Thursday, October 29, 2009

காதல் என்னும் முடிவிலி


கோக்
கசட்டா
காஜுகத்லி
கஸ்டர்ட்
எதுவுமே ருசிக்கவில்லை
உன் இதழ் பதித்து
மீதி வைத்த
பாதிக் கோப்பைத்
தண்ணீரை விட.

****************************************************************************************************

உனைப் பற்றி எழுத நினைத்து
உன் பெயரை மட்டுமே எழுதினேன்.
வார்த்தைகள் கூட
நாணத்தோடு
ஓடி ஒளிந்து கொள்கின்றன!

****************************************************************************************************

உன் பைக்கின் பின்னால்
நான் அமர
சீராகச் செல்கிறது
வாகனம்.
தாறுமாறாகப் போகிறது
மனம்.

****************************************************************************************************

சாப்பிடச் சொன்னால்
ஊட்டி விடுகிறாய்.
தூங்கச் சொன்னால்
தூங்க வைக்கிறாய்.
படிக்கச் சொன்னால்
கற்றுத் தருகிறாய்.
பேசாதிரு என்றால்
கதை...யளக்கிறாய்.
காதலிக்கச் சொன்னால்
கிறுக்கித் தள்ளுகிறாய்.
உன்னை வைத்துக் கொண்டு
என்னடா செய்ய...

****************************************************************************************************

"கார் ஓட்டப் பழக வேண்டும்" என்றேன்
"சரி வா சொல்லித் தரேன்" என்றாய்
"நீ இடது பக்கம் உட்கார்ந்தால்
நான் எப்படி சாலை பார்த்து ஓட்டுவேன்"
என்ற என் கேள்விக்கு
என்னை அடிப்பதாய் கை ஓங்கி
அணைத்துக் கொண்டே சொன்னாய்
"நீ மாறவே மாட்டியாடி?"
"நீ என்னை மாற்றி விட்ட பின்
வேறெப்படி மாற நான்?"

****************************************************************************************************

"உன் சட்டை கொடு
நீ இல்லாத நேரங்களில்
எனக்குத் துணையாக"
என்றேன்.
"சட்டைக்குள் நான் இருந்தால்
சம்மதமா"
என்கிறாய்.
"ச்சீ போடா" என்கிறது உதடு
"வேண்டாமென்றா சொல்வேன்"
என்ற மனதின்
குரலை மறைக்க.

****************************************************************************************************

"நான் போறேன்டா."
"பத்திரமா போயிட்டு வாடா "
"கண்டிப்பா போகனுமா"
"ஆமாடா செல்லம்"
"போகப் பிடிக்கலைடா"
"தெரியும் டா"
"நான் உன்னை விட்டுப் போகலடா"
"சரி போகாத."
"இல்ல, போய்த் தான் ஆகணும்."
"ம்ம்"
பிரிதலின் போதான
நமது உரையாடல்கள்
எப்போதும் மாறுவதேயில்லை
நம் காதலைப் போன்றே!

****************************************************************************************************

அழகிய மழைநாளில்
ஒதுங்கிய கூரைக்குக் கீழே
நடுங்கிய கைகளுக்குள்ளே
மூச்சுக் காற்றின் உஷ்ணம்
அதிகரிக்கும் வேளையில்
நடக்கிறது
ஒரு பனிப் போர்
உன் ஆண்மைக்கும்
என் பெண்மைக்கும்.

Tuesday, October 27, 2009

பதிவுலக பாய்ஸ் பொண்ணு பார்க்கப் போனா...

நம்ம பதிவுலக பேச்சுலர்ஸ் சிலர் பெண் பார்க்கப் போகும் போது பெண்ணிடம் என்னவெல்லாம் பேசுவார்கள் என்ற கற்பனைக் குதிரையைத் தட்டி விட்ட போது வந்த பதிவு.

பதிவுலகின் என் முதல் நண்பர் இவர்.

