பல வருடங்கள் கழித்து என் சிறு வயது புகைப்படங்களை, ஸ்டூல் போட்டு ஏறி எடுத்துப் பார்க்கும் ஆவல் வந்தது. ஒற்றைக் குடுமி போட்டோக்களைப் பார்த்தால் என்ன வரும், அதே..... பிளாஷ்பேக் தான்.
என் முதல் நாள் பள்ளிக்கு எப்படிப் போனேன் என நினைவிலில்லை. ஆனால், LKG, UKG படிக்கும் போது தலை நிறைய எண்ணெய் வைத்து, குட்டி குட்டியாய் நீட்டிக் கொண்டிருக்கும் முடிகளை சேர்த்து ஒற்றைக் குடுமி போட்டு அதில் மல்லிகையும் கனகாம்பரமும் தொங்கும் அளவு சுற்றி, நெத்தியில் கண்மையால் ஒரு பொட்டு (நல்ல வேளையாக கன்னத்திலெல்லாம் மையில்லை), நல்ல டார்க் நிற பிராக் (அப்போவெல்லாம் தினசரி யூனிபார்ம் கிடையாது), முகத்தில் திட்டு திட்டாக பவுடர், ஊரே பயந்து போகுமளவு கண்ணுக்கு கண்மை இப்படியாக ஒரு பூச்சாண்டி போல் பள்ளிக்கு அனுப்புவார்கள். இன்னும் நினைவிருக்கிறது, அவற்றில் சில நாட்கள்.
சுதா என்றொருத்தி என் வகுப்பில் இருந்தாள். அவள் தான் கிளாஸ் லீடர் ( KG படிக்கும் போது லீடெரெல்லாம் எதற்கு வைத்தார்கள் எனத் தெரியவில்லை). நானும் அவளும் டான்ஸ் க்ளாஸ் மேட்ஸ். அதனால் எப்போதும் என் பெயர் பேசுபவர்கள் லிஸ்ட்டில் இல்லாதவாறு அவள் பார்த்துக் கொள்வாள். நானும் அவளுக்கு அடிக்கடி முழு குச்சி கொடுத்து நட்பு பாராட்டி வந்தேன். :)
எனக்கு நினைவு தெரிந்து என் மிக நல்ல நண்பனாக இருந்தது பிரகாஷ். நானும் அவனும் ஒன்றாகத் தான் பள்ளி செல்வோம். என் அப்பாவும் அவன் அப்பாவும் நண்பர்களாதலால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் எங்களிருவரையும் பள்ளியில் சைக்கிளில் விட்டு வருவார்கள். பள்ளி என்பது செல்வராஜ் சார், மேடம் (பெயர் நினைவில்லை), அப்புறம் ஒரு ஆச்சி, முப்பது பிள்ளைகள் அவ்வளவு தான். என்ன படித்தோம் என்றெல்லாம் நினைவில்லை. (வழக்கம் போல் A,B,C,D,.... அ,ஆ,இ,ஈ.... இன்னும் சில ரைம்ஸாகத் தான் இருக்கும். பின்ன என்ன IAS ஆ படிச்ச என நீங்கள் கோபப்பட வேண்டாம் ;) ) மதியம் வரிசையாய் அமர வைத்து சாப்பாடு, பின் அங்கேயே சில மணி நேரத் தூக்கம். சாயங்காலம் மறுபடியும் இருபது நிமிட சைக்கிள் பயணம். கவலையில்லாத நாட்கள் அவை. மீண்டும் பெறத் துடிக்கும் தருணங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான்கு நண்பர்களுடன் தொடர்பிருந்தது. இப்போது அதுவுமில்லை. ஒரே ஒரு முறை என் முதல் தோழன் பிரகாஷைப் பார்த்தேன். அப்போது அவன் இன்ஜினியரிங் முடித்து வேலைக்கு சேர்ந்திருந்தான்.
ஒருவருக்கொருவர் மாறி மாறி உணவு பகிர்ந்த மதிய வேளைகள், ஒரு முறை நான் கீழே விழுந்ததிற்காக அவன் உதிர்த்த கண்ணீர், அவனுக்கும் சேர்த்து நான் எடுத்து வந்த பல்பம், எனக்காக அவன் வாங்கித் தந்த பென்சில், நாங்கள் கைப்பிடித்து நடந்த நாட்கள், ஒன்றாக எழுதிய 'அ', எச்சிலுடன் பகிர்ந்த லாலிபாப் இவையெல்லாம் நினைவிருக்கிறதா என அவனிடம் கேட்க நினைத்த போது "எப்படி இருக்கீங்க?" என்றான். "நல்லா இருக்கேன்" என்று மட்டும் சொல்லி ஒரு புன்னகையை உதிர்த்து நகர்ந்தோம். என்னைப் போல் அவனும் இவையெல்லாவற்றையும் யோசித்திருப்பானா... அடுத்து அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகக் கேட்பேன். ஏனெனில் முதல் காதலை விட மரியாதையானது, மகிழ்ச்சியானது, பொக்கிஷமானது முதல் நட்பு.
"அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது"
இந்த அறிவுமதியின் வரிகள் எங்கோ இருக்கும் என் முதல் நண்பனுக்காக.
38 comments:
// என்னைப் போல் அவனும் இவையெல்லாவற்றையும் யோசித்திருப்பானா... //
அவர் துக்கத்தை அவரே தொண்டைக் குழியில் கையை விட்டுத் தோண்டி எடுப்பாரா? :))
எனிவே.. நன்னாய்ட்டு ஒரு கொசுவர்த்தி..
கவுஜ நன்னா இருக்கு.. கலக்கறேள் போங்கோ..
ஆமாங்க,
ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னால என் கிளாஸ்மேட்டையும், அவளது மகளையும் ஒரு சேரப் பார்த்தேன். ஒரு ரெண்டு மூணு நிமிஷம் ரெண்டு பேரும் ஒண்ணுமே பேசிக்கல. அப்புறமா ரொம்ப ஃபார்மல நலம் விசாரிச்சுட்டு, பொது விஷயங்கள பேசிட்டு ஒரு காஃபி குடிச்சுட்டு போயிட்டோம். ஒருவேளை நான் பழயதை எல்லாம் ஆரம்பிக்கட்டும்னு அவள் இருந்தாளோ என்னவோ, ஆனா நான் அப்படித்தான் யோசிச்சேன்.
பிரிஞ்சதுக்கப்புறம் தான் சே, இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமேன்னு தோணிச்சு.
பள்ளி குழந்தைகளை இன்னமும் பார்த்தா பொறாமையா இருக்கும்.
//ஊரே பயந்து போகுமளவு //
- :))
\\ஏனெனில் முதல் காதலை விட மரியாதையானது, மகிழ்ச்சியானது, பொக்கிஷமானது முதல் நட்பு //
நட்புக்கு புது இல்லகனமோ ??
வரிகள் அருமை .
ங்க :). ஸ்கூல் படிக்கும் போது போடா போடின்னு சண்டை போட்டு இருக்கோம். ஆனா இப்ப எங்கயாவது பார்க்கும்போது ஒரு சின்ன சிரிப்பு + "நல்லா இருக்கிங்களா? வரேனுங்க, நேரம் ஆகிட்டது" இந்த ரெண்டே வரிகளில் எல்லாம் முடிஞ்சு போகுது
//இப்படியாக ஒரு பூச்சாண்டி போல் பள்ளிக்கு அனுப்புவார்கள்//
ஹய் உங்களுக்கும் இப்படித்தானா :)
உண்மையான உண்மை விக்கி. பல ஆண்டுகளுக்கு பின் கணவருடன் சந்தித்த பள்ளி தோழி 'ஏய், எப்படி இருக்கே..' என உற்சாகமாய் கேட்க,
'நல்லாயிருக்கேன்,நீங்க எப்படி இருக்கீங்க' என்று நான் கூறவும் சூழ்நிலை உணர்ந்த அவரும் 'ங்க' போட்டு பேச ஆரம்பித்தார்.
எல்லோருக்கும் ஏற்படும் இந்த தர்மசங்கடமான சூழ்நிலை குறித்த கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சிநேகிதிகளின் கணவர்கள்
கவிதைப்பகிர்வு....
சிநேகிதிகளின் கணவர்கள்
//சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்..
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்..
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்..
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை..
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்..
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்..
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்..
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்..
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை..
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை..
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை..
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு..
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்..
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்..
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்..
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்..
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்..
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை
ஒரு சட்டப்பூர்வ உரிமையாளனுக்கு எதிராக ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்...
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஒரு மீன் முள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்..
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது...
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன..
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்...
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்..
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று..
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று..
ஒரு சிநேகிதியை
‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று..//
நன்றி. வணக்கம்..
நல்லா
இருக்குங்க இந்த கொசுவத்தி
எனக்கும் பள்ளி ஞாபகங்கள் வந்துருச்சு!
அருமை
கலக்கிட்டிங்க விக்னேஷ்வரி. கொஞ்ச நேரம் நானும் என்னுடைய பழைய நினைவுகளுக்கு சென்று வந்தேன். நன்றி.
நல்லா இருக்குங்க..ஒளிவு மறைவு இல்லாத அருமையான பகிர்வு ..
உங்கள் கணவரை சந்தித்த விதம் பற்றியும் எழுதுங்கள்!
நல்ல வத்தி.
