=> நமது பொங்கல் பண்டிகை போலானது வடக்கிந்திய தீபாவளி. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாள் வீடை சுத்தம் செய்து பழைய சாமான்களை எரிப்பதாகும். இந்த நாள் நரக்சௌதஸ் என அழைக்கப்படுகிறது. வீட்டின் பழைய பொருட்களை வெளியேற்றி வீட்டு வாசலில் சிறு அகல் தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. வீடு முழுக்க சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும் நாளிது.
=> இதே முதல் நாள் ரூப்சௌதஸ் என மார்வாடி குடும்பங்களால் கொண்டாடப்படுகிறது. பெண் அழகாகும் நாள் எனப் பொருள்பட அந்த நாள் பெண்கள் முகம், கைகளில் கடலைமாவு மற்றும் இன்ன பிற அலங்காரப் பத்துகளையும் இட்டு அழகுறும் நாள்.
=> தீபாவளிக்கு இருவாரங்களுக்கு முன்னால் துர்கா பூஜா வட இந்திய வீடுகளில் கொண்டாடப்படும். இது நவராத்திரியின் கடைசி நாள்.
=> துர்கா பூஜாவிலிருந்து பதினைந்து முதல் இருபது நாட்களுக்குப் பின் தீபாவளி தினத்தன்று கொண்டாடப்படுவது லக்ஷ்மி பூஜா. தீபாவளி தினத்தன்று காலை உறவினர்களுக்குள் பரிசுகள் பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடி மாலை குடும்பம் முழுக்கக் கூடி லட்சுமி தேவியை வணங்கும் நன்னாள்.
=> தீபாவளியன்று லட்சுமி பூஜை சிறப்பிக்கப்படுவதால் அன்றிரவு லட்சுமி தேவி தங்கள் வீட்டிற்கு வருவதாக எண்ணப்பட்டு இரவு முழுக்கக் கதவை மூடாது இருப்பார்கள். வீடு பூட்டியிருந்தால் வரும் லட்சுமி (செல்வம்) திரும்பிப் போய்விடுவதாக ஐதீகம்.
=> பனியா எனப்படும் வாணிபக் குடும்பங்களில் தீபாவளி இரவன்று அனைவரும் விழித்து சீட்டுக் கட்டுகள் கொண்டு பணம் வைத்து விளையாடுவது வழக்கம். இது சூதாட்டம் என நம்மால் அறியப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை தீபாவளியன்று பணம் வரும் விளையாட்டாகக் கருதப்பட்டு இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது.
=> தசரா தினத்தன்று ராவணனை அழித்து, இலங்கையிலிருந்து சீதையை அழைத்துக் கொண்டு ராமன் அயோத்தியை அடையும் தினத்தன்று அவர்களை வரவேற்கும் விதமாக அனைவரும் தீபமேற்றி இனிப்புகள் பகிர்ந்து மகிழும் நாளே வடக்கில் தீபாவளி.
=> ஆனால் தென்னிந்தியர்கள் மத்தியில் கிருஷ்ணன் தன் மாமன் கம்சனை வதம் செய்யும் நாள் தீபாவளி என அறியப்படுகிறது. இதன் மூலம் நம்மவர்கள் கிருஷ்ண அவதாரத்தைக் கொண்டும், வடக்கிந்தியர்கள் ராம அவதாரத்தைக் கொண்டு தீபாவளி கொண்டாடுகிறார்கள் எனும் முரணறியலாம்.
=> மூன்று நாட்கள் தீபாவளியில் மூன்றாம் நாள் பசுக்களுக்கும் கன்றுகளுக்குமானது. மார்வாடி கலாச்சாரத்தில் அன்று பசுச்சாணத்தால் விளக்கு செய்து அவ்விளக்கைக் கொண்டு பசுவையும், கன்றுகளையும் தொழுது வீட்டிற்குக் கன்றை அழைத்து அந்த விளக்கை மிதிக்கச் செய்து அதன் மூலம் நற்பலன் வருவதாகக் கருதுகின்றனர்.
=> தீபாவளிக்கு அடுத்த நாள் அன்னகூட். இது பெரும்பாலும் அனைத்து வடக்கிந்தியக் குடும்பங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஏழு வகைக்காய்கறிகள் கலந்த சத்சாகா எனும் கூட்டும், கூடவே முப்பது முதல் நாற்பது வகை உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அன்னபூர்ணி மாதாவை வணங்கி உணவு உண்ணப்படுகிறது.