நீட்டாக ஃபுல் ஃபார்மல்சில் போய் முதல் பார்வையிலேயே பெண்ணை இம்ப்ரெஸ் செய்கிறார். "வணக்கம். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க கிட்ட தனியா பேசனும்னு பெரியவங்க சொன்னதும் ரொம்ப பதட்டமாயிட்டு. நீங்க B.A. வரலாறு முடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. நாட்டு வரலாறு தெரிஞ்சிருக்குறது நல்ல விஷயம் தான். ஆனா, அதே அளவுக்கு உங்க குடும்ப வரலாறும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க. அது ரொம்ப முக்கியம். உங்க பாட்டன், பூட்டன் பெயரெல்லாம் தெரியும் தானே. ஏன்னா, நம்ம பேரும் நாளைக்கு அஞ்சாறு தலைமுறைக்கு போகணும் பாருங்க. அதான் சொல்றேன்.

எனக்கு இன்டர்நெட், ஈமெயில் நட்புகளிலெல்லாம் உடன்பாடு இல்லைனாலும், நம்ம ஊர்ல நம்மள 'சல்லிப்பயல்'னு கழட்டி விட்டுட்டதால இப்போதைக்கு இந்த நண்பர்கள் கூட தான் வனாந்திரமெல்லாம் சுத்திட்டிருக்கேன். கல்யாணத்துக்கப்புறம் உங்களுக்குப் பிடிக்கலைனா எல்லாத்தையும் கட் பண்ணிடுறேன்.

அப்புறம் நீங்க கல்யாணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்னன்னா... "முடியலத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்" ன்னு ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதி சப்மிட் பண்ணுங்க. நாளைய தமிழிலக்கிய உலகை ஆளப் போவது முடியலத்துவம்தான்னு நான் சொன்னா இலக்கியனாதனுங்க சண்டைக்கீ வருவாய்ங்க. விடக் கூடாது. ஒருத்தரையும் விடப்பிடாது. எனக்கு அறச் சீற்றமும் இருக்கு, குறச் சீற்றமும் இருக்கு என முஷ்டியை முறுக்க பொண்ணு 'ங' என முழிக்கிறது.

"பானைகள் தங்களை
பானைகளென உணரும் போது
பானைகள் கொள்ளும்
யானைகள் பலம்"

என்று முடியலத்துவத்தை நம்ம மொபைல் எந்திரன் எடுத்து விட மிரட்சிப் பார்வையுடன் பயந்து ஓடுகிறது பெண்.

பதிவுலக யூத் என தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் பிரபலப் பதிவர் இவர்.

"ஹாய், சொல்லுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க. இன்னாங்க, ஒண்ணுமே பேச மாட்டேங்குறீங்க. சரி நானே பேசுறேன். ஆனா, அப்புறம் நீங்க பேச இடைவெளியே இருக்காது. நான் ரொம்ப ஜாலி டைப். எனக்குன்னு எப்போவும் பாலாஜி, ஏழு, மதன்,..... ன்னு ஒரு சிறு நண்பர் கூட்டம் இருக்கு. அது தவிர தாரிகா, விமலா, மாலினி, சத்யா,...... ன்னு கொஞ்சம் பெரிய நட்புக் கூட்டமும் இருக்கு. ஐயோ, இதுக்கெல்லாம் முறைக்காதீங்க. யூத்னா அப்படித் தான். ஆனா, நீங்க தான் என் வாழ்வின் 'சாளரம்'.

நம்ம நண்பர்கள் கூட்டத்துல எப்போவுமே நாம தான் "கில்லி"ன்னாலும் அதைக் கெடுக்கன்னே 3+4 ஒருத்தனை கூட வெச்சிட்டு சுத்திட்டிருக்கேன். அவன் ஒரு கிறுக்கன். அரை பியரை ஒரு வாரம் வரை வெச்சு மோந்து பார்த்திட்டிருப்பான். நம்ம கல்யாணத்துக்கப்புறம் வாரமொரு முறை உங்களுக்கு அவனோட புட்டிக் கதை ஒன்னு சொல்றேன்.

