன்றும்.

இங்கு யாருக்கும் ஆங்கிலமே தெரியாது போல பேசுவார்கள். கடைக்காரரிடம் "ஒன் ருப்பீ" என்றால் ஏற இறங்க பார்ப்பார். "ஏக் ருப்யா" தான் இங்கே சலேகா. படித்தவர்கள் கூட ஹிந்தியில் பேசுவதையே விரும்புவார்கள். நமக்கு ஹிந்தி தெரியாது என்றாலும் நம்மை மதித்துக் கூட ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஹிந்தியில் உரையாடும் போது ஆங்கில வார்த்தைகளின் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த விஷயத்தில் இவர்கள் மொழிப் பற்றாளர்கள். (நான் மொழி வெறியர்கள்னு சொல்லல.)
**************************************************

சில நாட்களுக்கு முன் ஒரு உறவுக்கார தீதியிடம் பேசிக்கொண்ட போது என்னைப் பார்த்துக் கேட்டார். "நாளைக்கு தானே மஞ்சள் நிற உடை போடணும். இன்னிக்கு ஏன் உடுத்தின?" எனக்குப் புரியாமல் அவரிடம் முழித்த போது அவர் தந்த விளக்கம் எனக்கு வித்தியாசமாய் இருந்தது. திங்கள் கிழமை வெள்ளை அல்லது கிரீம் நிற உடை, செவ்வாய் மற்றும் வெள்ளி தினங்களில் சிவப்பு, புதன் பச்சை, வியாழன் மஞ்சள், சனி கருப்பு தவிர மற்ற உடைகள் என உடுத்த வேண்டுமாம். ஞாயிறு இந்த ரெஸ்ட்ரிக்ஷன் இல்லையாம். தினமும் ஒரு கடவுள் என வைத்து அந்தந்த கடவுளுக்கு ஏற்ற வகையில் உடையணிந்தால் நமக்கு நல்லது என லெக்சர் கொடுத்தார்.

இது போதாதென்று திருமணத்துக்கு முன்பு நான் தங்கியிருந்த வீட்டில் உள்ள ஆன்ட்டி வியாழக் கிழமைகளில் பண்ணும் லந்து அதிகம். அவர் சாய்பாபா பக்தை. வியாழன்று மஞ்சள் நிற உடை அணிவார்; நெற்றியில் மஞ்சள் இடுவார்; அன்று மஞ்சள் நிற பதார்த்தங்களையே சமைப்பார்; ஏழைகளுக்கு 'கடி' எனும் மஞ்சள் நிற உணவை அன்ன தானம் செய்வார். இன்னும் பல பல. இப்படி எல்லாம் மஞ்சள் மஞ்சளாக இருந்தால் கடவுள் அருள் புரிவாரா? எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை.
**************************************************

நம்மூரில் திருமணமான பெண்கள் என்றால் கழுத்தில் தாலி இருக்கும். காலில் மெட்டி இருக்கும். திருமணமான சில நாட்களுக்கு வீட்டிலுள்ள அனைத்து தங்கமும் பெண் கழுத்தில் பார்க்கலாம். தலை நிறைய பூ. மதுரைக்காரப் பெண் என்றால் தலை நிறைய மணக்க மணக்க மல்லிகை. ஆனால் வடக்கில் வித்தியாசம். இங்கும் திருமணத்தின் போது கருகுமணி செயின் தாலியாக அணிவிக்கப்படும். ஆனால் அதைத் தொடர்ந்து அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. மெட்டி திருமணத்தின் போது பெரும்பாலும் அணிவிக்கப்படுவதில்லை. அதற்குப் பின் ஃபேஷனுக்காக பெண்கள் அணியலாம். பெரும்பாலும் அதையும் யாரும் அணிவதில்லை. நெற்றியில் போட்டு வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பூ கலாச்சாரம் அறவே இல்லை. பட்டுப் புடவைகள் கிடையாது. எவ்வளவு பெரிய விழாக்களுக்கு போவதென்றாலும் கழுத்தில் ஒரு நகைக்கு மேல் அணிவதில்லை. இதெல்லாம் இல்லை, சரி என்ன உண்டு? நெற்றியில் வகிடை ஒட்டி இடும் சிந்தூர் கண்டிப்பாக இட வேண்டும். புதிதாய்த் திருமணமான பெண், டிசைனர் உடைகளே பெரும்பாலும் அணிய வேண்டும். ஜீன்ஸ் டாப்பும் அணியலாம். எப்போதும் ஃபுல் மேக்கப்பில் இருக்க வேண்டும், அடுப்படியில் வேலை செய்வதானால் கூட. டார்க் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். கை நிறைய வளையல் அணிய வேண்டும். திருமணமான சில நாட்கள் வரை சிவப்பு வளையல்கள் அவசியம். மொத்தத்தில் எப்போதும் ஷோ கேஸ் பொம்மை போல காட்சியளிக்க வேண்டும்.
**************************************************

