Saturday, October 25, 2008

பாவம் தமிழ்

நேற்று மாலை பெங்களூருவில் மழை தூறிக் கொண்டிருந்தது. எப்போதும் எட்டு மணிக்கு மேல் அறைக்கு செல்லும் நான், மழையின் காரணமாக, ஏழு மணிக்கே சென்று விட்டேன். அலுவல் வேலையாக செல்லும் போது, உடன் புத்தகங்கள் எடுத்து செல்லும் வழக்கமில்லாததால் பொழுதைப் போக்குவதற்காக தொலைக்காட்சியை ஆன் செய்தேன். சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த நான், ஒரு அழகான தமிழ்ப் பாடலைக் கேட்டு, ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு, பாடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

பாடல் முடிந்து திரையில் தோன்றிய பெண் வித்தியாசமான உடைகளை அணிந்து, விசித்திரமாய் காட்சியளித்தார். சரி, நான் தான் வேறு ஏதோ மொழி சேனலில் தமிழ்ப் பாடலைப் பார்த்து விட்டேன் போலும் என நினைத்து மாற்றப் போகும் போது "ஹலோ, சொல்ங்க" என்ற அவரது குரல் தமிழ் தான் என்ற லேசான நம்பிக்கையைக் கொடுத்தது. அவர் கீழே என்ன உடை உடுத்தி இருந்தார் என தெரியவில்லை. மேலே ஒரு சிறு குழந்தையின் சட்டையை வாங்கிப் போட்டிருந்தார். எங்கே கிழிந்து விடுமோ என்கிற பயம் நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே வந்திருக்கும். ஒரு கை முழுவதுமாகவும், மற்றொரு கை இல்லாமலும் அந்த ஆடை வடிவமைக்கப் பட்டிருந்தது. நல்ல வடிவமைப்பு தான் என்றாலும், தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழர்களுடன் அழகான தமிழில் பேசுவதற்கு அது தேவை தானா என்ற கேள்வியுடன், அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

காதில் இருந்த கை வளையல்கள், நூடுல்ஸ் போன்ற தலை முடி, மூக்கிலிருந்த மற்றொரு வளையம், கழுத்திலிருந்த பாசி மணிகள், தப்புத் தப்பான தமிழ் இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட இனத்தவரை எனக்கு நினைவூட்டவே, "பரவாயில்லையே! இவர்களுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளதே" என்ற ஒரு திருப்தி. ஆனால், அவர் பேசிய தமிழ் தான், அவர் எந்த இனத்தவர் என கண்டு கொள்ள சற்று சிரமமாய் இருந்தது. ஏனெனில், நன்கு படித்த மேதைகளும் சரி, நாடோடிக் கலைஞர்களும் சரி அவர்களுக்கென ஒரு மொழி வைத்துக் கொண்டு அதை சரியாக பேசி வருகிறார்கள். அப்படி இருக்க இவர் பேசியது எந்த இனத்தவரை சேர்ந்தது என்ற ஐயத்துடன் என் தோழியை தொலை பேசியில் அழைத்துக் கேட்டேன்.

"வித்யா, டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் வீட்டு டிவியையும் கொஞ்சம் ஆன் செய்து, அந்த வர்ணனையாளர் பேசுவது எந்த வட்டார மொழி என கேட்டு சொல்லேன்" என்றேன். அவளது ஊரில், நான் குறிப்பிட்ட அந்த சேனல் ஒளிபரப்பாவதில்லையாம். வேறு வழியே இல்லை, அது எந்த வட்டார மொழி என தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆவலில் நானே அவளிடம் அந்த உரையாடலை வர்ணனையாளர் மற்றும் அழைப்பாளர் போல் பேசிக் காண்பித்தேன்.

"ஹலோ, சொல்லுங்க. யார் பேஸ்ரிங்க. "

"வணக்கம்ங்க, நான் முனியாண்டி நாகர் கோவில்ல இருந்து பேசறேன் மேடம்"

"ஹையோ, மெடம்நெல்லாம் சொள்ளாதிங்க. என் பேரு ஷாலினி. நீங்க அப்படியே குப்பிடுங்க"

"சரி ஷாலினி, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க."

"ஒஹ், தேங்க் யூ. எள்றும் அப்டி தன் சொல்ரங்க. சொல்ங்க, முன்யண்டி, உங்கள்கு என்ன பிடிகும்"

"எனக்கு உங்களனா ரொம்ப பிடிக்கும் ஷாலினி. ரெண்டு வருஷமா உங்க தொலைக்காட்சிக்கு போன் போட்டு பேசுறேன். ஆனா, உங்க கிட்ட இன்னிக்கு தான் பேச முடிஞ்சது."

"ஒ, ஸ்வீட். உங்க கிட்ட பெஸ்நதுல ரொம்ப ஹேப்பி. இப்டியே எங்கலுக்கு தொடர்ந்து கால் பண்ங்க. அப்றம் ஷோல்ங்க, உங்க வைப் நள்ளா இருகங்க்லா"........

இவ்வாறாக தொடர்ந்தது அந்த உரையாடல்.

இதை என் தோழியிடம் சொல்லி முடித்த போது, அவள் இது தான் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் என சொன்னாள். எனக்கு தலையே பிய்த்து விடும் போல் இருந்தது. பஞ்சாபியான என்னவரின் தமிழ் எவ்வளவோ நன்றாக உள்ளது என எண்ணி மகிழ்ந்தேன்.