அப்புறம் தபுஷங்கர் அளவு இல்லைனாலும் ஏதோ ஒரு ரேஞ்சுல கவிதைகள் எழுதித் தரேன். அதைப் படிக்கும் போதே உங்களுக்கு என் மேல காதல் கொட்டும். கொட்டனும். அப்புறம் நாம அடிக்கடி மழைல போறது, கடற்கரை போறது, காய்கறி வாங்கப் போறது கூட கவிதை மாதிரி மடிச்சு மடிச்சு எழுதித் தர்றேன் பாருங்களேன்.

எனக்குத் 'தல'யைப் பிடிக்காதுன்னாலும் அவங்க வீட்டுக்காரம்மாவை ரொம்பப் பிடிக்கும். நீங்களும் சைட் போஸ்ல கொஞ்சம் அவங்களை மாதிரியே இருக்குறதால உங்களையும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

"இவ்வளவு அழகை எவனும் பார்த்திருக்க மாட்டான்.
I am in love with you."

கிடார் இல்லாமலே இவர் பாட்டுப்பாட அழ ஆரம்பித்து விட்டது பெண். பெண்ணுக்கு ஏழுவின் யோசனை அதிகமாகி விட்டதால் முடிவு சுபமாக அமையுமா என்பது சந்தேகமே. எனவே வழக்கம் போல் அவரது ரசிகைகள் அவரைத் தொடரலாம்.

அடுத்ததா நம்ம வருங்கால முதல்வர், மன்னிச்சுக்கோங்கண்ணா.. வருங்காலப் பிரதமர் பொண்ணு பார்க்கப் போறாரு.

" நமஸ்தே ஜி. நான் பிறந்தது ஒரு விவசாயக் குடும்பம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷத்துக்கு எங்க வீட்டு ஆடு, மாடு, கோழிக்கிட்டேயெல்லாம் நீ நல்லாப் பழகனும்ங்குறது தான் என் ஆசை. மத்தபடி உன் மாமியார்கிட்டே நீ குடுமிப்பிடி சண்டை போட்டாக் கூட எனக்கு ஆட்சேபனை இல்லை. நம்ம கட்சியின் வருங்காலக் கூட்டங்களுக்கு அது உதவும்.

ஒரு வருஷத்திற்குப் பிறகு நாம நேரா டெல்லி போய் பெஹன்ஜி கூட சேர்ந்துடலாம். அப்புறம் உங்க அப்பா சீதனமா தர்றதையெல்லாம் நீயே வெச்சுக்கோ. எனக்கு ரெண்டு செட் கதர் வேட்டி சட்டை மட்டும் போதும். கட்சி அலுவலகத்துக்கு அடிக்கடி போகும் போது உபயோகப்படும்.

அப்புறம் உனக்கு சமையல் தெரியலைன்னாலும் பரவாயில்லை. நானே வீட்டுல சமையல் வேலையைப் பார்த்துக்குறேன். ஆனா, வெளியில அது யாருக்கும் தெரியாம நீ பார்த்துக்கிட்டா போதும்.

" என் மேல் வை நம்பிக்'கை'
நான் மாற்றுவேன் உன் வாழ்க்'கை' "

- காது கேட்க இயலாத பெண் இவர் முகபாவங்களைப் பார்த்து இவர் காதல் மொழி தான் பேசுகிறார் என எண்ணி புன்னகைக்க டெபாசிட் கிடைத்ததா எனத் தெரியாமலே கிடைத்தது என நினைத்து கல்யாணத்திற்குப் போஸ்டர் அடிக்க கிளம்பி விட்டார் இந்த நவயுக காந்தி.

கடைசியா நம்ம கடைக்குட்டித் தம்பி. பையன் சின்னப்புள்ளைதான்னாலும் வீட்டுல நொச்சரித்ததால் பெண் பார்க்க கிளம்பிச் செல்கிறார்.