அடுத்ததா சாப்பாடு. நம்மூரில் எனக்குத் தெரிந்து நெய் அதிகம் வடிவது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகில் தான். ஆனால் இங்கு எல்லா பலகாரங்களிலும் / சாப்பாடுகளிலும் நெய்யும் வெண்ணையும் மிக அதிகம். இனிப்பு படு தூக்கலாக இருக்கும். கலர் கலராக இருக்கும். ஒரே பதார்த்தம் பல பெயர்களில் சிறு வித்தியாசங்களுடன் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாமே பார்க்க அழகாகவும், உண்ண படு சுவையாகவும் இருக்கும். ஆனால் அதை பார்த்தும் பார்க்காமல் வந்தால் தான் உடலுக்கு நல்லது.

நாம் யார் வீட்டிற்காவது போனால் பழங்கள் அல்லது இனிப்பு காரம் வாங்கிச் செல்வோம். ஆனால் இங்கு பழங்கள் நோயுற்றவர்களுக்கு மட்டுமே வாங்கி செல்லப்படுகிறது. யார் வீட்டிற்குப் போவதாக இருந்தாலும் இனிப்புடன் சேர்த்து காரம் எப்போதும் வாங்கிப் போக மாட்டார்கள். இனிப்பு மட்டுமே கிலோ கணக்கில் வாங்கிப் போகும் கலாச்சாரம் இங்கே.
**************************************************

இங்கு யாரும் யாரையும் சாப்பிட கட்டாயப்படுத்துவதில்லை. சாப்பிடும் போது இருக்கும் பல வித உணவுகளில் நமக்கு என்ன வேண்டுமோ, பிடிக்குமோ அதை சாப்பிடலாம். வேண்டுமானால் ஒரு முறை கேட்பார்கள் என்ன வேண்டும் என்று. நீங்கள் ஒன்றும் வேண்டாம் என்றால் "வேண்டாமா ஓகே" என சொல்லி முடித்து விடுவார்கள். கட்டாயப்படுத்தி போட மாட்டார்கள். இது ஒரு நல்ல பழக்கமாகவே நான் நினைத்தாலும் வீட்டில் கிடைக்கும் "இன்னும் ஒண்ணே ஒண்ணு போட்டுக்கோடா செல்லம்" என்னும் அம்மாவின் கவனிப்பெல்லாம் இந்த ஊரில் கிடையாது.
**************************************************

பெண்கள் மேக்கப் மங்கைகளாகவும், குட்டி பாப்பா கவுனுக்கு மாடல்களாகவும் இருப்பார்கள்.ஆண்கள் சென்ட் கடை ஓனர் போலவும், பான் பராக் வாயர்களாகவும் திரிவார்கள்.

எல்லாத்துக்கும் மேல யாரும் யாருக்காகவும் எதைப் பத்தியும் கவலையில்லாமல் நிம்மதியாக அவரவருக்கு பிடித்த மாதிரி வாழ்வது தான் இப்போதைய மெட்ரோ கலாச்சாரம். டெல்லி தான் அந்த கலாச்சாரத்தின் துவக்கம் என நான் நினைக்கிறேன். ஆண் பெண் சமத்துவம் புகை பிடிப்பதிலும், ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதிலும் இங்கு அதிகம் வெளிப்படுவதைக் காணலாம். இதையெல்லாம் கண்டும் காணாமல் போனால் மட்டுமே நகரின் வேகத்திற்கேற்ப நாமும் ஓட முடியும்.

67 comments:

ரவி said...

சரளமான நடை. நுணுக்கமான ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ள பதிவு....

கலையரசன் said...

//இப்படி எல்லாம் மஞ்சள் மஞ்சளாக இருந்தால் கடவுள் அருள் புரிவாரா? //

பின்ன இல்லாமையா கலைஞர் மஞ்சள் துண்டோடு அலையிறாரு?

அருமையான மற்றும் சுவாரசியமான பதிவு!!

கார்க்கிபவா said...

தலைநகரின் தலையாய பயக்க வயக்கங்கள்ன்னு தலைப்பு வச்சிருந்தா வியாபாரம் தூள் கிளப்பி இருக்கும்..

நல்லா எழுதி இருக்கிங்க..

Vidhya Chandrasekaran said...

பயங்கரமா ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க:)

கைப்புள்ள said...

நல்லா கூர்ந்து கவனிச்சு எழுதிருக்கீங்க. நானும் ஒரு ஆறு வருஷம் தில்லியில இருந்தேன். வியாழக்கிழமை அன்னிக்கு மஞ்சள் டிரெஸ் போடறது எனக்கும் புதுசாத் தான் இருந்துச்சு.

//ஏழைகளுக்கு 'கடி' எனும் மஞ்சள் நிற உணவை அன்ன தானம் செய்வார்.//

'கடி'ன்னா வேற ஒன்னும் இல்லை - நம்ம ஊரு மோர்க்குழம்பு தான்.