முதல் பின்னூட்டம் ஹா ஹா ஹா..
nalla irukkunga....
pallai thozhargala ipa paatha ipdi than romba oru formal aana oru visarippu naanum :(
nalla irukkunga....
pallai thozhargala ipa paatha ipdi than romba oru formal aana oru visarippu naanum :(
//பேசுபவர்கள் லிஸ்ட்//
ஆஹா என்னோட ஃப்ரண்டும் இதே மாதிரியே என்னை நிறைய வாட்டி காப்பாத்திருக்கான்
நல்ல திரும்பி பார்த்தல்...
அருமை விக்னேஷ்வரி...
நான் தொலைத்த நாட்களையும் நினைச்சு ஏங்க வச்சிட்டீங்க.... :)))
ஒரு சின்ன ஹெல்ப், என்னுடைய வலைப்பூவில் "Followers" gadgetஐ add பண்ண முடியவில்லை. எப்பொழுதும் இந்த மெஸெஜ்தான் டிஸ்ப்ளே ஆகிறது, "This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!".
என்ன செய்வது?
முழுதும் படிக்கவில்லை எனினும்..அந்தப் படம் எனக்குப் பிடிக்கவேயில்லை.
அழகான..பிளாக் அண்ட் வைற் கிராமியப்படம் பொட்டுடன் கிடைக்கவே இல்லையா?
நானும் இந்த வெள்ளைக்கார மழலைகளுடன்...அலுத்துப் போய்விட்டேன்.
மூக்கும் முளியுமாய் திருஸ்டிப் பூச்சாண்டிப் பிள்ளைகளை..புகைப்படத்திலும் காணேன்..போங்கள்.
/ஏனெனில் முதல் காதலை விட மரியாதையானது, மகிழ்ச்சியானது, பொக்கிஷமானது முதல் நட்பு.
//
:) :) :)
Elloraiyum yosika vachiteenga
கலக்கீட்டீங்க விக்னேஷ்வரி. நல்ல கொசுவத்தி.
பள்ளி கல்லூரி ஞாபகம் வந்துருச்சு.
பழைய ஞாபகங்களை கிளறிட்டீங்க.. எனக்கு பள்ளியில சேர்த்த முதல் நாள், எனக்கு நடந்த interview , எங்க சித்தப்பா ஸ்கூட்டர்ல முன்னாடி நிண்டுட்டு போனது, அவங்க எனக்கு வாங்கி தந்த பெரிய ஐஸ் கிரீம், திங்க முடியாம போதும்னு சொன்னது எல்லாமே நினைவுக்கு வருது பா!
ம்... என்ன சொல்றது?
படம், பதிவு, கவிதை அனைத்தும் சேர்ந்த நேர்த்தியான பதிவு.
ஷங்கரலிங்கம் சொல்றதையும் கொஞ்சம் கவனிங்க :)
நல்ல அசைபோடும் நினைவுகள்....
சரி தான் சஞ்சய். அவன் ஒரு கெத்தா வந்தப்போ நான் சாக்லேட் சாப்பிட்ட கதையெல்லாம் சொன்னா துக்கமா தான் இருக்கும். அவன் குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால் அவன் சிறு வயதில் எப்படி இருந்தான் என சொல்ல வேண்டுமென ஆசை எனக்கு.
கவிதை, அறிவுமதியோட நட்புக்காலமிலிருந்து.
சரியா சொன்னீங்க தராசு. பெரியவங்க ஆனதும் தயக்கமெல்லாம் வருது. குழந்தையா இருந்தப்போ அப்படி ஒன்னுனா என்னன்னே தெரியாம இருந்தது நல்லா தான் இருந்தது. நானும் பொறாமைப்படுகிறேன் குழந்தைப் பருவத்தை நினைத்து.
வாங்க கார்ல்ஸ்பெர்க்.
நட்பு எப்போவுமே காதலை விட இனிமையானது தான் ரோமியோ பாய்.
ஆமா தாரணி. பார்த்தும் பார்க்காம போகாம பேசிட்டாவது போறாங்களேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.
ஓ, நீங்களும் பூச்சாண்டி மாதிரி தான் போனீங்களா... :D
அழகான, உண்மையான கவிதைத் தொகுப்பைப் பகிர்ந்ததற்கு நன்றி துபாய் ராஜா.
நன்றி நேசமித்திரன்.
ஸ்கூலுக்கெல்லாம் ஒழுங்கா போனீங்களா வால்... ;)
நன்றி பாலகுமாரன்.
நன்றி கோபிநாத்.
நன்றி வினோத்கெளதம்.
அந்த சோகக் கதையெல்லாம் எழுதனுமா ஷங்கர லிங்கம்... ;)
வாங்க வித்யா.
நன்றி கனகு. என்ன பண்ண, மனுஷங்க வளர வளர மூளை வளருது. மனசு குறுகுது.