தமிழுக்கு தான் எத்தனை கால மாற்றங்கள். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்பது போய் சென்னைத் தமிழ், மதுரை தமிழ், கோவைத் தமிழ் வந்தது. இப்போது தொலைக்காட்சித் தமிழ், வானொலித் தமிழ் மற்றும் நடிகைத் தமிழ் என அதுவும் உருமாறிப் போனதை எண்ணி வருந்த மட்டுமே முடிகிறது.

தொலைக் காட்சி வாயிலாக தமிழ் இல்லங்களுக்கு செல்லும் இவர்கள், உடை மற்றும் நாகரீக விதத்தில் முன்னேறலாமே. இதை நண்பர் மணியிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருந்த போது, தமிழ் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலில் மட்டும் இந்த சீரழிவு இல்லை என்றார். சற்று ஆறுதலாக இருந்தது.


9 comments:

trdhasan said...

தொலைக்காட்சித் தமிழ், வானொலித் தமிழ் மற்றும் நடிகைத் தமிழ்///

இந்த வளர்ச்சி எங்க போய் முடியுமோ தெரியல.

விக்னேஷ்வரி said...

இது வளர்ச்சி இல்ல மணி, சீரழிவு.

deesuresh said...

அது சீரழிவோ, வளர்ச்சியோ, ஒரு வகையான கலாச்சாரச் சிதைவு என்று தான் கொள்ளவேண்டும்.

கற்காலத்தின் ஆடை அலங்காரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்

தமிழ் உதயன் said...

அன்புள்ள தோழியே,

உங்கள் கிறுக்கல்கள் கண்டேன், மிகவும் அருமை. நகர வாழ்க்கை பத்தி சுஜாதா எழுதிய நகரம் புத்தகம் படித்தீர்களா?... நானும் அதே நோய்டாவில் இந்த வாழ்க்கை சில காலம் வாழ்ந்து இருக்கிறேன். நன்றாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
நீங்கள் சுஜாதாவின் பதிப்புகளை விரும்புபவர? நானும்தான். முடிந்தால் என்னோட இலக்கணம் இல்லா கவிதை நடை கிறுக்கல்களை கொஞ்சம் படித்து பார்த்து கருத்துஇடுங்களேன்..

நன்றி

தமிழ் உதயன்.

விக்னேஷ்வரி said...

சரியா சொன்னீங்க சுரேஷ் அண்ணா.


நன்றி தமிழ் உதயன். சுஜாதாவின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், அடிமை என சொல்லும் அளவுக்கு இல்லை. அவர் படைப்புகளுக்கு நான் நல்ல ரசிகை. உங்கள் ப்ளாக் பார்த்தேன். ஆனால், என்ன பின்னூட்டம் எழுத என எனக்கு தெரியவில்லை.

Nithi... said...

Neenga Sun T.V,,, S.S Music T.V ellam paarkala pole..
Aparam Vijay t.v la vara Kodumai ipadi neriya iruku.....

விக்னேஷ்வரி said...

நீங்க சொன்னதெல்லாம் பார்க்காத வரைக்கும் நான் தப்பிச்சேன்னு நினைக்குறேன் நிதி.

mightymaverick said...

உங்களுக்கு தெரிந்து தொலைகாட்சி தமிழ், வானொலி தமிழ், நடிகை தமிழ் தான்இருக்கிறது... இன்று நீங்கள் உங்கள் கல்லூரிக்கு ஒரு முறை சென்று வாருங்கள். காதலர் தமிழ், சிறுபேசி (மொபைல்) தமிழ், குறுஞ்செய்தி (சம்ஸ்) தமிழ் என்றுதமிழ் எங்கோ போய் கொண்டிருக்கிறது... காதலர் தமிழ் படிக்கலாம்... அர்த்தம்கொள்ள முயற்சித்தீர்கள் என்றால், மொத்தமாக விரசமாக இருக்கும்; ஆகையால்இங்கு பேசவோ எழுதவோ முடியாது; சிறுபேசி தமிழ் பேசுபவருக்கும், கேட்பவருக்கும் மட்டும் தான் புரியும்; அனைத்து மொழிகளையும் கலந்து தமிழில்பேசுவர். குறுஞ்செய்தி தங்களுக்கே தெரியும்; ஆங்கிலம் என்ன பாடுபடுகிறதென்று... உலக மக்கள் அனைவராலும் தொடர்பு மொழியாகஏற்றுக்கொண்ட ஆங்கிலத்திற்கே இந்த பாடென்றால், தமிழை கேட்கவேண்டுமா... அதிலும் தமிழ் தலைவர் நடத்தும் தொலைகாட்சியில் கேட்கும்தமிழுக்கு ஈடு ஆகாது... குறைந்தபட்சம், விஜயில் "தமிழ் எங்கள் மூச்சு" என்றுஒரு தொடர் கொண்டு வந்திருக்கிறார்கள்... அதில் தடுமாறுபவர்களை பார்க்கும்பொழுதினில் பாரதியின் ஒரு கவிதையை சற்று மாற்றி இப்படி தான் பாடுகிறேன்: உன் நாவில் தமிழ் வந்தால் கண்ணம்மா என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி... இப்படியே சென்றால் நிச்சயம் ஒருநாள் தமிழ் மொத்தமாய் சாகும்.

விக்னேஷ்வரி said...

ரொம்ப சரியா சொன்னீங்க Mighty Maverick.