"நான் இப்போதாங்க காலேஜ் முடிச்சிருக்கேன். நீங்களும் இப்போ தான் ஸ்கூல் முடிச்சிருக்குறதா எங்க வீட்டுல சொன்னாங்க. நான் அடுத்து MBA பண்ணலாம்னு இருக்கேன். Entrance clear ஆகி, Course join பண்ணி, முடிக்குறதுக்கு எப்படியும் குறைஞ்சது ஏழு வருஷமாவது ஆகிடும். அதுக்குள்ளே நீங்களும் ஏதாவது படிங்க. அப்பப்போ நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து டாப்படிப்போம். அப்படியே காதலிப்போம். மெல்ல கலயாணம் பண்ணிக்கலாமே. இப்போ என்ன அவசரம். "

பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி வர, " ஹேய் உங்க வீட்டுல கரப்பான் பூச்சி இருக்கா. I like killing that. உங்களுக்கு அதைப் பத்தின scientific facts சொல்றேன் வாங்க."

இருவரும் கரப்பான் பூச்சியைத் துரத்த, அதைப் பார்த்த பெற்றோர் பால்ய விவாகம் செய்ய முயன்றதை எண்ணி வருந்துகிறார்கள். ஆனால், இருவரும் கரப்பான் பூச்சியை வைத்து கரெக்ட் ஆகி விட்டதால் பையன் MBA முடிப்பது சந்தேகமே.

Thursday, October 22, 2009

அம்மாவும் மைக்ரோவேவ் குக்கிங்கும்

நீ எப்போதான் சமைக்கக் கத்துக்கப் போறன்னு எனக்குத் தெரியல. ஒழுங்கா இங்கே வா. நான் அவியல் பண்ண சொல்லித் தரேன். நாளைக்கு போற வீட்டுல இது கூட உங்கம்மா சொல்லித் தரலையானு கேக்கப் போறாங்க.

அம்மா, மைக்ரோவேவ் வெறும் சாப்பாடு சூடு பண்ண மட்டுமே தான் உபயோகிக்குறீங்களா. இதுல ரொம்ப ஈஸியா கேக் பண்ணலாம்மா. நான் கத்துத் தரேன்.

என்னங்க, இப்படியே மாட்டேன் மாட்டேன்னு எத்தனை நாளைக்கு சொல்லிட்டிருப்பா உங்க பொண்ணு. ஒழுங்கா அடுப்படிக்கு அனுப்பி வைங்க. நான் செய்யும் போதாவது கூட இருந்து பார்க்கட்டும்.

அப்பா, நீங்க கூட கேக் பண்ணலாம்பா. ரொம்ப ஈஸி. முதல்ல நான் அம்மாவுக்கு சொல்லித் தரேன். அப்புறம் நீங்களும் பண்ணுவீங்க பாருங்க.

இதுக்கு வேணும்கிற சாமானெல்லாம் நான் ஏற்கனவே இங்கே எடுத்து வெச்சுட்டேன். அப்புறமா உனக்கு சொல்றேன். நோட்ல எழுதி பத்திரமா வெச்சுக்கோ. இல்லைனா மறந்திடுவ.

அம்மா, நான் நாலு பேருக்கு கேக் பண்றதுக்கு என்னவெல்லாம் என்ன அளவுல வேணும்னு இங்கே எடுத்து வெச்சிருக்கேன். இதை அப்படியே நெட்ல இருந்து பிரிண்ட் அவுட்டும் எடுத்து தரேன். அதை தேவைனா ரேபெர் பண்ணிக்கோங்க.

முதல்ல தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகமெல்லாத்தையும் கொஞ்சமா தண்ணி விட்டு நல்லா அரைக்கணும். போய் அம்மில வெச்சு நல்லா அரச்சு எடுத்திட்டு வா.

