Thursday, October 23, 2008

பெங்களூரின் பிரதான சாலையில்....

நேற்று முன் தினம், அலுவல் பணி முடித்து தொழிற்சாலையிலிருந்து நானும், தொழிற்சாலை மேலாளரும் ஏழு மணிக்கு கிளம்பினோம். நான் அப்பாவுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். கிளம்பி இருநூறு மீட்டர் தூரமே சென்றிருப்போம். அங்கிருந்து ஒரு வளைவில் திரும்பி மெதுவாக சென்று கொண்டிருந்த வேளையில், பின்னாலிருந்து 'தடால்' என ஒரு சத்தம். முன்னிருக்கை நகர்ந்து பின்னால் சென்று, முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் பின்னால் தள்ளப்பட்டோம். ஓரிரு நொடிக்கு அதிர்ச்சி விலகவில்லை. திடீரென ஸ்டியரிங்கை மறந்துவிட்ட மேலாளரைப் பார்த்த எனக்கு உயிர் பயம் வரவே, "சார், நான் ஓகே. நீங்க ஓகேவா... ஸ்டியரிங்கைப் பிடிங்கள்" என்றேன். ஏனென்றால், அந்த சாலை வாகன வரத்து நிறைந்த விமான நிலையம் செல்லும் சாலை. எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் அந்த சாலையில், அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக இடித்துக் கொண்ட இரு வாகனங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. என் குரல் கேட்ட அவரும் சுதாரித்துக் கொண்டு, வண்டியை இடது பக்கத்தில் ஓரம் கட்டினார்.

செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த நான், அது போன இடம் தெரியாமல் அமர்ந்திருந்தேன். அதைத் தேடும் நிலையிலும் இல்லை. எப்போதும் முக்கியமாய் தெரியும் சில பொருட்கள், விஷயங்கள் அல்லது மனிதர்கள் ஏதோ ஒரு நேரத்தில் அதன் மதிப்பை இழந்து விடுகின்றன / விடுகின்றனர். எந்த ஒரு பொருளும் எனக்கு சொந்தமானது என்றோ, மிகவும் முக்கியமானதேன்றோ சொல்லும் உரிமை யாருக்குமே இல்லை எனினும், சில வருட வாழ்க்கைக்காக பல போராட்டங்கள்.

வண்டியின் பின்னால் ஏற்பட்ட பலத்த அடியில், பின் கண்ணாடி உடைந்து, வண்டியின் பின் பகுதி முழுவதுமாய் நெளிந்து போய் இருந்தது. இவ்விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கழுத்து சுளுக்கியிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த நினைவு வரவே, செல்பேசியை தேடி எடுத்து, அவருக்கு மறுபடியும் கால் செய்து ஒன்றும் இல்லை, சிறு விபத்து என ஆறுதல் கூறி விட்டு, மீண்டும் 'ஸ்பாட்டிற்கு' வந்தேன். நல்ல வேளையாக பின்னால் வந்த வண்டியிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.

பெரும்பாலும் இது போன்ற நேரங்களில், இரு வண்டிக்காரர்களும் ஒருவரை ஒருவர் திட்டி, பெரும் சண்டையாவதை சாலையோரங்களில் பார்த்திருந்த நான், அன்றைய நாளில் ஏற்படப்போகும் கலவரத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். எங்கள் பின்னால் இருந்த வண்டியில் இருந்து வந்தவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர்.அவர் வந்ததும், "தவறு என்னதல்ல" என சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடன் இருந்த மேலாள நண்பர், "தவறு யார் மீது என்பதல்ல முக்கியம். உங்களுக்கு ஒன்றும் அடி இல்லையே. நீங்கள் நன்றாக உள்ளீர்களா" என்றார். அவர் கேட்ட விதத்திலேயே அடங்கிப் போனார் டாக்ஸி ஓட்டுனர்.

பின் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்தனர். விபத்து நடந்த இடம், தொழிற்சாலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் என்பதால், அங்கிருந்த உதவியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் வந்தனர். எனது மேலாள நண்பர் எதுவும் சத்தம் போடாமல், சாதாரணமாக பேசியதில், இறுதியில் டாக்ஸி ஓட்டுனர் அவர் மீது இருந்த தவறை உணர்ந்து, காவலரிடம் நூறு சதவிகித தவறும் அவர் மீது தான் என ஒப்புக் கொண்டார். டாக்ஸி ஓட்டுனரை அஹிம்சாவாதியாக்கிய மேலாள நண்பரை எண்ணிக் கொண்டே, அவ்வழியில் வந்த பேருந்தை பிடித்து ரூம் வந்து சேர்ந்தேன்.

அடுத்த நாள் மருத்துவனைக்கு சென்று கழுத்தில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து ஒன்றும் இல்லை என்பதை அறிய ஆயிரம் ரூபாய் செலவு செய்தாகியது. கடவுளுக்கு நன்றி சொல்லி மேலாளரிடம் பாடம் கற்று, அறைக்கு வந்து ஆயின்மென்ட் போட்டு தூங்கினேன்.

7 comments:

trdhasan said...

பெரிய மனுஷன்னு நிருபிச்சிருக்"கார்". ஆனா ஒன்ணு எந்த விசயத்தியும் எழுத்தாக்க முடியுங்கிறத இதன் மூலம் நிருபீச்சிருக்க விக்கிகண்ணா!

விக்னேஷ்வரி said...

நன்றி மணி.

Suresh Kumar said...

இப்படி சில உயர்ந்த மனிதர்களால் தான் மனிதம் இன்னும் வாழ்கிறது

Joe said...

நல்ல பதிவு!

விபத்து நேரும் வேளைகளில், பதட்டப்படாமல் எப்படி நடந்து கொள்வது என்று உங்கள் மேலதிகாரியிடம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

விக்னேஷ்வரி said...

நன்றி சுரேஷ் குமார் மற்றும் ஜோ.

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்! பதட்டப்படாமல் நிதானமாக கையாண்டு இருக்கிறீர்கள்!

விக்னேஷ்வரி said...

ஆமா சந்தனமுல்லை. But, it was a strange and good experience.