மணிப்பக்கம் said...

;) நல்லாருக்கு... நிறைய எழுதுங்க டில்லி பத்தி, நான் வந்ததில்ல....

விக்னேஷ்வரி said...

நன்றி செந்தழல் ரவி.

ஓ, கலைஞர் துண்டுக்கான துண்டு மேட்டர் இது தானா.
நன்றி கலையரசன்.

எனக்கு உங்கள மாதிரி இவ்வளவு அழகா தமிழ் பேசத் தெரியாது கார்க்கி.
நன்றி.

வாங்க கைப்புள்ள. நன்றி. கடி, மோர்க்குழம்பு ரெண்டுமே மோர் வச்சுப் பண்ணாலும் சேர்க்குற பொருட்கள் மற்றும் செய்முறை வேற. எல்லாம் சமைச்சுப் பார்த்து அனுபவம். :)

நன்றி மணி.

ரவி said...

என்னுடைய பதிவுக்கு போட்ட பின்னூட்டம்...

நீங்க பச்சப்புள்ள. அதனால தான் உங்களுக்கு விவரம் தெரியல.

வினோத் கெளதம் said...

நல்ல ஐடியா கிடைச்சு இருக்கு நானும் இதே மாதிரி ஒரு பதிவு போடப்போறேன்..
சண்டிகர்,குலு, ஷிம்லா கண்டிப்பா போய் இருப்பிங்க அதை பற்றியும் முடிந்தால் எழுதுங்கள்..

துளசி கோபால் said...

அக்கம் பக்கம் கூர்ந்து கவனிக்கணும் என்ற பதிவர்களுக்குரிய பாடத்தை நல்லாப் படிச்சுக்கிட்டீங்க:-)))))

அதென்னன்னா..... நவகிரகங்களுக்கு மகிழ்ச்சியைத்தரணுமுன்னு இப்படி அததுக்குரிய நிறங்களில் துணி போட்டுக்கறாங்களாம்.

எல்லாம் எத்தைத்தின்னால் பித்தம் தெளியும்.....வகை(-:

தினம்தினம் ஒரு நல்ல காரியம் செய்யச் சொல்லுங்க பார்க்கலாம்.

திங்கள் கிழமை நம்ம தெரு பூராவும் சுத்தம் செய்யணும்

செவ்வாய்க்கிழமை இந்த பான்பராக் அபிஷேகத்தைக் கழுவி சுற்றுப்புறத்தை பளிச்சுன்னு வைக்கணும்

புதன் அந்த அந்தப் பேட்டை கோவில்களில் போய் சுத்தம் செய்யணும்
வியாழன் அந்தப் பேட்டைப் பள்ளிகளில் சுத்தம்

இப்படி அட்டவணை போட்டுக்கிட்டு சுத்தம்தான் தெய்வப்ரீதின்னு செய்யணும்.

யார் முன்வந்து செய்யராங்கன்னு பார்க்கலாம்.

பதிவை ரசித்தேன்.

இன்னும் எழுதுங்க.

Nithi... said...

thirumanam yendra peyaril nadakkum kodumai kuranthal nallathu dhane...

avargal hindi pesuvathu thappu iali.. namakku Hindi theriyathu endra pothu pesalam.. nan oru murai sendru mikavum sirammam patten.. enna kodumai madam idhu...
vada nattu visayangalai ungal yeluthil padithu therijeken..

nandri vigs...

♫சோம்பேறி♫ said...

/* எப்போதும் ஃபுல் மேக்கப்பில் இருக்க வேண்டும், அடுப்படியில் வேலை செய்வதானால் கூட. டார்க் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். */

அட! செம காமெடியா இருக்குமே! இந்த மாதிரி வித்தியாசமான பழக்கவழக்கங்கள் பத்தி இன்னும் நிறைய எழுதுங்க..

Natraj said...

Very nice, Please write often.

சந்தனமுல்லை said...

நல்லா இருந்துச்சு...துணுக்ஸ்!! :-) என்னாமா நோட் பண்ணியிருக்கீங்க!

நையாண்டி நைனா said...

அட ... நான் இங்கே மும்பைலே குப்பை கொற்றேன்

அன்புடன் அருணா said...

வட இந்தியர்களின் பழக்கங்கள் ரொம்ப வித்தியாசமாதான் இருக்கு விக்ஸ்!

லதானந்த் said...

லேசாகப் பதிவை ரிப்பேர் பண்ணினால் இன்னும் சுவையோடு சூப்பர் பதிவாய் இருக்கும்.
மணியனின் ’இதயம் பேசுகிறது’ மாதிரி குளுமையாக இருக்கிறது.
அது சரி! ஆண்கள் உடைகள் எப்படி?

சப்ராஸ் அபூ பக்கர் said...

நன்றாக இருந்தது ....... வாழ்த்துக்கள்......

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல பதிவு.. சுவாரஸ்யமாக இருக்கிறது ...

Anonymous said...