நன்றி பிரியமுடன் வசந்த்.
நன்றி சுசி, முதல் வருகைக்கும்.
வாங்க குறும்பன். நீங்கள் Language தமிழ் என தேர்வு செய்திருந்தால் followers வொர்க் ஆவதில்லை. Change the language to English to make the gadget available.
வாங்க சூர்யா. நம்மூர்ப் பிள்ளைகளின் படங்கள் கிடைக்காததால் தான் இந்தப் படம். எந்த ஊர்ப் பிள்ளையாக இருந்தால் என்ன. குழந்தைகள் அழகு தானே.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி அம்மிணி. வந்த நியாபகங்களை வச்சு அடுத்த கொசுவத்திப் பதிவை நீங்க போட்டுடுங்க.
வாங்க நாஸியா. நல்ல நியாபக சக்திங்க உங்களுக்கு.
நன்றி வெயிலான்.
எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவா தான் இருக்கீங்க. எழுத முடியுமான்னு பாக்குறேன்.
முதல் காதல நினைவுக்கு வராமல் போகலாம். ஆனால் முதல் நட்பு என்றும் நினைவில் நிற்கும். காதல் கசந்து போகலாம், முறிந்தும் போகலாம் அனால் நட்பு, அதன் சுகம் என்றும் நினைவில் நிற்கும். எவ்வளவு நாட்கள் நகர்ந்தாலும் மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்படும்போது இழந்த நாட்களும் சந்தோஷங்களும் ஒருசேர திரும்ப வந்து சேரும். இது நட்பின் பலம. நான் அத்தகைய நட்புகளை விரும்பிப் பாதுகாத்து வருபவன். அதனால் உங்கள் உள்ளக் கிளர்ச்சி எனக்கும் பொதுவானது என்று உணர்கின்றேன். நன்றி என் நினைவுகளைத் தூண்டி விட்ட உங்கள் கட்டுரைக்கு.
அருமையான மலரும் நினைவுகள் .உங்கள் பதிவை படித்து என்னை எண்ணங்கள் பள்ளி பருவதுக்கே கூட்டிசென்றது அஹா என்ன அருமையான நாட்கள் நினைக்க நினைக்க இனிக்கும் பள்ளி பருவம் .எனது தோழி பெயரயே எனது பெயராக blogger க்கு மலர் என்று வைத்துள்ளேன் .
/ஏனெனில் முதல் காதலை விட மரியாதையானது, மகிழ்ச்சியானது, பொக்கிஷமானது முதல் நட்பு/
இதை விட என்ன இருக்கிறது ,சொல்வதற்கு!
அருமை!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயப்பன் சார்.
வாங்க மலர். ஓ, இது உங்கள் தோழி பெயரா... அப்போ உங்க பெயர் என்ன?
நன்றி வேல்ஜி.
its really very delicate to start conversation with a same freedom immediately. whether to call "vaanga" or "Vaada(di)". Many times i faced this situation when i meet my old friends.
Good blog ! I had a similar exp too !
அழகான தொலைத்த நாட்கள்
நன்றாக உள்ளது குறிப்பாக பழைய நண்பனை சந்தித்த போது உள்ள பகுதி..
ஒருவருக்கொருவர் மாறி மாறி உணவு பகிர்ந்த மதிய வேளைகள், ஒரு முறை நான் கீழே விழுந்ததிற்காக அவன் உதிர்த்த கண்ணீர், அவனுக்கும் சேர்த்து நான் எடுத்து வந்த பல்பம், எனக்காக அவன் வாங்கித் தந்த பென்சில், நாங்கள் கைப்பிடித்து நடந்த நாட்கள், ஒன்றாக எழுதிய 'அ', எச்சிலுடன் பகிர்ந்த லாலிபாப் இவையெல்லாம் நினைவிருக்கிறதா என அவனிடம் கேட்க நினைத்த போது "எப்படி இருக்கீங்க?" என்றான்///
ரொம்ப நல்லா இருக்குங்க, வெகு இயல்பு உங்கள் எழுத்துக்களில். பாராட்டுக்கள், யோகிக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்.
வீடுதிரும்பலில் உங்கள் அறிமுகம் கிடைத்தது. :-) அவருக்கும் நன்றி
இதே பொருள் பட எழுதிய என் பதிவு. நேரமிருப்பின் இதையும் படித்துபாருங்கள்.
http://eniyoruvithiseivom.blogspot.com/2009/11/13.html
அன்பின் விக்னேஷ்வரி யோகி
அருமையான் கொசுவத்தி இடுகை
பலரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுதான்
சிலரே இவ்வளவு அருமையாக படமும் இடுகையும் கவிதையுமாகக் கலக்குகின்றனர்
நல்வாழ்த்துகள்
Post a Comment