=> தீபாவளிக்கு அடுத்த நாள் பௌர்ணமி. பௌர்ணமியின் இரண்டாம் நாள் பாய்தூஜ். இது சகோதர சகோதரிகளுக்கான நாள். சகோதரிகள் சகோதரனுக்கு நெற்றியில் டீக்கா எனப்படும் குங்குமம், அரிசி, குங்குமப்பூ கலந்த திலகமிட்டுப் பரிசுகள் வழங்குவர். பதிலுக்கு சகோதரரும் சகோதரிகளுக்கு இனிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்குவர். அந்த நாள் முழுக்க சகோதரனும் சகோதரியும் ஒன்றாக உணவருந்திப் பேசிக் களிப்பதற்கான நாள்.
=> தலை தீபாவளி கொண்டாடும் பெண் கணவன் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனும் முறை பஞ்சாபில் உள்ளது. திருமணமான தம்பதிகளின் முதல் தீபாவளியும் குழந்தையின் முதல் தீபாவளியும் மிக முக்கியமானது. இரண்டுமே கணவன் வீட்டிலேயே கொண்டாடப்பட வேண்டியவையும் கூட.
=> பீகாரில் தீபாவளி அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தீபாவளியின் ஆறாம் நாளான “சட் பூஜா”(Chhath Pooja). ஆறு நிலைகள் எனப் பொருள்படும் இந்நாளின் முக்கியத்துவம் சூரியனை ஆறு நிலைகளில் வழிபடுவதாகும். இது தாலா சட் எனவும் அழைக்கப்படுகிறது.
=> தீபாவளி முதல் சட் தினம் வரை கடும் விரதமிருந்து சூரியனை வணங்குகின்றனர். சட் தினத்தன்று சூரியோதயத்திற்கு முன்னும், சூரிய அஸ்தமனத்தின் பொழுதும் இரு வேளைகள் நீர்நிலைகளுக்கு சென்று மலர்கள், இனிப்புகளைத் தண்ணீரில் விட்டு சூரியனைப் பார்த்துத் தொழுது கோரிக்கைகள் வைக்கின்றனர். நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் சட் பூஜையைக் கடைபிடிக்கின்றனர்.
=> கல்கத்தா மற்றும் வங்காளத்தில் காளி மாதாவைத் தரிசித்துப் பூஜித்து தீபாவளி தினத்தைத் தொடங்குகின்றனர். காளி மாதா மிகவும் உக்கிரமானவளென்பதால் அவள் துணையிருந்தால் எல்லா தீய சக்திகளும் அழிபட்டுத் தொடரும் நாட்கள் இனிதாய் இருக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக தீபாவளி தினத்தன்று புத்தாடையோ அல்லது புதுப் பொருட்களோ வாங்கும் வழக்கம் பெங்காலில் இல்லை. இனிப்புகள் மட்டுமே வாங்கப்படுகின்றன.
=> ஜம்மு அண்ட் காஷ்மீரில் பெங்காலுக்கு நேரெதிர்க் கொண்டாட்டங்கள். பொதுவாக வாங்கப்படும் அனைத்துப் புதிய பொருட்களும் தீபாவளி தினத்தன்று வாங்குவதாய்ப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆடைகள், தங்கம், வாகனங்கள், வீடு எனப் பெரும்பாலான வரவுகள் தீபாவளியன்றே நிகழ்கின்றன.
=> ஜம்முவில் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே அக்ஷய திருதியையும் தீபாவளிக்கு முன்னரே வருவது. இதன் காரணம் தீப நாளில் தங்கமும் பெருக வேண்டுமென்பதே.
=> களிமண்வீடுகள் அதிகளவிலிருக்கும் ஹிமாச்சலில் வீடுகள் சாணத்தால் மெழுகப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. பொதுவாக மூதாதையர்களை நினைவு கூறும் தினமாக தீபாவளி தினம் சிறப்பிக்கப்படுகிறது. சிறுமிகள் களிமண் பொம்மைகள் அல்லது பானைகள் செய்து அதற்கு சிவப்பு நிற வண்ணமிட்டுத் தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் பரிசளிப்பது வழக்கம்.
=> ராஜஸ்தானிகளுக்கும் மிகச் சிறப்பான தினமாக தீபாவளி நாள் உள்ளது. ராஜஸ்தானிகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாலாடை கச்சோரி, எள்ளுருண்டை, சோன்பப்டி, ஜிலேபி, பிஸ்தா பர்ஃபி போன்ற பலகாரங்கள் வீட்டிலேயே செய்யப்பட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகிக்கப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், புதிதாய்ப் பிறந்த ஆண்குழந்தைகளுக்கு தீபாவளி மிகச்சிறப்பானது. தவிர, குளிர்காலத்தை வரவேற்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.