மேடம்,

சுவையான பதிவு! என் அனுபவங்களைக் கேளுங்கள்:

கடி, மோர்க் குழம்பு போல் பச்சடியும் ரய்த்தாவும் ஒன்றேதான். என் நண்பன் சொல்லுவான்: 'நம்ப ஊரில் நாம பண்ணி நாம சாப்பிட்டா அது பச்சடி; இந்த ஊர்ல, ஹிந்திக் காரங்க பண்ணி அவங்க சாப்பிட்டா அது ரய்த்தா!'

மற்ற சில தில்லி பழக்கங்கள்:
நாம் சிபாரிசு, recommendation என்பதை approach என்பார்கள்.
பில்டிங்கின் வெளித்தோற்றத்தை outlook என்பார்கள்!
மழையோ குளிரோ வெய்யிலோ அதிகமாய்ப் போனால், 'Bhai saab! aapnE baarish karvaaya!' (நண்பரே, இப்படி மழை வர வெச்சுட்டீங்க!) என்பார்கள் , ஏதோ நாம்தான் வருண பகவான் போல!

LTTE என்பதைச் சுருக்கி கூசாமல் 'லிட்டே' என்பார்கள் !

சென்னையுடன் ஒப்பிடும்போது எல்லா இடங்களும் பல கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் ஏதோ கூப்பிடு தூரம் போல் பேசுவார்கள்!

உத்தர சுவாமி மலை மந்திர் என்ற நம் முருகன் கோயிலைக் கூசாமல் 'மலாய் மந்திர்' என்பார்கள் (மலாய் என்றால் ஹிந்தியில் பாலேடு!). ராமகிருஷ்ணாபுரத்தை ராமா கிருஷ்ணா புரம் என்றுதான் சொல்வார்கள்!
தோசாவைக் கூசாமல் டோஸா என்பார்கள் ; சாம்பாரை சாம்பர் என்பார்கள்!

சொல்லிக் கொண்டே போகலாம்!

நன்றி!

சினிமா விரும்பி

Barari said...

ELLORUM HIDIYAI AANGGILAM KALAKKAAMAL PESUKIRAARKAL//
THAMIZ NAATTU THANGLISH VAADIKALUKKUM SARIYAANA SOODU.MATRAPADI NALLA PATHIVU.VAZTHUKAL

Anonymous said...

நான் கூட காசியாபாத்தில் இருந்த போது நீங்கள் குறிப்பிட்ட சில சங்கடங்களை அனுபவித்து இருக்கிறேன்.ஆனால் அது கூட எனக்கு நல்ல அனுபவமாகத் தான் இருந்தது.

Anonymous said...

நான் சந்த்தித்த வட இந்தியர்கள் பெரும்பாலானோர் தென்னிந்தியர்களின் புத்திக் கூர்மையை பார்த்து வியப்பதாக கூறினார்கள்.
சங்கடங்கள் எல்லாம் பழகும் வரை தான். பழகிட்டோமுன்னா அவிங்களும் மதுரைக்காரைங்க மாதிரி தான்.ரொம்ப இனிமையானவங்க.

ஒரு காசு said...

செந்தழல் ரவி said...

சரளமான நடை. நுணுக்கமான ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ள பதிவு....ரிப்பீட்டேய்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல நடையில் சுவராஸ்யமாக இருந்தது.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஏர்போர்ட்டிலிருந்து கரோல் பாக் வரையான ரோடுகள் வித்தியாசமாகவே இருந்தன. இவ்வளவு தானா டெல்லி என சலிப்படையச் செய்தது. அதற்குப் பிறகு பிரம்மாண்ட மால்கள், சீரான சாலைகள் கொண்ட சவுத் டெல்லி என்று பார்த்தும் முதலில் பார்த்த காடு போன்ற சாலைகளை இன்னும் கடக்கும் போதும் ஏன் டெல்லியின் ஒரு பக்கம் இப்படி எனத் தோன்றும்.//

-:)

உறையூர்காரன் said...

எளிய நடையில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

//இந்த விஷயத்தில் இவர்கள் மொழிப் பற்றாளர்கள். (நான் மொழி வெறியர்கள்னு சொல்லல.)//

டெல்லியில இருக்கும்போது ஹிந்தி பேசுவது மொழிப்பற்று. ஆனால் டெல்லிக்காரர்கள் மும்பையிலும், பெங்களூரிலும், ஹைதராபாதிலும் இருப்பவர்கள் ஹிந்தி பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது மொழிவெறி.

நேரம் கிடைத்தால் என்னுடைய இப்பதிவை படித்துப் பாருங்கள்

jothi said...

//இதையெல்லாம் கண்டும் காணாமல் போனால் மட்டுமே நகரின் வேகத்திற்கேற்ப நாமும் ஓட முடியும்//

true,...

manasu said...

/டிசைனர் உடைகளே பெரும்பாலும் அணிய வேண்டும்/

டெல்லில குப்பை கொட்ட இது தான் உதவுதோ?