முதல்ல முட்டைய உடச்சு நல்லா அடிச்சுக்கோங்க. ப்ளன்டர் யூஸ் பண்ணுங்கம்மா. ஏன் கையால அடிச்சு கை வலி வர வெச்சுக்குறீங்க. அது கூட கொஞ்சம் கொஞ்சமா சர்க்கரையும், வனிலா எசென்சும் சேர்த்து ப்ளன்ட் பண்ணுங்க.

இப்போ அடுப்பில கடாய் வச்சு அதுல தேங்காய் எண்ணெய் ஊத்து. தேங்காய் எண்ணெய் தான் அவியலுக்கு ருசியே.

அப்படியே இந்த கார்ன்ஃப்ளாரையும், மைதா மாவு, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் எல்லாத்தையும் சேர்த்து கலக்கிடுங்க. கொக்கோ பவுடர் தான்மா ஃப்ளேவர் குடுக்கும்.

நறுக்கி வெச்சிருக்குற காய்கறியெல்லாம் அதில போட்டு கொஞ்சமா தண்ணி விட்டு பர்னரை இறக்கி விட்டு மிதமான தீயில் காய்களை வேக விடு. ஒரு அரை மணி நேரம் ஆகும் எல்லா காய்களும் வேக.

எல்லாம் கலந்ததுக்கப்புறம் இந்த மிக்சரை மைக்ரோவேவ் ஹைல மூணு நிமிஷம் செட் பண்ணி வைங்க.

காய் வேக நேரம் ஆகும்னு அப்படியே விட்டுட்டா அடிப் பிடிச்சிடும். அப்பப்போ கிளறி விட்டுக்கனும். காயெல்லாம் கொஞ்சம் வெந்ததும் மாங்காயும், வாழைக்காயும் போட்டு ஆவி வர்ற வரைக்கும் மூடி வை.

மூணு நிமிஷம் ஆனதும் மைக்ரோவேவ் தானா ஆஃப் ஆகிடுச்சா. எடுத்து பாருங்க. இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பா இருக்கலாம்ல. இன்னும் ஒரு முப்பது செக்கண்டுக்கு செட் பண்ணிடுங்கம்மா.

இப்போ எல்லா காய்கறியும் வெந்திடுச்சு. இதுல அரச்சு வெச்சிருக்கிற தேங்காய்க் கலவைய சேர்த்து கொஞ்சம் கிளறி விடு. கைல பட்டுக்கப் போற. இந்தா இந்த கைப்பிடித் துணியை வெச்சுக்கோ.

இப்போ கேக் ரெடி ஆகிடுச்சு. அதை அப்படியே எடுத்து வேற தட்டுல மாத்தி சூடு போற வரைக்கும் வைங்கம்மா. எப்போ மைக்ரோவேவ் யூஸ் பண்ணாலும் க்ளவுஸ் போட மறக்காதீங்கம்மா.

அவியல் முடிஞ்சது. அதுல கறிவேப்பிலை தாளிச்சுக் கொட்டு. அது தான் வாசனையே. இப்படி வாரம் ஒரு மணி நேரம் சமையலறை பக்கம் வந்தா ஒவ்வொரு ஐட்டமா கத்துக்கலாம்.

கேக் கொஞ்சம் சூடா இருக்கும் போதே மேல க்ரீம், செர்ரிஸ் வெச்சு கார்னிஷ் பண்ணுங்க. அஞ்சு நிமிஷத்துல கேக் பண்ணியாச்சு. எல்லா கேக்குக்கும் இவ்ளோ நேரம் தான்மா. நான் இன்னும் உங்களுக்கு ரெசிபீஸ் தர்றேன். நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

அப்போ அப்பா - அடடே, இன்னிக்கு அவியல் என் பொண்ணு பண்ணதா... பிரமாதம். ரொம்ப நல்லா இருக்கும்மா. உங்க அம்மாவ மிஞ்சிட்ட போ.