=> தீபாவளியிலிருந்து எட்டாம் நாள் கோவர்த்தன பூஜை தினமாக வழிபடப்படுகிறது. வட நாடுகளில் கிருஷ்ண பகவான் இந்திரனைத் தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்துக் கிராம மக்களை மழையிலிருந்து காத்த திருநாள் கோவர்த்தன பூஜா தினம். இது குஜராத்தின் விக்ரம் சம்வத் காலண்டரின் முதல் நாள்.
=> தீபாவளிக்கு அடுத்த நாள் விஷ்வகர்மா தினம். அனைத்து தொழில் செய்வோரும் தங்கள் எந்திரங்களுக்கு பூஜை செய்யும் நாளிது. பொதுவாக புதுக்கணக்குகள் இந்த நாளிலேயே தொடங்கப்படுகிறது. இத்தினத்தன்று எந்த தொழிலதிபரும் தொழிலுக்கு விடுமுறையளித்து மூடுவதில்லை.
=> இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் மற்றும் ஜெய்ன் சமயத்தவரும் தீபாவளி கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கொண்டாடுவதற்கான காரணங்கள் வெவ்வேறானவை.
=> ஜெய்ன் சமய குரு மஹாவீரர் முக்தி / மோட்சம் அடைந்த நாளாக தீபாவளி ஜெய்ன் சமயத்தினரால் வழிபடப்படுகிறது. இது ஜெய்ன் மக்களிடையே துக்க நாளாக அனுஷ்டிக்கப்படாமல் அவர்களின் குரு ஞானஒளி அடைந்த புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது.
=> முகலாய மன்னர் ஜஹாங்கிரால் சிறையிலடைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாம் குரு ஹர்கோபிந்த் சிங் குவாலியர் கோட்டையிலிருந்து 1916இல் விடுதலை செய்யப்பட்ட நாளாக தீபாவளி நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.இந்த நாளில் அம்ரிஸ்தரின் பொற்கோவில் முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அவற்றின் ஒளி சுற்றியுள்ள நீரில் பட்டு ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சி.
=> நரகாசுர வத நாளாகத் தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிக்கு முந்திய நாள் லட்சுமி பூஜாவாகக் கர்நாடகாவில் துதிக்கப்பட்டு மறுநாள் தீபாவளி நரசதுர்தசியாக வழங்கப்படுகிறது.
=> மூன்று நாட்கள் விழாவாகக் கர்நாடகாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாளன்று வீடை சுத்தம் செய்து அலங்கரிப்பதும், இரண்டாம் நாள் அமாவாசை தினத்தில் பூஜையும், மூன்றாம் நாள் மஹாபலி சக்கரவர்த்தியை வென்ற வாமனனைப் பூஜிக்கும் பலிபடையாமியாகவும் கொண்டாடப்படுகிறது.
=> ஆந்திராவில் ஹரி கதா எனப்படும் மேடைப் பிரசங்கங்கள் தீபாவளியன்று பிரபலம். அத்தோடு நரகாசுரன் உருவ பொம்மைகள் வைத்து அதைக் கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர்களைக் கொண்டு எரித்து மகிழப்படுகிறது.
=> இந்தியாவில் மட்டுமின்றி பூர்வீக இந்திய வழிக் குடிகள் அதிகமிருக்கும் சிங்கப்பூரிலும் தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே நகரமெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுவிடும். தீபாவளிக்கு விடுமுறை மட்டுமின்றி பல கலை நிகழ்ச்சிகளையும், பொருட்காட்சிகளையும் ஏற்பாடு செய்து பூர்வீக இந்தியக் குடிகளை மகிழ்விக்கிறது அந்நாட்டரசு.
=> சிங்கப்பூர் தவிர்த்து மற்ற நாடுகளில் குடும்பங்களுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் கொண்டாடும் ஒரு நாளே தீபாவளி. அதையும் மீறிய கொஞ்சம் பெரிய கூட்டமெனில் தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள். அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் பட்டாசு வெடிக்கத் தடையிருப்பதால் நம் மக்கள் தமிழ் சங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்தியும், கோவில்களுக்குச் சென்றும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடி மகிழ்கின்றனர்.