விக்னேஷ்வரி said...

என்னவோ ரவி. இன்னும் புரியல.

நல்லது வினோத். நீங்களும் உங்க அனுபவத்தை எழுதுங்க. பயணங்கள் பத்தி நிறைய எழுதணும். கண்டிப்பா எழுதுறேன்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துளசி கோபால். சரியா சொன்னீங்க. எல்லாரும் முடியுற விஷயங்களைத் தான் செய்றாங்க. நீங்க சொன்ன மாதிரி அட்டவணை போட்டுக் குடுத்தா மூட நம்பிக்கைன்னு சொல்லி மறுத்திடுவாங்க.

வாங்க நிதி.

வாங்க சோம்பேறி.

நன்றி NATS.

நான் மும்பை வந்ததில்ல நையாண்டி நைனா. ஆனா, என்னவர் சொல்லியும், நண்பர்கள் மற்றும் மும்பைல இருக்குற உறவினர்கள் சொல்லியும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். முடிஞ்சா மும்பை பத்தி எழுதுங்களேன். அங்கே எல்லா மாநில கலாச்சாரமும் கலந்திருக்கும் தானே.

விக்னேஷ்வரி said...

வாங்க முல்லை.

வாங்க அருணா.

சரிதான் லதானந்த் சார். டாக்குமெண்டேஷன் முடிக்குற டென்ஷனுக்கு நடுவுல எழுதினதால சுவை கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. ஆண்கள் நீட்டா பார்மல்ஸ்ல இருப்பாங்க. எல்லாருமே ரெப்ரசெண்டேடிவ் லுக்குலேயே இருப்பாய்ங்க.

நன்றி அபூபக்கர்.

நன்றி குறை ஒன்றும் இல்லை.

நல்லா சொல்லிருக்கீங்க சினிமா விரும்பி. எல்லாமே சரி தான்.

நன்றி Barari.

விக்னேஷ்வரி said...

புதுமையான, வித்தியாசமான அனுபவங்கள் எல்லாமே சுவையானதாகத் தான் உள்ளது இங்கிலீஷ்காரன். சரி தான். வட இந்தியர்களில் பெரும்பாலோனோர் தென்னிந்தியர்களை அதிகம் மதிப்பதுண்டு.

சங்கடங்கள் எல்லாம் பழகும் வரை தான். பழகிட்டோமுன்னா அவிங்களும் மதுரைக்காரைங்க மாதிரி தான்.ரொம்ப இனிமையானவங்க. //

எனக்கேவா.... என்னவர் பஞ்சாபி. இனிமையானவர் தான்.

நன்றி ஒரு காசு.

நன்றி நாடோடி இலக்கியன்.

வாங்க பித்தன்.

நன்றி உறையூர்காரன். உங்கள் பதிவு படிக்கிறேன்.

வாங்க ஜோதி.

வாங்க மனசு. உங்க கேள்வி எனக்கு புரியல.

सुREஷ் कुMAர் said...

டெல்லியபத்தி பட்டாசா பொரிஞ்சு தள்ளிட்டின்களே..
நல்லாசொல்லி இருக்கீங்க..

सुREஷ் कुMAர் said...

//
திங்கள் கிழமை வெள்ளை அல்லது கிரீம் நிற உடை, செவ்வாய் மற்றும் வெள்ளி தினங்களில் சிவப்பு, புதன் பச்சை, வியாழன் மஞ்சள், சனி கருப்பு தவிர மற்ற உடைகள் என உடுத்த வேண்டுமாம்.
//
ஆஹா.. இதென்னங்க அநியாயமா இருக்கு..!
அப்போ உலகத்துல இருக்குற மத்த வர்ண ஆடைகளை எல்லாம் எப்போதான் அணிவதாம்..

அதுவும் கருப்புக்கு நோ சொன்ன அந்த தீதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

सुREஷ் कुMAர் said...

//
மொத்தத்தில் எப்போதும் ஷோ கேஸ் பொம்மை போல காட்சியளிக்க வேண்டும்.
//
அப்போ ஊருக்குள்ள நிறைய உயிருள்ள பொம்மைங்க சுத்திட்டு இருந்க்குனு சொல்லுங்க..

Prabhu said...

அட, நீங்களும் மதுரையா!
நானும்தான்!

கண்டிப்பா அவங்க வாழ்க்கை நமக்கு ஒத்துவராது. கலாச்சார வேறுபாடு!
இந்தியாவில மட்டும் தான் 500கி.மீ.க்கு ஒரு கலாச்சாரம் இருக்கும்.

सुREஷ் कुMAர் said...

//
இனிப்பு மட்டுமே கிலோ கணக்கில் வாங்கிப் போகும் கலாச்சாரம் இங்கே.
//
மேட்டர கேட்டதுக்கே சளி பிடிச்சுக்கும் போல..

सुREஷ் कुMAர் said...