இப்போவும் அப்பா - பார்த்தியா என் பொண்ணை. அஞ்சு நிமிஷத்துல அம்சமா கேக் பண்ணிட்டா. இன்னும் நிறைய கத்துக்கோ அவகிட்ட இருந்து.


Wednesday, October 21, 2009

தொலைத்த நாட்கள்



பல வருடங்கள் கழித்து என் சிறு வயது புகைப்படங்களை, ஸ்டூல் போட்டு ஏறி எடுத்துப் பார்க்கும் ஆவல் வந்தது. ஒற்றைக் குடுமி போட்டோக்களைப் பார்த்தால் என்ன வரும், அதே..... பிளாஷ்பேக் தான்.

என் முதல் நாள் பள்ளிக்கு எப்படிப் போனேன் என நினைவிலில்லை. ஆனால், LKG, UKG படிக்கும் போது தலை நிறைய எண்ணெய் வைத்து, குட்டி குட்டியாய் நீட்டிக் கொண்டிருக்கும் முடிகளை சேர்த்து ஒற்றைக் குடுமி போட்டு அதில் மல்லிகையும் கனகாம்பரமும் தொங்கும் அளவு சுற்றி, நெத்தியில் கண்மையால் ஒரு பொட்டு (நல்ல வேளையாக கன்னத்திலெல்லாம் மையில்லை), நல்ல டார்க் நிற பிராக் (அப்போவெல்லாம் தினசரி யூனிபார்ம் கிடையாது), முகத்தில் திட்டு திட்டாக பவுடர், ஊரே பயந்து போகுமளவு கண்ணுக்கு கண்மை இப்படியாக ஒரு பூச்சாண்டி போல் பள்ளிக்கு அனுப்புவார்கள். இன்னும் நினைவிருக்கிறது, அவற்றில் சில நாட்கள்.

சுதா என்றொருத்தி என் வகுப்பில் இருந்தாள். அவள் தான் கிளாஸ் லீடர் ( KG படிக்கும் போது லீடெரெல்லாம் எதற்கு வைத்தார்கள் எனத் தெரியவில்லை). நானும் அவளும் டான்ஸ் க்ளாஸ் மேட்ஸ். அதனால் எப்போதும் என் பெயர் பேசுபவர்கள் லிஸ்ட்டில் இல்லாதவாறு அவள் பார்த்துக் கொள்வாள். நானும் அவளுக்கு அடிக்கடி முழு குச்சி கொடுத்து நட்பு பாராட்டி வந்தேன். :)

எனக்கு நினைவு தெரிந்து என் மிக நல்ல நண்பனாக இருந்தது பிரகாஷ். நானும் அவனும் ஒன்றாகத் தான் பள்ளி செல்வோம். என் அப்பாவும் அவன் அப்பாவும் நண்பர்களாதலால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் எங்களிருவரையும் பள்ளியில் சைக்கிளில் விட்டு வருவார்கள். பள்ளி என்பது செல்வராஜ் சார், மேடம் (பெயர் நினைவில்லை), அப்புறம் ஒரு ஆச்சி, முப்பது பிள்ளைகள் அவ்வளவு தான். என்ன படித்தோம் என்றெல்லாம் நினைவில்லை. (வழக்கம் போல் A,B,C,D,.... அ,ஆ,இ,ஈ.... இன்னும் சில ரைம்ஸாகத் தான் இருக்கும். பின்ன என்ன IAS ஆ படிச்ச என நீங்கள் கோபப்பட வேண்டாம் ;) ) மதியம் வரிசையாய் அமர வைத்து சாப்பாடு, பின் அங்கேயே சில மணி நேரத் தூக்கம். சாயங்காலம் மறுபடியும் இருபது நிமிட சைக்கிள் பயணம். கவலையில்லாத நாட்கள் அவை. மீண்டும் பெறத் துடிக்கும் தருணங்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான்கு நண்பர்களுடன் தொடர்பிருந்தது. இப்போது அதுவுமில்லை. ஒரே ஒரு முறை என் முதல் தோழன் பிரகாஷைப் பார்த்தேன். அப்போது அவன் இன்ஜினியரிங் முடித்து வேலைக்கு சேர்ந்திருந்தான்.