//
இன்னும் ஒண்ணே ஒண்ணு போட்டுக்கோடா செல்லம்" என்னும் அம்மாவின் கவனிப்பெல்லாம் இந்த ஊரில் கிடையாது.
//
அடடா.. இது இல்லாம என்னங்க ஊரு அது..

सुREஷ் कुMAர் said...

//
பெண்கள் மேக்கப் மங்கைகளாகவும், குட்டி பாப்பா கவுனுக்கு மாடல்களாகவும் இருப்பார்கள்.ஆண்கள் சென்ட் கடை ஓனர் போலவும், பான் பராக் வாயர்களாகவும் திரிவார்கள்.
//
ஒரே வரியில மொத்த டெல்லிமக்களையும் புகழ்ந்துட்டின்களே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) நல்லா இருக்கு.. அந்த தினம் ஒரு கலர் பத்தி எனக்குத்தெரியாது... மத்தது அதும் அந்த ஃபுல் மேக்கப் ரசித்தேன்..

ஆமா நீங்க தில்லியா உ.பி யா.. :)
( சும்மா )

சரி சிவன் கோயிலில் சிவன் மேல பெரிய பெரிய பழங்களை அடுக்கிவைச்சு தலையால முட்டி முட்டி கும்பிட்றவங்கள பார்த்திருக்கீங்களா..??

manasu said...

/வாங்க மனசு. உங்க கேள்வி எனக்கு புரியல./

fashion designing.

மணிநரேன் said...

நன்றாக இருந்தது இடுகை.

தினேஷ் said...

என்னத்த சொல்ல ... நல்லாவே சொல்லீருக்கீங்க ...

// எப்போதும் ஃபுல் மேக்கப்பில் இருக்க வேண்டும், அடுப்படியில் வேலை செய்வதானால் கூட. டார்க் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். ///

நானும் இங்கே பெங்களூர்ல பாத்துருக்கிறேன் ..


/ மெட்டி திருமணத்தின் போது பெரும்பாலும் அணிவிக்கப்படுவதில்லை. அதற்குப் பின் ஃபேஷனுக்காக பெண்கள் அணியலாம். பெரும்பாலும் அதையும் யாரும் அணிவதில்லை. //

ஆனால் இங்கே கல்லூரி படிக்கும் கல்யாணகமாத பெண்கள் மெட்டி நெத்தியில் செந்தூர் வைத்து கொள்கிறார்கள் ஃபேசனுக்காக ..
கல்யாணம் ஆகாத பெண்களை கண்டு பிடிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு ..

Manjari said...

நல்ல பதிவு.
நான் கல்கத்தாவில் வசிக்கிறேன். இங்கு வங்காள மொழிக்கு அடுத்து அதிகமாகப் பேசப் படும் மொழி ஹிந்தி தான். நன்கு ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் கூட தாய் மொழிக்கே முதலிடம் தருவார்கள். ஹிந்தி தெரியாது என்றால் நம்மை பார்க்கும் பார்வையே வேறுபடும். ஒருமுறை காய்கறி கடையில் ஒருவர் எப்படி தாய்மொழி தெரியாது என்று சொல்கிறீர்கள் என்று அடிக்காத குறையாக கேட்டு விட்டார். நான் என் தாய்மொழி ஹிந்தி அல்ல தமிழ் என்று சொல்லியும் ஒப்புக்கொள்ள மறுத்து ஹிந்தி தான் ஹிந்துஸ்தானின் மொழி என்கிற விதமாய் பேசினார். இங்கு பெரிய ஷாப்பிங் மால்களில் கூட அனைவரும் அவர்கள் மொழியே பேசுவர். வங்கி போன்ற இடங்களை பற்றி சொல்லவே வேண்டாம். நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் கூட பதில் வங்காள மொழியில் தான் வரும். மீண்டும் நாம் நமக்கு வாங்க மொழி/ஹிந்தி தெரியாது என்று சொன்னால், ஒரு முறைப்போடு (சலிப்போடு) ஆங்கிலத்தில் பதில் வரும். ஆனால் தமிழ் நாட்டில் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் ஆங்கிலம் தான் முதலில் வரும். குறைந்த பட்சம் நாம் அதையாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.

மற்ற விஷயங்களை பற்றி தனி பதிவாக எழுதினால் தான் சரியாய் வரும்.

Manjari said...

நல்ல பதிவு.
நான் கல்கத்தாவில் வசிக்கிறேன். இங்கு வங்காள மொழிக்கு அடுத்து அதிகமாகப் பேசப் படும் மொழி ஹிந்தி தான். நன்கு ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் கூட தாய் மொழிக்கே முதலிடம் தருவார்கள். ஹிந்தி தெரியாது என்றால் நம்மை பார்க்கும் பார்வையே வேறுபடும். ஒருமுறை காய்கறி கடையில் ஒருவர் எப்படி தாய்மொழி தெரியாது என்று சொல்கிறீர்கள் என்று அடிக்காத குறையாக கேட்டு விட்டார். நான் என் தாய்மொழி ஹிந்தி அல்ல தமிழ் என்று சொல்லியும் ஒப்புக்கொள்ள மறுத்து ஹிந்தி தான் ஹிந்துஸ்தானின் மொழி என்கிற விதமாய் பேசினார். இங்கு பெரிய ஷாப்பிங் மால்களில் கூட அனைவரும் அவர்கள் மொழியே பேசுவர். வங்கி போன்ற இடங்களை பற்றி சொல்லவே வேண்டாம். நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் கூட பதில் வங்காள மொழியில் தான் வரும். மீண்டும் நாம் நமக்கு வாங்க மொழி/ஹிந்தி தெரியாது என்று சொன்னால், ஒரு முறைப்போடு (சலிப்போடு) ஆங்கிலத்தில் பதில் வரும். ஆனால் தமிழ் நாட்டில் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் ஆங்கிலம் தான் முதலில் வரும். குறைந்த பட்சம் நாம் அதையாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.

மற்ற விஷயங்களை பற்றி தனி பதிவாக எழுதினால் தான் சரியாய் வரும்.

விக்னேஷ்வரி said...

வாங்க சுரேஷ் குமார். பிடிச்ச வண்ண உடைகளை ஞாயிறு மட்டும் தான் அணியலாம்.

ஆமா, நிறைய உயிருள்ள பொம்மைகள் இருக்காங்க. எனக்கு கல்யாணம் ஆன புதுசுல நானும் அப்படித் தான் சுத்திட்டு இருந்தேன். என்னைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கும். ;)

ஆமா பப்பு, நீங்க நம்ம ஊருக்கார பயனு எனக்கு தெரியும் மக்கா.
அவங்க வாழ்க்கை நம்மோட ஒத்து வராதுனெல்லாம் சொல்ல முடியாது பப்பு. எனக்கு ஒத்துப் போயிட்டது. ;)

இந்தியாவில மட்டும் தான் 500கி.மீ.க்கு ஒரு கலாச்சாரம் இருக்கும். //

எனக்கென்னவோ இது பிளஸ் பாயிண்டா தான் தெரியுது பப்பு.

இனிப்பு சாப்பிட்டா சளி பிடிக்குமா சுரேஷ்.... :O
ஆமா சுரேஷ், நானும் இது என்ன ஊரு, பாசத்தையும் கட்டாயத்தையும் வேறுபடுத்தத் தெரியாதவங்கனு நினைச்சிருக்கேன்.

உங்களின் அனைத்துக் கருத்துகளுக்கும் நன்றி சுரேஷ் குமார்.

விக்னேஷ்வரி said...

வாங்க முத்துலெட்சுமி. நான் NCR பா. ;)
சிவன் கோவில் மேட்டர் பத்தி எனக்குத் தெரியல. ஆனா, இங்க கோவில்கள்ல சங்கூதுற பழக்கம் எனக்கு வித்தியாசமா இருக்கும்.

இல்ல மனசு, இங்கே கல்யாணம் ஆகி குப்பை கொட்டிட்டு இருக்கேன். :)

நன்றி மணிநரேன்.

வாங்க சூரியன். பெங்களூர்ல எல்லா வட நாட்டு மக்களும் கலந்திருக்குறதால என்ன வேணும்னாலும் பண்ணலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம்ங்குற மன நிலை அதிகம். வெவ்வேறு கலாச்சாரங்கள், அதிகமான கலாச்சார சீரழிவுகளுக்கு பெங்களூர் டெல்லியை விட எந்த அளவுக்கும் குறைஞ்சதில்ல.

வாங்க Manchari. எனக்குத் தெரிஞ்சு எல்லா வட நாட்டவரும் ஹிந்தி தெரியலைனா நம்மள வித்தியாசமா தான் பாக்குறாங்க. இதை ஆமோதிக்குற தென்னிந்தியர்கள் இருக்குற வரைக்கும் நாம ஒன்னும் பண்ண முடியாதுங்க. நம்ம ஆள்கள ஆங்கிலம் கலக்காம அஞ்சு நிமிஷம் தமிழ்ல பேச சொல்லுங்க. அசடு வழியுவாங்க.

கல்கத்தாவுல உடைகள்லாம் நாகரீகமா உடுத்துவாங்கனு நினைக்கிறேன் Manchari. டெல்லி மாதிரி அரைகுறைக் கலாச்சாரம் அங்கே உண்டா?

Admin said...

நல்ல பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்....

நம்ம பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க.....

Sundar Raj said...

ஹி ஹி ஹி...நான் நினைச்சேன்..நீங்க சொல்லீட்டீங்க....

Joe said...

அழகா எழுதியிருக்கீங்க.

வட நாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு பிறகு எப்படி இருப்பார்கள் என்று கூர்ந்து கவனித்து எழுதியிருக்கீங்க.