ஒருவருக்கொருவர் மாறி மாறி உணவு பகிர்ந்த மதிய வேளைகள், ஒரு முறை நான் கீழே விழுந்ததிற்காக அவன் உதிர்த்த கண்ணீர், அவனுக்கும் சேர்த்து நான் எடுத்து வந்த பல்பம், எனக்காக அவன் வாங்கித் தந்த பென்சில், நாங்கள் கைப்பிடித்து நடந்த நாட்கள், ஒன்றாக எழுதிய 'அ', எச்சிலுடன் பகிர்ந்த லாலிபாப் இவையெல்லாம் நினைவிருக்கிறதா என அவனிடம் கேட்க நினைத்த போது "எப்படி இருக்கீங்க?" என்றான். "நல்லா இருக்கேன்" என்று மட்டும் சொல்லி ஒரு புன்னகையை உதிர்த்து நகர்ந்தோம். என்னைப் போல் அவனும் இவையெல்லாவற்றையும் யோசித்திருப்பானா... அடுத்து அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகக் கேட்பேன். ஏனெனில் முதல் காதலை விட மரியாதையானது, மகிழ்ச்சியானது, பொக்கிஷமானது முதல் நட்பு.

"அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது"

இந்த அறிவுமதியின் வரிகள் எங்கோ இருக்கும் என் முதல் நண்பனுக்காக.

Friday, October 16, 2009

என் ஆன்ம வெளியில் ஆதர்ச பிம்பமானவன்..


நீ-
என்னில் கவிதையாய் நுழைந்து
காதலாய்க் கலந்தவன்.
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு பொழுதும்
உள்ளுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி.

****************************************************************************************************

இப்படித் தான் பேச வேண்டும்
என்றில்லாமல்
நீ நீயாகப் பேசியதில் தான்
இழந்தேன் என்னை.

****************************************************************************************************
உனக்காக என்ன வாங்க என யோசித்தே
பொழுதைக் கழித்தேன் நான்.
எந்த யோசனையுமின்றி
எனை இறுக அணைத்து
என்னையே வாங்கிக் கொண்டாய் நீ.

****************************************************************************************************
உன் காதல்
ஒரு ஆண் பெண்ணிடத்தில் கொள்ளும்
நேசத்தையும் தாண்டி
தாய் சேயை நேசிப்பது போன்ற
எதிர்பார்ப்பற்றது
பரிசுத்தமானது!

****************************************************************************************************

உன் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன்னுடன் பேச நினைக்கிறேன் நான்.
என் மேல் கோபம் கொள்ளும் நேரங்களில்
உன் கண் மூடி உன்னுள் இருக்கும்
என்னுடன் பேசுகிறாய் நீ

****************************************************************************************************
உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
உன் தோழமையை எனக்கு சொல்லின.
உன் கேச வருடல்
உன் நேசத்தை அறிவித்தது.
உன் அணைப்பு
உன் அன்பைக் காட்டிற்று .
உன் முத்தம்
உன் காதலை மொத்தமாய்த் தந்தது.
வேறென்ன வேண்டுமெனக்கு...

****************************************************************************************************

"இப்படி இருடா... அப்படி பண்ணாதடா..." என்ற
என் தினசரி செல்லக் குறைகளை ஏற்றவாறே
என் நெற்றி முகர்ந்தவன் நீ.
எப்போதும் உனக்காக நான் மாற வேண்டும்
என நீ சொன்னதில்லை.
என் கோபங்கள், சிறு களிப்புகள் என
அனைத்தையும் என்னுடனே
இருந்து ரசிப்பவன் நீ.

இன்று போல் என்றும்
என்னுடன் நீ இருக்க வேண்டும் எனும்
வரம் மட்டுமே உன்னிடம் கேட்கிறேன்.
தருவாயா?