//
ஆண்கள் சென்ட் கடை ஓனர் போலவும், பான் பராக் வாயர்களாகவும் திரிவார்கள்.
//
அவர்களிடமிருந்து எப்போதும் ஒரு பத்தடி தள்ளி நிக்கிறது நல்லது! ;-)

dsfs said...

//எல்லாமே பார்க்க அழகாகவும், உண்ண படு சுவையாகவும் இருக்கும். ஆனால் அதை பார்த்தும் பார்க்காமல் வந்தால் தான் உடலுக்கு நல்லது.//

உங்கள் எழுத்து நடையும் மொழி நடையும் சாதரண நிகழ்ச்சிகளையும் விறுவிறுப்பான ரசிக்கக்கூடியதாக
மாற்றுகிற திறமையும் எழுத்தாளரின் அழகு. நல்ல சுவாராஸ்யமான பதிவு

dsfs said...

உங்களின் பழைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

டெல்லியைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த பதிவு

R.Gopi said...

//இந்த விஷயத்தில் இவர்கள் மொழிப் பற்றாளர்கள். (நான் மொழி வெறியர்கள்னு சொல்லல.)//

Nambittom...... next....

//இப்படி எல்லாம் மஞ்சள் மஞ்சளாக இருந்தால் கடவுள் அருள் புரிவாரா? //

Nalla velai, Tamil Nattula vandhu sollidatheenga.... Paavam, Kalaignar kaadhula vizhundhaa kochuppaar.

//மொத்தத்தில் எப்போதும் ஷோ கேஸ் பொம்மை போல காட்சியளிக்க வேண்டும். //

Appadi irukkaradhu thaan avangalukku pidikkaradho ennavo?

//இனிப்பு மட்டுமே கிலோ கணக்கில் வாங்கிப் போகும் கலாச்சாரம் இங்கே//

Adhanaalathaan konjam vayasaana udane, BABLIMAAS kanakkaa irukkaangalaa?

//"இன்னும் ஒண்ணே ஒண்ணு போட்டுக்கோடா செல்லம்" என்னும் அம்மாவின் கவனிப்பெல்லாம் //

Ammavai thavira engeyum kidaikkaadhu.....

//இதையெல்லாம் கண்டும் காணாமல் போனால் மட்டுமே நகரின் வேகத்திற்கேற்ப நாமும் ஓட முடியும். //

Nijamaathaan...... maari varum kalaachaaram, konjam maathi sonnaa NAARI VARUM KALAACHAARAM.

விக்னேஷ்வரி said...

நன்றி சந்ரு. கண்டிப்பா வரேன்.

வாங்க சுந்தர்.

நன்றி ஜோ. நான் திருமணத்திற்குப் பின் எப்படி இருந்தேனோ அதைத் தான் எழுதிருக்கேன். ;)

நன்றி பொன்மலர்.

வாங்க அமித்து அம்மா.

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி கோபி.

விக்னேஷ்வரி said...

வாங்க வித்யா. இப்போ தான் பார்த்தேன் உங்களை.

Muniappan Pakkangal said...

The people there talk only in Hindi,but here ?Nice post with much info.

trdhasan said...
This comment has been removed by the author.
trdhasan said...
This comment has been removed by the author.
trdhasan said...

விக்கி உனக்கு வாய்-ய கடவுள் கை ல படைச்சிட்டாரோ! எப்டி இப்டியெல்லாம்..........

Kumar.B said...

HI, just going thro the tamil blogs and i came across your blog and gone through all your previous blogs also. your writing is very natrual which everybody experienced and dont know how to share.Nice presentation.

kanagu said...

நல்ல பதிவுங்க.. டெல்லிய பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சிக்க உதவிச்சி.. :)

ரொம்ப கூர்ந்து கவனிச்சி இருக்கீங்க :)

/*
பெண்கள் மேக்கப் மங்கைகளாகவும், குட்டி பாப்பா கவுனுக்கு மாடல்களாகவும் இருப்பார்கள்.ஆண்கள் சென்ட் கடை ஓனர் போலவும், பான் பராக் வாயர்களாகவும் திரிவார்கள்*/

ஹா ஹா ஹா :)

"உழவன்" "Uzhavan" said...

//இதையெல்லாம் கண்டும் காணாமல் போனால் மட்டுமே நகரின் வேகத்திற்கேற்ப நாமும் ஓட முடியும். //

சரியா சொன்னீங்க மேடம். நானும் நொய்டாவுல சில மாதம் இருந்திருக்கேன்.

விக்னேஷ்வரி said...

நன்றி முனியப்பன்.

நன்றி அபி அப்பா.

நன்றி ஜோசப் பால்ராஜ்.

வாங்க டி.ஆர்.தாசன்.

நன்றி குமார்.

நன்றி கனகு.

வாங்க உழவன். நல்லது.

விக்னேஷ்வரி said...

இப்பதிவை குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றிகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏவ்வ்வ் அப்பா ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்களது பதிவுகளைஎனக்கு தொடர்ந்து அனுப்புங்கள்.
நன்றி.